அங்காடித்தெரு, நூறாவது நாள்.

இன்று அங்காடித்தெரு நூறுநாளை தொடுகிறது. இவ்வருடத்தின் மாபெரும் வெற்றி இந்தப்படம்தான் என்று திரையுலகில் சொன்னார்கள். எளிமையான முதலீட்டில் எடுக்கப்பட்டு பற்பலமடங்கு லாபம் கண்ட படம். ஒரேசமயம் விமரிசகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெறுவதென்பதே எந்த திரைப்படைப்பாளிக்கும் கனவாக இருக்கும். அதை வசந்தபாலன் சாதித்திருக்கிறார்

188 அரங்குகளில் வெளியிடப்பட்ட அங்காடித்தெரு 30 க்கும் மேல் அரங்குகளில் நூறாவதுநாள் கொண்டாடுகிறது. பெரும்பாலான பிரதிகள் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. திருப்பூர் முதல் நாகர்கோயில் வரை பல ஊர்களில் ஐம்பது நாட்களை கடந்த பின் மீண்டும் திரையிடப்பட்டு மேலும் இருபத்தைந்து நாள் ஓடியது

பலமுறை பல ஊர்களில் திரையரங்குக்குச் சென்று இந்தப்படத்தின் மாபெரும்வெற்றியைக் கூர்ந்து கவனித்து வந்தேன். படத்துக்கு வரும் கூட்டம் சீராக இருந்துகொண்டே இருக்கிறது. இப்போது படம் பார்க்க வருபவர்கள் பலர் ஏற்கனவே பார்த்தவர்கள். நிறையெபேர் வழக்கமாக படம் பார்க்காத பெண்கள், வயதானவர்கள். அவர்களை மீண்டும் பார்க்க வைப்பது அங்காடித்தெருவின் துயரம் மிக்க காட்சிகள்தான்.

ஐம்பதுநாட்களுக்குப் பின் பார்ப்பவர்களின் ரசனை மாறியிருக்கிறது . ஆரம்பநாட்களில் திரையரங்கில் பெரிய சலனத்தை உருவாக்காத காட்சிகளில் ஒன்று கனியின் அப்பா [விக்ரமாதித்தன்] சொல்லும் வசனம். ‘குட்டிகளை தூக்கிட்டுபோய் அங்கங்கே போட்டிட்டு போற நாய் மாதிரி நான் தம்பி..நாய் சென்மம்..’ இப்போது அந்தக் காட்சி பெரிய அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. அதைப்பற்றித்தான் அதிகம்பேர் பேசினார்கள்.

ஏனென்றால் அந்த அனுபவம் பல பெற்றோர்களுக்கு இருப்பதுதான். பிள்ளைகள் கடுமையாக உழைக்க அந்த பணத்தில் வாழும் நோயாளிப் பெற்றோரின் குரல் அது. நம் சமூகத்தில் நகரங்கள் ஊதிப்பெருத்து தராசின் ஒரு தட்டு கீழே இறங்கிக்கொண்டே இருக்கிறது. கிராமங்கள் காலியாகிக்கொண்டே இருக்கின்றன. நகரங்கள் அழுகிக்கொண்டிருக்கின்றன. அந்த யதார்த்ததைச் சொன்ன படம் அங்காடித்தெரு. ‘ஊர்ல வக்கிருந்தா ஏன் இங்க வரப்போறோம்’ என்று படம் சொல்லிக்கொண்டே இருக்கிறது- குப்பையாக வீசப்பட்ட தொழிலாளியின் குரலில்.

அதேபோல அந்த தங்கை அனாதையாக வயசுக்கு வரும் காட்சி. கிட்டத்தட்ட அதே காட்சியை நான் மீண்டும் கண்டேன். சென்னையில் பாரிமுனையில் நடுத்தெருவில் வெயிலில் தெருவாழ் சிறுமிக்கு சடங்கு நடந்துகொண்டிருந்தது. அங்காடித்தெருவில் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ‘தைரியமா இருக்கணும்’ என்று அறிவுரை சொல்லும் பாட்டி, அவர்களின் தெய்வம் நெற்றியில் பயங்கரமான பொட்டுடன் உக்கிரமான அன்னையாக இருப்பது, அந்தப்பெண் அந்த கையறுநிலையில் இருந்து மீண்டு அபாரமான தைரியத்தை அடைவது என விரியும் காட்சிகள் ஒரு தனியான குறும்படம். நம் நடுத்தர வற்கத்து ரசிகர்களால் அந்த காட்சியை உள்வாங்க முடியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் திரையரங்குக்கு வரும் அடித்தள மக்களுக்கு அந்தக்காட்சி அவர்களின் வாழ்க்கையாகவே தெரிகிறது.

அங்காடித்தெருவின் கதையை ஒற்றைக்கோடாக எடுத்தால் இந்தக் காட்சிகள் தேவையே இல்லை. ஆனால் இம்மாதிரி சில கணங்களாகவே உண்மையான வாழ்க்கை சினிமாவில் வர முடியும். ஆகவேதான் அடித்தள உழைப்பு நிறைந்த திருப்பூர் சிவகாசி கரூர் போன்ற ஊர்களில் அங்காடித்தெரு தொடர்ந்து பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் பல ஊர்களில் மீண்டும் திரையரங்குக்கு வரும் இப்படம்.

சென்னையில் பல அரங்குகளில் ஓடுகிறது என்றாலும் நூறாவது நாள் விழா காஞ்சிபுரம் அரங்கு ஒன்றில் நிகழ்கிறது. சென்னையில் படம் ஓடுவது புதிதல்ல. ஆனால் காஞ்சீபுரம் போன்ற ஒரு சிறிய ஊரில் ஒரு படம் நூறுநாள் ஓடுவதென்பது அனேகமாக சாத்தியமே இல்லாத விஷயம். ஆகவே வசந்தபாலனுக்கு அதுதான் பெரும் கௌரவம் என்று பட்டிருக்கிறது .மேலும் இன்னொன்று, தயாரிப்பாளர்களுக்கு பதிலாக திரையரங்க உரிமையாளரே நடத்தும் விழா இது. வசந்தபாலன் அஞ்சலி மகேஷ் எல்லாரும் செல்கிறார்கள்.

ஆரம்பகாலத்தில் இப்படத்தின் துயரக் காட்சிகளை பலர் விமரிசித்தார்கள். நம் வாழ்க்கை இபப்டி இல்லை என இவர்களால் சொல்ல முடியவில்லை. அதை ஏன் காட்ட வேண்டும் என்றுதான் கேட்டார்கள். ஒருவருடம் வெளிவரும் படங்களில் ஒன்றோ இரண்டோதான் இப்படி இருக்கிறது. மிச்ச படங்களெல்லாம் கேளிக்கையை மட்டுமே காட்டுகின்றன. இந்த படமும் அப்படி இருக்கலாகாதா என்பவர்களிடம் என்ன பேச?

முதல் பத்துநாட்கள் படம்பார்த்தவர்கள் இருவகை. ஒருசாரார் எல்லா படங்களையும் பார்ப்பவர்கள். மானசீகமாக தங்களை படமெடுப்பவர்களாக எண்ணிக்கொள்பவர்கள். ரசிகனாக அல்லாமல் படைப்பாளியாக நின்று கருத்து சொல்ல முற்படுபவர்கள். சினிமாவழியாகவே சினிமாவை பார்ப்பவர்கள். இரண்டாம் சாரார் தனிமை காரணமாக, கேளிக்கையை மட்டும் விரும்பி, எல்லா படங்களையும் பார்ப்பவர்கள்.

ஆகவே நம்மைச்சுற்றி உள்ள வாழ்க்கையின் உண்மையான துயரம் அவர்களுக்கு ‘அழுவாச்சி’யாக ப் பட்டது. அவர்களில் சிலரின் கருத்துக்களைக் கண்டு வசந்தபாலனே கூட படம் ரொம்பவும் அழுகையாகி விட்டதா என சந்தேகம் கொண்டார். ஆனால் இன்று அந்த அப்பட்டமான கனத்த துயரம் காரணமாகவே படம் மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகிறது.

‘வாழ்க்கை துக்கமாக இருக்கிறது, சினிமாவில் துக்கம் எதற்கு’ என ஒரு குரல் கேட்கிறது. அது கலையை புரிந்துகொள்ளாதவர்களின் குரல். வாழ்க்கையில் இருக்கும் துக்கமே கலையின் துக்கம். சொந்த வாழ்க்கையின் துக்கங்களை கலை வழியாக மீண்டும் நிகழ்த்தி, கண்ணீர் விட்டு, தூய்மை கொண்டு திரும்பிச்செல்கிறார்கள் ரசிகர்கள். அதை கதார்ஸிஸ் என்றார் அரிஸ்டாட்டில்.

ஐம்பதுநாட்கள் கழிந்த பின் அங்காடித்தெரு அரங்கில் விசும்பி விசும்பி அழுபவர்களை கண்டு நானே ஆச்சரியத்துடன் அதை நினைத்துக்கொண்டேன். உண்மையில் அரிஸ்டாடில் சொன்னது எனக்கு இப்போதுதான் பூரணமாக புரிந்தது, நம்பிக்கையும் வந்தது. மானுட உணர்ச்சிகளை சந்தேகப்படும் சுந்தர ராமசாமியின் பரம்பரையில்தானே நானும் வந்தேன்.

‘இந்த ஒருத்தன் கிட்டயவது மானமா இருந்துக்கறேனே’ என்று கனி சொன்னபோது சத்தம் போட்டு அரங்கில் விசும்பிய ஒர் அம்மாளை திரும்பி மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அக்கணம் மிக வலுவாக என்ன உணர்ந்தேன் என்றால் நான் அப்படி அவளுடன் சேர்ந்து அழ முடியாது என்பதைத்தான். நான் வாசித்த அத்தனை புத்தகங்களும் சேர்ந்து எனக்கு தடையாக ஆகின்றன

http://way2online.com/?p=67742

http://www.jeyamohan.in/?p=631
http://www.jeyamohan.in/?p=624

முந்தைய கட்டுரைகாவியம்
அடுத்த கட்டுரைஇந்துவில் ஒரு சிறு பேட்டி