எனது இந்தியா!

சென்னையில் இருந்து வெளிவரும் விழிப்புணர்வு என்ற சிற்றிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். அட்டையும் சரி உள்ள பக்கங்களும் சரி பளபளவென உயர்தரக் காகிதத்தில் அச்சிடப்பட்ட மாத இதழ் இது. அதன் பக்கங்கள் பெரும்பாலும் யாரென தெரியாதவர்களால் எழுதப்பட்டிருந்தன. அனேகமாக ஒருவரே எழுதியிருப்பாரோ என்று எண்ணவைக்கும் நடை. ஆசிரியர் கு.காமராஜ். சென்னையிலிருந்து ஏதோ தன்னார்வ அமைப்பு வெளியிடுவது.

ஒவ்வொரு மாதமும் இப்படி இருபது சிற்றிதழ்கள் என் பார்வைக்கு வந்துவிடுகின்றன. இவற்றில் பாதிக்குமேல் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு தன்னார்வக்குழுக்களால் நடத்தப்படுபவை. சுற்றுசூழல் பாதுகாப்பு, சட்ட சீர்திருத்தம், நுகர்வோர் பாதுகாப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்று இவற்றின் கருவாக இருக்கும். எல்லாவற்றையும் கலந்துகட்டி அடிக்கும் இதழ்களும் உண்டு.

ஆனால் இவை அனைத்துக்குமே பொதுவான ஒரு அம்சம் உண்டு. கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பு. இந்த நாடு முழுக்க முழுக்க அநீதி மீது கட்டப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் அநீதியால் இயக்கப்படுவதென்பதில் இவர்களுக்கு ஐயமே இல்லை. இதன் போலீஸ், நீதிமன்றம், அரசாங்கம் , மதங்கள், பண்பாட்டு அமைப்புகள் அனைத்துமே முழுக்க முழுக்க அநீதியை மட்டுமே செய்துகொண்டிருப்பவை என இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் வாதிடுகின்றன. சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன. இந்த தேசத்தின் இறையாண்மை என்பது தான் இந்த நாட்டு மக்களின் உண்மையான முதல் எதிரி என இவை பிரச்சாரம் செய்கின்றன.

விழிப்புணர்வு இதழில் அட்டையிலேயே அருந்ததி ராய் எழுதிய புரட்சிக்கட்டுரை உள்ளது ‘காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை’. அமர்நாத் குகைக்கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள்புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய். அதை தமிழில் ஆதி என்பவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

‘அவுட்லுக்’ இதழில் வெளிவந்த அருந்ததி ராயின் ‘புகழ்பெற்ற’ கட்டுரையை வாசகர்கள் வாசித்திருக்கலாம். சுதந்திரம் கிடைத்த காலம் முதலே காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கவும் சிதைக்கவும் ‘இந்திய ஏகாதிபத்தியம்’ செய்த முயற்சியின் விளைவே காஷ்மீரின் சுதந்திரவேகம் என்று அருந்ததி வாதிடுகிறார்.ஆண்டுதோறும் பத்தாயிரக்கணக்கில் அப்பாவி மக்களின் படுகொலைகள் சித்திவரதைகள் கற்பழிப்புகள் அங்கே நிகழ்ந்து வருகின்றன என்று சொல்கிறார். தேசிய சுதந்திரத்துக்கான அந்த மக்கள் எழுச்சியை ஒருபோதும் ஓர் அடக்குமுறை அரசாங்கம் கட்டுப்படுத்தி விடமுடியாது என்றும் ஆகவே அவர்களுக்கு இந்திய அரசாங்கம் சுதந்திரம் கொடுத்துவிட வேண்டும் என்றும் வாதாடுகிறார்.

தன் கட்டுரையிலேயே அந்த மக்களின் கோஷங்களை கொடுக்கும் அருந்ததி அவர்களின் மனநிலையை தன்னை அறியாமலேயே காட்டிவிடுகிறார். ‘பிச்சை எடுக்கிறது நிர்வாண இந்தியா. பாகிஸ்தானில் வாழ்க்கை சந்தோஷமானது’. காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல, பாகிஸ்தானோடு இணைவதை மட்டுமே என்பது வெளிப்படை. பாகிஸ்தானில் இன்றுள்ள மாகாணங்களின் நிலையை வைத்து நோக்கினால் இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட இல்லாத ஒரு சர்வாதிகார அமைப்பின் கீழே சென்றுவிடத்தான் அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

அந்த ஆசையின் அடிப்படை மதவெறிமட்டுமே. அது முல்லாக்களால் திட்டமிடப்பட்டு படிப்படியாக அங்கே உருவாக்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தானின் உளவமைப்புகளின் வெளிப்படையான ஆதரவும் பின்பலமும் இன்றும் உள்ளது.  அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளை கொன்று குவித்து அடித்து துரத்தியபின்னர்தான் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. காஷ்மீரிகள் தேடுவது எவ்வகையிலும் முற்போக்கான, மேலான ஒரு சமூக அமைப்பை அல்ல, மாறாக அவர்கள் தாலிபானிய அரசு ஒன்றை நாடுகிறார்கள். அவர்கள் இந்திய அரசை வெறுப்பது இது அடக்குமுறை அரசு என்பதனால் அல்ல, இது ஒரு தாலிபானிய இஸ்லாமிய அரசு அல்ல என்பதனாலேயே.

வங்கதேசத்தின் மிகமோசமான வறுமையில் இருந்து தப்பி லஞ்சம் கொடுத்து இந்திய நிலத்துக்குள் ஊடுருவிய வங்க அகதிகள் அவர்களுக்கு எதிராக போடோ மக்கள் கிளர்ந்தெழுந்த கணத்தில் தங்கள் காலனிகள் முழுக்க பாகிஸ்தானியக் கொடியை ஏற்றியதை நாம் இப்போது காண்கிறோம். இந்த நாடு முழுக்க குண்டுகள் வைத்துஅழிப்பதில் வங்கதேசத்து அகதிகளின் பங்கு மிகப்பெரியது என கண்டடையப்பட்டிருக்கிறது. வாழ்வு தந்த இந்த நாட்டின்மீது குறைந்தபட்ச விசுவாசமும் பிரியமும் கூட அவர்களிடம் இல்லை. ஏனென்றால் அவர்களின் மதம் அவர்களுக்கு அப்படிக் கற்பிக்கிறது.

காரணம் இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒரு தேசியகற்பிதம்– ஒரு மதமோ வாழ்க்கைமுறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது. அந்த தேசிய கற்பிதங்களுக்குள் தனித்தேசியமாக தன்னை உணர்ந்து அவற்றை உள்ளிருந்து பிளக்கவே முயலும். அது ஈழமானாலும் சரி இந்தியாவானாலும் சரி பிரிட்டனானாலும் சரி. இதுவே நிதரிசன உண்மை. எத்தனை தலைமுறைக்காலம் ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் சரி, அந்த நாட்டாலேயே மேன்மை பெற்றிருந்தாலும் சரி , அந்த நாட்டை மதநோக்கில் அழிக்க அவர்களுக்கு தயக்கம் இருக்காது என்பதைக் கண்டுகொண்டிருக்கிறது ஐரோப்பா.

இஸ்லாமில் உள்ள இந்த சுயதேசிய உருவாக்கத் தன்மையை ஒரு பழங்கால அம்சமாகக் கண்டு அதை நீக்கவும்,  தாங்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளிலாவது பிற தேசியங்களுடன் ஒத்துப்போகவும் அதற்குக் கற்பிப்பதே இன்று அவசியம். இஸ்லாமை ஒரு நெறியாக மட்டும், ஒரு ஆன்மீக அமைப்பாக மட்டும் முன்னிறுத்தும் மதச்சீர்திருத்தவாதிகள் இன்று தேவை. ஆனால் மேலும் மேலும் இஸ்லாமை அரசியல்படுத்தி உலகநாடுகளுக்குள் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளாக இஸ்லாமியச் சமூகத்தை மாற்றுவதற்கு ஜமா அத் எ இஸ்லாமி போன்ற பலநூறு அமைப்புகள் அல்லும் பகலும் முயன்றுவருகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் பகுதியாக அதை இந்தியா போன்ற நாடுகள் அனுமதித்து வருகின்றன.

இஸ்லாம் எந்த பிற தேசத்துக்குள்ளும் அடங்காது என்ற அடிப்படை உண்மையில் இருந்து பிறக்கிறது காஷ்மீரின் யதார்த்தம். இன்றைய இஸ்லாமின் அடிப்படைக்கட்டமைப்புக்குள்ளேயே இந்த சிக்கல் இருக்கிறது. அதை தீர்த்துக்கொள்ளாதவரை இஸ்லாமியர்கள் அவர்கள் வாழும் நாடுகளெங்கும் தீராத அதிருப்தியுடன், வன்மத்துடன், அந்த நாடுகளை அழித்து அதன் மீது தங்கள் இஸ்லாமிய நாடுகளை உருவாக்கும் கனவுகளுடன் மட்டுமே வாழ்வார்கள். ஆகவே அவர்கள் மீது பிற தேசங்களின் ஐயமும் நீடிக்கும். உழைத்து துன்புற்று வாழும் எளிய முஸ்லீம்களை நிம்மதியாக வாழ ஒருபோதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் முல்லாக்களும் விடமாட்டார்கள். எளிய லௌகீக வாழ்க்கையின் துயர்களில் துணைவரும்படி  இறைவனை தொழுவதற்காக ஒவ்வொரு முறைச் செல்லும்போதும் ஓர் இஸ்லாமிய நாட்டுக்காக போராளியாகும்படியான அறைகூவலை எதிர்கொள்கிறான் சாதாரண முஸ்லீம்.

இன்றைய உலகின் மையச்சிக்கல்களில் ஒன்று இது. சமரசம், விடிவெள்ளி போன்ற  என்ற இஸ்லாமிய இதழ்களை நான் தவறாமல் படிக்கிறேன். பல்வேறு சொற்களில் அவை தங்கள் வாசகர்களான இஸ்லாமியர்களை நோக்கி இந்தியச் சமூக அமைப்பும் இந்திய அரசமைப்பும் இஸ்லாமுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரானவை, அநீதியானவை என்று சொல்கின்றன. அதற்கு ஆதாரமாக அருந்ததி ராய் முதல் அ.மார்க்ஸ் வரையிலாலனவர்கள் எழுதும் சமநிலையற்ற கட்டுரைகளை மறுபுரசுரம் செய்கின்றன. அதற்குத் தீர்வாக ஒரு இஸ்லாமிய அரசு மட்டுமே இருக்க முடியும் என்று சொல்கின்றன. ஒரு தாலிபானிய அரசில்மட்டுமே இஸ்லாமியர் நிறைவுடன் வாழமுடியுமென கற்பிக்கின்றன. மிதமான மொழியில் எப்போதும் பேசும் சமரசம் இதழின் ஒவ்வொரு தலையங்கமும் இப்படித்தான் முடிகிறது.

எங்கெல்லாம் இஸ்லாமியர் பெரும்பான்மை பெறுகின்றனர்களோ அங்கெல்லாம் இந்த இஸ்லாமியதேசம் பற்றிய ரகசியக்கனவு அடுத்த கட்டத்துக்குச் சென்று வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது. அப்பகுதி மக்களிடம் கேட்டால் இந்திய அரசு தங்களை ஒடுக்குகிறது, ஒரு தாலிபானிய அரசிலேயே தங்களுக்கு சுதந்திரமும் அமைதியும் கிடைக்கும் என்றே சொல்வார்கள். அருந்ததியின் வாதங்களை பின்பற்றினால் அப்பகுதிகள் அனைத்துமே ‘விடுதலை’ அளிக்கப்படவேண்டும். இந்தியதேசத்துக்குள் குறைந்தது இருபது தனி தாலிபானியதேசங்கள் அனுமதிக்கபப்டவேண்டும். இது இந்தியாவுக்கு மட்டுமா இல்லை சீனாவுக்கும் ருஷ்யாவுக்கும் இதையே இந்த முற்போக்காளர் பரிந்துரைசெய்கிறார்களா தெரியவில்லை.

இந்தியா தன் மூலதனத்தில் பெரும்பகுதியை செலவிட்டு போராடிக் கொண்டிருப்பது காஷ்மீரி மக்களின் சுதந்திரக்கனவுடன் அல்ல, பெரும் காழ்ப்புணர்வுடன், உச்சகட்டப் பிரச்சார வல்லமையுடன் பரப்பப்படும் இஸ்லாமிய உலகதேசியக் கனவுடன்தான். ருஷ்யா, சீனா உட்பட இஸ்லாமியக் குடிமக்களைக் கொண்ட எல்லா நாடுகளும் அந்த கனவுடன் போரிட்டுகொண்டுதான் இருக்கின்றன. காஷ்மீருக்குச் சுதந்திரம் கொடுத்தால் அந்தப் போர் முடிந்துவிடவும் முடியாது. இந்நூற்றாண்டின் பெரும் சவால் அது. அதைச் சந்தித்தேயாகவேண்டும். இதை எளிமையாக வரலாற்றைப் பார்க்கும் எவரும் புரிந்துகொள்ளலாம். அப்படியும் புரியாவிட்டால் தொடர்ந்து அருந்ததி ராயை மறுபிரசுரம் செய்துவரும் ஏதேனும் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத இதழை எடுத்துப் புரட்டினால்போதும். இதில் ரகசியமேதும் இல்லை, வெளிப்படையான அறைகூவலையே காணலாம்.

அடிப்படையான  வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்றுபெறும் அதீத முக்கியத்துவம் மிகமிக ஆச்சரியமானது. கலை இலக்கியம் பொருளியல் அரசியல் எதைப்பற்றியும் கருத்து சொல்லும் ஒரு அனைத்துத்தளமேதையாக அவரை ஆங்கில ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. அதற்கு பதிலாக அவர் அளிப்பது அவர்கள் நாடும் பரபரப்பை. அதற்கும் மேலாக இவர்களுக்குப் பின்னால் இந்த தேசத்தை அழிக்க எண்ணும் சக்திகளின் நிதியுதவிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதே என் எண்ணம். கருத்தரங்க அழைப்புகள், விருதுகள், தன்னார்வஅமைப்புகள் வடிவில் நேரடி நிதியுதவிகள் என இந்திய இதழாளர்களுக்கு வரும் லஞ்சங்களை இங்கே எவருமே கண்காணிப்பதில்லை. பெரும் தொழிலதிபர்களுக்குரிய இரவு வாழ்க்கை வாழ்பவர்கள் நம் இதழாளர்களில் பலர் என்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் புனிதப் பசுக்கள்.

அருந்ததியின் கட்டுரையின் மொழிபெயர்ப்பில் காஷ்மீரில் பாகிஸ்தானிய பிறைக்கொடி ‘பட்டொளி வீசி’ பறக்கிறது. ஆனால் ஜம்முவில் ‘இந்துத்துவ வெறியர்கள்’ கலவரம் செய்கிறார்கள். மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் சேர முடிவெடுத்ததை ‘பித்தலாட்டம்’ என்று குறிப்பிடுகிறது கட்டுரை. இதே இதழில் ச.பாலமுருகன் என்பவர் எழுதிய ‘ஊடகங்களில் முஸ்லீம்கள்’ என்ற கட்டுரையில் இந்தியாவின் அனைத்து அமைப்புகளும் முஸ்லீம்களை தீவிரவாதிகள் என்று சொல்லி ஒழித்துக்கட்ட முயல்வதாக எழுதியிருக்கிறார். இந்தக்கட்டுரைகளை அடுத்தமாதமே இஸ்லாமிய அடிப்படைவாத இதழ்களில் மறுபிரசுரமாக நான் படிக்க நேரும்.

தமிழின் பிரபலமான சிற்றிதழ்கள் உயிர்மை,காலச்சுவடு,தீராநதி,புதியபார்வை அனைத்துமே இந்த நிலைபாட்டையே பலகாலமாக முன்வைத்திருக்கின்றன. இந்த நாட்டின்மீது சிறிய அளவிலான நம்பிக்கையை முன்வைத்து ஒரு வரியையேனும் இவை எழுதியதாக நான் வாசித்ததில்லை. மாறாக ஒட்டுமொத்தமாகவே அழிக்கப்படவேண்டிய தீமைகளாகவே இந்த நாட்டின்  அரசியல், நீதி அமைப்பை அவை காட்டுகின்றன. இந்த மண்ணின் நெடிய பாரம்பரியம் முழுமையாகவே தீமையில் வேரூன்றியது என்றே அவை வலியுறுத்துகின்றன.

அருந்ததி ராயின் கட்டுரையைப்படித்தபோது முன்பு அப்சல் குருவின் தூக்குத்தண்டனை பற்றி நம் சிற்றிதழ்கள் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. இந்தியப்பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டவர் அப்சல் குரு. அவரது வழக்கு இந்திய நீதிமன்றத்தின் வழக்கமான அனைத்துச் சம்பிரதாயங்களுடனும் படிப்படியாக நடத்தப்பட்டு மீண்டும் மீண்டும் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது. அப்சல் குருவுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த இந்திய இதழாளர்கள் ஒட்டுமொத்த இந்திய நீதியமைப்பே முழுமையாகவே அநீதியானது, மதவெறி கொண்டது என்றார்கள். அந்த விசாரணையின் எந்தப் படியிலும் அப்சல்குருவுக்கு எளிய முறையீட்டுக்குக்கூட வழி தரப்படவில்லை என்றார்கள்.

அந்த விசாரணை நடக்கும் காலம் முழுக்க இந்த தரப்பு சொல்லப்படவில்லை. ஏனென்றால் அரிதிலும் அரிதான வழக்குகளிலேயே இந்திய  உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்றும், அனேகமாக அப்சல்குரு சிறிய தண்டனையுடன் தப்பிவிடுவார் என்றும் இவர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது கிலானி போல இவரும் விடுதலைசெய்யப்படுவார் என. கிலானியை உச்சநீதிமன்றம் விடுதலைசெய்தபோது அதை இவர்கள் இந்திய நீதிமன்றத்தின் சமநிலைக்கான ஆதாரம் என்று சொல்லவில்லை, அதை தங்கள் வெற்றியாகவே முன்வைத்தார்கள். கிலானி இந்தியா முழுக்க ஒரு பெரும் கதாநாயகனாக இன்று பவனி வருகிறார். இந்திய எதிர்ப்புப் பேட்டிகள் கொடுக்கிறார்.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை சிறைக்குள் சென்று பேட்டி எடுக்கிறார் இந்திய இதழாளர். தண்டனைபெற்றவர் தனக்கு தன் சமூகத்தில் உள்ள தியாகிப்பட்டத்தை இழக்க விரும்பாமல் தான் குற்றம் செய்யவில்லை என்றுகூட திட்டவட்டமாகச் சொல்ல மறுக்கிறார். அல்லாவின் முன் தான் தவறுசெய்யவில்லை என்றே சொல்கிறார். இந்திய அரசையும் நீதியமைப்¨பையும் இந்து முத்திரை குத்தி, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஒரு மத தண்டனை என்று சொல்ல முயல்கிறார். தன்னை ஒரு மதத்தியாகியாக காட்டிக் கொள்கிறார்.

அந்தப்பேட்டி இந்திய மொழிகள் அனைத்திலும் பிரசுரமாகிறது. தண்டனைபெற்றவரின் மனைவி இந்தியாவின் உச்ச அதிகார அமைப்புகளை நேரடியாகச் சென்று சந்தித்து கிட்டத்தட்ட மிரட்டும் குரலில் தண்டனை குறைப்பு கேட்கிறார்.  அதற்கு உச்சகட்ட ஊடக விளம்பரம் கிடைக்கிறது காஷ்மீரிலும் பிற பகுதிகளிலும் உள்ள இஸ்லாமியர்கள் நடுவே ஒரு நிரபராதி மத வெறுப்பால் அநியாயமாகக் கொலைசெய்யபடவிருக்கிறார் என்ற செய்தி பரப்ப்பபடுகிறது. போராட்டங்கள் நிகழ்கின்றன. அதை இந்த அரசமைப்பு கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அனுமதிக்கிறது. அஞ்சி தண்டனையை முடிவிலாது ஒத்திப்போடுகிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய அமைப்பே இஸ்லாமியரின் குரல்களை அமுக்குகிறது என்கிறார்கள் அதே இதழாளர்கள் மீண்டும்.

தமிழில் ‘உயிர்மை’ இதழ் அப்சல்குருவின் பேட்டியை மொழியாக்கம் செய்து ஒரு மாபெரும் புரட்சியாளரின் படிமத்தை அளித்து வெளியிட்டது. காலச்சுவடு பாராளுமன்றத் தாக்குதலே இந்திய ராணுவத்தால் இஸ்லாமியரை தவறாகச் சித்தரிக்கும்பொருட்டு நிகழ்த்தப்பட்டது என்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது. எஸ்.வி.ராஜதுரை அப்சல் குரு பெரும் நீதிமான், புரட்சியாளர் என்று எழுதினார். புதியகாற்று இதழில் அ.மார்க்ஸ் கொந்தளித்தார். அந்த அனைத்து எழுத்துக்களும் தமிழின் வெளிவரும் முப்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத இதழ்களில் மீண்டும் மீண்டும் பிரசுரமாயின. இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் இவ்விதழ்களை மட்டுமே படிப்பவர்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது, இத்தனை வெறியூட்டல்களுக்குப் பின்னும் இங்குள்ள சராசரி இஸ்லாமியர் தங்கள் அன்றாடத்தொழில்களைச் செய்தும் பிற சமூகத்தவரிடம் வணிகத்தில் ஈடுபட்டும் ஒரு சமூக வாழ்க்கையை கடைப்பிடிப்பது. இந்திய சமூகம் இன்று அளிக்கும் வாய்ப்புகள் மூலம் மக்களில் பெரும்பகுதியினர் மெல்லமெல்ல நடுத்தரவற்கமாக உருவாகி வருகிறார்கள். இந்தியாவெங்கும் இந்த வளர்ச்சிப்போக்கைக் காணமுடிகிறது. இது ஒன்றுதான் இந்த வெறியூட்டல்களுக்கு எதிரான ஒரே சக்தியாக இருக்கிறது. லௌகீகக் கனவுகளால் மட்டுமே மக்கள் மதவெறியூட்டல்களை தாண்டிச்செல்கிறார்கள்.

இந்த இந்தியவெறுப்பு இன்று இங்கே ஒரு ‘அரசியல்சரி’ யாகவே நிலைநாட்டப்பட்டுவிட்டிருக்கிறது. ஒருவன் எளிய முறையில் ‘என் மூதாதையர் மரபின் மீது எனக்கு பிடிப்பு உண்டு’ என்று சொன்னால்கூட அவன் பிற்போக்காளனாக, பழமைவாதியாக, மத அடிப்படைவாதியாக முத்திரை குத்தப்பட்டுவிடுவான். அந்த முத்திரையை அஞ்சி தன் நம்பிக்கையையும் நிலைபாட்டையும் வெளிப்படுத்தத் தயங்குபவர்களாக எழுத்தாளர்கள் உருமாறிவிட்டிருக்கிறார்கள்.

ஒருதேசத்தின் அறிவுஜீவிகளில் மிகப்பெரும்பான்மையினர் அந்த தேசத்தின் மீது ஆழமான வெறுப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலை வேறு எங்காவது உள்ளதா? ஒரு தேசத்தின் அறிவுஜீவிகளில் பெரும்பான்மை அந்த தேசத்தின் பாரம்பரியத்தை அழிக்க எண்ணுவதும் ,அதுவே முற்போக்கு என்று அங்கே நம்புவதும் வேறு எந்த தேசத்திலாவது உள்ளதா? அப்படி நம்பாத அறிவுஜீவிகள் முத்திரைகுத்தப்பட்டு வேட்டையாடப்படும் சூழல் எங்காவது உள்ளதா?

ஆம், இந்த தேசத்தில்  அநீதி உள்ளது. இங்கே ஒடுக்குமுறையும் சுரண்டலும் உள்ளது. இங்கே சமத்துவம் இன்னும் நிறுவப்படவில்லை. இங்கே இன்னும் சமூக வன்முறை நிலவுகிறது. இங்குள்ள பாரம்பரியத்தின் அழுக்குச்சுமைகள் இன்றைய வாழ்க்கையின் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த நாடு ஊழலில், பொறுப்பின்மையில் சிக்கி மெல்ல ஊர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் இந்த நாட்டை விட மேலானதாக நீங்கள் சொல்லும் நாடு எது நண்பர்களே? பாகிஸ்தானா? தாலிபானின் ஆப்கானிஸ்தானா? சீனாவா? இதை அழித்து நீங்கள் உருவாக்க எண்ணும் நாடு எதைப்போன்றது?

இந்த நாடு இன்னும் ஜனநாயகத்தில் வேரூன்றியதாகவே உள்ளது என்றே நான் எண்ணுகிறேன். இங்கே இன்னமும் கருத்துக்களின் குரல்வளை நெரிக்கப்படவில்லை. இங்கே இன்னமும் சிந்தனைக்கு உரிமை இருக்கிறது. இது இன்னும் அடிப்படையான நீதியில் வேரூன்றியதாகவே உள்ளது. அந்த நீதி இந்நாட்டு எளிய மக்களின் நீதியுணர்வின்மீது நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நாடு இதன் பல்லாயிரம் சிக்கல்களுடன் மெல்லமெல்ல வறுமையிலிருந்து மேலெழுந்து வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இங்கே கோடிக்கணக்காகனவர்கள் தங்கள் முந்தைய வாழ்க்கையில் இருந்து மேலெழுந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நாடு  மானுட சமத்துவத்துக்கான வாய்ப்புகளை இன்னமும் முன் வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கான எல்லா போராட்டங்களுக்கும் இங்கே இடமிருக்கிறது. ஒடுக்குமுறைக்கும் சமத்துவத்துக்கும் ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிராக இங்கே இன்னமும் ஒன்றுதிரண்டு சமராட வாய்ப்பிருக்கிறது. இந்த தேசத்தில் தன் உரிமைக்காக கிளர்ந்தெழும் ஒரு குரல் கூட முற்றிலும் உதாசீனம் செய்யப்படுவதில்லை. இங்கே  ஒருங்கிணைந்து எழுந்த உரிமைக் கோரிக்கைகள் அனைத்தும் சற்றுப்பிந்தியேனும் எவ்விதத்திலேனும் நிறைவேறியுள்ளன என்பதை ஐம்பதாண்டுகால இந்திய வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்போர் அறியலாம். இப்போது அரவானிகள் பெற்றுவரும் சட்ட அங்கீகாரத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காரணம் இது ஜனநாயகம். ஜனநாயகம் நிதானமானது. ஒவ்வொருவரின் நலனும் பிறர் நலனுடன் மோதுவது என்பதனால் ஒரு சிறு விஷயம்கூட ஒரு முரணியக்கத்தின் இறுதியில் ஒரு சமரசப்புள்ளியில் மட்டுமே இங்கே நிகழ முடியும். எதுவும் எளிதில் நிகழாதென்பதனால் எதுவுமே நிகழவில்லை என்ற பிரமையை அளிப்பது ஜனநாயகம். ஆனால் ஜனநாயகம் என்ற செயல்பாடு உள்ளவரை மக்களின் எண்ணங்கள் சமூகத்தையும் அரசையும் மாற்றியே தீரும் என்பதற்கான சான்றும் இந்தியாவே.

ஆகவே இந்த தேசம் வாழ்க என்று நீங்கள் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் இந்த தேசத்தை வாழவைக்கும். இந்த மக்கள் மீளவேண்டுமென நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்கு மீட்பாகும். இந்த நாடு அழியவேண்டுமென நீங்கள் எண்ணினால் இந்தநாட்டை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இந்தியா அழியவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே நீங்கள் என்னை இந்துத்துவர் என்று சொல்லி வசைபாடக்கூடும். ஆனால் நான் இந்த தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மேலும் வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகிறேன். இங்கே ஜனநாயக முறைப்படி உரிமை கோரி நிகழும் எல்லா போராட்டங்களும் இதன் மாபெரும் இயங்கியலின் பகுதிகளே என்று எண்ணுகிறேன். ஆகவே எல்லா ஜனநாயகப்போராட்ட அமைப்புகளும் மேலும் மேலும் வலுப்பெற வேண்டும் என்று எண்ணுகிறேன். இங்குள்ள எல்லா போராட்டங்களையும் நான் ஆதரிக்கிறேன்.

இந்த தேசம் ஒரு நவீன தேசியமாக நீடிக்கும் வரை இது மெல்ல மெல்ல வளர்ச்சிப்போக்கில்தான் செல்லும் என்று எண்ணுகிறேன். அப்படி உருவாகும் நிதானமான வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று நான் நம்புகிறேன். இந்த நவீன தேசத்தில் எல்லா மதங்களும் ஒரு கருத்துத்தரப்பாக தீவிரமாக செயல்படவேண்டும் என்று விழைகிறேன். எனது இந்தியாவில் இந்துமரபும் பௌத்த சமண மரபுகளும் கிறித்தவ மரபும் இஸ்லாமிய மரபும் ஒவ்வொரு கணமும் உரையாடி தங்களை வளர்த்துக் கொண்டவாறிருக்கும். இந்த நாட்டில் இன்று ஆயிரம் பல்லாயிரம் சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் இதன் உறுதியான ஜனநாயகம் தன் குறைகளைக் களைந்து மெல்லமெல்ல மேலும் சிறந்த ஒரு சமூகத்தை சென்றடைய முடியும். உலகில் இந்த வாய்ப்புள்ள தேசங்கள் இன்று மிகமிகச் சிலவே உள்ளன.

நிதானமான திடமான வளர்ச்சி பெற்றுவரும் இந்த நாட்டுக்கு அண்டைநாட்டு எதிரிகள் அரசியல் விஷத்தை உள்ளே செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். [இந்தியாவும் அதே விஷத்தை பிறநாடுகளுக்குச் செலுத்தியது என்பதை நான் மறுக்கவில்லை. இந்திராகாந்தி தொடங்கிவைத்த அந்தப்போக்கு அறமற்றது என்றே எண்ணுகிறேன்.] இந்தியாவில் இன்று உருவாகியிருக்கும் மாவோயிசக் குழுக்கள் போன்றவை பத்துசதவீத உண்மையான மக்கள் அதிருப்தியின் மீது தொண்ணூறு சதவீதம் சீன ஆயுத பணபலத்தால் கட்டி எழுப்ப்பபடுபவை. இங்குள்ள இஸ்லாமிய குழுக்கள் மதக்காழ்ப்பின்மீது பாகிஸ்தானிய ஆயுத பணபலத்தால் கட்டி எழுப்ப்பபடுபவை.

இந்த எளிய நேரடி உண்மையை மழுப்பவும் நியாயப்படுத்தவும் கூலிபெற்று கிளம்பியிருக்கும் ஒரு பெரும் குழுவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது இந்திய ஊடகத்துறை. தேசிய மைய ஊடகத்தளத்தில் உள்ள இந்த வலுவான தரப்பு மெல்ல மெல்ல சுயமாக சிந்தனை செய்தறியாத பிராந்திய மொழி ஊடகங்களையும் பாதிக்கிறது. எப்போதும்  இதை நாம் காணலாம். நமது சிற்றிதழ்களை ஆங்கில நாளிதழ்களின் ஞாயிறு இணைப்புகளே தீர்மானிக்கின்றன. ஒரு எழுத்தாளரைப்பற்றி ஆங்கிலநாளிதழ்களின் ஞாயிறு இணைப்பில் கட்டுரை வந்தால் அடுத்தமாதமே தமிழ் சிற்றிதழ்களிலும் கட்டுரைகள் காணப்படும்.

இத்தனைக்கும் அப்பால் மனசாட்சியை நம்பும் வாசகர் சிலர் இருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கை. இந்த நாட்டைப்பற்றிய உண்மையான கவலை கொண்டவன், இந்தச் சமூகத்தின் உண்மைநிலையை தன்னைச் சுற்றிப் பார்த்தே தெரிந்துகொள்பவன். அவனிடம் பேச விரும்புகிறேன்.

தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே .’வெல்க பாரதம்!’

[மறுபிரசுரம்]

முந்தைய கட்டுரைஆய்வுலகின் அன்னியக்கரங்கள்
அடுத்த கட்டுரைஒரு மாற்றுக்கருத்து