‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49

பகுதி 11 : முதற்தூது – 1

புலரிமுரசு எழுந்ததுமே காம்பில்யத்தின் அரண்மனைப் பெருமுற்றத்தில் ஏவலரும் காவலரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏவலர்கள் தோரணங்களையும் பாவட்டாக்களையும் இறுதியாகச் சீரமைத்துக்கொண்டிருக்க காவலர் முற்றத்தின் ஓரங்களில் படைக்கலங்களுடன் அணிவகுத்தனர். கருணர் பதற்றத்துடன் மூச்சிரைக்க உள்ளிருந்து ஓடிவந்து “அனைத்தும் முழுமையாக இருக்கவேண்டும். இன்னொரு முறை சரிபாருங்கள். எங்கே சுக்ரர்? ரிஷபர் வந்தாரா?” என்றார்.

அவரது அத்தனை கேள்விகளுக்கும் விடையாக “அரண்மனையிலிருந்து உங்களைத்தேடி ஏவலன் ஒருவன் வந்தான் அமைச்சரே” என்றார் ஏவலர் தலைவரான சுஃப்ரர். “என்னையா? யார்?” என்று திகைத்த கருணர் “யார் அழைத்தார்கள்?” என்றார். “இளவரசியின் அணுக்கச்சேடி மாயை தங்களைச் சந்திக்கவிழைந்தார்” என்றார் சுஃப்ரர். கருணர் விரைந்து உள்ளே ஓடியதும் அவர் திரும்பி “இவரது பதற்றத்தால்தான் இங்கே அனைத்துமே பிழையாக ஆகின்றன. சற்றுநேரம் தொல்லையில்லாமல் நமது பணியை முழுமைசெய்வோம்” என்றார்.

“ஆனால் மாயை அழைக்கவில்லையே?” என்றான் அவரது உதவியாளனாகிய தாலன். “ஆம், ஆனால் அழைத்திருக்கலாம் என்றே மாயை நினைப்பாள். நான் இதில் ஐம்பதாண்டுகால பயிற்சி உடையவன்” என்றார். “தோரணங்கள் கட்டப்பட்டிருப்பதை இன்னொருமுறை சரிபார். அனைத்து முடிச்சுகளுக்கும் இரண்டாம் முடிச்சு இருக்கவேண்டும்… தருணத்தில் ஏதேனும் ஒரு அணித்தோரணமோ பாவட்டாவோ அவிழ்ந்துவிழுமெனில் அதுவே தீக்குறியாகக் கருதப்படும். நம் தலை அடிபடும்.”

சுஃப்ரர் திரும்பி இன்னொருவனிடம் “இப்பகுதியில் குதிரை யானை அன்றி எந்த விலங்கும் வரலாகாது. அத்திரிகளும் கழுதைகளும் எழுப்பும் ஒலி தீக்குறி என்பார்கள்…” என்றபின் ”அத்துடன் பொருந்தாத் தருணத்தில் குரலெழுப்பும் தனித்திறன் கழுதைக்கு உண்டு” என்றார். “மூத்தவரே” என ஒரு ஏவலன் கூவ “நான் சொன்னேனே” என்றபின் “என்னடா?” என்றார்.

“இங்கே ஒரு பெரிய நிலவாய் இருக்கிறது… அது அகற்றப்படவேண்டுமா?” என்றான். “அதைத்தூக்கி என் தலைமேல் போடு” என்றார் சுஃப்ரர். அவன் திகைக்க “போட்டாலும் போடுவாய்… மூடா, அவர்கள் கிளம்பும்போது கால்கழுவ மஞ்சள் நீர் கரைக்கவேண்டிய நிலவாய் அது… மஞ்சள் நீருக்கு ஜலஜனிடம் சொல்லியிருந்தேன். எங்கே அவன்?” என்றார்.

ஜலஜன் அப்பால் நீருடன் வந்துகொண்டிருந்தான். “முன்னரே கொண்டுவந்து வைத்தாலென்ன மூடா?” என்றார் சுஃப்ரர். “முன்னரே வைத்தால் அதில் ஏதேனும் குப்பை விழுந்து விடும். நீரை நிரப்பிவிட்டு செம்புக்குவளைகளுடன் அருகிலேயே நிற்க நீங்கள்தான் சொன்னீர்கள்” என்றான் ஜலஜன். “எதைக்கேட்டாலும் ஏதாவது விளக்கம் சொல்லுங்கள்” என்றபின் சுஃப்ரர் “அத்தனை விளக்குகளிலும் நெய் நிறைந்திருக்கவேண்டும்… விளக்குகள் அணையக்கூடாது. தீக்குறி ஏதும் நிகழாமல் இந்த சடங்கு முடிந்தது என்றால் நேராகச் சென்று கொற்றவை ஆலயத்தில் வாள்கீறி குருதிசொட்டி வேண்டுதல் முடிப்பேன்… மூதாதையரே, நான் நேற்றுமுதல் ஒருகணமும் துயிலவில்லை” என்றார்.

விடியத் தொடங்கியது. மெல்லிய வெளிச்சத்தில் அரண்மனையின் வெண்சுவர்பரப்புகள் இளநீலம் கலந்தவை போலத் தெரிந்தன. மாடமுகடுகளில் பறவைகளின் ஒலி எழுந்தது. “கைவெளிச்சம் வந்துவிட்டது. இன்னும் வேலைகள் முடியவில்லை” என்றார் சுஃப்ரர். “என்ன வேலை?” என்றான் தாலன். “மூடா, ஏவலன் வேலை எப்போதுமே முடியாது” என்றார் சுஃப்ரர். “நானெல்லாம் அந்தக்காலத்தில் எந்த வேலையையுமே முடித்துச் செய்ததில்லை.”

சங்கொலி கேட்டது. “யார்?” என்றார் சுஃப்ரர். “பாண்டவர்கள்” என்றான் பிரபன் என்ற ஏவலன். “மூத்தவர் என எண்ணுகிறேன்.” சுஃப்ரர் “தேவையற்ற அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்… போ… அரண்மனைச் செயலகரிடம் சென்று சொல்” என்றார். பிரபன் “எதை?” என்றான். “சுஃப்ரன் செத்துவிட்டான் என்று… மூடா” என்று சுஃப்ரர் சீறினார். “அடேய், பாண்டவர்கள் வந்துவிட்டார்கள் என்று சொல்.” பிரபன் “ஆனால் அவர்கள் அனைவரும் இன்னமும் வரவில்லையே…” என்றான். சுஃப்ரர் சீற்றத்துடன் “அனைவரும் வந்தபின் போய் சொல் மூடா. இதையும் நானே உனக்குச் சொல்லவேண்டுமா? மூடர்கள் முழுமூடர்கள்” என்றார்.

அமுதகலசக்கொடியுடன் இருதேர்கள் வந்து நின்றன. முதல்தேரில் யுதிஷ்டிரனும் நகுலனும் இருந்தனர். யுதிஷ்டிரன் இறங்கியதும் சுஃப்ரர் அருகே சென்று “அஸ்தினபுரியின் இளவரசுக்கு அடியேன் வணக்கம். அரண்மனை தங்களை வரவேற்கிறது” என்று முகமன் சொன்னார். தருமன் முகத்தில் உளச்சுமை தெரிந்தது. அவரை நோக்கிய விழிகள் எதையும் நோக்கவில்லை. “யாதவர் வந்துவிட்டாரா?” என்றான். “அவர் விடியலிலேயே கிளம்பி ஆழிவண்ணன் ஆலயத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அரசரும் இளையவரும் பட்டத்து இளவரசரும் சிற்றவை மண்டபத்தில் இருக்கிறார்கள்” என்று சுஃப்ரர் சொல்ல அதை கேட்டானா என்று தெரியாத முகத்துடன் யுதிஷ்டிரன் முன்னால் சென்றான். நகுலன் தொடர்ந்தான்.

பின்னால் வந்த தேரிலிருந்து இறங்கிய அர்ஜுனனும் எதுவும் கேளாமல் முகமன்களுக்குச் செவிகொடுக்காமல் சகதேவன் தொடர உள்ளே சென்றான். அவன் முகமும் கவலை கொண்டிருந்தது. அவர்கள் உள்ளே சென்றதும் சுஃப்ரர் “சுட்ட காய் போல முகத்தை வைத்திருக்கிறார்கள். என்ன நிகழ்கிறதென்று எவருக்குத்தெரியும்?” என்றார். “இன்று இளையயாதவர் அஸ்தினபுரிக்குத் தூது செல்கிறார் அல்லவா?” என்றான் ஜலஜன். “ஆகா, மிகச்சிறப்பான கண்டுபிடிப்பு. மிக நுட்பமானது. டேய், நான் அருகே வந்தால் உன் மண்டை உடையும். வேலையைப்பார் மூடா” என்றார் சுஃப்ரர். ஜலஜன் “வேலைதான் நடக்கிறதே” என்று முணுமுணுத்தான்.

“முணுமுணுக்காதே… நான் கடும்சினம் கொண்டிருக்கிறேன்” என்று சொன்ன சுஃப்ரர் திரும்பும்போது தாலன் “மதம்கொண்ட யானை” என்றான். “எங்கே?” என்றார் சுஃப்ரர். “வடக்குக் கொட்டிலில் காரகன் நேற்றுமுதல் மதம் கொண்டிருக்கிறது என்றார்கள்” என்றான். “அப்படியா தெரியவில்லையே?” என்றார் சுஃப்ரர். ஜலஜன் சிரிப்பை அடக்க “என்னடா சிரிப்பு? அடேய், என்ன சிரிப்பு? மங்கலநாளும் அதுவுமாக என் கையால் அடிவாங்காதே“ என்றார். திரும்பி பிரபனிடம் “போய்ச்சொல்வதற்கு என்ன நீசா? உன்னிடம் சொல்லாமல் எதையும் செய்யமாட்டாயா?” என்றார்.

“இளையபாண்டவர் பீமசேனர் இன்னமும் வரவில்லை மூத்தவரே” என்றான் பிரபன். “அவர் மடைப்பள்ளியில் தின்றுகொண்டிருப்பார். தின்றுமுடித்து கிளம்பிவரும்போது இவர்கள் கிளம்பிவிட்டிருப்பார்கள். நால்வரும் வந்தால் அவர் வந்ததுபோலத்தான். நீ நேராகச் சென்று சொல், நால்வரும் வந்துவிட்டனர் என்று.” பிரபன் கிளம்பி பின் நின்று “அரண்மனைச்செயலகர் அரசருடன் இருந்தால்…” என்றான். “ஏன்? அருகே சென்று சொல்லமாட்டாயா நீ?” என்றார் சுஃப்ரர். “அருகேதான் பாண்டவர்கள் நிற்பார்கள்” என்றான் பிரபன்.

“அவர்கள் கேளாமல் சொல் மூடா” என்று சீறியபின் பிற விழிகளை பார்த்து எதோ பிழையாகச் சொல்லிவிட்டதை உணர்ந்து “எதையாவது செய்து என் தலையில் கல்லைத்தூக்கிப்போடுங்கள் போங்கள்… நான் உங்களிடம் பேசியே என் மூச்சை இழந்துவிட்டேன்” என்றவாறு அப்பால் சென்றார். அவருக்குப்பின்னால் சிரிப்புகள் எழுந்தன. அவர் திரும்பிப்பார்ப்பதை முழுமையாகத் தவிர்த்தார். என்ன பிழை என்று சிந்தித்து ஏதும் எட்டாமல் சரி ஏதோ ஒன்று என அப்படியே விட்டுவிட்டார்.

பெருந்திண்ணையில் வெற்றிலைச் செல்லம் இருந்தது. அதனருகே அமர்ந்து நறும்பூவுடன் வெற்றிலைபோட்டுக்கொண்டதும் அவரது பதற்றம் அடங்கியது. பாக்கும் சுண்ணமும் வெற்றிலையுடன் இணைந்து எழுந்த மணம் நறும்பூவுடன் கலந்து இளமயக்கை உருவாக்க சற்றே வியர்வை ஊறி காற்றில் குளிர்ந்து கைகால்களில் இனிய களைப்பு எழுந்ததும் இரு விரல்களை உதட்டில் அழுத்தி மண்கோளாம்பிக்குள் நீட்டித் துப்பி, நாவால் பாக்குத்துகளை துழாவி எடுத்து உதிர்த்துவிட்டு “அடேய் சுந்தா, இவர்கள் எந்த வழியாகச் செல்கிறார்கள்?” என்றார்.

“நீங்கள் மூத்தவர். நூற்றுவர். நீங்களறியாததையா எளியவன் சொல்லப்போகிறேன்?” என்றான் சுந்தன். “அடேய், அடேய், பணிவைச் சற்றே குறை. உன்னை உருக்கி ஊற்றிய உன் தந்தை பத்ரனின் கொம்பையே நான் பார்த்திருக்கிறேன்” என்றார் சுஃப்ரர். “சொல், எந்த வழியாகச் செல்கிறார்கள்?” சுந்தன் “கங்கைவழியாகத்தான். தசசக்கரம் சென்று அங்கிருந்து ஷீரபாத்ரம். அதன்பின் அஸ்தினபுரி…” என்றான். சுஃப்ரர் “அப்படியென்றால் படகுகளில் தேர்களையும் வண்டிகளையும் ஏற்றிக்கொள்ளவேண்டும் அல்லவா? அஸ்தினபுரி கங்கைக்கரையில் இருந்து அப்பால் அல்லவா உள்ளது?“ என்றார். தாலன் “எதற்கு? அஸ்தினபுரியில் தேர்கள் இல்லையா என்ன?” என்றான்.

“கேட்டாயா சுந்தா, இவன் அன்னையை நான் அறிவேன். அவள் முந்தானையை நாலைந்து முறை அவிழ்த்திருக்கிறேன்” என்று சொல்லி சுஃப்ரர் குலுங்கிச்சிரித்தார். “அவளைப்போன்ற முழுமூடப்பெண் மட்டுமே இவனைப்போன்ற ஒரு மைந்தனைப்பெற முடியும்.” மீண்டும் சிரித்து “அடேய், இது ஓர் அரசன் இன்னொரு அரசனை பார்க்கச்செல்லும் தூது. அரசமுறை வரவேற்பு அளிக்கப்படும். இங்கிருந்து அஸ்தினபுரியின் அரசருக்கு பொன்னும் மணியும் பட்டும் தந்தமுமாக ஏராளமான பரிசுப்பொருட்கள் கொண்டுசெல்லப்படும். அவற்றை அவர்களின் வண்டிகளிலா கொண்டு செல்ல முடியும்?” என்றார்.

“ஆனால் யாதவர் பரிசுகள் எதையும் கொண்டுவரவில்லையே” என்றான் சுந்தன். “நீயும் இவனைப்போல மூடன்தானா? அடேய், நேற்றுமாலையே மதுராபுரியில் இருந்து மூத்த யாதவர் பரிசுக்குரிய பொருட்களுடன் வந்துவிட்டார். அவை படகுகளிலேயே துறைமுகத்தில் நிற்கின்றன” என்றார் சுஃப்ரர். “அவர் பெயர் பலராமர். ராகவராமனின் பெயரை அவரது தந்தை அவருக்கிட்டிருக்கிறார். நிகரற்ற தோள்வல்லமையால் அவர் பலராமர் என அழைக்கப்படுகிறார். பால்வெண்ணிறம் கொண்டவர். அவரது கொடிக்குறி மேழி. நேராகச்சென்று துறைமுகத்தைப்பார். மேழிக்கொடியுடன் நான்கு பெரும் படகுகள் நின்றிருக்கும். யமுனை வழியாக வந்தவை அவை.”

இன்னொரு நறும்பூவை எடுத்து வாயிலிட்டு இன்னொன்றை எடுத்தபடி “இளவரசியின் மணத்தன்னேற்புக்கு அவரும்தான் வந்திருந்தார். அவர் ஒரு முறை மூச்சுவிட்ட விசையிலேயே சல்லியரும் பீமசேனரும் இருபக்கமும் பறந்து சென்று விழுந்துவிட்டனர். என்ன ஒரு பெருங்காட்சி அது. கனவென நினைத்தேன்” என்றார் சுஃப்ரர். சுந்தன் சினத்துடன் “நீங்கள் பார்த்தீர்களா?” என்றான். சுட்டுவிரலில் நறும்பூ மொட்டுடன் ”பார்க்காமலா சொல்கிறேன்? நான் என்ன பொய் சொல்கிறேன் என்றா சொல்கிறாய்?” என்று சுஃப்ரர் கேட்டார். சுந்தன் “அப்படிச்சொல்லவில்லை. ஆனால் மூச்சுக்காற்று என்றால்…” என்றான்.

“அடேய் மூடா, கதாயுதப்போரில் மகிமா என்னும் வித்தை உண்டு தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத்தெரிந்துகொள். மகிமா என்றால் உடலை பேருருவம் கொள்ளச்செய்தல். வெளிவிடும் மூச்சை உள்ளே நிறுத்தி உடலின் அணுகோசங்களை எல்லாம் துருத்தி போல உப்பவைப்பார்கள். அப்படியே உடல் பெருக்கத் தொடங்கி யானைபோல ஆகிவிடும். தலை மேலெழுந்து சென்று கூரையை முட்டும். அந்தக்காற்றை அப்படியே உமிழ்ந்தால் சுவர்கள் உடைந்துவிடும்… தெரியுமா?” தாலன் “இது நம்பும்படி இருக்கிறது” என்றான். சுந்தன் “மொத்தக்காற்றும் வெளியேறினால் மீண்டும் பழையபடி சிறிதாக ஆகிவிடுவார்களா?” என்றான். “இல்லை” என்று இயல்பாகச் சொன்ன சுஃப்ரர் இன்னொரு நறும்பூவை எடுத்தார்.

தாலன் ஏதோ சொல்ல இன்னொரு ஏவலனாகிய கலுஷன் மூங்கில் கிழியும் ஒலியில் சிரித்தான். “என்னடா அங்கே சிரிப்பு?” என்றார் சுஃப்ரர். “ஒன்றுமில்லை மூத்தவரே” என்றான் கலுஷன். “என்னடா?” கலுஷன் சிரிப்பை விழுங்கி “காற்றை மூச்சாக மட்டும்தான் வெளிவிட முடியுமா என்கிறான்” என்றான். “எப்படி வேண்டுமானாலும் வெளிவிடலாம். மகிமா என்றால் அப்படிப்பட்ட கலை. பன்னிரு வருடம் தவமியற்றிக் கற்கவேண்டியது” என்றார் சுஃப்ரர். ”இளைய பாண்டவர் பீமசேனர் உணவுண்ணும்போது மகிமா முறைப்படி பேருருவம் கொள்கிறார் மூத்தவரே” என்றான் தாலன். “இருக்கும்… இவரும் கதைப்போர் கற்றவர்தானே?” என்றார் சுஃப்ரர்.

நீள்சதுர வெயில்பரப்பு ஒன்று இளஞ்செந்நிறத்தில் முற்றத்தில் விழுந்தது. அது ஏதோ பட்டு என சற்றே பார்வை மங்கிய சுஃப்ரர் எண்ணினார். பின்னர் ”வெயில்…” என்றபடி தலையை அசைத்தார். காவல் வீரர்களின் படைக்கலங்கள் அகல்சுடர்கள் போல வெயிலொளி சூடி நின்றன. புரவிகளின் குஞ்சிமயிர் நுனிகள் ஒளியுடன் சிலிர்த்தன.

ஜலஜன் உள்ளிருந்து வந்து “மூத்தவரே, எல்லைப்புற ஒற்றர்தலைவர் சுக்ரரை உடனே செல்லும்படி அமைச்சர் ஆணையிட்டார்” என்றான். “செல்லட்டும், சிறப்பாகச் செல்லட்டும். அவர் இங்கு இல்லை என்பதனால் எனக்கு அதில் மாற்றுச்சொல்லே இல்லை” என்றார் சுஃப்ரர். அந்த நகைச்சுவையை தானே விரும்பி சிரித்தார். “சுக்ரரைத்தானே சற்றுமுன்னர் தேடினார்” என்றான் தாலன். ”ஆம், காலைமுதலே தேடுகிறார்” என்றான் கலுஷன்

“இங்கே ஒவ்வொருவரும் இன்னொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இறுதியில் அனைவரும் அனைவரையும் கண்டடைவார்கள்” என்றான் தாலன். அந்தச் சொற்களில் ஆழ்ந்த தத்துவப் பொருளிருப்பதைப்போல அனைவருமே உணர்ந்து அவனை திகைத்து நோக்க “நான் அப்படி எண்ணினேன்” என அவன் தடுமாறினான். அதன் பின் எவரும் ஏதும் சொல்லவில்லை.

கொம்பொலி எழுந்தது. தொடர்ந்து முரசு. “பலராமர்!” என்றான் தாலன். “எப்படித்தெரியும்?” என்றான் ஜலஜன். “தோன்றியது” என்றபின் “இதே ஒலி நேற்று இரவு அவர் அரண்மனைக்குச் சென்றபோதும் கேட்டது” என்றான். “அப்படி முன்னரே தெரிந்தால் தோன்றுவதற்கென்ன நுண்ணறிவா தேவை? மூடன்” என்றபடி சுஃப்ரர் எழுந்தார்.

மேழிக்கொடி பறந்த வெள்ளிப்பூச்சுள்ள அணித்தேர் ஒரு புரவிவீரன் வில்லுடன் முன்னால் வர வந்து முற்றத்தில் ஏறியது. முரசுகள் முழங்கி அமைந்தன. அதிலிருந்து வெண்பருத்தி அரையாடையும் மேலாடையும் அணிந்து அணியேதும் இல்லாத வெண்ணிற உடலுடன் பலராமர் இறங்கினார். அவருடன் அதேபோன்ற ஆடையுடன் பீமனும் வந்தான்.

சுஃப்ரர் சென்று தலைவணங்கி “மதுராபுரியின் அரசர் பலராமரை பணிந்து வரவேற்கிறேன். தங்கள் பாதங்களால் இந்த அரண்மனை மங்கலம் கொள்கிறது” என்றார். “எப்படி?” என்று பலராமர் புருவம் தூக்கி கேட்டார். சுஃப்ரர் திகைத்து “அதாவது… தங்கள் பாதங்கள்” என்றபின் “அறியேன் அரசே. நான் அவைப்புலவரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்றார்.

உரக்க நகைத்து சுஃப்ரரின் தோளை வளைத்த பலராமர் “முதியவரே, நீரும் கிளியும் ஒன்று. சொல்வதென்ன என்று அறியாதவர்கள்” என்றார். “ஆனால் வருந்தவேண்டியதில்லை. அறிந்தபின் இதையெல்லாம் சொல்வதற்கு இது மேல்” சுஃப்ரர் புரியாமல் “ஆணை” என்றார்.

“என் இளையோன் வந்துவிட்டானா?” என்றார் பலராமர். “இன்னும் இல்லை. அவர் ஆலயத்திற்குச் சென்று…” என்று தொடங்க பலராமர் திரும்பி பீமனிடம் “இவர்கள் சொன்னார்கள் என்று சென்றிருப்பான். உண்மையில் அவன் வழிபடும் தெய்வமென ஒன்றில்லை. அவனுடைய அறிவுமரபு தன்னை வேதமுடிபு என அழைத்துக்கொள்கிறது. அவர்கள் நானே பிரம்மம் என சொல்லிக்கொண்டு ஊழ்கத்தில் அமர்பவர்கள்” என்றார்.

“ஆம், அறிவேன்” என்றான் பீமன். “அவர்கள் ஊழ்கநிறைவை எளிதில் எய்துவார்கள் என எண்ணுகிறேன். அவர்கள் தங்கள் அகச்சொல்லை சொல்லச்சொல்ல இல்லை இல்லை என ஐந்துபருவெளியும் சூழ நின்று சொல்லும். இவர்கள் பிடிவாதமாக அதையே சொல்லச்சொல்ல அவை சோர்வுற்று பொறுமையிழந்து சரி, சரி என்று சொல்லும்போது முழுவிடுதலை அடைவார்கள்.”

பலராமர் புரியாமல் சில கணங்கள் வாய் திறந்திருக்க நோக்கிவிட்டு வெடித்துச் சிரித்து “ஆம்” ஆம்” என்று கூவினார். பீமன் “என் இளையோனும் அந்த அறிவுமரபை கற்றுக்கொண்டிருக்கிறான். நான்கு மெய்ப்பொருட்கள் என்று அதை அவன் சொன்னான். அன்னமே பிரம்மம், அறிவுணர்வே பிரம்மம், அதுவே நான், நானே பிரம்மம். அதனூடாக இவையனைத்திலும் அது உறைகிறது என அறிந்தால் முழு விடுதலை. நான் முதல்வரியில் இருந்து இறுதிவரிக்கு வந்தேன்” என்றான். பலராமர் தன் கைகளை விரித்து அவனை ஓங்கி அறைந்து நகைத்தார். திரும்பி “புரிகிறதா என்ன சொல்கிறான் என்று? ஆகா!” என்றார். சுஃப்ரர் “நுண்ணிய பொருள்” என்றார்.

“உமது பெயர் என்ன?” என்றபடி பலராமர் நடந்தார். “சுஃப்ரன்” என்றார் சுஃப்ரர். “நான் இங்கே நூற்றுவர்தலைவன். ஏவலர் நூறுபேர் என் ஆணைக்கு கீழே இருக்கிறார்கள்.” பீமன் “நூற்றுவர்களுக்குக் கீழே அப்படி இருப்பதே வழக்கம்” என்றான். சுஃப்ரர் “உண்மை இளவரசே” என்றார். பலராமர் மீண்டும் வெடித்துச் சிரித்து ”உன்னிடம் பேசினால் என் வயிறு வலிக்கத் தொடங்கிவிடுகிறது” என்றபின் “சுஃப்ரரே என் இளையோன் வந்தால் உடனே அவைக்கு வந்து என்னைப்பார்க்கச் சொல்லும். நேரமாகிக்கொண்டே இருக்கிறது” என்றார். “ஆணை” என்றார் சுஃப்ரர். “நீர் இனியவர்…” என்று அவர் தோளை மீண்டும் வளைத்துவிட்டு பலராமர் உள்ளே சென்றார்.

சுஃப்ரர் ஜலஜனிடம் ”அடேய் மூடா, அவர்கள் சொன்னதென்ன என்று தெரிகிறதா?” என்றார். ஜலஜன் ”மகிமா பற்றித்தானே?” என்றான். “தாழ்வில்லை. நீயும் சற்று அறிந்திருக்கிறாய்” என்றார் சுஃப்ரர். “அவர் சொன்ன சொற்கள் ஆழம் நிறைந்தவை. அந்நான்கு வரிகளையும் அறிந்தவன் இறப்பதில்லை. அவனை படைக்கலங்களோ விலங்குகளோ இயற்கைவிசைகளோ அழிக்கமுடியாது. ஆகவே அவை மிருத்யுஞ்சன மந்திரம் என அழைக்கப்படுகின்றன.” சற்றே ஐயத்துடன் தாலன் “மிருத்யுஞ்சய மந்திரம் அல்லவா?” என்றான். “அது வேறு இது வேறு” என்றார் சுஃப்ரர்.

சுஃப்ரர் இன்னொருமுறை வெற்றிலை போடலாமா என எண்ணுவதற்குள் கருணர் உள்ளிருந்து ஓடிவந்தார். “அம்புபட்ட பன்றிபோல“ என்று தாலன் முணுமுணுத்தது கேட்டது. கருணர் “என்ன செய்கிறீர்கள்? சுக்ரர் எங்கே? மூடர்களே, இளையயாதவர் ஆலயத்தில் இருந்து திரும்பி விட்டார்” என்றார். சுஃப்ரர் ”இங்கு இனி செய்வதற்கேதுமில்லை அமைச்சரே” என்றார். “பணியாற்ற சோம்பல்கொள்பவர்கள் இங்கே நிற்கவேண்டியதில்லை” என்று சொன்னபின் கருணர் விரைந்து திரும்பிச்சென்றார்.

சினத்துடன் திரும்பிய சுஃப்ரர் பிறரிடம் “கேட்டீர்களல்லவா? அடேய், நான் சொன்னால் உங்களுக்கெல்லாம் சினம்… பணியாற்ற சோம்பல்கொள்பவர்கள் தண்டிக்கப்படுவீர்கள். சொல்லிவிட்டேன்” என்றார். “பணிமுடிந்துவிட்டதே” என்றான் ஜலஜன். “அதெல்லாம் எனக்குத்தெரியாது” என்று சொல்லி சுஃப்ரர் திரும்பினார். “அனைத்தையும் கழற்றி மீண்டும் மாட்டுகிறோம்” என்றான் தாலன். சுஃப்ரர் “தேவையில்லை” என்று சொன்னபடி முற்றத்தின் முகப்பை நோக்கி சென்றார்.

சற்றுநேரத்தில் கொம்புகளும் முரசுகளும் ஒலித்தன. கிருஷ்ணனின் கருடக்கொடி கொண்ட பொன்னிறத்தேர் ஓசையே இல்லாமல் வந்து நின்றது. அதன் சகடங்கள் பீதர்முறைப்படி மெல்லிய இரும்புவளையங்களால் ஆனவையாக இருந்தன. சகடங்களுக்குமேல் அமைக்கப்பட்டிருந்த அடுக்குவிற்கள் சகடத்தின் அசைவை விழுங்கியமையால் தேர் நீரலைகளில் அன்னம் என மிதந்து வந்தது. அது வந்தணைந்தபோதுதான் விரைவு தெரிந்தது. முற்றத்தில் நின்றபின் இரட்டைக்குதிரைகளில் வெண்ணிறமானது தும்மியது. கரியநிறப்புரவி குனிந்து பெருமூச்சு விட்டது.

தேரின் படிகளில் இறங்கி வந்த கிருஷ்ணன் சுஃப்ரரிடம் “சுஃப்ரரே, இன்னும் அரைநாழிகைக்குள் நான் கிளம்பவேண்டும். அனைத்தும் சித்தமாக இருக்கட்டும்” என்றபின் திரும்பி தாலனிடம் “தாலரே, நீர் உடனே கிளம்பி துறைமுகத்திற்குச் சென்று முதல்பெரும்படகின் தலைவன் சரிதனிடம் நான் இன்னும் ஒருநாழிகையில் படகில் இருப்பேன் என்று சொன்னதாக சொல்லும்” என்றான். தாலன் “ஆணை” என்றான்.

கிருஷ்ணன் நிலவாய் அருகே செம்புடன் நின்ற ஜலஜனை நோக்கி “ஜலஜரே, என்ன இது, அரண்மனை முற்றத்திலா நீராடுகிறீர்?” என்றபடி படிகளில் ஏறினான். “நீராடவில்லை யாதவரே. இது மஞ்சள்நீர்” என்றான் ஜலஜன் சிரித்தபடி. “மஞ்சள்நீராட நீர் என்ன பூப்படைந்த பெண்ணா? கலுஷரே, இதையெல்லாம் கேட்கமாட்டீரா?” என்று சொல்லிக்கொண்டே அவன் உள்ளே சென்றான்.

குதிரையில் விரைந்து வந்து நின்ற யாதவ வீரன் மூச்சிரைக்க “உள்ளே சென்றுவிட்டாரா?” என்றான். “ஆம், நீர் யார்?” என்றார் சுஃப்ரர். “நான் அவரது அகம்படியன்.” சுஃப்ரர் குதிரை கனைப்பது போல சிரித்து “சிறப்பான பணி” என்றார். “என்ன செய்ய? இப்படியா தெருவில் தேரை ஓட்டுவது? இரண்டுபுரவிகள் கொண்ட தேர். நான் அஞ்சி அஞ்சி வந்தேன். புரவிக்காலடியில் குழந்தை ஏதேனும் விழுந்தால் நான் கழுத்தை அறுத்துக்கொண்டு சாகவேண்டும் அல்லவா?” என அவன் இறங்கி கால்களை உதறிக்கொண்டான்.

தாலன் “அவரது குதிரைக்காலடியில் குழந்தைகள் விழாது. அவர் குதிரைகளை சவுக்கால் செலுத்துவதில்லை. உள்ளத்தால் செலுத்துகிறார்” என்றான். அரண்மனைக் கோட்டைமேல் எழுந்த காவல்மாடத்தில் பெருமுரசம் முழங்கத் தொடங்கியது. “அதற்குள் கிளம்புகிறாரா? உள்ளே சென்று உணவருந்தி ஓய்வெடுத்து செல்வார் என எண்ணினேன்” என்றபடி அகம்படியன் மீண்டும் தன் புரவியில் ஏறிக்கொண்டான்.

கருணர் உள்ளிருந்து துரத்தப்பட்டவர் போல பாய்ந்து வந்து “என்ன செய்கிறீர்கள்? இதோ கிளம்பிவிடுவார். அரசரே வந்து வழியனுப்புகிறார். சுக்ரர் எங்கே? அடேய், சுக்ரரை பார்த்தீர்களா?” என்றபடி மறுமொழி நோக்காமல் மீண்டும் உள்ளே ஓடினார். சுஃப்ரர் “எனக்கு பதற்றமாக இருக்கிறது. தீக்குறி என்பது தெய்வங்களின் ஆணை. அதைத்தடுக்க எளிய ஏவலர்களை அமைப்பதென்பது மூடத்தனம்” என்றார்.

“அரசர்கள் முழுமூடர்கள்” என்றான் தாலன். “அடேய்” என திகைத்த சுஃப்ரர் “வாயை மூடு… நீ போ, உன் ஊழ் அது. என் தலையையும் கொண்டு போய்விடாதே” என்றார். உள்ளே சங்கொலி எழுந்தது. “வருகிறார்கள்” என்றான் ஜலஜன். “நான் அந்தத் தூணுக்கு அப்பால் நின்றுகொள்கிறேன்” என்று சுஃப்ரர் விலகிச்சென்றார். தாலன் “நான் என்னை நூற்றுவன் என சொல்லிக்கொள்ளவா?” என்றான். ”எதைவேண்டுமானாலும் சொல். மூதாதையரே, என்ன செய்வதென்றே தெரியவில்லையே” என்றபடி சுஃப்ரர் தூணுக்கு அப்பால் சென்று நின்றுகொண்டார்.

கொம்பும் முழவும் சங்கும் மணியுமாக மங்கல ஓசையுடன் சூதர்குழு முதலில் வந்தது. தொடர்ந்து பாஞ்சாலத்தின் விற்கொடியுடன் ஒருவன் வந்தான். கருடக்கொடியும் மேழிக்கொடியுமாக இரு வீரர்கள் பின்னால் வந்தனர். அதன்பின் மங்கலத்தாலமேந்திய அணிப்பரத்தையர் வந்தனர். துருபதனும் சத்யஜித்தும் சித்ரகேதுவும் முன்னால் வர அவர்களுக்கிணையாக கிருஷ்ணனும் பலராமரும் வந்தனர். பின்னால் யுதிஷ்டிரன் வர அவனுக்குப்பின்னால் பாண்டவர்கள் நால்வரும் வந்தனர். துருபதனுக்கு சற்று அப்பால் தோள்களை வளைத்து கருணர் வந்தார்.

அவர்கள் முற்றத்தை அடைந்ததும் முற்றத்தைச் சூழ்ந்து நின்றிருந்த காவல்படையினர் கொம்புகளை ஊதினர். காவல்மாடங்களில் இருந்து பெருமுரசுகள் முழங்கின. வெயிலின் நீளம் குறுகி செம்மை குறைந்திருந்தது. அரண்மனைக்கு அப்பால் நின்றிருந்த வைதிகர் வேதமுழக்கமிட்டபடி வந்து கிருஷ்ணனுக்கும் பலராமருக்கும் நிறைகுடநீர் தூவி வாழ்த்தளித்தனர். அவர்கள் வணங்கி நற்சொல் பெற்று முற்றத்தில் இறங்கினர். துருபதன் அணிச்சேடி நீட்டிய தாலத்தில் இருந்து செந்நிறமான சந்தனத்தைத் தொட்டு இருவர் நெற்றியிலும் மங்கலம் இட்டு வாழ்த்தினார். சத்யஜித்தும் சித்ரகேதுவும் வாழ்த்தியபின் யுதிஷ்டிரனும் வாழ்த்தினான்.

கிருஷ்ணன் திரும்பி அர்ஜுனனை நோக்க அவன் புன்னகைசெய்தான். கிருஷ்ணன் தன் கைகளை நீட்ட அவன் அருகே வந்து அவற்றை பற்றிக்கொண்டான். இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. கிருஷ்ணன் சென்று ஜலஜன் கையில் இருந்து செம்புக்குவளையை வாங்கி மஞ்சள்நீரால் கால்களை கழுவிக்கொண்டான். பலராமரும் கழுவிக்கொண்டதும் இருவரும் சென்று தனித்தனியாக தங்கள் தேர்களில் ஏறிக்கொண்டனர். இருவரும் திரும்பி தலைவணங்க சத்யஜித்தும் சித்ரகேதுவும் மட்டும் கைதூக்கி வாழ்த்தினர். வாழ்த்தொலிகளும் கொம்போசையும் முரசொலியும் இணைந்த முழக்கம் நடுவே தேர்கள் அசைந்து எழுந்து விலகிச்சென்றன.

அவற்றின் கொடியசைவு மறைவது வரை நோக்கிவிட்டு துருபதன் திரும்பிச் சென்றார். தொடர்ந்து பிறரும் சென்றனர். அர்ஜுனன் மட்டும் மேலும் சற்று நேரம் தேர்கள் சென்ற திசையை நோக்கி நின்றுவிட்டு திரும்பிச் சென்றான். வைதிகர் மெல்லிய குரலில் பேசியபடி திரும்பிச்சென்றனர். காவல்படையினருக்கு நூற்றுவன் ஆணையிட அவர்கள் அணிவகுத்து திரும்பினர். சற்று நேரத்தில் முற்றம் ஒழிந்தது.

சுஃப்ரர் வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து “அடேய், அந்த செல்லத்தை இப்படி கொண்டுவா” என்றார். “ஒரு நிகழ்ச்சியை முழுமையாக முடிப்பதென்பது எளியதல்ல. என் பணிவாழ்க்கையில் இன்றுவரை ஒரு பிழையும் நிகழ்ந்ததில்லை” என்றார். ஜலஜன் வெற்றிலைச்செல்லத்தை அவர் அருகே வைத்தபடி “நாமறிந்த தீக்குறி ஏதும் இல்லை. நாம் அறியாதவை எங்கேனும் இருக்கலாம் அல்லவா?” என்றான். சுஃப்ரர் கையில் பாக்குடன் நிமிர்ந்து அவனை நோக்கி சிலகணங்கள் அசைவற்ற முகத்துடன் இருந்தபின் “உன் நச்சு வாயை மூடு” என்றார்.

உள்ளிருந்து மலைச்சரிவில் உருளும் பாறை என சுக்ரன் ஓடிவந்து “அமைச்சர் கருணர் இங்குள்ளாரா? காலையில் இருந்தே தேடுகிறேன்” என்றபின் மறுபக்கம் சென்றான். சுஃப்ரர் திரும்பி தாலனை நோக்கினார். அவன் ஏதேனும் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பவர் போல. தாலன் “தூது கிளம்பிச்செல்கிறது” என்றான். அதை எதிர்பாராத சுஃப்ரர் சற்றே குழம்பி, “ஆம், இளைய யாதவனை பெருந்தூதன் என்கிறார்கள்” என்றார்.

முந்தைய கட்டுரைஅழிவு!
அடுத்த கட்டுரைகடிதங்கள்