போகனுக்கு அன்புடன்

374

போகன் சங்கர் கவிதைகள் பற்றி எழுதிய குறிப்புக்கு அவர் வழக்கமான சாணிபூசும் மொழியில் பதிலளித்திருக்கிறார். நான் அவரை முன்பு பாராட்டினேன், இப்போது வசைபாடுகிறேன் என்பது அவரது புரிதல்.

அவரது கதையைப்பாராட்டி இந்த இணைய தளத்தில்தான் வெளியிட்டேன். அறிமுக எழுத்தாளராக. இப்போதும் ஓர் எழுத்தாளராக அவர் தன்னுடைய இடத்தைக் கண்டடையமுடியும் என்றும் நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதற்குரிய அடிப்படையான அவதானிப்புகள் உள்ளன

அவர் உயிர்மை இதழில் எழுதிய மீட்பு என்ற சிறுகதை சமீபத்தில் வாசித்ததில் குறிப்பிடத்தக்கது என்று தோன்றியது.அழகியல் ரீதியாக அது விகடன் கதைகளைச் சார்ந்தது. சொல்லப்போனால் பாலகுமாரனின் நடையில் என் நடையைக் கலந்து எழுத முயன்ற படைப்பு. உணர்வுகளிலும் சித்திரங்களிலும் மிகை கொண்டது.

ஆயினும் அதன் உணர்வுத்தளம் உண்மையானதாக இருப்பதனாலேயே முக்கியமானது. தொடர்ந்து கதைகளை வாசித்துவந்தாலும் சிற்றிதழ்களில் வாழ்க்கையுடன் தொடர்புள்ள நல்ல கதைகளை வாசிக்கநேர்வது அபூர்வமாகவே நிகழ்கிறது என்பதனால் இக்கதையை விரும்பினேன்

இக்கதை போகன் சங்கர் மீதான என் எதிர்பார்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அவரது சாத்தியங்களை மிகைப்படுத்திக்கொள்ளாமல், அவரது வாசிப்பின் சிந்தனையின் எல்லைகளை பாவனைகள் மூலம் ஊதிக்காட்டமுயலாமல் எழுதுவார் என்றால் அவரால் முதன்மையான ஆக்கங்களை உருவாக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் அவர் நின்று நின்றிருக்கும் இடம், செல்லவிரும்பும் திசை என்பது வணிகக் கேளிக்கை எழுத்தின் பாதை. உடனடி எதிர்வினைகளுக்காக சென்டிமெண்டுகளைப் பயிரிடுவது. எப்படி அவரை பாராட்டி ஊக்கமூட்டி அறிமுகம் செய்தேனோ அதேபோன்றே இதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
.
‘மீட்பு’ ஒரு நல்ல கதை. ஆனால் அது செல்லக்கூடிய தூரம் அதிகம். இப்போதுள்ள அது ஒரு ‘செண்டிமெண்ட்’ கதை மட்டுமே. அதை வாசித்தபோது ஒரு நல்ல கதை மேலும் எழாது சரிந்தது ஏன் என்று சிந்திக்கத் தோன்றியது.

மீட்பு அனைத்துவகையிலும் ‘ஓசையிட’க் கூடிய கதை. உள்ளடுக்குகள் என்பதே இல்லை. ஓசை அதன் தலைப்பிலிருந்தே தொடங்குகிறது. அதன் வண்ணத்துப்பூச்சிகள் நவீன இலக்கியத்தில் மிகமிகப் பழகிப்போன படிமம். மரணம், துயரம், நினைவுகள், கற்பனைகள் என அதை எழுதி எழுதி இன்று வண்ணத்துப்பூச்சியாகப் பார்ப்பதே கடினமானதாக ஆகிவிட்டிருக்கிறது

மேலும் அக்கதையின் துயரச்சித்தரிப்புதான் அதை விகடன் கதையாக ஆக்குகிறது. எந்த வகையான தனித்தன்மையும் இல்லாத வழக்கமான துயரவிவரணை. நேரடியாக அப்படியே வண்ணத்துப்பூச்சிகள்.

இக்கதையில் வண்ணத்துப்பூச்சி என்பது ஒரு கவியுருவகம். [மெட்டஃபர்]கவிதைக்கும் சிறுகதைக்கும் கவியுருவகங்கள் உகந்தவை அல்ல. அப்படைப்புக்குள் ஆசிரியன் உருவாக்கி அளிக்கும் அர்த்தங்களை மட்டுமே சுமந்து நிற்பவை அவை. அந்த அர்த்தத்தை வாசகன் அடைந்ததுமே அவை முடிந்துவிடுகின்றன. இக்கதையில் வண்ணத்துப்பூச்சிகள் எதைக்குறிக்கின்றன என்பதை கதையை வாசிக்காமலேயே சொல்லிவிடமுடியும். இந்தவகையான எழுத்துமுறை இலக்கியத்தில் மறைந்து நெடுநாட்களாகின்றது.

சிறுகதையில் கவியுருவகம் வரவே கூடாதா? வரலாம். மிக அபூர்வமான தத்துவதரிசனத்தை, ஆன்மிக வெளிப்பாட்டை முன்வைக்கும்பொருட்டு வரலாம். அந்த தத்துவ தரிசனத்தின், வல்லமையால் அக்கதை நிற்கும் என்றால் உருவகம் மன்னிக்கப்படும். ஆனால் இக்கதையின் மையம் என்பது மிக சாதாரணமான அன்றாட ஆறுதல்சொல் மட்டும்தானே?

சிறுகதைக்கும் கவிதைக்கும் உரியது படிமம் மட்டுமே. அதன் வாசகத்திறப்புகள் எல்லையற்றவை. ஆனால் நாவலுக்கு கவியுருவகம் முக்கியமான அழகியல்கருவி. காஃப்காவின் கரப்பாம்பூச்சி முதல் அசோகமித்திரனின் தண்ணீர் வரை. ஆனால் நவீனத்துவபாணி நாவல்கள் அந்தப் உருவகத்தை வலுவாக நிறுவிவிட்டு பின்வாங்குகின்றன. அதற்குப்பின் வந்த விரிவான நாவல்கள் அத்தகைய கவியுருவகங்களை மேலும் மேலுமென எடுத்துச்செல்கின்றன. தலைகீழாக்குகின்றன. மேலும் வளர்த்துச்செல்ல வாசகனுக்கு வாய்ப்பளிக்கின்றன.

போகனின் இக்கதை ஒரு நாவலின் அத்தியாயமாக ஆகக்கூடும். அப்போது இந்த வண்ணத்துப்பூச்சிகள் அடுத்த தருணத்தில் உவகையின் அடையாளமாகலாம். விடுதலையின் சின்னமாகலாம். பரிதாபமாகச் செத்துக்குவியலாம்.. அப்படியே அவை விரிந்து சென்று இப்போது அவற்றிற்கு இருக்கும் எல்லையை கடக்கமுடியும். இப்போது அது வாசித்ததுமே முடிந்துவிடும் ஒரு கதை. என் இணையதளத்தில் வந்த ‘பூ’ என்ற கதையளவுக்குக் கூட விரியவில்லை. அந்த வீழ்ச்சியையே நான் சுட்டிக்காட்டுகிறேன்.

அந்தத் தம்பதிகள் கண்டறிந்ததைச் ‘சொல்ல’ வண்ணத்துப்பூச்சிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் வரும் சிக்கல் இது. பதிலுக்கு அந்த வண்ணத்துப்பூச்சிகள் வழியாகவே அவர்களுடன் சென்று முன்னமே இவருக்கும் தெரியாத ஒன்றைக் கண்டடைய முயன்றிருந்தாரென்றால் சென்றிருக்கக்கூடிய தூரம் அதிகம். இக்கதை தமிழின் முதன்மையான கதைகளில் ஒன்றாக ஆகியிருக்கக்கூடும்.

இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். அவருடைய இலக்கியவாசிப்பு மிகமிக எல்லைக்குட்பட்டது. என் இணையதள விவாதங்களில் மூன்றாண்டுகளுக்கு முன்புவரை அவர் அதிதீவிர பாலகுமாரன் ரசிகராக எழுதிய கடிதங்கள் உள்ளன. இலக்கியத்தை வாசிக்கும்படி அவருக்கு நான் எழுதிய பல கடிதங்கள் உள்ளன.

ஓர் எழுத்தாளராக அறிமுகமானவர் தன் எழுத்தின் திசையைக் கண்டுகொள்ளவேண்டிய முக்கியமான புள்ளியில் இருப்பவர் சட்டென்று தமிழ் சிற்றிதழ் அரசியலின் சாத்தியங்களைக் கண்டுகொண்டார். இன்று அவர் என்னை நாள்தோறும் வசைபாடி எழுதும் கட்டுரைகள் அவரை முன்னிறுத்துபவர்களுக்கு அவர் அளிக்கும் கப்பம். அதை அவர் நிறுத்திக்கொண்டதும் அவர் தூக்கிப்போடப்படுவார். இலக்கியவாதியின் வழி அல்ல இது. எழுத்தாளனுக்கு இன்றியமையாதது அடிப்படையான ஒரு திமிர்

கலைபற்றியோ எழுத்தின் நுட்பங்கள் குறித்தோ தானே எழுதிக் கண்டுபிடிக்கவேண்டிய புள்ளியில் நிற்பவர் இருவகை மாயைகளில் சிக்கியிருக்கிறார். ஒன்று, பூக்கோ நீச்சே என்று பெயருதிர்ப்பது. வாசிக்காமல் பொத்தாம்பொதுவான விமர்சனங்களை அடித்துவிடுவது.தமிழ்ச்சூழலுக்கு இதெல்லாம் போதும் என அவர் நினைக்கலாம். கொஞ்சம் வாசிப்பவர்களுக்குக் கூட இவை பரிதாபகரமான நகைச்சுவைகளாகவே தோன்றும் என அவர் உணர்வதில்லை.

இரண்டு, ஃபேஸ்புக்கின் உடனடி எதிர்வினைகளுக்காக பாவனைகள் செய்வது. அவரில் இன்றிருக்கும் உண்மையான படைப்பூக்கத்தின் துளியை அது வற்றவைத்துவிடும். பாவனைகள் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்தாளனை பொய்யாக்கிவிடும்

அவரை அவர் என் மீது பொழியும் வசைகளுக்காகவும் அவரது மிகையுணர்ச்சி மற்றும் மென்பாலியல் எழுத்துக்காகவும் முன்னிறுத்தும் மனுஷ்யபுத்திரனோ பிறரோ அவருக்கு பெரும் தீங்கை இழைக்கிறார்கள். அவரை அதுமட்டுமாக ஆக்குகிறார்கள். அதை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்

ஓர் எழுத்தாளன் அவனுடைய மலரும் பருவத்தில் எது அவன் செல்லவேண்டிய பாதை என எழுதிக்கண்டுபிடிக்கும் சவாலை எதிர்கொள்கிறான். விதவிதமாக எழுதி நோக்கி எங்கோ ஒருபுள்ளியில் இதுதான் நான் என அவன் கண்டடைகிறான். போகன் அந்தப்புள்ளியில் இருக்கிறார் என நினைக்கிறேன். இன்னும் முழுக்க கடந்துவிடவில்லை.

அவருடையது கட்டற்றகற்பனைப்பாய்ச்சலாக இருக்கலாம். கனவுத்தீற்றலாக இருக்கலாம். மொழிப்பீரிடலாக இருக்கலாம். மொழிமடிப்புகளாக இருக்கலாம். ஆனால் அதை அவர் தன் எழுத்துநிகழும்போது கண்டுபிடிக்கவேண்டும். இக்கதையில் அதற்கான ஒரு வாய்ப்பிருந்தது.

அது முழுக்கமுழுக்க பிறர் அற்ற தனிமையில், பெரும்பரவசத்துடன் கண்டடையவேண்டிய ஒன்று. அதற்கும் சமகால ரசனைக்கும் எழுத்துச்சூழலுக்கும் தொடர்பே இல்லை. முழுமையாக எய்தப்பட்டால் எந்த இலக்கிய எழுத்துமுறையும் முக்கியமானதே. ’இன்றைய டிரெண்ட் இதுதான்’ என்றோ ‘இன்னின்ன சிந்தனையாளர்கள் இப்படிச் சொல்கிறார்கள்’ என்றோ இலக்கியம் செயல்படும் முறையை அறியாத அசடுகளே சொல்வார்கள்.

இத்தருணத்தில் உயிர்மை இன்று உருவாக்கிவரும் மலின எழுத்தின் வளையத்துக்குள் தன்னை ஒப்படைப்பதனால் இழப்பு அவருக்கே. இந்தப்பாவனைகளும் தோரணைகளும் அவர் தன்னை உருவாக்கி எழும் ஒரு தருணத்தில் பெரும் தடையாக அமைவதைக் காண்கிறேன். அந்த எல்லைக்குள்ளாகவே அவர் சுற்றிக்கொண்டிருக்க வாய்ப்பு அதிகம் என்பதனாலேயே இக்குறிப்பு. இது அவரைச் சீண்டி மேலும் வசைபாடல்களுக்குக் கொண்டுசெல்லலாம். ஆனால் என்றேனும் அந்தரங்கமாகச் சிந்தித்தாரென்றால் இது உதவவும்கூடும்.

இக்குறிப்பை நீளமாக எழுதுவதே கூட அவர் மீதான மதிப்பினால்தான். அர்.அபிலாஷ் இன்னும் பத்துவருடம் சத்தம்போட்டால்கூட ஒருவரிக்குமேல் எழுதமாட்டேன். கலைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.அவர் மிஞ்சிப்போனால் இன்னொரு யமுனா ராஜேந்திரன்.

போகன் தன் எல்லைகளை அவர் கடப்பாரென்றால் ஒரு தமிழ்ப்படைப்பாளியின் தோற்றம் அது. வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஜேகே- முருகபூபதி
அடுத்த கட்டுரைசுஜாதா விருது -கடிதம் 6