அக்ரஹாரத்தில் கழுதை

வலைப்பதிவர் சுரேஷ் கண்ணனின் வலைப்பக்கத்தில் [http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html] தொலைக்காட்சியில் ஜான் ஆபிரகாமின் அக்கிரஹாரத்தில் கழுதை என்ற படம் வெளிவரப்போவதைப்பற்றிய பரவசம் மிக்க அறிவிப்பு [அய்யாங்! அக்கிரஹாரத்தைலே கழுதை!] பார்த்தபோது சிரிப்பை அடக்கிக் கொண்டேன். அனேகமாக வாயே திறக்காமல் இருந்துவிடுவார் என்றுதான் எண்ணினேன். எண்ணங்களை பதிவுசெய்திருக்கிறார். வாழ்க.

சினிமாத்துறையினர் பலர் ஜானைப்பற்றி சில கருத்துக்களை இணையம் மூலமும் செவிவழியாகவும் பெற்றிருந்திருக்கிறார்கள். படத்தை பத்து நிமிடம் பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டு ”என்ன சார் இது…இதுக்கா தேசிய விருது?” என்றார்கள். பலருக்கு பேசிக்கொண்டிருக்கும்போதே சிரிப்பு பீரிட்டது.

”அந்தக்காலத்திலே பயங்கர சர்ச்சையை கெளப்பின படமாமே சார்!” என்றார் ஒருவர். எந்தக்காலத்திலும் இந்தப்படம் வெளிவரவே இல்லை.  மிகச்சில திரைமாணவர்கள் அன்றி எவருமே இதைப்பார்த்ததில்லை. இதைப்பற்றிய புகழ்ச்சிகள் எல்லாமே திருமந்திரத்துக்கு அந்தக்காலத்து பிள்ளைமார் ‘மனதுக்கெட்டா’ பொருள் சொல்வதைப்போலத்தான்.

இதற்கு தேசியவிருது கிடைத்தது ஒரு வேடிக்கை. க.நா.சு அப்போது நடுவர் குழுவில் இருந்தார். அவர் சினிமாவே பார்ப்பதில்லை. மொத்தமே பத்து படம் பார்த்திருந்தால் ஆச்சரியம். இந்தப்படத்தையும் அவர் பார்க்கவில்லை. ஆனால் இதன் திரைக்கதையை அவர் வாசித்திருந்தார். அது அவருக்குப் பிடித்திருந்தது. ஆகவே அவர் படத்துக்கு வாக்களித்தார். இன்னொருவரையும் வாக்களிக்க வைத்தார்.

வெங்கட் சாமிநாதனின் திரைக்கதை ‘அக்ரஹாரத்தில் கழுதை’ நூலாக வெளிவந்திருக்கிறது. அது டெல்லி வாழ் நண்பர்க்குழு ஒன்றின் கூட்டு முயற்சி என்று சொன்னார்கள். அது ஒரு நல்ல திரைக்கதை என்றே நான் நினைக்கிறேன். ஆனால் சுந்தர ராமசாமி அதை ஒரு அமெச்சூர் முயற்சி என்று எழுதியிருக்கிறார். கண்டிப்பாக அமெச்சூர் திரைக்கதைதான். ஆனாலும் ஒரு நல்ல முயற்சி.

அதைப் படமாகப் பார்த்தபோது சாமிநாதன் ஆடிப்போய்விட்டதாகச் சொன்னார். முன்னாளில் கிரேஸி பாய்ஸ் ஆ·ப் த கேம்ஸ் என்று ஒருபடம் வந்தது. அதில் ஒரு ‘சிற்பி’ ஒருவரை கையில் சுடருடன் நிற்கச்செய்து கணம் தோறும் கூர்ந்து நோக்கி சிற்பம் செதுக்குவார். அசையாதே என்று அடிக்கடி குரல் வேறு. கடைசியில் பார்த்தால் சம்பந்தமே இல்லாமல் மேஜையும் நாற்காலியும் கலந்தது போல ஒருவடிவம். அதுதான் ஜானின் படம்.

‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றி அல்லது ஜான் பற்றி ஆகா ஓகோ என்று கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அந்தப்படத்தைப் பார்க்காதவர்கள், ஜானை அறியாதவர்கள். இன்னொருவகை உண்டு பார்த்தாலும் புரியாத, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பரிபக்குவமடைந்த, ‘அறிவுஜீவிகள்’. ஜானின் எல்லா படங்களும் தழுவல்கள், எல்லா படங்களும் எந்தவிதமான பொறுப்பும் உழைப்பும் இல்லாமல் எடுக்கப்பட்டவை. எந்தபப்டத்தையுமே உலகத்திரைப்படங்களில் சில நல்ல படங்களையாவது எடுத்த எவருமே பொருட்படுத்த மாட்டார்கள்.

தன்னுடைய படமென ஜானே சொல்லிக்கொள்ள விரும்பாத ‘வித்யார்த்திகளே இதிலே’ என்றபடம் எந்த ஒரு திரைக்கல்லூரி மாணவனின் தேர்வுப்படத்தைவிடவும் சாதாரணமானது.  அது ஒரு இத்தாலியப்படத்தின் நகல் என்று ஜானே சொன்னார். அதை ஒரு காவியம் என்று ஒரு தமிழ் அறிவுஜீவி எழுதி வாசித்தேன். இலக்கிய ரசனையில் அவர் ஒரு பள்ளிப்பையன் என்பது என் அபிப்பிராயம். சினிமாவிலுமா என்று எண்ணிக்கொண்டேன்.

ஜான் கேரளத்தின் நக்சலைட் இயக்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் உருவான மனச்சோர்வுக்காலத்தில் அவர்களின் அடையாளமாக ஊடகவியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். உருவாக்கியவர்களின் பெயர்களையே என்னால் கூறமுடியும். இப்படி எளிதாக ஒன்றை உருவாக்கி கணிசமானவர்களை ஏமாற்ற முடிகிறதென்பதே என் இளமையில் ஊடகங்கள் மீதான என் அவநம்பிக்கையை உருவாக்கியது.

ஏன் ஜான் ஒரு சாராரில் செல்லுபடியாகிறார்? அவர்கள் மிகப்பெரும்பாலும் சராசரி வெள்ளைச்சட்டை ஆசாமிகள். உண்மையான படைப்பூக்கம் மூலமோ அறிவார்த்தம் மூலமோ தன்னை கண்டடையமுடியாதவர்கள். ஆகவே ஒரு பகற்கனவுத்தளத்தில் தங்களை கலகக்காரர்களாக அல்லது தோற்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களாக காட்டிக்கொள்ள விழைகிறார்கள். அதற்கு ஜான் ஒரு முகாந்திரம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஜானின் கலகம் பற்றிப் பேசுபவர்கள் அந்த கதையும் திரைக்கதையும் வெங்கட் சாமிநாதனால் எழுதப்பட்டது என்பதை விட்டுவிடுவார்கள். இவர் குடிக்கமாட்டாரே. சாமிநாதனின் பெயரே சொல்லப்படாமல்கூட தமிழில் ஒரு ‘அக்ரஹாரத்தில் கழுதை’ பதிப்பு வந்திருக்கிறது, ஜானின் பெயரில்!

இந்தச் போலிச்சித்திரங்களுக்கு அப்பால் ஜான் அபாரமான படைப்பாளுமை கொண்ட ஒரு மனிதர். துல்லியமான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். கவிதைக்கு மிக நெருக்கமாகச் செல்லக்கூடியவர். ஆன்மீகத்தின் உயர்கவித்துவமும் உயர் அங்கதமும் முயங்கும் தளத்தில் உலவும் திராணி கொண்டவர். இன்று அவரை விதந்தோதும் எவரும் அந்த ஜானின் மனநிலையின் விளிம்பைக்கூட எட்ட முடியாது.

ஜானின் நல்ல சிறுகதைகளில் [கோட்டயத்தில் எத்ர மத்தாயி உண்டு?]  அவரது அங்கதம் பதிவாகியிருக்கிறது. கவனமின்றி வைக்கப்பட்டவையானாலும் அவரது ‘செறியாச்சன்றெ க்ரூர கிருத்யங்கள்’ போன்ற படங்களில் சில இடங்களில் அந்த அங்கதம் வெளியாகிறது. ஜானின் ஊடகமான சினிமா மிகக்கடுமையான உழைப்பைக் கோருவது. அவரோ மிகச்சிறிய அளவில்கூட கவனத்தையும் உழைப்பையும் குவிக்கமுடியாதபடி பலவீனமானவர். இதுவே அவரது பிரச்சினை.

நானறிந்த மென்மையான கவித்துவமான ஜானை, குடிக்காத போது குடிக்க நேர்ந்ததைப்பற்றி மனமுடைந்து அழுகிற ஜானை, தன் கலையை குடி அழித்ததைப் பற்றிச் சொல்லி பாட்டிலை காசர்கோடு தொலைபேசி நிலைய வராந்தாவில் வீசி உடைத்து விம்மிய ஜானை , நினைத்துக்கொள்கிறேன். இப்போது ‘அக்ரஹாரத்தில் கழுதை’யை பார்த்திருந்தால் ” என்றெ ஈஸோயே, ஈ புத்திஜீவிகளேக்கொண்டு ஒரு கிலோ பீ·பின்றே பிரயோஜனமும் இல்லல்லோ” என்று சிரித்திருப்பார்.

http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்

ஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்

மலையாள சினிமா ஒரு பட்டியல்

மலையாள சினிமா கடிதங்கள்

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

முந்தைய கட்டுரைகேணி சந்திப்பு
அடுத்த கட்டுரைஈராறுகால் கொண்டெழும் புரவி – 6