ஐரோப்பாவின் கண்களில்…

ஆசிரியருக்கு ,

சில நாட்களுக்கு முன் ஜர்ரட் டைமெண்டின் “துப்பாக்கிகள் கிருமிகள் மற்றும் எக்கு” தமிழில் (பாடாவதி மொழிபெயர்ப்பு) முடித்தேன். அதற்கு முன் வில் துரந்தின் The story of Philosophy படித்து முடித்தவுடனும் இதே சந்தேகம் தான் தோன்றியது. Bill Bryson இன் A Short History of Nearly Everything லும் இதே கதை தான். உலகம் தழுவிய வரலாற்று ஆய்வு, மானுடவியல் ஆய்வு, பண்பாட்டு ஆய்வு என வரும்போது இந்தியா ஏன் புறக்கணிக்கப் படுகிறது. “துப்பாக்கிகள் கிருமிகள் மற்றும் எக்கு” கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இனங்களையும் தேசங்களையும் பற்றி பேசுகிறது. இந்தியா பற்றி குறிப்பிடும் படி அனேகமாக ஏதும் இல்லை.

மாக்ஸ் முல்லர் போல நாம் போற்றும் வெளிநாட்டு இந்திய அறிஞர்களெல்லாம் உலக அரங்கில் சாதாரணர்களோ என எண்ணத் தோன்றுகிறது . நம்மை போற்றுபவர்களை நாம் தெரிந்து கொள்வோம். யுங் கூட நாம் தான் முக்கியமானவர் எனச் சொல்கிறோம், அவருக்கு இந்தியா மீது மரியாதை இருப்பதால். நமது குழுமத்திலேயே கூட உலக அரங்கில் அவர் அவ்வளவு முக்கியமானவர் என அத்துறையில் சொல்லப் படுவதில்லை என்கிற கருத்து சில நாட்களுக்கு முன் கூறப் பட்டது.

இரண்டு உண்மைகள் தான் இருக்க முடியும்

1. ஒப்புநோக்க உலகிற்கு முதன்மையான நமது பங்களிப்பு என உண்மையில் ஏதும் இல்லை , நாம் தான் claim செய்து கொள்கிறோம்.

2. நாமும் முதன்மையாக பங்காற்றியிருக்கிறோம் , அது சரியாக வெளிக் கூறப் படவில்லை , லாபி செய்யப் படவில்லை , பெரும் மூலதனந்தில் இதைப் பரப்ப தன்னார்வ நிறுவனம் இதுவும் துவக்கப் படவில்லை.

அதுபோக இங்குள்ள திறனற்ற ஜால்ரா ஆய்வாளர்கள் .

இதில் எது உண்மை ?

கிருஷ்ணன்.

ஜரேட் டயமண்ட்
ஜரேட் டயமண்ட்

அன்புள்ள கிருஷ்ணன்

வாசிக்க வாசிக்க இந்த வினா எழுந்தபடியே வரும். உலகப்பேரிலக்கியம் என்று ஹோமர் முதல் ஜாய்ஸின் யுலிஸஸ் வரை பட்டியலிடும் ஐரோப்பிய அறிஞர்கள் மகாபாரதத்தை விட்டுவிடுவார்கள். மானுடன் இறப்பதற்குள் வாசித்தாகவேண்டிய நூறு நூல்களில் மகாபாரதம் இருக்காது. ராமாயணமோ கீதையோ இருக்காது. ஏன் பெருங்காவியங்களின் பட்டியலிலேயே அவற்றை பலசமயம் காணமுடியாது. உலகநாகரீகம் பற்றிப் பேசுபவர்கள் இந்தியா என்ற வார்த்தையையே சொல்லாமல் பேசிச்செல்வார்கள். வேண்டுமென்றே அல்ல. உண்மையிலேயே தெரியாது.

மிகச்சமீபத்தில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் மதங்கள் மீதான அவரது விமர்சனத்தை முன்வைத்தார். அதில் அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் ஆபிரகாமிய மதங்களுக்கு மட்டுமே[ இஸ்லாம் கிறித்தவம் யூதம்] பொருந்தும், வலுவான தத்துவ அடிப்படைகொண்ட இந்து,பௌத்த,சமண மதங்களுக்குப் பொருந்தாது என பலராலும் எழுதப்பட்டது. அது டாக்கின்ஸ் வரை சென்று சேராது.

இந்தியாமீதான ஐரோப்பாவின் ஆர்வம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியவியல் உருவானபோது தொடங்கி ஐம்பதாண்டுகளுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது. மோனியர் விலியம்ஸ், மாக்ஸ்முல்லர், ஜெக்கோபி, ஷெர்பாட்ஸ்கி, போன்ற இந்தியவியல் மேதைகள், மொத்த ஐரோப்பியப் பண்பாட்டையும் நோக்கிப் பேசியவர்கள், பின்னர் வரவில்லை.அதன்பிறகு இந்தியதத்துவம் பண்பாடு மீது ஐரோப்பிய- அமெரிக்க அறிவுத்துறைக்கு கவனம் இருக்கவில்லை. சொல்லப்போனால் உதாசீனமே இருக்கிறது. இன்று இந்தியவியல் கல்வித்துறை வட்டாரத்தில் பண்டைப்பண்பாட்டியல் சார்ந்த ஒரு உபதுறையாக மட்டுமே உள்ளது.

அமெரிக்கா இந்தியாவை கவனித்தது எமர்சன் காலகட்டத்தில், ஆழ்நிலைவாதம் [transcendentalism] பேசப்பட்டபோதுதான்.ஐரோப்பா கவனித்தது வேர்ட்ஸ்வர்த் போன்றவர்களின் இயற்கைவாதம் [naturalism] பேசப்பட்டபோதுதான்

சென்ற நூறாண்டுகளில் ஆழ்நிலைவாதமும் இயற்கைவாதமும் ஐரோப்பாவில் புறக்கணிக்கப்பட்டுவிட்டன. அங்கே நடைமுறைசார்ந்த, பகுப்பாய்வுத் தன்மைகொண்ட, நுகர்வுநோக்குள்ள பல்வேறு சிந்தனைகள் அந்த இடத்தை பிடித்துவிட்டன. கூடவே இந்தியாவும் மறக்கப்பட்டுவிட்டது.இந்திய சிந்தனைக்கு அந்தத் தளத்தில் பெரிதாக கொடை ஏதுமில்லை என்பது காரணமாக இருக்கலாம்.

இனி இந்தியா கவனிக்கப்படவேண்டுமென்றால் ஒருவழிதான் உள்ளது. அது பொருளியல்வெற்றி பெற்று புறக்கணிக்கமுடியாத மையமாக ஆகவேண்டும். சென்ற ஐம்பதாண்டுகளில் ஜப்பான் அதனால்தான் கவனிக்கப்பட்டது. இப்போது சீனா அதனால்தான் கவனிக்கப்படுகிறது. அதுவரை இந்தியாவில் ஐரோப்பியர்களுக்காக எழுதப்படும் இலக்கியம் மட்டுமே அவர்களால் கவனிக்கப்படும். உண்மையான இந்தியா கவனிக்கப்படாது.

இன்று ஏன் இந்தியாமேல் மதிப்பில்லை என்பதற்கு அறிவுத்துறை சார்ந்த காரணங்களும் உண்டு. இன்று நம் அறிவுப்புலம் என்பது ஐரோப்பாவை அசட்டுத்தனமாக நகல் செய்பவர்களால் நிறைந்துள்ளது. ஐரோப்பிய பல்கலைகளில் இருந்து கசிவதையே இங்குள்ள முதன்மை அறிவுஜீவிகள் என்பவர்கள்கூட பேசுகிறார்கள். இந்திய அறிவுஜீவிகளில் இந்திய மரபு பற்றி சற்றேனும் தெரிந்தவர்கள், மதிப்பு கொண்டவர்கள் மிகமிக அபூர்வம். இவர்கள் ஐரோப்பியக் கல்வியமைப்புகளில், கருத்தரங்குகளில் ஓர் அழைப்பைப் பெறுவதையே உச்சகட்ட இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இயல்பாக இவர்கள் மேல் எந்த அசலான கவனமும் அங்கே இருக்க வாய்ப்பில்லை. இவர்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள், அவ்வளவே

தரம்பால்
தரம்பால்

இந்தியப் பண்பாட்டை, பேரிலக்கியங்களை, தத்துவசிந்தனையை உலகளாவக் கொண்டு செல்லும் முதன்மையான அறிவுஜீவிகள் என அதிகம்பேரை இந்தியா இந்த ஐம்பதாண்டுக்காலத்தில் உருவாக்கவில்லை. கண்ணைத் தீட்டிப்பார்த்தால்கூட தரம்பால் மட்டுமே தெரிகிறார். மற்றவர்கள் ஐரோப்பிய அங்கீகாரத்துக்காக அலைமோதும் எளிய ஆத்மாக்கள். அவர்கள் மேல் உலக அளவில் எந்த மதிப்பும் இல்லை. இங்கேதான் அவர்கள் சத்தம்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபக்கம் இந்தியப் பண்பாட்டையும் இலக்கியங்களையும் அறிவார்ந்த சமநிலையுடன் நோக்கும் அறிஞர்கள் அருகிப்போய் எதையும் முழுதறியாமல் மேலோட்டமாக ஓங்கிப்பேசும் போலிகள் பெருகி இருப்பது. ராமாயணத்தில் ராக்கெட் இருந்தது, புறநாநூற்றில் பென்சிலின் இருந்தது ,ஜப்பானிய மொழி தமிழின் கிளைமொழி, சார்பியல்கொள்கை ரிக்வேதத்தில் உள்ளது என்பதுபோன்ற உளறல்களை ஆய்வு என்ற பேரில் கொட்டிவைக்கும் கும்பல்களால் நம் அறிவுத்துறையே நாறிப்போய் நம்பத்தன்மை இழந்து கேலிப்பொருளாகிவிட்டது

நம் கல்வித்துறை முழுமையாகவே அழுகிப்போய்விட்டது. இதிலிருந்து எதுவும் புதியதாக உருவாகிவரமுடியாது. ஐரோப்பிய அடிவருடிகளும் உள்ளூர் அசடுகளும் மட்டுமே அங்கே விளையமுடியும். வெளியே இருந்து ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் உண்டு. நவீனத் தகவ்லதொழில்நுட்பம் மூலம் மொழிகளுக்கிடையேயான இடைவெளி அழிந்து உலகசிந்தனை ஒரு பொதுவெளியாக ஆகுமென்றால் எதிர்காலத்தில் அதற்கு ஒரு வாய்ப்பு உண்டு.

ஜெ

வெண்டி டானிகரும் இந்தியாவும்

ஆய்வும் மேற்கும்

நம்முடைய அறிவுஜீவிதம்

ரிச்சர்ட் டாக்கின்சின் நிறம்

ஐரோப்பாவும் விடுதலை மனநிலையும்

மார்ட்டின் லூதரும் சங்கரரும்

மார்ட்டின் லூதரும் காந்தியும்

ஐரோப்பாக்கள்

இந்திய அறிவியல் எங்கே?

அம்மன் வழிபாடும் தற்கொலைப்போராளிகளும்

ஆய்வு ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைசிம்மதரிசனம்
அடுத்த கட்டுரைநாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்