சர்மிளா ஸெய்யித்

எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித் எனக்கு வழங்கிய விரிவான நேர்காணலிது: சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்கும் அல்லது வலுவான காற்றடிக்கும் பக்கமாகச் சாயும் எழுத்துச் சந்தர்ப்பவாதியல்ல ஸர்மிளா ஸெய்யித். தனது கருத்துகளிற்காக மத அடிப்படைவாதிகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொண்டாலும், ஒளிவு மறைவற்ற தனது உரத்த குரலை இந்நேர்காணலில் நம்முன்னே வைக்கிறார் ஸர்மிளா ஸெய்யித்.

ஷோபா சக்தி

*

அன்புள்ள ஷோபாசக்தி

ஸர்மிளா ஸெய்யித்தின் பேட்டி வாசித்தேன். அரசியல் ரீதியான அவரது தெளிவும் துணிவும் பாராட்டுக்குரியது. அவரது கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன் [சிறகு முளைத்த பெண்] என்னை அவை பெரிதாகக் கவரவில்லை. இரு காரணங்களைச் சொல்லத் தோன்றுகிறது.

ஒன்று, சமகால அரசியல் சார்ந்து தன்னுடைய வாழ்க்கைவிசாரணைகளை வரையறுத்துக் கொள்ளும்போது இலக்கியத்தின் எல்லைகள் மிகமிகக் குறுகிவிடுகின்றன. எத்தனைபெரிய மேதையானாலும் சமகால அரசியலின் அனைத்துத் தளங்களையும் பார்த்துவிடமுடியாது. முற்றிலும் உணர்வலைகளுக்கு அப்பாற்பட்டு அவற்றை விசாரணை செய்யவும் முடியாது.

விளைவாக இலக்கியத்திற்கு இருந்தாகவேண்டிய சமநிலைத்தன்மையும் முழுமைநோக்கும் இல்லாமலாகிவிடுகிறது என்பது என் எண்ணம். இலக்கியம் ஏதோ ஒருவகையில் ஓர் ‘அகால’ வெளியில் நின்றுதான் பேசுகிறது என்பதை நான் என் வாசிப்பனுபவத்தில் இருந்து உறுதியாகவே கூறுவேன்.ஈழப்பிரச்சினையும், பிரபாகரனும் வெறும் வரலாறாக மாறி முற்றிலும் மறைந்தபின்னரும் ‘கொரில்லா’ எழுப்பும் வினாக்களும் விசாரணையும் இருந்துகொண்டிருக்கும் என அது வெளிவந்தபோது எழுதினேன். இப்போது அதை நீங்களே ஓரளவு உணர்ந்திருப்பீர்கள்.

இரண்டு, தன்னுடைய ‘தன்னிலையை’ ஓர் ஆசிரியர் எப்படி உணர்கிறார் என்பதும் இலக்கியத்தின் விரிவையும் வீச்சையும் தீர்மானிக்கிறது. ‘ஒடுக்கப்பட்ட பெண்’ என்பதுபோன்ற எளிய ‘ஸ்டீரியோடைப்’ அடையாளத்தைச் சார்ந்து தன் தன்னிலையை ஒரு படைப்பாளி வரையறைசெய்துகொள்வாரென்றால் அவரது படைப்பு எழுப்பும் வாழ்க்கை விசாரணை மிகமிகக் குறுகியதாக ஆகிவிடுகிறது. முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட இடங்களுக்கே சென்று சேர்கிறது. இதேதான் தலித், தொழிலாளி,மூன்றாமுலக குடிமகன் என எந்த அடையாளம் சார்ந்தும் சொல்லமுடியும்.

பெண் ஒடுக்கப்படுவதென்பது ஓர் உண்மையாக இருந்தாலும் படைப்பாளி தன்னுடைய தன்னிலையை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு விரிவதாகவே உருவகித்துக்கொள்வார் என நான் நினைக்கிறேன். அவர் வரலாற்றில் இருப்பவராக ,ஆகவே வரலாற்றின் அனைத்து சிக்கல்களுடனும் தன்னை எப்படியோ அடையாளப்படுத்திக்கொள்பவராக இருப்பார். ஆஷாபூர்ணாதேவியோ குர்அதுலைன் ஹைதரோ பெரும்படைப்பாளிகளாக ஆவது அந்த விரிவினால்தான். ஆஷா எழுதியதும் பெண்களை ஒடுக்குவதைப்பற்றியே.

இது எந்த ஒரு படைப்பாளியும் உண்மையில் பரிசீலித்துபார்க்கவேண்டிய ஒரு தரப்பு. ஆனால் இப்படிச் சொல்வதையே உடனே ஆணாதிக்கத் திமிர், பெண்களை ஒடுக்குவது என மாநாடுகூட்டி தீர்மானம் போடக்கூடிய மனநிலையில் இருக்கிறார்கள் நம் பெண்கள். அதுதான் பரிதாபகரமானது

‘தமிழகம் போல பெண்களின் ஒற்றுமை இலங்கையில் இல்லை’ என்று ஸர்மிளா ஸெய்யித் சொல்கிறார். நல்லதுதான். தனித்துநிற்கும் நிமிர்வே இலக்கியவாதியை உருவாக்குகிறதென நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைதலைகொடுத்தல்
அடுத்த கட்டுரைகொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி?