சாங்கிய யோகம் (10 – 25) : செயல்தரும் முழுமை

ஸாங்கிய யோகத்தில் நடைமுறை விவேகம் சார்ந்து செயலாற்றுவதற்கான காரணங்களை இவ்வரிகளில் தொடர்ந்து கண்ணன் சொல்கிறார். செயலாற்று உனக்கு புகழும் செல்வமும் வீரசொற்கமும் கிடைக்கும் என்கிறார். இந்த வரிகள் அனேகமாக எல்லாவகையான நீதிநூல்களும் சொல்வனவே. ஆனால் உன்செயல் ஒட்டுமொத்தமாக இப்பிரபஞ்சத்துக்கு எவ்வகையில் பொருட்டு என்ற கேள்வியை கீதை எழுப்புவதன் மூலம்தான் அது தத்துவத்தளத்தில் அவ்வினாவை எதிர்கொள்கிறது.

‘சின்னமீன் பெரியமீனிடம் கேட்டது, நியாயமா? பெரியமீன் சொன்னது: நியாயமில்லைதான், நீ என்னை விழுங்கு’ என்று ஒரு ஜென் கதை உண்டு. மீன்கள் ஒன்றையொன்று ஒவ்வொரு கணமும் உண்டுகொண்டிருந்தாலும் கடலில் மீன் அப்படியேதான் இருக்கும் என்று எண்ணி ஆழம் புன்னகைசெய்தது என்று என் நண்பர் கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார்.
10. “பாரதனே,
இரு படைகள் நடுவே
வருந்தியமர்ந்தனை நோக்கி
புன்னகையுடன்
முனிவர்க்கிறைவன் பேசலுற்றான்.

11. இறைவன் கூறினார்,
“துயருறத் தேவையற்றோருக்காக
துயருறுகிறாய்.
அறிவுடையோரின் சொற்களையும்
கூறுகிறாய்
இருப்போர்க்கோ இறந்தோர்க்கோ
துயருறுவதில்லை அறிஞர்.

12. நான் எக்காலத்திலும்
இல்லாதிருந்ததில்லை
நீயும் இல்லாதிருந்ததில்லை
இம்மன்னர்களும்
இல்லாதிருந்ததில்லை
எதிர்காலத்திலும்
நாம் இல்லாதிருப்பதில்லை

13. உடல் கொண்டோனுக்கு
உடலில்
குழந்தைமையும்
இளமையும்
மூப்பும்
எவ்வண்ணமோ
அப்படித்தான்
மறுவுடல் பூணுதலும்.
எனவே
துணிவுடையோன்
துயருறுவதில்லை.

14. குந்தி மைந்தனே
புலன்களுக்குப்
பொருட்களுடன் உள்ள உறவு மூலம்
குளிர் வெப்பம் இன்ப துன்பம்
ஆகியவை வந்து போகின்றன
அவற்றை ஏற்றுக் கொள்க.

15. மனிதரில் சிறந்தவனே
இத்தகைய இன்ப துன்பங்கள்
எவரை பாதிப்பதில்லையோ
அவன் இறவாமைக்கு
தகுதியுடையவனாகிறான்

16. இல்லாதது
இருப்பதாவதில்லை
இருப்பது
இல்லாமலாவதுமில்லை
இவ்விரண்டின் உண்மையை
தத்துவமறிந்தோர்
அறிவர்

17. இவையெல்லாம்
எதனால் ஆனதோ அது
அழிவுற்றது என்றறிக.
அழிவற்ற இதை அழிக்க
எவராலும் இயலாது.

18. பாரதனே,
என்றுமுளதாக
வகுத்துரைக்க இயலாததாக
உடல் கொண்டிருக்கும் அதன்
இவ்வுடல்கள் எல்லாம்
முடிவுள்ளவையை எனப்படுகிறது
ஆகவே
போர்புரிக!

19. இதைக் கொல்கிறேன்
என்று உணர்பவனும்
கொல்லப்படுகிறேன்
என்று உணர்பவனும்
உண்மையை அறிவதில்லை
இது கொல்வதில்லை
கொல்லப்படுவதும் இல்லை.

20. இது
உடல் கொல்லப்படுகையில்
பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை
இருந்து இங்கு வந்ததில்லை
ஏனெனில்
இது பிறப்பற்றது
என்றுமிருப்பது
மாற்றமற்றது
தொன்மையானது.

21. பார்த்தா,
யார் அதை
நிலையானதாக
அழிவற்றதாக
பிறப்பற்றதாக
இறப்பற்றமாக
அறிகிறானோ அவன்
யாரைக் கொல்கிறான்?
யாரைக் கொல்விக்கிறான்?

22. மனிதர்கள்
எவ்வண்ணம்
பழைய உடைகள் களைந்து
புத்தாடை அணிகிறார்களோ
அவ்வண்ணமே
உடல் கொண்ட ஆத்மா
மட்கிய உடல்களை உதறி
புதியவற்றைக் கொள்கிறது

23. ஆயுதங்கள் அதை வெட்டுவதில்லை
நெருப்பு எரிப்பதில்லை
நீர் நனைப்பதில்லை
காற்று கரைப்பதில்லை

24. இது பிளக்க முடியாதது
எரிக்கவோ
மட்கவோ இயலாதது.
அழியாதது
எங்கும் பரந்தது
என்றும் உள்ளது
அசைவற்றது
தொடக்கமேயற்றது.

25. அது
சிந்தைக் கெட்டாதது
உணரப்பட ஒண்ணாதது
என்று கூறப்படுகிறது
எனவே
இந்த ஆத்மாவை அறிந்தபின்
வருத்தம் கொள்ளலாகாது.”

இந்தச் செய்யுட்களில் கிருஷ்ணன் ஆத்மா என்ற அழிவற்றதும் பிறப்பற்றதும் ஆன ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். உலகமெங்கும் உள்ள தொன்மையான சிந்தனைகளில் ஏதேனும் ஒரு வகையில் ஆத்மா என்ற கருத்தாக்கம் காணக்கிடைக்கிறது. சாதாரணமாக உயிரும் அதன் வெளிப்பாடுமான மூச்சும்தான். ஆத்மா என்ற எண்ணம் பழங்குடிச் சிந்தனைகளில் உள்ளது. அன்பிறகு பற்பல வளர்ச்சி நிலைகள்.

சொல்லப்போனால் பண்டைய சிந்தனைகளை மதிப்பிடுவதற்கு அவை ஆத்மா என்று கருதுகோளை எந்த அளவுக்கு விரிவுபடுத்திக் கொண்டுள்ளன என்று பார்ப்பதே மிகச் சிறந்த அளவுகோலாகும். ஆத்மா என்பது ஒரு மனிதனின் அறியும் பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு. அதாவது நான் என்று அவன் எதை நினைக்கிறானோ அதுவே ஆத்மா. அகவே ஆத்மாவைப்பற்றியே உருவகமே அவனுடைய பிரபஞ்ச உருவகமும் ஆகும்.

இன்றுவரை நவீன சிந்தனையில் தன்னிலை [subjectivity] என்பதை வகுத்துரைக்கும் புதுக்கோட்பாடுகள் வந்தபடியே இருக்கின்றன என்பதை நாம் கூர்ந்து நோக்க வேண்டும். சிந்தனையின் அடிப்படையாக ‘தான்’ என்றால் என்ன என்பதை வகுத்துக்கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு உள்ளது. இந்த கோணத்தில் நாம் பழங்காலம் முதல் இன்றுவரை ஆத்மா அல்லது தன்னிலை என்ற கருதுகோள் எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆத்மா எனும் கருத்துருவம்

ஆத்மா என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் என்ன? அது (அத:) என்ற மூலச்சொல்லில் இருந்து கிளைத்தது அச்சொல் என்பது ஏற்கத்தக்க ஒருவாதம். ”அதோ அது” என்று சுட்டிக்காட்டப்படுவது எதுவோ அதுவே ஆத்மா. இன்னொரு அர்த்தம் ‘சாராம்சம்’ என்பது. நாம் காணும் ஒவ்வொன்றிலும் உறையும் மையமான, சாரமான, ஒன்றுதான் ஆத்மா.

இந்து ஞான மரபில் பொருள்முதல்வாதிகளான சாங்கிய, யோக, வைசேஷிக, நியாய தரிசனத்தைச் சேர்ந்தவர்களும் ஏதோ ஒருவகை ஆத்மாவை உருவகம் செய்துள்ளனர். இந்திய ஞானமரபில் இரண்டு எல்லைகள் இதில் காணக்கிடைக்கின்றன. சமணர்கள் சர்வாத்மாவதம் என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். அனைத்திற்கும் ஆத்மா உண்டு என்பது இதன் கருத்து. மனிதர்கள் விலங்குகள் புழுப்பூச்சிகள் தாவரங்கள் மட்டுமல்லாது கல் மண் காற்று நீர் போன்ற அனைத்துக்குமே ஆத்மா உண்டு என்கிறார்கள். இவர்கள் கூறும் ஆத்மா என்பது சாராம்சமே. நீருக்கு நீர்த்தன்மையை அளித்து அதை நீராக நிலைநிறுத்துவது எதுவோ அதுவே அதன் ஆத்மா.

இன்னொரு எல்லையில் பெளத்தர்கள் ‘அனாத்தம்’ (இது பாலி மொழிச் சொல். சமஸ்கிருதத்தில் அனாத்மம். ஆத்மா இன்மை) என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். அநித்தம் (அநித்யம், நிலையின்மை) அநாத்தம், துக்கம் (அறியமையின் துயரம்) ஆகியவையே பெளத்த தத்துவத்தின் மூன்று அடிப்படைகள். பெளத்தர்களைப் பொருத்தவரை எப்பொருளுக்கும் நிலையான மாறாத இயல்பு என்று ஏதும் கிடையாது. பொருட்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் மட்டுமே. மாறா இயல்பு இல்லை என்பதனால் அவ்வியல்புகளை நிலைநாட்டும் மாறாத சாராம்சமும் இல்லை. பொருட்களை நிகழ்த்தும் விதி (அல்லது நியதி) மட்டுமே உள்ளது. அதை அவர்கள் தர்மம் என்கிறார்கள்.

இந்து ஞானமரபில் ஆத்மா என்ற கருதுகோளின் வளர்ச்சியை ரிக்வேதம் முதல் காணலாம். ‘பருப்பொருளாகிய மனித உடலில் நுண்ணிய இருப்பாக எஞ்சுவது அது’ என்ற அடிப்படை உருவகம் பலவாறாக வளர்ந்து உபநிடதங்களில் கிட்டத்தட்ட முழுமை வடிவம் அடைந்து இன்றுவரை அதுவே முன்வைக்கப் படுகிறது. உபநிடதங்கள் ஆத்மா என்று கூறுவது எதை, அதன் இயல்புகள் என்ன என்பது மிக விரிவாகப் பேச வேண்டிய ஒரு தலைப்பு. இந்நூலின் பிற்பகுதியில் அது குறித்த விவாதங்கள் விரிவாக வரும். ஒருவகையில் இந்து தத்துவ ஞானத்தின் சாரமான அடிப்படை விவாதமே அது சார்ந்ததுதான். இங்கு ஒரு எளிய சித்திரத்தை மட்டும் அளித்து மேலே செல்லலாம்.

எல்லா புலன்களையும் மூடிவிட்டு தனித்திருக்கும் ஒருவனில் ‘நான் இருக்கிறேன்’ என உணர்வது எதுவோ அதுவே ஆத்மா என்பதே உபநிடதங்கள் அளிக்கும் முதல்கட்ட விளக்கம். அதாவது பருப்பொருட்களால் ஆன உடலுக்குள் ஒரு ‘தன்னிலை’ குடியிருக்கிறது. தன்னை அது உணர்கிறது. ஒவ்வொரு புலனும் ஒன்றை உணர்கிறது. வெளிச்சத்தை கண்ணும், ஒலியை காதும் உணர்கின்றன.  ஆனால் இந்தத் தன்னிலையானது தான் இருப்பதை தானே உணர்கிறது. அதற்கு அதுவே புலன் ஆக உள்ளது. ஆகவே அது ‘தன்னொளி’ உடையது (சுயம்பிரகாசம்.)  என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

நாமே இதை உணரலாம். நமக்கு ஒருவிபத்து நிகழும்போது நம் மனம் பதறுகிறது, தப்பமுயல்கிறது. ஆனால் அந்த பதற்றம் எதிலும் பங்கேற்காமல் நம்முடைய அகம் ஒன்று அந்நிகழ்வை வேடிக்கை பார்க்கவும் செய்கிறது. ஆகவேதான் கணநேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நம்மால் மணிக்கணக்காக துல்லியமாகச் சொல்ல முடிகிறது. கடும் துயர் உறும்போதும், கடும் அச்சத்திற்கு ஆளாகும் போதும் மனிதன் அதையெல்லாம் அனுபவிப்பது அவனுக்கே தெளிவாகத் தெரிகிறது. அதாவது அவற்றை அனுபவிக்காமல் அவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்று அவனில் உள்ளது. அதாவது அது உலக அனுபவங்களில் ஈடுபடும்போதும் கூட உலக அனுபவங்களால் பாதிப்படையாததாக உள்ளது. தன் இருப்பை தானே அது உணர்கிறது. அந்த தன்னிலை என்ன என்ற வினாவே தொன்று தொட்டு இன்றுவரை தத்துவத்தின் பெருவினாவாகும்.

அன்னையின் வயிற்றில் ஒரு சிறு தசைத்துளியாக உருவாகும் மானுட உடலானது தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டு தன்வழியை தானே கண்டடைந்து வெளிவருகிறது. அதாவது அந்த தசைத்துளிக்குள் கருத்து வடிவில் உள்ள அதன் சாராம்சமான ஒன்றுக்கு தன்னை உருவாக்கிக் கொள்ளும் இச்சை உள்ளது. மாபெரும் ஆலமரம் சின்னஞ்சிறு ஆலமரத்தின் விதையின் கருவில் ஒரு கருத்து வடிவில் இருப்பது போல என்று சாந்தோக்ய உபநிடதம் இதைக் குறிபிபடுகிறது. அதாவது தன்னை இப்புவியில் நிகழ்த்திக் கொள்ளும் விருப்பமும் தன்னை தான் என உணரும் தன்மையும் அதற்கு உள்ளது. இவையே கன்மமலம் என்றும் ஆணவமலம் என்றும் முறையே குறிப்பிடப்படும் இயல்புகள். இவை கருவடிவிலேயே அந்த சாரத்துக்கு உள்ளன. இவ்வியல்புகள் உடைய அதை ‘சாரமானது’ ‘அதுவானது’ என்ற பொருளில் ஆத்மா என்றனர்.

ஒர் உடலுக்குள் இருந்து கொண்டு தன்னை ‘தான்’ என உணரும்போது (அதாவது ஆணவமலம் கொள்ளும்போது) அது ஜீவாத்மா ஆக உள்ளது. இவ்வாறு பூமியில் அனைத்து உயிர்களிலும் பற்பல வடிவில் பரவி இருக்கிறது அது. அவ்வாறு பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கும் ஆத்மா உண்மையில் ஒன்றே. அந்த ‘தான்’ தன்னையே பலவாக உணர்கிறது. சங்கரரின் உவமை இது. குடத்திற்குள் உள்ள வானம் சிறியது என்றும் உருண்டையானது என்றும் நமக்குப் படுகிறது. வெளியே விரிந்துள்ள எல்லையற்ற வானம் மாபெரும் வெளி என்று படுகிறது. உண்மையில் இரண்டும் ஒன்றுதான். குடம் உடைந்தால் குடத்துள் உள்ள வானம் (குடாகாசம்) பெருவெளி (மடாகாசம்) ஆகிவிடுகிறது. குடமே அதை தனியாக உணரச் செய்கிறது.

உயிர்கள் அனைத்திலும் உறையும் அதுவே பிரபஞ்சம் அனைத்திலும் உறைகிறது. பிரபஞ்சம் என்பதே அதுதான். பிரபஞ்சம் என்பதும் ஆத்மா என்பதும் அதன் பலவித தோற்ற நிலைகள் மட்டுமே. அது பிரம்மம். புகழ்பெற்ற உபநிடத ஆப்த வாக்கியங்கள் இந்த தரிசனத்தின் பல்வேறு படிநிலைகளை விளக்குகின்றன 1. பிரக்ஞையே பிரம்மம். 2. நானே பிரம்மம் 3. அது நீதான் 4. இவையனைத்திலும் ஈசன் உறைகிறான். (பிரக்ஞானம் பிரம்மாஸ்மி, அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி, ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்)

ஆத்மா குறித்த கிரேக்க சிந்தனை

ஆத்மா குறித்த கோட்பாடுகளில் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது முதன்மையாக கிரேக்கக் கோட்பாடுகளையாகும். விரிவான ஆய்வுக்கு இது இடமல்ல எனினும் முதல் நூலான பிளேட்டோவின் குடியரசு நூலில் இருந்து சில கருத்துக்களை மட்டுமே கூறலாம். குடியரசு பத்தாம் நூலில் 473 முதலான வசனங்களில் கிளாக்கனும் சாக்ரடீசும் உரையாடும்போது சாக்ரடீஸ் நீண்ட அறவிவாதத்தின் முடிவை நெருங்குகிறார். ‘இவ்விவாதத்தால் நான் தெளிவுற்றேன் யாவருமே தெளிவு பெற்றிருக்க வேண்டும்’ என்கிறான். (கீதை பதினெட்டாம் அத்யாய இறுதியில் ஏழாம் பாடலில் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் இதே வசனத்தை கூறுவது கவனிக்கத்தக்கது.)

அதற்குப் பதிலாக சாக்ரடீஸ் ‘அறம் அடையும் மிக உயர்ந்த பரிசு பற்றி இதுவரை நாம் பேசவில்லை’ என்கிறார். ஆச்சரியத்துடன் ‘என்ன அதைவிட மேலானது ஒன்று உண்டா? அப்படி இருப்பின் அவையனைத்துமே நினைத்தற்கரிய பெருமையுடையதாயிருக்குமே?’ என்கிறார் கிளாக்கன். அதற்கு சாக்ரடீஸ் ‘மனிதனின் ஆத்மா அழியாயதது – அழிக்க முடியாதது என்பதை மறந்து விட்டாயா?’ என்கிறார். பெரு வியப்பு அடைந்த கிளாக்கன் ‘இல்லை! கடவுள் மீது ஆணையாக! இதை கடைசிவரை ஊர்ஜிதம் செய்ய தயாராக இருக்கிறீர்களா?’ என்று கூவுகிறார். சாக்ரடீஸ் ‘ஆம் நான் செய்தாக வேண்டும். நீயும் கூடத்தான்’ என்று கூறி மீண்டும் விவாதத்தைத் தொடர்கிறார்.

இதன் பிறகு சாக்ரடீஸ் உருவாக்கும் தர்க்கத்தின் அழகை குடியரசை வாசித்துத்தான் தெரிந்தது கொள்ள வேண்டும். சுருக்கமாக இப்படிக் கூறலாம். மண்ணில் உள்ளவை அனைத்துமே அழிகின்றன. அதற்கு காரணம் ஒவ்வொன்றிலும் உறையும் ஒரு தீய இயல்புதான். தானியத்தில் காளான் போல, இரும்பு துருப்பிடிப்பது போல, ஒரு பொருளின் அழிவானது அதிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு பொருளில் அதன் அழிவுக்கான தீமை உறையாவிடில் பிறிதொன்றால் அதை அழிக்க இயலாது என்கிறார் சாக்ரடீஸ்.

உடலுக்குள் உறையும் நோய் உடலை அழித்துவிடக்கூடும். இவ்வாறு ஆத்மாவை அழிக்கும் தீங்கு உண்டா என்று சாக்ரடீஸ் வினவ கிளாக்கன் ”நேர்மையற்ற தன்மை, மிதமின்மை, கோழைத்தன்மை, அறியாமை ஆகியவை ஆத்மாவுக்குத் தீங்குகளே” என்கிறார். ”அவை ஆத்மாவை பாழடித்து உடலில் இருந்து பிரித்து விடுமா?” என்கிறார் சாக்ரடீஸ். ”நிச்சயமாக இல்லை” என்று கிளாக்கன் மறுக்கிறார். ”’ஆம், உடலை ஒரு புறப்பொருள் அழிக்கும்; அது ஆத்மாவை அழிக்க முடியாது’ என்று வாதாடுகிறார் சாக்ரடீஸ்.

”சுரமோ அல்லது மற்ற நோய்களோ, அல்லது தொண்டையில் வைத்த கத்தியோ அல்லது உடலை சுக்குநூறாக வெட்டுவதோ ஆத்மாவை அழித்துவிட முடியாது. ஆன்மாவே உடலுக்கு நேர்ந்த இக்கதியினால் அது புனிதமிழந்து போய்விட்டது என்று எண்ணிக்கொண்டால் ஒழிய” என்கிறார் சாக்ரடீஸ். ஆத்மாவைப் பீடிக்கும் வியாதிகள் உண்டு, கிளாக்கன் கூறியதுபோல. ஆனால் அவை ஆத்மாவை அழிப்பதில்லை. அப்படி அழிக்குமெனில் அந்த களங்கம் உடையவர்கள் தாங்களே அழியவேண்டுமல்லவா? ”ஆத்மாவின் இயல்பாகக் காணப்படும் இயற்க்கைக் குற்றம் அல்லது தீமை ஆத்மாவை கொல்லவோ அழிக்கவோ முடியாதெனில் மற்ற ஏதாவது ஒன்றை அழிப்பதற்காக ஏற்பட்ட எதுவும், அது எதை அழிப்பதற்காக அமைக்கப்பட்டதோ அதைத்தவிர ஆத்மாவையோ பிறிது ஒன்றையோ அழித்துவிட முடியாது” என்று சாக்ரடீஸ் வாதிடுகிறார்.

”உள்ளேயிருப்பதாயினும் சரி வெளியில் இருந்து வந்ததாயினும் சரி தீமையினால் அழிக்க முடியாத ஆத்மா எப்போதும் நிலையான ஒன்றாகும். அது எப்போதும் இருக்க வேண்டும் என்பதனாலேயே அது அழியாத ஓன்றாக இருக்க வேண்டுமல்லவா?” என்று கூறும் சாக்ரடீஸ் ”ஆம் அதுதான். உண்மையில் ஆத்மாக்கள் எப்போதும் ஒன்றாக ஒற்றைப்பேரும் விரிவாக இருக்க வேண்டும். அவை அழியாவிடில் எண்ணிக்கையில் குறையா. அவை அதிகரிக்கவும் செய்யா. ஏனெனில் அழியாத் தன்மையின் வளர்ச்சி அழியும் தன்மையில் இருந்து வரவேண்டும்…” என்கிறார்.

இவ்வாறு தர்க்கபூர்வமாக நாம் காணும் ஆத்மாவை கடற்கடவுள் ‘கிளாக்கஸ் (Glaucus)’ உடன் ஒப்பிடலாம் என்கிறார் சாக்ரடீஸ். அவரது வடிவம் அலைகளால் சிதறடிக்கப்பட்டு பாறைகளாலும் கடற்பாசிகளாலும் மூடிக் கிடப்பதனால் அவரது உண்மை உருவத்தை காண்பது மிக அரிது. நாம் காணும் ஆத்மாவும் இவ்வண்ணம் பல்லாயிரம் ‘நோய்களால்’ உருவழிக்கப்பட்டு தென்படுகிறது என்று சாக்ரடீஸ் கிளாக்கனுக்கு விளக்குகிறார்.

ஆத்மாவின் உண்மையான இயல்பை எப்படி அறிவது? இங்கு சாக்ரடீஸ் கவித்துவம் மிக்க உருவகத்திற்குப் போகிறார். ”அறிவின் மீது அந்த அணங்கு கொண்ட காதலில் நாம் அவள் இயல்பைக் காணவேண்டும். அழியாமை, முடிவின்மை, தெய்வீகத்தன்மை ஆகியவற்றுடன் உள்ள தனது உறவின் காரணமாக எந்தக் கூட்டத்தை, எந்த உரையாடலை அவள் நாடுகிறாள் என்பதைக் கொண்டு அவளை அறியவேண்டும். மேலும் உயர்ந்த கொள்கையை கடைப்பிடிக்கும் போது அவள் எப்படி ஒரு தெய்வீக உணர்வுடன் முற்றிலும் மாறுபடுகிறாள் என்றும் மகத்தான முறையில் இப்போது அவள் இருக்கும் அலைகடலில் இருந்து எப்படி வெளிப்பட்டு எழுகிறாள் என்றும் கற்கள் கிளிஞ்சல் இன்னும் அவளைச் சுற்றிப் பரவிய உலகப் பொருட்களில் இருந்தும் பாறைகளில் இருந்தும் விடுபட்டு இவ்வாழ்வின் அற்புதப்பொருட்களால் சூழப்பட்டு எப்படி நிற்கிறாள் என்றும் காணவேண்டும். அப்போதுதான் அவளது இயல்பான தன்மையைக் காணலாம்…” என்று வருணனை செய்கிறார் சாக்ரடீஸ்.

இதைத் தொடர்ந்து அர்மேனியல் என்பவனின் மகனான ‘எர்’ என்பவள் இறந்து போய் அவளது ஆத்மா சொற்கத்துக்குப்போய் அங்கு ஆத்மாக்கள் என்ன ஆயின என்பதைப் பார்த்த கதையைக் கூறி ஆத்மாக்கள் இயல்பிலேயே நன்மையை நாடுபவை. ஆனால் தீங்குகளால் பீடிக்கப்பட்டவை. அவற்றின் தீங்குகள் அவற்றை மேலும் தீங்குகளுக்கு இட்டுச் செல்கின்றன என்று விளக்குகிறார் சாக்ரடீஸ். ‘குடியரசு’ கிட்டத்தட்ட முடியும் இடம் இது. இங்கு கவனத்திற்குரியது இந்து ஞானமரபைப் போலவே அழிவற்றதும் விளக்க முடியாததுமான ஆத்மாவைப்பற்றி பேசிய அதே சாக்ரடீஸ் தொடர்ச்சியாக அதை விளக்க ஆத்மா ‘சொர்க்க’த்துக்குப்போன புராணக்கதையையும் பயன்படுத்துகிறார். ஏற்கனவே கூறியதைப் போல புராணக் கதைகளை உருவகங்கள் என்ற அளவிலேயே எக்காலமும் தத்துவ மதங்கள் கையாண்டு வந்துள்ளன.

ஆத்மாவும் பிற மதங்களும்

ஆத்மா குறித்த சாக்ரடீஸ் கூறியவற்றுடன் கீதையை இதற்குள் வாசகர்கள் ஒப்பிட்டிருப்பார்கள். கிரேக்க மரபில் மேலும் பற்பல உருவகங்களும் விவாதங்களும் உள்ளன. இந்து ஞானமரபு போலவே தொன்மையும் ஆழமும் உடைய கிரேக்க மரபில்தான் இவ்வாறு ஒப்பிடத்தக்க கருத்துக்கள் உள்ளன. செமிட்டிக் அல்லது ஆபிரகாமிய மதங்களில் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) எளிமையான நேரடியான  உருவகமே காணப்படுகிறது. மனித உடலுக்குள் பிரக்ஞை வடிவில் இருப்பது ஆத்மா. இது பாவத்தின் காரணமாக உடலில் குடியேறுகிறது.  இறைவனுக்கு நேர் எதிரான தீய சக்தியான சாத்தானின் தூண்டுதலால் பாவங்கள் செய்கிறது. உடலை நீத்தபின் நியாயத் தீர்ப்பு நாளுக்காக காத்திருந்து அந்த நாளில் தன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனால் நரகமோ சொற்கமோ அளிக்கப்பட்டு அங்கு செல்கிறது என்பது யூத, கிறிஸ்தவ மதத்தின் கருத்து.

இறைவனால் உருவாக்கபட்ட மனித ஆத்மா இறைவனின் கட்டளைப்படி இயங்க கடமைப்பட்டது. கட்டளைப்படி இயங்காவிடில் நியாத்தீர்ப்பு நாளில் நரகம் புகநேரும். கட்டளைப்படி இயங்குபவர்கள் சொர்க்கம் சென்று பலவகையான இன்பக் கேளிக்கைகளை துய்ப்பார்கள். இது இஸ்லாமிய உருவகம். இம்மதங்களில் மனிதனுக்கு மட்டுமே ஆத்மா உண்டு என்ற கருத்து உள்ளது. பிற உயிர்களும் தாவரங்களும் ஆத்மாவில்லாத பொருட்களாகவே கருதப்படுகின்றன.

ஆத்மாவும் கரணிய நோக்கமும்

கீதையில் முன்வைக்கப்படும் ஆத்மா குறித்த இந்தக் கோட்பாட்டுக்கு கரணிய ரீதியான எந்த விளக்கம் அளிக்க இயலும்? எளிய பகுத்தறிவுப் பார்வையில் இதெல்லாம் வெட்டிப்பேச்சு என்றும், அன்றாட வாழ்வில் புலனறிதல்கள் மூலம் இதை அறியவோ பிறருக்கு நிரூபிக்கவோ எந்தவிதமான வழியும் இல்லை என்றும் சொல்லலாம். ஆகவே இது ஒரு பொய்யான கற்பனை என்று நிராகரித்தும் விடலாம். ஆனால் வரலாற்றையும் தத்துவத்தையும் அறிவியல் நோக்குடன் அணுகும் கரணிய ஆய்வு இன்றும் விரிவான விவாதத்தை மேற்கொண்டாக வேண்டும்.

‘ஆத்மா’ என்ற கருதுகோளானது உலகம் முழுக்க இரண்டு அடிப்படை வினாக்களுக்கான பதிலாக உருவாகி வந்துள்ள ஒன்றாகும்.

 1. பருப்பொருட்களினால் ஆன இப்பிரபஞ்சத்தில் பரும்பொருட்களிலான இந்த உடலுக்கும் உயிர்த்தன்மை என்ற இயல்பு உள்ளது. பருப்பொருட்களினால் ஆன இந்த உடலானது அந்த உயிரின் தேவைக்கு ஏற்ப வடிவம் கொண்டது. அதன் தேவைக்கு ஏற்ப இயங்குகிறது. அதைப் பாதுகாக்கவும் அதை மேலும் உருவாக்கவும் சலியாது உழைக்கிறது. அது நீங்கியதும் மீண்டும் வெறும் பருப்பொருளாகி விடுகிறது.மப்படியானால் அந்த உயிர்த்தன்மை என்பது என்ன?

 2. உயிர் கொண்ட உடல்களுக்குள் பிரக்ஞை எனும் அம்சம் உள்ளது. தன் இருப்பை அது உணர்கிறது. தன்னை பிறிதிலிருந்து பிரித்தறிகிறது. தன் புலன்களினால் புற உலகத்தைப் பார்த்து தன் கற்பனையில் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிக்கொள்கிறது. ஏன் அப்படிச்செய்கிறது? அந்த சிந்தனைகள் உருவகங்கள் போன்றவற்றுக்கு என்ன பொருள்?

அதாவது நம்முள் உள்ள உயிர் என்பது என்ன, அவ்வுயிராம் உருவகிக்கப்படும்  அகப்பிரபஞ்சம் ஏன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது?

இவ்விரு கேள்விகளுக்கான பதிலாக அது ‘ஆத்மா’ என்று உருவகிக்கப்பட்டது. மேலே நாட்டு மொழிகளில் இதற்கென உள்ள Soul (பிறப்பது) Spirit (ஆவி) போன்ற சொற்களின் மூலங்களுடன் ஒப்பிடுகையில் ஆத்மா (அதுவானது) என் சொல் மேலும் தத்துவார்த்தமாக உருவகிக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.

மேற்குறிப்பிட்ட இரு வினாக்களுக்கும் நவீன அறிவியலும் ‘புறவயமான’ ‘நிரூபிக்கப்படத்தக்க’ பதில்கள் எதையும் அளிக்கவில்லை என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். நவீன அறிவுஜீவிகள் ஆகப்புதிய கோட்பாடாக தெரிதாவின் மொழியியல் தன்னிலை ழாக் லகானின் உளவியல் தன்னிலை குறித்தோ ஏதாவது சொல்வார்கள். அவையும் வெறும் ஊகங்கள் மட்டுமே. தன்னிலை, பிரக்ஞை ஆகியவற்றைப் பற்றி பத்து வருடங்களுக்கு ஒரு புதுக் கொள்கை உருவாகி வருகிறது.

அறிவியலில் உள்ள இந்த ஊகங்களின் பொதுத்தன்மை என்னவென்றால் இவை அனைத்துமே உயிர், பிரக்ஞை ஆகியவற்றின் உருவாக்கத்திற்கான மூலகாரணமாக ‘தற்செயல்’ என்பதையே முன்வைக்கின்றன என்பதுதான். காரணம் தற்செயலை மறுத்தால் உயிர், பிரக்ஞை ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு அடிப்படையான காரணம் உண்டு என்பதை ஏற்க வேண்டியிருக்கும். காரணம் உண்டு என்றால் அது என்ன என்றும் அது யாருடைய இச்சை என்றும் வினவ வேண்டியிருக்கும். ‘மறைந்து கிடப்பது என்ன யாருடைய இச்சை?’ என்று ரிக்வேதம் எழுப்பிய வினாவை அவர்களும் எழுப்ப வேண்டியிருக்கும். மதவாதிகளைப்போல அங்கீகரிக்கத்தக்க நிரூபிக்கத்தக்க புறவய விளக்கத்தை அறிவியலால் முன்வைக்கவே இயலாது என்று நான் கூறமாட்டேன். முடியலாம். ஆனால் இன்று உள்ளவை ஊகங்களே.

அறிவியல் அளிக்கும் அதி நவீன ஊகங்கள் அளவுக்கே காரிய-காரணத் தொடர்பு உடையதும், விரிவானதுமான ஊகமே வேதங்களின் பிற்பகுதியில் தொடங்கி உபநிடதங்களில் முழுமைபெற்று கீதை வெளிப்படுத்தப்படும் ஆத்மா குறித்த கோட்பாடு. உடலுக்குள் உள்ள ஆத்மா உடலை கருவியாக்கி தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தை அறிகிறது. அதிலிருந்து வேறுபடுத்தி தன்னை தானே அறிகிறது. தானே தன் உடல் என்று எண்ணுகிறது. உடலின் ஒவ்வொரு அணுவும் வாழ எண்ணும் ஆத்மாவின் இச்சையின் பருவடிவமே. நடக்க வேண்டும் என்ற இச்சையே கால்கள். செயல்வேட்கையே கைகள். ஒளிவேட்கையே கண்கள்.

இதேபோல இப்பிரபஞ்சத்தின் பருவடிவத்தையே ஒட்டுமொத்தமாக ஒர் உடலாகக் கொண்டால் அதன் ஆத்மாவாக இருப்பது எது? அதுவே பரமாத்மா. நம்முடைய உடலில் இருக்கும் ஆத்மாவே நம் கைவிரல்களுக்கும் கால் விரல்களுக்கும் ஆத்மாவாக உள்ளது. அதுபோல பிரபஞ்சத்தின் ஆத்மாவே அதில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் ஆத்மாவாக உள்ளது. கை விரலின் உயிர், கால்விரலின் உயிர் உன்று பிரித்துப் பார்ப்பது போலவே நாம் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களைப்பிரித்துப் பார்க்கிறோம். இருப்பது ஒரே பேருயிர், ஒரே பிரபஞ்சம். பிற அனைத்தும் அதன் துளிகளிலும் துளிகளாகிய உறுப்புகள் மட்டுமே.

ஒரு உடலில் உள்ள கை தன்னை ஒரு தனித்த இருப்பாக கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அக்கற்பனை பொய்யானது. அதுவே மாயை. மாயையால் பிரபஞ்சப் பேராத்மாவின் பகுதியான மானுட ஆத்மா தன்னை தனித்துக் காண்பதும் மாயையே. ஆனால் இந்த மாயையானது ஒரு ‘பொய்’ அல்ல. அது வேறுவகை யதார்த்தம். அந்த யதார்த்தத்தில்தான் நம் அன்றாட வாழ்கை நடந்து கொண்டிருக்கிறது. அதை நிராகரிக்க இயலாது. என்னுடைய உடல் ஒரு முழுமை என்பது எத்தனை உண்மையோ அதேயளவு உண்மைதான் என் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனியான பிறப்பிறப்பும், சுக துக்கங்களும், வாழ்க்கையும் உள்ளன என்பது. ஒரு யதார்த்தம் இன்னொன்றை மறுப்பதில்லை. அது அதைவிட பெரு மடங்கு பிரம்மாண்டமான இன்னாரு யதார்தத்தத்தில் அது அமர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இந்து ‘ஆத்மா கோட்பாடு’ இதுவே.

இங்கே என் நிலைபாடை சொல்லி மேலே செல்கிறேன். என்னுடைய நோக்கில் அறிவிலும் தத்துவமும் அளிக்கும் ஊகங்களில் ஆத்மா எனும் கோட்பாடே பிரபஞ்சம் தழுவியதாகவும் பலநூறு வாழ்க்கை சார்ந்த வினாக்களுக்கு விடையளிப்பதாகவும் உள்ளது. அதேசமயம் என் வாழ்வில் தனிப்பட்ட முறையில் இதை நான் திட்டவட்டமாக உணராத வரை இதை நாம் ‘நம்பி ஏற்கப்’ போவதில்லை. இக்கோட்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து பயில்பவனின் இடத்திலேயே என்னை வைத்திருப்பேன்.

ஆனால் நான் அறியமுடியாமைவாதி (agnostic) அல்ல. அது ஒர் எதிர்நிலை. ஒரு வகையில் அறிவின் பயனையும் தத்துவத்தின் பணியையும் மறுப்பது. நவீன மேலைச் சிந்தனையில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள எதையும் முழுக்க அறிந்துவிடமுடியாது என்றுவாதிடும் அறியமுடியாமைவாதம் கிறிஸ்தவம் முன்வைத்த எளிய பிரபஞ்ச உருவாக்கத்தை உதறி, நவீன அறிவியல் முன்வைக்கும் மாபெரும் பிரபஞ்சப் புதிர்களுக்கு விடையும் காணமுடியாமல், தவித்து நிற்கும் ஒரு நிலையே. என்னை நான் சாதகன் (அறிய முயல்பவன்) என்று அடையாளப்படுத்திக் கொள்வேன். தங்களை எங்கு நிறுத்திக் கொள்வது என்பதை வாசகர்தான் முடிவு செய்ய வேண்டும்.

சாங்கிய யோகத்தின் இப்பகுதியில் கிருஷ்ணர் இன்றும் அடிப்படையான வினாக்களுக்குள் புகவோ தத்துவார்த்தமான ஆய்வை நிகழ்த்தவோ இல்லை. அர்ஜுனனின் தடுமாற்றத்திற்கான விடையாக அன்றைய சூழலில் ஒரு சிறந்த ஷத்ரிய வீரனுக்கு  தேவையான ஒரு தர்க்க அமைப்பை முன்வைக்கிறார். அது உபநிடதங்கள் பூத்து கொண்டிருந்த காலம். ஆகவேதான் உபநிடத ஞானமாகிய ‘அழிவிலாத ஆத்மா’ என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். மறுபிறப்பு சார்ந்த நம்பிக்கையை அதன் அடிப்படையில் விளக்குகிறார். இந்த நடைமுறை யதார்த்தம் சார்ந்த தத்துவத்தை சாங்கியம் என்று வகுத்துக்கொண்டு இதை ஏற்று மனதை ஒருமுகப்படுத்தி நடுநிலையில் நின்று ஆற்றும் செயலை யோகம் என்று விளக்குகிறார்.

பரம்பொருள் இரண்டாகுமா? சங்கர-ராமானுஜ விவாதம்

இப்பகுதியில் பனிரண்டாவது பாடலை முன்வைத்து முதல் ஆசாரியர் இருவரின், நடந்த விவாதம் ஒன்றை குறிப்பிட வேண்டியுள்ளது. (இத்தகைய விவாதங்கள் உண்மையில் கீதையின் இந்த பாடலை முகாந்திரமாக வைத்து நடைபெறுவன. ஆகவே கீதையின் பொருளில் இருந்து பெரிதும் விரிந்து செல்வன. எனினும் கீதை எத்தகைய அறிவுச் செயல்பாட்டின் களமாக இருந்தது என்று காட்டும் பொருட்டு இவற்றையும் சேர்ந்து கற்பது நல்லது. கீதையை ஒரு நூலாக அல்ல, ஒரு விவாதப் பரப்பாகவே கற்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியது இதன் பொருட்டேயாகும். வாசகர் இப்பகுதி சிக்கலாக இருப்பதாக உணர்ந்தால் விட்டுவிட்டுக்கூட மேலே செல்லலாம்)

சங்கரர் சொல்வது இது. கண்ணன் இப்பாடலில் இதற்கு முன் எப்போதும் ‘நான்’ இல்லாமலிருந்ததும் இல்லை இனி இல்லாமலே இருக்கப் போவதும் இல்லை. அது போலத்தான் ‘நீ’ யும் என்று கூறி நான், நீ, என்ற பேதத்தைக் காட்டுகிறார். ஆனால் இது உண்மையான பேதம் இல்லை. அனைத்துமே ஒன்றுதான் என்ற பொருளிலே இங்கே நாம் என்ற சொல்லாட்சி வருகிறது. சங்கரரின் அத்வைதப்படி ஒரு ஆத்மா தன்னைப் பிறிதிலிருந்து பிரித்துப் பார்ப்பது என்பதே மாயையின் விளைவுதான். மெய்ஞானம் பெற்றவனுக்கு பேத புத்தி இருக்காது. கிருஷ்ணன் பேதபுத்தியை கடந்தவர். ஆயினும் இங்கு அர்ஜுனன் பேதபுத்தியை கடக்காதவனாக இருப்பதனால் மட்டுமே  அவனுக்குப் புரிவதற்காக ‘நான்- நீ’ என்று பிரித்து கூறுகிறார் என்கிறார் சங்கரர். பிற்பாடு இந்த பேதம் தகர்க்கப்படுகிறது என்று வாதிடுகிறார்.

வசிஷ்டாத்வைதத்தின்படி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறுதான். அப்படி உணரப்படுவது மாயையினால் அல்ல. அது ஒரு உண்மை. அது பரமாத்மாவின் இச்சை. பரிபூரணத்தில் ஜீவாத்மா பரமாத்மாவை அடைகிறது. இதை நிறுவ இந்தப் பாடலை விரிவாக விவாதித்து பயன்படுத்திக் கொள்கிறார் ராமானுஜர். ‘பரம்பொருளாகிய நான் நிரந்தரமானவன் என்பது எத்தனை உண்மையோ அப்படியே ஜீவாத்மாவாகிய நீயும் நிரந்தரமானவன் என்பதும் உண்மை’ என்று இங்கே கிருஷ்ணர் கூறுகிறார் என்கிறார் ராமானுஜர்.

இதைத் தொடர்ந்து ராமானுஜர் தன் உரையில் சங்கரரின் அத்வைதம் அல்லது அபேதவாதம், பாஸ்கரர் கூறும் பேத-அபேதவாதம் ஆகியவற்றை விரிவான உதாரணங்கள் மூலம் நிராகரிக்கிறார். பாஸ்கர மதத்தின்படி இப்புவியில் பல ஆத்மாக்கள் உண்டு என்ற தோற்ற நிலையானது ‘உபாதி’ என்ற மனமயக்கம் மூலம் உருவாகிறது (உபாதி என்றால் நிபந்தனையுள்ள வரையறைக்கு உட்பட்ட, எல்லைகளுக்கு உட்பட்ட என்னும் சொற்பொருள் உண்டு) இது தொடக்க நிலையில் இருக்கிறது, ஞானம் பெற்றதும் இந்த பன்மை நோக்கு நீங்குகிறது. ஒருமை நோக்கு உருவாகிறது.

ஆனால் அபேதவாதத்தின்படி பேதபுத்தி என்பதே அஞ்ஞானம் (அவித்யை)தான். ஞானத்தை உபதேசிக்கும் கிருஷ்ணனுக்கு எப்படி ‘உபாதி’ முதலிய குறைபாடுகள் உண்டாயின? பரம்பொருளாகிய கிருஷ்ணனுக்கு மனமயக்கமும் அவித்யை (அறியாமை) ஆகியவை உண்டா என்று வாதாடுகிறார் ராமானுஜர்.

இங்கு மாயையின் முடிவிலா வல்லமையை சங்கரரின் அத்வைத மதத்தைச் சார்ந்தவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.ஞானம் மூலம் அவித்யை அகன்ற பிறகும் கூட அது ஒரு சில தருணங்களில் தன் வடிவின் தொலைதூரத்து படிமத்தை ஒரு ஜீவாத்மாவின் நினைவில் விட்டுச் சென்றிருக்கக் கூடும். கிருஷ்ணன் ஞானி. ஆயினும் அஞ்ஞானத்தில் இருக்கும் அர்ஜுனனிடம் அன்பும் இரக்கமும் கொண்டு அவனுக்காகப் பரிந்து அவனுடன் உரையாடுகிறான். ஆகவே இந்த மெல்லிய மனமயக்கம் அவனுக்கு ஏற்பட்டு மாயையின் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். எரிந்த துணியின் சாம்பல் வடிவைப் பர்த்தால் துணி எரிந்ததை கண்ணால் கண்டபிறகும் துணி தெரிவதைப் போல. (இது பாதிதானுவிருத்தி எனப்படுகிறது) இது அத்வைதிகயின் வாதமாக இருந்திருக்கிறது. இதை தன் பூர்வபக்ஷமாகச் சுட்டிக்காட்டும் ராமானுஜர் இதை எதிர்த்து வாதாடுகிறார்.

‘கானல் நீர் என்று அறிந்த பின் ஒருவன் தாகத்திற்கு அதில் தண்ணீர் மொள்ள முயல்வானா என்ன? அத்வைத ஞானம் அடைந்த கிருஷ்ணன் அதன்பிறகு வேத ஞானத்தை உபதேசம் செய்வானா? என்று ராமானுஜர் கேட்கிறார்.

அத்வைதிகள் இன்னொரு உதாரணம் கூறினார்கள். கிருஷ்ணனுக்கு அர்ஜுனனும் பரமாத்மாவே என்று தெரியும். கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் உரையாடுவது போல பரமாத்மா பரமாத்மாவுடன் உரையாடுகிறது (இது பிம்ப -பிரதிபிம்ப வாதம்) இதையும் பூர்வ பக்ஷமாக எடுத்துக் கொள்ளும் ராமானுஜர் தன் பிம்பம் என்று தெரிந்தபின் ஒருவன் பேசமுற்பட்டான் என்றால் அவன் அறிவு மயக்கத்தில்தானே இருக்கவேண்டும்? மேலும் பிம்பத்துடன் பேசலாம், பிம்பமும் பரமாத்மா என்றால் அதுவும் திருப்பி பேசவேண்டுமே என்று கூறி இதை நிராகரிக்கிறார்.

அர்ஜுனனும் கிருஷ்ணனும் இருவருமே பரமாத்மாவின் வடிவங்கள் என்றால் இருவருமே அறியாமையில் இருந்தால்தான் இந்த கீதோபதேசம் நடந்திருக்க இயலும் என்று வாதிடும் ராமானுஜர் அர்ஜுனன் மாயையில் இருக்கிறான் என்றால் கீதையின் ஞானம் கிடைத்ததும் அவனும் பரம்பொருள் ஆகிவிடவேண்டும். அப்படி நிகழவில்லை. கிருஷ்ணன் மாயையில் இருக்கிறார் என்றால் அவர் கற்பிப்பவற்றுக்கு பொருள் இல்லை. ஆகவே சங்கரரும் பாஸ்கரரும் கூறும் வாதங்கள் பொய் என்று வாதிடுகிறா¡ர் ராமானுஜர்.

என் நோக்கில், கீதையின் புனைவுத் தருணத்தில் உள்ள ஒரு வரியை பிய்த்தெடுப்பதன் மூலமும், விரிவான முரணியக்கம் கொண்ட நூலின் அந்த முரண்பட்ட சரடுகளை உதாசீனம் செய்துவிட்டு அவ்வரியை பரம்பொருளின் நேரடிச் சொல்லாக முன்வைப்பதன் மூலமும் இந்த வாதத்தை ராமானுஜர் நிகழ்த்துகிறார் என்று படுகிறது. சங்கரர் கிருஷ்ணனை பரம்பொருளாகவும் கீதை வரிகளை பரம்பொருளின் கூற்றாகவும் நினைக்கவில்லை. தொன்மையான ஞான நூலாக மட்டுமே எண்ணுகிறார். ராமானுஜர் நானூறு வருடம் கழித்து பேசும்போது நிலைமை முற்றாக மாறிவிட்டது என்பதே உண்மை. கீதை இறை வாக்கியமாக வைணவ மதத்தவரால் கூறப்பட்டுவிட்டது. இறைவனின் எல்லா சொற்களுமே ஒவ்வொரு தருணத்திலும் முக்கியத்துவம் கொண்டவை என்று வாதிடப்பட்டது.

இந்த விவாதங்கள் தத்துவார்த்தமான நுட்பங்களுக்குள் செல்கின்றன என்பதனால் மேலும் விரிவாக ஆராய வேண்டுமானால் தனியாகவே பயில வேண்டும். மேலும் இவ்விவாதத்தில் மதச்சார்பு, தங்கள் தரப்பை மட்டுமே உண்மை என நிறுவும் வேகம், எப்போதும் இருப்பதனால் இவற்றை நாம் ஒரு வித கவனத்துடனேயே படிக்க வேண்டியிருக்கிறது. வாசகர்களுக்கு இந்த விவாதத்தை இவ்வாறு சுருக்கிச் சொல்கிறேன். பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் ஆற்றல் அல்லது பிரக்ஞை என்பது பிளவற்றது, ஒன்றானது என்பது சங்கரர் கூற்று. அதை மனமயக்கத்தால் நாம் என்றும் பிறிது என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவே மாயை. ஞானம் வந்தால் இந்த மாயை மறைகிறது. கிருஷ்ணன் இங்கே அர்ஜுனன்  ஞானம் அடையாமல் இருப்பதனால் நானும் நீயும் என்று பேசுகிறார் என்று சங்கரர் சொல்கிறார். இல்லை, ஒருபோதும் பரம்பொருள் ஆத்மாக்கள் ஆக ஆவதில்லை. அது வேறுதான். ஆகவே கிருஷ்ணன் நான் என தன்னை வேறுபடுத்திச் சொல்கிறார் என்கிறார் ராமானுஜர்.

‘உடலானது– ‘அது-ஆத்மா’

பதிமூன்றாம் பாடலில் உள்ள ‘தேஹி’ என்ற சொல் தத்துவார்த்தமாக முக்கியமானது. ஆத்மா இங்கு ‘உடலானவன்’ (தேஹத்தில் உறைபவன். தேகம் ஆனவன்) என்று குறிப்பிடப்படுகிறது. உடலின் பற்பல பருவ பரிணாமங்களை ஆத்மா கடந்து வந்து இறுதியில் பிறிதொரு உடலை எடுத்துக் கொள்கிறது என்று இந்த வரி கூறுகிறது. உடல் வேறு ஆத்மா வேறு, உடலின் நிலைகளை ஆத்மா அடைவது மாயையினால்தான் என்பது சங்கரரின் வாதம். ஆனால் மத்வர் இவ்வரிக்கு விரிவான விளக்கம் கூறுகிறார். இவ்வரி மூலம் ஆத்மா உடலில் இருந்து சுதந்திரமானது அல்ல என்றே கூறப்படுகிறது என்பது அவரது கூற்றாகும். உடலின் மாற்றங்கள் ஆத்மாவுக்கும் உண்டு என்றுதான் கிருஷ்ணர் கூறுகிறார் என்று வாதிடும் மத்வர் இதே விஷயங்களை வேதங்களும் கூறுகின்றன என்றும் வேதங்கள் கூறுவதனாலேயே இவை மறுக்க முடியாத உண்மைகளாக உள்ளன என்றும் விளக்க முற்படுகிறார்.

முந்தைய கட்டுரைபௌத்த நூல்கள் மொழியாக்கம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்