ஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்-கிரிதரன் ராஜகோபாலன்

2

ஜெயகாந்தனின் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நாவலைப் படிக்கத் தொடங்குமுன் முற்போக்கு எண்ணங்களில் வலுவாக ஊன்றிய படைப்பு எனும் எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. குறிப்பாக, சமூக முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக அமையும் எண்ணங்களை, தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களைக் கொண்டு தகர்க்கும் கதைப்போக்கு கொண்டிருக்கும் என நினைத்தேன்.

முதல் முறை இந்த நாவலைப் படித்த சமயத்தில் ஜெயகாந்தனின் சிறுகதைகளை மட்டுமே படித்திருந்தேன். சுந்தர ராமசாமி, மெளனி போன்றோரின் குறிப்பமைதி மிக்கக் கதைகளில் ஆர்வம் அதிகம் இருந்த சமயம். மரபின் பலவித வர்ணப்பாடுகளுக்கு இடையே இருந்த உறவைச் சித்தரிக்கும் தி ஜானகிராமன் கதைகளின் வாசம் பிடித்திருந்தது. ‘அக்கினிபிரவேசம்’, ‘பிரம்மோபதேசம்’, ‘ரிஷிமூலம்’ போன்ற கதைகள் கவர்ந்திருந்தாலும் ஜெயகாந்தனை பாதித்த விஷயங்கள் மீது பிடி கிட்டாமலேயே இருந்தது. அசோகமித்திரனின் புனைவு உலகமும் கதைவெளியின் விஸ்தாரத்தினால் ஒரு சட்டகத்துக்குள் அடங்காததாக இருந்தது. ஜெயகாந்தனின் சிறுகதைகளுக்கும் இது பொருந்தும்.

வாசனையைக் கொண்டு பூவை அறிவதுபோல நம்மை நேரடியாக பாதிக்கும் ஒன்றைக் கொண்டு மட்டுமே எழுத்தாளனை நாம் புரிந்துகொள்கிறோம். எழுத்தாளனின் தேடல், வாசகனை நேரடியாகச் சந்திக்கும்போது அவனது புனைவுலகை முழுமையாக அறிந்துகொள்ளும் வாசல் திறக்கிறது. அதுவரை வானைத்துழாவும் வேரின் கைகள் போல நாமும் மீண்டும் மீண்டும் படைப்புகளை நெருங்குகிறோம். அதுவரை எழுத்தாளனின் புனைவுலகு நமக்கு அந்நியமானதுதான்.

திறப்பு நடந்ததும் முழுமையாகப் புரிந்ததுபோல பாவனை செய்கிறோம். பலவித சொற்களில் சொல்லிவைத்தாலும் அந்த புரிதலை பிறருக்கு முழுமையாகக் கடத்திவிடமுடியாது. புனைவு காட்டும் உலகை விவரிக்கலாம், கதையைச் சொல்லலாம், கதாபாத்திர உணர்வுகளை வர்ணிக்கலாம், கதையின் கருத்தை விவாதிக்கலாம், புனைவின் அழகியலையும் அதன் நுண்மையையும் அடையாளம் காணலாம் – இவை எதுவும் எழுத்தை முழுவதுமாக அறிந்ததாக ஆகாது.

ஓரளவு எழுத்தாளனின் உலகத்தை நாம் புரிந்துகொண்டுவிட்டோம், அவனது தேடலின் பாதையை தொடர்ந்து வருகிறோம் என்று எண்ண வைக்க அவனது கதாபாத்திரங்கள் ஒரு முக்கியமான அளவுகோலாகும். என்னைப் பொருத்தவரை கருத்துகள், புனைவு உத்திகள் எல்லாமே காலாவதியாகக்கூடும்; ஆனால் புனைவால் கட்டி எழுப்பப்பட்ட பாத்திரங்களோடு நமக்கு இருக்கும் உறவு மாறாமல் இருக்கும். நமது கற்பனையில் எழுப்பப்பட்ட கதாபாத்திரமானது எழுத்தாளனின் அக உலகத்தின் குறியீடாக எஞ்சி நிற்கும். அவையே எழுத்தாளனின் கருத்து மற்றும் எழுத்து உலகின் சாரமாக அமைந்திருக்கும்.

ஜெயகாந்தன் மறைந்துவிட்ட இந்த நேரத்தில் அவர் விட்டுச் சென்ற கதாபாத்திரங்களை நம் நினைவில் மீட்டுப்பார்ப்பது அவரது வாழ்க்கையின் சாரத்தையே நம்முன் நிகழ்த்திப் பார்ப்பதுக்கு சமமானது.

ஜெயகாந்தன் உருவாக்கிய பல தனித்துவமான கதாபாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ஹென்றி. ஒருவீடு ஒருமனிதன் ஒரு உலகம் நாவலின் பிரதான பாத்திரம்.

வேடிக்கை என்னவென்றால், இந்த நாவலில் பிரதான பாத்திரமாக வரும் ஹென்றி பொதுவாகப் புனைவில் வரும் கதாபாத்திரங்களுக்கென எழுதிவைக்கப்பட்ட எந்த விதிக்குள்ளும் சிக்கமாட்டான்.

  1. பிரதான பாத்திரங்களின் உணர்வு மாற்றங்கள் புனைவுக்கு மிகவும் முக்கியமான முன்நகர்த்தி. ஹென்றிக்கு தனிப்பட்ட வளர்ச்சியோ வீழ்ச்சியோ கதையில் இல்லை.
  1. பிரதான பாத்திரங்களின் தர்க்கபூர்வமான நிலை ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்போதுதான் புனைவு நம்பகத்தன்மையை அடைகிறது. வாசகனுடன் பிரதான பாத்திரம் ஒன்றுவதும் பொருந்திப்பார்ப்பதும் இதனால் சாத்தியமாகிறது. ஹென்றி நம்பமுடியாத அளவுக்கு சமநிலை கொண்ட பாத்திரம்.

ஆனாலும் ஒரு முறை இந்த நாவலைப் படித்த எந்த வாசகனும் ஹென்றியை மறக்க முடியாது. மிக மிகத் தனித்தன்மை கொண்டவன் ஹென்றி. அவன் ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசுகிறான். அவனது எண்ணங்களும் நடவடிக்கைகளும் நம்மைப் போன்ற ஒருவனோடு ஒப்பிடத்தக்கவை அல்ல. முன்மாதிரிகளே இல்லாதவன் அவன்.

*

1950களில் நடக்கும் ஒரு கிராமத்துக் கதையாக ஒருமனிதன் ஒருவீடு ஒரு உலகம் நாவல் தொடங்குகிறது. ‘தமிழகத்தின் வடபகுதிக் கிராமம்’ எனக் குறிப்பிடுவதோடு மட்டுமல்லாது எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியின் வட்டார வழக்கும் இந்த நாவலில் கையாளப்படுவதில்லை. ஊரைச் சுற்றி ஒரு ஆறு ஓடுகிறது என்பதைத் தவிர கிராமத்து சூழல் மிக விரிவாக வெளிப்படுவதில்லை. கிராமிய வாழ்க்கை என்பதை மக்களின் மனோபாவங்கள், எதிர்பார்ப்புகள் கொண்டே உணர்த்துகிறார் ஜெயகாந்தன்.

அன்றைய காலத்தில் முக்கியமாக இருந்த இரு விசைகளைப் பற்றிப் பேசும் படைப்பாக இது அமைந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து பதினைந்து வருடங்கள் கூட ஆகாத சமயம். சுதந்திர நாட்டின் பெரும் கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கும் தருணம். சுதந்திர இந்தியாவின் இலட்சியங்களும் கொள்கைகளும் நடைமுறைபடுத்தப்படும் காலம். நாகரிகம் என அடையாளம் காட்டப்பட்டு நடைமுறைக்கு வராத விழுமியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாடு முழுவதும் அமலாக்கம் பெறுகின்றன. ரங்கூன் போர் முடிந்து நாட்டுக்குத் திரும்புகிற மக்கள் பலர்; வளர்ச்சி எனச் சுட்டப்பட்ட மின்சாரம், ரயில் போக்குவரத்து, தொழில் வளர்ச்சிகள் என நாடு முழுவதும் நகரமயமாக்கம் செய்யப்படும் உத்வேகம் நிரம்பிய நாட்கள். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் என்பதிலிருந்து அணைகளும் அறிவியல் மேலை நாகரிகமும் நமது கண்கள் என்றாகப் புகுந்த நவீன மாற்றங்கள் ஒரு பக்கம். அறிவிலைக் கொண்டு கிராம மக்களை நவீனமாகவும் பண்பட்டவர்களாகவும் மாற்றிவிட முடியும் என கனவுகளை அறுவடை செய்த கருத்துகள் செயல்வேகம் பிடிக்கத்தொடங்கின என்பது மறுபக்கம்.

கிராமங்கள் நகரமானால் வளர்ச்சி பெருகும் எனும் எதிர்பார்ப்பால் சொந்த கிராமங்களின் மீது அசூயை கொண்ட, வளரமுடியாமல் தடுக்கும் சாதி சமய வேறுபாடுகளை வெறுக்கும் மனிதராக கிருஷ்ணராஜபுரம் எனும் கிராமத்தில் ஆசிரியராக வேலை பார்க்கும் தேவராஜன் ஒரு பக்கம். முன்னேற்றத்தின் வழிகாட்டியாக இருக்கும் பெங்களூரில் வளர்ந்துவரும் ஹென்றி தனது பப்பாவின் மறைவால் சொந்த மண் தேடி கிருஷ்ணராஜபுரத்துக்கு வருவது மற்றொரு புறம். இந்த இருவரைச் சுற்றி அமைந்திருக்கும் முரண்பட்ட பார்வை நாவலில் அடித்தளமாக அமைந்துள்ளது.

தனது வளர்ப்புத் தந்தையின் சொந்த ஊரான கிருஷ்ணராஜபுரம் கிராமத்துக்கு வரும் ஹென்றி நம் சமூகம் கட்டமைத்திருக்கும் பிம்பத்தை விட மிக தனித்துவமானவன். நகரத்தில் வாழ்ந்ததால் உருவான நவீன மனம் என்பதாக முதலில் நினைக்கத் தோன்றினாலும், ஹென்றி தனித்துவமானவன். அவன் கிராம எளிமையை புறக்கணிப்பது இல்லை. அம்மக்களின் எதிர்பார்ப்புகளையும், கசப்புகளையும், மன விசாலத்தையும் சமநிலையோடு ஏற்றுக்கொள்கிறான். வளர்ந்த சூழலில் அவன் மீது ஏற்றப்பட்ட பிம்பங்களை அவன் சுமந்துத் திரிவதில்லை. தனது பார்வை மட்டுமே உண்மை, சொந்த கருத்து மட்டுமே சரி எனும் கருத்துத் திணிப்பை அவன் யார் மீதும் திணிப்பதில்லை. ஏன், தன் மீது கூட அவன் ஒரு எந்த கறார்தன்மையையும் ஏற்றிக்கொள்வதில்லை.

நதி நீரில் அடித்துச் செல்லப்படும் சுள்ளிகள் போல சூழல் இயல்பாக தன் மீது படிவதை உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் அவனால் பார்க்க முடிகிறது. மின்சாரம் வேண்டுமா எனும்போது, நான் மட்டும்தானே இந்த வீட்டில், எண்ணெய் விளக்கே போதும் என்கிறான். எவ்விதமான தர்க்கமும் செயல்படாத மனம் என உடனடியாக தீர்ப்பு எழுதமுடியாதபடிக்கு தனிமனித அடையாளம் எனும் தீர்க்கமான தர்க்கத்தின் விதிகளைக்கொண்டு செயல்படுகிறான். மனிதன் என்பவன் சமூகத்தின் விளைச்சல் எனும் கொள்கையை மாற்றியமைத்து அவன் தனிமனிதன், சுயமான எண்ணங்கள் கொண்டவன் எனும் கருதுகோளைக்கொண்டு படைக்கப்பட்டவன் ஹென்றி.

கிருஷ்ணராஜபுரத்து மனிதர்களை அவன் ஏற்கனவே சந்தித்திருக்கிறான். அவனது பப்பா கூறிய கதைகளில் அந்த மக்களும் அவர்களது பழக்க வழக்கங்களும் நிறைந்து இருக்கின்றன. அதனால் கிராமத்தில் தேவராஜன் வீட்டு மாடியில் தங்கி சுற்றிப்பார்த்து மனிதர்களுடன் பழகத்தொடங்கியதும் அவன் எவ்விதமான வித்தியாசத்தையும் உணரவில்லை. மேலும், மலை உச்சியில் கவிழும் மேகங்கள் போல மிக இயல்பாக அவன் அந்த சிறு சமூகத்தில் ஒரு அங்கமாகிறான். இலட்சியவாதப் படைப்பு எனத் தோன்றும் அவனிடம் குவிந்திருக்கும் கூர்மையான தனிநபர் நோக்கு அவனை சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தியிருக்க வேண்டும். இலட்சியத்துடன் தனிமனிதம் சேரும் இடத்திலெல்லாம் இந்த விலகல் சாத்தியமாகியுள்ளது. ஊற்றிலிருந்து பீறிப்பாயும் நீரை மீண்டும் அடைக்க இயலுமா?

தலைப்பிலேயே இதற்கான காரணத்தை நிறுவிவிடுகிறார் ஜெயகாந்தன். ஆம், ஹென்றி இன்னமும் அந்நியன் தான். தனிமனித விழுமியங்களை பீடத்தில் ஏற்றி வைக்கும் இலட்சியவாதி. ஆனால் கனிவாலும், பப்பாவினோடு வாழ்ந்ததில் வாழ்வின் உன்னதங்களை மட்டுமே அடைந்த நிறைவாலும் அவன் சமூகத்தோடு இயைந்து,  அரவணைத்துச் செல்லும் குணத்தை அடைகிறான். ஹென்றியின் பூர்விக வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடும் துரைகண்ணுவோடு பஞ்சாயத்தில் நடக்கும் உச்சகட்ட காட்சிகளே இதை நிறுவுகின்றன. அசாத்தியமான விடுதலை உணர்வும், மனிதர்களின் கீழ்மை மீது அளவு கடந்த கனிவுப்பார்வையும் உள்ளவனால் மட்டுமே தனிமனித அகங்காரங்களை மீறிய பெருவல்லமைகளை நிகழ்த்திக்காட்ட முடியும். அதன் மூலம் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் மாற்றிவிட முடியும். தமிழிலக்கியத்தில் இதைப்போன்று மனிதத்துவப்பார்வை கொண்ட படைப்புகள் மிகக்குறைவு. சதா கனவுகளின் எட்டமுடியாத உயரங்களைக் கட்டி எழுப்பும் லட்சியவாதத்தையும் தனிமனித எண்ணம் மூலம் முட்டித்தாண்ட ஹென்றியால் முடிந்திருக்கிறது.

பேபி எனும் விசித்திரப் பெண்மணியைத் தன்னுடன் சேர்த்துக்கொண்ட நிகழ்வும் ஹென்றியின் தனிமனிதப்பார்வையின் அவனது மனவிசாலத்தைக் காட்டுவதோடு அது நம் மண்ணின் விளிம்புநிலை மனிதர்களான பண்டாரங்கள், சித்தர்கள், பிச்சைக்காரர்களாய் திரிபவர்களோடு இணைந்து போவதைக் காண முடியும்.

“எதையும் ஆராயாமல் சொல்ல முடியாது. ஒரு மனிதன் நிர்வாணமாகத் திரிவதை மட்டும் வைத்து அவனைப் பைத்தியம் என்று எப்படிச் சொல்வது? அவர்கள் நடத்தை உங்கள் வழக்கப்படி ‘இன்டீஸண்ட்’ என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆடைதானே நம் நாகரிகத்தின் குறைந்தபட்ச அடையாளம்?”

எனப் பேசும் ஹென்றி இக்கருத்துகளைத் தனது பப்பாவிடமிருந்து பெற்றிருக்கும் சாத்தியம் குறைவு. ஒரு கோணத்தில் சுற்றிவிடப்படும் பம்பரம் போன்ற ஒரு கருத்துத் தரப்பைத் தொடராமல் மனிதர்களின் பலவித குணம் ஒவ்வொன்றையும் அதன்படி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவனின் சிந்தனை போல இவை தோன்றுகின்றன. ஜெயகாந்தனின் பாத்திரப்படைப்பில் இந்த அம்சம் இயல்பாகவே ஹென்றி மீது கவிந்ததை எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது.

வரலாற்றுப் பிரக்ஞையோ பண்பாட்டு சூழலின் பேதங்களோ ஹென்றி அறிந்திருப்பதாக நாவலில் வருவதில்லை. அவற்றிலிருந்து துண்டிக்கப்பட்ட மனிதனாகவே அவன் வலம் வருகிறான். ஆனால், அவன் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடுகளில் இயல்பாகவே ஒரு ஒருங்கிணைக்கும் தெரிவு இருக்கிறது.

அவனால் பிரிவினைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது, இருவரிடையே எழும் உரசல்களைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவற்றின் ஊற்றுக்கு அவன் பண்பாடு/ அரசியல்/ வரலாறு/ ஜாதி/ மதம்/இனம் எனும் எவ்விதமான அடையாளக்கூறுகளையும் அவன் தேடுவதில்லை. அப்படிப்பட்ட அடையாளக்கூறுகள் இல்லாதது போலவே அவன் நடந்துகொள்கிறான். இதனாலேயே அவன் தனித்தன்மைமிக்க அந்நியன் என வாசகர்களுக்குத் தோன்றுகிறது. இது ஒருவிதத்தில் அவனது மேன்மையான குணத்துக்குக் காரணமாகவும் அமைந்துவிடுகிறது. அவன் மனிதர்களின் கீழ்மைக்கும், குழு மனோபாவத்துக்கும் எந்த அடையாளத்திலும் காரணம் தேடுவதில்லை. காரணங்களைக் கொண்டோ தர்க்கங்களைக் கொண்டோ அவன் மனம் சமாதானம் அடைவதில்லை.

கிராமத்துத் தண்டனைகளைப் பற்றி பேசும்போது, ‘கெட்டது செய்தவங்களையும் திருத்துவது மட்டுமல்ல நல்லது செய்யவைக்கும் நாகரிம் எத்தனை நல்லது’, எனச் சொல்கிறான். ஹென்றியின் மனம் ஒரு குழந்தையைப் போல சதா புதியனவற்றை சேகரித்து, அவற்றில் கசடுகளைக் கழித்து, மீதத்தை தெரிவு செய்து தொகுத்தபடி இருக்கிறது. இதனால்தான் தர்க்கமற்று இருப்பது போலத் தோன்றும் நிதானத்துக்குப் பின்னால் மிக நுண்மையாக அவனது தர்க்க மனம் இயங்கியபடி இருக்கிறது – ஒரு தானியங்கி பலவித சாத்தியங்களிலிருந்து வையானவற்றை சேகரிப்பது போல.

ஒரு பேட்டியில் ஜெயகாந்தன் ‘ஹென்றி நான்தான்’ என்கிறார். ஜெயகாந்தனின் படைப்புகளில் பரிச்சயம் உள்ளவர்கள் இதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். முற்போக்கு எழுத்தாளராகப் பரவலாக அறியப்பட்டாலும், அவரது புனைவுகளை நினைவுகொள்ளும்போது நமது பண்பாட்டின் ஆழங்களோடு தீவிரமான உரையாடலை நிகழ்த்தியவராகவே  அவரைப் பார்க்க முடிகிறது. எதையும் முற்றிலும் ஒதுக்கிவைக்கும் பார்வை இல்லாது, பலவித முரண்பாடுகளிலிருந்து எஞ்சி வருபனவற்றில் மேன்மையானவற்றுக்காக மட்டுமே முன்னின்றவர். பலவித கதாபாத்திரங்கள் வழியே அவர் நம்முடன் உரையாடிபடியே இருந்திருக்கிறார். பன்முக ஆளுமையான அவரது மேடைப்பேச்சுகளும், அரசியல் கருத்துரைகளும், அவரைப் பற்றிய கதைகளும் காலம் கடந்து நினைவில் இருப்பது போல அவரது கதாபாத்திரங்களும் நம்மை விட்டு அகலாது நிற்கும்.

விழுதுகள் குறுநாவலில் வரும் ஓங்கூர் சாமி மனித மனதின் பாவனைகளை நோக்கி உரக்கச் சிரிப்பவர். லெளகீக வாழ்வில் மனிதர்களால் எடுக்கப்படும் பல வினோத அகங்காரத் தன்னிறைவுகளைப் பார்த்து சிரிக்கும் ஓங்கூர் சாமி, நம்மில் கண்டடையப்படாத சுய எள்ளலை நோக்கி சிரிக்கிறார். பகடி காரணமாக தனது இருப்பைக்கூட காலத்தின் கட்டாயமாகப் பார்ப்பதினால் அவரால் எதையுமே சுயம்கலக்காமல் அணுக முடிகிறது. அதனாலேயே அக்கணத்தின் அபத்தம் அவரது சிரிப்பில் முழு முற்றாக வெளிப்படுகிறது. ஞானம் கனிந்து விடுபட்ட நிலையில் மட்டுமே இது சாத்தியம்.

ஹென்றியும், ஓங்கூர் சாமியும் வெவ்வேறு பெயரில் உலாவந்த ஒருவரே. ஹென்றியின் பிற்காலம் ஓங்கூர் சாமியாகக் கழிந்திருக்கும் – மானுட மனங்கள் மீது பாயும் கனிவின் முதிர்ச்சியாக. பேபி ஓடிப்போனதும் ‘இந்த வீட்டில் வாசற் கதவுகளும் தோட்டத்துக் கதவுகளும் எப்போதும் அவளுக்காகத் திறந்தே கிடக்கும்’, என நாவலை முடித்த ஜெயகாந்தனுக்கும் முன்முடிவுகளையும் பின்நினைவுகளையும் பொருட்படுத்தாத அப்பழுக்கற்ற கனிவையும் அகங்காரமற்ற ஆளுமையையும் வெளிப்படுத்தும் இவ்வரிகள் பொருந்தும்.

ஜெயகாந்தனுக்கு ஆம்னிபஸ் வாசகர்கள் சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம்.- ஜெயகாந்தன்,
ரூ. 225, மீனாட்சி புத்தக நிலையம்.
இணையத்தில் வாங்க- உடுமலை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76
அடுத்த கட்டுரைதேர்வு ஒரு கடிதம்