நிதிக்கொடை -கடிதம்

அன்புள்ள ஜெ..

நான் மேலாண்மை படித்த ஊரக மேலாண்கழகத்தின் நோக்கமே, ஊரகத் தொழில்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் மேலாளர்களைத் தயாரித்து அனுப்புவதே. அது, தேசிய பால்வள வாரியத்தில் வேலை செய்ய இந்திய மேலாண் கழகங்களின் பட்டதாரிகள் முன் வராத போது, டாக்டர். குரியனால் துவங்கப் பட்டது.

திருபுவன் தாஸ் ஃபவுண்டேஷன், , ஆகா கான் ஃபவுண்டேஷன், பூதான இயக்க காலத்தில் துவங்கப்பட்ட அஸேஃபா, தான் பவுண்டேஷன், சேவா மந்திர், மைராடா, சேவா, தென்னிந்திய மீன பிடிப்போர் கூட்டுறவு இயக்கம், காதி இயக்கம், மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு நிறுவனங்கள் முதலியவற்றில் எனது மூத்தோர்களும், வகுப்புத் தோழர்களும் பணியாற்றுகிறார்கள். இவர்களில் சிலர் தனியே ஒரு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார்கள் – விவேகானந்தன் என்னும் மூத்தவர் துவங்கிய தென்னிந்திய மீன்பிடிப்போர் கூட்டுறவு இயக்கம். இந்த நிறுவனங்கள் பலவும் தங்களது திட்டங்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியைப் பெற்றவர்கள்.

இது போன்ற நிறுவனங்களையும், அதன் செயல்பாடுகளையும், நாம் நமது தமிழக எழுத்தாளர்கள் , கிறித்துவ நிறுவனங்களின் செயல்பாடுகளையும்– (இவற்றில் மிகப் பல தென் தமிழ் நாட்டில் – வேளாண் தொடர்பான நிறுவனங்களை (KVK) ஒரு பெயருக்கு நடத்தி வருபவை – எனது பார்வையில் சத்தியஜித் ரேவுக்கும் டி.ராஜேந்தருக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும் போல) குழப்பிக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமது நிதிகளை, பல சதிவேலைகளுக்குப் பயன்படுத்தலாம். 70-80 களில், மிகப் பெரும் அளவில் நடந்திருப்பதைப் பலரும் சொன்னார்கள். இன்றும் இருக்கிறது. ஆனால், அது மட்டுமே உண்மை அல்ல என்பதுவே நான் சொல்ல விழைவது.

அதில் எப்படியும் ஒரு சதி உள்ளது – அதனால் அது முழுக்க முழுக்க தீமை மட்டுமே உள்ளது என்பது ஒரு பார்வை. ஆனால், இதை இன்னொரு தளத்தில் பார்க்கும் போது, இதை எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றிய சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டுமே தவிர இவற்றை முற்றிலும் ஒதுக்க முடியாது என்பதே யதார்த்தம்

நான் படித்த கல்வி நிறுவனம் ஸ்விஸ் அரசாங்க உதவியால்தான் உருவானது. தேசிய பால் வள வாரியத்தின் நிதியின் ஆதாரமே, துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளின் தானம் தான். இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு மிகப் பெரும் உதவியே ஃபோர்ட் பவுண்டேஷனின் international maize and wheat Improvement centre ந் உதவியால் உருவாக்கப் பட்ட்துதான். (இதன் மீது எனக்குமே விமர்சனம் உண்டு எனினும், அன்று, வீரிய ஒட்டு கோதுமை விளைச்சல்தான், பஞ்ச காலத்தில் இருந்து நம்மை மேலே கொண்டு வந்தது)

அந்நிய நிதி பிரச்சினை மிக சாதுர்யமாகக் கையாள வேண்டிய ஒன்று. களையெடுக்கப் பட வேண்டும் என்பது உண்மையே. கடந்த சில வருடங்களில், நிதி வரும் சாளரங்கள் ஒடுக்கப் பட்டு, இன்று அதற்கான அனுமதி கிடைப்பதே மிகக் கடினமாகி விட்டது. இன்றைய அரசாங்கம் அதை மேலும் கடுமையாக்கப் போகிறது. பட வேண்டும். ஆனால், இதைக் காரணமாகக் கொண்டு தொண்டு நிறுவனங்கள் என்னும் துறையையே ஒடுக்கிவிடக் கூடாது.

இதற்கு இன்னொரு வழி – மேற்கத்திய நாடுகள் போன்ற philonthropists உருவாகி வருவது. இந்தியாவில் முன்பு, டாட்டா அப்புறம் கொஞ்சம் பிர்லா.. இப்போதுதான் மென்பொருள் முதலாளிகள் கொஞ்சம் கருணை காட்டுகிறார்கள். மற்றபடி அம்பானிகள்/ அதானிகள் / அகர்வால்களிடம் இருந்து பைசா பெயர்வது – கொசுப் ***** இருந்து வெண்ணை எடுப்பது போல. அப்படியெனில், இறுதி வழி, அரசு மிகப் பெரும் நிதியை, ஊரக கல்வி, மற்றும் அடிப்படை வசதிகளுக்குச் செலவிடுவதே. 1987ல் துவங்கிய காஷ்மீர் பிரச்சினை இன்று ஒரளவு கட்டுக்குள் இருப்பதற்கு மத்திய அரசு கொட்டிய நிதி ஒரு முக்கிய காரணம். வடகிழக்கு, மத்திய இந்தியாவின் விளிம்பு நிலை ஊரக மக்களின் மேம்பாடு, இந்நிதிகளின் அவசியத்தை வெகுவாகக் குறைக்கும்.

பாலா

முந்தைய கட்டுரைநிதிவலையின் செயல்முறை- தகவல்கள்
அடுத்த கட்டுரைபூமணி விழா காணொளி