வளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் தளத்தில் அங்காடித்தெரு படத்திற்கு பிறகு உங்களுக்கு வந்த மடல்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். வளைகுடா நாட்டின் தொழிலாளர் சமூகம் பற்றிய பல கருத்துகள் வந்ததாக சொல்லியுள்ளீர்கள்.

வந்திருக்கும், அதை இல்லை என மறுக்கும் அயோக்கிய மன நிலை எனக்கில்லை. உழைப்பு சுரண்டல் மிகுந்த நாடுகளில் வளைகுடா நாடுகளும் ஒன்று. இது உண்மை… அப்பட்டமான உண்மை.

ஆனால், அந்த சுரண்டலுக்கான காரணகர்த்தாக்களை, மூலவர்களை அடையாளப்படுத்துவதில் சில சிக்கல் உள்ளதை.. உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் முன்வைக்கும் கருத்தில் அறியமுடிகிறது.

வளைகுடா வாழ்வின் சில அனுபவ பதிவாக என் சமீபத்திய கவிதை (கவிதை நூல் என உங்களைப்போறவர்கள் ஏற்கமாட்டீர்கள்) நூலில் சிலவற்றை சொல்லியுள்ளேன் அவை சொற்பமே. கலைஞர் தொலைக்காட்சியின் சந்தித்தவேளையிலும் பதிவு செய்துள்ளேன், ஆனால் நான் முன்வைக்கும் காரணிகள் வேறு.

அந்த உழைப்பு சுரண்டல்கள் அனைத்தும் முதலாளித்துவ அடிப்படையில் நிகழ்பவை, அவற்றுக்கு துணைப்போகும் இந்திய அல்லது தமிழக தரகுமுதலாளிகளும், இடைத்தரகர்களும் மிக முக்கியமானவர்கள்… இதனையும் ஆய்ந்து கருத்தை வெளிப்படுத்தும் கடமை உங்களுக்கு உண்டு என்பதை மறந்து, தட்டையாக அரபு இசுலாமியர் என்ற எல்லையில் மட்டும் உழைப்புச்சுரண்டல்காரர்களை அடையாளப்படுத்தியுள்ளீர்கள்.

சில.. அல்லது பல அராபியனின் மனநிலையை சராசரியாக அனைவரின் மனநிலையாக வெளிப்படுத்தும் உங்கள் எழுத்து வண்மம் அராபியனுக்கு அப்பால் உள்ள உழைப்பு சுரண்டல் பேர்வழிகளை தப்பிக்கச்செய்ய வழிவகுக்கும் என்பதை உணராதவராகவே உள்ளீர்.

இந்த என் மடலின் நோக்கம் அரபு முதலாளிகள் நல்லவர்கள் என நிறுவுவது அல்ல, தட்டையாக அவர்களை மட்டும் அடையாளம் காட்டுவதால் முழுமையான சுரண்டலை, தொழிலாளர் அவதியை தீர்த்துவிட இயலாது.

இது குறித்து விரிவாக பல செய்திகளை பேசவேண்டும்.. ஆனால் நேரம் சூழல் என்னை இப்போது அனுமதிக்கவில்லை. பிறகொரு சூழலில் விரிவாக பேசலாம்.

இது குறித்த நேர்மையான கருத்தை தெளிவான ஆய்வோடு எழுதுங்கள்..

உண்மையான எழுத்தை எதிர்பார்க்கிறேன்

அன்புடன்
இசாக்

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கடிதம் வழக்கம்போல அவசரமான, தவறான புரிதலில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. அரபுலகில் மட்டுமே சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளது என்றோ, அதற்கு இஸ்லாம் காரணம் என்றோ நான் சொல்லவில்லை. பதறவேண்டாம்.

ஒடுக்குமுறையும் சுரண்டலும் வரலாற்றின் எல்லா காலத்திலும் உண்டு. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில்தான் அது உச்சத்தை அடைந்தது. முதலாளித்துவ காலகட்டத்தில் அந்தச் சுரண்டலுக்கு எதிரான அமைப்புகள் உருவாகி வந்தன. அவ்வமைப்புகள் உருவாக்கிய விழுமியங்களும் உருவாகின.

நிலப்பிரபுத்துவ அமைப்பு தடையில்லாத ஆண்டான்-அடிமை மனநிலையை அடிப்படையாகக் கோண்டிருக்கும். அதற்கான விழுமியங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் சுரண்டல் இருக்கும், கூடவே அதற்கு எதிர்விசையாகச் செயல்படும் அமைப்புகளும் இருக்கும். தொழிற்சங்கங்கள், ஜனநாயக அரசின் கட்டுப்பாடுகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் முதலியவை.

ஆகவேதான் முதலாளித்துவ அமைப்பில் ஒரு சுரண்டல் அல்லது அநீது வெளிப்படுத்தப்பட்டாலே போதும் அது முன்னர்போல தொடர முடியாது என்பது இன்றுவரை உண்மையாக உள்ளது. ஏனென்றால் முதலாளித்துவம் பெருமளவுக்கு ஜனநாயகத்தால் கட்டுப்படுத்தபப்டுவது. ஜனங்களின் ஒப்புதல் இல்லாத ஒன்று அங்கே நிகழ முடியாது. சுரண்டல் கூட!

முதலாளித்துவத்தில் அநீதியும் சுரண்டலும் கண்டிப்பாக உண்டு. ஆனால் அது நிலப்பிரபுத்துவத்தில் இருந்து பலமடங்கு வளர்ந்து மேலெ வந்த ஓர் அமைப்பு. அதில் இருந்து இன்னும் மேலே செல்லலாம், அதுதான் இந்த காலகட்டத்தின் தேடல். ஆனால் முதலாளித்துவத்தின் குறைகளை முன்வைத்து நிலப்பிரபுத்துவத்தை நியாயப்படுத்துவது பிழை. நீங்கள் செய்ய முயல்வது அதை. இஸ்லாமியர் பெரும்பாலும் வாதிடுவதும் அதற்காகவே.

அரபு நாடுகளில் உள்ளது முதலாளித்துவம் அல்ல. கெட்டிதட்டிப்போன நிலப்பிரபுத்துவம் மட்டுமே. இன்றும் அங்கே ஊழியர்களை அடிமைகள் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். அவ்வண்ணம் நடத்துகிறார்கள்.முதலாளித்துவம் அளித்துள்ள ஜனநாயக உரிமையையும், சங்க உரிமையையும் பிற எந்த எந்த வசதியையும் அளிக்காத மூடுண்ட நிலப்பிரபுத்துவ சமூகமாக அரபுலகம் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் அராபிய இனவெறி இணைந்துகொள்கிறது. அந்த மன இருளின் விளைவுகளையே நம் மக்கள் அங்கே அனுபவிக்கிறார்கள்.

அராபிய இனவெறிக்கு இந்து இஸ்லாம் என்ற பேதமெல்லாம் கிடையாது. ஆப்ரிக்க நாடுகளில் அராபிய இன வெறியர்களால் கொன்றுகுவிக்கப்பட்ட கறுப்பின மக்கள் இஸ்லாமியர் தானே? உலகமெங்கும் கறுப்பு முஸ்லீம்கள் பட்டினியால் லட்சக்கணக்கில் சாக்கும்போது அராபிய இஸ்லாமியரின் பெட்ரோலியப் பணம் அங்கே உதவிக்குச் செல்லவில்லை என்பதுதானே வரலாற்று உண்மை?. கிறித்தவ மனிதாபிமானத்தின் பணம் தானே சென்றது.

அராபியப்பணம் அராபிய இனவெறியின் விளைவான ஓர் உலக இஸ்லாமிய அரசுக்காக ஆயுதங்கள் வாங்கவும் மதவெறியை பரப்பவும் மட்டுமே செலவிடப்படுகிறது. ஆதிக்க முகம் சுரண்டல் முகம் அன்றி வேறு எந்த முகமும் அதற்கில்லை. இன்றைய நவ உலகின் முதன்மையான அச்சுறுத்தல்கள் மேலைநாடுகளில் குவியும் பெருமூலதனத்தின் அதிகாரமும், சீனாவின் ஏகாதிபத்திய நோக்கும், அராபிய இனவெறியும்தான் என நான் நம்புகிறேன்.

அரபு நாடுகளில் உள்ள அராபிய இனவெறியையும் இஸ்லாமையும் நான் ஒன்றாகப் பார்க்கவில்லை. மாறாக எப்போதும் பிரித்தே பார்க்கிறேன். இஸ்லாம் என்ற நெறியை அராபிய இனவெறி தன் முகமூடியாக போட்டிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். ஆனால் அந்த வேறுபாட்டை நீங்கள், பெரும்பாலான இஸ்லாமியர், செய்வதில்லை என்பதே என் மனக்குறை. அப்படி ஒரு பிரிவினையை செய்பவர்களையே நீங்கள் இந்துத்துவர் என்றும் இஸ்லாமிய விரோதி என்றும் வன்மத்துடன் எழுதுவதாகவும்சொல்ல ஆரம்பித்துவிடுகிறீர்கள். இக்கடிதத்திலும் அதற்காகவே முயல்கிறீர்கள்.

அராபிய நாடுகளில் சுரண்டலும் அடிமைத்தனமும் உள்ளது என்பதல்ல பிரச்சினை. அவை வேறு இடங்களிலும் உள்ளனவே என்ற பதில் மூலம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியும் அல்ல அது. மதவெறி மூலம் அந்த இனவெறியும் ஆதிக்கவெறியும் நியாயப்படுத்தப்படுவதைப்பற்றியே நான் சொல்லியிருக்கிறேன்.

வளைகுடா நாடுகளை நோக்கி நம் மக்களை அடிமைகளாக தள்ளிவிடும் கிராமப்புற வறுமை, அதை பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள் அவர்களை சுரண்டும் அரசியல்வாதிகள் எதையும் நான் மறுக்கவில்லை. அவற்றை கண்டிக்க தயங்கவும் இல்லை. என்னுடைய கேள்வியின் மையம் வேறு. இத்தனை மோசமான இன வெறி, மதவெறியை ஒரு இலட்சிய சமூகமாக எப்படி சித்தரிக்க முடிகிறது, அதற்கு எப்படி நம் முற்போக்காளர் துணைபோகிறார்கள், அந்த மனநிலை என்ன — அவ்வளவுதான்.

ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் சுரண்டலை ஒருவர் தான் கிறித்தவர் என்பதற்காக நியாயப்படுத்தினாரென்றால், ஓர் அண்ணாச்சி குத்துவிளக்கு ஏற்றி வைத்து முருகனைக் கும்பிடுவதனால் அவரது சுரண்டலை ஓர் இந்து நியாயப்படுத்தினாரென்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அந்த நியாயத்தை அந்தரங்கமான ஒரு கணத்தில் உங்களுக்குள் பேசிக்கொள்ளும்போதாவது நீங்களும் உணருங்கள். அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைசீன அங்காடித்தெரு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி