காஷ்மீர்- கடிதம்

ஜெ..

உங்களுக்கு வந்த இந்துவின் லிங்க் படித்தேன். அந்தச் செய்தியில் எல்லாத் தரப்பும் எழுதப்பட்டிருக்கிறது. பெய்ஜிங் தரப்பு மட்டுமல்ல.

இது போன்ற பேரிடர்களின் போது, அரசின் செயல்பாடுகளை மீடியாக்கள் எழுதும்போதே, அதன் எதிர் தரப்பும் குறைபாடுகளும் மீடியாக்களின் பக்கங்களில் வருவது சரியே. மீடியா, அரசு செல்ல முடியாத இடங்களுக்கும் மீடியா செல்ல முடியும் என்பதும், குறைபாடுகளை, அவை பெரியதாக இருந்தால் களைவதற்கும் உதவியாகவே அவற்றைப் பார்க்க முடியும் என்பதுமே அவற்றின் பயன்கள்.

கடந்த காலங்களில் கற்ற பாடங்களைக் கொண்டு, 2013 வந்த ஃபைலின் புயலை ஒரிஸ்ஸா எவ்வளவு மேம்பட்ட விதத்தில் எதிர்கொண்டது என்பது, பேரிடர் மேலாண்மையின் ஒரு பெரும் பாடம். ஆனால், அப்புயலின் போதே, அரசின் குறைபாடுகளை, மீடியா கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தது.

அதே போலத்தான் – உத்தராக்கண்ட் சேதமும். அதில் உணர்ந்த குறைபாடுகளில் கற்ற பாடங்களிலிருந்து, இன்று கஷ்மீர நிவாரணப் பணியை மேம்படுத்தியிருப்பார்கள்.

ஜப்பான் போன்ற நாடுகளில், இது போன்ற பேரிடர்கள் நேரும் போது, மக்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை நோக்கினால், இந்தியாவில் நேர்வது ஒரு கலாச்சாரம் மட்டுமே என்று தோன்றுகிறது. சத்தமாக ஒப்பாரி வைப்பது, தலைவன் இறந்து போனால், அவனது எதிரியின் வீட்டைத் தாக்குவது, இந்திய ஜனநாயகத்தின் ஒரு கூறு.

எந்த அரசின் திட்டத்துக்கும் எதிர்ப்புச் சொல்லும் கும்பல் உண்டு. அவற்றுக்கு ஒரு குரல் உண்டு. காஷ்மீரக் கல்லெறி சம்பவமும் அப்படி ஒன்றே. அது, கஷ்மீர அடிப்படைவாதிகளின் குரல், கடந்த 20 ஆண்டுகளில் வலுவிழந்து வருகிறது. அவர்கள் தேர்தல்களில் போட்டியிட மறுப்பதும் அதனாலேயே. கடந்த 20 ஆண்டுகளில், அரசின் திட்டங்களினால், கஷ்மீர சென்றடைந்த பொருளாதார முன்னேற்றம் ஒரு முக்கிய காரணம். அவரக்ளைப் பெரிது படுத்தி, ஒரு முக்கியத்துவம் கொடுப்பது, நாம் அவர்களுக்குத் தரும் ஒரு மிகப் பெரும் மறு வாழ்வு.

காஷ்மீரப் பிரச்சினையில், இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர மக்கள் தவிர, இரண்டு இராணுவங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன – அதில் இந்திய ராணுவத்தின் பங்கு மிகக் குறைவு என்றாலும். அங்கே செல்லும் பொருளாதார நிதியில், ராணுவத்துக்கும் ஒரு கண் இருக்கிறது. நீங்கள் கண்டு சொன்னதெல்லாம், ராணுவத்தின், PRO பக்கங்கள் மட்டுமே. கல்லெறிவது, ராணுவத்தைச் சீண்டும் முயற்சி. ஆனால், ராணுவம் பதிலுக்குத் துப்பாக்கி எடுத்தால், அது தீவிரவாதிகளுக்குச் சாதகமாகவே முடியும். அதனால்யே ராணுவம், அதை வேறு வழிகளில் எதிர்கொள்ள முயற்சிக்கிறது. அந்த வகையில், இந்திய ராணுவம் மிகப் பெரும் பங்காற்றி வருகிறது. ஆனால், குறைகளே இல்லாத நிறுவனம் அல்ல. கஷ்மீருக்குச் செல்லும் நிதியில், புல்லுக்கும் அங்கே நீர் பொசிகிறதும் நடைமுறை உண்மை.

2004 சுனாமி மட்டுமல்ல, ஒவ்வொரு முறை பேரிடர் வரும் முன்னரும், தமிழக வருவாய்த்துறை மிக் விரைவில் நிவாரணப் பணிக்கான ஏற்பாடுகளைச் செய்வதை பார்க்க முடியும். அங்கே வேலை செய்யும் அதிகாரிகள் வாரக் கணக்கில் இரவு பகல் இல்லாமல் வேலை செய்வதைப் பார்க்க முடியும். ஆனால், பேரிடர்கள் பேரிடர்களே.. அவை எந்த அரசுத் திட்டத்தையும் தோற்கடிக்கும் வல்லமை கொண்டவை.

ஆனால், குறை சொன்னாலே, அவர் சீனக் கூலி, அல்லது பாகிஸ்தானின் கூலி என நீங்களும்தான் வசை பாடுகின்றீர்கள் என்பதையும் பாருங்கள். உத்த்ராக்கண்ட் பேரிடர்களின் போது, அரசின் செயல்பாடுகளை விதந்தோதி, எதிர்ப்புகளை விமரிசித்த மடல்களை உங்களின் தளத்தில் பார்த்ததாக நினைவில்லை. விமரிசனமே இல்லாமல் செய்திகள் வேண்டுமெனில், உத்த்ராக்கண்ட் பேரிடரில், குஜராத் முதல்வர்தனியாளாகச் சென்று 15000 மக்களைக் காப்பாற்றினார் என்று மட்டும் தான் செய்திகள் வர முடியும்.

பாலா

பாலா,

இந்துவின் செய்தி சமநிலை கொண்டது என நான் நினைக்கவில்லை. அது அந்நிருபராலும் ஆசிரியர் குழாமாலும் நுட்பமான இந்திய எதிர்ப்பரசியலின் விஷவிதைகள் தூவப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.

பேரிடர்கள் முன்னரும் நிகழ்ந்திருக்கின்றன. எல்லா பேரிடர்களும் நிகழும் போது மக்களின் இலக்கற்ற மனக்குமுறல் பதிவாகும். ‘அரசின் தோல்வி’ பற்றிய இதழ்களின் குரல்களும் பதிவாகும். குறைபாடுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவது செயல்பாட்டுக்கு உதவுவதும் வழக்கம். சுனாமியிலும் அதையே கண்டேன்

ஆனால் இங்குள்ளது அதுமட்டும் அல்ல. சிக்கலான மதப்பிளவு மனநிலை, தேச எதிர்ப்பு மனநிலை இதில் கலந்துள்ளது. அதைக் காணாமல் பிறவும் இதுவும் ஒன்று என்று வாதிடுவது சரியல்ல. அந்த மனநிலைகளை ஊட்டிவளர்ப்பதாக பேரிடர்கள் உருவாக்கும் நிர்வாகக் குளறுபடிகளும், மனச்சோர்வுகளும் பயன்படுத்தப்படும்போது மேலும் அழிவுகளே உருவாகும். நான் சுட்டிக்காட்டுவது இதையே. பேரிடர்களில் உணர்ச்சிகளைக்கொண்டு செய்தி அறுவடை செய்வதற்கும் இதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு

நான் காஷ்மீர் பற்றி எழுதிய பயணக்கட்டுரையையே நீங்கள் படித்துப்பார்க்கலாம். ராணுவம் அல்லது அரசின் மக்கள்தொடர்பு கூற்றுக்களை அவற்றில் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு-ராணுவ -குத்தகைதாரர் கூட்டின் ஊழல் எப்படி காஷ்மீர் பிரச்சினையை உயிருடன் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் கொண்டிருக்கிறது என்றும் அதில் விரிவாகவே எழுதியிருந்தேன்

ஜெ

முந்தைய கட்டுரைநீலம் -கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29