டிவீட்டுரைகள்

டிவிட்டரில் வந்த சுவாரசியமான ஒற்றைவரிகளை ஒரு நண்பர் தந்த சுட்டி வழியாக வாசித்தேன். பெரும்பாலும் வெறும் வரிகள். அபூர்வமாக நகைச்சுவை. நானறிந்த பல எழுத்தாளர்களின் சொற்களை காணமுடிகிறதென்றாலும் இவை அசரீரிகளாக இருக்கும்போதே வசீகரமாக இருக்கின்றன என்று படுகிறது. எங்கோ யாரோ யாருக்காகவோ சொன்ன வரிகள் எப்படியோ நம் காதுகளில் கேட்டுச் செல்வது போல. அவ்வாரு இருக்கும்போது அவை நினைவில் நீடித்து வாழ்கின்றன ஒருவகை நவீனகாலப் பழமொழிகள் இவை. ஆகவே பதிப்புரிமை இல்லாமல் சுட்டுப் போடுகிறேன்.  

“கற்பழிக்கிறான்” என நான் எழுதியதை சிலர் கரிக்கிறார்கள். வன்புணர்ச்சிதான் “பொலிடிகலி கரெக்ட்” என எனக்கு தெரியும். ஆனால் நான் அபொலிடிகல்.

எனது நூல்கள் அச்சேற மரணிக்கும் மரங்கள் சொர்க்கத்திற்கு போகும் என்பதில் சந்தேகமில்லை. இங்கிருந்தே சொர்க்கத்தில் மரம்வளர்ப்பதில் மகிழ்ச்சி.

பாலிதீன் உறையில் காசுகளை போட்டு கயிறு கட்டி தொங்க விட்டிருக்கிறேன். எதற்காக இத்தனையும் என்கிற தத்துவ கேள்வி எழும்போதெல்லாம் ஆட்டுவதற்காக.

எனது புத்தகம் ஒன்றை ஒரு இந்தி பேராசிரியரிடம் மொழிபெயர்க்க கொடுத்தேன். படித்துவிட்டு “பஹுத் போர் ஹே” என்றார். போர்ஹேயுடன் ஒப்பிடுகிறார்.

உலக சினிமா சில ஆண்டுகளாகவே இருந்துவரும் பதம். அதற்குமுன் அதை கில்மா என்றுதான் அழைத்தோம். உடலரசியலின் இயங்கியலை அது சித்தரித்ததுதான் காரணம்.

வங்கிக்கு பேனா எடுத்து சென்றால் யாராவது இரவல் கேட்டு தொந்திரவு செய்கிறார்கள். அதனால் நான் பேனா எடுத்து செல்வதில்லை. இரவல்தான் வாங்குகிறேன்.

மாபசான் பிரெஞ்சை சேர்ந்தவர். குந்தர் கிராஸ் ஜெர்மனை சேர்ந்தவர். காளிதாசர் சமஸ்கிருதத்தை சேர்ந்தவர்.

மேற்கில் சாகும் இசங்கள் செத்தபின் தமிழ்ச் சூழலுக்குத்தான் வருகின்றன. அதனால் தமிழ்ச் சூழலை இசங்களின் சொர்க்கமாக இனங்காண்பது அவசியமாகிறது.

கடினமான ஆங்கில புத்தகங்களுக்கும் சப்டைட்டில் இருந்தால் உதவிகரமாக இருக்கும்.

சாதி பெருமையும் சாதி பற்றும் முதிர்ச்சியின்மையின் அடையாளங்கள். நல்லவேளையாக எனது சாதிக்காரர்களிடம் அவை இல்லை.

சுதந்திரம் எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

பின்நவீன புனைவுகள் எழுதும் நண்பர் ஒருவருடன் பேசினேன். அவருடைய புதிய நாவல் முழுவதும் இடாலிக்சில் இருக்குமாம். வித்யாசமான முயற்சிதான்.

விடைபெற முகாந்திரம் இருப்பதால் அதற்கான முஸ்தீபுகளில் இறங்கும் யத்தனிப்புகளைத் தொடங்க விழைகிறேன்.

“இந்த புடவையில் எப்படி இருக்கிறேன்” என்று கேட்டார் மனைவி. இந்த புடவையை அணிந்தவள் போல் இருக்கிறாய் என்றேன். 3 மணிநேரம் எழுத நேரம் கிடைத்தது.

திருவள்ளுவரின் தாடி மீசை ஜடாமுடி போன்றவற்றை பார்த்தால் அவர் வெறும் 2660 வரிகளோடு நிறுத்திவிடக்கூடிய ஆசாமியாகத் தெரியவில்லை.

 ஆதி ஜீவ பரிணாமக் குரங்கின் அவரோகண திரேக கந்த நீக்கி அடக்கம் துறந்து கிடைகொள்கிறது என்றால் பாடிஸ்ப்ரே தீர்ந்துவிட்டது என்று பொருள்.

இலக்கிய குப்தர் என ஒரு மௌரிய மன்னர் நிஜமாகவே இருந்தாரா, அல்லது இந்த லபக்குதாஸ் கதை விடுகிறாரா?

காஷ்மீர் கச்சத்தீவு அருணாசலபிரதேச பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, என் மேஜையின் இறையாண்மை தொடர்ந்து மீறப்படுகிறது. இந்த டம்ளரை யாரிங்கே வைத்தது?

என்னை பார்த்ததும் பல வாசகர்கள் தொகுப்பு, புனைவு, தொன்மம் என அறுக்க துவங்கிவிட்டார்கள். இவர்களிடமிருந்து என்னை காப்பாற்றடா மார்க்குவேஸ்வரா!

புஜ தசைகளை பெரிதாக காட்ட பமீலா ஆண்டர்சன் பாணி சிலிக்கோன் இம்பிளாண்ட் ஏதேனும் உள்ளதா? மனைவியின் உறவுக்கார பெண்கள் வீட்டிற்கு வருகிறார்கள்.

சுரோணித வலைதளங்களில் எப்போதுமே ஒரு பிரச்சனை. தளத்தில் நுழையும்போது வருகிற ஆயிரத்தெட்டு பாப்அப் விண்டோக்களில் எதை முதலில் கிளிக் செய்வது?

ஜேம்ஸ்ஜாய்சின் யுலிசிஸ் நாவல் நீண்டகாலமாக வீட்டில் கிடந்தது. இன்று எழுந்ததும் எடுத்து புரட்டினேன். என்னமாக உளறிக்கொட்டியிருக்கிறார் மனிதர்!

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் பணிபுரிகிறார். எனக்கு தெரியாத நண்பர்கள் வேறு இடங்களில் பணிபுரிகிறார்கள்.

இந்த ஆண்டிலும் தேதிகள் தவிர எதுவும் மாறப் போவதில்லை.

ஐபாடை வாங்கி இத்தனை நாள் ஆனபின்னும் சிம் கார்டை அதில் எங்கே செருகி பாட்டு கேட்து என கண்டுபிடிக்க முடியவில்லை. எளிமையே உன் விலை என்ன?

ஐபாட் என்றால் சிம் கார்டு போட்டு ஒயர் மூலம் கிரைண்டருடன் இணைத்து பாட்டு கேட்க மாட்டார்களா?

புத்தாண்டின் முதல் சிந்தனை:- எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கடவுளுக்கு எழுதிய மொட்டைக் கடிதமாகிவிடுமோ என அச்சமாக இருக்கிறது.

படிப்பவர்களைவிட படிக்க விரும்புவோர் அதிகமிருக்கிறார்கள். பட்டியல் தயாரிக்கிறார்கள். விற்பனை ஏறுகிறது. கல்லா நிரம்புகிறது. குப்பை சேருகிறது.

பெரியதொரு நூலகத்தில் உறுப்பினர் ஆகுங்கள், இணையத்தில் கணிசமான நேரத்தை செலவிடுங்கள்,

உயர்குடி என்றால் விலையுயர்ந்த வெளிநாட்டு மது, நற்குடி என்றால் ஆரோக்கியமான உள்ளூர் கள்ளு. அப்படித்தானே?

பெண்ணரசியலுக்கு நுண்ணரசியலே பரவாயில்லை போலிருக்கிறது

மிக உயரத்தில் உள்ளவர்கள் பாதாள பீதியால் கீழேயே பார்ப்பதில்லை

நானறிந்த ஒரு எழுத்தாளருக்கு துவக்கத்திலிருந்தே ரைட்டர்ஸ் பிளாக் உள்ளது. நான் 23 சி பிளாக்கில் இருப்பதுபோல அவர் இந்த பிளாக்கில் இருக்கிறார்.

பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை தூற்றாதீர்கள். உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.

என் எழுத்தை படிக்கும் பெரும்பாலானோர் எனக்கு ரசிகர்களாகிவிடுகிறார்கள். எல்லோரும் அல்ல. பெரும்பாலானோர் மட்டும்.

என் சமகால மனைவி எனக்களிக்கும் வேதனைகளை புரிந்துகொள்ள மட்டுமாவது இன்னொரு மனைவி இல்லாமல் வேலைக்கு ஆகாது போலிருக்கிறது.

சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்துகொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தைகள் எழுத்தாளர் ஆகிவிடப் போகிறார்.

மொட்டை தலையை முழங்காலுக்கு உருவகமாக்கி குழப்பமாக ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். யாராவது விளக்கம் எழுதி புரிய வைக்கிறார்களா பார்ப்போம்.

நந்தியம்மன் கோவில் தெருவீதியூர்புர நகர் என்கிற ஊருக்கு சென்றிருந்தேன். இங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்த ஊர்தான் தெரிகிறது. வித்யாசம்!

ஐயா, யோசிக்கும் பிரச்சனை கடவுளுக்குத்தானே இருந்தது. பிரியாணியின் தரத்தை பொறுத்து ஓட்டு போடுவதுதானே நமது பிரச்சனை

முட்டையிலிருந்து கோழியை படைப்பதா, கோழியிலிருந்து முட்டையை படைப்பதா? கடவுளின் முதல் சிக்கல்.

கொல், கற்பழி, நாசமாக்கு, கிள்ளு…. வினைச்சொற்கள் என்கிற பெயரில் அகராதிகள் பரப்பும் வன்முறை அதிர வைக்கிறது.

எனது முதல் நூலை 11 வயதில் தக்ளி என்ற கருவியை பயன்படுத்தி உருவாக்கினேன்.

டிவி விளம்பரங்கள் அனைத்தையும் ஒரு டிவிடியில் அடைக்கவேண்டும். அடுத்து அந்த டிவிடியை எரிக்கவேண்டும். பிறகு விளம்பரங்களின்றி டிவி பார்க்கலாம்.

தேவுடா” என்கிற வார்த்தை “தேவே கவுடா”வின் சுருக்கமா?

கணினிதான் சரி. கணிக்கு பிறகு வரும் “னி” பெண்பாலை குறிக்கும் பின்னொட்டு, கவிதாயினி போல. “கணிணி”க்கு பொருளில்லை.

இலக்கியத்தை எல்லோரும் உருவாக்க வேண்டும் என்கிறார் பிரெஞ்சு கவிஞர் ளௌட்ரெஅமொன்ட். அட, படைப்பூக்கம் எல்லா உயிர்க்கும் என வள்ளுவர்கூட கூறுகிறார்

திவாரியின் வாழ்க்கை மச்சத்தில் தளம்கொண்டு இயங்கியுள்ளது. என்னையோ இவ்வயதில் நித்திராதேவி தவிர யாரும் தழுவுவதில்லை. இருக்கட்டும். நல்லிரவு.

இத்தனை ஆண்டுகாலம் டிவி விளம்பரங்களை அவதானித்தபின் ஒன்று புரிகிறது. சிவப்பானவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கறைதான் மாபெரும் சமூக தீமை.

காலையில் ஒரு எழுத்தாளருடன் விவாதித்தபடி ஆட்டோவில் சென்றேன். விவாதமும் ஆட்டோவும் முறையே பரஸ்பர விரோதத்திற்கும் வடபழனிக்கும் இட்டுச்சென்றன.

வானிலிருந்து பல்வேறு தண்ணீர் துளிகள் மிக அதிக எண்ணிக்கையில் கொட்டுகின்றன. கொட்டியதோடு விடாமல் தரையில் சங்கமித்து கூட்டமாக செல்கின்றன.
எப்போதுமே சுத்தமான இடத்தில் குப்பை கொட்டமாட்டார்கள். முன்பே குப்பை இருக்குமிடத்தில்தான் குப்பை கொட்டுவார்கள்.

நமது இசையில் இனிமை உண்டு, ஓசை கிடையாது (சங்கர்-கணேஷுக்கு முன்புவரை). வள்ளுவர்கூட ‘மரபிசை நீடு வாழ்வார்’ என்பது போல ஏதோ எழுதியிருக்கிறார்

மனைவியுடனான தகராறுகளை கவனமாக கையாள வேண்டும். கரணம் தப்பினால் சரணம்.

80களில் என் நண்பர் ஒருவரின் முழுநேர வேலையே ‘யாரோ’ என்கிற பெயரில் பத்திரிகைகளுக்கு பொன்மொழி எழுதி அனுப்புவதுதான்

என் கணினி பழுதுபார்க்கப்படுகிறது. வேறு வேலை இல்லை. இன்றைய செய்தித்தாளை மறுவாசிப்பிற்கு உட்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

நாளைக்காக திட்டமிட்டு இன்றை வீணாக்குகிறோம். இன்றைக்காக திட்டமிட்டு நேற்றை வீணாக்கியது போல.

ஒரு கோப்பை சூடான தேநீரை மெல்ல பருகியபடி மழையை ரசிப்பவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். எந்த சமயத்தில் என்ன செய்வார்கள் என்று சொல்லமுடியாது.

தமிழ் இலக்கியத்தில் வித்யாசமான ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உரைநடையில் கவித்துவமும் கவிதையில் உரைநடைத்துவமும் ஏறிவிட்டது.

காலை தெருவில் கொட்டாவி அடக்க கைதூக்கினேன். பதறி ஓடியது ஒரு நாய். என் நிலைபாட்டை தெளிவுபடுத்த அதன் பின்னே ஓடினால் அது மேலும் வேகமாய் ஓடியது.

எழுத்தாளனின் அங்கீகாரம் இல்லாமல் விமரிசகன் வெற்றி பெற முடியாது.

மேக மூட்டத்தை பார்த்தால் மும்மாரியும் இன்றே பெய்துவிடும் போலிருக்கிறதே.

இன்று எதை தெரிந்தாற்போல் காட்டிக்கொள்வது? யோசிக்கிறேன்….

உலக இலக்கியம் பற்றிய கட்டுரை நூலுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கிருந்தும் எடுக்கலாம். சொந்தமாகவும் எழுதலாம். என் பெயரில் வரும்.

தமிழ்ச் சூழலில் 736 பக்கங்களை கொண்ட புத்தகங்களுக்கான ஒரு வெற்றிடம் இருக்கிறது. எனது அடுத்த புத்தகம் 736 பக்கங்களை கொண்டதாக இருக்கும்.

எனக்குள்ள சுதந்திரம் என் கதைகளுக்கு இல்லை. நான் எழுதுவதால் நன்றாக இருப்பது தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. வருத்தமாக, மகிழ்ச்சியாக உள்ளது.

இமய மலை உருகிப் போவதற்குள் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். ஆனால் இந்த மழையில் எங்கே போக முடிகிறது.

பல வண்ண பெயிண்ட்களை அளவுமீறி குடித்த அஜீரணத்தால் வாந்தியெடுத்தது போலொரு ஓவியம். வான்கோ என்பதற்கு பதில் வான்கோழி என பெயரிட்டிருக்கலாம்.

என் மகன் எனக்கு சரியான இலக்கிய வாரிசாக வருவான் என தோன்றுகிறது. “அர்த்தம்னா என்னப்பா அர்த்தம்?” என்று கேட்கிறான்.

வானம் மிக இருளும்போதெல்லாம்…. உலகம் அழிந்து எனது டிவிடி தொகுப்பு சேதமடைந்துவிடுமோ என்கிற பயம். சிறுவயதிலிருந்தே இந்த பயம் இருக்கிறது.

மனித வாழ்வில் பல ஆழமான கூற்றுகள் ‘மனித வாழ்வில்’ என தொடங்குகின்றன.

தற்காலிக உண்மைகளை பற்றிய நிரந்தர உண்மைகளை எழுதுபவனே எழுத்தாளன். இது நான் எழுதியதுதான். இருந்தாலும் யாராவது எனக்கு புரிய வைத்தால் நல்லது.

சுவற்றோரம் சமகால தனித்துவ எறும்பு வரிசை. நம்மிடம் இல்லாத ஒழுங்கு, அழகு என நினைத்துக்கொண்டேன், அவற்றின் மேல் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றியபடி.

மழையில் அப்படி என்ன இருக்கிறது, இந்த எழுத்தாளர்கள் இவ்வளவு வார்த்தைகளை வீணாக்குவதற்கு? மேலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. அவ்வளவுதானே.

என் மகன் பகுத்தறிவுவாதியாகி விடுவானோ என்கிற பயத்தில் தினமும் அவனுக்கான காம்ப்ளானில் ஒரு சிட்டிகை விபூதி கலக்குகிறேன்.

என் ரேஞ்சிற்கு எனது அறையை யூனியன் பிரதேசமாக அறிவித்து அதற்கென்று தனி சீதோஷ்ண நிலையை ஒதுக்கீடு செய்வதுதான் நியாயம்.
கோட்பாட்டுரீதியாக மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். இருந்தும் மனதை எதுவோ ஓயாமல் உறுத்துகிறது. எது என தெரிந்தால் மனநிம்மதி கிடைத்துவிடும்.

இலக்கியத்தை ஒழிக்க வேண்டும். அதுதான் தீவிர இலக்கியத்திற்கு எதிரி.

ஒரு கதையை எப்படி முடிப்பது என தெரியவில்லை. நான் அதை முடிக்காமலே அது முடிந்துவிட்டது என புரிந்துகொள்ளும் பக்குவம் வாசகனுக்கு எப்போது வரும்?

வீட்டிற்கு ஒருவர் வந்தார். வாசகரா என்றால் அரசு அதிகாரியாம். வருமான வரி என்கிற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தினார். பணம் நான் தர வேண்டுமாம்.

http://twitter.com/writerpayon

http://www.scribd.com/doc/20157654/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1

முந்தைய கட்டுரைஅநங்கம்
அடுத்த கட்டுரைபின்நவீனத்துவச் சிந்தனைகள்