கீதை -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்.

கோவை விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்களுடன் இரவுமுழுவதும் உரையாடியது . வாசிப்பை விடவில்லை. ஆனால் எங்கள் தொழிலில் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடியினால் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை. இன்றைய தமிழ் இந்து தலையங்கம் கீதை பற்றி வாசிக்கும்போது , அது நீங்கள் தான் எழுதியிருப்பீர்களோ என்ற சந்தேகம் வராமலில்லை. அதற்காகத்தான் எழுதுகிறேன்.

நேற்றுதான் சுஷ்மாவிற்கு பதிலான உங்கள் பதிவை படித்தேன். வார்த்தைக்கு வார்த்தை உங்கள் கருத்தை இந்து பிரதிபலித்திருந்தது. அதுமட்டுமின்றி உங்கள் எழுத்தின் slang கும் அதில் இருந்தது. இது எப்படி என்று ஆச்சர்யம் கொண்டேன். உண்மைக்கு ஒரு மொழிதான் எனப்புரிந்தது.

மகாபாரதம் என்ற மாபெரும் காப்பியத்தை தொடராக எழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்கு ,அதன் உச்சமான கீதையைப்பற்றிய ஒரு பொது அபிப்பிராயத்தை இத்தனை ஆணித்தரமாக மறுப்பது உங்களது நேர்மையின் உயர் நோக்கை காட்டுகிறது.

அரசியலுக்கான இந்த அறிவிப்பு இந்து மதத்தையே இரண்டாக பிளக்க வல்லது என்பது சரியான கணிப்புதான். இந்துக்கள் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டுவிட்டு அப்படியே காளஹஸ்திக்கு சென்று சர்ப்பதோஷ நிவாரணம் பண்ணிவிட்டு, பழனி போய் தங்கத்தேரும் இழுத்துவிட்டு வருபவர்கள். அவர்களை ஷியா, சன்னி போல மாறச்செய்யும் இது போன்ற கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு காட்டுவதுதான் இந்து என்ற மதங்களை காப்பாற்றும் ஒரே வழி.

உங்கள் கடும் இலக்கிய பயணத்தின் இடையில் இது போன்ற கருத்துக்களையும் எழுதி எங்களைப்போன்றவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்திவருவதற்கு மனமார்ந்த நன்றி .

அன்புடன்
பாலமுரளி
நாகர்கோவில்

*

பகவத்கீதை “தேசீய நூல்” ஆக வைக்கும் சுஷ்மா ஸ்வரஜ்ஜின் எண்ணம் (http://www.jeyamohan.in/66954) வேண்டத்தகாததுதான். அதே சமயம் இன்னும் பெரிய மதப் பிற்போக்கு சமாசாரம் குஜராத் ஹைகோர்ர்ட்டின் சமீபத்திய முடிவு – அதாவது முஸ்லிம் பெண்கள் 15 வயதிலேயே கல்யானம் செய்து கொள்ளலாம் என்பது.ஏற்கனவே “முஸ்லிம் குடும்ப நியதிகள்” என்ற‌ சட்டங்கள் முஸ்லிம்களை தேசீய நீரோட்டத்தில் கலக்காமல் வைத்துள்ளன; மற்ற பெண்களைப்போல் அல்லாமல் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் மணம் செய்ய அனுமதிப்பது, அவர்கள் வாழ்க்கையைதான் பாதிக்கும்; 18 வயதில்தான் ஓட்டு உரிமை எல்லோருக்கும் வழங்கப்படுகிரது, அப்போது மணம் செய்து கொள்ளும் முதிர்ச்சி மட்டும் எப்படி 15 வயதில் வந்து விடும். முஸ்லிம் ஆண்கள் ஷரியத்படி 4 பெண்களை மனக்கலாம், 3 தலாக்கினால் மணமுறிவு செய்யலாம் , அதற்கு மேல் 15 பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளலாம். சுஷ்மா ஸ்வராஜ்ஜை கண்டிக்கும் ‘செக்யுலரிஸ்டுகளும்’, முற்போக்காளர்களும், “பெண்ணுரிமை” போராளிகளும் இந்த பிற்போக்கு ஷரியா அடிப்படை சட்டங்களில் மௌனம் பாவிப்பது மதசார்பிமை மேல் உள்ள மரியாதையைத்தான் சமூகத்தில் குறைக்கும்.

மதிப்புடன்
வன்பாக்கம் விஜயராகவன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 55
அடுத்த கட்டுரைஞானக்கூத்தன் : மழைக்குளம்