காஷ்மீரில் நிகழ்வது…

எந்த ஒரு விஷயத்தையும் நாளிதழ்களின் ஒற்றைவரிச்செய்திகள் வழியாகவே அறிந்துகொண்டு அரசியல் முன்முடிவுகளையும் பல்வேறு காழ்ப்புகளையும் கலந்து எழுதும் அரசியலெழுத்தாளர்களையே நாம் பெற்றிருக்கிறோம். எழுதும் விஷயத்தின் பின்புலத்தைப்புரிந்துகொள்வதோ, அதற்கென ஓர் எளியபயணத்தையாவது மேற்கொள்வதோ இங்கே மிக அரிது. இவர்கள் உருவாக்கியளிக்கும் சித்திரங்களை ஒட்டியே நம் சராசரி மனங்கள் தங்கள் அரசியல் பார்வைகளை உருவாக்கிக்கொண்டுள்ளன

காஷ்மீர், வடகிழக்கு அரசியலைப்பற்றி இங்கு முன்வைக்கப்படும் பார்வைகள் மிகமிக உள்நோக்கம் கொண்டவை, பிழையானவை என்பதை நான் எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். அங்குள்ள நடைமுறைக்கும் யதார்த்தத்துக்கும் இவர்கள் உருவாக்கும் சித்திரங்களுக்கும் தொடர்பே இல்லை.

சென்ற சிலமாதங்களுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தின் முக்கியமான பகுதிகள் அனைத்திலும் விரிவான பயணம் மேற்கொண்டேன். காஷ்மீர் சமவெளியின் பயணிகள் எளிதாகச் செல்லமுடியாத இடங்களுக்கெல்லாம் கூட ஆபத்துகள் நடுவே சென்று பார்த்தோம். அப்பகுதிகளுக்கு நேரில் சென்ற முதல் தமிழ் இதழாளர்கள்- எழுத்தாளர்கள் நாங்களே

அந்த யதார்த்தத்தை விரிவான பயணக்குறிப்பாக அன்றன்றே பதிவுசெய்திருந்தோம். காஷ்மீரின் யதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கான சுருக்கமான வரைவு இது. நாங்கள் நேரில் கண்டு கேட்டு அறிந்தது

1. காஷ்மீர் மாநிலம் ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் இருந்து பிரிய நினைக்கிறது, அதைப்பிரிந்துசெல்ல அனுமதிக்கவேண்டும் என்பது இங்கு முன்வைக்கப்படும் ஐம்பதாண்டுக்கால பிரச்சாரம்.

உண்மை இதுதான் : காஷ்மீர் மூன்றுபகுதிகள் கொண்டது . ஜம்மு இந்து பெரும்பான்மை. சீக்கியர்களும் ஷியா முஸ்லீம்களும் கணிசமானவர்கள் உள்ளன. லடாக் பௌத்தர்கள் பெரும்பான்மை. ஷியா முஸ்லீம்கள் அடுத்தபடியாக. காஷ்மீர்பள்ளத்தாக்கில் சுன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மை. ஷியாக்களும் சீக்கியர்களும் இந்துக்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.

இந்துக்கள், ஷியா முஸ்லீம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் ஆகியோர் இந்தியதேசியத்தின் உறுதியான ஆதரவாளர்கள். ஆகவே ஜம்முவும் லடாக்கும் முழுமையாகவே இந்திய தேசிய மனநிலைகொண்டபகுதிகள். பிரிவினை நோக்கு இருப்பது காஷ்மீர் சமவெளியின் சுன்னி முஸ்லீம்களிடம் மட்டுமே

2 காஷ்மீர் சமவெளி பகுதி மக்கள் முழுக்க பிரிவினை நோக்கு கொண்டவர்கள் என இங்கே சொல்லப்படுகிறது

உண்மை இதுதான்: காஷ்மீர் சமவெளியிலேயே மூன்று எல்லைப்புற மாவட்டங்களில் அன்றி பிற இடங்களில் பிரிவினைவாத நோக்கே இல்லை. அமைதி திரும்பி வணிகம் வளரவேண்டும் என விழையும் நட்பார்ந்த எளியமக்களே உள்ளனர். அவர்கள் தீவிரவாதத்தை ஏற்பவர்களல்ல, எதிர்க்கும் தைரியம் கொண்டவர்களும் அல்ல.

எல்லைப்புற மக்களில் கூட தீவிரவாத ஆதரவாளர்கள், பிரிவினை நோக்குள்ளவர்கள் மிகச்சிறுபான்மையினரே. மக்கள் தீவிரவாதத்தால் அச்சுறுத்த்ப்பட்டுள்ளனர். பிணைகைதிகள் போல உள்ளூரில் உள்ள ஒருசில தீவிரவாதிகளின் கையில் அஞ்சி நாவடங்கி உள்ளனர்.

மறுபக்கம் அவர்கள் இந்திய ராணுவம் என்ற மாபெரும் அமைப்பின் அன்றாட சோதனைகளால், சடங்கு சம்பிரதாயங்களா, சிவப்புநாடாத்தனத்தால், பொறுமையிழந்தும் உள்ளனர். ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்புப்போரின் பலிகளாகவும் ஆக நேர்கிறது. அந்தச்சினம் அவ்வப்போது தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் பிற இந்திய மாநிலங்களைப்போல வாழவே விழைகிறார்கள்

3. மொத்த முஸ்லீம் சமூகமே இந்தியாவிடமிருந்து பிரியவும் பாகிஸ்தானுடன் இணையவும் விரும்புகிறது என்ற சித்திரம் இங்குள்ளது

உண்மை இதுதான்: ஷியாக்கள் சுன்னிகளால் அச்சுறுத்தப்பட்டு தனித்து வாழ்கிறார்கள். தங்களுக்குப் பாதுகாவல் ஈரான் அரசு என நினைத்து வீடெங்கும் அவர் படத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களே பெருமளவு இந்திய ராணுவத்துக்கு உதவுகிறார்கள். முன்பு அவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் . இப்போது கணிசமானவர்கள் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள். காரணம், ஐஎஸ்ஐஎஸ் ஷியா முஸ்லீம்கள் மேல் நடத்தி வரும் தாக்குதல்கள். அதற்கு உள்ளூர் சுன்னிகள் காட்டும் ஆதரவு

சுன்னிகளிலேயே,இந்திய ஆதரவாளர்கள், தீவிரவாதப்போக்கு கொண்டவர்களிலேயே காஷ்மீருக்கு மாநில சுயாட்சி தேவை என்று கோருபவர்கள், தனிநாடு கோருபவர்கள், பாகிஸ்தானுடன் சேரவிழைபவர்கள் என பல தரப்பினர் உண்டு. அவர்களிடையே தீராத பூசல் நிகழ்கிறது

4. காஷ்மீர் மக்கள் அவ்வப்போது கடையடைப்பு மூலம் பெரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என செய்தித்தாள்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன

உண்மை இதுதான்
: இந்தக் கடையடைப்புகள் பெரும்பாலும் கல்வீச்சால் கட்டாயமாக நிகழ்த்தப்படுபவை. ஸ்ரீநகர் தவிர எங்கும் இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுமில்லை. மக்கள் அக்கறை இல்லாமல் அவர்கள் பாட்டில் இருக்கிறார்கள்.

5.காஷ்மீரில் இந்திய ராணுவம் காஷ்மீரி முஸ்லீம்களை ஒடுக்குகிறது. மக்கள் இன்னல்பட்டு வாடுகிறார்கள். காஷ்மீர் இந்தியாவால் ‘ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது’ – இச்சித்திரத்தை வாயோரம் நுரை தெறிக்கச் சொல்லாவிட்டால் ஒருவர் இங்கே முற்போக்கே இல்லை

உண்மை இதுதான்: அங்கே நிகழ்வது இந்திய ராணுவம்+ அரசு நிர்வாகம்+ குத்தகைதாரர்கள்+ பொதுமக்கள் சேர்ந்து நிகழ்த்தும் ஒரு மாபெரும் கூட்டு ஊழல். அதில் தீவிரவாதிகளுக்கு பங்கு குத்தகைதாரர் வழியாகச் செல்கிறது. இந்த ஊழல்ப்பணமே அங்கு நீடிக்கும் தீவிரவாதம் என்ற மாபெரும் நாடகத்தின் அடிப்படை. ராணுவஅதிகாரிகளும் பிரிவினைவாதத் தலைவர்களும் இந்தியாவெங்கும் பெரும் முதலீடுகள் செய்திருக்கிறார்கள்.

இந்திய அரசு கொண்டு கொட்டும் பணத்தால் காஷ்மீர் சமவெளி செல்வச்செழிப்புடன் உள்ளது. சோம்பலும் ஆடம்பரமுமே எங்கும் தெரிகிறது.மாறாக லடாக்கும் ஜம்முவும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. ஜம்மு தனிமாநிலமாக விரும்புகிறது. லடாக் யூனியன் பிரதேசமாக ஆக்கவேண்டுமென கோரி போராடுகிறது. காஷ்மீர் தங்களை சுரண்டி அழிக்கிறது என அம்மக்கள் நினைக்கிறார்கள்.

அங்கே நிகழ்வது ஒரு ராணுவச் சமரசம். காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிரான நேரடி நடவடிக்கை நாடெங்கும் இஸ்லாமியரிடம் எதிர்ப்பை உருவாக்குமென்ற அச்சம் இருப்பதனால் எல்லைக்காவலை வலுப்படுத்தி உள்ளூர் முழுக்க ராணுவத்தைக்குவித்து செயற்கை அமைதியை உருவாக்கி வைத்திருக்கிறது இந்தியா.

இந்த ராணுவ வீரர்கள் தொடச்சியாக சிறுவர்களால் கல்லெறித் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் திருப்பித் தாக்க்க தடை உள்ளது. அவர்கள் அவ்வப்போது திருப்பித்தாக்குவதும் கல்லால்தான். அவ்வப்போது ரானுவம் கோபம் கொண்டு எல்லைமீறுகிறது. அது கடுமையான தேசியகண்டனத்துக்கும் வழிவகுக்கிறது.

எல்லைப்புற காஷ்மீரின் பெரும்பாலான கிராமங்கள் முழுமையாகவே பாகிஸ்தான் ஆதரவு பெற்ற மிகச்சில சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ராணுவம் அவ்வப்போது உள்ளே சென்று திரும்பலாம். சாலைகள் வழியாக கவச வண்டிகளில் செல்லலாம்- அவ்வளவுதான்

*

காஷ்மீரில் 70 சத வாக்கெடுப்பு என்ற செய்தி வந்தபோது இந்தப் பின்னணியில் அது புரிந்துகொள்ளக்கூடியதே என்று நினைத்தேன்

காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையினர் இந்தியாவின் இயல்பான குடிமக்களாக உணர்பவர்கள். மிகச்சிலர் எளிய கசப்புகள் கொண்டவர்கள். பிரிவினை வாதம் என்பது பாகிஸ்தானின் ஐந்தாம்படையினரின் உருவாக்கம் மட்டுமே

அதற்குப் பணிந்து அங்குள்ள இந்துக்கள், ஷியாக்கள், அகமதியாக்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளிடம் கையளித்துவிடவேண்டும் என வாதிடுபவர்களே இங்கே முற்போக்காளர்களாக ஊடகங்களில் வந்து அமர்ந்திருக்கிறார்கள்.

காஷ்மீர் கட்டுரைகள்

காஷ்மீர் கடிதம்
வெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்

காஷ்மீரும் காமெடி பூட்டோவும்
இமையச்சாரல்
காஷ்மீரும் இந்துவும்
காஷ்மீர் கடிதம்
காஷ்மீரும் ராணுவமும்
காஷ்மீர் இன்னொரு கடிதம்
ஜனநாயகத்தின் காவலர்கள்

இமையச்சாரல் பயணக் கட்டுரைகள்

இமையச்சாரல் 1

முந்தைய கட்டுரைதாயார் பாதமும் அறமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 47