ஊட்டி காவிய முகாம் ,பதிவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

ஒரு குடும்ப திருமண விழாவிற்க்கு 3 நாள் சென்று வந்த அனுபவம்.. மனதிற்கு பிடித்த, மனதிற்கு மிக அண்மையில் உள்ள ஒரு உலகத்தில் 3 நாள் கழித்த அனுபவத்தை தந்தது ஊட்டி முகாம்.. மிக சிறப்பாக அமைந்திருந்தது… விஜயராகவனுக்கும், மற்ற அனைத்து அமைப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்..

ஜடாயு ஜெகெ எழுத்தின் பொது இயல்புகளை முன்வைத்து அளித்த பேச்சில் ஆரம்பித்து 3 நாட்கள் சென்றதே தெரியவில்லை…முதல் முறையாக ஜடாயு உரை கேட்கிறேன்.. மிக சிறப்பாகவும் உணர்ச்சி பூர்வகமாகவும் பேசினார்..

ஜேகே சிறுகதை வாசிப்பு அரஙகமும் ஒரு திறப்பாக அமைந்தது.. இரு கதைகளையும் வாசித்து இருந்தாலும், கதைகளை பற்றி சிந்தித்து சில எண்ணங்கள் இருந்தாலும் , அரங்கில் கேட்ட பல்தரப்பு வாசிப்பு சாத்தியங்கள் சிந்திக்க வைத்தன.. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ கதையில் .. “என் நிலையில் , என்னோடு இருந்தவரகள் எங்கெங்கோ செல்கையில் நான் மட்டும் இந்த அடுக்களையிலேயே இருக்கிறேனே ” என்ற வாசிப்பு (ராதாகிருஷ்ணன் என்று நினைக்கின்றேன்) ஒரு உதாரணம்..அதே மனநிலையில் தான் அடுத்து வந்த பிடித்த சிறுகதைகள் அமர்வும் கடந்தது .. முகாமுக்கு வருமுன் கதைகளை வாசித்து வந்திருக்கலாமே என்று ஏங்க வைத்த அமர்வு .. (வந்திருந்தாலும் கூட்டத்தில் பேச தைரியம் இருந்திருக்குமா என்பது வேறு விஷயம்..!)

கம்பராமாயணம் அரங்கில் ஜடாயுவின் உணர்ச்சிபூர்வமான பேச்சும் , அவர் அந்த கவிதைகளை வாசித்த விதமும், நாஞ்சில் நாடனின் கவிதைகளுக்கான உரையும் அற்புதம்.. நாடகத்தன்மையின், கவித்துவத்தின் சாரம்சத்தை உணர்ச்சியுடன் பேசும்போது கவிதை வாசிப்பில் அனுபவம் இல்லாத எனக்கு இந்த அமர்வுகள் கம்பராமாயணத்தை படிக்க தூண்டின..

கவிதை வாசிப்பில் பரிச்ச்சயமில்லாத எனக்கு இந்த 3 நாட்களில் , மிகவும் பிடித்த அமர்வுகள் கவிதை அமர்வுகளும், 3 ஆம் நாளின் படிமங்கள் பற்றிய அமர்வும் தான்!!… எல்லா அமர்வுகளிலும் நீங்கள் இடை இடையே விளக்கி கூறியதும், எல்லாவற்றையும் விட அமர்வுகளுக்கு வெளியே நடை பயிற்சியிலும், மற்ற நேரங்களிலும் தங்கள் உரையாடல்கள் கேட்பதே முகாமின் சிறப்பு அம்சமாக படுகிறது எனக்கு ..

முகாமிற்கு வந்த நண்பர்களிடம் ரொம்ப பேசவில்லை என்றாலும் நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி .. அமர்வுகளிலும் வெளியிலேயும் ஓடிக்கொண்டிருந்த கிண்டல்களையும், கேலிகளையும் மிகவும் ரசித்தேன்!!!

3 நாட்கள் காலை 9.30 , 10 இல் இருந்து இரவு 8.30 , 9 வரை நேரம் போனதே தெரியாமல் இப்படி பட்ட அமர்வுகளுக்கு போவது இது எனக்கு முதல் முறை !!.. முகாம் நடத்த குருகுலம் இடமும், அதை சுற்றி நடை பயிற்சி செல்ல கூடியதாக இருந்த மலை, காட்டு சுற்றுப்புரம்மும் முகாம் அனுபவத்தை இன்னும் கூட்டியது .. குருகுலத்தின் காயத்ரிஜி நித்ய சைத்தன்ய யதி பற்றியும் , அவரது வாழ்க்கை பற்றியும் பேசியதை கேட்டது ஒரு கூடுதல் அனுபவம் ..

அடுத்த முறை உங்களுடனான உரையாடல்களை (நடை பயிற்சி , மற்ற நேரங்களில் நடந்தது போல ) ஒரு தனி அமர்வாக வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ..!!

அடுத்தது எப்போது இப்படிப்பட்ட கூட்டம் என்று எதிர்பார்க்க வைத்து விட்ட அனுபவம்!…

அன்புடன்

வெண்ணி

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் நாவல்கள்- வெ.சுரேஷ்
அடுத்த கட்டுரைமீட்சியும் மீளுருவாக்கமும்