‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67

பகுதி பத்து : மண்நகரம்

[ 1 ]

இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச் சொன்னார். “சிராவண மாதம் திருவோண நட்சத்திரத்தில் நூற்றெட்டு மலைக்குடிகளும் கூடும் அவ்விழாவில் நூற்றெட்டு தொல்குடிகளும் ஒற்றை உடலாக ஆகின்றன. இளையவர்களிடம் விளையாட அசுர கணத்து மூதாதையர் அனைவரும் உருக்கொண்டு எழுந்து வருவார்கள்” என்றார்.

“மூதாதையரா?” என்று இளநாகன் கேட்டான். “ஆம், அது தெய்வங்கள் கூடும் விழா. நிஷாதர்களின் கதைகளின்படி சென்ற யுகத்தில் சர்மாவதியில் பெருவெள்ளம் வந்து வடிந்தபின் வருடத்தில் ஒருநாள் அங்கே தெய்வங்கள் மட்டுமே கூடினர். அன்று அவர்களைப் பார்ப்பதற்கு மலர்கள் விழிகளாக விரிந்த மரங்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. பின்னர் குலமூத்தாரும் அன்னையரும் ஏற்கப்பட்டனர். அன்னையர் இளையோரையும் ஒப்புக்கொண்டனர். இன்று நிஷாதர்களின் அத்தனை இளையோரும் தங்கள் தோழியரைக் கண்டுகொள்ளும் விழா அது” என்றார் பூரணர்.

“பாண்டியநாட்டிலும் சோழநாட்டிலும் இவ்விழாவை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள் என்று கேட்டிருக்கிறேன்” என்றார் பூரணர். “ஆம், பெருந்தென்னகத்து நதிகளில் ஆடியில் மழைபெய்து புதுநீர் பெருகி வருவதை ஊர்கூடிக் கொண்டாடுகிறார்கள். பூவாடை அணிந்து சந்தனச்சேறு பூசி இளைஞர்களும் கன்னியரும் புதுப்புனலாடுவார்கள். ஆற்றங்கரைகளில் அமர்ந்து ஆறுவகை அன்னம் சமைத்து உண்டு ஆடலும் பாடலும் கண்டு மகிழ்வார்கள். ஆனால் மலைச்சேரநாட்டு பேராறுகளில் ஆடிக்கு முன்னரே நீரெழுந்துவிடும். மலைச்சேறுடன் பெருநீர் கொந்தளித்தோடும். அந்நதிகளில் எவரும் நீராடவும் முடிவதில்லை. ஆகவே அந்தப் புதுப்புனல் வடிந்து ஆறுகளின் கரைகளில் புதுமணல் விரியும் ஆவணிமாதத்தை அங்கே புதுமணல்காணும் பெருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்” என்றான் இளநாகன்.

பூரணரும் இளநாகனும் மிருத்திகாவதியை அடைந்து அங்கே பன்னிருநாட்கள் தங்கியிருந்தனர். நான்குவிரல்கள் கொண்டு வில்குலைத்து நாணேற்றி அம்புகளை விண்ணில் நிறைக்கும் கருடகுலத்தவரின் திறன் கண்டு “இம்மண்ணில் இவர்களுக்கு நிகராக வில்லாளிகளே இல்லை!” என்று வியந்தான் இளநாகன். “ஆம், இன்று இம்மண்ணில் எவரும் மிருத்திகாவதி என்றால் வெல்லமுடியாத வில்லாளிகளின் நிலமென்றே அறிகிறார்கள். பிறர் வில்லை அறிகிறார்கள். வில்மூதாதையான ஏகலவ்யனை வில்லே அறிந்தது” என்றார் பூரணர்.

மிருத்திகாவதியின் துறையில் இருந்து கிளம்பி சேறுநுரைத்த ஆற்றைக்கடந்து சூக்திமதிக்கரையின் காடுகளில் அமைந்த வால்மீக நாட்டை அடைந்தனர். ஆதிகாவியத்தை இயற்றிய வால்மீகியின் குலத்தவரின் நாடு அது என்றார் பூரணர். கருடனின் மைந்தனாகிய வால்மீகியில் இருந்து தோன்றிய அந்த மலைவேடர்க்குலம் செம்பருந்தை தங்கள் குலமுத்திரையாகக் கொண்டிருந்தது. ஆதிகவியின் குலத்தவரான மலைவேடர்களால் ஆளப்பட்ட சித்ராவதி என்னும் மலையூரில் தங்கியிருந்த போது பூரணர் நோயுற்றார். காலையில் தன் குடிலில் எழுந்த இளநாகன் அருகே அவர் உடல் துள்ளி நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர் உடலைத் தொட்டபோது கம்பிளிப்போர்வைக்குள் வெம்மை நிறைந்திருந்தது.

“இன்று காலை ஒரு கனவுகண்டேன்” என்றார் பூரணர். “இனிய கனவு. இளமைமுதலே என் கனவில் வருபவை வெண்மேகங்கள். சிறகுகள் விரித்து அவை பறந்து வருவதைக் கண்டிருக்கிறேன். யானைகள் போல திரண்டு நிற்பதையும் பனிமலைமுடிகள் போல விரிந்திருப்பதையும் கண்டிருக்கிறேன். இன்று அவை அனைத்துக்கும் கண்கள் விரிந்திருப்பதைக் கண்டேன். நீலநிறவிழிகள். கருணை கொண்ட புன்னகையுடன் என்னை நோக்கின அவை” என்றார். “நான் மருத்துவரை அழைத்து வருகிறேன்” என இளநாகன் எழுந்தான். “இல்லை, என் பயணம் தொடங்கிவிட்டது. நீ தொடர்ந்து செல்” என்றார் பூரணர்.

“பூரணரே…” என ஏதோ சொல்ல வாயெடுத்தான் இளநாகன். “இனிய நினைவுகள். நான் தென்தமிழகத்து மூதூர் மதுரைக்கு அருகே ஒரு மலைப்பாதையில் கண்ட அழகிய விறலியை நேற்று நினைத்துக்கொண்டேன். துள்ளும் விழிகளும் மாறாப்புன்னகையும் கொண்டவள். அவள் இன்று எங்கோ என்னை எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது” என்ற பூரணர் நகைத்து “பெண்கள் காதலர்களை நினைப்பதே இல்லை. அவள் இந்நேரம் தன் மைந்தர்களை எண்ணிக்கொண்டிருப்பாள். காதலைப்போல கலையும் தன்மைகொண்டது மேகம் மட்டுமே” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டார்.

இளநாகன் ஓடிச்சென்று மருத்துவரை அழைத்துவரும்போது பூரணர் கண்களை மூடி புன்னகையுடன் படுத்திருந்தார். தெய்வச்சிலைகளில் மட்டுமே தெரியும் அப்புன்னகையைக் கண்டதுமே இளநாகன் புரிந்துகொண்டான். மருத்துவர் குனிந்து அவரைத் தொட்டுப்பார்த்துவிட்டு “கிளம்பிவிட்டார்” என்றார். இளநாகன் கனமான எதையோ தன்னுள் உணர்ந்தான். மருத்துவர் திரும்பி அவனை நோக்கி “தங்கள் தந்தைக்குரிய கடன்களை இங்கே சூக்திமதியில் செய்யலாம். மூதாதையரை முடிவிலிக்குக் கொண்டுசெல்லும் புண்ணியப்பெருக்கு அவள்”’ என்றார். “நான் அவர் மைந்தனல்ல” என்றான் இளநாகன். “அவ்வண்ணமெனில் மைந்தனாக உங்களை தர்ப்பையைத் தொட்டு அமைத்துக்கொள்ளுங்கள். நீர்க்கடன் செலுத்த எவருக்கும் உரிமை உண்டு” என்றார் மருத்துவர்.

பூரணருக்கு நீர்க்கடன் செலுத்தியபின் இளநாகன் காடுகள் வழியாக வடமேற்காகப் பயணம் செய்து வேத்ராவதியின் பெருக்கைக் கடந்து அடர்காடுகள் வழியாகச் சென்று சர்மாவதியின் சதுப்புச் சமவெளி நோக்கிச்சென்றான். அந்தப்பாதையில் கிருதகட்டம் என்னும் மலைக்கிராமத்தில் மிருண்மயரை சந்தித்தான். பிடரிமூடி கனத்துத் தொங்கும் கரிய சடைக்கற்றைகளும் அனல்போன்ற செவ்விழிகளும் வெண்பற்கள் ஒளிவிடும் கன்னங்கரிய முகமும் கொண்டிருந்த மிருண்மயர் தன்னை நிஷாதர்களின் குலக்கதைப்பாடகன் என்று அறிமுகம் செய்துகொண்டார். “இன்றுமாலை இங்கே என் மக்கள் கூடிய சிற்றவையில் நான் பாடவிருக்கிறேன். தெற்கே தமிழ்நிலத்துப் பாணன் ஒருவன் என்னைக் கேட்பதை எண்ணி என் மூதாதையர் மகிழ்வார்கள்” என்றார்.

அன்றிரவு கிருதகட்டத்தின் முன்றிலில் மரவுரிப்போர்வைகளைப் போர்த்தியபடி கூடிய நிஷாதர்கள் நடுவே அமர்ந்து தன் குறுமுழவை இருவிரல்களால் மீட்டி மிருண்மயர் பாட்டுடன் கதை சொன்னார். வெண்விழிகள் மலர்ந்த கருமுகங்களை ஏந்தி நிஷாதர்களின் குழந்தைகள் அதைக் கேட்டிருந்தனர். “என்றுமுள்ளது மண். மண்ணிலுறங்குகின்றன மூன்று விழைவுகள். இருத்தலெனும் விழைவு. கரும்பாறைகளின் அசைவின்மையாக, மலைச்சிகரங்களின் ஒலியின்மையாக, சமவெளிகளின் வெறுமையாக அதுவே வீற்றிருக்கிறது. அன்னை பூமியின் அழியா முதல்விழைவை வாழ்த்துவோம்” என்றார் மிருண்மயர்.

“அன்னை மண்ணின் இரண்டாம் விழைவு வளர்தல். அவ்விழைவே மண்ணுக்குள் புழுக்களாகியது. விதைகளுக்குள் உயிராகியது. ஆழ்நீரோட்டமாக ஊறிப்பரந்து நதிகளாக எழுந்து மண் நிறைத்தது. பாசிப்பூசணங்களாகவும், கொடிகளாகவும், செடிகளாகவும், மரங்களாகவும் மண்ணைச் சூழ்ந்தது. மீன்கள், பாம்புகள், நாய்கள், யானைகள் என உயிர்க்குலங்களாகப் பரந்தது. அன்னையின் மூன்றாம் விழைவு பறத்தல். காற்றில், அக்காற்றேற்றுத் துடிக்கும் இலைகளில், பறக்கும் விதைகளில், மிதக்கும் சிறகுகளில், உருமாறும் முகில்களில் வெளிப்படுகிறது அது. அவள் அழியாவிழைவுகள் வாழ்க!”

“அன்னையின் மூன்று விழைவுகளையும் கொண்டு உருவெடுத்தவன் மானுடன். இருத்தலும் வளர்தலும் பறத்தலும் அவன் இயல்புகளாயின. பறந்தவர் தேவர்கள். வளர்ந்தவர் அசுரர்கள். எஞ்சியவர்களை அன்னை தன் மடியில் அமரச்செய்து பேரன்புடன் தழுவி உச்சிமுகர்ந்து ‘அமர்க’ என்று சொன்னாள். நிஷீத என்று அவள் சொன்ன அச்சொற்களால் அவர்கள் நிஷாதர்கள் என்றறியப்பட்டனர். அழியாத நிஷாதர்குலம் வாழ்க! அவர்கள் என்றும் அமர்ந்திருக்கும் வளம் மிக்க அன்னையின் மடி வாழ்க!” என்று மிருண்மயர் சொன்னதும் கூடியிருந்தவர்கள் கைகளைத் தூக்கி “என்றும் வாழ்க!” என்று கூவினர்.

“நிஷாதர்களின் முதல்பேரரசர் காலகேயரை வாழ்த்துவோம். அவரது புகழ்மிக்க மைந்தர் குரோதஹந்தரை வாழ்த்துவோம். அவர்களின் வழிவந்த நிஷாதர்களின் பெருமன்னர் நிஷாதநரேசரின் பாதங்களை வணங்கும் நம் படைக்கலங்களை வணங்குவோம்” என்றதும் நிஷாதர்கள் படைக்கலங்களைத் தூக்கி பெருங்குரலெழுப்பினர். அதன்பின் பன்றியூனும் ஈச்சங்கள்ளும் தினையப்பமும் தேனும் கொண்ட உண்டாட்டு நிகழ்ந்தது. நிஷாதகுலத்து இளைஞர்களும் இளம்பெண்களும் ஊனும் கள்ளும் அருந்தி கையில் வேலும் கோலும் ஏந்தி இரவெல்லாம் நடனமிட்டனர்.

உண்டு மகிழ்ந்து நிலவை நோக்கி குளிர்காற்றில் படுத்திருக்கையில் இளநாகன் கேட்டான் “தங்கள் பெயரின் பொருள் என்ன மிருண்மயரே?” கனைத்துக்கொண்டு திரும்பிய மிருண்மயர் “மிருண்மயம் என்றால் மண்ணாலானது என்று பொருள். மானுடன் மண்ணில் முளைத்தவன், மண்ணாலானவன், மண்ணில் மறைபவன். மிருண்மயமாவதே மானுடர் அறியும் விடுதலை” என்றார். உரக்க நகைத்து “நீங்கள் விண்ணைக் கனவுகண்டு மண்ணில் அமிழ்கிறீர்கள். நாங்கள் மண்ணை அறிந்து மண்ணில் அடங்குகிறோம்” என்றார். மிருண்மயம் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் நெஞ்சில் குளிர்ந்த கற்பாறை ஒன்று தாக்கியதுபோன்ற ஓர் அதிர்வை இளநாகன் உணர்ந்தான்.

“என்ன?” என்றார் மிருண்மயர். “இல்லை, அச்சொல் என்னைத் தாக்கியது” என்றான் இளநாகன். “ஏன் என்று தெரியவில்லை. என் கைகால்கள் நடுங்குகின்றன. என் மெய்சிலிர்த்திருக்கிறது.” மிருண்மயர் ஒன்றும் சொல்லவில்லை. இளநாகன் “நான் அடைந்த வழிகாட்டிகளின் பெயர்களெல்லாம் நிரையாக என் முன் வருகின்றன. பெருங்காவியம் ஒன்றின் ஒற்றை வரி என” என்றான். மிருண்மயர் புன்னகையுடன் “அனைத்தையும் காவியமாக்காமல் உம்மால் மண்நிகழ முடியாது. நீர் பாணர்” என்றார்.

“நான் சர்மாவதிக்கரையில் இருக்கும் மிருத்திகாவதிக்குச் செல்வதாக இருக்கிறேன்” என்றான் இளநாகன். “ஆம், நானும் அங்குதான் செல்கிறேன். நானே உம்மை அழைத்துச்செல்கிறேன்” என்றார் மிருண்மயர். “மிருத்திகாவதி அழியாத பெருநகரம். அது மண்ணாலானது என்று அதற்குப்பொருள். முன்பு அசுரகுலத்து மகிஷராலும் பின்னர் நிஷாதகுலத்து நிர்பயராலும் ஆளப்பட்டது. இன்று பாரதவர்ஷத்தில் பன்னிரு மிருத்திகாவதிகள் உள்ளன. முதல்பெருநகர் அதுவே!”

மிருத்திகாவதி மலைக்கிராமங்களைப் போலன்றி மண்ணாலேயே கட்டப்பட்டிருந்தது. கூரைகளும் மண்பாளங்களால் ஆனவையாக இருந்தமையால் மண்ணே விழைவுகொண்டு குழைந்து எழுந்து ஒரு நகரானது போல தோற்றமளித்தது. மண் நிறம் கொண்ட மக்களனைவரும் மண்படிந்த மரவுரிகளே அணிந்திருந்தமையால் தொலைவிலிருந்து பார்க்கையில் மண்ணின் ஒரு பாவனை என்றே அந்நகரை கருதமுடிந்தது. நெடுந்தொலைவிலேயே நகரின் ஓசைகளும் மட்கிய மண்ணின் வாசனையும் எழுந்து வந்தடைந்தன.

நகரின் விலாவை ஒட்டிச்சென்றது சர்மாவதி. கங்கைவரை செல்லும் படகுகள் கிளம்பும் முதல் படகுத்துறையில் எடையற்ற சிறிய படகுகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு நாரில் கோக்கப்பட்ட மீன்களின் கொத்து போல ஆடிக்கொண்டிருந்தன. படகுத்துறையை ஒட்டி உயரமற்ற தன்வ மரங்களும் பாபுல மரங்களும் பரவிய பெரிய சந்தைவெளியும் அதன் வலப்பக்கம் பூமியன்னையின் களிமண்ணால் ஆன சிற்றாலயமும் இருந்தன. “சர்மாவதி என்னும் பெயரே இந்நதியில் ஓடும் தோணிகள் கொண்டுசெல்லும் தோலாலும் மரவுரியாலும் அமைந்தது” என்றார் மிருண்மயர்.

“இதன் ஊற்றுமுகத்தில் இருக்கும் ஹேகயநாடும் அவந்தியும் எல்லாம் ஆயர்களின் அரசுகள். அங்கிருந்து வரும் மாட்டின் தோல்களும் மலையிறங்கி வரும் மரத்தின் பட்டைகளும் இங்குதான் பதப்படுத்தப்படுகின்றன. ஆகவேதான் இந்த ஆறு சர்மாவதி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரம் படகுகள் தோல்பொதிகளுடன் சர்மாவதி வழியாக கங்கையைச் சென்றடைகின்றன. நிஷாதநாடு முழுக்க பெருந்தொழிலாக இருப்பது மரவுரியாடை அமைத்தலே. சர்மாவதியின் இருகரைகளிலும் நூற்றுக்கணக்கான சிற்றூர்களின் படித்துறைகளில் இருந்து படகுகள் மரவுரிப் பொதிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன” மிருண்மயர் சொன்னார்.

செல்லும் வழியெங்கும் சிறிய நீர்க்குட்டைகளில் காட்டுமரங்களில் இருந்து உரித்தெடுத்துக்கொண்டு வந்த பட்டைகளை ஊறப்போட்டிருந்தனர். செந்நிறக்குருதிக்குளங்களைப் போலிருந்த குட்டைகளைச் சுற்றி காகங்கள் கரைந்து எழுந்து சிறகடித்துக்கொண்டிருந்தன. மரவுரிகளை தலைச்சுமையாக ஏற்றிக்கொண்ட மலைமக்கள் மலைமடிப்புகளில் சுழன்று இறங்கும் கற்பாதை வழியாக யானைவிலாவில் ஊரும் உண்ணிகள் என வந்துகொண்டிருந்ததை இளநாகன் கண்டான். அவர்களின் சுமைகளில் இருந்து உதிர்ந்த மரப்பட்டைகள் மட்கிப் படிந்த பாதையெங்கும் தைலமணம் நிறைந்திருந்தது.

அழுகிய மரப்பட்டைகளை கோல்கொண்டு தள்ளி மேலெடுத்து அவற்றை நீர் உலர நிழலில் விரித்துப் போட்டிருந்தனர். சிறுகுடில்களின் முன்னால் தோள்திரண்ட ஆண்கள் அமர்ந்து பட்டைகளை கல்பீடங்களில் வைத்து உழலைத்தடிகளால் அடித்துத் துவைத்து குவித்தனர். அவற்றை பெண்களும் சிறுவர்களும் எடுத்துச்சென்று மரப்பீடத்தில் இட்டு இரும்புச்சீப்பால் சீவிச்சீவி சக்கை களைந்து செந்நிற நூல்களாக ஆக்கிக் குவித்தனர். அவற்றை மீண்டும் அள்ளிவந்து நீரோடைகளில் போட்டு மிதித்து கழுவி எடுத்து உதறி நிழல்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளில் தொங்கவிட்டனர். இளஞ்செந்நிற மரவுரிநார்கள் குதிரை வால்முடி போல ஒளியுடன் காற்றிலாடின.

“மரவுரி நெய்தல்தான் மிருத்திகாவதியின் முதல்தொழில்” என்றார் மிருண்மயர். “கங்காவர்த்தம் முழுக்க அணியப்படும் மரவுரியில் பெரும்பகுதி நிஷாத நாட்டிலிருந்தே செல்கிறது. ஆயினும் இங்கே செல்வமேதும் சேரவில்லை. வணிக அறத்துடன் மன்னனின் மறமும் இணையாமல் செல்வம் சேர்வதில்லை.” மரவுரியை நெய்யும் தறிகளின் ஓசை நிறைந்த சிறிய மண்வீடுகளைக் கடந்து அவர்கள் சென்றனர். “மிருத்திகாவதி அதோ தெரிகிறது” என்றார் மிருண்மயர். “எங்கே?” என்றான் இளநாகன். “அதோ” என்று அவர் சுட்டியபின்னரே மண்ணுடன் மண்ணாகத் தெரிந்த நகரை அவன் அறிந்தான்.

நெடுந்தொலைவிலேயே முழவின் ஓசை கேட்கத் தொடங்கியது. மிருத்திகாவதியை அணுகும் சாலைகளில் எருமைகள் பூட்டப்பட்ட வண்டிகள் சேற்றில் களகளாவென ஒலித்தபடி மெல்ல அசைந்துசெல்ல அவற்றில் நிறைந்திருந்த இளம்பெண்கள் கடந்துசெல்லும் ஒவ்வொரு வண்டியையும் நோக்கி கைகளை வீசி கூச்சலிட்டு சிரித்து வாழ்த்துரைத்தனர். முழங்கால்வரை புதையும் மழைச்சேறுமண்டிய அந்தச்சாலையில் எருமைகளன்றி பிற விலங்குகள் செல்லமுடியாது என்று இளநாகன் கண்டான். எருமைகள் இழுக்கும் வண்டிகளில் சக்கரங்களின் இடத்தில் மென்மரத்தாலான பெரிய உருளைகள் இருந்தமையால் அவை சேற்றில் மிதந்து உருண்டு சென்றன.

மிருத்திகாவதியை நெருங்கும்போது கூட்டம் கூடியபடியே வந்தது. நகரில் எழுந்த விழவொலி வானில் எழுந்து கேட்க அதைக்கேட்டு பாதைகளை நிறைத்துச் சென்றுகொண்டிருந்தவர்களும் கூச்சலிட்டனர். நகரத்துக்குள் நுழையும் வழிகளில் எல்லாம் சிறிய மூங்கில்தட்டிக்கூரையிடப்பட்ட கொட்டகைகளில் பயணிகளுக்கு இன்கூழ் கொடுத்துக்கொண்டிருந்தனர். நான்குவகை கிழங்குகளையும் மூன்றுவகை தானியமாவுகளையும் ஒன்றாகப்போட்டு வேகவைத்து வெல்லம் சேர்த்து காய்ச்சப்பட்ட கூழை கொதிக்கக் கொதிக்க அள்ளி கமுகுப்பாளை தொன்னைகளில் அளித்தனர். இளநாகன் முதலில் கிடைத்த கூழிலேயே வயிறு நிறைந்து “இனி நாளைக்கே உணவு” என்றான். மிருண்மயர் நகைத்தபடி “நான்குநாளுக்குத் தாங்கச்சொன்னால் வயிறு கேட்பதில்லையே” என்றார்.

மிருத்திகாவதியின் தெருக்களை அடைந்ததுமே வண்டிகளில் இருந்து குதித்த இளம்பெண்கள் கூவிச்சிரித்தபடி ஓடி பாதையோரத்து சிறுகுடில்களில் நுழைந்து உடைகளைக் கழற்றிவிட்டு மாந்தளிர்களும் ஈச்சைத்தளிர்களும் பலவகையான மலர்களுடன் சேர்த்து நெருக்கமாகக் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த பூவாடைகளை அணிந்துகொண்டனர். எங்கும் பூவாடை அணிந்த இளையோர் சிரித்துக்கூவியும் கைகளை அசைத்து நடனமிட்டுக்கொண்டும் சென்றனர். ஒருவரை ஒருவர் துரத்தி ஓடினர். சற்றுநேரத்திலேயே அவர்களின் களியாட்டத்துக்கான காரணமென்ன என்று இளநாகன் கண்டுகொண்டான். சாலையோரங்களில் சிறிய கலங்களில் ஃபாங்கத்தின் உலர்ந்த சருகுகளை அனலில் போட்டு புகைஎழுப்பிக்கொண்டிருந்தனர். நகர் முழுக்க பனிப்படலம்போல அந்தப்புகை நிறைந்து கனத்திருந்தது.

“இனிய புகை. தாய்ப்பாலின் நிறமும் இனிய ஊன்மணமும் கொண்டது” என்றார் மிருண்மயர். சற்றுநேரத்தில் இளநாகன் சிரிக்கத்தொடங்கினான். அவன் கால்கள் இறகுகளால் ஆனவைபோல காற்றை அளைந்தன. கைகளை விரித்தபோது சிறகுகள் போல காற்றை ஏற்று அவை அவனை மேலே தூக்கின. ஆனால் சூழ்ந்திருந்த காற்று குளிர்ந்த நீர் போல கனத்து அவன் உடலை அழுத்தியது. மூச்சுக்குள் நுழைந்து நெஞ்சுக்குள் பாறாங்கல் போல அமர்ந்திருந்தது. அவன் கைகளையும் கால்களையும் துழாவி முன்னகரவேண்டியிருந்தது. சூழ நிறைந்திருந்த அத்தனைபேரும் அதேபோல காற்றில் நீந்திக்கொண்டிருந்தனர். ஒலிகளுக்கும் அவர்கள் உதடுகளுக்கும் தொடர்பிருக்கவில்லை. அனைத்து ஒலிகளும் வானிலிருந்து மெல்லிய மழைச்சாரலாக கொட்டிக்கொண்டிருந்தன. அந்த மழைச்சாரலை கண்ணால் பார்க்கமுடிந்தது.

இளநாகன் அவனும் மலராடை அணிந்து சர்மாவதியின் கரையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனுக்கு யாரோ இன்கூழ் கொடுத்தார்கள். அவன் வாங்கி வாங்கி குடித்துக்கொண்டே இருந்தான் குடிக்கும்தோறும் பசி அதிகரித்துக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் உடம்பு முழுக்க சுரைக்காய்க்குடுவை போல வெற்றிடமாகி பசிப்பதுபோலவும் கூழை ஊற்றி அதை நிறைத்துவிடவேண்டும் என்றும் தோன்றியது. கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சிரித்துக்கொண்டு வண்ணமீன்கள் போல பூவாடைகள் அசைய பறந்து சென்றனர். முழவுகளை மீட்டியபடி சிலர் நடனமிட்டுச்செல்ல நீலநிறக்கொப்புளங்களாக முழவின் தாளம் அவர்களின் தலைக்குமேல் வெடித்து வெடித்து அழிந்தது.

பார்வையால் அந்த வெளியை துழாவியபடி ஆடி நின்றிருந்த இளநாகன் ஒரு கணத்தில் தன் உடல் அஞ்சி அதிர தெருவிலிருந்து சந்தைவெளி நோக்கி வந்த ஹிரண்யாக்‌ஷனைக் கண்டான். பொற்கதிர் விரியும் மாபெரும் மணிமுடியும் செம்பருந்துச் சிறகென விரிந்த அணிப்புயங்களும் சூடி மணிமாலைகளும் ஆரங்களும் பரவிய மார்புடன் தோள்வளையும் கங்கணங்களும் ஒளிவிட்ட கரிய கரங்களுடன் குருதிவழியும் வேங்கைவாய் திறந்து ‘ஏஏஏஏ!’ என்று கூவியபடி அவன் பாய்ந்து நடனமிட்டுச் சுழன்றாடி வந்துகொண்டிருக்க அவனுக்குப்பின்னால் முழவுகளும் கொம்புகளும் முரசுகளும் மீட்டியபடி ஒருகூட்டம் களிவெறி நடனமிட்டு வந்தது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

ஹிரண்யாக்‌ஷனின் விழிகள் இரண்டும் பொன்னால் ஆனவையாக இருந்தன. அவனுக்கு அப்பால் ஹிரண்யகசிபு செங்கனல் என எரியும் விழிகள் கொண்டிருந்தான். செம்மணிகள் சுடரும் முடியுடன் தோளில் கதாயுதத்தை ஏந்தி நடனமிட்டு வந்தான். அவனுக்குப்பின்னால் வெண்ணிற முடியும் வெண்சிறகுப் புயங்களுமாக பிரஹலாதன். தொடர்ந்து பச்சைநிற முடியும் பசுந்தளிராடையுமாக மண்மறைந்த மகாபலி. நீலநிறமுடியும் நீலம் எழுந்த ஆடையுமாக பாணாசுரன்.

சர்மாவதியை நெருங்கும்போது அங்கே நூற்றுக்கணக்கான அசுரர்களைக் கண்டு இளநாகன் நிலைமறந்து நின்றுவிட்டான். நூறு கரங்கள் கொண்ட துர்க்கமன். தழலெழுந்தது போல பிடரி சிலிர்த்த சிம்ஹிகன். முட்புதர்போல கருங்குழல் எழுந்த வராகன். அவனருகே பன்னிரு தலைகளுடன் நூற்றெட்டு பெருங்கரங்கள் விரித்து பெரும் சிலந்தியைப்போல வந்த சூரபதுமன். கூர் உகிர்கள் விரித்தாடிய தம்பி சிங்கமுகன், யானைமுகம் கொண்ட தாருகன், சுழன்றாடி வந்த அஜமுகி. தீப்பந்தமென தழலெழுந்தாட வந்த அக்னிமுகன். ஒளிவிடும் ஆடிகளில் சூரியனை அள்ளி அணிந்த பானுகோபன். விழியொளிர்ந்த தாராக்‌ஷன். தாமரை மாலை அணிந்த கமலாக்‌ஷன். மின்னலைப் பற்றியிருந்த வித்யூமாலி.

குகைவாய் விட்டெழும் புலிகள் போல அசுரர்கள் வந்துகொண்டே இருந்தனர். வெண்பற்கள் விரிந்த கவந்த வாய் திறந்த பகாசுரன், தழல் நின்றெரிந்த உள்ளங்கைகளை விரித்துச் சுழன்றாடிய பஸ்மாசுரன், இடையைச்சுற்றி முழவுகளைக் கட்டி அவற்றை முழக்கி நடமிட்டு வந்த சண்டாசுரன், மூன்றுயானைமுகங்கள் கொண்ட கஜாசுரன், எருமைத்தலைகொண்ட மகிஷன், பெரும்பாறைகளை தோளிலேற்றி பந்தாடிவந்த ஜடாசுரன், காக்கைச்சிறகுகளை முடியும் இறகுமாகச் சூடி கரிய நாசியுடன் வந்த காகாசுரன், வண்டின் ஒளிவண்ணங்களும் சிறகுகளும் கொண்ட மது, குருதி சொட்டும் நீள்நாக்குகளுடன் செந்நிற குடல்மாலைகள் அணிந்து ஆர்ப்பரித்துவந்த நரகாசுரன்.

குருதித்துளிகள் சொட்டிச்சிதற ஆடிவந்த ரக்தபீஜனை இளநாகன் கண்டான். விண்மீன்கள் ஒளிவிடும் மணிமுடியும் நீலப்பட்டாடையும் அணிந்த தாரகாசுரன் தொடர்ந்து வந்தார். ஆர்ப்பரித்து வேலேந்தி வந்தனர் சம்லாதனும் அனுஹ்லாதனும் சாகியும் பாஷ்கலனும் விரோசனனும். இணைந்து கைபிணைத்து சுழன்று வந்தனர் கும்பனும் நிகும்பனும். மகாகாளன், விப்ரசித்தி, சம்பரன், நமுசி, புலோமா, விஸ்ருதன், அசிலோமன், கேசி, துர்ஜயன், அயசிரஸ், அஸ்வசிரஸ், அஸ்வன், சங்கு, மகாபலன், கர்கன், மூர்த்தா, வேகவான், கேதுமான், சுவர்பானு, அஸ்வபதி, விருஷபர்வன், அசகன், அஸ்வக்ரீவன், சூக்‌ஷன், துகுண்டன், ஏகபாத், ஏகசக்ரன், விரூபாக்‌ஷன், ஹராகரன், சந்திரன், கபடன், பரன், சரபன், சலபன், சூரியன், சந்திரதமஸ் என் அவர்கள் பெருகி வந்தபடியே இருந்தனர்.

இறுதியில் ஐம்பது அசுரர்களால் தூக்கப்பட்ட விருத்திராசுரன் முதுமையில் சுருங்கிய கரிய முகமும் மண்ணைத் தொட்டிழைந்த நீள் சடைகளும் தலைக்குமேல் உயர்ந்த பெரும் சூலாயுதமும் கழுத்திலணிந்த மண்டையோட்டு மாலையுமாக வந்தார். அவருக்கு வலப்பக்கம் நீண்ட வெண்ணிறத் தாடிபறக்கும் சுக்ரர் வந்தார். இடப்பக்கம் அசுரசிற்பியான மயன் கரிய தாடியும் கையில் உளியும் ஏடுமாக வந்தார்.

விழித்துத் தெறித்த விழிகள். இளித்து விரிந்த வாய்க்குள் எழுந்த வெண்பற்கள். ஒளிரும் மணிமுடிகள். அணியாடைகள். அவர்கள் இசைக்கேற்ப ஆட தாளம் நீலமும் மஞ்சளும் சிவப்புமாக ஒளிவிடும் வண்ணங்களில் நீண்ட நாடாக்களைப்போல அவர்கள் நடுவே பறந்து சுழன்றாடியது. அவர்கள் நெருங்க நெருங்க இளநாகன் உடல் சிறுத்துக்கொண்டே சென்றது. அவன் மண்ணோடு மண்ணாக ஆகி வானை நோக்குவதுபோல அவர்களைப் பார்க்க அவர்களின் கால்கள் காட்டு அடிமரங்கள் போல அவனைச்சூழ்ந்தன. மேகங்களில் செல்பவர்கள் போல வண்ண உடைகள் பறந்தாட அவர்கள் கடந்து சென்றனர். இளநாகன் அஞ்சி உடலை ஒடுக்கிக் குறுகிக்கொண்டு கண்களை மூடி நடுங்கினான்.

அவனை மிருண்மயர் பிடித்து உலுக்கியபோது விழித்துக்கொண்டான். அவரை முதலில் அவன் அடையாளம் காணவில்லை. அவரது முகம் திரையில் வரையப்பட்ட சித்திரம் போல அசைந்தது. “பாணரே எழுங்கள்!” என்று அவர் அவனை உலுக்கினார். அவன் அவரது குரலை அடையாளம் கண்டதும் அவரை பாய்ந்து பிடித்துக்கொண்டு “சூதரே!” என்று கூவினான். உடனே அவன் வயிறு குமட்டி மேலெழுந்தது. அவன் கக்கி முடிப்பது வரை அவர் அவனை தாங்கியிருந்தார். பின்பு “நன்று… வந்து சற்று இன்நீர் அருந்துங்கள்…” என்றார்.

அவர் தோளைப்பற்றிக்கொண்டு நடந்து அங்கே பெரிய மரத்தொட்டியில் ஒருவன் பரிமாறிக்கொண்டிருந்த சுக்குபோட்ட தேன் கலந்த நீரை அருந்தியபோது கண்கள் சற்று தெளிவடைந்தன. “சூதரே, நான் அசுரர்களைக் கண்டேன்” என்றான் இளநாகன். “ஆம், அவர்கள் உடலின்மையில் இருந்து இன்று மீண்டெழுகிறார்கள்” என்றார் மிருண்மயர். இளநாகன் திரும்பி நோக்கியபோது அருகே சென்றுகொண்டிருந்த ஓர் அசுரவேடத்தைக் கண்டான். மென்மரத்தால் செய்யப்பட்டு பொன்வண்ணம் பூசப்பட்ட உயர்ந்த மணிமுடியும் மரத்தாலான நகைகளும் அணிந்து செந்நிறம் பூசப்பட்ட முகத்தில் பெரிய கண்களை வரைந்திருந்தான். பன்றிப்பல்லை வீரப்பல்லாக வாயில் பொருத்தி ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட நீண்ட நாக்கை தொங்கவிட்டிருந்தான். கமுகுப்பாளையாலும் மூங்கிலாலுமான பெரிய இடையாடையுடன் உயரமான மூங்கிலை காலாகக் கொண்டு தலைக்குமேல் எழுந்து கையில் நீண்ட வேலுடன் நடனமாடியபடி சென்றான்.

“மானுடன் தெய்வங்களை ஏந்துகிறான். சற்று நேரத்தில் அந்த தெய்வம் அவனை ஏந்திச்செல்கிறது” என்றார் மிருண்மயர். “அதோ செல்பவன் மானுட உடலேறி மண்காண வந்த நாகத்தலைகொண்ட குரோதவசன். அதோ வருணசபைவிட்டு வந்த தசாவரன். அதோ அகத்தியர் வயிற்றில் செரித்த வாதாபி. அதோ வான் நோக்கி காகளம் முழக்கும் துந்துபி. இன்று சர்மாவதியின் கரையில் அனைத்து அசுரமாவீரர்களும் மண்ணிறங்கிவிட்டிருக்கிறார்கள். இன்று அவர்களின் நாள். மண்ணின் வயிற்றில் இருந்து ஒளிச்சிறகுகள் கொண்டெழுகின்றன ஈசல்படைகள்.”

சேறுபரவிய சந்தைவெளியில் அவர்கள் ஓடினர். திரும்பும் திசையெங்கும் பேருருவ அசுரர்கள் நடனமிட்டுச்சென்றுகொண்டிருந்தனர். உயர்ந்து ஆடும் மணிமுடிகளைச்சூழ்ந்து பூவாடை அணிந்த இளையோர்.அனைவரும் அந்தத் தாளத்தால் இணைக்கப்பட்டு ஒற்றையுடலாக ஒற்றை உளமாக மாறிவிட்டிருந்தனர். அவர்கள் சர்மாவதி நதியை அடைந்ததும் தாளம் உச்சத்தை அடைந்து வெறிகொண்டெழுந்தது. புயல்புகுந்த காடுபோல எங்கு நோக்கினாலும் அசைவுகள் சுழன்றடித்தன. வண்ணங்கள் கொப்பளித்தன.

பூசகர்களில் ஒருவர் பெரிய மூங்கில் குழல் ஒன்றை ஊத ஆயிரக்கணக்கான தொண்டைகள் எழுப்பிய வாழ்த்தொலி காற்றை அதிரச்செய்தது. சர்மாவதிக்கரையில் நதியிலிருந்து அள்ளிய சேற்றை அள்ளிக்குவித்து தரித்ரி தேவியின் சிலை ஒன்றைச் செய்திருந்தனர். ஐந்து ஆள் உயரம் கொண்ட வண்டல்குவியலின் பெருங்கோளம் சூல்வயிறாக மண்ணில் அமர்ந்திருந்தது. வளைந்த பெருந்தொடைகள் நடுவே யோனிமுகம் எழுசுடர் வடிவில் செந்நிற வாய் திறந்திருக்க உள்ளிருந்து மகவொன்றின் தலை மட்டும் வெளிவந்திருந்தது. மென்மரத்தாலான பன்னிரு பெருங்கைகளில் கமண்டலமும் வாளும் கதையும் வில்லும் சூலமும் கேடயமும் பாசமும் அங்குசமும் வஜ்ராயுதமும் அன்னகலசமும் ஏந்தி அஞ்சலும் அருளும் காட்டி அன்னை அமர்ந்திருந்தாள்.

விழிமலர்ந்து இதழ்விரித்து அமர்ந்திருந்த அன்னையை நோக்கி கூவி ஆர்த்தபடி அணுகி அவள் பாதங்களில் தலையை வைத்தபின் சர்மாவதி நதியில் குதித்தார்கள் அசுரர்கள். ஒவ்வொரு அசுரராக நீரில் குதித்து மூழ்கி மறைந்தபின் விருத்திராசுரனும் குதித்து மூழ்கினான். பூவாடை அணிந்து நின்றவர்கள் அனைவரும் அன்னையை வணங்கியபின் நீரில் பாய்ந்து மூழ்கினர். தவளைக்கூட்டங்கள் நீரில் பாய்வதுபோல அவர்கள் நீரில் விழுந்துகொண்டே இருந்தனர்.

வேடங்களையும் பூவாடைகளையும் நீரிலேயே கழற்றி ஒழுக்கிவிட்டு அனைவரும் வெற்றுடலுடன் கலங்கிச்சென்ற நீரில் மூழ்கியும் எழுந்தும் நீந்தியும் திளைத்தனர். இளநாகன் ஓடிச்சென்று நீரில் விழுந்ததும்தான் நீர் குளிர்ந்தும் கனமாகவும் இருப்பதை உணர்ந்தான். மலையில் இருந்து வந்த கலங்கல் நீர் சந்தனக்குழம்பு போலிருந்தது. ஆனால் சேறு கோடையில் வெந்த மண் புதுமழையில் எழுப்பும் வாசம் கொண்டிருந்தது. மூழ்கி விழிதிறந்தபோது ஒளிவிடும் சருகுகள் தங்கத்தகடுகள் போல சுழன்று செல்வதை, குமிழிகள் பொற்குண்டுகளாக மிளிர்ந்து எழுவதைக் கண்டான். நீருக்குள் அனைத்து உடல்களும் பொற்சிலைகள் போலிருந்தன.

இளநாகன் மூச்சுவாங்க நீந்தி கரைசேர்ந்து சேற்றுப்பரப்பை அடைந்தான். அங்கே பொன்னிறச்சேற்றில் மெய்யுடல்களுடன் படுத்துப் புரண்டுகொண்டிருந்த உடல்கள் சேறு உயிர்கொண்டு உடல்கொண்டு எழுந்தவை போலிருந்தன. அவன் கால்தளர்ந்து விழுந்த இடத்தருகே இருந்த சேற்றுவடிவான பெண்ணுடல் அவனுடன் ஒட்டிக்கொண்டது. சேறு கையாகி அவனை அணைத்தது. சேறு தன் தோள்களாலும் தொடைகளாலும் இதழ்களாலும் யோனியாலும் அவனை அள்ளிக்கொண்டது.

“உன் பெயரென்ன?” என்று இளநாகன் கேட்டான். “அஸ்தினபுரத்தவளான என் பெயர் அவிலை” என்று அவள் சொன்னாள். இளநாகன் “அஸ்தினபுரியா? குருகுலத்தோர் ஆளும் நகரா?” என்றான். “இல்லை, அதைவிடத் தொன்மையான நகரம். அதை விட நூறுமடங்குப் பெரியது. விண்ணிலிருந்து விழுந்து உடைந்து காட்டை நிறைத்துப் பரவிக்கிடக்கிறது” என்று அவள் சொன்னாள்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 8
அடுத்த கட்டுரைதேர்வு – ஒரு கடிதம்