அசோகமித்திரன்-சென்னையில்

பிப்ரவரி பதிநான்காம் தேதி காலை ஞாநியின் இல்லத்தில் கண்விழித்தெழுந்தேன். வீட்டில் அத்தனைபேரும் ஏற்கனவே எழுந்து குளித்துவிட்டிருந்தார்கள். நான் எழுந்து குளித்து உடைமாற்றிவிட்டு வெளியே வந்தேன். பணிப்பெண் மேரி சமைத்த தோசை சாப்பிட்டேன்.முந்தைய தினமே என்னுடைய நூல்கள் வந்து சேர்ந்துவிட்டன. அவை பெஞ்சு நிறைய அடுக்கடுக்காக இருந்ததைப் பார்க்க பதற்றமாக இருந்தது. இத்தனை எழுதித்தள்ளிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை. எழுதாவிட்டால் அத்தனை நூல்களையும் நான் உள்ளே அல்லவா வைத்திருக்க வேண்டும்.

 

அசோகமித்திரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவருக்கு நல்ல உடல்நலமில்லை என்று பதில் வந்ததாகவும் ஞாநி சொன்னார். அவரைப்போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டார். கண்டிப்பாக என்று நான் சொன்னேன். அசோகமித்திரன் வேளச்சேரிக்கு அப்பால் எங்கோ இருக்கிறார். அவரைப்பார்க்கவேண்டுமென்றால் இப்படி யாரையாவது துணைகொண்டு சென்றால்தான் உண்டு.

பத்துமணிக்கு வழக்கறிஞர் செந்தில் வந்தார். அவரது காரிலேயே செல்லலாம் என்று சொன்னேன். ஞாநி அவரது அடையாளமான நீளமான ஜிப்பா போட்டு கிளம்பினார். அந்தக்காலத்தில் அவர் ஜமுக்காளத்தால் ஆன கல்கத்தா ஜிப்பாதான் போட்டுவந்தார். இப்போது சேலைத்துணியால் ஆன வேறுவகை ஜிப்பா. இது இன்னமும் சிறியது, இரண்டு ஞாநிக்களுக்கு தாராளமாக போதும்.

ஞாநி நான் இந்திரா அண்ணாமலை ஆகியோர் செந்திலின் காரில் வேளச்சேரிக்கு கிளம்பினோம். ஞாநி மாதம் ஒருமுறையாவது வந்து அசோகமித்திரனைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும் வழியை துல்லியமாகக் கேட்டு தெரிந்துகொண்டே இருந்தார். பொதுவாக நான் திருப்பங்களுக்கு ஒருமுறை வழி கேட்பவர்களையே கண்டிருக்கிறேன். நேர்கோட்டில்கூட அடையாளம் தேவைப்பட்டது ஞாநிக்கு. முழுக்க வழி கேட்டு  சென்றபின் இறுதிப்பகுதி மறந்துவிட்டதனால் மீண்டும் அசோகமித்திரனிடமே வழி கேட்டோம்

* அவரது இரண்டாவது மாடி வராந்தாவில் சிரித்துக்கொண்டே  நின்றிருந்தார். மேலே வாங்கோ என்றார். சட்டையைப் போட்டுக்கொண்டு எதிரே வந்து சிரித்தார்.  உள்ளே அவரது அறையில் அமரச் சொன்னார். நாற்காலிகள் போதுமான அளவு இல்லை.  ஞாநி அசோகமித்திரனின் காலடியில் தரையில் அமர்ந்து கொண்டார்.

அசேக்கமித்திரன் நன்றாக இருப்பதுபோலத்தான் எனக்குப் பட்டது. ஆஸ்துமா பிரச்சினை அவருக்கு எப்போதுமே உண்டு. ஆஸ்துமாப்பிரச்சினை பொதுவாக உடலை இளைக்கச் செய்து பிற பிரச்சினைகளை இல்லாமலாக்கிவிடுகிறது போல. ஏ.எல்.பாஷாமின் த வண்டர் தட் வாஸ் இந்தியா படித்துக்கொண்டிருப்பதாகவும் அதில் தமிழ்நாட்டுவரலாறு குறித்து பெரிதாக ஏதும் சொல்லப்படவில்லை என்றும் * சொன்னார்

நான் அந்நூல் எழுதப்பட்டபோது பொதுவாக தென்னிந்திய வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை என்று சொன்னேன். அப்போதே நீலகண்ட சாஸ்திரியின் நூல் வந்துவிட்டதே என்றார் *. அது காலவரிசை வரலாறு. பண்பாட்டுத்தடத்தையும் எடுத்துக்கொண்டு வரலாறுகள் பின்னர்தான் எழுதப்பட்டன. உதாரணம் கே.கே.பிள்ளையின் சோழர் வரலாறு. பாஷாம் அவரது நூலில் இந்தியாவின் பண்பாட்டுப்பரிணாம வரலாற்றையே அதிகமும் சொல்கிறார் என்றேன்.

ஒருநாவல் எழுதியதாகவும் அதை ரொம்பநாள் முடிக்காமல் வைத்திருந்தமையால் பயம் வந்து எப்படியோ முடித்து அச்சுக்குக் கொடுத்திருப்பதாகவும் * சொன்னார். ”இந்த வயசிலே முடிக்காமலே போயிடுவேனோங்கிற பயம் வந்திடுது”. அவரது மடிக்கணினியில் வைரஸ் என்றார். ”நீங்கள் பென்டிரைவ் பயன்படுத்தறீங்களா?” என்றார் ஞாநி. ”அய்யய்யோ இல்லியே” என்றார் *. ”அப்ப நெட் யூஸ் பண்றீங்க போல” ”நான் எங்க அதைக் கண்டேன்” என்றார் அசோகமித்திரன். காற்று, கொசு வழியாகப் பரவும் வைரஸ் போலும்.

அசோகமித்திரன் பொதுவாக உற்சாகமாகத்தான் இருந்தார். நான் அவரை பலசமயம் மனச்சோர்வுடன் இருப்பவராகவே கண்டிருக்கிறேன். லேசாம முன்னால் வளைந்து உற்சாகமாகச் சிரிக்கும் அவரது சித்திரம் மனதை மலரச் செய்தது. கிளம்புகிறோம் என்று எழுந்தோம். பின்னால் வாசல் வரை வந்து வழியனுப்பினார். ”வீட்டிலே நல்லா இருக்காளோ” என்று அருண்மொழியை விசாரித்தார். என் நாவல் முடிந்துவிட்டதா என்று கேட்டார். கைகளைப் பற்றி வழியனுப்பிவிட்டு கிளம்பினோம்.

வெயில் நன்றாகவே ஏறிவிட்டிருந்தது. அன்று மாலை மூன்றரை மணிக்குத்தான் கேணி இலக்கியச் சந்திப்பு. ஞாநியின் இளம்நண்பர்கள் வந்து கொல்லைப்பக்கத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். பாஸ்கர் சக்தி வந்தார். கேணி அமைப்பை அவரும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்துதான் நடத்துகிறார்கள்.

புத்தகங்கள் முன் வாசலில் அடுக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்து வீடெங்கும் குரல்கள் எதிரொலிக்க ஆரம்பித்தன

முந்தைய கட்டுரைஉலோகம் – 5
அடுத்த கட்டுரைசிற்பக்கலைக்கு ஒரு சமாதி