மாத்து

நகைச்சுவை

laughing-bulldog

 

கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார்.

“முதுகிலேங்க” என்றேன்.

“சொன்னா தப்பா ந்னைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?”

நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது

”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர் “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்கவேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலியே வரப்பிடாது. அப்டியே ஆளைச்சாய்ச்சிடுது பாருங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியாம அங்க இங்கன்னு கோட்டு போட்ட டாக்டருங்களுக்கு பணத்தையா அள்ளி விட்டார்”

“பிறவு?”என்றேன்.

“எங்கிட்ட ஒருநாளைக்கு கேட்ட்டார். நம்ம இயற்கைமருத்துவம் லோகநாதன் இருககரே?” என் முகத்தைப்பார்த்துவிட்டு நிறைவுடன் “”கேள்விப்பட்டிருக்கமாட்டீங்க. அப்டியே கொடத்திலபோட்ட வெளக்கு… ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமா ஒரு சின்ன ஊரிலே இருக்கார்.பேச்சிப்பாறை சானலை தாண்டி அந்தப்பக்கமா போனா ஒரு ஓட்டுவீடு. வாசலிலே ஆடு நிக்கும்”

“எப்பவுமேயா?”என்றேன்.

“மேயாதப்ப நிக்கும்”என்று யதார்த்தமாகச் சொல்லிவிட்டு “அவரிட்ட கூட்டிட்டு போனேன். போனதுமே சொல்லிட்டார், மூட்டுல பிரச்சினைன்னு”.

“நடக்கிறதப்பாத்தா?”என்றேன்.

“இல்ல, இவரை சேரோட தூக்கிட்டு போனோம்”என்று மேலும் யதார்த்தமாகச் சொல்லி “அப்டியே கூப்பிட்டு ஒக்கார வைச்சார். நாக்க நீட்டுன்னார்”

நான் “மூட்டுல இல்ல வலி?”என்றேன்.

“ஆமா. ஆனா பாடி ஒண்ணுதானே? ஆத்துத்தண்ணியில கரைதோறும் ருசிபாக்கணுமாடாம்பார். பெரிய ஞானி. நாக்க கூர்ந்து பார்த்துட்டே இருப்பார். ஒரு புள்ளியில குண்டூசியாலே குத்துவார். அப்டியே ஒடம்பு துள்ளும்”

“வலிக்குமோ?”

“பின்ன? நாக்குல நரம்பில்லாம பேசுறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. நாக்கில எல்லா நரம்பும் இருக்கு. மூட்டுக்குண்டான நரம்ப கண்டுபிடிச்சுட்டார்னா அப்டியே குத்தி தூர் எடுத்து விட்டுடுவார். செரியாப்போயிரும்”

”ஆச்சரியம்தான்”என்றேன். முதுகெலும்புகளுக்கெல்லாம் சேர்த்து ஒரே நரம்பா இல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு நரம்பா என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பர் தொடர்ந்தார்

“மாற்றுமருத்துவத்திலே பலது இருக்குது சார். சாமுண்டியப்பான்னு வெள்ளக்கால் பக்கம் ஒருத்தர்”

“பாக்க சாதாரணமாத்தான் இருப்பார் இல்லீங்களா?”

“எப்டி தெரியும்?”என்றார் வியப்புடன்

“சொன்னாங்க”என்றேன்

“ஆனா மகாஞானி. அவரோட சிகிச்சை என்னான்னாக்க எல்லாமே உள்ளங்காலிலேதான்! நம்ம பிரண்டோட பொஞ்சாதிக்கு மனசிலே ஒரு பிரச்சினை. உள்ளங்காலிலே சரியா தொட்டு மனசிலே உள்ள அந்த பிரச்சினையப் புடிச்சுட்டாருன்னா பாத்துக்கிடுங்க”

“ஓகோ”என்றேன். ஐயத்துடன் “அந்தம்மா அப்ப அவங்க மனசையா ரோட்டில வச்சு நடந்திட்டிருந்துது?ரொடெல்லாம் ஒரே கலீஜா கெடக்குமே?”

“கழுவிக்கலாங்க. மனசிலே என்ன பிரச்சினை இருந்தாலும் கழுவிடலாம். அதுக்குத்தான் யோகக்குளியல் சிகிச்சை. சாம்பமூர்த்தின்னு ஒருத்தர் பண்றார். யோகாவால மனசை குளிப்பாட்டி விடுவார். சோப்பு, சீயக்காய்,ஷாம்பூன்னு அதிலே மூணு லெவல் இருக்கு. வேற வேற ரேட்டு ”

“டிடெர்ஜெண்டு கூட தேவைப்படறவங்க இருப்பாங்க இல்லியா?” என்றேன்

“பின்ன? நோய்கள் பலவகை. மோப்ப மருத்துவம் பாத்திருக்கியளா?”

“மலர்மருத்துவம்னு ஒருவாட்டி யாரோ சொன்னாங்க”

“இத மலமருத்துவம்னு சொல்வாங்க. மலத்தை மோந்து பாக்கிறது”

“நோய் தெரிஞ்சுருமாமா? அதுக்கு லேப்லே குடுத்தா–”

“இது பேஷண்டே மோந்து பாக்கிறதுங்க”

“தன்னோட மலத்தையா?”

“அதான் இல்ல”என்றார் மகிழ்ந்து “டாக்டரோட மலத்த…”

“ஓ” என்றேன் “நெறைய தேவைப்படுமே”

“அவரு மூணுவாட்டி தெனம் போவார். காலையிலே ஆணவம். மத்தியான்னம் கன்மம். ராத்திரி மாயை”

“நிர்மலம்னு சொல்லுங்க”

“அவரோட சம்சாரம் பேரு அதான்…மாற்று மருத்துவத்திலே பலது இருக்கு. இயற்கை உணவுண்ணு ஒண்ணு இருக்கு. மருந்தே வேண்டாம்னு சொல்வாங்க”

“நோய் இல்லேன்னா எதுக்கு சார் மருந்து?”

“கரெக்ட். அதான் அவங்க பாலிஸி. உணவே மருந்துன்னு சொல்லி பச்சைபச்சையா சாப்பிடுவாங்க. வாழையெலைக்கும் அதில வச்ச சாப்பாட்டுக்கும் வித்தியாசமே தெரியாம சாப்பிட்டாத்தான் அது ஆரோக்கியமான சாப்பாடுன்னு ரூல். குரங்கெல்லாம் அப்டித்தானே சாப்பிடுது”

“அதுக்கு சமைச்சு குடுத்தா சாப்பிடாதா என்ன?”

அவர் என்னை கடந்து சென்று “அதைச் சாப்பிட்டா நாப்பதுநாளிலே எல்லா நோயும் போயிரும்.நம்ம சகா ஒருத்தர் தமிழ்வாத்தியார். பதினாறுவருசமா சமைக்காத சாப்பாடுதான்.பெரீய ராமபக்தர். சேரிலே கூட குந்தித்தான் உக்காருவாருன்னா பாத்துக்கிடுங்க. நல்லமனுஷன்”

எனக்கும் அப்படித்தான் தோன்றியது..

”இவங்க இப்டீன்னா மருந்தே உணவுன்னு ஒரு குரூப்பு இருக்கு. அவங்க வேற டைப்பு” என்றார் நண்பர் “ஒரே மூலிகையா சாப்பிடுவாங்க. கொல்லைக்குப்போறதே லேகியம் மாதிரி இருக்கும்னா என்னத்தச் சொல்ல?”

“ஓகோ” என்றேன்.“அதை வேற ஏதாவது மாற்றுமருத்துவத்துக்கு யூஸ் பண்றாங்களா?”

“இன்னும் இல்லீங்க” என்றார்

ஆசுவாசமாக உணர்ந்தேன் “ஏதோ இந்தமட்டுக்கும்…” என்றேன்.:.

“ஹீலிங்னு ஒண்ணு இருக்கு. ஹீலர் கருப்பன்னு ஒருத்தர். அவர் என்ன சொல்றார்னா நோயே இல்லேன்னு”

“அப்ப அவர் எதை ஹீல் பண்றார்?”

“இப்ப இலுமினாட்டின்னு ஒரு குரூப்பு இருக்குங்க இல்லியா?”

”பொம்மனாட்டீன்னு மாமிகள சொல்வாங்களே”

“அதேமாதிரிதான். அவங்க சர்வதேச ஆரியச் சதி. அவங்க நம்மள பாதிக்காம குணப்படுத்திட்டே இருப்பார்”

“அதுக்கு அவங்களையே குணப்படுத்தலாமே”

“இன்னொருத்தரு ஃபீலர் மாதவன்னு பேரு. நாம நோய சொன்னாலே போரும் அப்டியே அளுதிருவார். அவர் ஒருபாட்டம் அளுதிட்டார்னா நம்ம மனசு லேசாயிரும்ங்க”

எனக்கு இது கொஞ்சம் நம்பும்படியாக இருந்தது. ஒரு மனிதன் நமக்காக அழுகிறான் என்றால்..

“வெங்காயம் மாதவன்னு சொன்னா ஊர்ல தெரியும்” என்றார் நண்பர்

“ஓகோ”

“ஹோமியோ வேறமாதிரி” என்றார் நண்பர் “எந்த அளவுக்கு கம்மியா கெமிக்கல கலக்கிறோமோ அந்தளவுக்கு வீரியம் ஜாஸ்திங்கிறது அவங்க பாலிசி. குண்டுமணி அளவுக்கு பாஸ்பரஸை எடுத்து அண்டாத்தண்ணியில கலக்குவாங்க. அதில ஒரு ஸ்பூன் எடுத்து மறுபடி ஒரு அண்டாத்தண்ணியில கலக்குறது. அதில ஒரு ஸ்பூன் எடுத்துமறுபடியும் ஒரு அண்டாத்தண்ணியிலே..அதில—”

“அப்றம்…?”

“அந்தக் கடைசீ தண்ணி இருக்கே அதோட வீரியம் அணுகுண்டு மாதிரியாக்கும். நின்னு கேக்கும். நம்ம ப்ரண்டோட தம்பி ஒருத்தனுக்கு தலைச்சுத்து. ஒக்காந்தா வாந்தி. நேரா போயி நம்ம கேசவபிள்ளைய பாத்தான். நாலு மடக்கு மருந்து குடுத்தார். நின்னிட்டுது”

நான் பெருமூச்சுவிட்டேன்

“:கும்பகோணத்திலே ஒரு ஹோமியோ இருக்கார். இருக்கிறதிலேயே எசன்ஸை கம்மியா கலக்கின தண்ணி அவரு குடுக்கிறதுதான். காவேரியிலே அவரோட கெமிக்கல கலக்கிட்டு காவேரித்தண்ணியையே குடுக்கிறார். நல்லா கேக்குது”

“எப்ப கலக்கினார்?”

“அவரெங்க கலக்கினார்? அவங்க அப்பாதான் கலக்கினது…”என்றார் நண்பர் “இப்ப உங்க பிரச்சினைக்குத் தொடுவர்மம்கூட நல்லா கேக்கும். உடம்பிலே அங்கங்க தொடுறது…”

“வேணாங்க எனக்கு கிச்சுகிச்சு ஜாஸ்தி”என்றேன்

“சயண்டிஃபிக் டிரீட்மெண்டுங்க” என்றார்.”மாயநாதன்னு ஒருத்தர்.பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். பொம்புளையாளுங்களுக்கு குச்சி வச்சு தொடுவார். முஸ்லீம் பொம்புளைங்கன்னாக்க நெழலையே தொட்டு குணப்படுத்தீருவார்”

“பயங்கரமா இருக்கு” என்றேன்

“இருக்குல்ல? சார் மாற்றுமருத்துவம்னா சும்மா இல்ல. இங்கிலீஷ்ல நாலஞ்சு வார்த்தைய வாசிச்சுட்டு வெள்ளைக்கோட்ட மாட்டீட்டு பணத்த கறக்குற பிஸினஸ் இல்ல. தெய்வீகமான மருத்துவம். காலு கையின்னு தனியா பிரிச்சு செய்றதில்ல. ஹோலிஸ்டிக் மெடிசின்…” என்றார் நண்பர் “எனிமா மருத்துவம்னு ஒண்ணு இருக்கு. அதான் பெஸ்ட்”

“என்ன பண்ணுவாங்க?”

“எனிமா குடுக்கிறதுதான்”

“எல்லா நோய்க்குமா?”என்றேன்

“ஆமா, பின்ன?”

“வயித்துப்போக்குக்கு?”என்றேன்.

“அதுக்கும்தான்”என இயல்பாகச் சொல்லி “அதில வெளக்கெண்ணை எனிமான்னு ஒண்ணு இருக்கு. அது மூட்டுநோய்க்கு நல்லது. போட்டுக்கிட்டா நடக்கிறது ஸ்மூத்தா இருக்குன்னு நம்ம பொஞ்சாதியோட தம்பி சொன்னான்”

நான் பெருமூச்சுவிட்டேன். “உங்க மச்சினர் இப்ப எப்டி இருக்கார்?”

“செல்போனிலே கூப்பிட்டேன். பேசமுடியல்லை. நேரா சங்கரன்கோயிலிலே சம்முவம்னு ஒருத்தர் இருக்கார். பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். போயிப்பாருங்கன்னு சொன்னேன்”

நான் தெளிந்து “அவரு என்ன பண்றார்?”என்றேன்

“அறை மருத்துவம்சார்”

“ரூம்லயா?”

“இல்ல”என்றார் “போனதுமே பளார்னு ஒண்ணு விடுவார் பாருங்க. அப்டியே நோய்லாம் பறந்திரும். நம்ம தம்பி மச்சானுக்கு அங்கயே சரியாயிடுச்சுன்னா நம்ப மாட்டீங்க”

“பல்வலியா?”

“எப்டி கண்டுபிடிச்சீங்க?”

 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 21, 2015

முந்தைய கட்டுரைதுன்பக்கேணி
அடுத்த கட்டுரைபெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்