தேர்வு ஒரு கடிதம்

images

வணக்கம் ஜெ

இன்று எதேச்சையாக தங்களின் மேற்கண்ட பதிவை [தேர்வு ] இத்தனை வருடங்களுக்குப் பிறகு படிக்க நேர்ந்தது. என்னையும் மீறி வந்த கண்ணீரின் தடங்களோடு இதை எழுதுகிறேன்.

நானும் என் மகனோடு இதே சுழற்சியை அனுபவத்திருக்கிறேன். எனக்கு ஆகச்சிறந்த படிப்பினை அவனை வளர்த்த அனுபவம்.

இதுபோன்ற குழந்தைகளை மருத்துவ ரீதியாக பார்த்தோமானால் இதை டைசெலக்ஷியா (dyslexia) என்று சொல்வார்கள். இவர்களின் உலகம் வேறு அதை முதலில் புரிந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே அனால் இன்றையை அவலமான சூழலில் எந்த ஒரு பள்ளியும் இது போன்ற பயிற்சிகளை தங்கள் பணியாளர்களுக்கு வழங்க முனைவதில்லை. அவர்கள் ஆர்வமெல்லாம 98+ மாணவர்களை 100 ஆக ஆக்குவதில் தான் உள்ளது. இதன் இடையில் இது போன்ற குழந்தைகளைப் பற்றி கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் குறைந்த பட்சம் தாய் தந்தையருக்கு ஒழுங்காக அவனது நடத்தை விவரங்களை சொல்லக்கூட முடியாமல் அவர்களால் குத்தப்படும் முத்திரைகளுக்கு நம் குழந்தைகள் ஆளாகிவிடுகின்றனர்.

நானும் என் மகனை புரிந்து கொள்ள சில காலம் எடுத்துக் கொள்ளத்தான் செய்தேன் கடைசியில் ஒன்பதாவது வகுப்பிற்கு மேல் நீங்கள் குறிப்பிட்டது போன்ற ஒரு பள்ளியில் சேர்த்த பின்பு அவன் தன்னையும், மானுடத்தையும் அறிந்து கொண்டான்.

அவன் நம்பிக்கை வளர்ந்தது, மிகச்சிறப்பாக தேறினான. இன்று ஒரு மிகப்பெரிய பன்னாட்டு வணிக நிறுவனமொன்றில் கேம்பஸில் தேர்வாகி பணிபுரிந்த வண்ணம் மேலே படிக்கவும் செய்கிறான்.

அத்தனைக்கும் வித்து நாங்கள் அவனை புரிந்து கொண்டு இந்த பள்ளி சிக்கலில் இருந்து மீட்டெடுத்தது. ஆனால் இன்னமும் எத்தனயோ குழந்தைகள் இன்னும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய நிலையில் விமோசனம் வேண்டி காத்திருக்கின்றனர்.

என்னால் இயன்ற வரையில் பெற்றோர்களிடம் இது குறித்துப் பேசுகிறேன். என்னுடைய வட்டத்தில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களிடம் பேசுகிறேன் ஆனாலும் மிகப் பெரிய அளவில் இந்த சேதி கொண்டு செல்லப்பட வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் இதை மிகவும் ஆரம்பித்திலேயே கண்டு பிடிக்க முடியும் அதற்கு சரியான புரிதல் வேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு வேண்டும். தாரே சமீன் பர் போன்ற படங்கள் கூட இன்னமும் முழுமையாக இதன் தாக்கத்தை கொண்டு செல்லவில்லை.

உங்களால் இது குறித்து உரத்து பேசமுடியும். செய்ய முடியுமென்றால் தயவு செய்து செய்யுங்கள். இது நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் காணிக்கை.

கிருத்திகா ஸ்ரீதர்

அன்புள்ள கிருத்திகா

படிப்படியாக இந்த விஷயத்தில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சி வந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். நண்பர் பாலபாரதி போன்றவர்கள் தொடர்ச்சியாக இத்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்-கிரிதரன் ராஜகோபாலன்
அடுத்த கட்டுரையானைச்சிறை