‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10

பகுதி நான்கு: 1. செழுங்குருதி

கானகத்தில் கன்று மேய்க்கும் கன்னியரே கேளுங்கள். கன்னங்கருநீர் காளிந்தி கிளைவிரித்து ஓடும் சிறுவழியெல்லாம் சென்று ஆயர்குடி தோறும் அணுகி, நறுநெய் வாங்கி நிறைகுடம் தளும்ப மதுராபுரி அணையும் ஆக்னேயன் நான். யமுனையிலோடும் படகிலே என் தாய் என்னை ஈந்தாள். நீரலையில் தாலாடி நான் வளர்ந்தேன். மத்தொலியில் திரண்டெழும் வெண்ணை அறியும் கதையெல்லாம் நானும் அறிவேன்.

நெய்பட்டு நெகிழ்ந்துலர்ந்து அகல்திரியென கருமைகொண்டிருக்கிறது என் சிறுபடகு. நெய்யுடன் நதிமீன் சேர்த்துண்டு திரண்டுள்ளன என் கரிய தோள்கள். காளிந்தியை கரிய உடை கலைத்து இடைதொட்டு நகைக்க வைக்கின்றன என் துடுப்புகள். அன்னைக்கு உகந்தவை அவள் சிறுமகவின் கைகள் அல்லவா?

பர்சானபுரிவிட்டு கோகுலம் செல்கிறீர்கள்! நங்கையரே, உங்கள் ஆடைகளில் மணக்கிறது கூடு விட்டு மலர்நாடி பறந்தெழும் மதுகரத்தின் மகரந்த வாசம். உங்கள் மொழிகளில் எழுகிறது சிறகு கொண்ட யாழின் சிறுதந்தி நாதம். வாழிய நீவிர்! உங்கள் கண்களின் ஒளியால் என் காலையை எழில் மிக்கதாக்கிக்கொண்டேன்.

அங்கே நடுப்பகலிலும் இருண்டிருக்கிறது நதியாளும் நகர் மதுரை. அந்த இருள்கண்ட என் விழிகளிலும் எத்தனை துடைத்தாலும் கண்மைச்சிமிழில் கரி போல இருள் எஞ்சியிருக்கிறது. அதன் தெருக்களில் நடக்கையில் துணி கசங்கும் மென்குரலில் நம் நிழல் நம்முடன் உரையாடுவதைக் கேட்கமுடிகிறது. நாம் தனித்திருக்கையில் பஞ்சு உதிர்ந்து பதிந்தது போல நம்மருகே வந்தமரும் இருப்பொன்றை உணரமுடிகிறது. ஆயர்மகளிரே, அங்கே எவ்வுயிரும் தன்னுடனும் தெய்வத்துடனும் தனித்திருக்க இயலவில்லை.

அன்றொருநாள் பின்னிரவில் என் நெய்த்தோணியை துறையொதுக்கி சிறுபணம் சேர்த்த முடிச்சை இடைபொருத்தி நகருள் நுழைந்தேன். சத்திரத்தை நெருங்கும்போது வானில் எழுந்த வௌவால் சிறகோசையைக் கேட்டேன். நிமிர்ந்து நோக்கி நடந்தவன் இருண்டவானை அறிந்த விழிவெளிச்சத்தில் அவர்களைக் கண்டேன். கரும்பட்டுச் சிறகு எழுந்த சிறுகுழந்தைகள். அவர்கள் கண்கள் மின்ன நகரை நோக்கி மழலைச் சிறுகுரல் பேசி பறந்து சுழன்றுகொண்டிருந்தனர். சிறகுகள் கலைத்த காற்றில் வழிவிளக்குச் சுடர்கள் அசையவில்லை. கிளையிலைகள் இமைக்கவில்லை.

நகரின் இல்லங்கள் துயில் மறந்து பித்தெழுந்து அமர்ந்திருந்தன. அவற்றை அள்ளி வானில் கொண்டுசெல்ல விழைவதுபோல காற்றில்லா இருள்வானில் படபடத்துக்கொண்டிருந்தன கொடிகள். உள்ளே வெம்மை ஊறிய மஞ்சங்களில் அன்னையர் அசைந்தமைந்து நெடுமூச்செறிந்தனர். அவர்களின் சீழ்செறிந்த முலைப்புண்கள் விம்மித்தெறித்து வலி கொண்டன. எண்ணி ஏங்கி கண்ணீர் உகுத்து அவர்கள் சொன்ன சிறுசொற்கள் தெருவில் வந்து விழுந்தன. கழற்றி புழுதியில் வீசப்பட்ட மணிநகைகள் போல. பிடுங்கி எறியப்பட்ட ஒளிரும் விழிகள் போல. உயிரதிர்ந்து துள்ளும் துண்டுத் தசைகள் போல.

சோர்ந்து தனித்த கால்களுடன் நெடுமூச்செறிந்து நடந்து சத்திரத்துத் திண்ணையில் சென்று படுத்துக்கொண்டேன். எங்கோ மெல்லத்துயில் கலைந்த முதுமகன் ஒருவன் ’எங்கு செல்வேன்? ஏது சொல்வேன்!’ என ஏங்கி திரும்பிப்படுத்தான். பித்தெழுந்த அன்னை போல மதுராபுரி என்னை அறியாது எதையும் நோக்காது தன்னில் உழன்று தானமர்ந்திருந்தது. இரவெங்கும் தெருவில் அலையும் வணிகர் கூட்டங்கள் மறைந்துவிட்டிருந்தன. துறைதோறும் செறியும் தோணிகள் குறைந்துவிட்டிருந்தன. ஆடல் முடிந்து அரங்கில் வைத்த முழவுபோலிருந்தது இரவின் மதுரை. நோயுற்றோன் அழுதோய்ந்து எழுவது போலிருந்தது அதன் காலை.

செங்காந்தள் முளையெழுந்த காடுபோலாயிற்று அந்நகரம் என்றனர் கவிஞர். காலை கண்விழித்து நோக்கிய கைவிரிவில் விரிந்தது குருதிரேகை. அங்கே கால்வைத்துச் சென்ற சேற்று வழியெல்லாம் சொட்டிக்கிடந்தது செழுங்குருதி. வடித்து நிமிர்த்த பானைச்சோற்றுக்குள் ஊறியிருந்தது குருதிச்செம்மை. அள்ளி வாய்க்கெடுத்த கைச்சோற்றில் இருந்தது குருதியுப்பு. குடிக்க எடுத்த நீரில் கிளைத்துப் படர்ந்தாடியது குருதிச்சரடு. புதுப்பனி பட்ட புழுதியில் எழுந்தது குருதிமணம். கனத்த இரவுகளில் வெம்மழையாய் சொட்டிச் சூழ்ந்தது செங்குருதி. ஓடைகளை நிறைத்து நகர்மூடி வழிந்தது செம்புனல்வெள்ளம்.

யதுகுலத்து கொடிமலர்களே, அன்று நானறிந்தேன். மானுடரைக் கட்டிவைத்திருக்கும் மாயச்சரடுகள்தான் எவை என்று. தங்கள் குழந்தைகளின் குருதி கண்டு அஞ்சி இல்லங்களுக்குள் ஒண்டி உயிர்பேணியவர்கள் பின்னர் அனலிலும் புனலிலும் தெருவிலும் வீட்டிலும் குருதியையே கண்டு நிலையழிந்தனர். உண்ணாமல் உறங்காமல் குமட்டி துப்பி கண்ணீர் வடித்து ஏங்கினர். சாவே வருக என்று கூவி நெஞ்சுலைந்தனர். அவர்கள் முற்றங்களில் கிடந்து துள்ளின வெட்டி வீசப்பட்ட இளங்குழந்தைகளின் உடல்கள். மண்ணை அள்ளிக் கிடந்தன மலர்க்கரங்கள். ஒளியிழந்த மணிகள் போல விழித்துக்கிடந்தன சின்னஞ்சிறு விழிகள். சொல்லி முடியாத சிறுசொற்கள் எம்பி எம்பித்தவித்தன.

நாளென்று மடிந்து பொழுதென்று குவிந்து வாழென்று சொல்லி வந்துநின்றது காலம். அதன் சகடத்தில் ஒட்டி சாலைகளைக் கடந்து செல்வதே வாழ்வென்று கற்றனர் மானுடர். அறமோ நெறியோ குலமோ குடியோ அல்ல, மானுடர்க்கு ஊனும் உணர்வும் இடும் ஆணை இருத்தலொன்றே என்று உணர்ந்தனர். நாள் செல்லச் செல்ல செங்குருதிச் சுவையில் இனிமை கண்டனர். பாலில் நெய்யே அன்னத்தில் குருதி என்று அறிந்தனர். குருதியுண்டு வாழ்ந்த குலதெய்வங்கள் அவர்களின் இருளாழத்தில் இருந்து விழிமின்னி எழுந்து வந்தன. நாச்சுழற்றி நீர்வடிய கொழுப்பேறும் ஊனெங்கே குமிழிக்குருதியெங்கே என்று உறுமின. ஆறாப் பெருநோயிலும் அகத்தெங்கோ இன்புறுவான் மானுடன். பாவத்தில் பெருங்களிப்புறுவான். இருளிலேயே விடுதலையை முழுதறிவான்.

பசி மீறி தன்னுடலையே தான் தின்னும் விலங்கொன்றில்லை. உயிருக்கு அஞ்சி உற்ற மகவை கைவிட்டு ஓடுகையில் உதறி உதறி தன்னையே விட்டோடிவிடுகிறது மானுடக் கீழ்விலங்கு. அன்னைப்பெருஞ்செல்வங்களே, தங்கள் குழந்தைகளின் குருதி கண்டும் அச்சத்தால் அடிபணிந்த கீழ்மக்கள் பின் அடைவதற்கேதுமில்லை. ஆழம் வறண்ட அடிக்கிணற்றின் சேற்றைக் கண்டபின் அறிவதற்கு ஏதுள்ளது? பாவத்தின் பெருங்களியாடலைக் கண்டமானுடர் தெய்வங்களிடம் கோரும் கொடையென்று எதைச் சொல்ல?

மதுரைப்பெருநகரில் மானுடம் கட்டவிழ்ந்து மதம் கொண்டாடுகிறது. அங்கே ஒருவேளை உணவுக்காக உடன்பிறந்தான் கழுத்தை அறுக்கலாம். பெற்றதாயை பெண்ணாக்கலாம். பிறந்த மகவை கொன்றுண்ணலாம். அறச் சொல்லை அடியணியாக்கலாம். பேணும் தெய்வத்தை பேயாக்கலாம். அறிக, தன் மகவை கொன்று தின்னும் விலங்குக்கு காடே அடிமையாகும். அதன் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. குழந்தைப்பலி கொண்ட குலங்களின் நகங்களெல்லாம் வாள்களாகின்றன. பற்களெல்லாம் அம்புகளாகின்றன. அவர்களின் கண்களில் வாழ்கின்றது வஞ்சமெழுந்த வடவை. அவர்களைக் கண்டு பாதாள நாகங்கள் பத்தி தாழ்த்தும். அறமியற்றிய ஆதிப்பெருந் தெய்வங்கள் அஞ்சி விலகியோடும்.

மதுரை நகர்நடுவே மதயானை என அரியணை அமர்ந்திருக்கிறார் கம்சர். குருதி சொட்டும் கொலைக்கரங்களுடன் அவர் தம்பியர் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் கொடுவாளை தெய்வமென்று கொண்டாடுகின்றனர் அங்குள தொல்குடிகள். மகதம் கம்சரை அஞ்சி துணை கொள்கிறது. கங்காவர்த்தமோ அவர் பெயரை கேட்டதுமே நடுங்குகிறது. யமுனையில் ஓடும் அலைகளில் குளிராக அவர் மீதான அச்சம் படர்ந்து செல்கிறது. அணிபட்டுத்துணிமேல் விழுந்த அனல்துளி என மதுராபுரியைச் சொல்கின்றனர் அறிந்தோர். மாமதுரை கோட்டைக்குமேல் எழுந்த கொடிகள் ஒருகணம்கூட அசைவழிந்து அமைவதில்லை என்கின்றனர் சூதர்.

விழியொளிரும் மடமகளீர், மதுரை விட்டு வந்த மாகதர் சொன்ன இக்கதையை நான் கேட்டேன். கம்சரின் அமைச்சர் கங்கையைக் கடந்துசென்று இமயத்தில் தவம்செய்யும் முதுமுனிவர் துர்வாசரிடம் எப்போதும் எவராலும் வெல்லப்படாதவன் யார் என்று கேட்டார். தன்னை வென்று தான்கடந்தோனை வென்றுசெல்ல தெய்வங்களாலும் ஆகாது என்று அவர் சொன்னார். ‘அப்பாதையில் செல்லும் அச்சமில்லா மானுடன் இன்று எவன்?’ என்று அமைச்சர் கோரினார். தன் வேள்விக்குளத்தில் எரிந்த தென்னெருப்பிடம் துர்வாசர் கேட்டார் ‘தன்னைக் கடந்துசெல்லும் தனிவழி கண்டவன் ஒருவனைக் காட்டுக’ என்று. செந்தழலில் நின்றெரிந்து தெரிந்தது கம்சர் முகமே.

அணிநகையீர், அச்சத்தால் கட்டுண்டோன் மானுடன். ஐயத்தால் கட்டுண்டோன், அவற்றை வென்றாலும் மெல்லுணர்வுகளால் கட்டுண்டோன். அனைத்தையும் வென்றாலும் அறத்தால் கட்டுண்டோன். அதையும் வென்று நின்றவர் கம்சர். அவர் செய்ய ஆகாதது என்று இனி இப்புவியில் ஏதுமில்லை என்றது நெருப்பில் எழுந்த உடலிலாச் சொல். மதுராபுரியின் மாமன்னனை வெல்ல இனி தெய்வங்களும் எழமுடியாது என்றனர் முனிவர். அமுதும் நஞ்சும் அதுவே ஆம் என்பதனால் நன்றோ தீதோ முழுமை கொண்டால் அது தெய்வமே என்றார் துர்வாசர். முழுமை கொண்ட முதற்பெரும் பாவத்தால் கம்சரும் தேவனானார் என்று சொல்லி பாடினார் முதுமாகதர்.

களிற்றெருதின் நெஞ்சுபிளந்துண்ட வேங்கையின் நாக்கு போன்றது கம்சரின் உடைவாள் என்றனர் சூதர். ஒருபோதும் அதில் குருதி உலர்வதில்லை. நூறுமுறை நன்னீரில் கழுவி நான்குவகை துணியில் துடைத்து மலரும் பீலியும் சூட்டி படைமேடையில் வைத்தாலும் அதன் நுனி ததும்பி உருண்டு சொட்டி நிலத்தில் புதுக்குருதி வழிந்துகொண்டிருக்கும். குருதி நனைக்கும் கம்பளங்களை நாழிகைக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டிருப்பார்கள் சேவகர்கள்.

தன் உடைவாளை கையில் எடுத்து எங்கிருந்து வருகிறது அக்குருதி என்று பார்ப்பது கம்சரின் வழக்கம். ஆணிப்பொருத்துக்கள் புண்வாய்கள் போல குருதி உமிழும். பிடிகளில் அமைந்த செவ்வைரங்கள் நிணத்துண்டுகளாக கசிந்துகொண்டிருக்கும். அணிச்செதுக்குகள் தசை வரிகளாகி செந்நீர் வழியும். வெற்றறையில் வாளைச்சுழற்றி மூச்சுவிட்டு அமைகையில் சுவர்களெங்கும் தெறித்து துளிகனத்து கோடாகி வழிந்து நிலம் தொட்டு இணைந்து ஓடும் சோரிப்புனல். இடைக்கச்சை நனைக்கும். தொடைவழி ஒழுகி பாதங்களில் ஊறும். கால்தடங்களாகிப் பதியும். உலர்ந்து செங்கோலமாகி அரண்மனையை நிறைக்கும். குருதியில் வாழ்ந்தார் கம்சர். குருதியின்றி வாழமுடியாதவரானார்.

காலையிளவெயிலில் குருதிமுத்துக்கள் சொட்டிச் சிதறி விழ வாள்சுழற்றி களமாடிக்கொண்டிருக்கையில் நீலமணிச் சிறுகுருவி ஒன்று பொன்னிற அலகுச்சிமிழ் திறந்து காற்றிலெழுந்த செங்குமிழ் போல ஒளிரும் குரலெழுப்பி சிறகால் வெயில் துழாவும் இசையொலிக்க உள்ளே வந்தது. முதல்முறையாக தன் முன் அச்சமில்லா விழியிரண்டைக் கண்ட கம்சர் திகைத்து வாள் தாழ்த்தி அதை நோக்கினார். இளநீல மலர்ச்சிறகு. மயில்நீலக் குறுங்கழுத்து. செந்தளிர்போல் சிறு கொண்டை. செந்நிற விழிப்பட்டை. அனல்முத்துச் சிறுவிழிகள். பொன்னலகை விரித்து ‘யார் நீ?’ என்றது குருவி. ‘நான்!’ என்றார் கம்சர். ‘நீ யார்?’ என்றது அது.

சினந்து வாள் சுழற்றி அதை வெட்டி வெட்டி முன்னேறிச் சுழன்று மூச்சிரைத்து அயர்ந்து நின்றார் கம்சர். சுழன்று ஒளியாக அறை நிறைத்த வாள்சுழிக்குள் மூழ்கி எழுந்து துழாவித்திளைத்தது சிறுகுருவி. அவர் தாழ்த்திய வாளைத் தூக்கியபோது வந்து அதன் நுனியில் புல்வேர் போன்ற சிறுகால்விரல் பற்றி அமர்ந்து ‘நீ யார்?’ என்றது. அதை அவர் வீசிச்சுழற்றி மீண்டும் வெட்ட சுவர்களெல்லாம் குருதி எழுந்து தசைப்பரப்பாக நெளிந்தன. தன் உடலும் குருதியில் குளிக்க கருவறைக்குள் நெளியும் சிறுமகவென அங்கே அசைந்துகொண்டிருப்பதை உணர்ந்து பதைத்து நின்றார். ஒருதுளியும் தெறிக்காத நீலச்சிறகுகளை விரித்தடுக்கி மீண்டும் அவர் முன்னால் படைமேடையில் வந்தமர்ந்து ‘நீ யார்?’ என்றது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

உள்ளிருந்து ஊறி உடைந்தழியும் பனிப்பாளம்போல கம்சர் நெக்குவிட்டு விம்மி அழுது நிலத்தமைந்தார். அருகே செந்நாவென நெளிந்த உடைவாள் அவர் மடியைத் தொட்டு தவழ்ந்தேற முயல தட்டி அதை விலக்கிவிட்டு தரையில் முகம் சேர்த்து கண்ணீர் வழிய கரைந்து அழிந்தார். அவர் அருகே வந்தமர்ந்து ‘நீ யார்?’ என்றது சிறுநீலம். செங்கனலெரியும் விரிவிழி தூக்கி அவர் நோக்க ‘யார் நீ?’ என்றது. அதன் மழலைச்சிறு சொல்லை பைதல்விழிகளை கண்ணருகே நோக்கினார் கம்சர். கையெட்டினால் அதை பிடித்திருக்கலாம். ஆனால் தோள்முனையில் இறந்து குளிர்ந்திருந்தது கரம். நனைந்த கொடியென அமைந்து கிடந்தது நெஞ்சம்.

அன்று மதுராபுரியின் ஊன்விழா. ஆயிரமாயிரம் ஆநிரைகளை கழுத்தறுத்து கலம் நிறைய குருதி பிடித்து குடித்தாடிக்கொண்டிருந்தனர் நகர்மக்கள். ஊன் தின்று கள்ளருந்தி உள்ளே எழுந்த கீழ்மைகளை அள்ளித் தலையில் சூடி தெருக்களெல்லாம் நிறைந்திருந்தனர். செருக்களத்து நிணம்போல சோரியூறி நாறியது நகரத்து மண்பரப்பு. இழிமைகொண்டு நாறியது மக்கள் நாப்பரப்பு. தெய்வங்கள் விலக இருள்நிறைந்து நாறியது சான்றோர் நூல்பரப்பு. நடுவே சொல்லிழந்து சித்தமிழந்து கண்ணீர் விட்டு தனித்திருந்தான் அவர்களின் அரசன். அவன் கோட்டைமேல் அத்தனை கொடிகளும் நாத்தளர்ந்து கம்பங்களில் சுற்றிக்கொண்டிருப்பதை அங்கே எவரும் காணவில்லை.

கோபியரே, அதோ கோகுலம். அங்கே ஆநிரைகள் பால்பெருகி மடிகனத்து அழைக்கும் ஒலியெழுகிறது. கன்றுகள் துள்ளும் மணியோசை கேட்கிறது. உங்கள் இளநெஞ்சம் துள்ள என் தோணி திரையெழுந்தாடுகிறது. மணிச்சலங்கை ஒலிக்க மென்பாதம் தூக்கிவைத்து இறங்குங்கள். மண்கனக்கும் கரும்பாறை மடிப்புகளைப் பிளந்தமைக்கும் கண்விழியா சிறுவிதைக்குள் வாழும் முளைக்கருவை வாழ்த்துங்கள். மணிக்குரல் பறவை ஒன்று மெல்விரல்பற்றி சுமந்துசெல்லும் அளவுக்கே சிறியது இப்புவியென்றனர் மெய்யறிந்தோர். சின்னஞ்சிறியது வாழ்க! மலரினும் மெல்லியது நலம் வாழ்க! சொல்லாது கேளாது அறியாது அழியாது நிலைநிற்கும் நுண்மை நீடூழி வாழ்க!

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஇரண்டு வானோக்கிய சாளரங்கள்
அடுத்த கட்டுரைசேவை வணிகர்கள்