தமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு

நண்பர்களே,

ஒரு காலகட்டத்தின் சமூக, அரசியல், பண்பாட்டின் சிகர முகமாகவே இலக்கியம் திரண்டு வருகிறது.

இலக்கிய காலக்கட்டம், இரண்டாக, பண்டைய காலக்கட்ட இலக்கியம். மற்றும் நவீனக் காலக்கட்ட இலக்கியம் என்று பொதுவாக வகுக்கப்படுகிறது.

பண்டைய காலக்கட்டத்தின் முதல் இலக்கிய வகைமையாக நமக்கு கிடைப்பது சங்க இலக்கியங்கள். தமிழ்மண்ணில் ஐவகை நிலங்களின் குடிகள் கூடி, சிறிய சிறிய அரசுகள் உருவாகும் காலச்சூழலின் பின்னணியில் திரண்டு வந்தவை சங்க இலக்கியங்கள். இவற்றின் தத்துவப் பின்புலமாக. அகம் புறம் எனும் இயற்கை நோக்கு அமையப்பெறுகிறது.


இந்தக் காலக்கட்ட இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என வகுக்கப் படுகிறது. சங்க இலக்கியங்கள் துவக்ககால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள்.

இடைக்கால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள், [சங்கம் மருவிய காலம் என்றும் இக்காலக்கட்டம் அழைக்கப்படுகிறது] சிலப்பதிகாரம் முதல் துவங்குகிறது. ‘அறம் பிழைத்தோருக்கு கூற்றாகும்’ என்று அடைமொழி பெறும் சிலப்பதிகாரத்தின் பின்புல சமூக சூழலாக, மூவேந்தரின் முடி ஆட்சி காலம் அமையப்பெறுகிறது.

பின் களப்பிரர் காலம். அரசு ஆட்சி அமைப்புகள் மாறி,சமூக இணைவுக்கு அகிம்சையை முன்னெடுத்த மதங்கள், வலியுறுத்திய அற விழுமியங்களின் பின்புலத்தில் உருவாகி வந்த திருக்குறள் போன்றவை இக் காலக்கட்டம் சார்ந்தவை.

பிற்கால செவ்வியல் காலக்கட்ட இலக்கியம், தமிழ் நிலத்தில் பேரரசுகள் நிலைபெற்றுவிட்ட பின்னணியில் திரண்டு வந்த கம்ப ராமாயணம் என்ற ‘அறத்தின் மூர்த்தியான’ பிரதியை தங்கள் சிகரமுடியாகக் கொண்டு நிலைபெற்றவை.

இந்த மூன்று காலக்கட்டங்களையும் சேர்ந்த இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என்று வழங்கப்படுகிறது.

1577 ஆண்டில் புத்ததக வடிவில் தயாரான தமிழின் முதல் நூல். தம்பிரான் வணக்கம். அச்சு ஊடகம் பரவலாக வழக்குக்கு வந்த ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது முதல், சங்க இலக்கியம் துவங்கி, சிற்றிலக்கியங்கள் வரை நூல்வடிவம் பெறுகிறது. அச்சு வடிவின் வருகையால், குருகுல கல்வி முறை பின்னகர்ந்து, புதிய கல்விமுறை மேலெழுந்து வருகிறது. முதல் தலைமுறை கல்வி அடைந்தவர்களை நோக்கி, மேலை நாட்டிலிருந்து துப்பறியும் கதைகள் துவங்கி, பாலியல் கதைகள் வரை வந்து சேர்க்கிறது.

வெகுஜன வாசிப்பு துவங்கிய அதே காலத்தில் தீவிர இலக்கியத்தின் முகமும் உருவாகி வருகிறது. வங்கத்தில் நாவல் முதல் சிறுகதை வரை, இலக்கிய உருவம் அடைந்த மாற்றமும், மொழிபெயர்ப்பு நூல்களும் தமிழில் வருகிறது. தீவிர இலக்கியத்தின் தோற்றுமுகமாக பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் ஆகிய நூல்கள் அமைகின்றன. அச்சு ஊடகத்தின் பெருக்கம் வழியே, அறிவியல் பார்வையும், தனிநபர்நோக்கும்,ஜனநாயகத்தை நோக்கிய, லட்சிய வாதமும் கூடிய நவீன காலக்கட்டம் துவங்குகிறது. சுப்ரமணியமணிய பாரதியை முன்னோடியாகக் கொண்டு துவங்கும் நவீன காலக்கட்டம் வரையிலான இலக்கிய காலக்கட்டம் ‘கற்பனாவாதக் காலக்கட்டம்’என வழங்கப் படுகிறது.

நவீன இலக்கியத்தின் துவக்கம் பாரதியாரில் துவங்கி, புதுமைப்பித்தனில் வேகம் பெறுகிறது. தனிநபர் வாதமும், பகுத்தறியும் நோக்கும், மதத்தின் மீதான, பழமை மீதான விமர்சனமும் என உலகப் போர்களின் பின்னணியில், உலகம் மொத்தமும் உருவாகி வந்த நெருக்கடி இக் காலக்கட்ட இலக்கியத்தின் உள்ளுறையை வடிவமைக்கிறது.

இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகான தேக்க நிலையின் சமூக சூழலின் பகுதியாக, லட்சியவாதம் பின்னகர்ந்து நவீனத்த் துவம் அதன் சிகரத்தை அடைகிறது. புதுமைப்பித்தனில் வேகம் கொள்ளும் நவீன காலக்கட்ட இலக்கியம், அசோகமித்திரன், மற்றும் சுந்தர ராமசாமியில் உச்சம் பெறுகிறது. பாரதி துவங்கி, அசோகமித்திரன் வரையிலான இக் காலக்கட்டம். நவீனத்துவ காலக்கட்டம் எனப்படுகிறது.

நவீனத்துவம் முன்னெடுத்த தனிநபர் வாதம், அதன் தத்துவ அடிப்படையில் அதிகாரத்தை கட்டமைக்கும் மையம் கொண்டது. அதிகாரம் தன்னளவில் ‘விளிம்புகளை’ ஒடுக்குவது. எனவே இதன் முரண் இயக்கமாக எழுந்து வந்த அடுத்த காலக்கட்ட இலக்கியம், மையம் மறுத்து, விளிம்புகளை பரிசீலனைக்கு கொண்டுவந்து, ஒற்றை அறம் என்ற ஒன்றினை, மறுத்து பன்முகம் எனும் நோக்கை முன்னெடுத்தது. இதன் விளைவாக, தலித் இலக்கியம் எனும் வகைமை மேலெழுந்து வந்தது.

உலகெங்கும் மொழி இயலில் நிகழ்ந்த மாற்றம், தமிழுக்கும் வந்து நவீன இலக்கியத்தில் அதன், மொழி நடையில், வடிவத்தில், உள்ளடக்கத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. தொன்னூறுகளில் துவங்கி இரண்டாயிரத்தில் உச்சம் கொண்ட இலக்கியத்தின் இக் காலம், பின் நவீனத்துவ காலம் என அழைக்கப்படுகிறது.

செவ்வியல் காலக்கட்டம், கர்ப்பனாவதக் காலக்கட்டம், நவீன காலக்கட்டம், பின்நவீனத்துவ காகக்கட்டம் என்று தமிழ் இலக்கியத்தின் காலக்கட்ட வளர்ச்சிப் படிநிலைகள் இவை.

நன்றி.

[ஊட்டி சந்திப்பு 2014-இல் கிருஷ்ணப்பிரபா கட்டுரைக்கு எதிர்வினையாக பேசியது]

முந்தைய கட்டுரைஊட்டி சந்திப்பு – 2014 [2]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88