சு.ரா- குரல்

[embedyt]http://www.youtube.com/watch?v=TQCM9WhukhI[/embedyt]

இனிய ஜெயம்,

என் இலக்கியத் தோழமை அனுப்பிய சுட்டி இது. நான் பொதுவாக யூ ட்யுப் சென்று எந்த எழுத்தாளர் பேட்டியும் பார்த்ததில்லை.

அவர்கள் எழுத்தின் வழியே என் அகத்தில் உருவாகி வந்திருக்கும் பிம்பம் அப்படியே இருக்கட்டும் என்றொரு எண்ணம்தான்.

முன்பு ஒரு முறை ஜெயகாந்தன் அவர்களை கடலூர் ஞானியார் மடத்தில் ஒரு எளிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஒரு இருபது நண்பர்கள் மத்தியில் வைத்து முதன்முதலாக பார்த்தேன்.

சிறுமை தீண்டாதவன் எத்தகு ஆணவம் கொண்டிருப்பானோ அந்த உடல்மொழியை நேரில் கண்டேன். ஒவ்வொரு அசைவிலும் ஞானச் செருக்கு. தமிழின் கர்ஜனை.

பல வருடங்கள் கழித்து சமீபத்தில் கி வீரமணி அவர்களுக்கான ஏதோ ஒரு நிகழ்வில், விழா முடித்து வெளியில் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட ஜேகே வை கண்டேன். முதிர்ந்து தளர்ந்து அவரது அகம் அவருக்குள் ஆழ்ந்து, விளிப்போரை அவரது ஆழத்தின் அடியில் இருந்து அவரை அவரே பிரயாசைப்பட்டு திரட்டி நோக்கினார்.

இனிய ஜெயம் சிலரை, சில சித்திரங்கள் அன்று வேறு வடிவில் பார்க்கவே கூடாது. அதுபோலவே சுரா. இன்றளவும் அவரது ஒரு அசை படமும் நான் பார்த்ததில்லை. அவரது குரலை முதன் முறையாக உங்கள் அருகே அமர்ந்து கேட்டேன்.

என் தோழமை அனுப்பிய எதையும்நான் தவிர்த்ததில்லை. மிகுந்த தயக்கத்திற்குப் பின் இந்த அசை படம் கண்டேன். என்ன சொல்ல… நான் அவர் முன் இருந்திருந்தால் அவரது அண்மையை விட்டு எங்கும் சென்றிருக்க மாட்டேன்.

சுராவுக்கு உள்ளதைப் போலவே எனக்கும் அகலமான உள்ளங் கைகள். மனிதர் என்னமா சந்தோஷமா இருக்கார்.

குழந்தைகள் அம்மாவை அணுகுவது சார்ந்து அவர் சொல்லும் மன நுட்பம் சுரா ஸ்பெஷல். சுராவின் முதல் சிறுகதை கண்டதும் அவரது தந்தையின் எதிர்வினை பற்றி சுரா சொற்கள். இதுதான் சுரா என மனம் கூவியது.

சுராவின் தந்தை மகிழ்ச்சி அடையவில்லை. அதிர்ச்சி அடைகிறார், ஆம் ஒரு தகப்பனின் யூகச் சட்டகத்தின் கணிப்பின் வெளியே மைந்தன் இருந்தால் ‘அதிர்ச்சி’தானே அடைய முடியும்?

இன்றைய காலை இனிதானது.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 38
அடுத்த கட்டுரைஅசுரர் இன்று