அஞ்சலி : ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன் என்ற பெயர் நான் கல்லூரி புகுமுக வகுப்பில் நுழையும்போது அறிமுகமானது. மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியின் நூலகம் மிகப்பெரியது. அதன் நூல்பட்டியலை ஐநூறு பக்கம் கொண்ட ஒரு பெரிய நூலாக அச்சிட்டு கையில் தருவார்கள் அன்று. அந்த நூலே எனக்கு ஒரு பெரிய இலக்கிய அறிமுகத்தை அளித்தது.

அனேகமாக தினமும் அந்த நூலை வாசிப்பேன். அகர வரிசைப்படி ஆசிரியர் பெயர்களுடன் நூல்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், நூல்கள். அந்த வயதில் அத்தனை பெயர்கள் பெரும் மனஎழுச்சியை அளித்தன. அனைத்தையும் வாசித்துவிடவேண்டுமென்ற வேகம். ஆனால் அன்று தலைப்பால் பெரிதும் கவர்ந்த சில நூல்களை நான் இன்றுவரைக்கும்கூட வாசிக்கவில்லை, உதாரணம் ‘நீலநதி எழிலரசி’.டேவிட் சித்தையா எழுதிய நூல் என நினைக்கிறேன்.

அந்த வரிசையில் அதிக நூல்கள் எழுதியிருக்கும் ஆசிரியர்களை தேடிவாசிப்பேன். அவர்கள் பெரிய எழுத்தாளர்கள் என்னும் நினைப்பு. நாலைந்து பேரின் அட்டைகள் வைத்திருப்பேன் என்பதனால் ஒரெசமயம் பன்னிரண்டு நூல்களைக்கூட அள்ளிவர முடியும். ஒரேமாதத்தில் ராஜம் கிருஷ்ணனைக்கடந்து வந்தேன். குறிஞ்சித்தேன், வளைக்கரம் என ஆரம்பித்தது வரிசை.பின்னர் நீண்டநாட்களுக்குப்பின் ‘பாதையில் படிந்த அடிகள்’ வாசித்தேன்.

ராஜம் கிருஷ்ணனின் எழுத்து கறாராக வரைபடம் போடப்பட்டு அளந்து கட்டப்பட்ட கட்டிடம் போன்றது.தகவல்களைத் திரட்டி கதாபாத்திரங்களை உருவாக்கி நிகழ்ச்சிகளை அதற்கேற்ப கட்டமைத்து உருவாக்கப்படுவது. அதில் இலக்கியக்கலையின் எந்த அம்சமும் இல்லை என்பதே என் கருத்தாக அன்றே இருந்தது.

ஆனால் அவர் நேருயுக இலட்சியக்கனவின் தமிழ் முகம். புத்துலகம் பிறக்கும் என நம்பிய அன்றைய தலைமுறையின் குரல். நேருயுகத்தை நிர்மாணித்த முன்னோடிப் பொறியியலாளர் அவரது கணவர் கிருஷ்ணன் என பின்னர் அறிந்துகொண்டேன்.

தனிப்பட்ட முறையிலும் இலட்சியவாதிகளுக்குரிய வாழ்க்கையை நடத்தியவர்கள் ராஜம்- கிருஷ்ணன் தம்பதியினர். குழந்தைகள் இல்லாதவர்கள். தங்கள் உறவினர்களின் குழந்தைகளை வளர்த்து படிக்கவைத்து வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தனர். பல்லாயிரம் ஏழைக்குழந்தைகளுக்கு அவர்கள் கல்வியளித்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையின் குடிசைப்பகுதியினர் என்பதும் நான் அறிந்தவை

யாரையெல்லாம் வளர்த்தாரோ அந்த உறவினர்களாலேயே ராஜம் கிருஷ்ணன் சொத்துக்களெல்லாம் பிடுங்கப்பட்டு அடித்துத் துரத்தப்பட்டார் என்றார்கள். முதுமையில் கிட்டத்தட்ட அனாதையாக குடிசைப்பகுதியில் கொண்டு விடப்பட்டவரை நண்பர்களும் எழுத்தாளர்கள் சிலரும் சேர்ந்து மீட்டு முதியோர் விடுதியில் சேர்த்தனர். அங்கேதான் அவர் மரணமடைந்தார் என்றறிந்தேன்.

மகத்தான ஒருகாலகட்டத்தின் முகம் ராஜம்கிருஷ்ணன். நாம் இன்றிருக்கும் கனவுகளற்ற அரசியல் சூழலில் நீள்மூச்சுடன் நினைத்துப்பார்க்கவேண்டிய பல பெயர்களில் ஒன்று. அவர் ஈவிரக்கமற்ற முறையில் தூக்கி வீசப்பட்டது போல நாம் இன்றிருக்கும் காலகட்டத்தைச் சுட்டுவது இன்னொன்றில்லை. காந்தியையும் நேருவையும் தூற்றி மகிழும் தலைமுறை செய்தேயாகவேண்டிய ஒரு செயல் அது.

ராஜம் கிருஷ்ணனுக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைநயத்தக்கோர்
அடுத்த கட்டுரைபாரத தரிசனம்