இமயச்சாரல் – 20

ஜம்மு பகுதியை ஆலயங்களின் மாபெரும் இடுகாடு என்று ‘அலங்காரமாக’ சொல்லிவிடலாம். இந்தியக் கட்டிடக்கலையின் பிறப்பிடங்களில் ஒன்று இது. ஏனென்றால் காஷ்மீர சைவமும் பௌத்தமும் ஓங்கியமண். நேரடியாக காந்தாரக் கட்டிடக்கலையின் செல்வாக்கு இங்கே வந்தது. ஆகவே குறிப்பிடத்தக்க இரு கட்டடக்கலைகள் இங்கே உருவாயின. ஒரு முறையின் உச்சம் மார்த்தாண்ட் ஆலயம். ஜம்மு முழுக்க இன்னொரு வகையான கட்டடக்கலை உருவாகி வளர்ந்ததன் தடயங்கள் உள்ளன. அத்தனை கோயில்களும் இடிக்கப்பட்டன. பெரும்பாலானவை அடித்தளங்களாக எஞ்சுகின்றன. பாதிப்பங்கு இடிக்கப்பட்டு எஞ்சும் ஆலயங்களே நூற்றுக்கணக்கானவை.
devipakavathi
அவற்றில் உதம்பூர் மன்வால் பகுதியில் மட்டுமே ஏராளமான ஆலயங்கள் உள்ளன. மன்வாலில் உள்ள தேவி பகவதி ஆலயம் ஏழுரதங்களின் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது ஒன்றுதான் எஞ்சியிருக்கிறது. அதிலும் மேல்கோபுரம் சிதைந்துபோய் கருவறை மட்டுமே எஞ்சியிருக்கிறது. இங்கே ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இப்படி இடிந்த ஆலயங்கள் மீண்டும் வழிபாட்டுக்கு வரும்போது அவற்றில் மீண்டும் புதிய சிலைகள் வைக்கப்படுவதில்லை. பழைய உடைந்த சிலைகளின் பகுதிகளையே உள்ளே கொண்டுசென்று வைத்து வழிபடுகிறார்கள்.

kaladera
பலசமயம் துண்டான தலை, உடைந்த தோள் என்று அந்த கருவறைச்சிலைகள் அபத்தமாக இருக்கும். உடைந்த சிலைகளை வழிபடக்கூடாது என்று தென்னக நெறி. இவர்களுக்கு அது தெரியவில்லை. சிலைகள் இல்லை என்றால் படங்களை மாட்டிவிடுகிறார்கள். காரணம் பலநூற்றாண்டுக்காலம் ஆலய வழிபாடு இல்லாமலிருந்தமையால் கல்லில் சிற்பம்செய்பவர்களே இல்லை என்று ஆகிவிட்டதுதான். ஒரு பேரியக்கமாக இப்படி கைவிடப்பட்டிருக்கும் ஆலயங்களில் புதிய சிலைகளை தமிழகத்தில் இருந்து கொண்டு சென்று ஆகம முறைப்படி நிறுவுவது ஒரு மறுமலர்ச்சியாகவே அமையும் என்று தோன்றியது.

kalathera
தேவிபகவதி ஆலயத்துக்குள்ளும் படங்களும் உடைந்த சிலைகளும்தான் வழிபாட்டில் இருந்தன. அருகே இருந்த அடித்தளங்களிலும் உடைந்த சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. கங்கை யமுனைச் சிலைகள் மழுங்கிய வடிவில் காணப்பட்டன. இந்த ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல்துறை ஊகிக்கிறது. மற்றபடி இதைப்பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை.

காலதேரா கோயில் 2

ஏழாம் தேதி முழுக்க தொடர்ந்து ஆலயங்களை பார்த்துக்கொண்டே சுற்றிவந்தோம். மன்வாலில் இரண்டு காலதேரா கோயில்கள் உள்ளன. முதல் ஆலயத்தில் தொல்லியல்துறை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. எங்களைக் கண்டதும் சீட்டாடிக்கொண்டிருந்தவர்கள் பாய்ந்துசென்று கற்களை கழுவத்தொடங்கினர். இரு ஆலயங்களுமே பெரும்பாலும் இடிந்த நிலையில்தான் உள்ளன. இரண்டுமே பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்தவை என்று ஊகிக்கப்படுகின்றன. மேற்கொண்டு ஆராய்ச்சியோ தகவலோ இல்லை.
deara2
இவ்வாறு எந்த தகவல்களும் இல்லாத ஆலயங்களை பார்க்கும்போதுதான் காஷ்மீரில் நாங்கள் சந்தித்த டோக்ரா குலத்தவரான கமாண்டர் ஜோகீந்தர் சிங் ஏன் எங்கள் மேல் அவ்வளவு ஆர்வம் காட்டினார் என்பது புரிந்தது. நாங்கள் சேகரிக்கும் தகவல்களை அவரிடம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார். ஏனென்றால் ஜம்முவும் காஷ்மீரும் அவர்களின் மண். அவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. ஆராய்ச்சி செய்ய ஆளே இல்லை.

deara 3
காலதேரா கோயில்களில் ஒன்று சற்று உள்ளடங்கி இருந்தது. விசாரித்து அறிந்து அதைச்சென்று பார்த்தோம். அதுவும் கற்குவியல்களாகக் கிடந்து தொல்லியல் துறையால் ஓரளவு மீட்கப்பட்டுள்ளது. இன்று வெறுமனே இந்த ஆலயங்களை பார்த்துவரத்தான் முடியும். ஒரு மழுங்கலான உணர்வெழுச்சி ஏற்படும். காலவெள்ளத்தை அருகே நின்று பார்க்கும் அனுபவம் அது என்று சொல்லலாம்.

dera4

மதியம் தலோரா என்ற ஊரில் இருந்த தேரா கோயில் என்ற ஆலயத்தைச் சென்று பார்த்தோம். மூன்று பெரிய கருவறைகள் கொண்ட சிவன் கோயில். மிக உயரமான அடித்தளம் கொண்டது. பெரிய கோபுரம் இருந்திருக்கலாம். மதிய உணவுக்கு மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். மங்கலான வெயில், இளம்குளிர், கிராமப்பகுதியின் அமைதி. அந்த மனநிலை ஒரு வெறுமை கொண்டதாக இருந்தது. அந்த மாபெரும் ஆலயத்தை கற்பனையில் வரைய முயன்றபடி உள்ளே சுற்றிச் சுற்றி வந்தோம்.
repair
மாலை இன்னொரு ஆலயம். நந்த் பாபோர் ஆலயம் என இது அழைக்கப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்த ஆலயத்திலும் கோபுரமோ பிற கட்டுமானங்களோ இல்லை. அடித்தளம் மீது ஆலயத்தின் சுவர்கள் மட்டுமே உள்ளன . ஒருபகலுக்குள் இத்தனை இடிபட்ட ஆலயங்களைப் பார்த்தது ஒருவகையில் சிந்தனையை மரத்துப்போக வைத்தது. திரும்பத்திரும்ப ஒன்றையே பார்ப்பதுபோல. திரும்பத்திரும்ப ஒன்றையே எண்ணிக்கொண்டிருப்பதுபோல.

காலதேரா ஆலயம்

மாலையில் பில்லவார் என்னும் ஊரைச் சென்றடைந்தோம். அங்கிருக்கும் தொன்மையான ஹரிஹரா ஆலயத்துக்கு வழிகேட்டுச் சென்றோம். வழக்கமாக வழிகேட்கப்பட்டதுமே வரும் உச்சரிப்புக் குழப்பங்கள். நேராகச் சென்று சேனாப் நதிக்குள் இறங்கிவிட்டோம். செந்நிறமாகப் பெருகிச்சென்ற ஆறு. ஆற்றின் படுகை மிக அகலமானது. அங்கே நின்றவர்கள் ஊருக்குள் செல்லும்படி சொன்னார்கள். ஆகவே மீண்டும் படிகளில் ஏறி திரும்பி ஊருக்குள் சென்றோம்.

மிகநெரிசலான ஊருக்குள் நுழைந்தோம். ஒரு கடைவீதி வழியாக நடந்துசென்றோம். வாகனங்கள் செல்லாமல் கால்நடையர் மட்டுமே செல்லும் வீதி. தெருவிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பில்லவார் முன்பு பேலாப்பூர் என அழைக்கப்பட்டிருக்கிறது. அர்ஜுனன் மகன் பப்ரு வாகனனால் கட்டப்பட்ட ஆலயம் இது என்பது நம்பிக்கை. அதையே தொல்லியல்துறையினரும் எழுதி வைத்திருக்கிறார்கள். பத்தாம்நூற்றாண்டைச்சேர்ந்த இந்த ஆலயத்திலும் கருவறையில் தெய்வங்களின் உடைசல்கள்தான் வழிபடப்படுகின்றன. கோயிலே நான்குபக்கமும் பிளந்து இரும்புப்பட்டைகளால் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது. சுற்றிலும் நெரிசலான வீடுகள். அங்கே வெளியே இருந்து எவரும் வருவதில்லை போல. அனைவரும் எங்களை விசித்திரமாகவே பார்த்தார்கள்.

முந்தைய கட்டுரைஏகலைவனின் வில்
அடுத்த கட்டுரைஆசுரம்