அன்புள்ள நண்பர்களுக்கு,
சென்ற சில தினங்களாக பத்துநூல்களுக்கான வேலைகளில் இருந்தேன். அதை முடித்ததும் ஒரு சிறிய இடைவெளி. விஷ்ணுபுரம் புதிய பதிப்பின் பிரதி ஒன்று வந்திருந்தது. அதை ஆங்காங்கே வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் கனவின் உக்கிரம் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. தொடர்ந்து அந்தக் கனவில் சென்றுகொண்டே இருந்தேன். என்ன ஒரு கனவு, மண்ணில் கால்பதியாமல் அந்தரத்திலேயே ஓர் உலகம். அந்தக்கனவை இளமையிலேயே நாம் காண முடியும். அந்தக்கனவின் வேகமே என்னை எழுத்தாளனாக ஆக்குகிறது என்று பட்டது.
சென்ற சில வருடங்களாக அந்தக் கனவிலிருந்து வெளியே வந்துவிட்டேனா என்ற பயம் ஏற்பட்டது. அது உண்மையில்லை என நான் அறிவேன், அசோகவனம் இன்னொருவகை கனவு. ஆனாலும் ஒரு பயம். உக்கிரமாக மாதக்கணக்கில் புனைகதையுலகுக்குள் வாழ்வதே என் வழக்கம். அந்த தீவிரத்தை இழக்கிறேனா என்ற எண்ணம் வந்தது. உடனே எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணினேன்.
மூன்று சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் எழுதினேன். கூடவே அசோகவனத்தை முடிக்கவேண்டும். ஆகஸ்டுக்குள் முடிப்பதாக வசந்தகுமாருக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னொரு நாவலை ஆரம்பித்தாலென்ன என்றும் ஒரு ஆசை. நடுவே கீதை உரையையும் முடிக்கவேண்டும்.
ஆகவே இணையத்தில் எழுதுவதை கொஞ்சம் குறைத்தாகவேண்டும். இணையத்தில் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்க விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் வரும் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதே எனக்கு நிறைய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதைக் குறைத்துக்கொள்வதற்காக என் இணையதளத்தில் பின்னூட்டப்பெட்டி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் சிறில். வாசகர் தங்கள் கருத்துக்களை அதில் பதிவுசெய்யலாம். எனக்கு ஏதேனும் சொல்வதற்கிருந்தால் நானும் அதில் பதிவுசெய்கிறேன். எனவே இணையக்கட்டுரைகள் குறித்த தனிப்பட்ட மின்னஞ்சல்களைத் தவிர்க்கும்படி கோருகிறேன். (பின்னூட்டமிட இங்கே சென்று உறுப்பினராகப் பதிந்து கொள்ளவும். )
இவ்வருடம் கூடுமானவரை புனைவுகளை மட்டுமே இணையத்தில் ஏற்றுவதாக எண்ணியிருக்கிறேன். புத்தக அறிமுகம், எதிர்வினைகள் போன்றவற்றை தவிர்க்க முடியாதுதான். அவையும் இருக்கும்.
ஜெயமோகன்
12 comments
Skip to comment form ↓
ratan
December 18, 2009 at 12:13 am (UTC 5.5) Link to this comment
(ஏற்கனவே மெயிலில் அனுப்பியதுதான்… இருந்தாலும் முதல் பின்னூட்டம் என்னுடையதாக இருக்கட்டும் என்று ஒரு நப்பாசை)
அன்புள்ள ஜெ.,
முதலில் அதிர்ச்சி அளித்தாலும், எதிர்பார்த்த முடிவுதான் என்று தோன்றியது. மீண்டும் இணையத்திற்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உண்மையைச் சொல்லபோனால், இணையத்தில் உங்கள் எழுத்துக்களை ஒரு போதை போலப் படித்தவர்களுள் நானும் ஒருவன். அதற்குப் பயந்தே சில காலமாக உங்கள் நூல்களைப் படிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன்.
ஒரு யோசனை. நிறுத்துவதாயின் புத்தகக் கண்காட்சிக்கு ஒரு மாதம் முன்னமே நிறுத்தி விடவும். உங்கள் எழுத்துக்களில் பழகிய வாசகர்களில் பத்தில் ஒருவராவது ஒரு புத்தகமாவது வாங்குவார்கள். இதுவரை ஓசியில் படித்ததற்கு ஒரு சிறிய பிராயச்சித்தமாக இருக்கும்.
நம்மூர் (அசல்) இலக்கியவாதிகளிடம் Marketing செய்யக்கூடாது என்று ஒரு வைராக்கியமே இருப்பது போல் தோன்றுகிறது. அதைச் செய்வது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகுக்கும் நல்லது என்பது என் கருத்து.
நன்றி
ரத்தன்
santhana raj
December 18, 2009 at 9:33 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ல ஜெ,
வாரம் ஒரு முறையேனும் இணையத்தில் எழுத முயற்சிக்கவும்.
புனைவுகளுடன் மதம், இயற்கை உணவு & பயணம் சார்ந்த கட்டுரைகளையும் எதிர் பார்கிறோம்.
சந்தாண ராஜ்
ragavendiranthmmampatty
December 18, 2009 at 9:47 am (UTC 5.5) Link to this comment
டியர் சார், நலம் நலமே விழைக, தம்மம்ப்ட்டியிலிருந்து ராகவேந்திரன், நீங்களே குறிப்பிட்டுள்ளது போல இணையத்தினை விட எழுத உசிதமான இடம் எனக்கு இல்லை ( என்ன ஒரு பிளாக் ஹ்யூமர்) என்று கூறியது போல எங்களுக்காக நீங்கள் இணையத்தில் எழுதி தான் தீர வேண்டும். உங்கள் புத்தகங்களுக்காக ஆவலுடன் நாங்கள் காத்திருப்பது போல இணைய கட்டுரைகளுக்காகவும் காத்திருக்கிறோம். இணையத்தில் படித்து இருந்தாலும்எனது மனைவி மற்றும் எனது நண்பர்களுக்கு படிக்கக் கொடுப்பதற்காக புத்தகத்தை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். எனவே இணையம் வாயிலாக நாங்கள் படிப்பது தங்களின் கருத்துக்களை புத்தகத்தில் படிப்பதற்கு முன்பு சுட சுட படிப்பது போல, உதாரணத்திற்கு காந்தியம் பற்றி தமிழினி பதிப்பகம் 500 பக்கத்தில் வெளியிடுகிறது என்று தாங்கள் வெளியிட்ட உடனே எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடத்திலும் போன் செய்து அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டேன். ஏனென்றால் என்னளவில் மட்டுமின்றி என் நண்பர்கள் அனைவரும் காந்தியை தவறான கண்ணோட்டத்தில் தான் இதுவரை மனதில் நினைத்திருந்தோம். அந்த கண்ணோட்டத்தினை பிம்பத்தினை தகர்த்து எறிந்தது உங்கள் கட்டுரைகள் தான். நான் பெற்ற இன்பம் எனது நண்பர்களும் பெற வேண்டும் அல்லவா, ஆகவே தயவு செய்து இணையம் வாயிலாகவும் எழுதி வாருங்கள்,
அன்புடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
anandhakonar
December 18, 2009 at 10:51 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு.,
இணையத்தில் தொடர்ந்து எழுத முடிவெடுத்தமைக்கு மிக்க நன்றி. மற்றபடி, முதலில் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கிவிட்டு அப்புறம் விலாவாரியா கடிதம் எழுதுகிறேன். இதுவரை புத்தகம் வாங்கவில்லை என்று உண்மைய சொன்னதுக்கு இந்த போடு போடுறாங்களே. :)
அவுங்க சொல்லுறதும் வாஸ்தவம்தானே, பேசும்போது நல்லா வக்கனையா பேசு, புக்கு வாங்குறதுல கோட்டை உட்டுடுகிறதை கொஞ்சம் கௌரவமா சொல்றாங்க. கூடிய சீக்கிரம் வாங்கி இந்த அவப்பெயரை சரி பண்ணிடுவோம்.
தமிழ்ப்பாலை கறந்தே விடுவது என்ற ஒரே முடிவில் எந்த மாற்றமும் இல்லை.. !
புத்தக வெளியீட்டுவிழா இனிதே நடந்து நிறைவேற வாழ்த்துக்கள்..சென்னை பயணம் மற்றும் விழா கட்டுரை , புகைப்படம் மற்றும் விடியோவுடன் அமர்க்களமாக வர ஆசைப்படுகிறோம். ( ஜனவரியில் இருந்துதானே இணைய எழுத்து குறைப்பு அமலுக்கு வருகிறது, டிசம்பரிலேயே எழுதிவிடலாமே என்ற
அபாரமான ஒரு யோசனையையும் நான் முன்வைக்கிறேன் :) )
தொடர்ந்து எழுத முடிவெடுத்தமைக்கு மீண்டும் மிக்க நன்றி.
அன்புடன்.
ஆனந்த கோனார்
change
December 18, 2009 at 12:45 pm (UTC 5.5) Link to this comment
திரு ஜெயமோகன்,
உங்களுடைய வலை தளத்தை சில வாரங்களுக்கு முன்னால் கண்டு கொண்டேன். இதற்கு முன் நான் உங்கள் வாசகன் இல்லை. உங்கள் எழுத்தின் ஆழத்தை பார்த்து, அதில் எனக்கு தேவையானதை தேடிகொண்டிருகிறேன். உங்களுக்கு தெரிந்திருக்கும், ஒவ்வாருவரும் அவர்கள் மனதின் எல்லைகளுக்குட்பட்டே தேட முடியும். அந்த மனதின் எல்லைகள் அம்மனதிற்கு நாம் அமைத்திருக்கும் நம்பிக்கைகள் போன்ற பூட்டுகளை பொறுத்து அமைந்திருக்கும். உங்கள் எழுத்துகள், அத்தகைய சில பூட்டுகளை திறக்க உதவி செய்கிறது. உங்களுக்கு வரும் சில கடிதங்களிருந்து இது என்னை தவிர மற்றும் பலருக்கு அத்தகைய திறப்புகளுக்கு உதவி வருகிறது என்பதை தெரிந்து கொண்டேன்.
இது நீங்கள் எழுதும் தளம். அந்த தளம் உங்களுடை நம்பிக்கைகள் மற்றும் புரிதலை அடிபடையாக கொண்டே அமைந்திருக்கும். மேலும் நீங்கள் அறிந்திருக்கலாம். எந்த இரு மனிதர்களும் ஒரே தளத்தில் இயங்க முடியாது என்பதை. அந்த தளங்களை இணைக்க மட்டுமே முடியும். ஒரு சாதாரண வாசகன் என்ற முறையில் இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டே உங்கள் வலை தளத்தை பார்கிறேன். இதனால் எனக்கு எத்தகைய கருத்து வேறுபாடுகளும் எழவில்லை. நீங்களும் அத்தகைய தள வேறுபாடுகளை உணர்ந்து எழுதுவதாகவே எனக்கு படுகிறது. இந்த கருத்து உங்கள் எழுத்தில் நுட்பமாக அமைந்துள்ளதாக கருதுகிறேன். இகருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டு என்றால், அந்த உணர்வினை வெளிபடையாக உங்கள் எழுத்தில் பார்க்க ஆசை படுகிறேன். இதன் மூலம் வாசகர்கள் உங்கள் எழுத்தினால் அவர்கள் தனித்தன்மையை இழக்காமல் பாது காக்க ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கலாம். உங்கள் எழுத்தில் ஆழம் இருப்பதனால் உங்கள் கருத்தும் அவர்கள் தனித்தன்மையில் கரையாமல் தனிப்பட்டு நின்று அவர்கள் (எங்கள்) மனதை திறக்க உதவலாம் என கருதுகிறேன்.
மேலும் உங்கள் எழுத்தில் ஒரு ஆன்மீக தேடல் இருப்பதாக உணர்கிறேன். உங்கள் புனைவு தன்மை அல்லது இலக்கியத்துவம் (இரண்டுக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை!) உங்கள் ஆன்மீக தேடலுக்கு தடையாக இருக்குமா என ஒரு கேள்வி எனக்குள் வருகிறது. அப்படி இருந்தால், ஒன்றுடன் ஒன்று சார்பு தன்மை இல்லாமல், ஆனால் ஒன்றை ஒன்று உபயோகபடுத்திகொண்டு வெளிப்பட வேண்டும் என்று ஆசை படுகிறேன்.
பெரும்பாலான ஊடகங்களும் இலக்கியவாதிகள் என கூறி கொள்பவர்களும், என்னை போன்ற சாதாரண மக்களின் வெளிப்புற உணர்சிகளை தூண்டி விட்டு குளிர் காய்வதாகவே படுகிறது. ஆனால் உங்களால் வாசகர்களின் நுட்பமான உணர்சிகளை உணரச்செய்து ஒரு தேடுதலை அவர்களுக்குள் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். எந்த மனிதனுக்கும் இந்த நுட்பமான உணர்வுகளை அறிந்து அவற்றினுள் வாழ்வதே ஒரு இயல்பாக இருக்க முடியும் – இன்னும் உணராத இயல்பாக! நான் கூற வருவதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்களுடைய எழுத்து அத்தகைய ஒரு தளத்திற்கு வாசகர்களை எடுத்து செல்ல வேண்டும் என ஆசை படுகிறேன்.
-மாற்றம்
http://change-within.blogspot.com
(நான் எனது இயல்பு என கருதும் சில காரணங்களால் எனது பெயரை குறிப்பிடவில்லை – மன்னிக்கவும்)
K.R அதியமான்
December 18, 2009 at 2:48 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெ,
உங்கள் energy level மற்றும் output volume பற்றி அடிக்கடி வியந்துள்ளேன்.
இணையத்தில் எழுத, மின்மடல்கள் அத்தனையும் படித்து, பதிலும் எழுத,
பிறகு உங்கள் புத்தங்களுக்கான உழைப்பு, பல விசியங்களையும், நூல்களையும், இணைய தளங்களையும், பத்திரிக்கைகளையும் படிக்க, மேலும் மலையாளத்திலும் எழுத, படிக்க : இத்தனைக்கும் ஒரு நாளைக்கு பல பல மணி நேரங்கள் ஆகுமே ? அலுவலக வேலை நேரம் மற்றும் உறங்கும் நேரம் போக ஏணைய அனைத்து மணிதுளிகளும் இதற்காகவே தேவைபடுமே ?
இந்த பின்னூட்ட பெட்டி முறை தான் சரி. சில காலம் முன்பாகவே கூட அறிமுகப்படுத்தியிறுக்கலாம்.
santhosh
December 18, 2009 at 7:05 pm (UTC 5.5) Link to this comment
ஜெயமோகன் சார்
ஒரு வகையில் நீங்கள் எடுத்தமுடிவு சரியானதே! நிறைய வழவழ பேச்சுகளும் போகிறபோக்கில் கேள்விகளை கேட்டுவிட்டு நானும் ரீடர் தான்யா வகை வாசகர்கள் தான் இனையத்தில் அதிகமாக இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த தீவிர வாசகர்கள் யாரும் இணையத்தில் கருத்து தெரிவிப்பதோ படிப்பதோ குறைவு. எங்கள் விளம்பரத்துறையில் ஒரு வாசக்ம் அடிக்கடி உதிர்க்கப்படும். இலவசம் இலவசம் என்று. ஆனால் அதை கேட்ட மாத்திரத்தில் பொருளின் தரம் பற்றி கொஞ்சம் குறைவான மதிப்பீடு தோன்றி விடும். உங்கள் எழுத்துக்கள் புத்தகங்களாக வாங்கி படிக்கபடவேண்டும். அதற்கு பின்னால் இருக்கிற விலைமதிக்கமுடியாத உழைப்புக்கு வாசகர்களாகிய நாங்கள் தருகிற மிகச்சிறிய பதிலீடு அது மட்டுமே என்று நம்புகிறேன்.
சந்தோஷ்
karhikesan
December 18, 2009 at 8:37 pm (UTC 5.5) Link to this comment
அன்பு ஜெ!
எந்த ஒரு பணியிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்போருக்கு தனது தீவிரம் குறித்த ஐயம் அவ்வப்போது ஏற்படுவது இயல்பே. அத்தருணங்களில் தமது தீவிரத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளும் சோதனைகளிலேயே மனம் லயிக்கும். இத்தகைய நிலை தங்களுக்கும் ஏற்பட்டிருப்பது இலக்கிய பணியிலான தங்களது ஈடுபாட்டையும் காதலையுமே காட்டுகிறது.
மேலும், ஜெயமோகன் வாசகர்களுக்கு அரிதாக பேச கிடைப்பதையே (படைப்புகள் தவிர்த்து)நான் விரும்புகிறேன்.
தாங்கள் தங்களது நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட்டு எமக்கு இன்னும் பல படைப்புகள் தர விரும்புகிறேன்.
அன்புடன்,
லோ. கார்த்திகேசன்
Sridhar Narayanan
December 19, 2009 at 12:44 am (UTC 5.5) Link to this comment
நல்லது. நீங்கள் இணையத்தில் எழுதும் வேகம் அசாதாரனமானது. சமீபத்தில் படித்த கட்டுரைதானே என்று நினைத்துக் கொண்டு உங்கள் தளத்தில் மீண்டும் வந்து பார்த்தால் அதற்குள் ஒரு பத்து பதினைந்து இடுகைகள் போட்டிருப்பீர்கள் :)
இங்கே கொஞ்சம் வேகத்தை மட்டுபடுத்திக் கொண்டு புனைவுலகில் அதிகம் சாதிக்க வாழ்த்துகள்.
RVS_Mani
December 19, 2009 at 8:17 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் கடித போக்குவரத்தை குறைப்பதவாகே முடிவு செய்துள்ளுர்கள், தானே? தினமும் வெளிவிடும் கட்டுரைகளை அல்ல, என்றே நம்புகிறேன். கடந்த சில மாதமாக தினமும் உங்கள் இணைய கட்டுரைகளை படிப்பது வழக்கமாகிவிட்டது. அதை நிறுத்த மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.
நன்றி.
Arangasamy.K.V
December 19, 2009 at 11:36 am (UTC 5.5) Link to this comment
//கூடவே அசோகவனத்தை முடிக்கவேண்டும். ஆகஸ்டுக்குள் முடிப்பதாக வசந்தகுமாருக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னொரு நாவலை ஆரம்பித்தாலென்ன என்றும் ஒரு ஆசை. நடுவே கீதை உரையையும் முடிக்கவேண்டும்//
காத்துள்ளோம் …
senthil kumar
December 19, 2009 at 1:50 pm (UTC 5.5) Link to this comment
புனைவுலகில் சாதிக்க வாழ்த்துகள்