‘கருமம்!’

பெரியப்பா பையன் சாமியாராகிவிடுவது என்பது குலதெய்வங்களுக்கு நம் மீது உள்ள பகைமையையே காட்டுகிறது என நினைக்கிறேன். அச்சுதன் அண்ணா சுவாமி அச்சுதானந்தாவாக ஆகி வேதாந்த மார்க்கமாக சஞ்சரிக்க ஆரம்பித்தார். அண்ணனுக்கு [அண்ணலுக்கு என்று சொல்லவேண்டுமோ?] அபான வாயுசஞ்சாரமும் உண்டு. அபேதானந்த மடத்தில் நல்ல சாப்பாடு. அவ்வப்போது வீட்டுக்கும் வந்து தம்பியிடம் காசு வாங்கிச் செல்வார்.

சாலையில் என்னைக் கண்டு புன்னகையுடன் “ஆசீர்வாதம்” என்றார். “சுகமா இருக்கியளா? அர்ஜெண்டா ஒரு ஜோலி…இங்க நம்ம..” என்று ஆரம்பிப்பதற்குள் “நில்லுடே. அத்து விளுத சோலி. தெரியும். நில்லு” என்று என் கைகளைப் பற்றிக்கொண்டார். “உனக்க கிட்ட ஒரு ஒரு விசயம் அர்ஜெண்டா சொல்லணும்னு நினைக்க ஆரம்பிச்சு கொறே நாள் ஆச்சு கேட்டியா. ஒரு டீ சொல்லு…. நாடாரே சூடாட்டு ரெண்டு வடை எடும்வே”

குடும்பசொத்தில் பங்கு கேட்டு ஆசிரமம் கட்ட திட்டமிடுகிறாரோ என என் சிந்தனை ஓடியது.அவர் பருப்பு வடையை எடுத்து ஒன்றை மடியில் கட்டி இன்னொன்றை முன்பல் இடுக்கில் செருகி தின்றபடி “இப்பம் வேதாந்தத்திலே கர்மபந்தம்னு ஒண்ணப்பத்தி சொல்லுதாகள்லா? அது என்னதாக்கும் ? சொல்லு”

“நீங்கதான் அண்ணா” என்றேன். “அஹாஹாஹா!” என்றபின் “நீ படிச்சவன். புக்கு எளுதி வித்து நல்ல காசு உண்டாக்கி தமிளத்திக்கு நல்ல பொன்னும் பட்டுமா வாங்கிக் குடுக்கேன்னு பேச்சு. அதுவும் கர்ம பந்தமாக்கும். நான் அதைக் கேக்கல்ல” அருகே நின்ற கிழவர் திரும்பிப் பார்க்த்து கர்மபந்தத்தில் சிக்கினார். அண்ணா ”இப்பம் ஒருத்தனுக்கும் வேதாந்தமாட்டு சிந்திக்க நேரமில்லை. அண்டியிலே தீப்பிடிச்ச மாதிரில்லா ஓடுதான்??” என்றார். முகம் வெளிற “பின்ன இல்லாம?” என்ற கணமே அவர் நகர்ந்துவிட்டார்

“ஏல கர்ம பந்தம்னாக்க என்ன? மனுசன மனுசன் சேத்து பின்னி கெட்டியிருக்குல்லா அது. சொந்தம் பந்தம் மட்டுமில்ல பாத்துக்கோ. இந்தா போறானே தாடிக்காரன் இவன் இப்பம் உனக்க கிட்ட வந்து டைம் என்னான்னு கேக்கான். நீ முகத்த மடக்கிட்டு அதைச் சொல்லுதே. அந்தால ஒரு சண்டை வந்திடுது. அவன் கத்திய எடுத்து உன் அடிவயித்துலே செருகிட்டான்னு வையி… சும்மா சொல்லல்ல. போன மாசம் திருவந்தரத்திலே நடந்த கதையாக்கும்”

நான் பீதியுடன் “அதெல்லாம் நாகர்கோயிலிலே நடக்காது” என்றேன்.அந்த தாடிக்காரர் உண்மையாகவே என்னை நோக்கி வந்தார். என் அடிவயிற்றை அச்சம் தாக்கியது. அண்ணா என்ன இருந்தாலும் சாமியார். ஞானதிருஷ்டி யோகநேத்திரம் ஏதாவது இழவு திறந்து கிறந்து தொலைத்திருக்குமோ?

அவரை நோக்கி “என்னவே?” என்றார் அண்ணா. அவர் குழப்பமாக “ஏன்?” என்று என்னையும் நோக்கி கேட்டார். “ என்ன முறைக்கீரு? அடி கிடி வேணுமோ?” .அவர் திடுக்கிட்டு என்னை நோக்கி முகம் சிவந்து சீறி “லே, தாயளி, ஆருலே நீ? வக்காளவோளி அடிச்சே கொன்னிருவேன்…ஆருலே” என்று கத்தி கையை நீட்டினார்.

கடைக்காரர் “வே, ஞானமணி, வே போவும் வே. அவர ஆள பாத்தா தெரியல்லியா, ஆளு சூடன் எண்ணு…” என்று தாடிக்காரரை விலக்க அவர் என்னை முறைத்து விட்டு சட்டைக்கையை புஜத்துக்கு மேல் தூக்கி சுருட்டியபடி சென்றார். ஆளை எனக்கு மெல்லிய அறிமுகம். ஆசாரிப்பள்ளம்காரர். ஆட்டோ ஓட்டுகிறார்.

“பாத்தியா…இப்பம் உன்னை கொல்லப்பாத்தான். இதாக்கும் கர்ம பந்தம். இந்தா நிக்கிற நூறுபேரில ஆருக்கு அடுத்த நிமிசம் நம்ம கிட்ட என்ன பந்தமாக்கும் உண்டாகப் போறதுன்னு நமக்கு தெரியாது. நம்ம வீட்டில பெண்ணெடுக்கப்பட்டவன் இதில இருப்பான். நம்ம காச அடிச்சுமாத்தி போற கயவாளி இருப்பான். ஏல, நம்ம கொடல சுருட்டி எடுக்குத கத்தி இதில எவன் கையில இருக்குன்னு ஆரு கண்டா? நீ ஒரு நூறு நூபா எடு. சோலி கெடக்கு”

வேதாந்தசாரம் என்ன என்று நான் முன்னதாகவே அறிந்திருந்தமையால் உடனே கொடுத்து கிளம்பிவிட்டேன். “நல்லா இருடே. இப்டி காலம்பற உன்னையப் பாத்து நாலு வார்த்த வேதாந்தம் சொல்ல கிட்டினதும் ஒரு யோகமாக்கும் பாத்துக்கோ”

அப்பால் சென்றபின் திரும்பிப்பார்த்தால் பார்வதிபுரம் சந்திப்பே எனக்குப் பீதியுட்டியது. விதவிதமான மனிதர்கள். ஒவ்வொருவரும் என்னுடன் ஏதோ வடிவில் தொடர்புள்ளவர்கள். அல்லது தொடர்பு இன்னும் எனக்கு தெரியவராதவர்கள். ஒருவர் என்னை நோக்கி வந்தார். அவருக்கும் எனக்குமான கர்மபந்தத்தின் ஏட்டை சித்திரபுத்தன் கையில் எடுப்பதை கண்டேன். என் கை நடுங்கியது.

ஆனால் அவர் கேட்டது “பதிமூணு சி இங்கிண நிப்பாட்டுமா சார்” என்று. “போடா… நீ என்னை கத்தியால் குத்தினாலும் குத்துவே” என்று நினைத்துக்கொண்டு “சேச்சே…அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்.. சோலியா போறேன். வரட்டா” என்று பக்கவாட்டு சந்தில் நுழைந்தேன்

scan0004

என்ன மாதிரி

ஞானக்கூத்தன்

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

****

ஞானக்கூத்தன் கவிதைகள்

மற்ற கட்டுரைகள்

ஏன் சார்?

முந்தைய கட்டுரைமீண்டும் கும்பமுனி
அடுத்த கட்டுரைஎல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம்