‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 21

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 2

அணுகமுடியாது எப்போதும் அருகே நிற்பதைச் சுட்ட அஸ்வபாதத்தை சொல்வது அந்தகர்குலத்தின் வழக்கமாக இருந்தது. ஹரிணபதத்தைச்சூழ்ந்த எழுபத்திரண்டு ஊர்களில் எங்கே நின்றாலும் வானை உதைக்க எழுந்த குதிரைக்குளம்பை காணமுடியும். ஆனால் அதில் ஏறிச்சென்ற யாதவர் எவருமில்லை. அதைச்சூழ்ந்திருந்த காளநீலம் என்னும் பெருங்காடு நீலக்கூந்தல் என்று யாதவ குலப்பாடகர்கள் பாடினர். காளநீலி மலைக்குடிகளின் தெய்வம். பன்னிரு முலைகளும் ஏழுவிழிகளும் கொண்டவள். இரவுகளில் கூந்தல்சுழற்றி ஓலமிடுபவள். விண்மீன்களை அள்ளி வானில் வீசிப்பிடித்து கழற்சியாடுபவள். கொன்றையும் வேங்கையும் சூடிய அக்கூந்தலின் பேன்களே யானைகள். அதில் பதித்த பொன்பில்லைகள் புலிகள். செவ்வைரங்கள் சிம்மங்கள்.

காளநீலி தன் உள்ளங்கையில் தூக்கிக் காட்டும் அஸ்வபாதம் அருகே செல்லமுயன்றால் விலகிவிலகிச்செல்லும். அதை விலக்கிக் கொண்டு அவள் புன்னகைப்பாள். ஆழத்திலிருந்து ஆழத்திற்கு இட்டுச்செல்வாள். ஒரு கட்டத்தில் அஸ்வபாதம் மண்ணுக்குள் புதைந்து முற்றிலும் மறைய நான்குபக்கமும் அலையென காடு மேலெழுந்து வானைத்தொட்டு சூழ்ந்திருக்கும். புயலோசை என காளநீலியின் நகைப்பு ஒலிக்கும். அஸ்வபாதத்தின் மேல் எப்போதும் நின்றிருக்கும் குளிர்ந்த நீலமுகில் காளநீலியின் மூடிய விழி என்பார்கள். அவ்விழியிமைகள் திறந்து அவள் ஒளிரும் செவ்விழிகள் தெரியும். அச்சத்தில் செயலிழந்து நின்று அதைப்பார்த்தவர்கள் மீள்வதில்லை.

காளநீலத்தில் வாழும் மலைக்குடிகள் கூட அஸ்வபாதத்தை அணுகியதில்லை. சேறுநிறைந்த தரையில் செழித்து எழுந்து கிளைபின்னி இலை கரைந்து ஒற்றைப்பசும்குவையென நிற்கும் காடு வழியாக ஊடுருவிச்சென்றால் அதன் அடிவாரத்தை மட்டுமே அடையமுடியும். அடிவாரத்தில் இருந்து எப்போதும் ஆயிரம் காதம் அப்பால் இருக்கிறது அஸ்வபாதம் என்று ஒரு பாணனின் பாடல் சொன்னது. ‘தேவியின் கையில் இருக்கும் களிப்பாவை. இந்திரநீலக் குவை. விண்ணுக்கெழுந்த மண்ணின் பாதம்…’ என்று அது விவரித்தது. அஸ்வபாதம் எப்போதுமே முகில்படலத்தால் மூடப்பட்டு இளநீலநிறமாகவே தெரிந்தது. முகில் திரை வெயிலில் ஒளிகொள்ளும்போது அது நீர்பட்டு அழிந்த ஓவியம்போலிருக்கும். காலையிலும் மாலையிலும் முகிலின் சவ்வு தடித்து நீலம் கொள்கையில் மடம்புகளும் முழைகளும் மடிப்புகளும் எழுந்துவர அண்மையில் வந்து முகத்தோடு முகம் நோக்கி நின்றது. அதன் குகைகள் அறியாச்சொல்லொன்றை உச்சரித்து நிற்கும் இதழ்கள் போல உறைந்திருந்தன.

அஸ்வபாத மலையை யாதவர் விழிதூக்கி நோக்குவதில்லை. அதை நேர்நின்று நோக்குபவர்களின் கனவில் அது புன்னகைக்கும் பெருமுகமாக எழுந்து வந்து குனிந்து மூடிய விழிகளின் மேல் மூச்சுவிட்டு நின்றிருக்கும். அப்போது விழிதிறக்கலாகாது. விழிதிறந்தவர்கள் நீலப்பெருக்கில் கனிந்து காம்பிறும் பழம் என உதிர்ந்து மறைவார்கள். அஸ்வபாதத்தைச்சுற்றி நின்றிருக்கும் நீலமுகில்படலம் அப்படி மறைந்தவர்களின் இறுதிமூச்சுக்களால் ஆனது என்றது யாதவ குலப்பாடல். அவர்களின் இறுதிச்சொற்களால் ஆனது அதில் எழும் இடி. அவர்களின் இறுதிப்புன்னகைகளால் ஆனது மின்னல். அவர்களின் இறுதி ஞானத்தால் ஆனது வானவில்.

காளநீலம் ஒரு மாபெரும் கரிய தாமரை. வெளிப்பக்கமாக விரிந்திருக்கும் இதழ்களை மட்டுமே யாதவர் அறிந்திருந்தனர். அங்குதான் அவர்களின் ஊர்கள் இருந்தன. தலைமுறைகளாக அவர்கள் அங்கேயே பிறந்து அங்கே ஆபுரந்து அங்கே மடிந்து அம்மண்ணில் உப்பாயினர். அவர்களின் அன்னையர்தெய்வங்களும் அங்கே கடம்ப மரத்தடிகளிலும் வேங்கைமரத்தடிகளிலும் மழைப்பாசி படிந்த உருளைக்கற்களாக விழியெழுதப்பட்டு பட்டு சுற்றப்பட்டு காய்ந்த மலர்மாலைசூடி அமர்ந்திருந்தனர். காளநீலத்திலிருந்து கனிந்து வந்த நீரோடைகளை அவர்கள் அருந்தினர். அன்னை தன் முலைப்பாலில் நஞ்சு கலந்தளிப்பதும் உண்டு. ஆக்களும் மைந்தரும் நோயுற்று இறக்கும் முன்மழைக்காலத்தில் இல்லங்களின் முன் நெய்விளக்கு ஏற்றிவைத்து இருளெனச் சூழ்ந்த காடு நோக்கி யாதவர் கைதொழுதனர். ‘அறியமுடியாதவளே, சூழ்ந்திருப்பவளே, உன் கருணையால் வாழ்கிறோம்.’

ஆழமற்ற சிறு சுனைகளும் புல்செறிந்த சரிவுகளும் ஊறிக்கனிந்து ஓடைகளாகும் சதுப்புகளும் குறுமரப்பரவலும் கொண்டு சரிந்து வரும் நிலத்தில் அவர்களின் கன்றுகள் மேய்ந்தன. பெருமரங்களுக்கு மேல் கட்டப்பட்ட பரண்வீடுகளில் அவர்கள் கீழே நெருப்பிட்டு எரிவெம்மையில் புகைசூழ மரவுரியும் கம்பளியும் போர்த்தி அமர்ந்து தாயமும் பகடையும் சொல்மாற்றும் விளையாடினர். கன்றுகளைச் சூழ்ந்த சிறுபூச்சிகளை பொற்துகள்களாக ஆக்கும் இளவெயில் நோக்கி அமர்ந்து கண்கனிய குழலிசைத்தனர். அந்திகளிலும் மழைமூடிய பகல்களிலும் காட்டுக்குள் இருந்து ஒளிரும் விழிகளுடன் சிறுத்தைகள் அவர்களின் கன்றுகளை தேடிவந்தன. இரவுகளில் ஓநாய்கள் மெல்லிய காலடிகளுடன் வந்து மந்தையை சூழ்ந்துகொண்டு சுவையை எண்ணி முனகியபடி எம்பி எம்பிக்குதித்தன. இருளாழத்தில் நரிகளின் ஊளை எப்போதும் இருந்தது. காலை விடியும் ஈரமண்ணில் புலிப்பாதத் தடத்தால் காடு ஓர் எச்சரிக்கையை எழுதிப்போட்டிருந்தது. யாதவர்களுக்கு ஆழ்கானகம் அச்சுறுத்தும் அயலவர் தெய்வம்.

பிரசேனர் அந்தகக் குலமூத்தார் இருவரும் பூசகர் இருவரும் இரு பாணரும் நூற்றெட்டு துணைவீரருமாக காளநீலத்திற்குள் நுழைந்தபோது ஒரே பகலுக்குள் அஸ்வபாதம் தலைக்குமேல் எழுந்து மறைந்தது. அவர்களைச்சூழ்ந்து அலையடித்த பசுந்தழைப்புக்குள் காட்டின் மூச்சுபோல காற்று ஓடிக்கொண்டே இருந்தது. பறவைக்குரல்களும், சிற்றுயிர்களின் ஓசையும், அருவிகளும் நீரோடைகளும் எழுப்பிய நீர்முழக்கமும் இணைந்து எழுந்த அறுபடா ஒலிப்பெருக்கு காற்றின் ஒலியை தன்மேல் ஏந்தியிருந்தது. கொடிகள் அடிமரத்தை அறைந்த விம்மலில் கிளைகள் உரசிக்கொள்ளும் உறுமலில் காடு எதையோ மீளமீள சொல்லிக்கொண்டிருப்பதாக பிரசேனர் எண்ணினார். அவர் உடல் அச்சத்தில் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. அவர்களை வழிகாட்டி அழைத்துச்சென்ற ஒற்றன் அம்மலைப்பகுதியை நன்கறிந்தவன். ஆயினும் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தனர். “இந்தக்காட்டில் பாதைகளே இல்லையா?” என்றார் பிரசேனர். “நாம் பாதையில்தான் செல்கிறோம் அரசே. ஆனால் இங்கு பாதை விழியாலறியப்படுவதல்ல, மூக்கால் உணரப்படுவது” என்றான் ஒற்றன்.

ஊஷர குலத்தலைவர் சிருங்ககாலரை ஒற்றர்கள் வழியாக அணுகுவதற்கே பலவார கால முயற்சி தேவைப்பட்டது. ஊஷரகுலத்தின் மூத்தோரவையில் அனைவருமே நிலமக்களின் உறவை முழுமையாகவே விலக்க விழைபவர்கள் என்றான் ஒற்றன். சிருங்ககாலரும் அவரது இருமைந்தர்களான கலிகனும் மோதனும் மட்டுமே யாதவர்நட்பை விழைந்தனர். தங்கள் குலத்தின் மூத்தோரவையில் பேச்சுவாக்கில் யமுனைக்கரையில் ஒரு வணிகமுனையை அமைப்பதைப்பற்றி சிருங்ககாலர் சொன்னதுமே விற்களுடனும் வேல்களுடனும் குடிமூத்தார் எழுந்து நின்று கைநீட்டிக் கூச்சலிட்டு வசைமொழியத் தொடங்கினர். “நாம் உண்டு கழித்த நீராலானது யமுனை. நமது கழிவில் நாமே கால்நனைக்க விழைகிறோம். நம் குலதெய்வங்களை இழிவுசெய்கிறோம். அவர்களின் நச்சு இக்காடெங்கும் நிறைந்திருக்கிறது என்பதை மறவாதீர். நம் குழவிகள் விழியடங்கி மண்மறையும். நம் இல்லங்கள் மேல் நெருப்பு ஏறும். நாம் நடக்கும் பாதையில் நாகம் படுத்திருக்கும்” என்று முதற்பூசகர் சொன்னார். ஹரிணபதத்தின் ஒற்றர்கள் மீண்டும் மீண்டும் சென்று வந்தனர். ஊஷரர் எவருக்குமே எழுத்துமொழி தெரியாதென்பதனால் நேரடியாக சொல்லனுப்பமுடியாது. சொல்லியனுப்பப்பட்ட வார்த்தைகளைவிட பரிசுப்பொருட்கள் மேலும் பயனளிக்கின்றன என்று பிரசேனர் நான்காவது தூதுக்குப்பின்புதான் கண்டுகொண்டார். பரிசுப்பொருட்களில் யவனமது மிக விரும்பப்படுகிறது என்றும்.

பன்னிரண்டு தூதுக்குப்பின் அவர்களே யவனமதுவை கோரி தங்கள் தூதனை அனுப்பத் தொடங்கினர். சிருங்ககாலர் யவனமதுவை தங்கள் குடிச்சபையில் மூத்தாருக்கு ஊனுணவுடனும் தேனுணவுடனும் இணைத்து அளித்தார். யவனமதுவில் உறைந்த மும்முனை வேல் ஏந்திய நீலவிழிகள் கொண்ட யவனநாட்டுத் தேவன் அவர்களை வென்றான். அதை அருந்தும்போது நீலம் விரிந்த நீர்வெளி கண்ணுக்குத்தெரிவதாக முதுபூசகர் சொன்னார். அதன்மேல் செந்நிறச் சிறகுகளை விரித்துச்செல்லும் கலங்களை அவர் கண்டார். செந்தழலையே தாடியாகக் கொண்ட முதியவர்களை. அவர்கள் பச்சைநிற விழிகளை. “அவர்களின் கனவு இந்த மதுவில் வாழ்கிறது” என்றார். கனவுநீர் என அதை அழைத்தனர். அதற்காக ஒவ்வொருநாளும் சிருங்ககாலரின் இல்லத்திற்கு முன் வந்து நின்றனர். ஆவணிமாதம் முழுநிலவுநாளில் காட்டுக்குள் கூடிய ஊஷரர்களின் குடிமூத்தார் அவைக்கூடலுக்கு வந்து அவர்களின் கதிர்தெய்வத்தைத் தொழுவதற்கான அழைப்பு பிரசேனருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவ்வழைப்பை பிற மலைக்குடியினர் அறியவேண்டியதில்லை என்று சிருங்ககாலர் சொன்னார். கதிர்தெய்வத்தின் அருள் பிரசேனருக்கு இருக்கும் என்றால் அவரை குடிச்சபை ஏற்கக்கூடும். அதன்பின் அவரை ஊஷரர் தமராக ஏற்று படையிணைவுக்கும் வணிகஉறவுக்கும் ஒப்பக்கூடும். அவ்வொப்புதல் நிகழ்ந்தபின்னரே அதை பிற கானகத்தார் அறியவேண்டும்.

அப்படையுடன் சென்று நான்கு கானகக் குலங்களை வெல்ல முடியும் என்றார் சிருங்ககாலர். தசமுகர்களிடம் கலிகனும் மோதனும் முன்னரே பேசத் தொடங்கியிருந்தனர். கனவுநீர் அவர்களை வென்றிருந்தது. சியாமரையும் பிங்கலரையும் படைகாட்டி அச்சுறுத்தி எளிதில் இணைக்கமுடியும். யாதவரின் படையும் கலங்கள்கொண்டுவரும் அம்புகளும் இருந்தால் கன்னரையும் கராளரையும் வெல்லமுடியும். அறுவரும் இணைந்தபின் ஜாம்பவர்கள் எதிர்நிற்கமுடியாதொழிவர். “அவர்களின் காடு பாலுக்குள் உறைந்த நெய் போல காட்டுக்குள் உள்ள அடர்வு. அங்கே மழைத்தெய்வம் நின்றிருக்கிறது. அவள் நீல ஆடையின் சுருளுக்குள் வாழ்பவர்கள் அவர்கள். கரடிமுகம் கொண்ட கொடியவர்கள். காட்டின் ஆழத்தில் அவர்கள் என்றும் கனவுக்குள் வாழும் வஞ்சத்தெய்வம்போல் இருந்துகொண்டுதான் இருப்பார்க்ள். ஆனால் நாம் காட்டுக்குள் கோட்டைகளைக் கட்டி யமுனைவழியாக வரும் படைக்கலங்களை அங்கே நிறுத்தினால் காலம் செல்லச்செல்ல அவர்களை வென்று புறம்காணமுடியும்” என்றார்.

கிளம்பும்போது அரசரில்லத்தின் பெருங்கூடத்தில் பீடத்திலமர்ந்திருந்த சத்ராஜித்தை குனிந்து தாள்தொட்டு வணங்கினார் பிரசேனர். மதுமயக்கால் அடைத்த குரலுடன் “வென்றுவருக இளையோனே” என்றார் சத்ராஜித். “செல்லும் வழி கடினமானது. ஆழ்கானகத்தில் நுழையும் முதல் யாதவன் நீ. காட்டுமக்கள் கரந்துதாக்கும் வஞ்சம் நிறைந்தவர்கள் என்பது நம் மூதாதையர் சொல். மலைமக்களின் சொற்களை ஒருபோதும் முதல்மதிப்புக்கு கொள்ளாதே. நான்கும் எண்ணி நன்று தேர்ந்து துணிக!” பிரசேனர் “என் நெஞ்சு சொல்கிறது, இம்முறை வெல்வோம் என” என்றார். “ஊஷரரின் பொருள் விழைவு நமக்கு உதவும் விசை. அவர்களை அணுக்கராக்கினோம் என்றால் நாம் காட்டை வென்றவர்களாவோம். மூத்தவரே, இந்த மலைக்குடிகள் அறுவரும் நம்முடனிருக்க காட்டுக்குள் ஏழு கோட்டைகளையும் அமைத்துவிட்டோம் என்றால் நாம் துவாரகைக்கோ மதுரைக்கோ அடிகொள்ள வேண்டியதில்லை. ஒருதலைமுறைக்காலம் தலைதாழாது நின்றுவிட்டோம் என்றால் நாமே ஒரு முடியரசாக ஆகமுடியும்.”

சத்ராஜித் புன்னகைத்து “மீண்டும் கனவு காண்கிறாய் இளையோனே” என்றார். பிரசேனர் சற்றே நாணிய முகத்துடன் “ஆம், என் உள்ளம் கனவுகளால் நிறைந்துள்ளது மூத்தவரே. பாரதவர்ஷத்தின் தலைமகனாக நீங்கள் அமரவிருக்கும் அரியணையை எண்ணியே நான் ஒவ்வொரு நாளும் விழித்தெழுகிறேன். சொல்தேரா வயதில் என் நெஞ்சில் ஊறிய எண்ணம் அது. அதிலிருந்து நான் விடுபட்டதேயில்லை” என்றார். சத்ராஜித் சிரித்தபடி அவர் தோளில் தட்டி “நன்று, அக்கனவுகள் உன்னை இட்டுச்செல்லட்டும்” என்றார். அவர் திரும்பிநோக்க ஏவலன் பொற்பேழைக்குள் செம்பட்டில் வைக்கப்பட்ட சியமந்தகமணியை கொண்டுவந்து நீட்டினான். அவர் அதை வாங்கி பொற்சங்கிலியில் கோர்த்த நீள்வட்டப் பதக்கத்தின் நடுவே பொறிக்கப்பட்ட இளநீல மணியை தன் முன் தூக்கி நோக்கி “சூரியனின் விழி” என்றார். “இதன் வழியாக நம்மை அவன் எப்போதும் நோக்கிக்கொண்டிருக்கிறான் என்று தந்தை சொல்வார். இதனூடாக நாம் அவனையும் நோக்கமுடியும், ஆனால் அக்கணத்தை அவனே முடிவுசெய்யவேண்டும் என்பார். இன்றுவரை நான் அவனை நோக்கியதில்லை” என்றபின் அதை பிரசேனரின் கழுத்தில் அணிவித்து “நம் குலம் புரக்கும் இளங்கதிர் உன்னுடன் இருக்கட்டும்” என்றார்.

பிரசேனர் “மூத்தவரே, இது…” என்று தயங்கினார். “இது என்னுடையதென்றால் உன்னுடையதும் அல்லவா?” என்றார் சத்ராஜித். “அணிந்துகொள். சூரியவிழியுடன் உன்னை அவர்கள் பார்க்கட்டும்.” பிரசேனர் நடுங்கும் விரல்களுடன் உடனே அதை கழற்றப்போக சத்ராஜித் அவர் கையைப்பிடித்தார். “காட்டுக்குள் செல்வதுவரை இதை அணிந்துகொள். இது உன் மார்புக்கு இத்தனை அழகூட்டுமென நான் இதுவரை அறிந்ததில்லை.” பிரசேனர் தத்தளிப்புடன் “மூத்தவரே, நம் குடிநெறிப்படி சியமந்தகத்தை மூத்தவர் மட்டுமே அணியவேண்டும்…” என்றார். சத்ராஜித் “அதற்கென்ன, நான் உன்னை மூத்தவனாக கொள்கிறேன்” என்றார். “வேண்டாம் மூத்தவரே, குடிமூத்தார் எவரேனும் இதைக் கண்டால் அறப்பிழையென ஆகும்…” என்று பிரசேனர் தவித்தார். “இளையவனே, அனைவரும் அறிந்த ஒன்றுண்டு” என்றார் சத்ராஜித். கைகள் நடுங்க “மூத்தவரே…” என்றார் பிரசேனர். “மிக இளமையில் ஒருமுறை தந்தை அறியாமல் நீ இந்த மணியை எடுத்து உன் மார்பில் அணிந்துகொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டாய். உன்னை பகல்முழுக்கத் தேடி மலைக்குகை ஒன்றுக்குள் கண்டுகொண்டோம். அங்கே இந்த மணியை நெஞ்சோடணைத்துக்கொண்டு பதுங்கி இருந்தாய்.”

பிரசேனர் “ஆம், நினைவுகூர்கிறேன். அதன்பொருட்டு எந்தை எனக்கு நூறு பிரம்படிகளை அளித்தார். ஒருமாதம் ஊன்விலக்கு நோன்பிருக்க ஆணையிட்டார்” என்றார். “இளையோனே, அன்று நான் என் தந்தையிடம் சொன்னேன், நான் இளையோனாக ஆகிறேன். சியமந்தகத்தை அவனுக்கே அளித்துவிடுங்கள் என்று. தந்தை பிரம்பை ஓங்கியபடி நீ இளையோனாகவேண்டும் என்றால் தெய்வங்களே அதை முடிவுசெய்திருக்கும் மூடா என்றார்.” சத்ராஜித் புன்னகைத்து “இன்று தெய்வங்களின் ஆணை இது என்று கொள்கிறேன். நீ இந்த மணியை அணியாமல் உன்னை மலைக்குடிகள் ஏற்கமாட்டார்கள் என்று நம் குடிகளிடமும் மூத்தாரிடமும் சொல்கிறேன். அவர்களுக்கு மறு சொல் இருக்காது” என்றார். பிரசேனர் “மூத்தவரே, ஆனால்…” என்றார். “அது பொய்யும் அல்ல இளையோனே, நீ இதை அணிந்துகொண்டு அவர்களின் அவையில் அமர்ந்தால் மட்டுமே உன்னை கதிர்குலத்து அரசன் என்று மலைக்குடிகள் ஏற்பார்கள். வேறு வழியே இல்லை.”

பிரசேனர் சியமந்தகத்தை மெல்ல தொட்டார். குளிர்ந்திருந்தது. அதைப் பிடித்து தன் நெஞ்சில் அமைத்தார். இதயத்தில் ஒரு விழி திறந்ததுபோல. “உன் நெஞ்சுக்கு மிகப்பொருத்தமாக உள்ளது இளையோனே. அந்த மணி சென்றமையும் பொற்பதக்கக் குழி ஒன்று உன் உள்ளத்தில் உள்ளது என்று எண்ணுகிறேன்” என்றார் சத்ராஜித். பிரசேனர் பெருமூச்சுவிட “நலம் சூழ்க! நம் மூதன்னையரும் நீத்தோரும் உன் மேல் அருள்பொழியட்டும்” என்று சத்ராஜித் மீண்டும் வாழ்த்தினார். சியமந்தக மணியை அணிந்த பிரசேனரின் தோளை அணைத்தபடி சத்ராஜித் அரசரில்லத்தின் வெளிமுற்றத்துக்கு வந்தபோது அங்கே கூடியிருந்த யாதவகுலமூத்தார் திகைத்தனர். மூத்தபூசகர் ஏதோ சொல்ல வாயெடுக்க சத்ராஜித் “மூத்தோரே, நம் குடிமுதல்வனாக இந்த மணிசூடிச்சென்றாலொழிய மலைக்குடிகள் இளையவனை ஏற்க மாட்டார்கள். நாம் அனுப்பும் தூதையும் ஒப்பமாட்டார்கள் என்றறிக!” என்றார். குடிமூத்தார் ஒருவரை ஒருவர் நோக்க இளைஞர் ஒருவர் “ஆம், அதுவே உண்மை” என்றார். தயக்கத்துடன் அந்தகக்குடியினர் தங்கள் வளைதடிகளைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். குலப்பூசகர் முன்னால் வந்து பிரசேனரின் நெற்றிமேல் தங்கள் கைகளை வைத்து தெய்வங்களின் சொல்லை வழங்கினர். “கதிரவன் வெற்றிபெற்றாகவேண்டும் குலத்தவரே. இளையோன் நற்செய்தியுடன் மட்டுமே வருவான் என்றறிக!” என்றார் சத்ராஜித். “ஆம் ஆம் ஆம்” என்றனர் அந்தகர்.

காடு அவர்களை சுழற்றிச் சுழற்றி உள்ளிழுத்தது. பகலொளி முழுமையாகவே மறைந்து பசுமையே இருளாக சூழ்ந்துகொண்டது. காடு என்பது இலைத்தழைப்பு என பிரசேனர் எண்ணியிருந்தார். கிளைச்செறிவு என முதல்நாளில் அறிந்தார். இலைப்பெருக்கு என அன்றுமாலைக்குள் உணர்ந்தார். உள்ளே செல்லும்தோறும் அது வேர்க்குவை என்று தெளிந்தார். பல்லாயிரம் கோடி நரம்புகளால் பற்றி இறுக்கப்பட்டிருந்தது மண். வேர்களிலிருந்து எழுந்த முளைகளே செடிகளும் மரங்களும் கிளைகளும் இலைகளுமாக இருந்தன. விடிவது முதல் இருள்வது வரை நாள் முழுக்க நடந்தும் இரண்டுகாதம்கூட கடக்கமுடியவில்லை. அந்தியில் வேங்கைமரம் ஒன்றின் கவர்மேல் கட்டப்பட்ட பரண்வீட்டில் கீழே மூட்டப்பட்ட அனலின் வெம்மையை அறிந்தபடி உடலொடுக்கி மரவுரிக்குள் அமர்ந்து உறங்கினர். மறுநாள் இளவெயில் பச்சைக்குழாய்களாக காட்டுக்குள் இறங்கி தூண்களென ஊன்றி எழுந்த பச்சைப்பளிங்கு மாளிகைக்குள் சருகில் பொன்னென பாறையில் வெள்ளியென இலைகளில் மரகதம் என விழுந்துகிடந்த காசுகளின் மேல் கால்வைத்து நடந்தனர்.

கிளம்பும்போதிருந்த நம்பிக்கையை காட்டுக்குள் நுழைந்ததுமே பிரசேனர் இழந்தார். அறியாத ஆழம். அறிந்திராத மக்கள். ஒவ்வொரு முறையும் வெற்றுக் கற்பனையை வளர்த்துக்கொண்டு எண்ணாமல் துணிகிறோம் என்று நினைத்துக்கொண்டார். செலுத்தும் விசையென்றிருப்பது ஆணவமே என அவர் உள்ளறிந்திருந்தார். ஒவ்வொரு பிழையும் மேலும் பிழைகளை நோக்கி செலுத்துகிறது. பிழைகளை ஒப்புக்கொள்ளமுடியாத உளநிலையால் மேலும் பிழைகள். துயில்கலையும் இரவுகளில் இருளின் தனிமையில் அதை எண்ணி பெரூமூச்சுடன் புரண்டுபுரண்டு படுப்பார். எண்ணிச் சலித்து ஒரு கணத்தில் ‘ஆம், அவ்வாறுதான் செய்தேன், அதற்கென்ன?’ என்ற வீம்பை அடைவார். ‘அரசுசூழ்தல் என்பது பிழைகளும் கலந்ததே. அனைத்துப் பிழைகளையும் இறுதிவெற்றி நிகர் செய்துவிடும்’ என்று சொல்லிக்கொள்வார். ‘இறுதிவெற்றி!’ அச்சொல் மாயம் கொண்டது. இனிய மதுவைப்போல் உளமயக்களிப்பது. அதை சொல்லிச் சொல்லி உயிர்கொடுக்கமுடியும். விழிசுடரும் தெய்வம் போல அது எழுந்து வந்து கைநீட்டும். அழைத்துச்சென்று அத்தனை சிக்கல்களுக்கும் வெளியே ஒளிமிக்க மேடை ஒன்றின் மேல் கொண்டு நிறுத்தும். அங்கே நின்றிருக்கையில் அனைத்தும் எளிதாகிவிட்டிருக்கும். இறுதிவெற்றி என்பது மிக அருகே மிகத்தெளிவாகத் தெரியும். அவருக்குரியது என முன்னரே முடிவானது.

நெஞ்சைச் சுற்றிக்கட்டிய தோலுறைக்குள் சியமந்தகம் இருந்தது. ஒவ்வொரு எண்ணத்துடனும் அதன் இருப்பும் சேர்ந்துகொண்டது. அவரில் ஏறி சியமந்தகமே காட்டுக்குள் செல்வதுபோல தோன்றியது. இரவில் காட்டுக்குள் பரண்மேல் அமர்ந்திருக்கையில் சியமந்தக மணியை எடுத்து நோக்கி தன் நம்பிக்கையை மீட்டுக்கொள்ள முயன்றார். மின்னும் ஒற்றைக்கருவிழியை நோக்கி வினவினார் ‘என் குலதெய்வமே, என்னை அறிவாயா? ஏன் நான் அலைக்கழிகிறேன்? ஏன் அமைதியற்றிருக்கிறேன்? என் தேவனே, ஏன் ஒவ்வொருமுறையும் நிறைவின்மைக்குமேல் சென்று விழுந்துகொண்டிருக்கிறேன்?’ விளங்காத சொல் ஒன்று திகழ அவ்விழி அவரை உறுத்து நோக்கியது. ‘என்னை அறிகிறாய் என் இறைவனே, நான் உன்னை அறிவது எப்போது?’ பெருமூச்சுடன் அதைவிட்டு விழிவிலக்கி காட்டை நோக்கினார். அப்போது உடலில் அதன் நோக்கின் கூர்மையை உணரமுடிந்தது. நோய்கொண்ட பசு என மெய்சிலிர்த்தபடியே இருந்தது. அதன் கூர்மை கூடிக்கூடி வந்து ஒரு சொல்லென கனிந்துவிட்டதென்று தோன்றும் கணம் திரும்பிப்பார்க்கையில் அது அணைந்து வெற்றொளி கொண்டிருந்தது. விழிமட்டுமேயான தந்தை. விழியாகி வந்த பேரன்பு. விழியொளி மட்டுமேயான நகைப்பு. விழியென்றான நஞ்சு. ‘எந்தையே, என்னை அறிந்தவன் நீ. சொல், நான் யார்?’

சலிப்புடன் மீண்டும் அதை பேழையிலிட்டு படுத்துக்கொண்டார். இந்திரநீலம் விளங்கும் ஒரு மலைச்சரிவில் நடந்துகொண்டிருந்தார். வானில் குளிர்ந்த மெல்லொளியுடன் சுடரென திகழ்ந்துகொண்டிருந்தது சூரியனல்ல சியமந்தகம். நிழல்களற்ற ஒளி. ஓசைகளற்ற காடு. பின்னிப்பின்னி புழுக்குவைகளாக நாகச்செறிவாக மலைப்பாம்புத்தொகைகளாக நிலமென்றான வேர்களில் கால்தடுமாறி நடந்து நடந்து விழுந்து எழுந்து சென்றுகொண்டிருந்தார். குதிரைக்குளம்பு விலகிவிலகிச் சென்றது. பசித்த ஓநாய்க்கூட்டம் போல ஓசையற்ற காலடிகளுடன் காடு அவரை சூழ்ந்துகொண்டிருப்பதை அவர் அறிந்திருந்தாலும் குதிரைக்குளம்பிலிருந்து விழிநீக்க முடியவில்லை. சென்று சென்று ஒரு கணத்தில் குதிரைக்குளம்பு முழுமையாகவே புதைந்து மறைந்ததை அறிந்து திகைத்து நின்ற கணத்தில்தான் சிலந்தி வலை என காடு தன்னை வளைத்துக்கொண்டுவிட்டதை கண்டார்.

சொல்லிழந்து விழிமட்டுமே என்றாகி நின்றார். நச்சுவெளியென கொந்தளித்த காட்டின் கிழக்கில் இலைநுனிநீர்த்துளி என கனிந்து உருக்கொள்வது என்ன என்று பார்த்தார். நீலம் திரண்டு மெல்ல ஒளிகொண்டது. வலைமுனையிலிருந்து இரையை அணுகும் சிலந்தி. பொன்னிறமாகியது. பூமயிர் சிலிர்த்தது. அரியதோர் அணிநகை என நுணுக்க அழகுகொண்டது. அணுக அணுக தெளிந்து வந்தது, அது பிடரிசிலிர்த்த ஒரு சிம்மம். அச்சம் கால்களை குளிர்ந்து எடைகொள்ளச்செய்தாலும் அகம் எழுந்த விசை ஒன்றால் முன்செலுத்தப்பட்டார். மேலும் அருகே சென்றபோது அது பொற்தழலென தாடியும் குழலும் பெருகி காற்றில் பிசிறி நிற்க இடையில் கைவைத்து மின்னும் கனல்விழிகளுடன் நின்றிருக்கும் இளமுனிவர் என தெளிந்தார்.

அருகே சென்றதும் சிம்மர் திரும்பி பிரசேனரை நோக்கினார். “நெடுநாள் பயணம்” என்றார். “ஆம், செந்தழல்வடிவரே. நெடுநாள்” என்றார் பிரசேனர். “நத்தை தன் ஓடை என விழைவு மானுடனை கொண்டுசெல்கிறது” என்றார் அவர். பிரசேனர் அவரை நோக்கி நின்றார். “நெடுந்தொலைவு வந்துவிட்டாய்…” என்றார் அவர் மீண்டும். “தொலைவு எப்போதுமே இடர் மிக்கது. பிழைகளை அது கணம்தோறும் பெரிதாக்கிக்கொண்டே செல்கிறது.” பிரசேனர் “நான் திரும்ப முடியாதா?” என்றார். “விழைவிலிருந்து திரும்பியவர்களை முன்பு அறிந்திருக்கிறாயா?” என்றார் அவர். “இல்லை.” அவரது புன்னகை பெரிதாகியபோது வாயின் இருபக்கமும் இரு கோரைப்பற்களை கண்டார். நாக்கு குருதியாலானதுபோல அசைந்தது. “மலையுச்சியில் நான் யோகத்தில் அமர்ந்த குகை” என்றார் அவர். “அந்த மணியை நீ நெஞ்சில் அணிந்த கணத்தில் மலையிலிருந்து இறங்கத் தொடங்கினேன்.” பிரசேனர் தலைவணங்கி “தங்கள் அடியவன்” என்றார்.

“அமர்ந்துகொள், இது நீ என்னைக் காணும் கணம்” என்றார் முனிவர். பிரசேனர் நடுங்கும் உடலுடன் அவர்முன் சென்று சியமந்தகத்தை நெஞ்சோடணைத்தபடி விழிகளை மூடி அமர்ந்தார். சிம்மர் தன் இருகைகளையும் விரித்தபோது மின்னும் குறுவாட்களென உகிர்கள் பிதுங்கி வந்தன. “விழைவு ஓடும் குருதி என வெம்மைகொண்டது ஏதுமில்லை” என்று அவர் சொன்னார். அவரது மூச்சை தன் உடலில் பிரசேனர் அறிந்தார். “ஆணவம் அதில் கொழுநெய்ச் சுவையாகிறது. இனியது, சீறி எழுவது, குமிழியிடுவது.” அவரது தாடியின் மயிர்ச்செறிவு பிரசேனரை மூடிக்கொண்டது. “முன்பொருமுறை இத்தகைய நறுங்குருதியை உண்டேன்…” என்று அவர் சொன்னதை பிரசேனர் தன் உள்ளத்தால் கேட்டார். கண்களை மூடிக்கொண்டிருந்தபோதும் அவரது விழிகளை மிக அண்மையில் காணமுடிந்தது. சியமந்தகமே விழியாக அவரை நோக்கிக்கொண்டிருக்கிறோம் என அறிந்தார்.

மிகமிக அப்பால் இருந்தன விழிகள். ஆயிரம்கோடி காதத்துக்கு அகலே இரு விண்மீன்களென சுடர்ந்தன. மாலையொளி விரிந்த முகில்கள் சூழ வானில் நின்றன. இடியோசை போல சிம்மக்குரல் எழுந்தது. கீழ்வான் சரிவில் அது முழங்கி முழங்கிச்சென்றது. செல்லம் கொஞ்சும் குழந்தையை அன்னை என அவரை அள்ளி மடியில் விரித்தார் சிம்மர். உகிர்கள் குளிர்ந்த மெல்லிய இறகுகள் போல தன் உடல்மேல் பதிவதை பிரசேனர் உணர்ந்தார். மெல்லக் கவ்வி குருளையை கொண்டுசெல்லும் அன்னைப்புலி என அவர் மேல் பற்கள் பதிந்தன. முல்லைமலர் நிரை போன்ற மென் பற்கள். அவருக்கு மட்டுமேயான குரல் ஒன்று சொன்னது ‘அனைத்தறங்களையும் கைவிடுக! என்னையே அடைக்கலம் கொள்க!’

முந்தைய கட்டுரைஏறும் இறையும் [சிறுகதை]
அடுத்த கட்டுரைகடிதங்கள்