‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71

நிறைபொலி

சூதரே, மாகதரே, பாடுங்கள்! தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது. பெருங்கடலைக் காணும்போது ஆறு தோன்றிய இடமெதுவென அறிந்துகொள்கிறார்கள்.

இப்பிரபஞ்சவெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது. வினாக்கள் என்பவை அதன் பல்லாயிரம் கரங்கள் மட்டுமே. அவை ஒவ்வொரு கணமும் துழாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் தளிர்முனைகள் உரியவர்களை கண்டுகொண்டு மெல்லச் சுற்றிவளைத்துக்கொள்கின்றன. அவர்களுக்கு பின் மீட்பில்லை.

சூதரே, மாகதரே, அவன் ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் எனப்பட்டான். தொல்மதுரை மூதூரிலிருந்து அவன் கிளம்பினான் என்கிறார்கள். தனித்தவன், பல்லாயிரம் பேர் உடனிருக்கையிலும் தான் என்று மட்டுமே உணர்ந்தவன். தான் தேடுவதென்ன என்று தனக்குத்தானே கூட ஒருமுறையேனும் சொல்லிக்கொள்ளாதவன்.

குருதிவாசம் ஏற்ற வேங்கை போல அவன் பாரதவர்ஷமெனும் பெருங்காட்டில் நுழைந்தான். வலசைப்பறவை போல தன் சிறகுகளாலேயே கொண்டுசெல்லப்பட்டான். அவன் தங்கிய ஒவ்வொரு ஊரும் அவனை வெளித்தள்ளியது. அப்பால் வெறும்பெயராக எழுந்த ஒவ்வொரு ஊரும் அவனை அழைத்தது.

அவன் தானறிந்தவற்றை எல்லாம் அக்கணமே கழற்றிவிட்டுச் செல்பவனாக இருந்தான். தான் தேடுவதைத்தவிர எதையும் தக்கவைக்காதவனாக இருந்தான். எனவே ஒவ்வொரு கணமும் வெறுமைகொண்டபடியே இருந்தான். ஒற்றைக்குறி பொறிக்கப்பட்ட அம்பு அவன். அவன் குறித்த பறவை அவன் கிளம்புவதைக் கண்டு புன்னகையுடன் கனிந்து தன் முட்டைக்குள் நுழைந்துகொண்டு தவமிருந்தது. உடல்கொண்டு சிறகுகொண்டு கூரலகு கொண்டு வெண்ணிறச் சுவரை உடைத்து வெளிவந்து விழிதிறந்து இன்குரல் எழுப்பியது. அது செல்லவேண்டிய தொலைவை எண்ணி மென்சிறகை அடித்துக்கொண்டது.

தமிழ்நிலமும் திருவிடமும் வேசரமும் கலிங்கமும் கடந்து அவன் வந்தான். ஆசுரமும் நிஷாதமும் கண்டு அவன் சென்றான். காலைக்காற்றால் சுவடின்றி அழிக்கப்பட்டன அவனுடைய பாதைகள். அவன் அகமோ பறவை சென்ற வானம் என தடமின்றி விரிந்திருந்தது. இனிய ஒளிகொண்ட சிறிய சிலந்திபோல அவன் ஒளியே என நீண்ட வலைநூல்களில் ஒன்றைப்பற்றி ஊசலாடி பிறிதொன்றில் தொற்றிக்கொண்டான். அந்த மாபெரும் வலைநடுவே விழிதிறந்து விஷக்கொடுக்குடன் அமர்ந்திருந்தது முதல்முடிவற்ற அந்த விடை. அது வாழ்க!

சூதரே, மாகதரே, அவன் தேடிச்சென்ற அதற்கு அஸ்தினபுரி என்று பெயரிட்டிருந்தான். அஸ்தினபுரி ஓர் வண்ணக்கூடு. பாரதவர்ஷமெங்கும் பல்லாயிரம் சூதர்கள் தங்கள் தூரிகையால் அதை தொட்டுத்தொட்டு சொற்திரையில் தங்கள் சித்திரங்களை வரைந்துகொண்டிருந்தனர். அதோ அங்கே கிருஷ்ணவேணிக்கரையின் அக்கிராமத்துமேடையில் கர்ணன் இன்னும் பிறக்கவில்லை. இங்கே மாளவத்தின் மலையடிவாரத்துச் சத்திரத்தில் அவன் களம்பட்டு நடுகல்லாகி நிற்கிறான். திருவிடத்து ஆலயமுகப்பில் மகாப்பிரஸ்தானம் சென்று விண்ணேறும் தருமனை மகிஷநாட்டில் குந்தி கருவுற்றிருக்கிறாள்.

அஸ்தினபுரமென்று ஒன்றில்லை என்கிறான் ஒரு கவிஞன். அது மானுடக் கற்பனையில் மலர்ந்துகொண்டே இருக்கும் பூவனம் மட்டுமே என்கிறான். ஐயத்துடன் எழுந்து இன்னொரு கவிஞன் ரதங்களோடிய களமுற்றத்தில் விழுந்திருக்கும் சகடச்சுவடுகளினாலான பெருங்கோலமொன்றைக் காண்கிறேனே அது என்ன என்கிறான். எஞ்சுவது பொருளற்ற சுவடுகளே, சுவடுகள் சொல்லாகும்போது காவியம் பிறக்கிறது என்று இன்னொரு கவிஞன் சொல்கிறான்.

நேற்று இன்று நாளையென்றில்லாத வெளியில் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அஸ்தினபுரம். கொடிகளைப் பறக்கவிடும் காற்றைப்போல கதைகளை உயிர்பெறச்செய்யும் காலத்தை வாழ்த்துவோம் என்கிறான் சொல்கடந்து புன்னகையைச் சென்றடைந்த முதுசூதன். அவன் மங்கிய விழிகளிலும் சுருக்கங்கள் விரியும் புன்னகையிலும் தெய்வங்கள் தோன்றுகின்றன. தெய்வங்களே, நீங்கள் மானுடரை நோக்கி சிரிப்பதென்ன? உங்கள் எண்ணச்சுழலில் நீந்தித் திளைத்து மூழ்கும் எளிய உயிர்களை ஒருநாளும் நீங்கள் அறியப்போவதில்லை.

சூதரே, மாகதரே, அவ்வண்ணமென்றால் இளநாகன் சென்ற இடம் எது? அவன் கண்ட அஸ்தினபுரி எது? பாரதவர்ஷத்தில் நூற்றியொரு அஸ்தினபுரிகள் உள்ளன என்கிறது சூதர்சொல். ஒன்றிலிருந்து இன்னொன்று பிறக்கிறது. யுகங்களுக்கொரு அஸ்தினபுரி பிறந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு சட்டையையும் கழற்றிவிட்டு அஸ்தினபுரி நெளிந்து சென்றுகொண்டிருக்கிறது. உதிர்க்கப்பட்டவை காலத்தைச் சுமந்தபடி வானை நோக்கி கிடக்கின்றன.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

சந்திரகுலத்து அரசன் சுகேதுவின் வழிவந்த பிருஹத்‌ஷத்ரனின் மைந்தன் அமைத்த அஸ்தினபுரிக்கு அப்பால் காட்டுமரங்களைச் சூடிக் கிடக்கிறது இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையின் மைந்தன் ஹஸ்தி கட்டிய அஸ்தினபுரம். நூறுமடங்கு பெரிய அந்நகரத்துக்கு அப்பால் வேர்களால் கவ்வப்பட்டு விரிந்திருக்கும் அஸ்தினபுரம் அதைவிட நூறுமடங்கு பெரியது. அதை அமைத்தவர்கள் காசியபரின் மைந்தர்களான ஹஸ்திபதன் ஹஸ்திபிண்டன் ஹஸ்திபத்ரன் என்னும் மூன்று பெருநாகங்கள்.

அதற்கும் அப்பால் கிடக்கிறது ஹஸ்திசோமையின் சேற்றுப்படுகைக்குள் தெய்வங்கள் அமைத்த மேலும் நூறுமடங்கு பெரிய சோமநகரம் என்னும் அஸ்தினபுரம். அதற்கும் ஆழத்தில் உள்ளது ஹஸ்திமுகன் என்னும் பாதாளத்து அரசன் அமைத்த அஸ்தினபுரம் என்னும் பெருநகரம். அதன் முற்றமளவுக்குத்தான் சோமநகரம் பெரிது. சூதர்களே, அதற்கும் அடியில் துயிலும் அஸ்தினபுரங்கள் எண்ணற்றவை.

அஸ்தினபுரம் என்பது ஒளிவிடும் நீர்த்துளி. ஓர் இலைநுனியில் ததும்பி சுடர்ந்து மண்வண்ணங்களும் வான்நீலமும் காட்டி திரண்டு திரண்டு திரண்டு முழுமையின் கணத்தில் உதிர்ந்து அடுத்த இலைமேல் விழுகிறது. அதற்கடுத்த இலை அதன் கீழே கைநீட்டி நின்றிருக்கிறது. அஸ்தினபுரி ஒரு துளி விண். ஒரு துளி கடல். ஒரு துளி பிரம்மம். அச்சொல் என்றும் வாழ்க!

சூதரே, மாகதரே, ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் சென்ற அஸ்தினபுரி எது? அதை பிறர் சென்றடையமுடியாது. ஒவ்வொருவரும் அவரவருக்குரிய அஸ்தினபுரியையே சென்றடைகின்றனர். செல்லும் வழியில் சிறகுதிர்ந்து விழுபவரும் அதிலேயே உதிர்கின்றனர். செல்லாது கருவறையிலேயே தங்கிவிட்டவர்களும் அதையே உணர்கின்றனர்.

சூதரே, மாகதரே, காமகுரோதமோகங்களின் பெருவெளியை வாழ்த்துவோம்! தெய்வங்கள் ஆடும் சதுரங்கக் களத்தை வாழ்த்துவோம். மானுடரின் அழியாப்பெருங்கனவை வாழ்த்துவோம். ஆம், அவ்வாறே ஆகுக!

[வண்ணக்கடல் முழுமை ]

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைவிலக்கப்பட்டவர்கள்
அடுத்த கட்டுரைவண்ணக்கடல் நிறைவு