சிக்குன்குனியா

இன்று காலை பத்துமணிக்கு வீட்டுக்கு வந்துசேர்ந்தேன். பயணம் முடிந்து வீடுவருவதன் வழக்கமான பரவசம். அருண்மொழிக்கு சிக்கின்குனியா ஓரளவு சரியாகிவிட்டிருக்கிறது. கால்களில் வீக்கம் இருக்கிறது. வலி குறைவுதான். காய்ச்சல் நான்குநாட்களுக்குத்தான் இருந்தது. அவள் முதல் இருநாட்களுக்குப் பின்னர் எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை.நிறைய தண்ணீர் குடித்து ஓய்வெடுப்பதுடன் சரி.

 

பக்கத்துவீட்டு பாட்டிக்கும் தாத்தாவுக்கும் சிக்குன்குனியா தாத்தாபெயர் ஸ்ரீகுமாரன் நாயர். வேதாந்தி. அவருக்குத்தான் என் இந்தியஞானம் நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். இந்தப்பகுதியில் ஏறத்தாழ பாதிப்பேருக்கு சிக்கின்குனியா வந்து செயலூக்கமிழந்து வாழ்கிறார்கள். அலுவலகத்தில் அந்நோய் வராதவர்கள் மிகச்சிலரே. சென்னையில் சந்தித்த ஒவ்வொருவரும் இதையே சொன்னார்கள்.தமிழகம் எங்கும் இதே பேச்சுதான்.

ஆனால் நம் நாளிதழ்களில், வார இதழ்களில் இச்செய்தியையே காணமுடியவில்லை. சென்னையில் சந்தித்த இதழாளரிடம் கேட்டேன். செய்திகளை அடக்கி வாசிக்கும்படி இதழ்கள் அரசால் ‘கோரப்பட்டிருக்கின்றன’ என்றார். கோரினால் இதழ்கள் அடங்கிவிடுமா என்றேன். ”கண்டிப்பாக. எந்த எல்லைவரை சென்று கோருகிறார்கள் என்பதே முக்கியமானது. தமிழ் ஊடகங்கள் எந்த தலைவரையும் தாக்கும், ஆனால் அந்த எல்லை என்பது அந்த தலைவரால் ஒரு சமரசம் என்ற முறையில் ‘அளிக்க’ப்படுவது மட்டுமே” என்றார்.

 

எல்லா நாளிதழ்களும் இதழ்களும் அரசையும் அரசு விளம்பரத்தையும் நம்பியே உள்ளன என்றார் நண்பர். இப்போது சிற்றிதழ்களும்கூட அப்படித்தான். சிறந்த உதாரணம் மதுரை தினகரன் நாளிதழ் ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் வழக்குபதிவுசெய்த காவலதிகாரி, இறந்தவர்களின் பெற்றோர் உட்பட அத்தனைபேருமே பிறழ்சாட்சியாக ஆகி வழக்கு தள்ளுபடியாக ஆன விவகாரம். ”பீகாரில் அதன் உச்சகட்ட சீரழிவின் நாட்களில் கூட இப்படி நடந்ததில்லை. ஆனால் தமிழகத்தில் கண்டனம் தெரிவித்த இரு இதழ்கள் துக்ளக்கும் காலச்சுவடும் மட்டுமே. மீதி அத்தனை இதழ்களும் இதழாளர்களும் சும்மாதான் இருந்தார்கள்” என்றார் நண்பர்.

சிக்குன்குனியா இந்த அளவுக்கு எப்படி வலுப்பெற்றது என சில மருத்துவ நண்பர்களிடமும் சமூகசேவர்களிடமும் கேட்டேன். சிக்குன்குனியா நோயின் வைரஸ் இப்போது உருமாற்றம் அடைந்துவிட்டிருப்பதாக தெரிகிறது என்றார்கள். முன்பெல்லாம் அது மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் மட்டுமே பரவும். நன்னீரில் மட்டுமே ஏடீஸ் கொசு முட்டைபோட்டு வளர முடியும். இவ்விரு விஷயங்களையும் அந்த வைரஸ் தாண்டிவிட்டிருக்கிறது. இப்போது அது சாக்கடைநீரிலும் முட்டையிட்டு பெருகிக்கொள்கிறது. வெயிலை நன்றாக தாக்குபிடிக்கிறது. ஆகவே கடும் கோடை உருவாகியபின்னரும் சிக்குன்குனியா அதே வீச்சுடன் தொடர்கிறது.

ஆனால் காய்ச்சலின் வீரியம் குறைந்திருக்கிறது. முன்பு பத்துபதினைந்து நாள் காய்ச்சல் நீடிக்கும். இப்போது நான்குநாட்கள் அல்லது ஐந்து நாட்கள். மூட்டுவலியும் வீக்கமும் பதினைந்துநாட்கள் வரை நீடிக்கின்றன. ஆனால் ஏற்கனவே மூட்டுச்சிக்கல்கள் கொண்டவர்கள், முதியவர்கள், வறியவர்களுக்கு கடுமையான வதை பல மாதங்கள் நீள்கிறது. சிலசமயம் ஒரு வருடம் வரை. உயிராபத்து வரை நிகழலாம். பொதுவாக இந்நோய்க்கு தமிழகத்து உடல் எதிர்ப்புசக்தியை உருவாக்கி வருகிறது. அது மேலும் வளரலாம், அது ஒன்றே மீளும் வழி என்றார்கள்.

தமிழகத்தின் பல ஊர்களில் சமூக சேவை செய்துவரும் அமைப்பு ஒன்றின் தலைவர் சொன்ன செய்தி இன்னொரு முகத்தை அளித்தது. தமிழகத்தில் இந்த  ஐந்து வருடங்களில் சாலைபோடுதல், சாக்கடை வசதி செய்தல் உட்பட எந்த விதமான உட்கட்டுமான வசதிகளும் செய்யப்படவில்லை. சேவைகள் பலமடங்கு பின்னகர்ந்தும் இருக்கின்றன. ஆகவே கழிவுநீர், குப்பை அகற்றம் என்பது அனேகமாக செயலிழந்த நிலையில் இருக்கிறது. நகரங்களும் கிராமங்களும் குப்பைமலைகளாலும் சாக்கடையாலும் நாறிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே கொசுக்கள் பலமடங்கு பெருகி இப்போது பகலிலும் கொசுவர்த்தி இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. அலுவலகங்கள் கடைகள் எங்கும் மதியத்தில்கூட கொசுவர்த்தி தேவைப்படுகிறது. சிக்குன்குனியா போல இன்னும் பல கொசுவழி பரவும் மர்ம வைரஸ் காய்ச்சல்கள் பல இடங்களில் பரவி வருகின்றன. செய்திகள் அமுக்கப்படுகின்றன. குறிப்பாக நெல்லையில் கடந்த ஆறுமாதங்களாக கடுமையான காய்ச்சல்கள் பரவி மக்கள்பாதிக்கப்படுகிறார்கள். சில உயிரிழக்கவும் செய்கிறார்கள்.  உள்ளூர் பதிப்பு நாளிதழ்களில் மட்டுமே இச்செய்தி வெளியாகிறது.

இந்நிலைக்குக் காரணம் இலவசத் தொலைக்காட்சி என்றார் நண்பர். இலவசத் தொலைக்காட்சித் திட்டத்தின் மிகக் கடுமையான நிதிச்சுமையால் மாநில நிதிநிர்வாகம் விழிபிதுங்கிக்கொண்டிருக்கிறது. பிற அனைத்து துறைகளில் இருந்து நிதி அதற்கு கொண்டுசெல்லப்படுகிறது. ஆகவே எல்லா சேவைகளுமே செயலிழந்துபோயிருக்கின்றன என்றார்.

ஏஸி அறைகளுக்கு வெளியே உயிர்வாழ்வதே பெரும் சவாலாக ஆகிவிட்டிருக்கிறது இந்த நாட்டில்!

முந்தைய கட்டுரைஈராறுகால் கொண்டெழும் புரவி – 1
அடுத்த கட்டுரைகாடு,கடிதம்