விழா கடிதங்கள்

IMG_9531[1]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

விஷ்ணுபுரம் விழா இனிதே நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தொலை தூரத்தில் இருப்பதால் விழாவில் பங்கு கொள்ள இயலவில்லை. ஆனால் ஒரு விழாவில் கூட கலந்து கொள்ள முடிந்ததில்லையே என்ற எண்ணம் என்னுள் ஏப்போதும் இருக்கும்.

நேற்று என் தம்பி உங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டிருந்தான். அதிர்ச்சியாக, மகிழ்ச்சியாக இருந்தது. நான் அவனிடம் விழாவிற்கு போகும் படி சொல்ல கூட இல்லை. அவனும் போவதாய் என்னிடம் சொல்லவில்லை. ஃபேஸ்புக்கில் அழைப்பை பகிர்ந்ததோடு சரி. இருந்தும் எதிர்பாராத விதமாக என் உறவினர்கள் விழாவில் கலந்து கொண்டது நிறைவளிக்கிறது.
IMG_9313[1]
அன்றாடம் கேட்டு கொண்டிருக்கும் ஒரு குரல், அன்றாடம் நான் படித்து கொண்டிருக்கும் எழுத்து, ஒரு பொழுதும் என் எண்ணங்களில் இருந்து ஒரு விலகா ஒரு ஆளுமை, அதற்குரிய ஒருவரை என் தம்பி சந்தித்தது நான் அவரை மேலும் நெருங்கியதாய்த்தான் தோன்றுகிறது.

அன்புடன்,
ஹரீஷ்

IMG_9593[1]

நேற்று கோவையில் விஷ்ணுபுரம் நண்பர்கள் எழுத்தாளர் சு.வேணுகோபாலுடன் ஒரு இலக்கிய விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஜெயமோகன் உட்பட பல நண்பர்கள் கலந்து கொண்டோம். சு.வேணுகோபால் தமிழின் முக்கியமான ஒரு படைப்பாளி. அவரின் படைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவரின் ஆளுமை குறித்து என் பார்வையில் கொண்டிருந்த பிம்பம் கலைந்து வேறு விதமாக அவர் எனக்கு பொருளானார். தன் படைப்புகளின் ஊற்றுக்கண் குறித்து அவர் உரையாடியது எனக்குள் பெரும் உத்வேகத்தைத் துாண்டியது.

அவர் சிறுகதையில் மிக முக்கியமானதும் பெரும் விவாதத்தைக் கோருவதுமான ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ குறித்தும் விவாதம் நடைபெற்றது. தாய் தந்தை அற்ற நிலையில் கூலிவேலைக்குச் சென்று தன் பிழைப்பை நடத்தும் ஒரு முப்பத்தேழு வயது மனிதனின் கதை. நடுவயதைக் கடக்கும் அவனுக்கு தன் திருமணத்தைப் பற்றியோ உடல் சார்ந்த தேவைகள் குறித்தோ சிந்திக்கக் கூட வாய்ப்பில்லாமல் தன் இரண்டு தங்கைகளுக்கும் மிகச் சிரமப்பட்டு திருமணம் செய்து கொடுத்துவிட்டு மூன்றாம் தங்கையுடன் சிமெண்ட் சீட் வேயப்பட்ட ஒரு மிகச்சிறிய அறையில் வசிக்கிறான். தன் தங்கைகளின் நல்வாழ்வு குறித்து மட்டுமே சிந்திக்கும் அவன் மீதும் தங்கைகள் மூவரும் உயிரையே வைத்திருக்கிறார்கள். திருமணம் ஆகாமல் வீட்டிலேயே இருக்கும் மூன்றாம் தங்கையின் பார்வையில் விரிந்து செல்கிறது கதை. புழுக்கமும் இறுக்கமும் கொண்ட அந்த ஒற்றைச் சிறுஅறையில் இரவில் உறங்கும் போது தன் அண்ணனின் பாலியல் தேவையினை திடுக்கிட்டு உணர்கிறாள் தங்கை.
\IMG_9686[1]
அதிர்ச்சியின் உச்சத்தில் நிறைவுபெறும் இந்தக் கதை நம்முடனே பிழைத்துக்கொண்டிருக்கும் நம் சக மனிதர்களின் வாழ்வு பற்றிய இடுக்கான பகுதிக்குள் நம்மை அழைத்துச் சென்று, பெரும் அனுபவத்தை நமக்குள் துளிர்க்க விடுகிறது. யானையைப் பார்த்த குருடனைப் போல் இந்த மிகப்பெரும் வாழ்வை நம் அனுபவத்தைக் கொண்டுமட்டுமே தொடந்து புரிந்து கொண்டு வருகிறோம். ஆனால் ஒரு படைப்பாளி மட்டுமே தனக்குள் நிகழும் அனுபவங்களை நமக்குள்ளும் கடத்தி நம் பார்வையை விரிக்கிறான். அது ஏற்படுத்தும் மன மேன்மைக்காக நாம் எப்போதும் அவனுக்கு நன்றியுடன் இருக்கக் கடவோம்.

ப்ரியமுடன்
-வீரா\\

IMG_9625[1]
அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். உங்களுடன் சிலநிமிடங்கள் பேசமுடிந்தது நான் பங்கெடுக்கும் இரண்டாவது விழா இது. ஒரு தலைசிறந்த இலக்கியவிழா எப்படி நிகழவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படி நடந்தது. நான் தமிழில் பல விழாக்களிலும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன். பெரும்பாலான விழாக்கள் குடிவிழாக்கள். குடித்துவிட்டுவந்து ஆளாளுக்கு உளறுவார்கள். அதை நடத்துபவர்களை துதிபாடுபவர்கள் நிறையபேர். மொத்தமாக அப்படித்தான் நடக்கிறது.

ஆனால் விஷ்ணுபுரம் விழா முழுக்கமுழுக்க பரிசுபெற்ற எழுத்தாளர்களையும் வந்திருக்கும் எழுத்தாளர்களையும் மையப்படுத்தியே நடந்தது. ஆச்சரியமளிக்கக்கூடியதாக இருந்தது. நீங்கள் ஓரமாக அனைவருடனும் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தீர்கள். விழா அரட்டையாக ஆகிவிடாமல் கட்டுப்படுத்தினீர்கள். கேள்விகள் எழாதசமயம் கேள்விகளைக் கேட்டு பேச்சை முன்னெடுத்தீர்கள். உங்களை முன்னிறுத்தவே இல்லை. உண்மையில் எனக்கெல்லாம் அது கொஞ்சம் குறையாகவே இருந்தது. நானெல்லாம் வருவதே உங்கள் எழுத்துக்களைப்பற்றிப் பேசுவதற்காகத்தான்
IMG_9705[1]
இந்த விழாவின் முக்கியமான ஸ்டார் என்றால் உண்மையில் இரண்டுபேர்தான். டி பி ராஜீவனும் சு வேணுகோபாலும். இருவருமே அற்புதமாகப் பேசினார்கள். சு வேணுகோபால் பேசியதும் சுரேஷ் என்ற தோழர் அவர் எல்லா பந்தையும் சிக்ஸ்ர் அடித்ததாகச் சொன்னார். அது உண்மை. அவர் அவ்வளவு தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் பதில்களைச் சொன்னார். அற்புதமாக இருந்தது

அதேமாதிரி ராஜீவன் இரவில் இன்றைய சூழலில் படிமங்களின் இடம் பற்றி பேசியதும் அதற்கு அந்தச் சபையிலே இருந்து வந்துகொண்டிருந்த பதில்களும் விளக்கங்களும் மிக முக்கியமானவை. மிக அடர்த்தியான விவாதமாக அது இருந்தது

மறுநாள் விஷ்ணுபுரம் விழாவும் மிகக்கச்சிதமாக அழகாக அமைந்தது. இரண்டுநாளும் இலக்கியத்தை நேசிக்கக்கூடிய மிகமிக அதிகமாக வாசிக்கக்கூடிய ஒரு கூட்டத்துடன் நானும் ஒருவராக இருந்தது நிறைவை அளித்தது

ராஜா

முந்தைய கட்டுரைவிழா- கிருஷ்ணன் பதிவு
அடுத்த கட்டுரைநம்மாழ்வார் நினைவு இன்று