‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 7

திருதராஷ்டிரரின் அறையை நெருங்கியபோது மெல்ல துரியோதனன் நடைதளர்ந்தான். “யாதவனே, உண்மையில் எனக்கு அச்சமாகவே இருக்கிறது” என்றான். “அஞ்சவேண்டாம், நான் இருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “அவரை கணிப்பது மிகவும் கடினம் யாதவனே” என்றான் யுதிஷ்டிரன். “நானும் அதனாலேயே அஞ்சுகிறேன்.” கிருஷ்ணன் ”நாம் சென்றுகொண்டிருப்பது இக்குடியின் மூத்தவரை சந்திப்பதற்காக…” என்றான்.

பூரிசிரவஸ் “அவர் இளவரசர்களை தாக்கினாரென்றால் நாமனைவரும் இணைந்தாலும் அவரை தடுக்க முடியாது” என்றான். “அஞ்சவேண்டாம். நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் மட்டுமே அவரை அடக்கமுடியும்…” என்றான் கிருஷ்ணன். பூரிசிரவஸ் அவன் விளையாடுகிறானா என்று முகத்தைப்பார்த்தான். திரும்பி அர்ஜுனன் முகத்தை பார்த்தான்.

அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. துரியோதனன் “இளையோனே, நீ பின்னால் நின்றுகொள்” என்று துச்சாதனனிடம் மெல்லியகுரலில் சொன்னான். கிருஷ்ணன் “யுதிஷ்டிரரே, மூத்த கௌரவரையும் துச்சாதனரையும் இரு தோள்களால் தழுவியபடி பேரரசர் முன் சென்று நில்லுங்கள்” என்றான். யுதிஷ்டிரன் இருவர் கைகளையும் பற்றிக்கொண்டான்.

சௌனகர் கதவைத் தட்டியதும் மெல்லத் திறந்து விப்ரர் எட்டிப்பார்த்தார். முதலில் யுதிஷ்டிரன் முகம்தான் அவருக்குத்தெரிந்தது. அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்தன. கம்மியகுரலில் “இளவரசே” என்றபடி கதவை விரியத்திறந்ததும் துரியோதனனையும் துச்சாதனனையும் பார்த்தார். அவரது வாய் திறந்திருக்க தலை அதிர்ந்தது. திரும்பி அறைக்குள் நோக்கிவிட்டு அவர்களைப்பார்த்தார். பின்னர் திரும்பி ”அரசே” என்று கூவியபடி உள்ளே ஓடினார். யுதிஷ்டிரன் திரும்பி கிருஷ்ணனை நோக்க கிருஷ்ணன் “நாம் உள்ளே செல்வோம்” என்றான். “நம்மை இன்னமும் அழைக்கவில்லை” என்றான் யுதிஷ்டிரன். “செல்வோம்” என்றான் கிருஷ்ணன்.

அவர்கள் தோள்கள் முட்டிக்கொண்டு தயங்கி பின் கால்கள் தடுமாற ஒவ்வொருவராக உள்ளே செல்ல பூரிசிரவஸ் தொடர்ந்தான். தன் நெஞ்சில் எழுந்த அதிர்வை உணர்ந்தான். நீண்ட கூடத்தின் வளைந்த உத்தரங்கள் கொண்ட மரக்கூரையை கரிய பெருங்கைகள் எழுந்து தாங்கியதுபோல தூண்கள். தோலின் மென்மையும் வழவழப்பும் கொண்டவை. அரைவெளிச்சம் பரவி அது ஒரு மலைச்சுனை என குளிர்ந்திருந்தது.

மறுபக்கம் பெரிய பீடத்தில் திருதராஷ்டிரர் இரு கைகளையும் கைப்பிடிகள் மேல் விரித்து தளர்ந்தவர் போல அமர்ந்திருக்க அவரது காலடியில் அமர்ந்து விப்ரர் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருந்தார். திருதராஷ்டிரர் அச்சொற்களை கேட்காதவர் போல தலையை சுழற்றி கைகளை ஆட்டினார். சலிப்போ அச்சமோ அடைந்த யானையின் அசைவு அது. அவர்களின் காலடியோசை கேட்டு அவரது முகம் மறுபக்கமாகத் திரும்பி பெரிய காதுகள் தெரிந்தன. அவரது உடலின் தோல்பரப்பில் ஓசையின் எதிரதிர்வு எழுவது தெரிந்தது.

விப்ரர் எழுந்து கைகளை விரித்து வருக என தலையசைத்தார். தாடையின் அசைவில் அவரது தாடி நடுங்கியது. பின்னர் அவரே பாய்ந்து வந்து இரு கைகளையும் விரித்து மூவரையும் அணைத்துக்கொண்டு சீறிய விம்மலோசையுடன் அழுதார். துரியோதனன் கால்கள் தளர்ந்தது போல அவர் அணைப்பில் ஒடுங்க யுதிஷ்டிரன்தான் நடுங்காமல் நால்வருக்கும் கால்களாக நின்றான்.

பூரிசிரவஸ் சுவர் சாய்ந்து நின்றான். அவனருகே கிருஷ்ணனும் நின்று அவனை நோக்கி புன்னகைசெய்தான். விப்ரர் யுதிஷ்டிரன் துரியோதனன் இருவர் கைகளையும்பற்றி இழுத்துச்சென்று திருதராஷ்டிரர் அருகே நிறுத்தி “மைந்தர்… அரசே, நம் மைந்தர்” என்றார். திருதராஷ்டிரரின் கைகள் செயலிழந்தவை போலிருந்தன. அவரது கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர்ந்தன. இரு சிறிய செந்நிறத்தவளைகள் துள்ளுவதைப்போல தசைக்குழிகளான விழிகள் அசைந்தன. செருமல் போன்ற ஓர் ஒலி எழுந்தது. அது அவர்தான் என சற்றுநேரம் கடந்தே பூரிசிரவஸ் உணர்ந்தான். மீண்டும் இருமுறை திருதராஷ்டிரர் செருமினார்.

யுதிஷ்டிரன் குனிந்து அவரது கால்களைத் தொட்டு “தந்தையே, தங்கள் மைந்தன் யுதிஷ்டிரன்” என்றான். அவரது கைகள் அப்போதும் அசைவிழந்தே இருந்தன. உடல்முழுக்க ஒரு வலிப்பு ஓடிச்செல்வது தெரிந்தது. “என் இளையோருடன் தங்கள் அடிபணிய வந்திருக்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னான். திருதராஷ்டிரர் மீண்டும் கனைத்தார். மூச்சு ஒலிப்பதுபோல ஒலிகள் எழுந்தன. பின்னர் அவர் மிக மெல்ல அழத்தொடங்கினார். கேட்க எவருமில்லாதபோது மட்டுமே எழும் தணிந்த அழுகை. மானுடன் வெளிப்படுத்துவதிலேயே தூய உணர்ச்சி என பூரிசிரவஸ் நினைத்தான்.

யுதிஷ்டிரன் திரும்பி துரியோதனனிடமும் துச்சாதனனிடமும் வணங்கும்படி கைகாட்ட அவர்கள் தயங்கியபடி முன்னால் சென்று வணங்கினர். துச்சாதனன் அவர் காலடியில் நிலத்தில் விழுவதுபோல அமர்ந்து அப்படியே விலாவை நிலத்தில் வைத்து படுத்துவிட்டான். அர்ஜுனனும் துச்சலனும் பீமனும் வணங்கும்போதும் அவர் அழுதுகொண்டேதான் இருந்தார்.

துரியோதனன் கண்ணீர் வழியும் முகத்துடன் திரும்பி நகுலனையும் சகதேவனையும் இரு கைகளால் அணைத்து அழைத்துச்சென்று வணங்கச்செய்தான். பின்னர் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கி வருக என தலையசைத்தான். நானா என்று அவன் திகைப்புடன் விழியால் கேட்க வாயசைவால் துரியோதனன் வா என்றான். அவன் அருகே சென்றதும் வணங்கும்படி கைகாட்டினான். “இளையோரை வாழ்த்துக தந்தையே” என்றான் யுதிஷ்டிரன்.

திருதராஷ்டிரர் அங்கு நிகழ்வது எதையும் உணரவில்லை என்று தோன்றியது. அவர்கள் அவரைச் சூழ்ந்து நின்று நோக்கிக்கொண்டிருந்தனர். கண்ணீர்த்துளிகள் அவரது தாடிக்குள் ஊறி மார்பில் சொட்டின. பெரிய குரல்வளை தெரிய தலையை பின்னால் சாய்த்து மயங்கியவர் போல உடல்தளர்ந்தார். வாய்க்குள் எருமையுடையவை போல பெரிய பற்களும் மூக்குக்குள் முடிகளும் தெரிந்தன. இடது தோள் அதிர்ந்தது. யுதிஷ்டிரன் பதறி அவர் கையைப்பற்றி “தந்தையே, தந்தையே” என்றான்.

விப்ரர் ஓடிச்சென்று பெரிய மரக்குடுவையிலிருந்த நீரை கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி குடம் மூழ்கி நிறையும் ஓசையுடன் முழுக்க குடித்துவிட்டு மடியில் கைதளர வைத்தார். விப்ரர் அதை வாங்கிக்கொண்டார். அவரது தாடியில் நீர்வழிந்தது. விப்ரர் அதை மரவுரியால் மெல்ல ஒற்றினார். “நம் மைந்தர் அரசே… பாண்டவரும் கௌரவருமாக வந்திருக்கின்றனர். கைகள் கோத்து வந்தார்கள். அனைத்தும் சீராகிவிட்டன. மைந்தர் அனைவரும் கைகள் பற்றிக்கொண்டு நுழைவதைக் கண்டேன். நம்மை ஏன் இன்னும் மூதாதையர் வாழவைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன்… இனி நாம் செல்லமுடியும். சிரித்துக்கொண்டே முகில்களை மிதித்து மேலேறிச் செல்வோம்” என்றார்.

“விதுரன்… அவன் எங்கே?” என்றார் திருதராஷ்டிரர். “வந்துகொண்டிருக்கிறார்” என்றான் கிருஷ்ணன். திரும்பி சௌனகரிடம் கண்களால் ஆணையிட்டு “இதோ வருகிறார்” என்றான். “அந்த மூடனிடம் சொல்லுங்கள். சரியாகிவிட்டது என்று. இனி அவன் துயிலலாம் என்று சொல்லுங்கள்.” அவர் அப்படியே சிரிக்கத் தொடங்கினார். “மூடன்… உடலே கரைந்துவிட்டது அவனுக்கு. என் முன்னால் வருவதையே தவிர்க்கிறான்…” அவரது வெண்பற்களின் நிரை மிக அழகாக இருந்தது. கைகளைத் தூக்கி “விதுரனுக்குத்தான் தெரியவேண்டும்… அதன்பின் காந்தாரிக்கு… யாதவா, அவளிடம் சொல்லிவிடு… சௌனகரே, உடனே மகளிர்அரண்மனைக்கு செல்லுங்கள்” என்றார். கிருஷ்ணன் “சென்றுவிட்டார்” என்றான்.

திருதராஷ்டிரர் “தருமா…” என்றார். இரு கைகளையும் விரித்து “மைந்தா” என்றார். யுதிஷ்டிரன் அவர் அருகே மண்டியிட்டான். “தந்தையே” என்றான். “எங்களுக்கு தெய்வங்கள் விழிகளை அளிக்கவில்லை…” என்றார். மீண்டும் செருமினார். கண்கள் துள்ளின, முகத்திலிருந்தே தெறித்துவிடக்கூடும் என்பவை போல. கைகளால் துழாவி யுதிஷ்டிரனின் தலையை தொட்டார். “நானும் என் மைந்தரும் விழியிழந்தவர்கள்.வெறும் மூடர்கள். கருணையுடன் இரு மைந்தா… இந்த எளியவர்கள்மேல் என்றும் கருணையுடன் இரு…”

“நான் என்றும் உங்கள் மைந்தன் மட்டுமே” என்றான் யுதிஷ்டிரன். “நீ பாண்டு… அவனுடைய மணம் கொண்டவன். என் தம்பி நீ. அறம் அறிந்து அதிலமர்ந்தவன். இங்கே அவனுக்கு இன்பங்களை அளிக்கவில்லை கருணையற்ற தெய்வங்கள். ஆனால் நெஞ்சு நிறையும் மைந்தர்களை அளித்தன. உன்னை அவன் வடிவாக இவ்வுலகில் எஞ்ச வைத்தன… தெய்வங்களின் ஆடல்…” அவர் அவன் தலையைப்பற்றி தன்முகத்துடன் சேர்த்துக்கொண்டார். “இளமையில் அவனைத்தான் நான் முகர்ந்துகொண்டே இருப்பேன். இரவில் என்னருகே படுக்கவைப்பேன். விப்ரா, உனக்குத்தெரியுமல்லவா?”

விப்ரர் சிரித்தபடி “ஆம்…” என்றார். ”விதுரனையும் முகர்ந்துகொண்டிருப்பேன். ஆனால் பாண்டுவின் மணம் விதுரனுக்கு இல்லை. அவனுடலில் ஒரு நீர்ப்பாசிமணம்தான். பாண்டு தூய சுண்ணத்தின் மணம் கொண்டவன். விதுரா… விதுரன் எங்கே? இன்னுமா அந்த மூடன் வரவில்லை?” யுதிஷ்டிரன் “அவர் வந்துகொண்டிருக்கிறார் தந்தையே. மாலை அவைகூடுவதனால் அதற்கான பணிகளில் இருக்கிறார். இதோ வந்துவிடுவார்” என்றான். “அவன் இருக்கவேண்டும்… இப்போது அவனும் என்னுடன் இருக்கவேண்டும்.” அவர் காற்றில் கைகளால் துழாவி “எங்கே என் மைந்தர்?” என்றார்.

யுதிஷ்டிரன் திரும்ப பாண்டவர்கள் நால்வரும் திருதராஷ்டிரர் அருகே சென்று அமர்ந்தனர். அவர் அவர்களை மொத்தமாக அணைத்துக்கொண்டார். ஒவ்வொருவரையாக முகர்ந்தார். சிரித்தபடி கைகளால் தோள்களில் அறைந்தார். “இவன் சகதேவன் அல்லவா? இத்தனை பெரியவனாகிவிட்டான்.” அவன் தோள்களைப் பிசைந்து “ஆனால் இவன் தோள்கள் பஞ்சுபோலிருக்கின்றன. இவன் ஒருபோதும் களம்புகுந்து போர் புரியப்போவதில்லை… பீமன் எங்கே?” என்றவர் பீமனைத் தொட்டார். “இவன் ஹஸ்தியின் மைந்தன். இவன்தான்” என்றார். பீமனின் தோள்களை அவரது கைகள் வருடின. “நீ அரக்கியை மணந்து அரக்கமைந்தனைப் பெற்றாய் என அறிந்தேன். அவன் பெயர் என்ன?”

“கடோத்கஜன்” என்றான் துச்சாதனன். “ஆம், அரிய பெயர். அவன் என்னுடன் மல்நிகர் நிற்கமுடியும் என்றார்கள். அவனை இங்கே வரவழைக்கவேண்டும். நான் அவனுக்கு கற்பிக்கிறேன்.” துச்சாதனன் “வரச்சொல்கிறேன் தந்தையே” என்றான். “மைந்தரால் பொலிய எனக்கு அருங்கொடையளித்தன தெய்வங்கள். இனி நான் பெயரர்களால் பொலியவேண்டும்.” யுதிஷ்டிரன் “ஆம், நூற்றுவரும் மணம்கொண்டார்கள் என்று அறிந்தேன்” என்றான்.

அவர் முகம் மாறியது. உடனே மலர்ந்து “ஆம், நூறு இளவரசிகள் மகளிர்கூடத்தை நிறைத்துவிட்டார்கள். ஒவ்வொருத்தியையும் நான் தொட்டும் முகர்ந்தும் அறியவேண்டும்… நான் மகளிர்கோட்டத்திற்கே இதுவரை செல்லவில்லை” என்றார். “நீங்கள் மணமுடித்த இளவரசியரும் வந்துள்ளனர் அல்லவா?” யுதிஷ்டிரன் ”ஆம் தந்தையே. தேவிகையும் விஜயையும் பலந்தரையும் கரேணுமதியும் பிந்துமதியும் வந்திருக்கிறார்கள்” என்றான். திருதராஷ்டிரர் அவர் உடலில் குடியேறிய மெல்லிய துடிப்புடன் “திரௌபதி… அவள் எப்போது வருகிறாள்?” என்றார்.

“நாளை காலை திரௌபதி நகர் புகுகிறாள். பாஞ்சாலத்திலிருந்து அணிப்படகுகள் கிளம்பிவிட்டன” என்று யுதிஷ்டிரன் சொன்னான். “அஸ்தினபுரிக்கு தேவயானி மீண்டும் வருகிறாள். அவள் நகர்புகுவது நிகரற்ற விழவாக இருக்கவேண்டும். படகுத்துறைக்கே அமைச்சர்கள் செல்லவேண்டும். கோட்டைமுகப்பில் என் மைந்தர்கள் செல்லவேண்டும். அங்கிருந்தே அணிவலம் தொடங்கட்டும். அரண்மனைப்பெண்டிர் அனைவரும் சென்று வரவேற்கவேண்டும். நகரம் அணிகொள்ளட்டும். கொற்றவை எழுந்தருள்வது அது… இது என் ஆணை. விதுரா? எங்கே அந்த மூடன்? அவன் மண்டையை உடைப்பேன். தேவையான நேரத்தில் இருக்கமாட்டான். மூடன்…”

“தங்கள் ஆணையை தலைமேல்கொள்வோம் தந்தையே” என்றான் துரியோதனன். “விதுரன் எங்கே? எங்கிருந்தாலும் அவனை இழுத்து வரச்சொல்லுங்கள். விப்ரா!” கதவு திறந்து மூச்சிரைக்கும் ஒலியுடன் விதுரர் எட்டிப்பார்த்தார். “விதுரர் வந்துவிட்டார்” என்றான் கிருஷ்ணன். “விதுரா, மூடா, பார்த்தாயா? என் மைந்தர். என்னைச்சுற்றி என் மைந்தர்.” விதுரர் உடல் நடுங்க “ஆம்” என்றார். அவரும் அழத்தொடங்குவது போலிருந்தது. கிருஷ்ணன் புன்னகையுடன் “உங்கள் மண்டையை உடைக்க விரும்புகிறார்” என்றான். விதுரர் கண்களில் நீருடன் புன்னகைத்து “பல்லாயிரம் முறை உடைக்கப்பட்ட மண்டை இது” என்றார்.

“உடைத்துப்பார்த்தால் உள்ளே ஒரு பெரிய நீர்த்தவளை இருந்தது… திரும்ப வைத்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நூல்கற்று நூல்கற்று வெறும்மூடனாகி விட்டான். சுருதையின் அறிவால்தான் ஏதோ செய்கிறான்… இவன் மைந்தன் உன்னுடன்தானே இருக்கிறான் யாதவா?” கிருஷ்ணன் “ஆம் அரசே” என்றான். “அவன் எப்படி? இவனைப்போல மூடனா, இல்லை அறிவுடையவனா?” கிருஷ்ணன் “அறிவை நாங்கள் அங்கே அளிக்கிறோம்” என்றான். கைகளால் இருக்கையின் கைப்பிடியை ஓங்கி அறைந்து திருதராஷ்டிரர் சிரித்தார். “நன்று, நன்று… அது நல்ல மறுமொழி…” மீண்டும் சிரித்து “வரிசையில் நின்று வாங்கிக்கொள்வார்கள் இல்லையா? இவனை அனுப்பினால் வேறு வரிசையில் போய் நிற்பான்” என்றார்.

கிருஷ்ணன் “நாளை பாஞ்சாலியின் வருகை அரசுமுறைக் கொண்டாட்டம் என அரசர் ஆணையிடுகிறார்” என்றான். “ஆம், அரசுமுறைக் கொண்டாட்டம். ஒரு நாட்டின் சக்கரவர்த்தினியை எப்படி வரவேற்போமோ அப்படி. நான் அரண்மனை முற்றத்திற்கே சென்று வரவேற்க விரும்புகிறேன். நால்வகைப் படைகளின் தலைவர்களும் அணிநிரக்கவேண்டும். பட்டத்து யானைமேல் அவள் நகருள் வரவேண்டும்.” விதுரர் “ஆணை” என்றார். “இந்நகரத்தை தெய்வங்கள் என்றும் தங்கள் ஆடல்களமாக கொண்டிருக்கின்றன விதுரா. ஆனால் ஒருபோதும் கைவிட்டதில்லை.”

கிருஷ்ணன் “இப்போது ஒரு சூதன் இங்கு வந்தாகவேண்டும். பாடல்சூதன் அல்ல. குலமுறைப் பதிவாளன்” என்றான். விதுரர் வியப்புடன் “நான் வரும்போது அப்படிப்பட்ட ஒருவனிடம்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவன் பெயர் தீர்க்கசியாமன். முன்பு பீஷ்மருக்கும் தமையனுக்கும் ஆசிரியராக இருந்த தீர்க்கசியாமரின் பெயர்தான் இவனுக்கும்” என்றார். ”வந்துவிட்டாரா? நான் அவரை நேற்று ஹிரண்யாக்‌ஷர் ஆலயத்த்தின் முகப்பில் சந்தித்தேன். இங்கு வரச்சொன்னேன்… அவரை அழைத்துவாருங்கள்.” என்றான் கிருஷ்ணன்.திருதராஷ்டிரர் “பேரறிஞன். ஆனால் பாடினால்தான் பறவை ஒலி வருகிறது” என்றார். கிருஷ்ணன் “இனியகுரலால் வரலாற்றை பாடமுடியாது அரசே” என்றான். திருதராஷ்டிரர் மீண்டும் கைப்பிடியை ஓங்கி அறைந்து கூடமே அதிரும்படி நகைத்தார்.

”நாம் எதையோ ஒன்றை சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தோம். எதை என்றே தெரியவில்லை. சிலசமயம் இப்படி ஆகும். நான் மணங்களைப் பின் தொடர்ந்துசென்றால் வழிதவறிவிடுவேன். மணம் சுழன்று சுழன்று அடிக்கும். ஒலிகளை மட்டுமே தொடரவேண்டும் என எண்ணிக்கொள்வேன். ஆயினும் சுவையோ அச்சமோ என்னை மணத்தை தொடரச்செய்யவைத்துவிடுவதுண்டு” என்றார் திருதராஷ்டிரர். “விப்ரா, மூடா, நான் இப்போது எங்கே வழிதவறினேன், சொல்!” விப்ரர் “காட்டில் ஒரு ஓநாய்க்கு குருளைகள் பிறந்த மணம் எழுந்ததை அறிந்து சென்றுவிட்டார். புதர்களுக்குள் சிக்கி நின்றவரை நான் சென்று மீட்டேன்” என்றார்.

கையை வீசி “நானே மீண்டு வந்திருப்பேன், பெரிய சிக்கலெல்லாம் இல்லை” என்றார் திருதராஷ்டிரர். “குருளைகளுக்கே உரிய மணம். கருவறை மணம். அந்த ஓநாய் குட்டிகளை கவ்விக்கொண்டு என் முன்னால் சென்றது. ஆனால் மணம் என்னை வழிதவறச்செய்தது.” விப்ரர் “குட்டிகளை கொண்டுசெல்லும் செந்நாய் அப்படி காட்டுக்குள் வழிதவறியதுபோல சுற்றிச்சுற்றி வரும். உண்மையில் மணம் அறிந்துவரும் வேட்டைவிலங்குகளை குழப்பவே அது அப்படி செய்கிறது” என்றார். திருதராஷ்டிரர் “என்ன ஒரு மணம்! குருதியின் மணமே தூயது. கருவறைக்குருதி தெய்வங்களின் மணமேதான்…” என்று சிரித்தபடி மூக்கைச் சுளித்து அந்த மணத்தை நினைவுகூர்ந்தார்.

“அந்தக்குட்டிகளை எடுத்துவரச்சொன்னேன். என் குடிலிலேயே அவற்றை வளர்த்தேன். ஒவ்வொருநாளும் அன்னை வந்து என் கையால் உணவுண்டு குட்டிகளுக்கு அமுதூட்டிவிட்டுச் செல்லும்… அவை அன்னையுடன் காட்டுக்குள் செல்வதுவரை என்னுடன்தான் இருந்தன. இரவில் நான் துயிலும் தோல்தூளிக்கு அடியில்தான் அவை துயிலும். என்ன ஒரு பசி. நள்ளிரவில் எழுந்து கத்தத் தொடங்கிவிடும். மூத்தவனுக்கு துரிதகமனன் என்றும் இரண்டாமவனுக்கு திடவேகன் என்றும் மூன்றாமவனுக்கு திடஹஸ்தன் என்றும் பெயரிட்டேன். இன்னொன்று பெண். அவளுக்கு தீர்க்கநாசிகை என்று பெயர்.”

கதவு திறந்து சௌனகர் உள்ளே வந்து “வருக!” என்றார். தீர்க்கசியாமர் உள்ளே வந்து மூக்கைச்சுளித்து தலையைச் சுழற்றி “வணங்குகிறேன் அரசே” என்றார், “இங்கே இளைய யாதவரின் இருப்பை உணர்கிறேன்.” சௌனகர் “அனைவரும் இருக்கிறார்கள் சூதரே. பாண்டவர்கள் ஐவரும் மூன்று கௌரவரும் அவர்களின் தந்தையும். பால்ஹிக இளவரசர் பூரிசிரவஸ்ஸும் இருக்கிறார்” என்றார். தீர்க்கசியாமர் “இந்தநாள் இனியது. தூய வேதச்சொல் ஒன்றை பறவைகள் ஒலித்ததை காலையில் கேட்டேன். நலம் திகழ்க!” என்றார்.

”அதிலிருந்து தொடங்குக!” என்றார் விதுரர். தீர்க்கசியாமர் தன் யாழை விரலால் மீட்டிக்கொண்டிருந்தார். யாழ் கார்வைகொண்டு வேதநாதம் எழுப்பத்தொடங்கியது. ரிக்வேதமந்திரத்தை தீர்க்கசியாமர் பாடினார்.

“இந்தக் கற்கள் பேசுக!
பேசும் கற்களுடன் உரையாடுவோம்
வாழ்த்துங்கள் தோழர்களே!
விரையும் எடைமிக்க கற்கள் நீங்கள்
இந்திரனை வாழ்த்துங்கள்!
சோமச்சாறால் நிறையுங்கள்!”

”கற்கள்…” என்று தீர்க்கசியாமர் சொன்னார். “அப்போது மூதாதையர் கற்களை கண்டுகொண்டார்கள். அறிபடுபொருளாக நிற்பவை கற்கள். அறிவாகவும் அவை நிற்கும் விந்தைதான் என்ன? இது புராணங்கள் சொல்லும் கதை. தொல்பழங்காலம். புராணங்கள் நிகழ்ந்த காலம். அன்று தாரகாசுரன் தன் ஆயிரம் கைகளிலும் படைக்கலங்களுடன் கிழக்கே காலையில் கரிய கதிரவன் எழுந்ததுபோல தோன்றினான். மண்ணிலும் விண்ணிலும் இருள்நிறைத்தான்.”

அவனை அஞ்சின உயிர்கள். அஞ்சினர் மானுடர். அஞ்சி நடுங்கினர் தேவர்கள். அவனை வெல்லுமொரு ஆற்றல் விளையவேண்டுமென வேண்டினர். விண்ணளந்தோன் கால்களைப் பணிந்து இரந்தனர். எரியுடல் அண்ணலும் அவன் இடப்பாதியும் இணைந்து பிறக்கும் மைந்தனே தாரகனை வெல்லக்கூடும் என்றார் ஆழிவண்ணன். அவர்கள் வெள்ளிப்பனிமலை நோக்கி கைகூப்பி தவமிருந்தனர்.

அவர்களின் தவத்தால் விரிசடையன் உள்ளத்தில் காமம் எழுந்தது. அன்னை அதை கதிர்பட்டு கனலாகும் இமயமலைமுடி என ஏற்றுப் பொலிந்தாள். அவர்களின் லீலையில் விண்ணகம் நடுங்கியது. மண்ணகம் அதிர்ந்தது. ததும்பி கரைமீறின கடல்கள். இடிந்து சரிந்தன மலைமுடிகள். நதிகள் திசைமாறின. விண்ணில் எழுந்த இடியோசை முடிவிலியின் கரிய சுவரில் முட்டி அதிர்ந்தது.

அவன் விந்து அனலில் விழுந்தது. வெம்மையில் அது உருகி செறிந்த அனலாகியது. அனலோன் அதை அணைக்க கங்கையில் விட்டான். கங்கையில் ஆயிரம் யுகம் அது குளிர்ந்து குளிர்ந்து அணைந்தது. அதன் மஞ்சள் அனல்வடிவிலிருந்து பொன் உருவாகியது. அதன் வெண்கனல் வடிவம் வெள்ளியாகியது. அதன் செங்கனல் வடிவம் செம்பாகியது. அது குளிர்ந்து எரிந்தணைந்த கருங்கனல் வடிவம் இரும்பாகியது.

நால்வகை உலோகங்களும் உருகி உருமாறி படைக்கலங்களாயின. அன்னையும் தந்தையும் முயங்கி உருவான இளையோன் சுப்ரமணியனின் படைகளின் கைகளில் அவை அமைந்தன. விண்ணும் மண்ணும் நிறைத்து நிகழ்ந்தணைந்த பெரும்போரில் தாரகன் குருதி குடித்து அவை அமைந்தன.

தாரகனின் நெஞ்சின் குருதியை உண்டு தங்கம் குளிர்ந்தது. அவன் மூச்சின் குருதியை உண்டு வெள்ளி அணைந்தது. அவன் விழைவின் குருதியை உண்டு செம்பு அடங்கியது. ஆன்றோரே, அவன் வஞ்சத்தின் குருதியை உண்ணப்பெற்றது இரும்பு. அது அணையவேயில்லை.

ஆயிரம் பல்லாயிரம் யுகங்கள். யுகம்திரண்ட மகாயுகங்கள். காலமெனும் அழியாப்பெரும்பெருக்கு. அணையவில்லை இரும்பு. வஞ்சமுண்டு வஞ்சமுண்டு அது நான்குமடங்குக் கடினமாகியது. மண்ணுக்குள் ஊறி கருந்திரவமென தேங்கியது. இம்மண்ணை உண்ணும் வேர்களின் ஆவலுக்கு அடியில் மண்ணிலூறும் நீரின் கருணைக்கு அடியில் மண்ணிலுறங்கும் செந்தழலுடன் கலந்து உருகிப்பிழம்பாகியிருக்கிறது இரும்பு.

ஆயிரம்கோடி மகாயுகம் தவம்செய்த இரும்பு விண்வடிவான பரம்பொருளிடம் கேட்டது. நான் கரந்திருக்கும் ஆற்றலை என்ன செய்வது? என்னுள் ஊறும் பெருவஞ்சத்தை நான் எப்படி ஆற்றுவது? புன்னகைத்து பிரம்மம் சொன்னது. பொன்னெழுந்த கிருதயுகம் மறைந்தது. வெள்ளியின் திரேதாயுகம் மறைந்தது. செம்பின் யுகமான துவாபரம் மறையட்டும். கருமையுகம் எழும். கலியுகம் எழும். நீயும் எழுக!

”பேழைக்குள் நாகமென சுருண்டு அங்கே கிடந்தது இரும்பு. கண்ணொளிர்ந்த இரும்பு. நச்சுப்பல் கூர்ந்த இரும்பு. செந்நா அனல்பறக்கும் இரும்பு. அதுவாழ்க!” தீர்க்கசியாமர் பாடி முடித்தார். சற்று நேரம் அனைவரும் அமைதியாக இருந்தனர். விதுரர் “நன்று சூதரே. உங்கள் பரிசிலை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

திருதராஷ்டிரர் எழுந்து சௌனகர் நீட்டிய தாலத்திலிருந்து பொற்கிழியை எடுத்து தீர்க்கசியாமருக்கு அளித்தார். அவர் தலைவணங்கி அதைப்பெற்றுக்கொண்டு புன்னகைத்து “இனியநாள். வேதமெழுந்த நாள்” என்றார். “ஆம்” என்ற விதுரர் விழிகாட்டி அவரை கொண்டுசெல்லும்படி ஆணையிட்டார். சௌனகர் தீர்க்கசியாமரின் தோளைத் தொட்டு அழைத்துச்சென்றார்.

அவர் சென்றதும் அங்கிருந்த அனைவரும் மெல்ல உடல் நெகிழ்ந்தனர். அறைக்குள் இருந்து நிழல் ஒன்று விலகியதுபோலிருந்தது. விதுரர் “அறிஞர். ஆனால் இடம்பொருள் அறியாதவர். ஆகவேதான் அவரை அரண்மனைக்கு பெரும்பாலும் அழைப்பதில்லை” என்றார். திருதராஷ்டிரர் “அவனது முன்னோடி தீர்க்கசியாமர் இங்கிதமே உருவானவர், மேதை” என்றார். “இவரும் மேதைதான் அரசே, மேதைமை என்பது கனிவுடையதாக இருக்கவேண்டுமென்பதில்லை” என்றார் விதுரர்.

“அனைத்து ஒருக்கங்களும் தொடங்கட்டும்” என்றார் திருதராஷ்டிரர். “இளைய பாண்டவனே, மாலை என்னுடன் தோள்பொருதுகிறாயா?” பீமன் ”ஆணை, தாங்கள் முதல்முறையாக தோற்கும் நாளாகக் கூட இருக்கலாம்” என்றான். “நானா? என்னை வெல்லவேண்டுமென்றால் ஒரேவழிதான். விழிமூடி என்னுடன் பொருதவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர் சிரித்தபடி. “பாறைகளுடன் மோதி பயிற்சி எடுக்கவேண்டியதுதான்” என்று பீமன் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“நாங்கள் விடைகொள்கிறோம் தந்தையே. ஓய்வெடுங்கள்” என்றான் யுதிஷ்டிரன். திருதராஷ்டிரர் “ஆம், மாலையில் அவைக்கூட்டம் உள்ளதல்லவா?” என்றார். கிருஷ்ணன் “அதற்குமுன் பாண்டவர்கள் காந்தார அன்னையையும் சந்திக்கவேண்டும்” என்றான். “அவள் தன் மைந்தர்மகளிரை எண்ணிப்பார்த்துக்கொண்டே இருக்கிறாள். எப்போதும் ஒரு எண்ணிக்கை குறைகிறது அல்லது கூடுகிறது” என்றார் திருதராஷ்டிரர். சிரித்தபடி யுதிஷ்டிரன் அவர் கால்களைத் தொட “வெற்றியும் புகழும் அமைக!” என வாழ்த்தினார். பாண்டவர்கள் அவரை வணங்கி வெளியே சென்றனர்.

கிருஷ்ணன் அவரை அணுகி வணங்க “அனைத்தும் உன் ஆடல் என அறிவேன் யாதவா” என்றார். “ஆம். அது நன்றாக முடிந்தது” என்றான் கிருஷ்ணன். “அவ்வாறே முடியும். ஏனென்றால் என் குருதி” என்றார் திருதராஷ்டிரர். அவன் பூரிசிரவஸ்ஸை நோக்கிவிட்டு வெளியே சென்றான். சௌனகர் அவர்களுடன் சென்றார். துச்சலன் துச்சாதனனைப் பிடித்து எழச்செய்தான். அவன் அப்போதும் கண்களில் நீர் வழியத்தான் தெரிந்தான். திருதராஷ்டிரர் கைகாட்ட விப்ரர் அவரை தூக்கினார். எழுந்து நின்று இடையாடையை சீரமைத்தபடி பெருமூச்சுவிட்டார்.

“வணங்குகிறேன் அரசே” என பூரிசிரவஸ் அவரை பணிந்தான். “நலம் திகழ்க!” என்றபடி திரும்பி ஒருகணம் தயங்கி பின் “எங்கே மூத்தவன்?” என்றார். “இங்குள்ளேன் தந்தையே” என்றான் துரியோதனன். அவர் கைநீட்டி அவன் தோளை தொட்டார். அவன் தலைகுனிந்து உதடுகளை இறுக்கிக்கொண்டான். இன்னொரு கை நீண்டது. பூரிசிரவஸ் துச்சாதனனை நோக்கி கண்காட்டினான். அவன் உளஎழுச்சியால் நடுங்கும் உடலுடன் அருகே வந்தான். அவன் தோளைத் தொட்டபின் இருவரையும் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். இருவரும் அழத்தொடங்கினர்.

பூரிசிரவஸ் விழிகளை விலக்கி சாளரத்தை நோக்கினான். மெல்லிய அழுகையொலி கேட்டுக்கொண்டிருந்தது. திருதராஷ்டிரர் தொண்டையை கனைத்தார். சீறுவது போல மூக்குறிஞ்சினார். அவரது தோளுயரமே இருந்தனர் இருவரும். அவர் அவர்களின் தலையை முகர்ந்தார். மெல்ல “நெடிது வாழ்க!” என்றபின் கைகளை எடுத்துக்கொண்டார். “விப்ரா” என்றார். விப்ரர் அவர் கையை பற்றியதும் வழக்கத்திற்கு மாறான விரைவுடன் உள்ளறை நோக்கி நடந்து சென்றார்.

விதுரர் “செல்வோம்” என்றார். துச்சலன் வந்து துச்சாதனனை தாங்கிக்கொண்டான். அவன் துச்சலனின் தோள்களில் தலைசாய்த்து விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தான். துரியோதனன் பூரிசிரவஸ்ஸின் தோளில் கைவைத்து “நன்று இளையோனே. நீ செய்தது மிக நன்று” என்றான். “நான் ஒன்றும் செய்யவில்லை இளவரசே” என்றான். “நான் கர்ணனை பார்க்கவேண்டும். இவையனைத்தையும் அவனிடம் சொல்லவேண்டும்” என்றான் துரியோதனன்.“இன்றிரவு நான் அவனுடன் மட்டுமே இருக்கமுடியும்..”

முந்தைய கட்டுரைஅறிவியலின் மொழியும் கலையின் மொழியும்
அடுத்த கட்டுரை‘ஜெகே’- கடிதங்கள்