‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18

பகுதி நான்கு : அனல்விதை – 2

சத்ராவதியில் இரண்டுநாட்கள் இளைப்பாறிவிட்டு பத்ரரும் துருபதனும் ரிஷ்யசிருங்கம் கிளம்பினர். அதற்கான அனைத்து ஒருக்கங்களையும் உத்தரபாஞ்சாலத்தவரே செய்தார்கள். இருநாட்களும் அஸ்வத்தாமன் மந்திரசாலைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாக பத்ரரின் சேவகன் சொன்னான். பத்ரர் நாள்முழுக்க அஸ்வத்தாமனைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவன் கிளம்பிச்செல்லும்போதிருந்த அந்த முகத்தை அவரால் தன் எண்ணங்களிலிருந்து விலக்கவே முடியவில்லை.

கிளம்பிய அன்று இருள் விலகிய காலையில் அவர்கள் தங்கியிருந்த அரண்மனையின் முற்றத்தில் குதிரைகளும் கழுதைகளும் ஒருங்கிக்கொண்டிருந்தபோது அஸ்வத்தாமனும் அமைச்சர்களும் வழியனுப்பும்பொருட்டு வந்திருந்தனர். மங்கலமுரசின் ஒலி கேட்டதும் பத்ரர் சால்வையை சரிசெய்துகொண்டு அஸ்வத்தாமனை வரவேற்பதற்காக ஓடிச்சென்று முற்றத்தின் முகப்பில் நின்றார். அப்பால் பெரிய அரண்மனையில் இருந்து அமைச்சர்களும் தளபதிகளும் சூழ வெண்குடைக்கீழ் மெல்ல நடந்துவந்த அஸ்வத்தாமனைக் கண்டு பத்ரர் திடுக்கிட்டார். அவன் மெலிந்து தோல்வெளுத்து இருள்சூழ்ந்த கண்களுடன் தெரிந்தான்.

பத்ரர் கைகூப்பி அருகே சென்றார். என்ன சொல்வதென்று அவர் அகம் ஒருபக்கம் திகைக்க மறுபக்கம் அவரே சொல்லிக்கொண்டிருந்தார் “அரசே, போரில் நிகழ்வதையெல்லாம் எவரும் வாழ்வில் நிகர் செய்துவிடமுடியாது. கருணையாலோ தன்னிரக்கத்தாலோ அதிகாரத்தை விளங்கிக்கொள்ளமுடியாது என்பதே அரசுநூலின் முதல்விதி. அந்த எல்லையைக் கடக்காமல் எவரும் ஷத்ரியர் ஆகமுடியாது. தங்கள் தந்தைக்கும் மூதாதையருக்கும் சத்ராவதியின் குடிகளுக்கும் செய்யவேண்டிய கடன்கள் எஞ்சியிருக்கின்றன. உடலையும் உள்ளத்தையும் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

அஸ்வத்தாமன் தலைகுனிந்து பெருமூச்சுவிட்டு “நான் அனைத்தையும் அறிவேன் பத்ரரே. ஆனால் அத்தனை எளிதல்ல அது… நான் இனி என்று நிறைவான துயிலையும் சுவையான உணவையும் அறிவேன் என்றே தெரியவில்லை” என்றான். “உள்ளத்தை வென்றவனே ராஜயோகி எனப்படுகிறான். அரசப்பொறுப்பு என்பது எந்நிலையிலும் ஒரு யோகமே” என்றார் பத்ரர். “ஆம், ஆனால் மானுட அறத்தை வெல்வது யோகம் அல்ல. அதை யோகமெனக் கொள்ள நான் மதுராபுரியின் கம்சனும் அல்ல” என்றான் அஸ்வத்தாமன்.

பத்ரர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். பின்னால் சேவகன் வந்து நின்ற ஒலிகேட்டு திரும்பினார். “அரசர் வருகிறார்” என்றான் சேவகன். பத்ரர் அவனிடம் தலையசைத்துவிட்டு திரும்பி அஸ்வத்தாமனிடம் “களத்தில் இறப்பு நிகழ்கிறது அரசே. பின் ஆதுரசாலையிலும் இறப்பு நிகழ்கிறது” என்றபின் துருபதன் வரும் திசையைச் சுட்டி “இந்த இறப்பு சற்று மெல்ல நிகழ்கிறது என்று கொள்ளுங்கள் அரசே. களத்தில் எதிரியைக் கொன்றமைக்காக வீரன் வருந்தவேண்டியதில்லை” என்றார்.

அஸ்வத்தாமன் தலையை அசைத்து “சொற்களால் என்னை ஆற்றமுடியாது நிமித்திகரே. வீரன் படைக்கலத்தால் கொன்றவர்கள் விண்ணுலகு செல்வார்கள். அது கொன்றவனுக்கும் புகழும் புண்ணியமும் சேர்ப்பதே. இதைப்போல நீறும் நரகுக்கு ஒருவரை அனுப்புவதென்றால்…” என்று சொல்லி நெஞ்சு விம்ம நிறுத்திக்கொண்டான். சில கணங்களுக்குப்பின் “எவராக இருந்தாலும்… இது…” என்றபின் மூச்சை இழுத்துவிட்டு நோக்கைத் திருப்பி “நான் பாஞ்சால அரசரைக்கூட எண்ணவில்லை. அறம் மீறி இச்செயலைச் செய்தவன், அவன் என் எதிரி, ஆயினும் இன்று அவனுக்காக வருந்துகிறேன். என் தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக இதை அவன் செய்தான். அவன் உள்ளம் அத்தகையது. ஒன்றை மட்டுமே நாடும் அம்புதான் அவன். எய்த வில் எந்தை. ஆனால்…”

பத்ரர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அஸ்வத்தாமன் “பத்ரரே, நான் நூல்களை நோக்கினேன். அவை சொல்வது ஒன்றே. இச்செயலுக்காக என்றோ ஒருநாள் அவன் குருதியில் முளைத்த வழித்தோன்றல்கள் அறமிலாமல் கொல்லப்படுவார்கள். நூறாயிரம் முறை நீரள்ளி விட்டாலும் நிறையாமல் ஃபுவர்லோகத்தில் தவித்தலைவார்கள். மண்ணில் அவன் இரவும்பகலும் அதை எண்ணி எண்ணி நீறி எரியப்போகிறான். அக்கண்ணீர் உலராமல்தான் விண்ணகம் ஏகுவான்…” என்றான். “கண்ணீர் மிகமிக வீரியம் மிக்க விதை பத்ரரே. அது ஒன்றுக்கு நூறுமேனி விளையக்கூடியது.”

பத்ரர் “அரசே, நான் எளிய நிமித்திகன். விதியை வேடிக்கை பார்ப்பவன். நான் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். அஸ்வத்தாமன் “நான் இன்றுவந்தது அதற்காகத்தான் பத்ரரே. நான் மன்னரின் பாதங்களைப் பணிகிறேன். அவர் என்னை தீச்சொல்லிடட்டும். என் தலைமுறைகள் அந்த நெருப்பில் உருகட்டும். விதிமூலம் என் கைக்கு வந்த இந்நகர் மீதும் என் குடிகள் மீதும் அவரது பழி விழலாகாது” என்றான். அவனது விழிகளை நோக்கியபின் திரும்பிக்கொண்டு பத்ரர் பெருமூச்சுவிட்டார்.

பரிவட்டச்சேவகன் சங்கு ஊத முரசுகள் மெல்ல முழங்கின. உள்ளிருந்து இரு சேவகர் இருபக்கமும் கைகளைக் கோர்த்து தோள்தாங்க ஆலமர விழுதுக்கொடிகள் போல தரைதொட்டு ஆடிய தளர்ந்த கால்களுடன் துருபதன் இடைநாழி வழியாக வந்தார். விழிகள் எங்கோ நோக்கி வெறிக்க உதடுகள் விரைந்து உச்சரித்துக்கொண்டிருந்தன. அஸ்வத்தாமன் அவரை நோக்கியதுமே கண்கள் கலங்கி கைகூப்பினான்.

துருபதன் மலையேறுவதற்காக பெரிய கருங்குதிரை ஒன்றின்மேல் மூங்கிலால் ஆன கூடைப்பல்லக்கு கட்டப்பட்டிருந்தது. அதில் மெத்தையும் தோல்வார் பட்டைகளும் இருந்தன. சேவகர் அவரை அதில் அமரச்செய்து பட்டைகளால் கட்டினர். அவர் ஒரு பட்டையை இது என்ன என்பதுபோல இழுத்து நோக்கியபின் நெடுமூச்சுடன் கைகளை மார்புடன் சேர்த்துக்கொண்டார். சேவகர்கள் அவரது கால்களை கம்பளிகளால் போர்த்தி மூடினர். அவருக்கான இரண்டாவது குதிரை அருகே நின்று சிறிய செவிகளை முன்கூர்ந்து அவர்கள் செய்வதை நோக்கிக்கொண்டிருந்தது.

அஸ்வத்தாமன் கைகளைக்கூப்பியபடி துருபதனின் அருகே செல்ல பத்ரர் சற்று பதறியவராக அவனுக்குப் பின்னால் சென்றார். மெல்லிய குரலில் “அரசே, அவருக்கு எதுவும் நினைவில் இல்லை. அதை நினைவுறுத்தவேண்டாம். நினைவு மீளும் கணத்தின் அதிர்ச்சியில் அவர் உயிர்துறக்கவும் கூடும்” என்றார். அஸ்வத்தாமன் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அருகே நெருங்க நெருங்க அவன் உடலும் துருபதன் உடல்போலவே நடுங்கத் தொடங்கியது. குதிரையருகே சென்று மூங்கில் பல்லக்கின் விளிம்பைப் பற்றிய கை நடுங்கியது.

“அரசே, நான் அஸ்வத்தாமன். என் தந்தை துரோணர்” என்றான். “உங்களை அவமதித்து ஆன்மாவை கொன்றவர் என் தந்தை. அவர் மேல் நீங்கள் விடுக்கும் அனைத்து தீச்சொற்களுக்கும் நானே உரிமையானவன்” என்றபின் பல்லக்கில் நீட்டப்பட்டிருந்த துருபதனின் கால்கள் மேல் தன் தலையை வைத்து “என் தலை உங்கள் காலடியில் உள்ளது அரசே. அனைத்துப்பழிகளையும் நானே ஏற்கிறேன்” என்றான்.

துருபதன் புரியாதவர் போல அவனை நோக்கிவிட்டு பத்ரரை நோக்கினார். பத்ரர் மூச்சை மெல்ல இழுத்து விட்டார். இதுதான் அத்தருணம். ததும்பித் துளித்து நிற்கும் அது கனத்து உதிர்ந்து விழுந்து வெடித்துச் சிதறுவதென்றால் அதுவே நிகழட்டும். ஊழ் அந்தத் தருணத்தை உருவாக்கியிருக்கிறதென்றே பொருள். வாழ்வெனும் வதையில் இருந்து இவ்வுயிர் விலகுமெனில் அதுவே நிகழ்க. அதுவே அவரது விடுதலையாகக்கூட இருக்கலாம். வாழ்க்கையைவிட இறப்பு இனிதாகும் தருணங்கள். பத்ரர் பெருமூச்சு விட்டு முன்னால் சென்றார்.

“அரசே, இவர்தான் அஸ்வத்தாமன். துரோணரின் மைந்தர்” என்றார். அச்சொற்களை அவர் தேவைக்குமேல் உரத்து கூவிவிட்டதாகப் பட்டது. வியர்த்த கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கொண்டார். “யார்?” என்றார் துருபதன். “அஸ்வத்தாமன்… துரோணரின் மைந்தர்.” துருபதன் திரும்பி அஸ்வத்தாமனை புரியாமல் நோக்கிவிட்டு மீண்டும் “யார் மைந்தன்?” என்றார். “துரோணரின் மைந்தர். அக்னிவேசகுருகுலத்தில் தங்கள் தோழர் துரோணரின் ஒரே மைந்தர்… சத்ராவதியின் அரசர்” என்றார்.

அக்னிவேசகுருகுலம் என்ற சொல் துருபதனைத் தொடுவதை உடலிலேயே பார்க்கமுடிந்தது. முகம் சுருக்கங்கள் இழுபட விரிந்தது. திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி “ஆம், முதல்முறையாக உன்னைப்பார்க்கிறேன்” என்றார். மேலும் இதழ்கள் விரிய திரும்பி பத்ரரிடம் “துரோணர் கரியவர். சிறிய உடல்கொண்டவர். அந்தத் தன்னுணர்வும் அவருக்கு உண்டு. இவர் பொன்னுடல் கொண்டிருக்கிறார். அழகிய தோள்கள் கொண்டிருக்கிறார்…” துருபதன் கைகளை நீட்டி அஸ்வத்தாமனின் தோள்களைத் தொட்டார். மட்கிய சுள்ளிகள் போன்ற விரல்கள் தோளில் வழுக்கி முழங்கை மடிப்பில் சரிந்தன. “அழகன்… உன்னை வாழ்த்துகிறேன்” என்றார்.

அஸ்வத்தாமன் “நான் வேண்டுவது வாழ்த்து அல்ல அரசே. தங்கள் தீச்சொல்லை” என்றான். துருபதனின் கழுத்துத் தசைகள் பெரும் எடையைத் தூக்குவதுபோல இறுகின. அடைத்த குரலில் “தீச்சொல்லா?” என்றார். “ஆம் அரசே” என்றான் அஸ்வத்தாமன். “ஏன்?” என்றார் துருபதன். “என் தந்தை தங்களை அவமதித்தார். தன் மாணவனைக்கொண்டு தேர்க்காலில் கட்டி இழுக்கச்செய்தார். தங்கள் தலையை தன் காலடியில் வைத்தார். உங்கள் நாட்டைக் கிழித்து பாதியை உங்கள் முகத்தில் வீசினார்” பற்கள் கிட்டித்திருக்க அஸ்வத்தாமன் தாழ்ந்து மந்தணம்போல ஆன குரலில் சொன்னான். “அந்தப் பழியை முழுமையாக நான் சுமக்கக் காத்திருக்கிறேன். இந்த நாட்டையும் மணிமுடியையும் கூட துறக்கிறேன். தாங்கள் ஆணையிடும் எந்த நிகர்ச்செயலையும் செய்கிறேன்.”

துருபதன் நடுங்கும் கைகளால் தன் கன்னங்களை அழுத்திக்கொண்டார். அவர் வழியாக கொந்தளித்துக் கடந்துசெல்லும் பெருநதியை பத்ரர் உணர்ந்தார். சற்றுநேரம் நடுநடுங்கியபடி துருபதன் அமர்ந்திருந்தார். பின்னர் கைகளால் தலையைப்பிடித்துக்கொண்டு “ஆம்… அப்போது… முன்பு” என்றார். பெருமூச்சு விட்டு “பத்ரரே” என்றார். “அரசே” என்றார் பத்ரர். துருபதன் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறும் வாசனை எழுந்தது. பத்ரர் உணர்வதற்குள் அதை சேவகன் உணர்ந்தான். கண்களால் மெல்ல அதை அவன் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான். மெத்தையை நனைத்து குதிரையின் விலாவில் சிறுநீர் வழிந்தது.

துருபதனின் இடக்காலும் கையும் வலிப்பு கொண்டன. வாய்கோணலாகியது. அவர் விழப்போகிறார் என்று பத்ரர் நினைத்தார். ஆனால் அவர் இருகைகளாலும் பல்லக்கின் விளிம்பைப்பற்றியபடி முன்னால் குனிந்து “ஆம், அதெல்லாம் நடந்தது… அப்போது” என்றார். “என்னை அவமதித்தார்கள். நான் அழுதுகொண்டிருந்தேன்… ஆனால் அதன்பின்னர்…” திரும்பி பத்ரரிடம் “பத்ரரே, காம்பில்யத்தை இப்போது ஆள்வது யார்?” என்றார்.

“தங்கள் மைந்தர் சித்ரகேது…” என்றார் பத்ரர். அரசரின் அந்தச் சமநிலை அவருக்கு பெருவியப்பை அளித்தது. “ஆம், அவன் ஆள்வான்” என்றார் துருபதன். திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி “நீ ஆள்வது சத்ராவதியை அல்லவா?” என்றார். “ஆம் அரசே…” என்றான் அஸ்வத்தாமன். “ஆம், துரோணர் என்னை அவமதித்தார். என்னை ஆடையில்லாமல் இழுத்துச்சென்று…” என்றபின் பெருமூச்சுடன் “ஆம் அது நடந்தது… முன்பு… நீ அங்கே இருந்தாயா?” என்றார்.

“ஆம் அரசே இருந்தேன்” என்றான் அஸ்வத்தாமன். “நீ சிறுவன். அங்கெல்லாம் உன்னை ஏன் கொண்டுவருகிறார் உன் தந்தை?” என்றார் துருபதன். அவரது முகம் நன்றாக வெளுத்து நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை வழிந்தது. காதுகளுக்கு அருகே இரு நரம்புகள் நீலநிறமாக முடிச்சுகளுடன் புடைத்து அசைந்தன. “பத்ரரே” என்றார் துருபதன். “அரசே” என்றார் பத்ரர். “எனக்கு மிகவும் குளிர்கிறதே!” பத்ரர் “நாம் சென்றுவிடுவோம் அரசே” என்றபின் அஸ்வத்தாமனிடம் விலகும்படி கண்களைக் காட்டினார். அஸ்வத்தாமன் கைகளைக் கூப்பியபடி பின்னகர குதிரை ஒரு அடி முன்வைத்தது.

குதிரை காலெடுத்துவைத்த அதிர்வில் சற்றே மீண்டவர் போல “நீ துரோணரின் மைந்தன் அல்லவா?” என்று துருபதன் கைநீட்டினார். “நீ என் மைந்தனுக்கு நிகரானவன்” என்று சொல்லி அருகே வந்த அஸ்வத்தாமனின் தோள்மேல் மீண்டும் தன் கரத்தை வைத்தார். ”அழகன்… நல்ல தோள்களைக் கொண்டவன்.” புதியதாக கண்டதுபோல முகம் மலர “நோயில் இருக்கையில் மைந்தரின் வலுவான தோள்களைக் காண்பது நிறைவளிக்கிறது” என்றார். அஸ்வத்தாமன் விசும்பியபடி மீண்டும் துருபதன் கால்களை பற்றிக்கொண்டான். “அரசே, நான் சொல்வதற்கேதுமில்லை. என் ஆன்மாவை உணருங்கள். எனக்குரிய தண்டனையை அளித்து என்னை வாழச்செய்யுங்கள்.”

பலமுறை வாயைத் திறந்தபின் மெல்லிய குரலில் துருபதன் சொன்னார் “மைந்தா, எந்தத் தந்தையும் மைந்தர்கள்மேல் தீச்சொல்லிடுவதில்லை. என் வாயால் நீ வெற்றியும் புகழும் நிறைவும் கொண்டு நீடூழி வாழ்கவென்று மட்டுமே சொல்லமுடியும்… அச்சொற்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.” அஸ்வத்தாமனின் தலைமேல் கைகளை வைத்தபின் செல்லலாம் என்று கையசைத்தார். பத்ரர் மேலாடையால் முகத்தைத் துடைத்தபின் திரும்பி கைகாட்ட குதிரை முன்னகர்ந்தது. தொழுத கையுடன் அஸ்வத்தாமன் பின்னகர்ந்தான்.

துருபதன் அப்போதுதான் அவரது உடலை உணர்ந்தார். “பத்ரரே” என்றார். பத்ரர் செல்வதற்கு முன்னரே சேவகன் சென்று புரவியை அப்பால் கொண்டுசென்று அவரது ஆடைகளை மாற்றினான். முரசுகள் ஒலித்து வழியனுப்ப அவர்கள் கிளம்பினர். சத்ராவதியை ஒட்டியே மலைப்பாதை தொடங்கியது. குளம்புகளும் குறடுகளும் எழுப்பிய ஒலி அன்றி வேறில்லாமல் அவர்கள் சென்றனர். துருபதன் வழிநெடுக தலைகுனிந்து தன்னுள் அமர்ந்திருந்தார். அவரை நிமிர்ந்து நோக்க அஞ்சி பத்ரர் பின்னால் வந்தார். ஒருமுறை சாலைவளைவில் அவர் முகத்தை நோக்கியபோது அவர் உள்ளம் அச்சம் கொண்டது. வெளுத்து சடலத்தின் முகம் போலிருந்தது அது. அது ஒரு சவ ஊர்வலம் என்ற எண்ணம் வந்ததுமே பத்ரர் அதை அழித்தார்.

நான்குநாள்பயணத்தில் ஒருமுறைகூட துருபதன் பேசவில்லை. காற்றைப்பின்னிக்கொண்டிருந்த கைகளின் விரைவு கூடிக்கூடி வந்தது. உதடுகளில் அச்சொல் பிதுங்கி நசுங்கியது. இல்லை இல்லை என தலையை ஓயாமல் அசைத்துக்கொண்டிருந்தார். அத்துடன் அவ்வப்போது தன்னிச்சையாக குதிரைமேலேயே சிறுநீர் கழிக்கத் தொடங்கினார். பலமுறை அவரை உடைமாற்றி தூய்மைசெய்யவேண்டியிருந்தது. அதை அவர் உணர்கிறாரா, நாணுகிறாரா என்று பத்ரர் நோக்கினார். அவர் தன்னை ஒரு பாவையாக ஆக்கி சேவகன் கையில் அளித்துவிட்டிருந்தார்.

கங்கைக்கரையோரமாகவே அவர்கள் பயணம்செய்தனர். மலைப்பொருட்கள் திரட்டும் வேடர்களால் அமைக்கப்பட்ட கழுதைப்பாதை அது. உருளைக்கற்களும் வேர்களும் மறித்த ஒற்றைச்சரடில் வரிசையாக குதிரைகளும் கழுதைகளும் வீரர்களும் சென்றனர். வழிகாட்டி அழைத்துச்சென்ற காவலன் “அங்கே கங்கை ரிஷ்யசிருங்க மலையிறங்கி சமநிலத்தைத் தொடும் இடம் ரிஷிகேசம் என்று அழைக்கப்படுகிறது. அங்குதான் துர்வாசர் தங்கியிருக்கும் குருகுலம்” என்றான். பத்ரர் “குளிருமா?” என்றார். “ஆம் நிமித்திகரே. மலையிறங்கி வரும் காற்று இமயப்பனிமலைகளின் மூச்சு என்பார்கள்” என்றான் சேவகன்.

கணாதரின் குருகுலம் கங்கையின் கரையில் இருந்தது. அங்கே கங்கை உருளைப்பாறைகள் நடுவே சீறிப்பெருகி வந்து வெண்மயிலின் தோகை போல நுரைவெளியாக விரிந்தது. நீரோட்டம் வழியாக மலையிறங்கி வந்த வெண்ணிறமான உருளைக்கற்கள் பரவிய பரப்பில் நுரையும் கலக்க பனிப்பரப்பு போல ஒளியுடன் விழிகளை நிறைத்தது கங்கை. நூற்றுக்கணக்கான புலிகள் சேர்ந்து உறுமியதுபோல அங்கே நீரின் ஓசை நிறைந்திருந்தது. நெடுந்தொலைவிலேயே அவ்வொலி கேட்கத்தொடங்கியது. சேவகன் “கங்கையின் நகைப்பு” என்றான். பத்ரர் சற்று நேரத்திலேயே சாலமரங்களுக்கு அப்பால் வெண்ணிற ஒளியைக் கண்டார்.

சாலவனம் என்னும் சோலைக்குள் இருந்தது கணாதரின் குருகுலம். குருகுலத்துக்கான வழியை சுட்டும் காவிநிறக்கொடி தொலைவிலேயே தெரிந்தது. குருகுலத்தை அண்டிவாழும் மைனாக்கள் அங்கே ஒலித்த வேதநாதத்தை தாங்களும் கற்றுக்கொண்டு கிளைகள்தோறும் பறந்து கூவிக்கொண்டிருந்தன. மாலைவேளையில் பிரம்மசாரிகள் மேய்ப்பதற்குக் கொண்டுசென்ற பசுக்கூட்டங்களை ஓட்டிக்கொண்டு குருகுலத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சேவகன் முன்னால் சென்று துருபதனின் வருகையை தெரிவித்தான். பிரம்மசாரிகளில் ஒருவன் வந்து “பாஞ்சால மன்னருக்கு நல்வரவு. குருநாதரும் மூத்தமுனிவரும் இருக்கிறார்கள்” என்றான்.

குருகுலத்துக்குடிலில் அவர்கள் தங்கி இளைப்பாறினார்கள். பத்ரர் துருபதனின் சேவகனிடம் “அரசருக்கு இடையில் தோல்பையை கட்டிவைத்து சபைக்குக் கொண்டுவா” என்றார். அவர்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன. அவன் “ஆம்” என்றான். பத்ரர் அவன் பிழையாக புரிந்துகொண்டுவிட்டானோ என்ற எண்ணத்தை அடைந்து “அது குழந்தைகளின் இயல்பு… நம் பரிவுக்காக அவை அவ்வாறு செய்யும். அரசரும் இப்போது குழந்தைபோலத்தான் இருக்கிறார்” என்றார். சேவகன் அதற்கும் உணர்ச்சியின்றி “ஆம்” என்றான்.

அந்தி இருட்டியபோது குருகுலத்தின் வேள்விச்சாலையில் வேதசபை கூடியது. துருபதனை புத்தாடை அணிவித்து தோள்களில் ஏற்றிக்கொண்டுசென்று வேதசபையில் அமரச்செய்தனர். புலித்தோலிடப்பட்ட தேக்குமர மணைமேல் அவர் தலைகுனிந்து அசையாமல் அமர்ந்திருந்தார். வைதிகர்கள் வேள்விக்கான ஒருக்கங்களை செய்துகொண்டிருந்தனர். கணாதரும் மாணவர்களும் வந்து அமர்ந்ததும் ஹோதாக்கள் அரணிக்கட்டையைக் கடைந்து நெருப்பெடுத்து எரிகுளத்தில் நெருப்பை எழுப்பினர். இரு மாணவர்கள் இருபக்கமும் தோள்களைத் தாங்கி வழிநடத்த துர்வாசர் மெலிந்த கால்களை மெல்ல எடுத்து நடந்து வந்து மான்தோல் இருக்கையில் கையூன்றி அமர்ந்தார்.

பத்ரர் புராணங்களில் அறிந்த துர்வாசரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் நூற்றுப்பன்னிரண்டாவது துர்வாசர் என்று நிமித்திகநூல்கள் சொல்லின. முதுமையில் குறுகி வற்றிய உடலில் மட்கிய மரப்பட்டைபோல செதிலோடிய தோல் மடிப்புகளாக பரவியிருந்தது. நகம் நீண்ட விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறியிருந்தன. தோள்களில் நரைத்த சடைத்திரிகள் விழுந்து பரவியிருந்தன. அவரது தாடியும் சடைக்கொத்தாக மார்பில் விழுந்திருந்தது. வெண்ணிறமான புருவமயிர்கள் கண்கள்மேல் விழுந்திருக்க அவர் பார்வையற்றவர் போல தோன்றினார். பீடத்தில் அமர்ந்ததும் இருகைகளையும் கூப்புவதுபோல மார்பின்மேல் வைத்துக்கொண்டார். மெல்வதுபோல பற்களற்ற வாயை அசைத்துக்கொண்டு ஆடும் தலையுடன் அமர்ந்திருந்தார்.

கணாதரும் மாணவர்களும் வேதநாதம் எழுப்பி ஆகுதியை தொடங்கினர். சிறிய செம்மலர்போல புகையுடன் நெருப்பு எழுந்ததும் துருபதன் சற்று முன்னகர்ந்து அதையே நோக்கிக்கொண்டிருந்தார். நெருப்பு தழலாடத் தொடங்கியதும் அவரது நோக்கு அதிலிருந்து விலகவேயில்லை. அவரது முகத்தில் செந்தழலின் ஒளி அலையலையாக தெரிந்தது. விழிகளுக்குள் செம்புள்ளிகளாக சுடர் ஆடியது.

வேள்வி முடிந்து அவிபாகத்தை பங்கிட்டு மாணவர்களுக்கு அளித்ததும் கணாதர் தலையசைக்க அவரது முதன்மை மாணவர்கள் தவிர பிறர் எழுந்து அகன்றனர். கணாதர் பத்ரரிடம் “நிமித்திகரே, உங்கள் தூது வந்தது. மன்னரின் நிலையை நாங்கள் முன்னரே அறிந்துமிருந்தோம். இந்த குருகுலத்தில் துர்வாச மாமுனிவர் வந்து தங்கியிருப்பது தங்கள் நல்லூழே. அவரது அருட்சொற்கள் மன்னரின் துயருக்கு மருந்தாகுமென எண்ணுகிறேன்” என்றார். அந்த முறைமைப்பேச்சு பத்ரருக்கு அப்போது சலிப்பாக இருந்தது. அவர் துருபதனை நோக்கினார். அவர் முன்னும்பின்னும் அசைந்தாடி நெருப்புக்குளத்தில் நிறைந்திருந்த செங்கனலையே நோக்கிக்கொண்டிருந்தார்.

“மன்னர் தன் அகத்துயரை முனிவரிடம் சொல்லலாம்” என்றார் கணாதர். “முனிவரே, அவர் எதையும் சொல்லும் நிலையில் இல்லை” என்றார் பத்ரர். திகைத்து துருபதனை நோக்கியபின் “பேசுவாரா?” என்றார் கணாதர். “ஆம், ஆனால் சமீபகாலமாக பேச்சில் முன்பின் தொடர்பு குறைந்துவருகிறது.” கணாதர் ஒருகணம் துர்வாசரை நோக்கிவிட்டு “அப்படியென்றால்…” என்றார். “எப்போதாவது தெளிவுடன் பேசுகிறார். பெரும்பாலான தருணங்களில் அவர் தன்னுள் எங்கோ இருக்கிறார்” என்றார் பத்ரர்.

கணாதர் திரும்பி துருபதனிடம் “அரசே, தங்கள் துயரை தாங்கள் மாமுனிவரிடம் சொல்லலாம். யுகங்கள் தோறும் வாழும் அழியாத ஞானபீடம் அவர்” என்றார். துருபதன் “ம்?” என்று திரும்பி கேட்டபின் பத்ரரிடம் “பத்ரரே?” என்றார். “அரசே, தாங்கள் முனிவரிடம் சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லலாம்” என்றார் பத்ரர். “முனிவரிடமா?” என்றார் துருபதன். “ஆம் அரசே, அதோ ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் மாமுனிவர் துர்வாசரிடம்.” துருபதன் திரும்பி நோக்கியபின் “என்ன சொல்வது?” என்றார்.

“தங்கள் உள்ளத்தின் துயரை. வஞ்சத்தை” என்றார் பத்ரர். “என்ன துயர்?” என்று துருபதன் கேட்டார். “இவர் யார்?” பத்ரர் “இவர் கணாதர். இவரது குருநாதரான துர்வாசர் அவர்” என்றார். துருபதன் இருவரையும் நோக்கியபின் “என்ன சொல்லவேண்டும்?” என்றார். பத்ரர் கணாதரை நோக்கினார். “பத்ரரே, எனக்கு மிகவும் குளிரடிக்கிறது” என்றார் துருபதன். அப்போதும் அவரது கரங்கள் பின்னிக்கொண்டே இருந்தன. ஒரு சொற்றொடரை பேசிமுடித்தபின் உடனே அவரது உதடுகள் உச்சரிப்பை தொடர்ந்தன.

கணாதர் “நிமித்திகரே, ஞானத்தை பெற்றுக்கொள்ள அவர் அகம் திறந்திருக்கவில்லை என்றால் குருநாதர் என்னசெய்யமுடியும்?” என்றார். “தெரியவில்லை முனிவரே. ஆனால் என் அகம் சொன்னது, இங்குவரவேண்டும் என்று. ஆகவே வந்தேன்” என்றார் பத்ரர். துருபதன் “பத்ரரே, என்னால் இங்கே இருக்கமுடியவில்லை. இங்கு குளிர் அடிக்கிறது” என்றார். “இவர் யார்?” என்று கணாதரை விரல் சுட்டினார். “முனிவர், கணாதர்.” துருபதன் “ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன். நைஷதகுருகுலம்” என்றபின் “எனக்கு குளிர்கிறதே” என்றார்.

“இவரிடம் பேசவே முடியவில்லை என்றால் நாங்கள் என்னசெய்யமுடியும்?” என்றார் கணாதர். துருபதனை நோக்கிவிட்டு “ஒன்றுசெய்யலாம். இவரை இங்கே சிலகாலம் விட்டுவைக்கலாம். கங்கையின் நீரும் இமயக்காற்றும் அவரை தெளியவைக்கலாம். அந்த நகரில் இருந்தால் அவரது உள்ளம் அடைந்த புண் ஆறாது. இங்கே மெல்லமெல்ல அவர் அந்நகரையும் அங்கே அடைந்த அவமதிப்பையும் மறந்து மீண்டு வரமுடியும். கானகவாழ்க்கை ஆற்ற முடியாத துயரமேதும் மானுடர்க்கில்லை” என்றார். பத்ரர் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் கணாதர் சொல்வது மட்டுமே உண்மை என்று தெரிந்தது.

“ஆம், அவ்வண்ணமே செய்கிறோம்” என்றார் பத்ரர். “நான் சேவகர்களை திருப்பி அனுப்புகிறேன். நானும் அரசருடன் இங்கு தங்கிவிடுகிறேன்.” கணாதர் தலையை அசைத்தார். “அரசே, நாம் எழுவோம்…” என்று துருபதனை தொட்டார் பத்ரர். துருபதன் எழுந்து “எனக்கு மிகவும் குளிர்கிறது… என் கால்கள்…” என்று பேசத்தொடங்கியதும் கண்களைத் திறந்த துர்வாசர் “துருபதா, நில்!” என்றார். துருபதன் “எனக்கு குளிர் அடிக்கிறது” என்றார். துர்வாசர் இரு மாணவர்களால் தூக்கப்பட்டு எழுந்து அருகே வந்தார். “இவர் யார்?” என்றார் துருபதன்.

அருகே வந்த துர்வாசர் முற்றிலும் எதிர்பாராத கணத்தில் தன் கையில் இருந்த யோகதண்டால் துருபதனை ஓங்கி அறைந்தார். தலையில் அடிவிழுந்த ஓசை நரம்புகளை கூசவைக்கும்படி கேட்டது. துருபதன் “யார்?” என்று கூவியபடி பின்னகர்வதற்குள் மீண்டும் அவர் ஓங்கி அறைந்தார். “பத்ரரே” என்று கூவி துருபதன் தலையை பற்றிக்கொண்டார். குருதி ஊறி விரல்களை மீறியது. “என் விழிகளைப்பார் மூடா. உன் நாடகத்தை நான் அறிவேன்” என்றார் துர்வாசர். கைகளால் தலையின் காயத்தைப் பொத்தியபடி துருபதன் நடுங்கிக்கொண்டு நின்றார். துர்வாசர் அவரது விழிகளை கூர்ந்து நோக்கி மிக மெல்ல “மானுடர் என்னிடமிருந்து மறைக்கக்கூடியதாக ஏதுமில்லை” என்றார்.

துருபதன் கேவி அழுதபடி அப்படியே மடிந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார். இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதார். அழும்தோறும் அழுகை வலுத்து வந்தது. தோள்களும் கால்களும் அதிர்ந்து இழுபட்டன. பின் பக்கவாட்டில் சரிந்து பசுஞ்சாணி மெழுகப்பட்ட தரையில் விழுந்து கருக்குழந்தை போல சுருண்டுகொண்டார். அவரது அழுகையை நோக்கியபடி அருகே நின்ற துர்வாசரின் தாடை அசைந்தபோது தாடியும் அசைந்தது. தன் மெல்லிய வலக்காலைத் தூக்கி அவர் துருபதனின் தலையில் வைத்தார். துருபதன் தீ பட்டதுபோல துடித்து விழிதூக்கி நோக்க கால்கட்டைவிரலை அவர் நெற்றிப்பொட்டில் அழுத்தினார். நடுங்கும் கைகளால் அவர் துர்வாசரின் பாதத்தை பற்றிக்கொண்டார்.

துருபதனின் அழுகை அடங்கியது. மூடிய இமைகளின் இடுக்கு வழியாக நீர் ஊறி வழிந்துகொண்டே இருந்தது. விசும்பல்கள் அவ்வப்போது எழுந்து மெலிந்த நெஞ்சை உலுக்கின. “எழுந்து அமர்க அரசே!” என்றார் துர்வாசர். துருபதன் எழுந்து அமர்ந்து தன் சால்வையால் கண்களை துடைத்துக்கொண்டார். “நெடுந்தூரம் சென்றுவிட்டீர்” என்றார் துர்வாசர். “இன்னும் சில அடிதூரம் எடுத்துவைத்தால் ஒருபோதும் திரும்ப முடியாது. நல்லூழாக நீர் இங்கே வந்தீர்.” துருபதன் “நான் ஒன்றும் அறியேன் முனிவரே” என்றார்.

“ஆம், நீர் அறியமாட்டீர். உம்முள் வாழும் ஆன்மா ஆடும் நாடகம் இது” என்றார் துர்வாசர். “ரதசாலையில் செல்ல நாணுபவன் ஊடுவழிகளில் புகுந்து காட்டில் மறைவதுபோல ஆன்மா புதுவழிகளை கண்டுபிடிக்கிறது. இழப்பிலும் அவமதிப்பிலும் அக உலகம் சிதறிப்பரக்கிறது. அதை மீண்டும் தொகுத்துக்கொள்ள ஆன்மா படும் பதைப்பையே நாம் துயரம் என்கிறோம். தொகுத்துக்கொள்ளவே முடியாது என அது எண்ணும் கணத்தில் சிதறவிடுவதையே தன் வழியாக கண்டுகொள்கிறது. அந்த விடுதலை பெரும் ஆறுதலை அளிக்கிறது. அதை அறிந்தபின் ஆன்மா திரும்பிவரமறுக்கும். மேலும் மேலும் தன்னை சிதறவைத்துக்கொண்டே இருக்கும்.”

துருபதன் “நான் ஒன்றும் அறியவில்லை மாமுனிவரே…” என்றார் “மெல்லிய நினைவு போல அந்தச் சிலநாட்கள். அன்று என்ன நிகழ்ந்தது என்றே இன்று தெளிவாக இல்லை. சில காட்சிகள் கனவா என்பதுபோல.” துர்வாசர் “அந்நாளை இல்லை என்று ஆக்க நீ முயன்றாய். அனைவரும் செய்வது அதையே. இழப்பை அனைவருக்கும் அறிவிப்பார்கள். எண்ணியும் சொல்லியும் வளர்ப்பார்கள். அது வெடித்துச் சிதறி பின் அழியும். அவமதிப்பை வெளியே தெரியாமல் புதைத்துவைப்பார்கள். வீட்டு அறைக்குள் பிணத்தை ஒளித்துவைப்பதுபோல.”

“ஏனென்றால் இழப்பில் உன் அகங்காரம் சீண்டப்படுவதில்லை. அவமதிப்போ அகங்காரத்தின் வதை” என்றார் துர்வாசர். துருபதன் அவரை புதியவரை பார்ப்பதுபோல திகைப்புடன் நோக்கியபடி அமர்ந்திருந்தார். சிலமுறை நீள்மூச்சு விட்டபின் “நான் என்ன செய்யவேண்டும் மாமுனிவரே?” என்றார். “புண்பட்டு அழுகிய உறுப்புகளை வெட்டி வீசுவதே மருத்துவமுறை. உன் அகங்காரத்தை அகற்றுக. அது ஒன்றே உன்னை மீட்கும்” என்றார் துர்வாசர். “நான், என்னை…” என்று துருபதர் சொல்லத்தொடங்க “உன்னை நீ அதிலிருந்து மீட்டாகவேண்டும். வேறுவழியே இல்லை. அகங்காரத்தைக் குளிரச்செய்யும் எதையாவது செய்யலாம். ஆனால் அது நிரந்தரத் தீர்வல்ல” என்றார் துர்வாசர்.

“செய்கிறேன்” என்று தலைகுனிந்து துருபதன் சொன்னார். “அப்படியென்றால் இப்படியே மலையேறிச்செல். மேலே தேவப்பிரயாகை என்னும் புனிதநீர்ச்சந்திப்பு உள்ளது. அங்கே உன்பாவங்களை களையவேண்டுமென வேண்டிக்கொண்டு நீராடு” என்றார் துர்வாசர். “அகங்காரமே மிகப்பெரிய பாவம். அது அழியட்டும். அங்குள்ள படித்துறையில் சமஸ்தாபராதபூசை செய். நீ உன் அகங்காரத்தால் துரோணருக்கு இழைத்த பிழைக்கு கழுவாய்தேடு!”

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

துருபதன் அடிவாங்கியவன் போல நிமிர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க “அவர் உனக்கிழைத்த பிழைக்கும் உனக்கும் தொடர்பில்லை. அது அவர் தீர்த்தாகவேண்டிய கடன். நீ தீர்க்கவேண்டிய கடன் நீ இழைத்த பிழை மட்டுமே. அவர் உன் வாயிலில் வந்து இரந்து நின்று அவமதிக்கப்பட்ட அத்தருணத்தை நீ ஒருகணம்கூட மறக்கவில்லை. அதை உன் அகங்காரத்தின் கனத்த திரையால் மூடி பன்னிரு ஆண்டுகாலம் வாழ்ந்தாய். அந்த அகங்காரம் கிழிபட்டபோது அது பேருருவம் கொண்டு எழுந்தது. துருபதா, உன்னை வதைத்தது உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பு மட்டும் அல்ல. உன்னுள் வாழ்ந்த குற்றவுணர்ச்சியும்கூடத்தான்” என்றார்.

“ஏனென்றால் நீ இப்புவியில் விரும்பும் முதல் மானுடன் துரோணரே” என்றார் துர்வாசர். “உன் குற்றவுணர்வை நீ வென்றால் உன் அகங்காரம் தணியும். உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பை நீ எளிதாக கடந்துசெல்வாய்.” துருபதன் கைகூப்பி “முனிவரே” என்றார். “இதுவன்றி பிறிதெதையும் நான் மானுடர் எவருக்கும் சொல்லமுடியாது. நீராடுக, உன் உலகு தூய்மையாகும்” என்றபின் துர்வாசர் திரும்பி தன்னை தூக்கும்படி மாணவர்களுக்கு கைகாட்டினார். கைகூப்பியபடி துருபதன் அமர்ந்திருந்தார்.

அவர் செல்வதை நோக்கியபடி அமர்ந்திருந்த துருபதன் திரும்பி “பத்ரரே” என்றார். “ஆம், அரசே. அவர் சொல்வதே முறை. உங்கள் ஆன்மாவின் தோழர் துரோணரே. துரோணரின் மைந்தரின் தோள்களைத் தழுவி நீங்கள் முகம் மலர்ந்தபோது நானும் அதையே எண்ணினேன்” என்றார் பத்ரர். துருபதன் பெருமூச்சுவிட்டார். “நாம் தேவப்பிரயாகைக்கு செல்வோம்” என்றார் பத்ரர்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைஇணைய உலகமும் நானும்
அடுத்த கட்டுரைவிழா- வாழ்த்துக்கள்