தீபாவளி கடிதங்கள்

 அன்புள்ள ஜெயமோகன்,

தீபாவளி கட்டுரை மனதை தொடும் அளவில் இருந்தது.

சிறுவர் சிறுமியரிடம் சந்தோஷமாக இருப்பதற்கான ரகசியம் உள்ளது. நாம் அவர்களுடன் இருக்கும் நேரத்தில் உணரலாம். பல சமயம், சிறு வார்த்தைகள் கூட முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்தும். பஞ்சு மிட்டாய் அல்லது, குல்பி மணி கூட. அவர்கள் வருத்தம் கூட எளிமையனதோ என தோன்றும்.

எனது தங்கையின் சிறுமி மானசாவிற்கு (10 வயது) இரண்டாவது சனிக்கிழமை (மாதத்தில்) கூட சந்தோஷம் தான் (பள்ளியில் இரண்டு நாள் விடுமுறை). திங்கள் கிழமை காலை பள்ளி செல்ல வருத்தம். ஏதாவது நிகழ்ச்சி இருந்தால் கொஞ்சம் சந்தோஷம்.

குழந்தைகளுடன் திரைப்படம் பார்ப்பது மகிழ்ச்சியான அனுபவம். எங்கள் தந்தை கூட எங்களுடன் (நாங்கள் ஆறு சகோதரர்கள்) வாரம் இரண்டு சினிமா – ஒரே ஷோவில். இப்போது தியேட்டர் அதிகம் செல்வதில்லை – வீட்டிலேயே பார்க்கிறோம்.

சமீபத்தில், charlotte’s web என்கிற திரைப்படம் பார்த்தேன். புத்தகம் திரைப்படமாக எடுக்கப் பட்டுள்ளது. புத்தகமும் சிறந்த சிறுவர் இலக்கியம் (பெரியவர்களும் படிக்கலாம் – எங்கள் சிறுவயதில், ஓநாய் கோட்டை-க்கு கல்கியில் இவ்வாறு விளம்பரம் செய்தார்கள்). காட்சி அமைப்பும் வசனங்களும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன. கதையில் உள்ள அதிசயங்களை, கதையை விமரிசித்தால், பார்வையாளர்களின் அனுபவத்தை அது குறைத்து  விடும் என்றெண்ணி, விட்டு விடுகிறேன்.

குட்டி இளவரசன் (translation from french book) – உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். சிக்கலான கதை அமைப்பு கொண்டிருந்தாலும், வளரும் சிறுவர்களின் (13 வயதிற்கு மேல்) மனதிற்கு அருகே உள்ள நிகழ்வுகள் என தோன்றும்.

அன்புடன்
முரளி

அன்புள்ள முரளி

நலம்.

தீபாவளி இப்போதுதான் முடிந்தது. வாழ்த்துசொல்ல அ.கா.பெருமாள், வேதசகாயகுமார் வந்திருந்தார்கள். தீபாவளி பலகாரம் எதையுமே சாப்பிடக்கூடாது, சர்க்கரை வியாதி. குலாப் ஜாமூனா சாப்பிடுங்க சாப்பிடுங்க என்று ஊக்கினார். பொதுவாக சர்க்கரை வியாதிக்காரர்களில் சாப்பாடுக் கட்டுப்பாடு கொண்ட இரண்டே பேரைத்தான் நான் கண்டிருக்கிறேன். அவர்கள் இவர்கள் இருவரும்தான். நாஞ்சில்நாடன் வந்திருந்தால் ”மாத்திரயக் கண்டுபிடிச்சவன் சும்பனா? அவனுக்கும் நாம வாழ்வுகுடுக்கணுமே” என்று நாலு மைசூர்பாகு எடுத்துக் கொண்டிருப்பார்.

தீபாவளி தமிழ்நாட்டில் பௌத்த பண்டிகையாக முன்னொரு காலத்தில் கொண்டாடப்பட்டது. பின்னர் அது மறைந்தது. திருமலைநாயக்கர் காலத்தில் அவர்தான் தீபாவளியை பெரிய திருவிழாவாக ஆக்கி நிலைநாட்டியவர் என்றார் அ.கா.பெருமாள். இது முதல்மழை முடியும் மாதம். பண்டைய நாளில் நோயும் மரணமும் வரும் காலம். அதை தடுக்கும்பொருட்டு பழங்குடிகள் விளக்கேற்றி வைத்து தீயசக்திகளை அகற்றுவதை ஒரு விழாவாக கொண்டாடினார்கள். அந்த வகை விளக்கேற்றும் விழா இன்றும் மேற்குமலை பழங்குடிகளிடம் உள்ளது. அதைதான் பௌத்தர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்றார் வேதசகாயகுமார். குமாரின் கருத்தைத்தான் நான் கொற்றவையில் எடுத்து விரிவாக்கியிருக்கிறேன்.

குட்டி இளவரசன் படித்திருக்கிறேன். ஏனோ எனக்கு அதிகம் பேசப்பட்ட சில குறியீட்டு நூல்கள் அதிகம் மனதைக் கவரவில்லை. ஆலீஸ் இன் ஒண்டர்லேண்ட், குட்டி இளவரசன், ஜோனதன் லிவிங்ஸ்டன் ஸீகல் போன்றவை

சின்ன வயதிலேயே எனக்கு கொஞ்சம் கிளாசிக் தன்மை தேவைப்பட்டது. ஆலீஸ் படித்த அதே வாரம் நான் பாம்பீயின் கடைசிநாட்கள்  படித்தேன். பின்னதுதான் மனதில் நின்றது
 
ஜெயமோகன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

     வணக்கம்.  தீபாவளி வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் என நான் சேர்த்து சொல்லமாட்டேன். ஏனென்றால் அது மேலை நாட்டு வழக்கம். நீங்கள் என்றால் உங்கள் குடும்பமும் அதில் அடங்கிவிடுகிறது. சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்பது நமது பண்பாடு. அதில் கணபதியும் முருகனும் கூட அடங்குவர்.

     இந்துமதம் முழுதும் ஒரு கொண்டாட்டம் தான். இந்து மததிருவிழாக்களில் சிறியவர் பெரியவர் ஏழை பணக்காரர் என அனைவரின் மகிழ்ச்சிக்கு காரணமாய் அமைகிறது. கொண்டாடமே ஒரு வழிபாட்டு முறையாக கொண்டது நம் மதம்.   ஆண்டு முழுதும் பண்டிகைகள்.

   அஜிதனுக்கு ஒரு தனியான வேண்டுகோள். அவன் ஒரு பறவை நேசன் பட்டாசு சத்தம் பறவைகளை பயப்படுத்தும் அவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.   சத்தம் அதிகம் தரும் பட்டாசுகளை குறைத்துக்கொள்ளலாம். 

    இதற்கு முன் உங்களுக்கு கீதை உரைகளை அனுபவித்த மகிழ்வில் ஒரு கடிதம் 

அனுப்பியிருந்தேன். உங்கள் இணைய  பக்க சிக்கலில் மறைந்து போய் இருக்கலாம்.

மற்றபடி உங்கள் இணைய பக்கங்களை கருத்தூன்றி படித்துவருகிறேன்.

த.துரைவேல்

அன்புள்ள துரைவேல் அவர்களுக்கு

உங்கள் கடிதங்கள் கிடைத்தன. இணையச்சிக்கல்களால் சில கடிதங்களுக்கு பதில் விடுபட்டுவிட்டது. மன்னிக்கவும். உங்கள் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.

பொதுவாக பண்டிகைகளை தர்க்க பூர்வமாக அணுகும் போக்கு இளமையில் இருக்கும். தர்க்கபூர்வமாக அணுகினால் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் தேறாது என்று உணரும் வயதில் அது நீங்கிவிடும். பண்டிகைகளும் சடங்குகளும் சிலவகை குறியீடுகள் என்றே என் எண்ணம். அவை நம்மை நீண்டகால மரபுத்தொடருடன் இணைக்கின்றன. பண்டிகைகளை வணிகமயமாக்குவதன் மூலம் அவற்றை நாம் நிரந்தரமாக இழந்துவிடுகிறோம். அவற்றை முற்றிலும் மரபார்ந்த வகையில் கொண்டாடுவது வழியாகவே நாம் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோக முடியும் என்பது என் எண்ணம்.

அஜிதனுக்கு பறவைகள் பற்றி சொல்கிறேன். என்ன சிக்கல் என்றால் இந்த விசித்திர  வயதில் இந்த பயல்களை எப்போது பையன் எப்போது வாலிபன் எப்போது குழந்தை என்று கண்டுபிடிப்பதே கஷ்டம்

ஜெ

முந்தைய கட்டுரைதூரன்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதூரன்:மேலும் சில கடிதங்கள்