‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 41

பகுதி 9 : பெருவாயில்புரம் – 4

சாத்யகி மிக விரைவாகக் குளித்து உடைமாற்றிக்கொண்டு தனக்கு அளிக்கப்பட்ட அறையில் பதற்றத்துடன் காத்திருந்தான். அவனால் அமரவோ அசையாது எங்கும் நிற்கவோ முடியவில்லை. நிலையழிந்தவனாக அறைச்சதுரத்திற்குள் சுற்றிவந்தான். மூன்று பெரிய சாளரங்களுக்கு வெளியே துவாரகையின் கடல்சூழ்ந்த துறைமுகப்பு தெரிந்தது. முதலையின் முகமென கடற்பாறைகளாலான முனம்பு கடலுக்குள் நீட்டியிருக்க மூன்றுதிசைகளிலும் கடல் அலைகள் வெண்பட்டாடையின் நுனிச்சுருள்கள் போல வளைந்து அலையடித்துக்கொண்டிருந்தன. அப்பால் கடல் இளநீல நிறமாக கண்கூசும் ஒளியுடன் வானில் எழுந்திருந்தது. அதில் நூற்றுக்கணக்கான நாவாய்கள் அசைந்தன.

துறைமுகப்பின் மூன்றுபக்கங்களிலும் நாவாய்கள் கரையணைந்திருந்தன. மேற்கு நோக்கி நீண்டிருந்த கூர்முகப்பின் முன்னால் மிகப்பெரிய பீதர்கலங்கள் நின்றன. வடக்குத்திசையில் யவனர், சோனகர், காப்பிரிகளின் கலங்களும் தெற்குத்திசையில் பாரதவர்ஷத்தின் சிறிய கலங்களும் அணைந்திருந்தன. ஒவ்வொன்றிலும் தொலைவிலேயே தெரியும்படி மிகப்பெரிய கொடிகள் பறந்தன. அனைத்துக்கொடிகளும் செந்நிறமோ மஞ்சள்நிறமோ கொண்டிருந்தன. அவை பறக்கும்போது பாய்களுக்குமேல் தழல் எழுந்தாடுவதுபோல தோன்றியது.

சோனகக் கலங்களின் கொடிகளிலும் விலாவிலும் பிறைவடிவம் இருந்தது. யவனக்கலங்களில் சூரியன். அப்பால் நின்ற பீதர்கலங்களில் அவர்களின் பறக்கும் தழல்நாகம். பீதர்கலங்கள் அனைத்தும் அமரமுகப்பில் வாய்திறந்து தழல்நாக்கு பறக்க வெண்பற்களும் உருண்டவிழிகளுமாக கூருகிர் கைகளை நீட்டி நிற்கும் சிம்மமுகம் கொண்டிருந்தன. மலைக்கொடி துவண்ட மேலைப்பாண்டியர்களின் கலங்களும் மீன்கொடி பறந்த கீழைப்பாண்டியர்களின் கலங்களும் மாகாளைக்கொடி பறந்த சதகர்ணிகளின் கலங்களும் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. சிம்மக்கொடியுடன் ஏழு கலிங்கக்கலங்கள் ஒன்றுடன் ஒன்று பெரிய வடங்களால் பிணைக்கப்பட்டு ஆடின.

நீருக்குமேல் ஏழடுக்குகள் தெரிய மூன்று கொடிமரங்களில் சுருக்கி இறக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாய்களுமாக நின்ற யவனநாவாயின் கொடியில் நடுவே மானுடமுகம் அமைந்த கதிர்கள் எழும் சூரியவட்டம் வரையப்பட்டிருந்தது. அருகே நின்ற இன்னொரு யவனக் கலத்தின் கொடியில் மானுடத்தலையும் கைகளும் மானின் கால்களும் கொண்ட விலங்கின் உருவம் அலையடித்தது. அதற்கப்பால் ஓநாய்தலை கொண்ட கொடி. அதற்கப்பால் சிறகுவிரித்த செம்பருந்தின் தலைகொண்ட கொடி. இருபக்கமும் சிறிய இலைகள் கொண்ட கொத்துகளால் வளைக்கப்பட்டு நடுவே குத்துவாள் அமைந்த கொடி பறந்த பெரிய நாவாய் ஒவ்வொன்றாகப் பாய்களை விரிக்கத் தொடங்கியிருந்தது.

வாய்திறந்த சிம்மத்தலை பக்கவாட்டில் வரையப்பட்ட கொடி துவண்ட பெரிய யவன நாவாய் ஒவ்வொரு பாயாக அணைத்தபடி பிளிறிக்கொண்டு துறைமுகப்பு நோக்கி வந்தது. அதன் முகப்பில் மூன்றுகூர் கொண்ட சூலம் ஏந்தியபடி சுருள்தாடியும் குழல்அலைகளும் கொண்ட முதியதெய்வம் நின்றிருந்தது. கலம் அணுகிவரும்தோறும் அச்சிலை பேருருக்கொண்டது. துறைமுகப்பை அடைந்தபோது அதன் தலை அங்கிருந்த ஏழடுக்கு மாளிகைக்குமேல் ஓங்கி நின்றதைக்கண்டான். அருகே அசைந்தாடிய நாவாயின் முகப்பில் ஏழுதலைகொண்ட நீர்நாகத்துடன் போர்புரியும் மணிமுடியணிந்த தெய்வம் நின்றிருந்தது.

அப்பால் சோனகர் கலத்தின் முன்னால் மீனுடலும் தாடியும் முடியும் நீண்ட முகமுமாக முதியகோலம் கொண்ட கடல்தெய்வம் கையில் ஓங்கிய கோலுடன் நின்றிருந்தது. அலையெனப்பறக்கும் தலைமுடிகொண்ட நீர்மகளின் சிலை பொறிக்கப்பட்ட அமரமுகத்துடன் பக்கவாட்டில் தெரிந்த சோனகக்கலத்தினுள் சென்ற பெரிய மரப்பாலம் வழியாக சாரிசாரியாக பொதிவண்டிகள் சென்றுகொண்டிருந்தன. அங்கிருந்து ஓசையேதும் மேலே வரவில்லை. மனிதர்கள் எறும்புகள்போல வண்ணத்தலைப்பாகைகளும் மெய்ப்பைகளுமாக துறைமேடை முழுக்க பரவி அலைந்துகொண்டிருந்தனர். யானைகளேதும் கண்ணுக்குப்படவில்லை.

மூன்று சாளரங்களிலும் மாறிமாறி நோக்கியபடி அவன் நிலையழிந்து நின்றிருந்தான். ஒவ்வொரு காலடியோசைக்கும் பரபரப்புடன் வாயிலை நோக்கினான். வெளியே ஒரு காப்பிரிக் கலம் சங்கொலி எழுப்பியபோது ஓடிச்சென்று நோக்கினான். பெரியபற்களுடன் ஆமைமேல் அமர்ந்திருந்த அன்னைதெய்வம் கொண்ட கலத்தின் கொடிமரத்தின்மேல் முதல்பாய் பக்கவாட்டில் விரிந்து புடைத்தது. அத்தனை தொலைவிலிருந்து பார்த்தபோது ஓர் இமை விரிவதைப்போலத்தோன்றியது அது.

வாயிலில் ஏவலன் வந்து வணங்கி “தங்களுக்கு அழைப்பு இளவரசே” என்றான். சாத்யகி தன் கச்சையை மீண்டுமொருமுறை இறுக்கியபடி அவனுடன் இடைநாழிக்கு சென்றான். “அரசர் அவைமண்டபத்தில் இருக்கிறார்” என்றான் ஏவலன். சாத்யகியின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. என்ன கேட்கப்போகிறார் யாதவர்களின் பேரரசர்? அவனுடைய தந்தையையும் தாயையும் நலம் கேட்பார். முகமன் சொற்கள் சொல்லி அவனை வரவேற்பார்.

முகமன் சொற்களேதும் அவனுடைய சிறிய ஊரில் சொல்லப்படுவதில்லை. காம்பில்யத்தில் நிமித்திகர்கள் சொன்ன விரிவான குலமுறைகிளத்தலையும் முகமனையும் கேட்டு அவன் திகைத்திருந்தான். அவன் சொல்லவேண்டியது என்ன? தன் குலவரிசையைச் சொல்லி தலைவணங்கவேண்டுமா? அவனுக்கு அந்த வரிசையே நினைவில் இல்லை.

எது இங்கே மதிப்பின்மையாகக் கருதப்படும்? எந்தச் சொல்? எந்த அசைவு? கண்டதும் செய்யவேண்டியதென்ன என அவன் அறிவான். தாள்பணிந்து வணங்கவேண்டும். வாள்மேல் கைவைத்து என் வாழ்வும் இறப்பும் சிந்தையும் செயலும் இவ்வுலகும் அவ்வுலகும் உங்களுக்காக என்று சொல்லவேண்டும். தோளில் பதிந்திருக்கும் அவரது அச்சுக்குறியை சுட்டிக்காட்டி இதை நெஞ்சில் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாலென்ன? மிகைநாடகமாக ஆகிவிடுமா?

பெரிய வாயிலில் பீதர்களின் பறக்கும் நாகத்தின் வெண்கலச்சிலை பொறிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த சிறிய துளையில் ஏவலன் தன் வாயை அணுக்கி மெல்ல “விருஷ்ணிகுலத்து சத்யகரின் மைந்தர் யுயுதானர்” என்று சொன்னான். உள்ளிருந்து ஒரு மணியோசை வெளியே கேட்டது. சிறிய கிளி ஒன்றின் ஒலியென அது இனிமைகொண்டிருந்தது. கதவு மெல்லத் திறந்தது. ஏவலன் “நீங்கள் உள்ளே செல்லலாம் இளவரசே” என்றான். சாத்யகி உள்ளே நுழைந்ததும் அங்கே அந்தப்பெருங் கதவைத்திறக்க காவலர் எவருமில்லை என்பதைக் கண்டு ஒருகணம் திகைத்தான்.

மண்டபத்தின் மறுபக்கம் பெரிய சாளரத்தருகே நின்றிருந்த இளைய யாதவன் திரும்பி அவனை நோக்கி புன்னகைசெய்தான். முதன்முதலாக அப்புன்னகையை காம்பில்யத்தில் பார்த்தபோதே சாத்யகி மெய்மறந்திருந்தான். பேரழகுகொண்ட புன்னகை. புன்னகைக்கென்றே உருவான எழில்முகம். முட்டைவிட்டு இறங்கிய காக்கைக்குஞ்சின் அலகின் மெருகு கொண்டது அவன் நிறம். அக்கருமையில் பூத்த செம்மலர். செவ்விதழ்நடுவே எழுந்த வெண்சரம். அந்தப்புன்னகையில் இருந்து மீண்ட மறுகணமே அவன் உணர்ந்தான், எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் அதற்கு அடிமை என. அவன் கைகளை கூப்பினான். ஆனால் சொற்களேதும் எழவில்லை.

கிருஷ்ணன் அவனிடம் “நீர் காம்பில்யத்தின் போரைப்பற்றி என்ன அறிந்தீர்?” என்றான். சாத்யகி ஒருகணம் திகைத்தபின் “அதைப்பற்றி சூதர்கள் சொன்னதைத்தான் கேட்டேன். பாண்டவர்களின் சூதன் அது அஸ்தினபுரியின் இளவரசர்களின் களிப்போர் என்றே சொன்னான். ஆனால் ஆயிரம் பேருக்குமேல் இறந்திருக்கிறார்கள் என்று காம்பில்யத்திற்கு நெய்கொண்டுசெல்லும் யாதவர்களிடமிருந்து அறிந்தேன். யுதிஷ்டிரரும் அர்ஜுனரும் அஸ்வத்தாமரும் கடுமையாக புண்பட்டிருக்கிறார்கள். அது உண்மையான போர்தான்” என்றான்.

கிருஷ்ணன் தலையை அசைத்தான். “துரியோதனரும் வசுஷேணரும் திட்டமிட்டு அப்போரை நிகழ்த்தியிருக்கிறார்கள். காம்பில்யத்தை கைப்பற்றுவதை விட யுதிஷ்டிரரை கொல்லும் நோக்கமே அவர்களிடம் மிகுந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் “அக்கொலையால் அவர்களுக்கு என்ன நலன்?” என்றான். “வாரணவதத்தில் எரிமாளிகையை அமைத்தது துரியோதனர்தான் என்று யுதிஷ்டிரர் வழியாக குடிகளுக்குத்தெரியவந்தால் அவர்கள் கிளந்தெழுவார்கள். அதற்கு முன்னரே அவரைக் கொன்றுவிட்டால் துரியோதனர் அப்பழியிலிருந்து தப்பமுடியும்.”

“இது விழியிழந்த மாமன்னரின் திட்டமென்றே நினைக்கிறேன். தன் மைந்தனை அரசுக்கட்டிலில் அமர்த்த அவர் விழைகிறார்” என்று சாத்யகி தொடர்ந்தான். கிருஷ்ணன் “அதை அவர் பாண்டவர்கள் இறந்ததாகத் தெரியவந்தபோதே செய்திருக்கலாமே?” என்றான். “அவர்கள் இறந்ததை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் மீண்டுவந்தால் அவரது வஞ்சம் வெளிப்பட்டிருக்கும். அதை அஸ்தினபுரியின் குடிகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்றான் சாத்யகி. “அவர் இப்போது பாண்டவர்களை அஞ்சுகிறார். அவர்கள் வல்லமை வாய்ந்த பாஞ்சாலத்தின் உறவினர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்.”

கிருஷ்ணன் “யுயுதானரே, மூன்றுதிசைகளிலும் தாக்கியும் கௌரவர் ஏன் போரில் வெல்ல முடியவில்லை?” என்று கேட்டான். சாத்யகி “பார்த்தரை வெல்லும் திறன் கொண்ட போர்வீரர் இம்மண்ணில் தாங்கள் மட்டுமே” என்றான். “கர்ணர் பெருந்திறல்வீரர் என்பதனால்தான் பார்த்தரை சற்றேனும் புண்படுத்த முடிந்தது. அதற்காகவே அவர் சூதர்களால் பாடப்படுவார்.”

கிருஷ்ணனின் புன்னகையை பார்த்தபின் சாத்யகி விரைவாக தொடர்ந்து பேசினான். “போர் நிகழ்ந்த முறையை நான் சூதர்களிடமிருந்து விரிவாகவே கேட்டறிந்தேன். வசுஷேணரும் பார்த்தரும் வில்லேந்தி நேருக்கு நேராக களம்நின்றனர். நிகர்நிலையில் போர் நெடுநேரம் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் துலாக்கோல் சற்றே பார்த்தரின் பக்கம் தாழ்ந்தது, கௌரவப்படைகள் இனி வெல்லமுடியாதென்று அறிந்தன. அவை அஞ்சி குரலெழுப்பியபடி பின்வாங்கின.”

“பாஞ்சாலப்படைகள் அவற்றை துறைமேடைவரை துரத்திவந்தன. மேலும் செல்லவேண்டாமென்று யுதிஷ்டிரர் ஆணையிட்டமையால் நின்றுவிட்டன. களத்திலிருந்து வசுஷேணரை வெளியேறும்படி யுதிஷ்டிரர் ஆணையிட்டார். தோல்வியின் சுமையால் தலைதளர்ந்து பிணம்போல வசுஷேணர் நடந்தார். கோட்டைக்குவெளியே செல்லும்போது அவர் விழப்போனதாகவும் பால்ஹிகவீரன் பூரிசிரவஸ் அவரை தாங்கிக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்” என்று சாத்யகி தொடர்ந்தான்.

“வசுஷேணருக்கு பெரிய அளவில் புண் ஏதும் படவில்லை. ஆனால் படகில் திரும்புகையிலேயே கடுமையாக நோயுற்றுவிட்டார். வெம்மைநோய்கண்டு உடல் கொதிக்க கைகால்கள் இழுத்துக்கொண்டு அதிர தன்னினைவில்லாமல் படகில் கிடந்த அவரை மரப்பலகையில் வைத்து சுமந்துகொண்டுதான் தசசக்கரத்தின் மாளிகைக்குமேல் ஏற்றியிருக்கிறார்கள்.”

“ஆம், நானும் அறிந்தேன்” என்றான் கிருஷ்ணன். சாத்யகி ”பன்னிருநாட்கள் அவர் நினைவழிந்து நோயில்கிடந்ததாக சொல்கிறார்கள். தோள்கள் மெலிந்து எலும்புக்குவை என மாறிவிட்டார் என்று மருத்துவர் ஒருவர் சொன்னதாக என்னிடம் தசசக்கரத்திற்குச் சென்ற யாதவர் ஒருவர் சொன்னார்” என்றான். “அவரைக் கண்டவர்கள் இறந்த உடல் மெல்ல மட்கிக்கொண்டிருப்பதைப் போல தோன்றியது என்றனர். அவர் இறந்துவிட்டார் என்றுகூட படைகளிடம் செய்தி பரவியது. அதைத்தவிர்க்கவே அவரைக் கொண்டுவந்து சாளரத்தருகே அமரச்செய்தனர்.”

“அவரது விழிகளிலும் உதடுகளிலும் தோல் கருகி காய்ந்து உரிந்துவிட்டது. விரல்நகங்கள்கூட உதிர்ந்துவிட்டன. பெருங்களிமகன் போல விழிகள் பழுத்து கைகால்கள் நடுங்க சொல்லிழந்து அமர்ந்திருந்த அவரை தன் விழிகளால் கண்ட இன்னொரு யாதவரிடமிருந்து இதை அறிந்தேன். தொடர்ந்து அகிபீனாவாலும் சிவமூலிப்புகையாலும் அவர் துயிலவைக்கப்படுகிறார். எங்கிருக்கிறார் என்றும் என்ன செய்கிறார் என்றும் அவர் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை இந்நோயில் இருந்து மீளாமலேயே அவர் உயிர்துறக்கவும்கூடும்” என்றான்.

”அத்தனை பெருந்துயர் ஏன் அவருக்கு?” என்று அவனை நோக்காமலேயே கிருஷ்ணன் கேட்டான். சாத்யகி சற்றே தயங்கியபின் “அவர் மயிரிழையிடையில் ஆவம்பிழைத்து இழந்த துருபதன்கன்னி அங்கே போர்க்களத்தில் காவல்மாடமொன்றின் மேல் அமர்ந்திருந்ததாக சொல்கிறார்கள். அவர் தோற்று தலைகுனிந்து பின்னகர்ந்தபோது அவர் காணவேண்டுமென்று அவள் தன் செந்நிறப் பட்டுமேலாடையை பறக்கவிட்டிருக்கிறாள்” என்றான். “அது எந்த ஆண்மகனுக்கும் இறப்பின் கணம் என்று நினைக்கிறேன் அரசே.”

புன்னகையுடன் ”காட்டுக்குள் கன்றுமேய்த்து வாழ்பவரென்றாலும் அனைத்தையும் அறிந்திருக்கிறீர்” என்று கிருஷ்ணன் சொன்னான். ”நீர் அறிந்திருப்பதில் சிறிது பிழை உள்ளது. அந்தப்போரில் வென்றது பார்த்தனல்ல, ஊழ்.” சாத்யகி “எந்தப்போரிலும் ஊழே வெல்கிறது என்று எந்தை சொல்வதுண்டு” என்றான். கிருஷ்ணன் நகைத்து “அது வளைகோல் ஏந்திய யாதவரின் வழக்கமான எண்ணம் மட்டுமே” என்றான். “எந்தப்போரிலும் ஊழ் தன்னுருவில் வந்து நிற்பதில்லை. நம் பிழைகள் வழியாகவே அது செயல்பட முடியும். நம் அறியாமையை ஐயத்தை ஆணவத்தை அது தன் கருவியாக எடுத்துக்கொள்கிறது.”

”இந்தப்போரில் அனைத்தும் தார்த்தராஷ்டிரர்களுக்கு உகந்தனவாகவே அமைந்தன. பாஞ்சாலர்களைவிட இருமடங்கு பெரிய படைகள். நான்கு பெருவீரர்களால் அவை தலைமைதாங்கப்பட்டு மூன்று முனைகளில் காம்பில்யத்தை தாக்கின. பாஞ்சாலர் வெல்வதற்கு எந்த வழியும் இருக்கவில்லை” என்று கிருஷ்ணன் தொடர்ந்தான். “ஆயினும் அவர்கள் வெல்லவில்லை. அங்கே ஊழ் வந்தமைந்த பிழைகள் இரண்டு. ஒன்று தார்த்தராஷ்டிரன் செய்தது. கர்ணன் யாதவப்பேரரசியின் திறன்மிக்க ஒற்றர்களைப்பற்றி அறிந்திருந்தான். படைகிளம்பியதை அவள் அறியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணினான். அவனுடைய நுண்திறனை நானும் அறிவேன்.”

”வசுஷேணன் காம்பில்யத்தை பதுங்கும்புலியென எச்சரிக்கை கொண்ட காலடிகளுடன்தான் அணுகினான். இருளில் கோட்டையை தாக்க அவன் விழையவில்லை. அவன் எண்ணப்படி புலரிவெளிச்சம் வரும்வரை கௌரவப்படகுகள் காத்திருந்தன என்றால் இப்போரே பிறிதொன்றாக நிகழ்ந்திருக்கும். கங்கைநீரில் மிதக்கவிடப்பட்ட எரிகலங்களை முன்னரே கண்டிருப்பார்கள். படகுகளை காம்பில்யத்தின் கரையருகே கொண்டுசென்று குறுங்காடு வழியாக சென்றிருந்தால் கோட்டையை மிக எளிதாக கைப்பற்றியிருக்கமுடியும். கௌரவர்களின் சதக்னிகளின் வல்லமை மும்மடங்கு பெரியது. காம்பில்யம் அதை எதிர்கொண்டிருக்கமுடியாது” கிருஷ்ணன் சொன்னான்.

“ஆனால் செறுகளத்தில் காத்திருத்தல் என்பது எளியதல்ல. பெருஞ்செயலுக்கு முன் பொறுமையை கைவிடாதவனே வெற்றிகளுக்குரியவன். ஏனென்றால் செயல்முனையில் காத்திருக்கையில் காலம் விரிந்து நீண்டு விடுகிறது. ஒவ்வொரு கணமும் ஒருமுனையில் இருந்து மறுமுனைவரை நீண்டு கிடக்கிறது. ஆயிரம் கோடி எண்ணங்கள் எழுகின்றன. ஐயங்களும் அச்சங்களும் பன்மடங்காக பெருகிவிடுகின்றன. எளிய உள்ளங்கள் காத்திருப்பதை அஞ்சியே ஏதேனும் ஒரு முடிவை உடனே எடுத்துவிடுகின்றன. கர்ணன் காத்திருந்தான். தார்த்தராஷ்டிரனால் முடியவில்லை.”

“தார்த்தராஷ்டிரனின் எல்லைமீறிய ஆணையால்தான் அவர்களின் படகுகள் எரிகலங்களில் சிக்கிக்கொண்டன. அந்நிலையிலும் கர்ணனின் போர்சூழ்ச்சி அவர்களுக்கு உதவியது. அந்த எரிதலையே தனக்குகந்த முறையில் அவன் பயன்படுத்திக்கொண்டான். அந்த ஒளியில் குறுங்காடுகளுக்குள் ஒளிந்திருந்த பாஞ்சால வில்லவர்களை அடையாளம் கண்டான். எஞ்சிய கலங்களை கரையணையச்செய்ததும் சரி குறுங்காட்டுக்குள் வீரர்களை இறக்காமல் கங்கையின் கரைநீரோட்டம் வழியாகவே படகுகளை கொண்டுசென்றதும் சரி மிகச்சிறந்த போர்சூழ்ச்சிகளே. வசுஷேணன் அவற்றை செய்யாமலிருந்தால்தான் வியந்திருப்பேன்” கிருஷ்ணன் தொடர்ந்தான்.

”சூழ்ச்சிகளில் முதன்மையானது காம்பில்யத்தின் சதக்னிகளால் எரியூட்டப்பட்ட படகுகளைக்கொண்டு அதன் படகுத்துறையை எரித்ததுதான். எரியால் கோட்டைவாயிலை உடைத்தது பாரதம் இதுவரை காணாதது. ஆனால் அத்தனை நுண்ணிய போர்சூழ்ச்சியை வகுத்தபோது அவன் ஒரு கணம் தன்னுள் தருக்கியிருக்கவேண்டும். பார், என் திறனைப்பார் என எவரிடமோ அவன் அகம் கூறியிருக்கவேண்டும். ஆகவே அவன் பெரும்பிழை ஒன்றை செய்துவிட்டான்.”

கிருஷ்ணன் சாத்யகியை கூர்ந்து நோக்கி “என்ன பிழை அது என சொல்ல முடியுமா?” என்றான். சாத்யகி சித்தத்தை துழாவியபின் இல்லை என தலையசைத்தான். “அந்த எரிந்த படகுகளை கங்கையில் செல்லவிட்டிருக்கலாகாது. அவற்றை மூழ்கடித்திருக்கவேண்டும்” என்றான் கிருஷ்ணன். “அவை கங்கையில் சென்றதை ஜயத்ரதனின் ஒற்றர்கள் கண்டனர். தார்த்தராஷ்டிரர்கள் தோற்றுவிட்டனர் என்று அவர்கள் செய்தியனுப்பினர். படை எழுந்து கிழக்கு வாயிலைத் தாக்கி உடைக்கும் தருவாயில் அச்செய்தியை ஜயத்ரதன் கேட்டான். பின்வாங்கும்படி தன் படைகளுக்கு ஆணையிட்டான்.”

“ஜயத்ரதன் பின்வாங்கிய கணம் முதன்மையானது. இரு வில்லவர்களும் நிகர்நிலையில் தங்கள் விசைகளின் உச்சத்தில் நின்றிருந்தனர். வானில் தெய்வங்கள் வந்து களம்நோக்கும் தருணம் அது. களத்தில் நின்ற அனைவரும் படைக்கலம் தாழ்த்தி அந்தப்போரை நோக்கினர். அர்ஜுனன் ஒரு கணம், ஒருகணத்தின் துளி பின்னடைந்ததாகவே நான் அறிந்தேன். அக்கணத்தில் கிழக்குக்கோட்டைமேல் பாஞ்சாலர்களின் வெற்றிமுரசு கொட்டத்தொடங்கியதையே ஊழ் என்கிறேன். அந்தக் கணம் அத்தனை நொய்மையானது. அணையுடையும் இறுதிப்புள்ளி அது. கௌரவர்கள் அறியாமல் ஓர் எட்டு பின்னடைந்தனர். அதுபோதும் போரின் வெற்றியை முடிவுசெய்ய. அதன்பின் செய்வதற்கேதுமில்லை. நதிவெள்ளம் கரையுடைத்துவிட்டது.”

சாத்யகி பெருமூச்சுவிட்டான். கிருஷ்ணன் சொல்லச்சொல்ல அவன் அந்தத் தருணத்தை கண்டுவிட்டான். அத்தகைய நுண்மைகளால் ஆளப்படும் களம் என்பதைப்போல தெய்வங்களுக்கு உகந்த இடம் பிறிது என்ன என எண்ணிக்கொண்டான். கர்ணனாக அக்களத்தில் நின்றிருப்பதாக எண்ணியதும் அவனுள் அச்சம் நிறைந்தது. “அஞ்சுகிறீரா?” என்று கிருஷ்ணன் கேட்டான். “ஆம்” என்றான் சாத்யகி. “அஞ்சவேண்டும். அவ்வச்சம் முற்றிலும் இல்லை என்பதே கர்ணனின் வீழ்ச்சி” என்றான் கிருஷ்ணன். “போர்க்களத்தின் முன் நிற்கையில் ஊழின் பெருந்தோற்றம் கண்டு கைதளர்ந்து வில்நழுவும் வீரனே மெய்மையை அறியக்கூடியவன்.”

அப்போதுதான் சாத்யகி தானிருக்கும் நிலையை உணர்ந்தான். எந்த முகமனும் இல்லாமல் யாதவப்பேரரசனின் மந்தண அறையில் அவனுடன் அரசு சூழ்தலில் ஈடுபட்டிருந்தான். அது ஒரு கனவு என அவன் உள்ளம் மயங்கியது. கிருஷ்ணன் புன்னகைத்தபடி “நீர் அரசு சூழ்தலை கற்கமுடியும். அதற்கு முன் உமது கைகள் படைக்கலங்களை அறியவேண்டும்” என்றான். சாத்யகி மெல்லிய குரலில் “நான் இன்னமும் படைக்கலப்பயிற்சி எதையும் எடுக்கவில்லை அரசே” என்றான்.

“இல்லை, நீர் படைக்கலம் பயின்றிருக்கிறீர். இல்லையென்றால் நான் இப்போது சொன்னவற்றை புரிந்துகொண்டிருக்க மாட்டீர்” என்றான் கிருஷ்ணன். “எதை வைத்திருக்கிறீர்?” சாத்யகி தயங்கி “வளைதடி” என்றான். கிருஷ்ணன் “அதுபோதும்… நீர் வில்லை ஏந்த முடியும். பாரதத்தின் பெருவீரன் ஒருவனையே உமக்கு ஆசிரியனாக அமைக்கிறேன்” என்றான். சாத்யகி வியப்பு தெரியும் விழிகளால் நோக்க “வளர்பிறை எழுந்தபின் நான் காம்பில்யத்திற்கு செல்கிறேன். மதுராபுரியிலிருந்து தமையனாரும் வந்துசேர்ந்துகொள்கிறார். நீரும் எங்களுடன் வருக! அங்கே உம்மை பார்த்தனிடம் மாணாக்கனாக சேர்த்துவிடுகிறேன்” என்றான்.

உளம் மலர்ந்து சாத்யகி கைகூப்பினான். “அவனிடமிருந்து கற்பதற்கு அப்பால் பாரதவர்ஷத்தில் விற்கலை ஏதும் எஞ்சாது” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், நான் செய்த நல்லூழ் அது” என்றான் சாத்யகி. ”நலம் திகழ்க!” என்று வாழ்த்திய கிருஷ்ணன் “உம்மை சந்திக்கையில் என் தமையனார் ஒன்றுதான் சொல்வார். வில்லேந்துவது வீரனுக்குரியதல்ல, கதாயுதமே ஆண்மைகொண்டது என்பார். அவரை வெல்வதில் உள்ளது உமது முதல் அரசுசூழ்தல்” என்றான். சாத்யகி புன்னகைத்து “அவரை வெல்வது எளிது என்கிறார்கள்” என்றான். கிருஷ்ணன் நோக்க “வில்லேந்துவது தங்கள் ஆணை என்பேன்” என்றான். கிருஷ்ணன் உரக்க நகைத்து “திறன்கொண்டவராக இருக்கிறீர்” என்றான்.

அவன் தோளில் கையை வைத்தபடி “இங்கு நதிநீரைக் கொணர்வதற்கு நாங்கள் பெரிய திட்டமொன்றை வகுத்துள்ளோம்” என்றான் கிருஷ்ணன். “ஆம், ஸ்ரீதமர் சொன்னார். கோமதியின் திசையை திருப்புவதாக. மிக அரிதானது” என்றான் சாத்யகி. “பெண்களின் திசையைத் திருப்புவதை விட எளிதானது ஏதுமில்லை யுயுதானரே” என்றான். “அதன் வாஸ்துபுனிதமண்டலம் வரையப்பட்டுவிட்டது. அதற்கான பணிகளை தொடங்கிவிட்டால் நான் இங்கிருந்து கிளம்ப முடியும்.”

”தாங்களில்லாமல் எப்படி இங்கே பணிகள் நடக்கும்?” என்று சாத்யகி கேட்டான். “இளையோனே, நான் எதையுமே செய்வதில்லை என்பதை அறிவீரா?” என்றான் கிருஷ்ணன். “நான் இங்கு செயலாற்றி சோர்ந்து போவதற்காக வரவில்லை. களியாடிச்செல்லவே வந்திருக்கிறேன். நூல்களும் இசையும் கலைகளுமாக இங்கே நிறைவுற்று அமர்ந்திருக்கிறேன். பகல்களில் ஒளியையும் இரவில் இருளையும் சுவைக்கிறேன். மானுடரின் அறியாமையையும் விலங்குகளின் அறிவையும் கண்டு நகைக்கிறேன். மகளிரின், மழலையரின், முதியவர்களின் அழகில் மயங்கி அமைகிறேன். ஒவ்வொரு கணமும் விழித்திருக்கிறேன். விழிப்பை முழுக்க உவகையாக மாற்றிக்கொள்கிறேன். இங்கு நிகழ்வன எதிலும் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நான் வேறெங்கோ இருப்பவன்.”

அவனுடைய திகைத்த முகத்தை நோக்கி சிரித்தபடி “உமது வியப்பு புரிகிறது. இங்குள்ளவை அனைத்தும் நான் இயற்றுபவை என எண்ணுகிறார்கள். என் பெயர்சொல்லி செய்யப்படுபவை அனைத்திலும் நான் உள்ளேன் என்பது உண்மை. ஆனால் அச்செயல்களே நான் என்பவன் என்னை வந்தடைவதேயில்லை” என்றான் கிருஷ்ணன்.

அவன் முதுகில் கையை வைத்து “என் தோழர்கள் ஸ்ரீதமனும் சுதாமனும் தாமனும் வசுதாமனும் இந்நகரின் குடிமன்றுகளை ஆள்கிறார்கள். விகதரும் பத்ரசேனரும் சுபலரும் துறைமுகத்தை நடத்துகிறார்கள். கோகிலரும் சனாதனரும் வசந்தரும் புஷ்பாங்கரும் ஹசங்கரும் காவல்பணிகளை செய்கிறார்கள். சுபத்ரரும் தண்டியும் குண்டலரும் மண்டலரும் நீதியை நிலைநிறுத்துகிறார்கள். பத்ரவர்த்தனரும் வீரபத்ரரும் மகாகுணரும் கருவூலத்தை காக்கிறார்கள். மதுமங்கலர் வைதிகப்பணிகளை ஆற்றுகிறார். இருபதுமுகம் கொண்டு இந்நகரில் நானே நிறைந்திருக்கிறேன். இங்குள்ள பல்லாயிரம் கைகளால் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறேன்.”

இனி அக்கைகளில் என்னுடையவையும் இருக்கும் என சாத்யகி எண்ணிக்கொண்டான். ”நீர் செய்யவேண்டியதை ஸ்ரீதமர் சொல்வார். நீர் விழையும்போது என்னை காணலாம்” என்று கிருஷ்ணன் சொன்னான். சாத்யகி தலைவணங்கி திரும்பியபோது கரனை பார்த்தான். வெண்ணிற மெய்ப்பையும் மஞ்சள்நிறமான கச்சையும் செந்நிறத் தலைப்பாகையும் அணிந்து அவன் எதிரேவந்தான். சாத்யகியைக் கண்டதும் வணங்கி சுவரோரமாக விலகி வழிவிட்டான்.

“நீர் இவரை அறிவீரா?” என்றான் கிருஷ்ணன். “இவர் பெயர் கரன். தட்சிணமாளவத்தின் வராலத மலைக்குடியை சேர்ந்தவர்.” சாத்யகி வியப்புடன் “இவரை தாங்கள் எப்படி அறிவீர்கள்?” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்தான். “நான் இவருடன்தான் உள்ளே நுழைந்தேன்” என்றான் சாத்யகி. கிருஷ்ணன் ”இனியவர். இவருக்கு ஐந்நூறுவகை பறவைகளின் குரல்களைக் கேட்டு பெயர்சொல்லத் தெரியும். நூறுவகை பூச்சிகளின் ஒலிகளையும் அறிந்திருக்கிறார். மாளவத்தின் காடுகளில் இவருடன் ஒரு பயணம் செல்லவேண்டுமென எண்ணியிருக்கிறேன்” என்றான்.

கரன் புன்னகையுடன் சாத்யகியை பார்த்தான். “இங்கு வருபவை பெரும்பாலும் கடற்பறவைகள். கரர் அவற்றை இன்னமும் அறியவில்லை. ஆனால் மூன்றுமாதத்தில் கற்றுக்கொள்வார் என்று சொன்னார்” என்று கிருஷ்ணன் சொன்னான். “நான் அவருடன் கடல்முகம் செல்லவிருக்கிறேன். உம்மை நாளை பார்க்கிறேன். வராலதரே, செல்வோமா?அங்கே உமக்கு அழகிய இளம்பெண் ஒருத்தியை நான் சுட்டிக்காட்டுகிறேன். அவள் நூறுவகை நாணயங்களை ஒலியாலேயே சொல்லிவிடுவாள்…”

சாத்யகி மீண்டும் தலைவணங்கினான். கரனின் தோளில் கைவைத்து புன்னகையுடன் உரையாடியபடி செல்லும் கிருஷ்ணனை சாத்யகி நோக்கி நின்றான். கரன் ஏதோ சொல்ல கிருஷ்ணன் உரக்கச் சிரிக்கும் ஒலி கேட்டது.

சாத்யகி வெளியே வந்து நின்றபோதுதான் முதல்முறையாக அந்தப் பெருவாயிலை அண்மையில் கண்டான். முதலில் அது ஒரு மலையுச்சியின் பாறை என்றே எண்ணினான். அதன்பின்னரே அது சதுரவடிவில் இருப்பது தெரிந்தது. விழிதூக்கி நோக்கியபோது அரண்மனையின் குவைமாடங்களுக்கு மேல் அதன் தூண்சுவர் மேலெழுந்து செல்வதைத்தான் காணமுடிந்தது.

பின்னால் சென்று நோக்கியபோது வானைத் தொடும்படியாக அது வளைந்து மேலெழுந்து நிற்பது தெரிந்தது. அதன் மேற்குபக்கத்து அடித்தளத்தில் இருந்த பெருஞ்சிற்பத்தின் கால்களைத்தான் அவனால் பார்க்கமுடிந்தது. நரம்புகள் ஓடிய பெரிய கால்கள். பத்து நகங்கள். கால்களைச்சுற்றி இலைகளுடனும் மலர்களுடனும் கொடிகள் பின்னிப்படர்ந்திருந்தன. அவற்றில் மயில்களும் கிளிகளும் எருதுகளும் பசுக்களும் மான்களும் சிம்மங்களும் ஊடாக செதுக்கப்பட்டிருந்தன.

கால்களுக்குமேல் ஏறிச்சென்ற உடலின் ஆடைவளைவுகள் கல்லலைகளாக தெரிந்தன. முகம் வானில் என தெரிந்தது. சுருண்டதாடி. கூரிய மூக்கு எழுந்து நின்றது. கீழிருந்து நோக்கியபோது கண்கள் பாதிமூடியவை போலிருந்தன. சற்று நேரம் கழித்தே அவன் அது விஸ்வகர்மனின் சிலை என்று அறிந்துகொண்டான். மறுபக்கத்து அடித்தளத்தில் இருப்பது குபேரனின் சிலை என அவன் கேள்விப்பட்டதை நினைவுகூர்ந்தான்.

வண்ணக்கடல் பற்றி கேசவமணி எழுதும் விமர்சனத்தொடர்

1 தீராப்பகை

2 துரோணரின் அகப்போராட்டம்

3.மூன்று துருவங்கள்
4 மகாபாரத மனிதர்கள்

முந்தைய கட்டுரைஉலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை
அடுத்த கட்டுரைராய் மாக்ஸம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி