உலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை

hqdefault

உப்பு! எத்தனை சாதாரணமான ஒரு பொருள். கற்பூரத்தைப்போல, கற்கண்டைப்போல உப்பும் மங்கலப் பொருள்தான் என்றாலும் மிகச் சாதாரணமாக நாம் சமையலில் பயன்படுத்தக்கூடியது, அடுப்பங்கரையில் ஒரு மூலையில் கிடப்பது, மலிவானது, ஆகவே அதற்கென்று ஒரு தனிச் சிறப்பை தந்துவிட மனம் மறுக்கிறது. ஆனால் தங்கம், பட்டு, தேயிலை, மசாலா, வாசனை திரவியங்கள், என மனித வரலாற்றை மாற்றியமைத்த பொருட்களில் உப்பும் ஒன்று என்பதை நான் கேள்விப்பட்டதேயில்லை. உப்பு சத்தியாகிரகம் நம் மனதில் ஆழப்பதிந்திருந்தாலும் அது இந்திய சுதந்திரப்போராட்டத்தின் ஒரு சிறு பகுதியாகத்தான் காணப்படுகிறது.

ஆனால் உப்புவேலி சொல்லும் வரலாறு மிக நீண்டு பரந்தது. வெறும் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர், வரலாறு பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டங்களில் உப்பு இந்தியாவின், இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் ஒரு பொருளாக இருந்திருக்கிறது என்பதையும் இன்று அந்த வரலாற்றின் முக்கிய சாட்சிகள் எங்கே இருக்கின்றன என்று உப்பளத்தில் ஸ்படிகத்தை தேடுவதைப்போல தேடவேண்டியுள்ளது என்பதையும் எப்படி புரிந்துகொள்வது? அப்படியானால் இதுவரை நாம் அறிந்த வரலாறுகள் எத்தனை அரிப்புகளில் சலிக்கப்பட்டுள்ளன?
unnamed
வரலாற்றின் சுவைமிகுந்த… உப்புச் சுவைமிகுந்த, பகுதிகள் வழியே பயணிக்கும் இந்த புத்தகம் இன்னொரு புறம் ஒரு நாவலின் தன்மையுடன் உப்பு வேலியைத் தேடிச் செல்லும் ஆசிரியரின் சாகசப் பயணத்தையும் சொல்கிறது. வெளியூர் இந்தியர்கள் கூடச் சென்றிராத கட்டங்கடைசி இந்திய கிராமங்களுக்கும் சென்று நிற்கும் ஒரு வெள்ளைக்காரரின் தைரியமும் தன்முயற்சியும் நம் பாராட்டுக்குரியது. நவீன உலகின் நகங்கள் கூடத்தீண்டிவிடாத அந்த கிராமங்களில் வாழ்ந்த நம் இந்திய சகோதரர்களுடன் சரிசமமாக உண்டும் குடித்தும் உறங்கியும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதற்கு வாழும் உதாரணமாய் திகழ்கிறார் ராய். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழ்ந்தவன் என்கிற வகையில், அந்நாட்டு மக்களுடன் பழகியவன் என்கிற வகையில் ராய் இந்த பயணங்களின் வழியாகவும் இந்த புத்தகத்தின் வழியாகவும் சென்று தொட்டிருக்கும் உச்சத்தை என்னால் ஓரளவேனும் மதிப்பிட முடிகிறது.

1
இதற்கு முன்பு சில சிறிய மொழிபெயர்ப்புகளை செய்திருந்தாலும் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பது பெரும் பணி. புத்தகத்தை அதன் மூலப் பண்புகளுடன் தமிழில் வழங்குவதே ஆகப் பெரிய சவால். ஆங்கிலத்தில் பல விஷயங்களை சுருக்கமாக சொல்லிவிட முடியும். தமிழில் அதை சற்று நீட்ட வேண்டியிருக்கும். வார்த்தைகளின், வாக்கியங்களின் வெளிப்படையான அர்த்தங்கள் மட்டுமல்ல உள்ளார்ந்த அர்த்தங்களையும் சொல்ல வேண்டும். வியப்பு, சிரிப்பு, அழுகை, துடிப்பு, விறுவிறுப்பு என அனைத்தையும் மொழிபெயர்க்க வேண்டும். ஆங்கிலத்தில் மொழிபு உரைநடை பாணியில் உள்ளதா அல்லது உரையாடல் பாணியில் உள்ளதா என அறிவதும் கடினம். அதையெல்லாம் விட புத்தகம் முழுக்க சீரான ஒழுக்கும் ஒருங்கும் அமைய வேண்டும். கதை சொல்லும் பாணியிலேயே தன் புத்தகத்தை ராய் அமைத்திருந்தது என் வேலையை மிக எளிதாக்கியது என்றே சொல்லலாம்.

என்னுடைய மிக எளிய தமிழ் எழுத்துப் பணியில் நான் பலருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். என் முதல் புத்தகத்தை வெளியிட்ட ஆழி பதிப்பகத்துக்கும், தமிழோவியம், திண்ணை, தமிழ் பேப்பர், சொல்வனம் தளங்களின் நிர்வாகிகள், வடக்குவாசல் ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர் இவாரியஸ் பெர்னாண்டோ மற்றும் இணைய நண்பர்கள், சக வலைப்பதிவர்கள் என நீண்ட பட்டியல் உண்டு. அனைவருமே நான் தொடர்ந்து எழுத ஊக்கமளித்து வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.
download
இந்த புத்தகத்தை மொழிபெயர்க்க என்னை ஊக்குவித்த நண்பரும் எழுத்தாளருமான ஜெயமோகனுக்கு என் நன்றிகள். ஜெயமோகன் சமகால இலக்கியத்தின் பெருநிகழ்வு(Phenomenon) என்பது அவரது வெளித்தெரிந்த எதிரிகள் கூட ஒப்புக்கொள்வது. அவர்வழியாக எனக்கு இன்று நல்ல நண்பர்கூட்டம் கிடைத்துள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். குறிப்பாக இங்கிலாந்தில் ராய் மாக்சிமை சந்தித்து தமிழ் வெளியீட்டுக்கான அனுமதியை வாங்கித்தந்த ‘இங்கிலாந்துக் கிளை’ நண்பர்கள் சிவா, கிரி, பிரபு, கேஷவ், முத்து ஆகியோரைச் சொல்லவேண்டும். மொழி பெயர்ப்பை படித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கும், ஸ்ரீனிவாசனுக்கும் நன்றி. பதிப்பாளர் வெ. அலெக்ஸ் பிரதியை மேம்படுத்துவதில் உதவி புரிந்தார் அதற்கும் புத்தகத்தை வெளியிடுவதற்கும் அவருக்கு நன்றிகள்.
2
எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன், யுவன் சந்திரசேகர், மோகனரங்கன், பதிப்பாளர் வசந்தகுமார் அவர்களின் நட்புக்கும் அன்புக்கும் அவர்கள் அளிக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.

என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நன்றி. அவர்களுடன் நான் செலவிடும் நேரத்தில் கொஞ்சம் இந்த புத்தகத்துக்காக எடுக்கப்பட்டது. பத்து இனிய வருடங்களைத்தாண்டியும் என்னுடன் இணைந்து பயணித்துக்கொண்டிருக்கும் என் அன்பு மனைவி ஷோபனாவிற்கு இந்த மொழிபெயர்ப்பை சமர்பிக்கிறேன்.

இந்த புத்தகத்தை படித்த பின்பு உப்பின் மீதான நம் பார்வை மாறக்கூடும், வரலாற்றின் மீதான நம் பார்வை மாறக்கூடும், ராய் போல எதையேனும் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் பிறக்கலாம், இந்திய வரலாற்றின் இயங்கு விதிகளில் சிலவற்றை நாம் இன்னும் ஆழமாய் புரிந்துகொள்ள முடியும், எல்லாவற்றிற்கும் மேலாக மனித சமூகங்கள் செயல்படும் கோணலான விதங்கள் குறித்த தெளிவுகளை நாம் பெறக்கூடும். அதன் வழியே சமகாலத்தை நம்மால் எடைபோடவும் அலசவும் முடியும். தமிழுக்கு இந்த புத்தகத்தை கொண்டு வருவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்த ராய் மாக்ஸ்ம் எழுதிய உப்புவேலி நூலின் முன்னுரை

முந்தைய கட்டுரைமுஃப்தியின் சொற்கள்-கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 41