‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 5

ஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த வெளி அவளைச் சுற்றி இறுக்கியது. அவள் கால்களுக்கு முன்னால் அடியின்மை என ஆழம் வெளித்திருந்தது. தயங்கித் தயங்கி யுகயுகங்களாக நின்றிருந்தாள். முள்முனையில் தவம்செய்தாள். ஐந்நெருப்பு அவளை சூழ்ந்திருந்தது. கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள்.

அவள்முன் நாணம் நிறைந்த புன்னகையுடன் கன்னி ஒருத்தி தோன்றினாள். மணிமகுடத்திற்குக் கீழ் இமைசரிந்த நீள்விழிகள். அங்குசமும் வேலும் ஏந்திய மேலிரு கைகள். அளித்தல் காத்தல் என மலர்ந்த கீழிரு கைகள். செம்பட்டாடை அணிந்து தோகைமயில் மேல் அமர்ந்திருந்தாள். “இளையவளே, என்னை கௌமாரி என்கின்றனர் கவிஞர். உன் கன்னிமைக்கு இதுநாள்வரை காவலிருந்தேன்” என்றாள். ”தேவி., அருள்க!” என்றாள் பாமா. “அங்கிருப்பவனுக்கு நீ அளிப்பதென்ன என்று சொல்” என்றாள் தேவி. பாமா நாணி சிறு உதடுகளைக் கடித்து தலைகுனிந்தாள். “சொல் என் கண்ணல்லவா?” என்றாள் அன்னை.

“என் இல்லத்தில் ஏழு சிறுமூலைகளை நீ அறிந்திருப்பாய்” என்றாள் பாமா. “ஒவ்வொன்றிலும் நான் சேர்த்துவைத்த சிறுபொருட்கள் உள்ளன. சிறுகூழாங்கற்கள், வளையல்துண்டுகள், வாடிய மலர்கள், ஆடைநூல்சுருள்கள், ஆடித்துண்டுகள், உடைந்த களிப்பாவைகள். இன்றுவரை எவரும் அவற்றை அறிந்ததில்லை. அன்னையும் செவியிலும் ஆய்ச்சியரும் அறியாது உருளும் விழிகளுடன் மெல்லடிவைத்துச் சென்று அங்கே என்னை ஒளித்துக்கொள்வேன். கரந்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பேன். சிறுவிரல்களால் வருடியும் எண்ணியும் கூர்ந்தும் நெஞ்சோடணைத்தும் நோக்கி உள்ளே அடுக்கி வைப்பேன். ஒவ்வொன்றையும் நோக்கி எனக்கென மட்டுமே பேசிக்கொள்வேன். அவைகொண்ட பொருளென்ன என்று நானறியேன் தேவி, நீயே அறிவாய். அவனுக்கு நான் அளிக்கும் முதற் காணிக்கை அவையல்லவா?”

புன்னகையுடன் அன்னை ”அவனை உன் மடியில் ஆடும் மைந்தனாக்கினாய் சிறியவளே. அவன் வாழ்க!” என்று சொல்லி காற்றிலாடும் வண்ணத்திரையென்றாகி மறைந்தாள். புன்னகையுடன் விழிதூக்கி அவள் அவன் முழங்கால்களை நோக்கினாள். இறுகியகெண்டைக்கால்களில் அவன் நடந்த மலைச்சரிவுகளை, நீந்திய நதியலைகளை கண்டாள். அவனை நோக்கி தன் சிறுசெம்பாதத்தை வைத்தாள்.

செம்பருந்தின் சிறகடிப்புடன் அவள் முன் தோன்றினாள் வைஷ்ணவி. சங்குசக்கரம் ஏந்திய மேலிரு கைகள். அருளி அணைக்கும் கீழிரு கைகள். அந்தியெழுந்த மலைச்சுனை நிறம். வைரமணிக்கண்களும் வெண்பல் மலர்ந்த இதழ்களும் நகைத்தன. “இனியவளே உன்னை பெண்ணென அறியச்செய்தவளல்லவா நான்?” என்றாள் அன்னை. “சொல்க கன்னியே, அங்கிருக்கும் நீலனுக்கு நீ அளிக்கவிருப்பது என்ன?”

புன்னகையுடன் அவள் சொன்னாள் “தேவி, நான் பதிந்த நடைகொண்டவள். நாணும் விழிகொண்டவள். மெல்லிய சொல்கொண்டவள். ஆனால் செம்பட்டுக்குள் கூர்வாள் என என்னுள் இருக்கும் அச்சமின்மை ஒன்றுள்ளது என்று நீ அறிவாய்.” அன்னை புன்னகைத்தாள். “தெய்வங்களின் பெருஞ்சினத்திற்கு முன்னும் நிமிர்ந்து நின்று விழிநோக்கும் நெஞ்சை எனக்குள் அறிகிறேன். அன்னையே, அவன் அஞ்சி ஓடி வருகையில் அணைக்கும் வெம்முலைகள் கொண்டிருப்பேன். ஆற்றுப்படுத்தி அழைத்துச்செல்லும் கைகளும் அருள்கனிந்த சொற்களும் கொண்டிருப்பேன்.” இருளில் நிலவெழுந்ததுபோல நகைத்து வைஷ்ணவி சொன்னாள் “ஆம், விரல்பற்றி வழிகாட்டும் வளைக்கரம் நீ. உன் விரலாகுக அவன் ஊர்தி!”

அவன் இடைசுற்றிய பொன்னிறப்பட்டு. அதன் சித்திர நூல்பின்னல்கள் மின்னிக்கொண்டிருந்தன. மடிப்புகளும் கசங்கல்களும் சுருக்கங்களும் ஒளியாலானவை. ஒவ்வொன்றிலிருந்தும் அவை நிகழ்ந்த கணத்தை சென்றடைய முடியுமா? அவன் நிகழ்ந்த விதம் உருவாக்கிய அழகா அது? இளஞ்சிவப்புக் கச்சை அவன் இடைசுற்றியிருந்தது. அது இறுக்கிய வயிற்றில் நீலக்கடம்பின் காயின்மேலெழுந்த பூமுள் என மயிர்வரிசை நீர்வழிந்த தடத்தில் எழுந்த மென்பாசி போல் குவிந்து இறங்கிவந்து உந்தியில் சுழித்து உள்ளே சென்றது.

மண்கிளறி காலுதைத்து முகம்தாழ்த்தி கொம்புதூக்கிய எருதின் மேலேறியவளாக எழுந்தருளிய மகேஸ்வரியை அவள் கண்டாள். வெண்மலர் விரிமுகத்தில் நுதல்விழி திறந்திருந்தது. கீழே இரு அனல்விழிகள் எரிந்தன. எழுந்த சடைமகுடத்தில் கீற்றுப்பிறை நிலவு பொலிந்தது. விழுதென சரிந்தது நீலநிழல்சடைக்கற்றை அருவி. வலது மேற்கையில் விழிமணி மாலையும் இடதுமேல்கையில் மும்முனைவேலும் இருந்தன. அஞ்சலும் அருளலுமென அருகழைத்தன கீழிருதடக்கைகள். நாகப்பிஞ்சு சுருண்டு குழையாகி நாகினி வளைந்து கச்சையாகி மாநாகம் சரிந்து மேலாடையென்றாகி நஞ்சு கவ்விய அமுதமென அன்னை தெரிந்தாள்.

“மகேஸ்வரி என என்னை வணங்குக! இவ்வுலகு புரக்கும் பெண்மை நான்” என்றாள். அவளைப் பணிந்து நின்ற பாமையிடம் “சொல், விழிமலர்ந்தவளே. அங்கிருக்கும் உன் ஆண்மகனுக்கு நீ அளிக்கப்போவதென்ன?” என்றாள். ”உன்னில் சேர்ந்த அனைத்தையும்தான் அன்னையே” என்றாள் பாமா. ”என் விரல்களில் முலைக்கண்களில் விழிமுனைகளில் உள்ளத்தின் இருளில் ஊறிய நஞ்சை. நானமர்ந்திருக்கும் ஆணவத்தை. எங்கும் மடங்காத என் பெண்மையை” என்றாள். “என்னை வெல்லும் விழைவை. வென்றமையும் நிறைவை. நெஞ்சிலும் தலையிலும் நூறு விழுப்புண்களை.” ஒளிரும் பற்காட்டி நகைத்து அன்னை சொன்னாள் “ஆம், அவன் பேரின்பம் கொண்டவனாவான்.”

நிலவென மென்மயிர்கற்றைகொண்டு எழுந்த அவன் நெஞ்சை கண்டாள். மழைமுகில் பரந்த நீலவானம். அவள் முகமெனும் கதிர் மூழ்கி மறையும் நீலவிரிவு. அணுக அணுக திசையென்றாகும் பரப்பு. விலாவெலும்புகளின் வளைவுகள். பிளந்து இரு புயம்நோக்கி விரிந்த கருங்கற்பலகைகள் மேல் இரு செம்மணிகளை வைத்த ஆட்டக்களம். விண்நோக்கி எழும் தளிர் என அந்நீலம் நோக்கி சென்றாள். மண்ணில் உதிரும் எரிமீன் என அப்பரப்பு நோக்கி விழுந்தாள்.

இருளெழுந்தது போல் வராகி அவள் முன் எழுந்தாள். பன்றிமுகம். மதமெழுந்த சிறுவிழிகள் சேற்றில் நின்ற கெண்டை என ஒளிவிட்டசைந்தன. மணிமுடியில் நின்ற நீலக்கற்கள் இரவு சூடிய விண்மீன்களென்றாயின. எழுந்த தேற்றைகள் இரு பிறைநிலவுகள். வலக்கையில் மேழி, இடக்கையில் முசலம். அருளி அணைக்கும் அங்கைகள் இரண்டு அவற்றின் கீழே. கருமேனி சுற்றிய கரியபட்டாடை தென்றல் தொட்ட இருளென அசைந்தது. “ஆற்றல் வடிவான என்னை வணங்குக!” என்றாள். அவள் முன் பணிந்து நின்றவளிடம் கேட்டாள் “அவனுக்கு அளிக்கவிருப்பதென்ன அழகியே?”

”என் நிகரற்ற பொறாமை” என்றாள் பாமா. “அவனை இருளெனச் சூழ்ந்துகொள்வேன். நானன்றி எவரும் அவனை காணவிடமாட்டேன். மண் துளைத்து நான் செல்லும் ஆழங்களில் அவனை புதைப்பேன். என் கூரெயிற்றால் எடுத்து முத்தமிடுவேன். என்னில் அவனை விதைத்து முளைத்தெழுவேன். அவன் வானில் நானே கிழக்கும் மேற்கும் என ஒளிவிடுவேன்.” கண்கனிந்து அன்னை அவள் தலைதொட்டாள். “அவனை முழுதும் அடைவாய் நீ” என்றாள்.

தோள்களென எழுந்தவற்றை அருகணைந்து கண்டாள். வலத்தோளில் வானம் சுழித்து ஆழியென்றாகி அமைந்த முத்திரை. இடத்தோளில் கடலோசை குவிந்த சங்கு. கழுத்துக்குழியை நடுமுள்ளாக்கி இருநிலையும் நிகர்நின்ற துலாவென தோளெலும்புகள். தோள்முழைகள். மானுண்டு மயங்கும் மலைப்பாம்பென புயங்கள். அத்திமரத்தடியில் ஒட்டி இறங்கிய முல்லைக்கொடி என பெருநரம்பு. அங்கே சுற்றிக்கட்டப்பட்ட தாலிக் காப்பு. அலையென எழுந்து வந்து திசைவளைத்து அவளைச் சூழும் தோள்கள். தலைசாய்த்து அவள் இரவுறங்கும் அரவணைகள். அவள் கழுத்தை வளைத்து தலைமயிர் கோதும் நாகபடமென கைகள். ஐந்து ஒளிர்நாக்குகள் எழுந்தவை. ஐந்து மணி கவ்வியவை. மீட்டும் கைவிரல்கள். அவ்விசை கேட்டு அதிரும் கைவிரல்கள்.

தீ பற்றி எழும் ஒலியுடன் அவள் முன் வந்தவள் சாமுண்டி. இருவிழிக் கரியில் எரியென எழுந்த நுதல்விழிகள். திசையெங்கும் கிளைவிட்டு எழுந்த காட்டுமரமென எட்டு பெருங்கரங்கள். சூலம், வாள், அம்பு, சக்கரம் ஏந்திய வலக்கைகள். வடச்சுருள், கேடயம், வில், சங்கு கொண்ட இடக்கரங்கள். செங்கனல் விழுதென சடைகள். மின்னல்கொடியென சுற்றித் துடிக்கும் செம்மணியாரங்கள். கொள்ளிமீன் நின்ற குண்டலங்கள். “உன் கொடையென்ன அவனுக்கு?” என்றது கீழ்வானில் எழுந்த இடியோசை.

“என் பெருஞ்சினம்” என்றாள் பாமா. “சொல்பொறுக்க மாட்டேன். நிகர் வைக்க ஒப்பேன். முதல்சொல் சொல்லேன். மணியிடையும் தலைதாழ மாட்டேன்.” அன்னை புன்னகைசெய்தாள். “கொல்லும் படைக்கலங்கள் கொண்ட உடலுடன் அவன் முன் நிற்பேன். விழி எரிவேன். முகம் கனல்வேன். கை துவள தோள் நிமிர்வேன். சொல் பொங்குவேன். சுடுவேன். அணைந்து கரியாகி எஞ்சுவேன்… ஒருபோதும் குளிரமாட்டேன்.” அன்னை நகைத்து “வாழ்க அவன் குடி!” என்று அணைந்தாள்.

எழுந்த நீலத்திருமுகம். விழிவண்டுகள் அமர்ந்த தாமரை. கருவளைத் துண்டுகள் என சுரிகுழல் சரிந்த நெற்றி. நீ என சுட்டும் விரலென மூக்கு. மலர்குழை தழைந்த காது. சிரிப்பை அள்ளி முகந்தூற்றும் சிறுசிமிழ்க் கண்கள். நோக்கு நோக்கென்று கெஞ்சி நோக்கும்போது கவ்வி நோக்கு தழைந்ததும் நகைப்பவை. நீலச்சுனையில் விழுந்து கிடக்கும் இரு விண்மீன்கள். அன்றுண்ட வெண்ணை என்றும் மணக்கும் செவ்விதழ். முத்தமிட்டால் ஒட்டிக்கொள்ளுமோ என்ற மென்மீசை. பால்நிறைந்த பைதல். தலையால் முட்டித்தள்ளி துள்ளியோடும் சிறுபயல். காதல்கொண்டு புல்கி குனிபவனின் மயல். கனிந்து தலைகோதிச் சொல்லும் இன்சொல். ஞானம் உரைத்து அமைந்த குளிர். எத்தனை நகை சூடியவை அவ்விதழ்கள்?

மின்னல் அதிர்ந்தமைய அவள் முன் எழுந்தவள் இந்திராணி என்றறிந்தாள். வெண்முகில்யானை மேல் அமர்ந்திருந்தாள். இளவெயில்பட்ட மேருவென மணிமுடி சூடியிருந்தாள். செம்பொன் பட்டாடை மின்னி அலுங்க வலக் கால்மடித்து இடக்கால் நீட்டி நிமிர்ந்தமர்ந்து புன்னகைத்தாள். நீல எழில்விழிகள் நடுவே நெற்றியில் அமைந்த செந்தூரம். காத்தும் கனிந்தும் விரிந்த கைகளில் சங்கும் சக்கரமும் ஒளிர்ந்தன. “அரசி, சொல்க! ஏதளிப்பாய் அவனுக்கு?” என்றாள்.

“நிகரென அமர்வேன்” என்றாள் பாமா. “அவன் அடைந்தவற்றுக்கெல்லாம் பாதியாவேன். அவன் அறம் வளர்க்கையில் துணையாவேன். அரியணை வீற்றிருப்பேன். அவன் இல்லமெங்கும் நிறைவேன். முற்றத்தில் கோலம். முகப்பறையில் மலர்ச்செண்டு. மஞ்சத்தில் மது. அடுமனையில் அனல். புறக்கடையில் பசு.” அன்னை கைதூக்கி அவள் நெற்றியைத் தொட்டு “அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தி மறைந்தாள்.

குழலில் எழுந்த விழியை அவள் கண்டாள். நோக்கா விழி. ஒரு சொல்லும் எஞ்சாதது. அழகொன்றே ஆகி அமைந்தது. காற்றில் மெல்ல நலுங்கியது. கருமுகில் மேல் எழுந்த இந்திரநீலம். அவள் அருகணைய இளந்தென்றல் என அவள் முன் தோன்றியவள் பிராமி. விழிமணி மாலையென ஒழுகிய ஓங்காரம். வான்கங்கை நிறைத்த பொற்கமண்டலம். குளிர்முகில் தேங்கிய விரிவிழிகள். வாழ்த்தும் வளமும் என ஆன செங்கைகள். அலைபிறந்த நுரையென தூவி கொண்ட அன்னம் மேல் மலரமர்வில் அமர்ந்து புன்னகைத்து அவள் வினவினாள் “அளிப்பதற்கு எஞ்சுவதென்ன மகளே?”

“அவன் மறைந்தபின் எஞ்சும் விழிநீர்” என்றாள் பாமா. “இறுகி ஒரு வைரமென்றாகி அது என்னில் நிறையும். அதை விண்ணுக்கு எடுத்துச்சென்று அவனுக்குப் படைப்பேன். ஏழ்பிறவியில் எவரும் தீண்டாத ஒன்று. அவன் சொல் நின்ற கலம். அவன் குடி எழுந்த நிலம். அவன் குலநினைவுகளில் அன்னையென்றாவேன். அவன் கொடிவழியினர் பாடும் பெருந்தெய்வம் நான்.” அன்னை விழிமலர்ந்து “அருள் பெறுக!” என வாழ்த்தி மறைந்தாள்.

ஏழு எட்டு வைத்து அவனருகே சென்றணைந்தபோது அவள் மேலுதடு பனித்திருந்தது. நடுங்கும் கைகளில் நின்று குவளை அதிர்ந்துகொண்டிருந்தது. அவன் அருகே நின்றிருந்த அவள் தந்தையிடம் சொல்லாடிக்கொண்டிருந்தான். அவள் அசைவைக்கண்டு திரும்பி நோக்கினான். “என் மகள், சத்யபாமை” என்றார் சத்ராஜித். “தங்கள் குலம் வாழ்த்தப்பட்டது” என்றான். “தங்களுக்கான அமுதம்” என்று அவள் சொன்னதை உதடுகள் உச்சரிக்கவில்லை. அவன் கைநீட்டி அவள் தாலத்தை பெற்றுக்கொண்டான். தாளா எடை ஒன்று அகன்றது போல் அவள் நிமிர்ந்தாள்.

அப்பத்தை வலக்கையில் எடுத்து அவன் மெல்ல கடிப்பதை, இடக்கையில் ஏந்திய குவளையிலிருந்து ஒரு மிடறு அருந்துவதை, மென்மயிர்படிந்த அவன் கன்னம் அசைவதை அவள் நோக்கி நின்றாள். பின்னாலிருந்து அவளை செவிலியன்னை நோக்குவதை உணர்ந்து திரும்பி நோக்கினாள். “வந்துவிடு” என்று உதடை அசைத்துச் சொல்லி விழியால் ஆணையிட்டாள். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்து ஒரு கணம் விதிர்த்தாள். ஓசைகேட்ட இளமான் என துள்ளி திரும்பி ஓடிச்சென்று அன்னையை அணுகி தோள்தழுவிக்கொண்டாள். “மாமங்கலையாகுக கண்ணே!” என்றாள் மஹதி.

முந்தைய கட்டுரைகனடா -அமெரிக்கா பயணம்
அடுத்த கட்டுரைஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3