சென்னை, ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோயில்…

டிசம்பர் பதினைந்து முதல் பத்துநாள் சென்னையில் இருப்பதாக திட்டம் இருந்தது, சினிமா வேலையாக. ஆகவே சென்னை அடையாறில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவெலப்மெண்டல் ஸ்டடீஸ்-ல் டிசம்பர் 19 அன்று நடந்த அயோத்திதாசர் கருத்தரங்குக்கு செல்ல ஒப்புக்கொண்டபோது அது ஓரு தனிப்பயணமாக அமையும் என நினைக்கவில்லை, பயணச்சீட்டு முன்பதிவும் செய்யவில்லை. அந்த சினிமாச் சந்திப்பு ஜனவரிக்கு ஒத்திப்போனது. ஆனால் ஒத்துக்கொண்டபடி கருத்தரங்குக்குச் சென்றுதான் ஆகவேண்டும்

ஆகவே பதினெட்டாம் தேதி பேருந்தில் கிளம்பி சென்னை சென்றேன். படுக்கை வசதிகொண்ட பேருந்து. நான் தொட்டிலில் தூங்கி நெடுநாளாகிறது என்பதனால் பேருந்தின் படுக்கையில் தூங்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனால் முதுகுக்கு ஓய்வு என்ற அளவில் வேறு பரவாயில்லை என்றும் தோன்றியது. அத்துடன் இரவெல்லாம் சினிமா போட்டு வதைக்க மாட்டார்கள் என்ற ஆறுதல்.

ஆனால் கிளம்பியதுமே ஒரு சகபயணி பாட்டு போட ஆரம்பித்தார். செல்பேசியில் ‘ஹை ஃப்ரிக்வன்ஸி’ யில் பாட்டுகளைக் கேட்பது இசையனுபவம் என்பதைவிட அறிவியல்புனைவு அனுபவம்- ராக்கெட்டில் செவ்வாய்கிரகத்தை நெருங்குவது போலிருக்கும். அதோடு எல்லாமே எண்பதுகளின் இளையராஜா குத்துப்பாடல்கள். ராசா ரோசா அழகியல்.
[வினோத்]

குத்துப்பாட்டுக் கேட்டுக்கொண்டேதான் வீட்டில் தூங்குவார் போல. பாவம் என்ன வகையான கடந்தகால ஏக்கத்தில் கஷ்டப்படுகிறார் என்று தெரியவில்லை அவரிடம் எனக்குத் தொந்தரவாக இருக்கிறதென்றெல்லாம் சொல்ல முடியாது. கடும் கோபம் அடைந்து சண்டைக்கு வருவார். தாலாட்டாக குத்துப்பாடல்களை ஒலிக்கவிடும்போது தொட்டில் ஆடுவது கொஞ்சம் மிகையாக இருக்கிறதோ தப்பான அர்த்தங்களெல்லாம் வந்துவிடுகிறதோ என்றெல்லாம் எண்ணிக்கொண்டே தூங்கிவிட்டேன்.

சென்னையில் இறங்கியதும் கே.பி.வினோத் வந்து அழைத்துச்சென்றார். அவரது வீட்டிலேயே குளித்து உடைமாற்றிக்கொண்டேன். ஞானக்கூத்தனைப் பற்றிய ஆவணப்படம் முடிந்துவிட்டது. என்னுடைய நாலைந்து வரிகள் [சினிமா மொழியில் பைட்ஸ்] தேவை என்று சொல்லியிருந்தார். நான் வராமலானதனால் அது இல்லாமலேயே ஆவணப்படத்தை முடித்துவிட்டிருந்தார். நான் வந்துவிட்டேன் என மகிழ்ந்து இரு கோணங்களில் சில வரிகள் சொல்லவைத்து எடுத்துக்கொண்டார்.அதன்பின் அவரும் படத்தொகுப்பாளரும் இரவுபகலாக செம்மைப்படுத்திக்கொண்டே இருந்தனர்.

ஞானக்கூத்தனைப்பற்றிய ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்தை இசையில்லாமல் பார்த்தேன். ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கான எந்த விதமான வசதியும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். அஜிதனின் கானன் ஃபைவ் டி காமிரா மட்டுமே ஒரே கருவி. முழுக்க முழுக்க இயற்கை வெளிச்சம். காமிராவை அசைக்கும் வசதியே இல்லை. இயக்குநர் ஒளிப்பதிவாளர் எல்லாம் ஒருவரே. ஓர் உதவியாளர்கூட இல்லை.ஆனால் நான் சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த காமிராக்கோணங்களும் ஒளியமைப்பும் படத்தொகுப்பும் கொண்ட ஆவணப்படம் இது. சினிமா பற்றி மிக நன்றாகத் தெரிந்த கமல்ஹாசனுக்கே இதன் படக்கோணங்கள் நிறைவளித்தன என்பது சாதனைதான்

வியப்பாக இருந்தது. ஒன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. இன்னொன்று ஒரு கலையை அதற்கான பொறுமையுடனும் வெறியுடனும் கற்கமுயன்றால் எந்த அளவிலும் அதன் முழுமையை நோக்கிச் சென்றுவிடமுடியும் என்பது. வினோத் சினிமாக்கலையில் சென்ற சில வருடங்களில் அடைந்த தேர்ச்சி தெரிந்தது. சினிமாவே நினைப்பாக சென்ற வருடங்களாக இருந்துகொண்டிருக்கிறார்.

ஆவணப்படத்தின் தரத்துக்காக மிஷ்கினுக்கும் நன்றி சொல்லவேண்டும். வினோத் முதன்மையாக மிஷ்கினின் மாணவர். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ‘பிசாசு’ படங்களில் துணை இயக்குநராக முக்கியமான பங்களிப்பாற்றியிருக்கிறார். ஆவணப்படத்தில்கூட ஒரு ‘மிஷ்கினிச அழகியல்’ தன்மை தெரிந்தது. குறிப்பாக அசைவற்ற குறுகியநேர காட்சித்துளிகள் ஒன்றன்மேல் ஒன்றாக ஏறிச்செல்லும் ஒழுங்கில்.ஆச்சரியம்தான். சினிமா ஒரு நவீனக்கலை. ஆனால் இங்கும் குருமரபுகள்தான் நீடிக்கின்றன.

ஜெர்மனியில் இருந்து லண்டனுக்குச்சென்று விட்டிருந்த முத்துக்கிருஷ்ணன் விடுமுறையில் வந்திருந்தார். எங்கள் அருகர்களின் பாதை பயணத்தில் வந்திருந்தவர். விதவிதமான நவீன மின்னணுச்சாதனங்களை வைத்திருப்பதனால் காட்ஜெட் முத்து என சான்றோரால் அன்புடன் அழைக்கப்படுபவர். அத்தனை கருவிகள் இருந்தும் காரை மத்தியப்பிரதேசத்தின் எள்ளுவயலுக்குள் கொண்டுசென்று வழிதவறச்செய்தவர். ஆனால் பொதுவாக நல்ல மனிதர். அவருடன் ஆய்வரங்குக்குச் சென்றேன்.

அயோத்திதாசர் ஆய்வரங்கில் ஆ.இரா.வேங்கடாசலபதியிடம் ஓரிரு சொற்கள் பேசினேன். அசோகமித்திரனின் மொழிபெயர்ப்பாளரும் பி.ஏ.கிருஷ்ணனின் நண்பருமான கல்யாணராமனை அறிமுகம் செய்துகொண்டேன். ஆய்வாளர் பெருந்தேவியை சற்று இடைவேளைக்குப்பின் கண்டேன். என் வாசகர்கள் சிலர் வந்திருந்தனர். நண்பர் வேணு வெட்ராயன் வந்திருந்தார். நினைத்தாலே முகம் மலரச்செய்யும் நண்பர் ஹிண்டு கோலப்பன் வந்திருந்தார். என்னைப்போலவே நாய்ப்பிரியர். ஆழ்வார்பாடல்களில் மனம்பறிகொடுத்த சைவர். கூடவே நாதஸ்வர இசையின் பெரும் ரசிகர், இசைஆய்வாளர்

முத்துக்கிருஷ்ணன்
முத்துக்கிருஷ்ணன்

பின்னங்காலில் மேலதிகமாக ஒரு பாதம் கொண்ட நாயை குமரிமாவட்டத்தில் கொடிக்கால் நாய் என்பார்கள். அது மிகத்தீவிரமான நாய். அப்படிப்பட்ட ஒருநாயை தெருநாய்க்கூட்டத்தில் கண்டெடுத்த கதையைச் சொன்னார். ‘சவம் சோறு இல்லாமல் மெலிஞ்சு சவண்டுபோயில்லா கெடந்துது. என்னையக் கண்டதும் மூணு குட்டிகளும் ஒண்டி வெறைக்குது. இது மட்டும் கொரைச்சுகிட்டு எந்திரிச்சு கடிக்க வருது… அந்தால எடுத்துக்கிட்டேம்லா? எனக்க அம்மையாக்கும் இப்பம் பாத்துக்கிடுதா. அதுக்கு குளிக்கதுக்கு வெந்நி போட்டு வச்சிருக்கா. பொறம்கால நல்லா ஊணமாட்டேங்குதுண்ணுட்டு வாதகோடாலித் தைலத்த இம்பிடுபோல பூசி குளிப்பாட்டுதா .வெளங்குமா’

என் அரங்கில் நானும் ஸ்டாலின் ராஜாங்கமும் பேசினோம். மதியச்சாப்பாட்டுக்குப்பின் கிளம்பி முத்துவின் வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து மாலை கே.பி.வினோத் வீட்டுக்கு வந்தால் படத்தொகுப்பு நடந்துகொண்டே இருந்தது. சினிமா தொகுப்பு என்பது ஒரு மாயவலை. செய்து தீரவே தீராது. ‘சனியன், போதும் விடு’ என்று நாமே நினைப்பதுவரை செய்யலாம். எவ்வளவு செய்தாலும் கொஞ்சம் மேம்பட்டுக்கொண்டெ இருக்கும். காரணம் இது இணைவுகளின் முடிவில்லாத சாத்தியங்களால் ஆன கலை.

படத்தொகுப்பாளர் தினேஷ் ஏற்கனவே விளம்பரப்படங்களில் புகழ்பெற்றவர். யாருடா மகேஷ் போன்ற படங்களின் புகழ்பெற்ற முன்னோட்டங்களை தொகுத்தவர். அவரும் இசையமைப்பாளரும் ஆவணப்படத்தின் மொத்தச்செலவை விட இருமடங்கு ஊதியம் பெறக்கூடியவர்கள். ஆவணப்படத்தைப் பார்த்தபின் இலவசமாகவே செய்துதர ஒப்புக்கொண்டார்கள். ஆவணப்படம் என்பது உண்மையில் படத்தொகுப்பாளருக்கு பெரும் அறைகூவல்.இரவெல்லாம் வேலை உண்டு என்றார் வினோத்.

நான் ஒன்பது மணிக்கு கே.பி.என். பேருந்து நிலையம் சென்றேன். முத்துக்கிருஷ்ணன் அங்கே வந்திருந்தார். ஏறி அமர்ந்ததுமே தூங்கி திண்டுக்கல் கடந்ததும்தான் விழித்துக்கொண்டேன். 21 அன்று ஸ்ரீவில்லிப்புத்தூரில் வெள்ளையானை விமர்சனக்கூட்டம். நடுவே ஒருநாள் இருந்தது. அதைச் சென்னையில் கழிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செலவிடலாமென நினைத்தேன். நண்பர்களை அழைத்தேன். முத்துகிருஷ்ணன் பிறப்பால் ஸ்ரீவில்லிப்புத்தூர்க்காரர். ஆகவே அங்கே சில ஏற்பாடுகள் செய்வதாகச் சொன்னார்

ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனை அழைத்தால் ஏகப்பட்ட பந்தா செய்தார். பல குற்றவழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதிகள் அவருடைய சொல்லுக்காக கண்ணீருடன் காத்திருக்கும் உச்சகட்ட காட்சியை நான் கண்ணில் பார்த்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு அங்கே பறக்கும் அணில்களின் சரணாலயம் உள்ளது என்றபோது ‘சரி…நான் வந்திடறேன்’ என்றார். வக்கீல்களைப்போல தங்கள் விடுமுறையை தாங்களே அறிவிக்கும் வசதி அத்தனை தொழில்களுக்கும் அமையும் காலமே பாரதத்தின் பொற்காலம்.

மதுரை ரவி அவருடன் திருமங்கலத்தில் இணைந்துகொண்டார். இருவரும் முன்னரே ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று அங்கே ராம் லாட்ஜில் காத்திருந்தனர். நானும் முத்துவும் காலை ஆறுமணிக்குச் சென்று சேர்ந்தோம். பொதுவாக ஓர் ஊருக்கு அதிகாலையில் சென்றிறங்குவது ஓர் இன்பம். அதிலும் நண்பர்களுடன் அளவளாவியபடி டீ அருந்துவது பொற்கணங்களால் ஆனது.

மதுரை ரவி

ஸ்ரீவில்லிப்புத்தூர் அம்பேத்கர் பண்பாட்டுப் பாசறையைச் சேர்ந்த நண்பர்கள் பாபுவும் திருப்பதியும் அவர்களுடன் இருந்தனர். இருவரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து இலக்கிய வாசிப்புள்ளவர்களாகவும் நுட்பமான நகைச்சுவை உணர்வுள்ளவர்களாகவும் இருந்தனர். சந்தித்த மறுகணமே நெருக்கமாகி அரட்டைக்குள் நுழையக்கூடிய தன்மை கொண்ட நண்பர்கள்.

பேசியபடியே காபி சாப்பிடச்சென்றோம். திருப்பதி நாகர்கோயிலில் தொழுநோய் ஒழிப்பு அலுவலராகப் பணியாற்றியிருந்தார். அவர் அப்போது என்னை சுந்தர ராமசாமி இறந்த நாளில் பார்த்திருக்கிறார். இத்தனை வருடம் கழித்து இப்போதுதான் அறிமுகம். ராஜ்கௌதமனின் பாலியகால நண்பர்.

பத்துமணிக்குக் கிளம்பி அருகே உள்ள செண்பகப்பாறை என்னும் சிறிய குன்றுக்குமேல் உள்ள அருவியை அடைந்து குளித்தோம். அருவி என்று சொல்லமுடியாது, அருவியின் குழந்தை. குழந்தையழகும் கொஞ்சலும் இனியவை. மலைக்குமேல் இருந்த காட்டழகர் கோயிலில் கோயில் கொண்டிருந்த நின்றசீர் நெடுமாலைச் சென்று கண்டோம். புராணப்படி அதுதான் ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி ஆலயத்தைவிடவும் தொன்மையான பெருமாள்கோயில்

ஆலயத்தைச் சூழ்ந்து அடர்ந்த காட்டை போர்த்திய உயரமான குன்றுகள் மேகம் சூடி அமைதியிலாழ்ந்திருந்தன. கீழே ஓடையில் காட்டுமாடு எழுப்பிய குரல் கேட்டுக்கொண்டிருந்தது. 2008க்குப்பின் இவ்வருடம்தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் மழை பெய்திருக்கிறது என்றார்கள். எல்லா பக்கமும் பச்சை. மழைகுறைவான பகுதியில் முளைக்கும் புல் அடர்த்தியாகவும் மிகச்சிலநாட்களிலேயே கொத்துக்கொத்தாக விதைச்செண்டு எழுவதாகவும் இருக்கும். வெண்ணிறமாகவும் செந்நிறமாகவும் புல்மலர்க்கொத்துகள் காற்றிலாடும் அழகுதான் அந்த நாளை அழகாக ஆக்கியது

கிருஷ்ணன், ஈரோடு

காடழகர் கோயிலில் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுத்தார்கள். மதிய உணவு அதுதான். வயிறு நிறைந்தபின் இறங்கும்போது பல இடங்களில் கண் சொக்கியது. வரட்சியில் யானைகள் தண்ணீர் அருந்துவதற்காக இயற்கை ஊற்றுகளை நீர்த்தேக்கங்களாகக் கட்டியிருந்தனர். அவற்றைச் சென்று பார்த்தோம். ஆள்காட்டிக்குருவி கத்திக்கொண்டே இருந்தது. அதைக்கேட்டு அப்பால் புதருக்குள் மிளா உறுமியது

மீண்டும் விடுதியை அடைந்தோம். அலெக்ஸ் மதுரையில் இருந்து அவரது வழக்கறிஞர் நண்பரின் காரில் வந்திருந்தார். நண்பர்கள் வந்தபடியே இருந்தனர்.வழக்கறிஞர் பால்ராஜ் இடதுசாரி இயக்கங்களில் இருந்து தலித்செயல்பாட்டாளராகப் பணியாற்றி வருபவர். வெள்ளையானை பற்றியும் தமிழிலக்கியம் பற்றியும் ஆழமான பார்வை கொண்டவர்.இரவு 12 மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். அம்பேத்கர் பற்றி, தலித் அரசியல் பற்றி, இலக்கியம் பற்றி…

இந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பயணத்தின் முதன்மையான விஷயமே திரு.ஸ்ரீமான் அவர்களைச் சந்தித்ததுதான். தீவிரமான அரசியல்செயல்பாட்டாளராக இருந்தவர். எப்போதுமே தனியர். இப்போது ஆன்மிகமான பயணத்தில் இருக்கிறார். அவர் காவி அணியாததனால் துறவி என்று சொல்லமுடியாது. ஆனால் சாதாரணமாகச் சொல்லவும் தோன்றவில்லை. ஆகவே ஸ்ரீமான் அவர்கள் என்றே சொல்ல விழைகிறேன்

அவரை நான் மதிப்பிடுவது மிகை, அதற்கான இடத்தில் நான் இல்லை. ஆனால் என்னுடைய தொடர்ந்த அவதானிப்பில் தோன்றும் ஒரு விஷயம் உண்டு. சில குறிப்பிட்ட மனிதர்களுக்கு மிக எளிதாக சில வாயில்கள் திறந்துவிடுகின்றன. அவர் அத்தகையவர்களில் ஒருவர். நான் சந்தித்தவர்களில் அவருக்கிணையான ஒரிருவரையே சொல்லமுடியும்.

இவர்களின் இயல்புகள் என சிலவற்றைச் சொல்லலாம். ஒன்று, அவர்கள் பிறப்பிலேயே ஒருமுகப்பட்ட தீவிரம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஈடுபட்ட அனைத்திலும் எந்த எச்சரிக்கையுணர்ச்சியும் தயக்கமும் இல்லாமல் முழுமூச்சாகக் குதிப்பவர்களாக இருப்பார்கள். அத்துடன் அப்பட்டமான ஒரு நேர்மையும் சமரசமின்மையும் இருந்துகொண்டிருக்கும். ஆகவே பொய்யாக எதிலும் ஈடுபடமுடியாது, அதில் என்னதான் கிடைத்தாலும். இக்காரணத்தால் எங்கோ ஒன்றில் சென்று அமர்வதுவரை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத்தாவிக்கொண்டே இருப்பார்கள்.

7708741
[வே.அலெக்ஸ்]

அத்துடன் முழுக்கமுழுக்க தனியர்கள். அவர்களை நாம் எவ்வகையிலும் நெருங்கவே முடியாது. முழுக்கமுழுக்க தன்னுள் நிறைந்தவர்களாக இருப்பதனால் தன்னைப்பற்றிய பிறரது மதிப்பீடு என்ன என்பதை பொருட்டாகவே நினைக்கமாட்டார்கள். இறுதியாக எப்போதுமே முழுமையான நேர்நிலைத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் முறையான கல்விக்குள் அல்லது விரிவான வாசிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்றால் அது அவர்களுக்குப் பெரும் தடையாக ஆகிவிடும். அதாவது மொழியே அவர்களை கட்டிப்போட்டுவிடும். அதேபோல நிறுவன மதத்தின் முறைமையும் அவர்களை கட்டுப்படுத்தும்

மொழியின் தர்க்கத்துக்குள் வராமலிருந்தால் . நிறுவன மதத்தின் சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்தால் உதிரியாகச் சூழலில் இருந்து கிடைக்கும் ஆழ்படிமங்கள் வழியாகவே கடந்து செல்வார்கள். அப்பயணத்தில் வாழ்நாளெல்லாம் தேடுபவர்களை அஞ்சி அஞ்சி விலகிச்செல்லும் அந்தப்பறவை அவர்கள் தோளில் வந்தமரும். அதை நம்மால் அதைப்புரிந்துகொள்ள முடியாது. அபத்தமாகவும் தோன்றும். ஒரு கனவு வழியாகச் செல்வதுபோலத்தான் அது. ஆனால் சென்று முட்டிவிடுவார்கள்.

இவ்வளவுதான் சொல்லமுடியும். இப்படிச் சொல்லலாம், என் வரையில் ஒருவர் அகப்பயணம் பற்றி தெளிவாக, சீராக, அனைவருக்கும் புரியும்படி சொல்கிறார் என்றால் அவர் நல்ல வாசிப்புள்ளவர். ஒருவரின் வெளிப்பாடுகள் பித்துக்கும் கனவுக்கும் நடுவே ஒரு அந்தரங்க யதார்த்தமாக மட்டுமே வெளிப்படுகிறதென்றால்தான் அவர் எங்கோ சென்று தொட்டிருக்கிறார் என்று பொருள். தானறிந்த அனைத்தையும் தன் போக்கில் கலந்து தானோ நாமோ முழுதறியாத ஒன்றைச் சொல்ல முயல்கிறார் அவர்.

முந்தைய நாளே ரவி கிளம்பி மதுரைக்குச் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தில் ஏதோ திருவிழா. காலையில் ஆண்டாள் கோயிலுக்கு நானும் முத்துகிருஷ்ணனும் சாதாரணகிருஷ்ணனும் சென்றோம். ஆண்டாள்கோயில் முகப்பில் உள்ள சிற்ப மண்டபம் எனக்கு எப்போதுமே உவப்பானது. சி.மோகனை அங்கே பார்த்தேன். அவரது கட்டுரைத்தொகுதிக்கு ராஜபாளையத்தில் ஒரு விருது அளிக்கப்பட்டிருக்கிறது என்றார்.நாஞ்சில்நாடன் விருது வழங்கியதாகச் சொன்னார்

பால்ராஜ்
பால்ராஜ்

நிகழ்ச்சியில் கிருஷ்ணன் சுருக்கமாக வெள்ளையானை பற்றிப் பேசினார். ஜெகன்னாதன். பால்ராஜ் இருவருடைய உரைகளும் ஆழமாகவும் விரிவாகவும் அமைந்திருந்தன. மதியம் ஒன்றரை மணிக்கு விழா முடிந்தது. கதிரவன் ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டோம்

நான் அருண்மொழியை தொலைபேசியில் அழைத்து காரை அனுப்பிவைக்கும்படி சொல்லியிருந்தேன். டிரைவர்பையன் சிவகாசி வழியாகச் சுற்றி மூன்றுமணிக்குத்தான் வந்து சேர்ந்தான்.ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊர் உலகிலிருப்பதே காலையில் அருண்மொழி சொல்லித்தான் தெரிந்துகொண்டிருந்தான். அலெக்ஸும் நண்பரும் கிருஷ்ணனும் அவர்கள் காரில் கிளம்பிச்சென்றனர். முத்துக்கிருஷ்ணனுக்கு இரவு எட்டு மணிக்கு பேருந்து. நான் நான்குமணிவரை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினேன்

சங்கரன்கோயிலில் இருந்து ராஜாராம் என்ற நண்பர் வந்திருந்தார். அவரும் என்னுடன் காரில் வந்தார். சங்கரன்கோயில் அருகே ஆனையூர் என்ற இடத்தில் இருந்த குடைவரைக்கோயிலுக்குச் சென்றேன். சமணக்கோயில், இப்போது வெளிமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி நிறுவப்பட்டு வழிபடப்படுகிறார். ஒரு பெரியவர் பூசாரியாக இருந்தார்

ராஜாராம் அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அவர் ஓர் ஆசிரியர்.சங்கரன்கோயிலில் தாய்தமிழ்ப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவரது வீட்டுக்கு அவரது நண்பர்களும் என் வாசகர்களுமான நான்குபேரை வரச்சொல்லியிருந்தார். செந்தில் நிறைய கேள்விகள் கேட்டார். ஒருமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். ராஜாராமின் அம்மா சோளத்தோசை செய்து தந்தார்கள். எள்ளுப்பொடி தொட்டுக்கொண்டு சாப்பிடவேண்டும். நான் முதல்முறையாகச் சாப்பிடுகிறேன். மிகச்சுவையாக இருந்தது

இது ஒரு வியப்புதான். உலகம் முழுக்க பறந்து என்னென்னவோ சாப்பிடுகிறோம். இங்கே இந்தியாவில் நூறு கிலோமீட்டருக்குள் எல்லாமே மாறிவிடுகிறது. சங்கரன்கோயில் வரண்ட ஊர். விளைச்சல் அதிகமும் சிறுதானியங்கள்தான். குமரிமாவட்டத்தில் கிழங்குகளே முதன்மை உணவு. சின்னவயதில் மரவள்ளிக்கிழங்குதோசை சாப்பிடுவோம். இப்போது மெல்ல பல வகையான உணவுகள் வழக்கொழிந்து போய்விட்டன.

காரில் தூங்கிக்கொண்டே பத்தரை மணிக்கு நாகர்கோயில் வந்தேன். இரண்டுபகல் மூன்று இரவு. வெண்முரசு நாவல் ஒரு பாறையில் முட்டி நின்றுகொண்டிருந்தது. பயணம் மீண்டும் அகத்தைத்தொட்டெழுப்பியிருக்கும். ஊற்றை அடைத்த கல் விலகலாம். மீண்டும் ஆரம்பிக்கமுடியலாம்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது- சா.கந்தசாமி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66