‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 5

வரதாவின் கரையோரமாக புது நீராட்டுவிழவுக்கென மரத்தால் மேடையமைக்கப்பட்டிருந்தது. கமுகு மரத்தடிகளை நீருக்குள் ஆழ இறக்கி ஒன்றுடனொன்று சேர்த்துப் பிணைத்து கரையிலும் நீரிலுமாக கட்டப்பட்டிருந்த மேடையின்மேல் வளைக்கப்பட்ட மூங்கில்களைக்கொண்டு சட்டமிடப்பட்டு ஈச்ச ஓலை வேய்ந்த கூரையின் கீழ் அரசகுடியினர் அமர்வதற்கான பீடங்கள் காத்திருந்தன. பிசிர்மழை வெண்பீலியென நின்றிருந்தபோதும் மீனெண்ணெய் ஊற்றப்பட்ட பந்தங்கள் பொறி தெறிக்க வெடித்துச் சுழன்றபடி ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. அவ்வொளியில் மேடையில் அமைந்த வெண்பட்டு விரிக்கப்பட்ட பீடங்கள் திரைச் சித்திரங்கள் போல மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தன.

தனக்கான மரமேடையில் நின்றுகொண்டிருந்த நிமித்திகன் அரசணி நிமித்திகர்கள் முன்வர அகம்படியர் தொடர அணுகுவதைக் கண்டதும் தன் கையில் இருந்த வெள்ளிக் கோலை தலை மேல் தூக்கி “வெற்றி திகழ்வதாக!” என கூவினான். “தொல்பெருமை கொண்ட விதர்ப்ப குலம் வாழ்வதாக! அக்குலம் தன் சென்னி சூடும் வரதா இங்கு பொலிவு கொள்வதாக! அதன்மேல் ஒளிகொள்வதாக முன்னோர் வாழும் வானம்! ஆம் அவ்வாறே ஆகுக!” என்று கூவி மும்முறை தூக்கிச் சுழற்றி கோலை தாழ்த்தினான். வாழ்த்தொலிகள் அடங்கி கரைமுழுக்க நிறைந்திருந்த கௌண்டின்யபுரியின் குடிகள் விழிதூக்கி அரசரையும் அணிவகுப்பையும் நோக்கினர். முதியோர் கைகூப்பினர். அன்னையர் மைந்தரை தூக்கி கைசுட்டி காட்டி குனிந்து மென் சொல்லுரைத்தனர். வாய்க்குள் கை செலுத்தி சிறுவிழிகள் மலர குழந்தைகள் நோக்கின. தங்கள் உள்ளத்திற்கே என சிறு கைகளை நீட்டி ருக்மிணியைச் சுட்டிக் காட்டின.

முதலில் வந்த அணிபுரவிப் படையினர் இரு சரடுகளாகப் பிரிந்து அரசு மேடையை சூழ்ந்தனர். தொடர்ந்து வந்த மங்கலச்சேடியர் படிகளில் ஏறி அரசமேடையின் இருபக்கங்களிலும் மங்கலத்தாலங்களுடன் அணிவகுத்தனர். அவர்களைத் தொடர்ந்த வைதிகர் மேடையேறி வேதக்குரலெழுப்பியபடி அரச பீடங்களை கங்கை நீர் தெளித்து தூய்மை செய்தனர். இசைச்சூதர் மங்கல இசையுடன் இரு பிரிவாக பிரிந்து மேடைக்கு முன் அமைந்தனர். கை கூப்பியபடி வந்த அரசகுடியினர் படிகளில் ஏறி தங்கள் பீடங்களில் அமர அவர்களுக்குப்பின்னால் சேடியரும் ஏவலரும் நிற்க இருபக்கமும் அமைச்சரும் படைத்தலைவரும் நின்றனர்.

பீஷ்மகர் அமைச்சரிடம் தலைசரித்து “இன்னும் எங்கு சென்றிருக்கிறான்?” என்றார். அமைச்சர் “அவர்கள் கிளம்பிவிட்டனர் அரசே” என்றார். பீஷ்மகரின் விழிகள் சற்றே மாறுபட்டன. “அவர்களும் அணிநிரை வகுத்து வருகிறார்களா?” என்றார். அமைச்சர் விழிதாழ்த்தி “ஆம்” என்றார். பீஷ்மகர் மேலும் விழிகூர்ந்து “பெரிய அணிவகுப்பா?” என்றார். அமைச்சர் “ஆம் அரசே. சேதி நாட்டரசர் தன் முழு அகம்படியினருடன் அணிச்சேடியருடனும் அமைச்சர்களுடனும் வந்துள்ளார். நமது அணிவகுப்புக்கு நிகரான அணிவகுப்பு அது என ஒற்றர் இப்போது சொன்னார்கள்” என்றார்.

பீஷ்மகர் சினம் தெரிந்த முகத்துடன் “அது மரபல்லவே?” என்றார். அமைச்சர் ஒன்றும் சொல்லவில்லை. “அது மரபல்ல, எவ்வகையிலும் மாண்பும் அல்ல” என்று மீண்டும் பீஷ்மகர் சொன்னார். “ஆம் அரசே. நான் அதை சொன்னேன். இளவரசர் இன்று முதல் இப்புது மரபு இருக்கட்டும் என்றார்.” பீஷ்மகர் ஏதோ சொல்வதற்கென நாவெடுத்து பின் தளர்ந்து “ஆகட்டும்” என்று கையசைத்து தன் பீடத்தில் சாய்ந்துகொண்டார்.

அரசரும் அவையினரும் இளவரசருக்காக காத்திருப்பதை அதற்குள் கௌண்டின்யபுரியின் மக்கள் உணர்ந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் அவர்கள் பேசிக் கொண்ட ஓசை இலைகள் மேல் சொரியும் காற்றின் ஒலிபோல எழுந்தது. சிற்றமைச்சர் சரணர் அருகே வந்து “முதுவேதியர் நூல் நோக்கி வகுத்த நெறிநேரம் அணுகி வருகிறது என்கிறார்கள்” என்றார். பேரமைச்சர் முகுந்தர் “பார்ப்போம்” என்று பொதுவாக சொன்னார். சரணர் ஐயத்துடன் பீஷ்மகரை நோக்கிவிட்டு அகன்று சென்றார். பீஷ்மகர் “நேரமாகிறதென்றால் தொடங்கலாமே” என்றார். “பார்ப்போம் அரசே” என்றார் முகுந்தர்.

இன்னொரு சிற்றமைச்சரான சுமந்திரர் ஓடிவந்து “வைதிகர் குறித்த நேரம் கடக்கிறது என்கிறார்கள் அரசே. சினம் கொண்டு சுடுசொல் உரைக்கிறார்கள்” என்றார். அரசி சுஷமை சீற்றத்துடன் “ஒரு முறை சொல்லியாகிவிட்டது அல்லவா? இளவரசர் எழுந்தருளாமல் அரசு விழா எங்ஙனம் நடக்கமுடியும்? நேரம் தவறினால் பிறிதொரு நேரம் குறிப்போம். காத்திருக்கச்சொல்லுங்கள்” என்று சொன்னாள். “அவ்வண்ணமே” என்ற சிற்றமைச்சர் பேரமைச்சரையும் பீஷ்மகரையும் ஒருமுறை நோக்கிவிட்டு மீண்டும் தலைவணங்கி பின்பக்கம் காட்டாமல் இறங்கி விலகினார்.

பீஷ்மகர் குரல்தாழ்த்தி சுஷமையிடம் “நாம் பல்லாயிரம் விழிகள் முன் அமர்ந்திருக்கிறோம் என்பதை மறவாதே” என்றார். அரசி “குடிகளின் விழிகளின் முன் பிறந்து வளர்ந்த இளவரசிதான் நான். கோசலத்தில் எங்களுக்கும் அரசமுறைமைகள் உள்ளன. அனைத்தும் நானும் அறிவேன்” என்றாள். பீஷ்மகர் “எப்படியோ இந்தச்சிறு ஒவ்வாமையுடன்தான் இத்தகைய நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அமைகின்றன அமைச்சரே” என்றார். அரசி “ஒவ்வாமை உங்களுக்கு மட்டுமே. குடிகளுக்குத் தெரியும் வல்லமை கொண்ட வாளால் விதர்ப்பத்தின் வெண்குடை காக்கப்படுகிறது என்று” என்றாள்.

பீஷ்மகர் அவளை நோக்கி திரும்பி “ஆனால்…” என்று ஏதோ சொல்ல வந்தபின் தலையசைத்து “ஆவது அமைக அமைச்சரே. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். சுஷமை “இங்குள்ள அனைவருக்கும் தெரியும் மணிமுடியின் உரிமையாளர் எவரென…” என்றாள். சிற்றரசி கீர்த்தி “மணிமுடி இன்னமும் அரசரின் தலையிலேயே உள்ளது அரசி” என்றாள். சுஷமை “நீ என்னிடம் பேசத்துணிந்துவிட்டாயா?” என்றாள். பீஷ்மகர் “பூசலிடவேண்டாம்… அமைதி” என்றார். “நான் பூசலிடவில்லை… பூசலிட நான் சேடிப்பெண்ணும் அல்ல” என்றாள் சுஷமை.

அமைச்சர் திரும்பி ருக்மிணியை நோக்க அவள் கருவறை பீடமமைந்த திருமகள் சிலையென அணிதுலங்க விழிமயங்க அமர்ந்திருந்தாள். அச்சொற்கள் அனைத்தும் அவளறியாமல் எங்கோ முகில்களுக்குக் கீழே நதியென ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. பீஷ்மகர் அவளை நோக்குவதைக்கண்டு சுஷமையும் நோக்கினாள். “அணிகளைச் சீரமைத்துக்கொள்ளடி” என்று மெல்லச் சொல்லிவிட்டு திரும்பி கூட்டத்தை நோக்கினாள்.

மேற்கு நகர் முனையில் ஏழு எரியம்புகள் எழுந்தன. வானில் ஒளி மலர்களாக வெடித்தன. சுமந்திரர் மூச்சிரைக்க படிகளிலேறி வந்து தலை வணங்கி “வந்து விட்டார்கள் அமைச்சரே” என்றார். “ஆம் தெரிகிறது. ஆவன செய்க” என்றார் முகுந்தர். திரும்பி பீஷ்மகரிடம் “வந்துவிட்டார்கள். இன்னும் சற்று நேரத்தில் விழவைத் தொடங்க ஆணையிடலாம் அரசே” என்றார். பீஷ்மகர் “நான் சொல்ல ஏதுமில்லை. இந்த மேடையில் வெறும் ஒரு ஊன்சிலை நான்” என்றார்.

மேலும் ஏழு எரியம்புகள் எழ சூழ்ந்திருந்த கௌண்டின்யபுரியின் குடிகளனைவரும் அத்திசை நோக்கி திரும்பினர். “அரசருக்கன்றி எரியம்புகள் எழுவதும் மரபல்ல” என்றார் பீஷ்மகர். “அங்கு வருபவன் எளியவனல்ல, இந்நகராளும் இளவரசன். எரியம்புகள் அவனுக்குரியவைதான்” என்றாள் அரசி. கௌண்டின்யபுரியின் மக்கள் எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லையென்பதை அமைச்சர் நோக்கினார். அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசும் ஒலி மட்டும் வலுத்து அங்கு ஒரு பெரும் சந்தை கூடியிருப்பது போன்ற உணர்வை எழுப்பியது.

நகரில் நிறைந்திருந்த பந்தங்களாலான ஒளித்தேக்கத்திலிருந்து மதகு திறந்து ஒளி வழிவது போல மேற்குச்சரிவில் அணி வலம் ஒன்று வருவது தெரிந்தது. பந்த நிரைகளின் வெளிச்சம் பாதை வளைவைக் கடந்து மெல்ல நீண்டு வந்து வரதாவின் கரையை அணுகியது. முகப்பில் நூற்றிஎட்டு வெண்புரவிப்படை வீரர்கள் மின்னும் வேல்களுடன் வந்தனர். அவர்களின் நடுவே சேதி நாட்டின் வல்லூறுக் கொடி ஏந்திய வீரனொருவன் வெண்தலைப்பாகையுடன் ஒளிமின்னும் கவசங்கள் அணிந்து வந்தான். வீரர்களைத் தொடர்ந்து அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் வேதமோதியபடி வைதிகர்நிரையும் மங்கல இசையெழுப்பிய சூதர்நிரையும் வந்தன.

சற்றே அசைந்து அமர்ந்தபடி “முற்றிலும் நமது அணி நிரைக்கு நிகராக” என்றார் பீஷ்மகர். அமைச்சர் “நம் இளவரசர் அதையும் அமைத்திருக்கிறார்” என்றார். “சேதி நாடு விதர்ப்பத்திற்கு நிகரானதே. அதில் என்ன பிழை?” என்றாள் சுஷமை. “இது சேதி நாடல்ல” என்றாள் பீஷ்மகரின் மறுபக்கம் அமர்ந்திருந்த இளையஅரசி விருஷ்டி. பீஷ்மகர் திரும்பி “நீங்களிருவரும் பூசலை நிறுத்துங்கள். நாம் பேசிக்கொள்வதை இங்குள்ள அத்தனைபேரும் உணர்கிறார்கள் என்பதை உணருங்கள்” என்றார். “முதலில் உங்கள் முகத்தில் தெரியும் அச்சினத்தை அணையுங்கள். அதைத்தான் குடிகள் அனைவரும் நோக்குகிறார்கள்” என்றாள் அரசி.

பீஷ்மகர் பொறுமையிழந்து அசைந்து அமர்ந்தபடி “யானை மீதா வருகிறார்கள்?” என்றார். அமைச்சர் அப்போதுதான் திரும்பி நோக்கி “ஆம் அரசே” என்றார். “யானைமேல் புதுநீராட வரும் மரபு உண்டா?” என்றார் பீஷ்மகர். “வரக்கூடாதென்று முறைமை உண்டா? என்ன பேசுகிறீர்கள்?” என்றாள் சுஷமை. “யானைமேல் போருக்குத்தான் செல்வார்கள்” என்று சிற்றரசி விருஷ்டி சொல்ல “வாயைமூடு” என்றாள் சுஷமை. “யானைமேல் வந்தால் எப்படி வரவேற்க முடியும்? அதைச்சொன்னால் என்ன பிழை?” என்றாள் கீர்த்தி. “உங்களை வணங்குகிறேன், அருள்கூர்ந்து சொல்பேணுக!” என்றார் பீஷ்மகர்.

இணையாக வந்த இரு பெருங்களிறுகளின் மேல் ஒன்றில் சிசுபாலனும் இன்னொன்றில் ருக்மியும் அமர்ந்திருந்தனர். இருவரும் பொற்கவசங்களும் மணிமாலைசுற்றிய தலையணிகளும் கொண்டு அரசணிக் கோலத்திலிருந்தனர். யானைகளுக்கு இருபுறமும் நெய்ப்பந்தங்கள் ஏந்தி வந்த வீரர்களுக்கு முன்னால் தீட்டிய உலோகத்தாலான குவியாடிகளை நான்கு வீரர்கள் தூக்கி வந்தனர். அவற்றைச்சாய்த்து அவ்வொளியை எழுப்பி யானைகள்மீதும் அவர்கள் மேலும் பொழிய வைத்தனர். விண்மீன்களை சூடிய கருமுகில் போல வந்த யானையின் மேல் இளங்கதிர் விரியும் காலைச் சூரியன்கள் போல் இருவரும் அமர்ந்திருந்தனர்.

சிசுபாலன் சேதி நாட்டின் வல்லூறு முத்திரை கொண்ட மணிமுடி அணிந்திருந்தான். அதில் சூடிய செங்கழுகின் நிறம் தழல் என நெளிந்தது. மணிக்குண்டலங்களும் செம்மணிஆரங்களும் தோள்வளைகளும் செவ்வைரங்கள் பதிக்கப்பட்ட பொற்கச்சையும் அணிந்திருந்தான். அவனுக்குப்பின்னால் அமர்ந்திருந்த வீரன் பிடித்த வெண்குடை அவன் தலை மேல் முத்துச்சரம் உலைந்தாட முகிலெனக் கவிந்திருந்தது. அருகே ருக்மி விதர்ப்ப நாட்டின் அன்னப்பறவை முத்திரை பதித்த மணிமுடியும் வைரக்குண்டலங்களும் மணியாரங்களும் தோள்வளையும் அணிந்து அமர்ந்திருந்தான். முகில்கள் மேல் கால்வைத்து நடந்து வருபவர்கள் போல யானை மேல் அவர்கள் அசைந்து வந்தனர்.

அமிதை குனிந்து கனவில் அமர்ந்திருந்த ருக்மிணியிடம் “இளவரசி, தங்கள் தமையனும் சேதி நாட்டரசரும் எழுந்தருளுகிறார்கள்” என்றாள். ருக்மிணி திரும்பி நோக்கி புன்னகைத்து “இருவரும் அழகுடன் பொலிகிறார்கள் அன்னையே” என்றாள். அரசி “சேதி நாட்டரசர் பேரழகர். அவரைக் காமுறாத இளவரசியர் பாரத வர்ஷத்தில் மிகச் சிலரே” என்றாள். ருக்மிணி “ஆம். இனியவர்” என்றாள்.

முகம் மலர்ந்த அரசி “நீ அவ்வண்ணம் எண்ணுவாயென்றே நானும் எண்ணினேன் இளையவளே” என்றாள். சேதிநாட்டின் அணிநிரை வரதாவை நெருங்கியபோது ருக்மியின் அணுக்கப் படைத்தலைவர் கீர்த்திசேனர் குதிரை மேல் எழுந்து நின்று இரு கைகளையும் விரித்து அசைத்து “வாழ்த்தொலி எழுப்புங்கள்… அரசரை வாழ்த்துங்கள்” என்றுகூவ அவருடன் வந்த படைவீரர்ளும் சேதிநாட்டினரும் “சேதிநாட்டு இளஞ்சூரியன் எழுக! விதர்ப்ப நாட்டு இந்திரன் எழுக! வெற்றி திகழ்க! பாரத வர்ஷம் தலை வணங்குக!” என்று வாழ்த்தினர். மெல்ல கலைந்து பொருளற்ற முழக்கமாக அதை ஏற்று ஒலித்தது கௌண்டின்யபுரியின் குடித்திரள்.

“குடிகள் குரலெழுப்பத் தயங்குகிறார்கள்” என்றார் பீஷ்மகர். “ஆம் அரசே” என்றார் அமைச்சர். “குடிகளைப்போல ஈவிரக்கமற்றவை பிறிதில்லை. இவர்கள் ஒவ்வொருவரும் முறைமையும் இங்கிதமும் அறிந்தவர்கள். ஆனால் பெருந்திரளாக அவர்கள் அனைத்து உணர்ச்சிகளையும் அப்படியே வெளிப்படுத்துகிறார்கள். சற்று நுண்ணுணர்வு இருந்திருந்தால் அவனுக்கு இப்போது இக்குடிகளின் உள்ளம் விளங்கியிருக்கும்” என்றார். அமைச்சர் “ஆம் அரசே. மக்கள் அவரை விரும்பவில்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

பீஷ்மகர் “நாடு என்பது மணிமுடியும் செங்கோலுமாக கைக்கு சிக்குவது. மண்ணும் நதிகளுமாக விழி தொடுவது. முறைமைகளும் நெறிகளுமாக சித்தம் அறிவது. ஆனால் நம்முன் நிறைந்திருக்கும் குடிகளின் உளமென பெருகித் திகழ்வது. அந்தத் தெய்வம் எளிதிலேற்பதில்லை. அதை உணராத அரசன் எப்போதும் பிழை புரிகிறான்” என்றார். சுஷமை அதைக் கேட்டு பற்களைக் கடித்து மெல்லியகுரலில் “மதுவருந்தி அரண்மனை அவையில் படுத்திருக்கையில் தோன்றிய சிந்தனை இது போலும்” என்றாள்.

பீஷ்மகர் நீள்மூச்சுடன் “என் சொற்களுக்கு இங்கு பொருளில்லை. அவை பின்னர் தன்னை விளைவுகளென வெளிக்காட்டட்டும்” என்றார். “இந்நன்னாளில் கூட என் மைந்தனைப் பற்றிய ஒரு நற்சொல் உங்கள் நாவில் எழவில்லை என்பதை காண்கிறேன். உங்கள் உள்ளம் எங்கு செல்கிறதென தெரிகிறது. அரசை ஆளத்தெரியாதவர் நீங்கள். அதற்கு என் மைந்தனின் வாளறிவும் நூலறிவும் தேவை. ஆனால் அவன் யானைமேல் வந்திறங்கி, மக்கள் அவனை வாழ்த்திக் குரலெழுப்பினால் உங்கள் உள்ளம் எரிகிறது” என்றாள் சுஷமை. பீஷ்மகர் அவளை நோக்கி திரும்பவே இல்லை.

களிற்றுயானைகள் இரண்டும் ஆற்றுக் கரை நோக்கி வந்தன. சற்றே வழுக்கும் சேற்று மண்ணில் தங்கள் பொதிக்கால்களை நுனி வளைத்து மெல்லத்தூக்கி வைத்து துதிக்கைகளை நீட்டி முன்னால் பறந்த ஈரமண்ணைத் தொட்டு உறுதி செய்து மெல்ல உருளும் பாறைகள் போல சரிந்திறங்கின. அவை களமுற்றத்து நடுவே வந்து நின்றதும் அவற்றருகே வந்து நின்ற வீரர்கள் இருவர் மரத்தாலான ஏணிகளை அவற்றின் விலாவில் சாய்க்க வணங்கிய கைகளுடன் அவற்றினூடாக இறங்கி இருவரும் மண்ணுக்கு வந்தனர். அமைச்சர்கள் எழுவர் முன்னால் சென்று ருக்மியை வணங்கி நீராட்டு நிகழ்வு தொடங்கப்போவதை தெரிவித்தனர். ருக்மி சிசுபாலனிடம் கையசைத்து மேடைக்கு வரும்படி அழைத்தான்.

யானைகளுக்கு நாணல்பரப்பு என பிளந்து வழிவிட்ட வேல்வீரர் நடுவே கவசங்களில் பந்தஒளி பொன்னுருகியதென அசைய கனல்விழிகள் சூடிய உடலுடன் இருவரும் நடந்து வந்தனர். ருக்மி பீஷ்மகர் முன் தலைவணங்கி “அரசரை வணங்குகிறேன். சேதி நாட்டு அரசர் நம் விருந்தினராக வந்துள்ளார். இந்த புது நன்னீராட்டு விழவில் நம் அழைப்புக்கிணங்க அவரும் நீர்வழிபடுவார்” என்றான். சிசுபாலன் நன்கு பயின்ற அரசநடையுடன் அவைமேடைமேல் வந்து நின்று திரும்பி நடன அசைவுகளுடன் கௌண்டின்யபுரியின் குடிகளை வணங்கியபின் பீஷ்மகரை தலைதாழ்த்தாமல் வணங்கி “விதர்ப்பத்தின் மண்ணில் நின்றிருப்பதில் நிறைவடைகிறேன். சேதி நாடு வாழ்த்தபெறுகிறது” என்று சொன்னான்.

பீஷ்மகர் எழுந்து அவன் தலைமேல் கை தூக்கி வாழ்த்தளித்து “சேதி நாட்டுப் பெருமை விதர்ப்பத்தை பெருமைகொள்ளச்செய்யட்டும். இந்த மண் தங்களது குடியையும் குலத்தையும் வாழ்த்துகிறது” என்றார். அமைச்சர் கைவீச இருபக்கமும் நின்றிருந்த இசைச்சூதரும் வைதிகரும் வேதமும் இசையும் முழங்க சூழ்ந்திருந்த மக்கள் இருமன்னரையும் வாழ்த்தி பேரொலி எழுப்பினர். அரிமலர் வந்து அவர்கள் மேல் விழுந்தது.

சிசுபாலன் அரசியை வணங்கி “விதர்ப்ப அரசியை வணங்குகிறேன். மங்கலம் சூழும் இந்நாள் என் மூதாதையர் மகிழ்வதற்குரியது” என்றான். அவள் முகம் மலர்ந்து கைதூக்கி வாழ்த்தளித்து “உங்கள் வருகையால் நானும் என் மகளும் மகிழ்கிறோம். இந்நாடு நிறைவுகொள்கிறது. இனி என்றும் இந்நாளின் உணர்வு இவ்வண்ணமே வளரட்டும்” என்றாள். ருக்மிணி புன்னகையுடன் நோக்க சிசுபாலன் அவளை நோக்கி மெல்ல தலைதாழ்த்தி வணங்கினான்.

முதுவைதிகர் மேடைக்கு வந்து தலைவணங்கி “அரசே, இனியும் நேரமில்லை. நீர் வழிபாடு தொடங்கலாம் அல்லவா?” என்றார். “ஆம், மங்கலம் ஆகுக!” என்று பீஷ்மகர் ஆணையிட்டார். மேடையிலேயே பீஷ்மகருக்கு நிகராக அமைக்கப்பட்ட இரு பொற்பீடங்களில் சிசுபாலனும் ருக்மியும் அமர்ந்தனர். சேதிநாட்டு அமைச்சர்களும் படைத்தலைவர்களும் சிசுபாலனுக்கு இரு பக்கமும் நிரைவகுக்க அவன் அரசன் என்றே அமர்ந்திருந்தான். ருக்மி அமர்ந்துகொண்டு இயல்பாக அமைச்சரை நோக்கி ஏதோ சொல்ல அவர் அவனருகே சென்றார். இன்னொரு அமைச்சரையும் அவன் விழிகளால் அழைக்க அவரும் அணுகினார். சற்று நேரத்தில் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவனுக்குப் பின்னாலும் அருகிலுமாக நிரைகொண்டனர்.

சிசுபாலன் பின்னர் ஒருமுறை கூட ருக்மிணியை நோக்கி திரும்பவில்லை. அவள் அங்கிருப்பவள் அல்ல என்பதைப்போல பெருகிச் செல்லும் வரதாவையே நோக்கிக் கொண்டிருந்தாள். அரசி பீஷ்மகரிடம் “நான் அறிகிறேன், அவர்களின் நோக்கு காதல் கொண்டது. ஐயமில்லை” என்றாள். பீஷ்மகர் “நாம் இப்போது அதை முடிவு செய்யவேண்டியதில்லை” என்றார். “இந்த மேடையிலேயே அறிவிப்போம். இதற்குப் பின் ஒரு தருணம் நமக்கில்லை” என்றாள் அரசி. பீஷ்மகர் “புதுநீராட்டு மேடையில் மண அறிவிப்பு செய்வது முறையல்ல” என்றார். “எதைச் சொன்னாலும் அதற்கொரு முறைமைமரபு சொல்கிறீர்கள். ஷத்ரியர்கள் பெருவிழவுகளில் மணமறிவிப்பது எங்குமுளதே” என்றாள் சுஷமை. பீஷ்மகர் “பார்ப்போம்” என்று மட்டும் சொல்லி திரும்பிக் கொண்டார்.

வேள்விச்சாலையில் இருந்து வந்த வைதிகர் பன்னிரு சிறியநிரைகளாக பொற்குடங்களை கையிலேந்தி வருணமந்திரத்தை சொன்னபடி களிமண் குழைந்த நதிச்சரிவில் இறங்கி வரதாவை அடைந்தனர். நீரில் முதுவைதிகர் முதலில் இறங்கி மும்முறை தொட்டு தன் தலைமேல் தெளித்துக் கொண்டு பொற்குடங்களிலிருந்த மலரை நீரில் கவிழ்த்து பரவவிட்டு வருணனையும் இந்திரனையும் வணங்கினார்.

விண்ணகத்தின் தலைவர்களே
இந்திர வருணர்களே உங்களை வணங்குகிறேன்
எங்கள்மேல் அருளை பொழியுங்கள்
கவிஞர்கள் அழைக்கையில் எழுந்துவருக!
மானுடரின் காவலர்களே
உங்களை மகிழ்விக்கிறோம் இந்திர வருணர்களே
செல்வங்களாலும் சிறந்த உணவுகளாலும்
இங்கு எழுந்தருள்க!

அவர்கள் அப்பொற்குடங்களில் வரதாவின் நீரை அள்ளிக்கொண்டு வேதநாதத்துடன் மேலேறி வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மரமேடைமேல் குடங்களை பரப்பி வைத்தனர். அதைச்சூழ்ந்து அமர்ந்து இந்திரனையும் வருணனையும் வாழ்த்தி வேதமோதி மலரிட்டு வழிபட்டனர். நிழலுருவாகச் சூழ்ந்திருந்த மக்களின் விழிகள் பந்தங்களின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே குதிரைகள் கனைத்தன. படைக்கருவிகள் குலுங்கின. சில இருமல் ஒலிகள் எழுந்தன. வரதாவின் சிற்றலைகளின் ஒலி வேதச்சொல்லுடன் இணைந்து கேட்டது.

விழியொளி தெளிவதைப்போல காலை விடிந்துகொண்டிருந்தது. மக்கள் அணிந்திருந்த வெண்ணிற ஆடைகள் முதலில் இருளில் இருந்து துலங்கி வந்தன. பின்னர் மஞ்சள், இளநீலம், இளம்பச்சை நிறங்கள் ஒளிபெற்றன. அவர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக தெரியத்தொடங்கின. அன்னையரின் இடைகளில் கைக்குழந்தைகள் வாய்களுக்குள் கைவைத்து உள்ளங்கால்களைச் சுழற்றியபடி பொறுமையிழந்து அமர்ந்திருந்தன. தந்தையரின் தோள்மேல் அமர்ந்திருந்த சிறுவர்கள் உடல் வளைத்து விழிகள் விரிய நோக்கினர்.

கலநீர் வழிபாடு முடிந்ததும் வைதிகர் எழுந்து நின்று வரதாவை நோக்கி கைவிரித்து அதை வாழ்த்தினர். விண்ணகப்பெருநீர்களை மண்ணில் எழுந்த நதிகளை வாழ்த்தியபின் அவர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றனர். அமைச்சர் கைகாட்ட பெருமுரசுகள் முழங்கின. அதுவரை தளர்ந்திருந்த கூட்டமெங்கும் முரசின் அதிரும் தோல்பரப்பென ஓர் அசைவு எழுந்தது. கொம்புகளும் சங்குகளும் மணிகளும் எழுந்தன. பீஷ்மகர் எழுந்து தன் பட்டத்தரசி சுஷமையின் கைபற்றி மேடையிலிருந்து இறங்கி மெல்ல நடந்துவந்து நீர்க்குடங்கள் இருந்த மேடையை அடைந்தார். அவர் தலைக்குமேல் வெண்குடை அசைந்து வந்தது. பின்னால் படைத்தலைவரும் அமைச்சரும் வந்தனர்.

முரசுகளும் கொம்புகளும் மணிகளும் ஓய்ந்தன. சூதர்களின் மங்கல இசை பெருகிச்சூழ்ந்தது. முதுவைதிகர் சொற்படி பீஷ்மகர் தன் செங்கோலை மேடைமேல் வைத்தார். அரசனும் அரசியும் தங்கள் மணிமுடிகளைக் கழற்றி மேடைமேல் இருந்த சந்தனப்பீடத்தில் விரிக்கப்பட்டிருந்த மஞ்சள்பட்டின் மேல் வைத்தனர். அதன் அருகே பீஷ்மகர் தன் உடைவாளை உருவி வைக்க அவருடன் வந்த இருவீரர்கள் அவரது வெண்கொற்றக்குடையை அதன்மேல் பிடித்துக்கொண்டனர். மணிமுடிகளுக்கும் வாளுக்கும் முதுவைதிகர் மலர்மாலை ஒன்றை சூட்டினார்.

சுஷமையின் கைகளைப்பற்றியபடி பீஷ்மகர் நடந்துசென்று சேறு பரவிய வரதாவின் கரையில் மெல்ல இறங்கி நீரை நோக்கி சென்றார். பெண்கள் குரவையிட ஆண்கள் வாழ்த்தொலி எழுப்பினர். இடைவரை நீரிலிறங்கிய பீஷ்மகருக்குப்பின்னால் அமைச்சரும் படைத்தலைவரும் நின்றனர். பீஷ்மகர் அரசியின் கையைப்பிடித்தபடி நீரில் மும்முறை மூழ்கினார். நீர் சொட்டும் குழலுடன் எழுந்து வரதாவை கைகூப்பி வணங்கியபின் திரும்பாமல் பின்கால் வைத்து நடந்து கரைமேட்டில் ஏறினார். மும்முறை வரதாவை வணங்கியபின் நடந்து மீண்டும் கலநீர் மேடை அருகே வந்து நின்றார். பிறரும் நீராடி அவரைத் தொடர்ந்து மேலேறினர்.

வைதிகர் வேதமோதியபடி மூன்று குடங்களில் இருந்த நீரால் அவர்களின் மணிமுடியை நீராட்டினர். மூன்று குடநீரால் உடைவாளையும் செங்கோலையும் கழுவி தூய்மையாக்கினர். வெண்குடைமேல் நீர் தெளித்து வாழ்த்தினர். முதுவைதிகர் வணங்கி மலர்கொடுத்து அரசரையும் அரசியையும் வாழ்த்தி அமைய பீஷ்மகரும் அரசியும் இரு நீர்க்குடங்களை தலையில் ஏற்றியபடி முன்னால் நடந்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த குடிப்பெருக்கு வாழ்த்தொலியாக அலையடித்தது.

முற்றத்தின் மறுஎல்லையில் பெரிய மரவுரித் தலைப்பாகைகளுடன் இடையில் மரவுரி ஆடை மட்டும் சுற்றி நின்றிருந்த ஏழு முதிய குலத்தலைவர்கள் தழைகொண்ட ஆல், அத்தி, வேங்கை, கோங்கு, பலா, மா, மருத மரக்கிளைகளை செங்கோலென ஏந்தியபடி அவரை நோக்கி மெல்ல நடந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் ஏழு குடிமூத்த அன்னையர் இடத்தோள்களில் சிறிய மண்கலங்களையும் வலக்கையில் நெல், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, வரகு எனும் மணிகளின் கதிர்களையும் ஏந்தியபடி வந்தனர். குலப்பாடகர்கள் தோல்பானைகளையும் வட்டமணிகளையும் குறுங்குழல்களையும் முழக்கியபடி தொடர்ந்தனர்.

அரசரையும் அரசியையும் எதிர்கொண்டதும் முதிய குடித்தலைவர்கள் தங்கள் கோல்களை அவர் தலைமேல் தூக்கி அசைத்து வாழ்த்தினர். அன்னையர் குரவையிட்டு அவர்களை வரவேற்றனர். அன்னையர் அளித்த கதிரை அரசி பெற்றுக்கொள்ள தாதையர் அளித்த தழைமரக்கிளையை அரசர் பெற்றுக்கொண்டார். அவர்களை அழைத்துக்கொண்டு அரசரும் அரசியும் நடக்க படைத்தலைவரும் அமைச்சரும் தொடர்ந்தனர். குலப்பாடகர் இசையுடன் பின்னால் செல்ல இசைச்சூதரின் மங்கலப்பேரிசையும் வாழ்த்தொலிகளும் இடையறாது ஒலித்தன. கௌண்டின்யத்தின் கோட்டைச்சுவர்களிலிருந்து அந்த ஒலி எதிரொலியாக திரும்பவந்தது.

வரதாவின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய வயல்பாத்தி உழுது நீர்பெருக்கப்பட்டு வானத்து ஒளியை வாங்கி தீட்டப்பட்ட உலோகம்போல மின்னியபடி காத்திருந்தது. அதனருகே வேளிர்களின் ஏழுகுடித்தெய்வங்கள் கல்பீடங்கள் மேல் கற்களாக நிறுவப்பட்டு குங்குமமும் களபமும் பூசி கரிய விழிவரையப்பட்டு மலர்மாலைசூடி அமர்ந்திருந்தன. பீஷ்மகரும் சுஷமையும் அந்தத் தெய்வங்களை வணங்கி மரக்கிளையையும் கதிரையும் அவற்றின் முன் வைத்தனர். அங்கே நின்றிருந்த குலப்பூசகர் அவர்களின் நெற்றியில் அந்தத் தெய்வங்களின் குங்குமகளபக் கலவையை இட்டு வாழ்த்தினார். அவர் கைபிடித்து அழைத்துச்சென்று வயல்விளிம்பில் அவர்களை நிறுத்தினார்.

பெருமுரசும் கொம்புகளும் பொங்கி எழுந்து வானை அதிரச்செய்தன. அரசி தன் கலத்திலிருந்த ஏழுமணிகள் கலந்த விதைகளை நீரொளி பரவிய வயலில் வீசி விதைத்தாள். பீஷ்மகர் தன் தோளிலிருந்த பொற்கலத்திலிருந்து நீரை அந்த வயலில் விட்டார். இருவரும் மும்முறை அந்த வயலை வணங்கி மீண்டனர். கூடிநின்றிருந்த மக்கள் புயல்சூழ்ந்த காடு போல கைகளையும் ஆடைகளையும் வீசி துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்தனர்.

ஏழு வெண்பசுக்களுடன் ஆயர்குடியின் குடிமூத்தவர் அவர்களை எதிர்கொண்டனர். நுரைபொங்கும் பாற்குடங்களுடன் முதுஆய்ச்சியர் எழுவர் அவர்களுக்கு துணைவந்தனர். மூதாயர் தங்கள் வளைகோலைத்தூக்கி பீஷ்மகரின் தலைமேல் வைத்து வாழ்த்தினர். ஆய்ச்சியர் பால்துளி எடுத்து அரசிமேல் தெளித்து வாழ்த்துரைத்தனர். தலைதாழ்த்தி பசுக்களை வணங்கிய பீஷ்மகர் ஒரு அன்னைப்பசுவின் கயிற்றை வாங்கிக்கொள்ள அரசி பாற்குடம் ஒன்றை பெற்றுக்கொண்டாள்.

வேளிரும் ஆயரும் இருபக்கமும் தொடர அரசரும் அரசியும் மீண்டும் வந்து வைதிகர் முன் நின்றனர். வைதிகர் மணிமுடியை எடுத்து பீஷ்மகரின் தலைமேல் சூட இருகுடிமூத்தாரும் தங்கள் கோல்களைத் தூக்கி அவர்களை வாழ்த்தினர். மக்கள் திரள் “முடிகொண்ட விதர்ப்பன் வாழ்க! முடியாகி வந்த வரதா வாழ்க! குடி வாழ்க! குலம் வாழ்க!” என்று கூவியது. மணிமுடி சூடி செங்கோலும் உடைவாளும் ஏந்திய பீஷ்மகரும் முடிசூடிய அரசியும் அங்கு கூடியிருந்த மக்களைநோக்கி தலைதாழ்த்தி வணங்கினர். அரிமலர் மழை எழுந்து அவர்கள் மேல் பொழிந்தது.

வேளிரும் ஆயரும் இருபக்கமும் நிரை வகுத்து அவர்களை அழைத்துச்சென்று மேடை ஏற்றி அரியணைகளில் அமரச்செய்தனர். அவர்கள்மேல் குஞ்சலம் நலுங்க வெண்குடை எழுந்தது. மூத்தோர் அரிமலரிட்டு வாழ்த்தி மேடையிலிருந்து இறங்கியபின் வணிகர்கள் நிரைவகுத்து மேடைக்கு வந்து அரசரைப் பணிந்து வாழ்த்தத் தொடங்கினர். இருபக்கமும் உடைவாள் உருவிய படைத்தலைவரும் ஏட்டுச்சுவடி ஏந்திய அமைச்சரும் நின்றிருக்க பீஷ்மகர் முடிபொலிந்தார்.

முந்தைய கட்டுரைநோயல் நடேசன்
அடுத்த கட்டுரைகல்கி, பு.பி.- அஸ்வத்