மது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை

அன்பின் ஜெ..

உங்கள் தளத்தில் மது கிஷ்வரின் வேண்டுகோளைப் படித்தேன்.

அது தன்னார்வ நிறுவனங்களுக்கு அன்னிய நிதி வருவதைத் தடை செய்யக்கோருகிறது அல்லது அரசே அந்நிதியை வாங்கி, விநியோகம் செய்ய.

Barefoot college என்னும் காந்தியத் தன்னார்வ நிறுவனத்தின் balance sheet இத்துடன் இணைத்துள்ளேன். அதில், அவர்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிதி வருவது அங்கீகரிக்கப் பட்டு இருப்பதைப் பார்க்கலாம். சூரிய ஒளி உபயோகம், நீர் மேலாண்மை, கல்வி ஆகிய தளங்களில் 1970 களி ல் துவங்கி பணிபுரிந்து வருபவர் பங்கர் ராய். கல்வியறிவே பெரிதும் இல்லாத, மத்திம வயது கிராமப் பெண்களுக்கு சூரிய ஒளி மின்சாரக் கருவிகளைப் பயன்படுத்தும் பொறியியலைக் கற்பித்து, இந்தியா மற்றும் பல ஏழை நாடுகளில், சாதாரணமாக மின்சாரம் கிடைக்க வழியில்லாத கிராமங்களில் ஒளியேற்றியிருக்கிறது.

அதேபோல் நீர் மேலாண்மையிலும் மிகப் பெரும் பங்காற்றியுள்ளது. பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு, சிறு அணைக்கட்டுகள் – சாம்பார் ஏரியின் அருகில் கட்டப் பட்ட தடுப்பணை 20 கிராமங்களில், ஒரு லட்சம் மக்களுக்கு நல்ல குடிநீரை வழங்கி வருகிறது. இவை அவர்கள் செய்துள்ள சாதனைகளில் இரண்டு மட்டுமே.

அந்நிறுவனத்தின் தளமான www.barefootcollege.org சென்று பார்த்தால் அவர்கள் செய்து வரும் பணிகள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். அனைத்தும் மிக வெளிப்படையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, அது, சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், அவற்றுள்ளே உள்ளன என்னும் காந்திய வழியின் மிக வெற்றிகரமான எடுத்துக் காட்டு. sustainable.

பிரச்சினைகளைத் தீர்க்க அன்னிய வியாபார நிறுவனங்கள், பளபளக்கும் விமான நிலையங்கள், ஸ்டைலாகக் கட்டப் பட்ட 8 வழிப் பெருஞ்சாலைகள், நினைத்தால் வேலை கொடுத்தல், வேண்டாமெனில் வீட்டுக்கு அனுப்பல் என்னும் தொழிலாளக் கொள்கை என்னும் இன்றைய, பொருளாதாரச் சிந்தனைக்கு மாற்று வழி.

இது போன்ற சில நூறு நிறுவனங்களேனும் இந்தியாவில் உண்டு. அவற்றில் பலவற்றிற்கு, பங்கர் போல ஒரு systematic approach இருக்காது. நமது சொந்த அனுபவத்தில், வானகம் நிறுவனத்துக்கு நாம் அளித்த சிறு நிதிக்கு அவர்களின் எதிர்வினை ஒரு உதாரணம். செயல்பாட்டில் குவியும் அவர்கள் அக்கறை, நிறுவனப் படுத்துதலில் இருப்பதில்லை. அதனால், அன்னிய நிதி வருவதற்கான குறைந்த பட்சத் தகுதியான 3 ஆண்டுகள் ஆடிட் செய்யப் பட்ட நிதி அறிக்கைகள் கூட இருப்பதில்லை.

இவை ஒருபுறம். இன்னொரு புறம், நீங்கள் சொல்லும் மதச் செயல்களுக்கான அன்னிய நிதி அல்லது, இந்தியாவின் இறையாண்மையப் பாதிக்கும் அன்னிய நிதி.

உண்மையாகச் சொல்வதெனில், இவை யாவை என்பது உள்துறைக்கு மிக எளிதாகத் தெரியும். மிக எளிதாக, சாட்சிகளுடன் மிகப் பெரும் நிறுவனங்கள் இரண்டையேனும் பிடித்துக் கூண்டிலேற்ற முடியும். இது போன்ற குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளையும் அதிகப் படுத்தலாம்.

ஆனால், அன்னிய நிதியே வேண்டாம் என்பதும், அவற்றை முழுமையாகத் தடை செய்வதும், குளிப்பாட்டிய நீரோடு, குழந்தையையும் வெளியே வீசுவதற்குச் சமம்.

பங்கர் மற்றும் மது கிஷ்வர் இருவருமே தில்லியின் மேல்தட்டுக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். பங்கர் மாதம் 100 டாலர் கூலிக்கு, ஒரு கிராமத்தில் உழைக்கிறார். மது கிஷ்வர், பென்ணுரிமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு academic. நிறைய வேறுபாடுகள் உள்ளன.

GDP வளர, மக்கள் உயர்வர் என்னும் இன்றைய பஜனையில், பங்கர் போன்றவர்களின் பங்களிப்பு மறந்து போகப்படும் அபாயம் உள்ளது. மது கிஷ்வர் போன்றவர்களின் பெட்டிஷன்களில் 1-2 லட்சம் கையொப்பங்கள் விழுந்து, அவர் சொல்வது நடந்து விடும் சாத்தியங்கள் உள்ளன என்பதால் இக்கடிதம்.

பாலா

Barefoot balance sheet

முந்தைய கட்டுரைசூரியதிசை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉப்புள்ளவரை…