‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 1

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 1

தனிமை ஆயிரம் பல்லாயிரம் சுவர்களை எழுப்பிக்கொண்டு தலைவாயிலைத் திறந்திட்டு காத்திருக்கிறது. விண்ணென விரிந்த பெருந்தனிமை துளித்துத் திரண்டு சொட்டியதென தோன்றிய சின்னஞ்சிறிய தீவுக்கு ஏகத்வீபம் என்று பெயர். பன்னிரண்டுசுற்று பெருமலைகளுக்கு அப்பால் கரைநாணல்களால் முழுமையாக மறைக்கப்பட்ட கர்கசாகரம் என்னும் ஏரிக்கு நடுவே அயலார் எத்திசையில் நின்று நோக்கினாலும் தெரியாதபடி தன்னை புதர்ச்செறிவுள் புதைத்து ஒலிக்குச் சிலிர்க்கும் முயல்குருளை என அமைந்திருந்தது அது.

நான்கு கரைகளிலும் ஏரியின் சிற்றலைகள் வந்து அறையும் அந்த மண்முழை அத்தியும் நாவலும் மாவும் பலாவும் அரசும் ஆலும் செறிந்த பசுங்குவை. நீர்நிழலுடன் இணைந்து ஒரு மரகதக்கோளமென வான்வெளித்த நீர்ப்பரப்பின்மேல் மிதந்து நின்றிருந்தது அது. விண்ணுக்கோ மண்ணுக்கோ தொடர்பற்ற அம்மிதவையை நோக்கி வானிலிருந்தும் நீருள்ளிருந்தும் பறவைகள் வந்தமைந்தன. பல்லாயிரம் கோடியாண்டுகளாக அது அங்கே இருந்தது. கந்தர்வர்களும் கின்னரர்களும் காணாது கடந்துசெல்லுமளவுக்கு சிறியது. சின்னஞ்சிறியவற்றின் தனிமையை தெய்வங்களும் அறிவதில்லை.

கர்க்க குலத்து முனிவரான குணிகர்க்கர் அந்த இடத்தை தன் தவத்தின் தனிமைக்கு தேர்ந்தெடுத்தபோது அருகே நாரதரும் இருந்தார். மலைவிளிம்பில் நின்று நீரில் விரிந்த வானில் மிதந்த தீவைக் கண்ட குணிகர்க்கர் சொல்லென நினைவு மீண்டபோது ‘ஏகத்வீபம்’ என்று அதை அழைத்தார். பேருவகையுடன் கைகளைத் தூக்கி “இவ்விடம்தான், நாரதரே, இவ்விடம்தான்… பிறிதொன்றில்லை” என்றார். நாரதர் சுற்றிலும் இதழ்விரித்த நீலத்தாமரை என சூழ்ந்திருந்த மலைமுடிகளை நோக்கி “பெருந்தனிமை சூழ்ந்தது” என்றார். “ஆம், என் எண்ணங்கள் ஒருதுளியும் சிதறாது குவியும் முனை. என் தவம் இங்கே வைரமாகும்” என்றார் குணிகர்க்கர்.

மீண்டும் அந்த பசுங்கோளத்தை நோக்கி “விழிதொடல் அறியாதது. தேவரும் தெய்வங்களும் அறியாதது” என்றார் நாரதர். “ஒருவராலும் காணப்படாதிருத்தல் என்பது…” என்று அவர் இழுக்க “ஆம், அது இறத்தல். இறக்காதவன் பிறப்பதில்லை தோழரே. இங்கு தவத்தில் எழுகிறேன்” என்றார் குணிகர்க்கர். நெஞ்சு நிறைந்த உவகையுடன் “இனியொரு கணமும் பொறுப்பதில்லை. முனிவரே, ஒவ்வொரு மானுடனுக்கும் உரிய நிலங்கள் அவனுக்காக காத்திருக்கின்றன. அவனை அவை அறிகின்றன” என்றார். நாரதர் புன்னகையுடன் திரும்பி அவரை நோக்கி “அவ்வாறே ஆகுக!” என்றார்.,குணிகர்க்கர் தேர்ந்தெடுத்த அத்தீவு மெல்லிய புற்கள் பரவிய தரையும் பூச்செறிந்த அடர்சோலைக்கூரையும் கொண்டிருந்தது. அங்கே அவருக்கெனவே அமைந்த சிறுகுகைக்குள் சென்று சருகுத்தரை அமைத்து அமர்ந்து முகம் மலர்ந்த குணிகர்க்கர் “இவ்விடம் இத்தருணம். அன்னைக்கருபீடம் அளவுக்கே இது என்னுடையது. நாரதரே, நான் இங்கு பிறிதொன்றிலாதாவேன்” என்றார். நாரதர் மீண்டும் புன்னகைத்து “அவ்வாறே ஆகுக!” என்றார். “இங்கு உணவும் நீரும் காற்றும் ஒளியும் நிறைந்திருக்கிறது. முழுமைக்கு ஒரு கணத்திற்கு முன் என காலம் திகழ்கிறது” என்றார் குணிகர்க்கர்.

“ஆம். ஆனால் காலமென்பது கிரீஷ்ம, வர்ஷ, சரத், ஹேமந்த, சிசிர, வசந்த பருவங்களின் கையிலாடும் அணிப்பந்து” என்ற நாரதர் ”அறுவரில் வசந்தம் கொடியவள். தெய்வங்களையும் விளையாட்டுப்பொருட்களாக்கும் வல்லமை கொண்டவள்” என்றார். “இங்கே என் உள்ளம் உருவாக்கும் பருவங்களன்றி பிறிதில்லை. என் உளம்பூத்த மரங்கள். என் அகம் சிலைத்த மலைகள். என் எண்ணம் விரிந்த வானம். நானே இவை” என்றார் குணிகர்க்கர். நாரதர் மீண்டும் புன்னகை செய்து “நிறைவு நெருங்கட்டும்” என்று சொல்லி குணிகர்க்கரை வணங்கி மீண்டார்.

பின்னர் நெடுநாட்கள் கடந்து அவ்வழிச்செல்கையில் ஓங்காரமென குவிந்து விண் தொட்ட மலைமுடிகள் அளித்த வெறுமையை தனிமையென உணர்ந்தபோது நாரதர் குணிகர்க்கரின் தீவை நினைவுகூர்ந்தார். ஏரி ததும்பி மலையடுக்குகள் வழியாகப் பெருகி மறுபக்கம் புகைந்து சரிந்த அருவியொன்றே அங்கே செல்வதற்கான பாதை. வழுக்கும் பாறைகளில் மலைமாணைக் கொடிகளைப் பற்றிக்கொண்டு தொற்றி ஏறும் கலையறியாதவர் அவ்விடத்தை அணுகமுடியாது. மீண்டும் மலைச்சரிவில் உருளைப்பாறைகளில் தாவி இறங்கி நாணல்தெப்பம் அமைத்து நீர்ப்பெருக்கின் ஒழுக்கை முறித்துக்கடந்து கர்கசாகரத்தின் அலையறியா நீலப்பரப்பில் சறுக்கிச்சென்று பசுங்கோளத்தை அடையவேண்டும். பேராலின் வேர்க்குவை நடுவே தெப்பத்தைக் கொண்டுசென்று நிறுத்தி நீர்தொட்டு தொங்கி ஆடிய விழுதில் பற்றி ஆடி கரைநாணல் செறிவில் இறங்கி நின்ற நாரதர் அங்கே குணிகர்க்கர் ஓர் முதுமகளாக காட்டில் கனிகொய்து நின்றிருப்பதைக் கண்டு திகைத்தார்.

அவரது காலடியோசை கேட்டு திரும்பிய முதுமகள் திகைத்து இமைகளும் இதழ்களும் அசைவற்றிருக்க, மெய்விதிர்ப்புற்ற புள்ளிமான் என நின்றாள். கை விரித்து புன்னகைத்து “அஞ்சவேண்டாம் கன்னியே, நான் விண்மேவிய இசைமுனிவனாகிய நாரதன். குணிகர்க்கரின் தோற்றம் கொண்ட நீ யாரென்று அறிய விழைந்தேன்” என்றார் நாரதர். உடல் மெல்ல தளர்ந்து விழிதாழ்த்தி கொய்த கனியை கூடையிலிட்டு கைகூப்பி “அருள்க தவமுனிவரே, என் பெயர் கர்ணிகை. நான் குணிகர்க்க முனிவரின் மகள்” என்றாள். நாரதர் “ஆம், எண்ணினேன். அவர் எங்குளார்?” என்றார். “எந்தை முழுமை எய்தி முப்பதாண்டுகளாகின்றன” என்று கர்ணிகை சொன்னாள். “தங்கள் தூயபாதங்கள் பட்டு இத்தீவு அணிகொண்டது. என் சிறுகுகைக்கு வந்து கனியும் நீரும் அருந்தி என்னை வாழ்த்தவேண்டும்.”

தோளில் தோய்ந்த வெண்பனிக் கூந்தலும் மழைகரைத்த பளிங்குப்பாறை என சுருக்கங்கள் அடர்ந்த முகமும் கனியீன்றபின் மடல்சுருங்கி ஓய்ந்த கதலிவாழை என மேனியும் கொண்டிருந்த அம்முதியவள் அவரை குணிகர்க்கர் வாழ்ந்த குகைக்கு கொண்டுசென்றாள். சருகுகளை அடுக்கிச் செய்த மெத்தையில் அவரை அமரச்செய்து வணங்கினாள். மண்குவளையில் மலரிட்டு வைத்த நறுமணநீரை சுரைக்குடுவையில் அளித்தாள். அத்திப்பழமும் வாழைப்பழமும் தேன்விழுதும் இன்கிழங்கும் இலையில் படைத்தாள். உண்டு இளைப்பாறிய நாரதர் “இனியவளே, உன் ஊர் என்ன? இந்தத் தீவிலிருந்து உன் தந்தை எதன்பொருட்டு அங்கே வந்தார்? உன் தாயை எப்படி அவர் கண்டடைந்தார்?” என்றார்.

“ஊழ்கரே, எந்தை இந்தத் தீவிலிருந்து விலகியதேயில்லை” என்று கர்ணிகை சொன்னாள். “தாங்கள் அவரை இந்தத் தீவில் அமரச்செய்து விண்ணேகியபின் அவர் தன் முதற்சொல்லை முழுதாகப்பற்றி எண்ணமேதும் எஞ்சாமல் குவித்து இல்லையென்ற நிலையில் இங்கிருந்தார். அவரை இத்தீவு முலையுண்ணும் குழந்தையை அன்னை என பேணியது. தவம் கனிந்து உடலில் உலைநீறிய உலோகம் போல் எரி எழ அவர் விழித்தெழுந்தார். தன் கைகளைத் தூக்கி நோக்கியபோது அவை பொன்னிறம் கொண்டிருப்பதை கண்டார். தன் முகத்தை தானே நோக்கவேண்டுமென்ற விழைவு எழுந்தது அவருக்கு. அதுபிழை என்று அவரது ஊழ்கமுறைமை சொல்லியதென்றாலும் அவ்விழைவே வென்றது.”

“நீரிலிறங்கி முழங்கால்பட நின்று குனிந்து தன்னை தான் நோக்கி வியந்து நெடுநேரம் நின்றார். அந்திச்சுடர் தழுவிய கயிலை முடி போலிருந்தது அவரது முகம். அதை விட்டு விழிவிலக்க அவரால் முடியவில்லை. பின் தன்னை உணர்ந்து திரும்பி வந்து இக்குகைக்குள் அமர்ந்து விழிமூடியபோதும் அவர் அம்முகத்தையே கண்டார். ‘அழகு அழகு அழகு‘ என்ற சொல்லாகவே அவரது முதற்சொல் மாறிவிட்டிருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் சென்று குனிந்து தன் முகத்தை நீரில் நோக்கி நெஞ்சு எழுந்தார். அப்பேருவகையால் முகம் மேலும் அழகு கொண்டது. அவ்வழகால் உவகை மேலும் வளர்ந்தது. அழகன்றி ஏதும் அவரை சூழ்ந்திருக்கவில்லை. மலர்களில், தளிரிலைகளில், பறவைச்சிறகுகளில், கூழாங்கற்களில், நிலவில், விண்மீன்களில் எங்கும் அழகை மட்டுமே கண்டார்.”

“ஒருநாள் ஏரியில் கால் மூழ்கி நின்று தன்னை தான்கண்டு காலமறியாது அவர் நின்றிருக்கையில் ஆடிப்பாவை அலையிளகி உயிர்கொண்டது. அதனுள் இருந்து என் அன்னை எழுந்து வந்தாள். காடுகளில் நாணல்கொய்து கூடைசெய்து விற்கும் மலைமகள். மலைமுடியிலிருந்து நீரில் தவறிவிழுந்து குளிர்நீரில் மூழ்கி நினைவழிந்திருந்தாள். உடலறிந்த நீச்சல் அவளை கரையணுகச்செய்தது. உடையணியாத அவளை எந்தை கர்கசாகரத்தின் கருவறையின் இதழ்களைத் திறந்து வந்த நீர்மகள் என்றே எண்ணினார். அவளை தன் குகைக்குள் கொண்டுசென்றார். வெப்பமும் பின் நீரும் பின் அமுதும் அளித்து உயிரூட்டினார். தன்னுடைய பெண் வடிவு போலிருந்த அவளுக்கு ஸ்வப்னை என்று அவர் பெயரிட்டார். அவளுடன் கூடி என்னை பெற்றெடுத்தார்.”

“ஒரு சொல்கூட பேசாமல், உடையென ஏதுமணியாமல் மூன்றுவருடம் அவருடன் இருந்த என் அன்னை ஒரு நாள் நீரில் குனிந்து தன் முகத்தை பார்த்தாள். மலைமொழியில் ‘இது யார்?’ என்று கூவினாள். திரும்பி நோக்கி ‘இங்கா இருக்கிறேன்?’ என்று தன்னைச்சூழ்ந்த காட்டை நோக்கி சொன்னபின் நீரில் பாய்ந்து நீந்தி மறைந்தாள். பின்னர் அவள் மீளவில்லை. எந்தை என்னை தன் கைகளாலும் சொற்களாலும் வளைத்துக்கொண்டார். அவர் சொன்ன சொற்களுக்கெல்லாம் பொருள் அளிக்கும் வெளியாக இத்தீவும் சூழ்ந்த ஏரியும் வளைத்த மலைகளும் கவிந்த வானும் இருந்தன. அவரது அறிவனைத்தையும் பெற்று நான் வளர்ந்தேன். சிறுமியாகி கன்னியாகி முதுகன்னியானேன். தவத்தீரே, நான் காணும் இரண்டாவது மானுடர் நீரே.”

“எந்தை என்னிடம் சொன்னார் ‘தனிமையை மீட்டிக்கொண்டிரு மகளே. அது உன்னை நிறைக்கும். பிறிதொன்றிலாது சூழும். விண்ணிறைந்த முழுமுதல் தனிமைக்குப்பெயரே பிரம்மம்.’ நான் ‘அவ்வண்ணமே’ என்று சொல்லி அவரிடமிருந்து என் முதற்சொல் அறிவுறுத்தப்பட்டேன். ஹம் என்பதே என் அகமாகியது. அச்சொல்லை ஒவ்வொரு மூச்சாலும் ஊதி ஊதி எழுப்பி என்னுள் மூட்டிக்கொண்டேன். இத்தீவை என் தவத்தால் நிறைத்தேன். இங்கு எந்தையை விட்டுச்சென்ற நீங்களே திரும்பி வந்ததென்பது என் விடுதலைக்காகவே என எண்ணுகிறேன். என் தருணம் உங்கள் முன் பூக்கவேண்டும். என் அகம் அமர்ந்த பறவை அது நாடும் விண்ணை தொடவேண்டும்” என்று அவள் அவரைப் பணிந்து கைகூப்பி சொன்னாள்.

அவளை புன்னகையுடன் நோக்கி நாரதர் கேட்டார் “முதுமகளே, உன் தந்தை உனக்களித்த நெறி என்ன?” அவள் சற்று அதிர்ந்து உடனே விழிதாழ்த்தி “ஒருபோதும் நீரில் என் முகத்தை நான் நோக்கலாகாது என்றார். ஒவ்வொருநாளும் இந்த ஏரியில் நீராடுகிறேன். இதில் நீரள்ளிப் பருகுகிறேன். இதன்கரையில் வாழ்கிறேன். இன்றுவரை நான் என் நீர்ப்பாவையை கண்டதில்லை” என்றாள். நாரதர் “அப்படியென்றால் நீ முதுமையுற்று அழகழிந்தவளென்று எப்படி அறிந்தாய்?” என்றார். அவள் திகைத்து தன் நெஞ்சில் கைவைத்து “நான் நோக்கியதே இல்லை” என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். “நீ பனித்துளியில் உன்னை நோக்கினாய். பெண்ணே, விண்ணின் கணக்கில் பெருங்கடல்களும் பனித்துளிகளே” என்றார் நாரதர்.

அவள் கால்தளர்ந்து உடல் குவித்து அமர்ந்து “துளியினும் துளியாக என்னை ஒருமுறை மட்டும் நோக்கினேன். அதற்கே என் மீட்பை நான் இழக்கவேண்டுமா?” என்றாள். “சிறியவையே பெரிதாகும் விழைவுகொண்டவை” என்றார் நாரதர். “என் காலடி கேட்டுத் திரும்பிய உன் முதலசைவிலிருந்தது எதிர்பார்ப்பு. என்னைக் கண்ட முதல் விழிநோக்கில் இருந்தது ஏமாற்றம்.” அவள் உதடுகளைக் கடித்தபடி கண்ணீர் உகுத்தாள். “வருந்தவேண்டாம் பெண்ணே, காமத்தின் பொருட்டு இம்மண்ணில் எவரும் பிழையுணர்வு கொள்ளவேண்டியதில்லை. களியாடும் தெய்வங்களின் அரங்கமே இவ்வினிய உடல். மீட்டப்படாத யாழும் இசையாலானதே.”

“அப்படியென்றால் இருமைகொண்டு இயல்பழிந்து தவித்துத்தவித்தழிவதா என் ஊழ்வழி? எஞ்சி நான் அடைவதென ஒன்றுமில்லை என்றாகுமா?” என்று கர்ணிகை கேட்டாள். அவ்வினாவை கேட்டதுமே அவள் தன் சொல்லை கண்டுகொண்டாள். “அங்கே விண்ணிறைந்து கிடக்கும் பெருந்தனிமையின் துளியை நான் விரும்பலாகாதா?” நாரதர் ”கன்னியே, முற்றான பெருந்தனிமை என்று பிரம்மத்தைச் சொன்னவர் சென்ற வழி வேறு. உனக்கான பிரம்மத்தை நான் கண்டு உரைக்கிறேன்” என்று அவள் தலையை தொட்டார். “அருகமர்க! இது அழியா ஞானமென்றே கொள்க!”

“பிரம்மம் என ஊழ்கரும் படிவரும் அறிந்து நூலோர் உரைப்பது ஒன்றுண்டு. அதை ஒரு பெண்ணென அறிந்தவர் பிரஹஸ்பதி. அவள் காரிருள் முடிவிலிப் பெருக்கென கூந்தல் நீண்டு கிடக்கும் கன்னங்கரிய பேரழகி. அவள் நெற்றிமேட்டில் ஒளிராத ஒளியாக பரவியிருந்தது மேதை என்னும் நீர்மை. ஆதித்யர்களை கருவுக்குள் செறித்த காசியபனும் அதிதியும் அவள் விழிகள். அவள் நாசிக்குள் தவமிருந்தது பிராணன். அவள் இதழ்ச்செம்மைக்குள் குளிர்வடிவாக வாழ்ந்தது அனல். அவள் முலைக்குவைகளுக்குள் அமுதக்கடலின் பனிப்படுகைகள். அவள் உந்தியில் ஆயிரம்கோடி இதழ்கொண்ட தாமரை. அவள் யோனியெனும் செங்கனல் விழிக்குள் வாழ்ந்தது காலம். அவள் கால்பொடியில் காத்திருந்தன அண்டங்கள்.”

“தேவியின் விழைவு அவள் ஆவுடைக்குள் சிறு லிங்கமென எழுந்தது. அதில் அவள் மேனி சிலிர்த்து உயிர்கொண்டது. தன் காமக்கருமுனையை தானே தீண்டி எழுப்பினாள். தன் சிவத்தை தானே ஆக்கி தன்னுடலில் நடமிடச்செய்தாள். சுடர்கொண்டது மேதை. விழித்து பொறிபெருகினர் ஆதித்யர்கள். பருவெளியில் உயிர்நிறைத்தது பிராணன். சடத்திற்குள் சுடரென வெம்மையென செம்மையென எழுந்தது அனல். அமுதமென வழிந்தது ஆக்கி அழிக்கும் பெருங்கருணை. ஆயிரம்கோடித் தாமரை விரிந்த விசும்பு. பத்தி விரித்து நாபறக்க இமையா விழி மின்ன எழுந்தது காலம். சிதறிப்பெருகின அண்டங்கள். இங்குள்ளதெல்லாம் இன்மையின் ஆழத்து இருள்திரை விலக்கி இருப்பு கொண்டன. நீ நான் இவை அவை இங்கு இனி என அனைத்துமாகி சூழ்ந்திருப்பவளை வாழ்த்து. அவளே இச்சொல்லுக்கு காப்பாகட்டும்.”

அவள் நெற்றியைத் தொட்டு புதிய முதற்சொல்லை அவளுக்களித்தார் நாரதர். “ஸ்ரீம்!” அவள் அவர் கால்களைத் தொழுது அதை பெற்றுக்கொண்டாள். “இச்சொல்லை உன் உடலில் வைத்துக்கொள். உன்னில் அன்னை பூத்தெழட்டும்” என வாழ்த்தினார். ”பூத்து நிறைந்த இம்மலர்ச்சோலையில் உன் குகைக்குள் ஒரு மலர்கூட இல்லையே என எண்ணினேன். என்னைத் தொடர்ந்து வருகையில் மலர்களுக்கும் சருகுக்கும் வேறுபாடு அறியாமல் மிதித்து வருகிறாய். உன் உடல்பூக்கையில் மலர்பூப்பதென்பது இப்புவியாளும் அன்னை விழிபூப்பதே என்பதை அறிவாய். தன்உடலுறங்கும் தாய்மையை அறியாமல் பெண்மையில் நிறைவில்லை குழந்தை. ஓம் அவ்வாறே ஆகுக!”

முனிவர் அவளிடம் விடைகொண்டு சென்றபின் அவள் கர்கசாகரத்தின் நீலமணிப்பரப்பருகே ஒரு தனிப்பாறையில் அமர்ந்து தன் நீர்ப்பாவையை நோக்கி விழிவிரித்து தவம் செய்யலானாள். நோக்க நோக்க அவள் தன் முகத்து முதுமை மறையக்கண்டாள். நெஞ்சு உன்னி முலைகள் எழுந்தன. சிவந்தெரிந்தன இதழ்கள். ஒளிகொண்டது சிரிப்பு. புல்லரித்துப் புல்லரித்து மென்மைகொண்டது சிவமெழுந்துச் சிவந்த கனியுடல். நீர்நோக்கி அமர்ந்திருந்த கன்னியைக் கண்டு மலர்கள் வண்ணத்துப்பூச்சிகளாக வந்து சூழ்ந்து சிறகடித்தன. தும்பிகள் இசைத்தபடி வட்டமிட்டன. ஏரி தேனாகியது. சூழ்ந்த காடு கரும்பாகியது.

ஒவ்வொருநாளும் ஒவ்வொருகணமும் விழிதொட்டு தன் உருவை மீட்டி மீட்டி அவள் அதை ஆணென ஆக்கினாள். தன் வயதின் பாதியை அதற்களித்து தான் பாதியென எஞ்சினாள். அவள் எண்ணங்களால் சிலிர்த்துக்கொண்டிருந்த நீர்ப்பரப்பின்மேல் காமத்தால் அஞ்சி அதிர்ந்து நீளும் விரல் என ஒரு படகு அணுகிவரக்கண்டு எழுந்து முலைமுகைகளை கைகளால் அழுத்திக்கொண்டு அருவி பொங்கி வந்து விழும் மரக்கிளை என அதிர்ந்து நின்றாள். படகில் இருந்த மலைமகன் அவளைக்கண்டு துடுப்பிட மறந்தான். அவன் விழைவே என தோணி அவளை நோக்கி ஒழுகி வந்தது. கரையேறிய அவன் அவளிடம் தன் மலைமொழியில் “நீ அணங்கா?” என்றான். அவள் விட்ட வெம்மூச்சே உரிய மறுமொழியாக இருந்தது.

சிருங்கவான் என அவள் அவனை அழைத்தாள். இடைசுற்றி வளைத்த கைகளில் குழைந்து மலர்க்கைகளால் அவன் கழுத்தில் மாலையிட்டு அவனை தன் கொழுநனாக ஏற்றுக்கொண்டாள். உருகிவழியும் கந்தகப்பாறையை என அவளை அவன் அணைத்தான். அவியாகும் சமித்தின் பேருவகையை அடைந்தான். அங்கு அவனிருந்தது ஒருநாள் இரவே. அந்த ஓரிரவில் அவள் அவனுக்காக மீண்டும் மீண்டும் பிறந்து எழுந்து வந்தாள். பேதையென நாணி கண்புதைத்தாள். பெதும்பை என காமத்தால் எரிந்தாள். மங்கை என சூழ்ந்துகொண்டாள். மடந்தை என ஆட்சி செய்தாள். அரிவை என ஆழங்களுக்குள் கொண்டுசென்றாள். தெரிவை என அன்னையானாள். பேரிளம்பெண் என மூதன்னை வடிவானாள்.

மறுநாள் காலை இன்துயிலில் புன்னகையுடன் அவள் கிடக்கையில் அணங்கைப் புணர்ந்ததாக எண்ணி அச்சம் கொண்ட சிருங்கவான் ஓசையின்றி அவளை விட்டு எழுந்து நாணல்தோணியேறி மறைந்தான். அவன் சென்ற அலைகள் ஒவ்வொன்றாக வந்து அவள் கரையை முத்தமிட்டு விரிந்து தேய்ந்து மறைந்துகொண்டிருந்தன. அவள் தன் கனவில் அவற்றை மேனிமேல் உதிர்ந்த குளிர்வெண் மலர்களென உணர்ந்து உடல்மலர்ந்துகொண்டிருந்தாள். விழித்தெழுந்தபோது அவனைக் காணாத அவள் எண்ணி ஏங்கவில்லை. அவன் வந்த தடமோ சென்ற தடமோ எஞ்சாது கிடந்த ஏரிப்பரப்பை குனிந்து நோக்கினாள். அங்கே நிறைந்து கனிந்து புன்னகைத்த முதுமகளை கண்டாள்.

விருத்தகன்யகை தன் குகைக்கு மீண்டாள். அங்கே சிட்டுச்சிறகு பொறுக்கிச்சேர்த்து உருவாக்கி தாழைப்பொடியால் மணம் சேர்க்கப்பட்ட மென்சேக்கையில் அவள் நட்டு வளர்த்த மலர்ச்செடிகள் நடுவே மடிமேல் கைவைத்து கண்மூடி அமர்ந்தாள். அவள் உடலில் இருந்து கூந்தல் வெண்கொக்குகளாகச் சிறகடித்து எழுந்து பறந்தது. அவள் விழிகள் இரு சிறு கரிக்குருவிகளாக எழுந்து மறைந்தன. இதழ்கள் பட்டாம்பூச்சியாக காற்றில் மிதந்தன. முலைகள் இரு கனிகளாக மெல்ல உதிர்ந்தன. கருப்பை ஒரு முயலாக மாறி அக்காட்டில் துள்ளி ஓடியது. அவள் தசைகள் உருகி வழிந்தன. ஒளிஎழுந்த வானின் விளிம்பில் நின்று குனிந்து தன் வெள்ளெலும்புகளை நோக்கினாள். பின்னர் அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை.

முந்தைய கட்டுரைதேன்மலர்
அடுத்த கட்டுரைமத்திம மார்க்கம்