இரவில்மட்டும் வாழமுடியுமா?

அன்புள்ள ஜெயமோகன் சார்,
இந்தியச் சூழலில் இரவுச் சமூகம் பற்றி இப்பொழுது எப்படி பட்ட சித்திரம் உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. Longinus போன்ற கிரேக்க செவ்வியல் தத்துவ ஆசிரியர்கள் கவிஞர்கள் இரவில் தூங்கக் கூடாது என்பதை விதியாகவே சொல்கிறார்கள். இத்தகைய நம்பிக்கை உள்ளவர்களாகவே நிறைய கவிஞர்களும் தத்துவ ஆசிர்யர்களும் வரலாறு முழுவதும் காணக் கிடைக்கிறார்கள்.

தாந்தரிக பூஜைகள் தமிழக பெண்களுக்கு ஆச்சிர்யம் தராது என்றே நம்புகிறேன். செவ்வாய் கிழமை கொழுக்கட்டை(மாவு பூஜை) என்னவென்று தெரியாத விவசாய பின் புலம் கொண்ட பெண்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அந்த பூஜையில் ஆண் குறிகளையும் பெண் யோனியையும் வைத்து பாலியல் கல்வியே போதிக்கபடுகிறது. அந்தப் புகை படங்களை என் வெள்ளைக்கார தோழி ஒருத்தி மூலம் கண்ட போது ‘அட நம் பெண்கள் இவ்வளவு விபரமானவர்களா?’ என்று ஆச்சரியப் பட்டேன். எல்லாம் மேலோட்டமாக கணினி முன்பு உக்கார்ந்து முற்போக்குவதமும் உலகமயமாதலும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு படுகிறது. எல்லோரும் தங்கள் குல சடங்குகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து  மக்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள்.

இந்த கதையில் உள்ள மேல் தட்டு மக்களின் நகைச்சுவை உணர்வு ஏனோ சுஜாதாவின் நடையை ஞாபக படுத்க்கிறது, சில இடங்களில் மலையாளிகள் ஜாதியை பற்றி கிண்டலை பேசுவது தவிர்த்து. ஆனால் இதில் வரும் காட்சிகள் அனைத்துமே அசல் ஜெயமோகன் வர்ணனைகள். உதரணமாக சோபாவில் அமரும் நாயர் திமிங்கலம் நீரில் மூழ்குவது போல என்ற வர்ணனை. கூசும் சூரிய ஒளியை பற்றிய வர்ணனைகள், மற்றும் காலில் வரும் பாசி மனம் பற்றிய வர்ணனைகள் எல்லாம் நீண்ட நாட்கள் நினைவில் நிற்பவை.

elango
[email protected]

அன்புள்ள இளங்கோ

நடராஜகுருவின் சுயசரிதையில் ஒரு நிகழ்ச்சி. அவர் லண்டனுக்கு 1950களில் செல்லும்போது ஒரு இரவுச்சமூகத்தில் அவரைப்பேச அழைக்கிறார்கள்.  அவர்கள் இரவே இயல்பானது என்று நம்பும் சமூகம். நடராஜகுரு அங்கே இந்தியாவில் தாந்த்ரீகர்கள் பல்வேறு சாக்தர்கள் அப்படி வாழ்ந்திருந்ததைப்பற்றி பேசுகிறார். குருவும் சிஷ்யனும் என்ற பேரில் ப.சாந்தி மொழியாக்கத்தில் நடராஜ குருவும் நித்யாவும் செய்த பயணங்களைப்பற்றிய விவரிப்பிலும் அந்த செய்தி உள்ளது. அதுவே இந்நாவலுக்கு அடிப்படை.

எழுத எழுத நாவல் பல்வேறு தளங்களை நோக்கிச் சென்றது. இரவு பகலின் மறுபக்கம். அப்படியென்றால் பகலில் இபப்டி இருப்பதெல்லாம் இரவில் எபப்டி இருக்கும்? பகல் நம்முடைய ஜாக்ரத். அப்படியென்றால் இரவு ஸ்வப்னமா? தியானத்தில் ஸ்வப்னம் என்பது இனியதும் கொடூரமானதுமாகும். ஜாக்ரத் கட்டுக்குள் நிற்பது. ஸ்வப்னம் கட்டற்றது. இவ்வாறாக நாவல் வளர்ந்து எனக்கே சில தெளிவுகளை அளிப்பதாக அமைந்தது.

இரவுச்சமூகம் பல்வேறு வடிவில் நீடிக்கிறது. உலகில் படைப்பூக்கம் கொண்ட பலர் இரவில் வாழ்ந்தவர்களே. திரைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் இரவில் மட்டும் வாழ்பவர்கள் என்கிறார்கள். என்.டி.ராமராவ் இரவில்தான் அதிகம் விழித்திருப்பார். அவர்களின் செயலூக்கம் அதிகமானதாக இருக்கிறது

தனிப்பட்ட முறையில் நானும் இரவில் வாழ்பவன். இரவு 3 மணிமுதல் காலை 7 மணிவரை தூங்குவேன். என்னுடைய அலுவலக வெலைதான் எனக்கு தடை. சென்ற வருடம் 4 மாதம் அலுவலக விடுப்பு எடுத்து வீட்டில் இருந்துஎழுதியபோது இரவு முழுக்க எழுதி,வாசித்து பகல் முழுக்க தூங்கினேன். இப்போதுகூட வேலை இல்லாத நாளில் அப்படித்தான். ஒரு கட்டத்தில் இதை விட்டுவிட்டு இரவில் தங்கிவிடவேண்டும் என்று கனவு காண்கிறேன்.

யோகசாதனைகளுக்கு இரவே உகந்தது. ‘உயிர்களெல்லாம் உறங்கும்போது விழித்திருப்பவனே யோகி’ என்று சொல்கிறது கீதை.

இரவில் மட்டுமே வாழ்வது அபாரமான கவனக்குவிப்பை உருவாக்கும். வேலைக்கான நேரம் முடிவிலாது இருப்பது போலிருக்கும். செய்வன சிதறாது. இரவு மனதை கற்பனைகளில் பறக்கச் செய்கிறது. பகலில் ஒருபோதும் உணரமுடியாத அமைதியை அளிக்கிறது. பகலில் நன்றாக தூங்க முடிந்தால் உடல்நலம் குன்றாது . இது என் அனுபவம்

ஆனால் லௌகீக வாழ்க்கை கொஞ்சமேனும் எஞ்சியிருக்கையில் முழுக்க  பகலில் இருந்து விலகி இருக்க இயலாது. கீதையின் சொற்களை திருப்பிப் போடலாம் –யோகி மட்டுமே இரவில் விழித்திருக்க முடியும். ஏதோ ஒன்றை யோகமெனச் செய்பவன்.
ஜெ

முந்தைய கட்டுரைபனிமனிதன்
அடுத்த கட்டுரைவெட்டம் மாணியைப்பற்றி