வசைப்புரட்சி

ஜெயமோகன் எனும் பிழைப்புவாதி..

உள்ளூர் சிண்டிகேட் வியாபாரிகளுக்கு எதிராக ரிலயன்சுக்கு விளக்குப் பிடிப்பவர் இப்போது.

நாளை பதிப்புத் துறையில் அந்நிய முதலீடு வந்து சேரும்.. அய்யாவின் புத்தகத்தைப் போட அங்கேயும் போய் நக்கிப் பிழைப்பார்.

உள்ளூர் பதிப்பகத்தார் எழுத்தாளருக்கு தரும் ராயல்டி கொஞ்சம் கூட இரக்கமில்லாதது.. நியூயார்க் புக் செல்லர்ஸ்தான் நல்லாத் தாரான்.. அப்படின்னுட்டு சரோஜாதேவி கூட எழுதித்தள்ளி தனது எலக்கிய அனுபூதியை அனுபவிப்பாராக்கும்.

அய்யா இப்போது வி.ஆர்.ஏஸ். வாங்கிவிட்டு மீராஜாஸ்மினின் முந்தானையைப் பிடித்தபடி கோடம்பாக்கத்தில் வலம் வர முனைபவர். மீரா கொள்ளை அழகு.. அவளைவிட திருச்சூரில் இருக்கும் மலையாளக்குட்டிகள் இன்னம் தூக்கலான அழகு.. இதை எல்லாம் மாமா ஜெயமோகன் சொன்னதுதானுங்க..

இதே நிலை.. அந்நிய முதலீடாக வார்னர் பிரதர்சும், ரிலயன்சும் இணைந்து கோலிவுட்டை ஆட்கொள்ளும்போது என்னவாகி இருக்கும்.. வார்னர் பிரதர்சின் கத எலகாவிலோ, அங்குள்ள கதாநாயகர்களின் பஞ்ச் டயலாக் எழுதுபவராகவோ மாறி ”ஷங்கர் சாரை விட சாக்கி சான் சார்தான் நல்லாப் பணம் தர்ரார்” ன்னு உளறிக்கிட்டுருக்கும் ஜெய்மோகன் எனும் ஆர் எஸ் எஸ் எடுபிடி.

மைனர் கெட்டால் மாமா கதைதான் …

*****************

மிகச்சரியான வார்த்தை பிழைப்புவாதி. சுரண்டினால்தான் பிழைக்க முடியும் என்பது தற்போதைய சமூகத்தின் நியதி எனும் போது எவனும் நியாயவான் கிடையாது. ஆயினும் , நீ என்ன அநீதியை காட்டி எந்த அநீதியை நியாயப்படுத்துகிறாய் என்பதில்தான் உன்னுடைய மொள்ளமாறித்தனம் வெளிவருகிறது. புரட்சிக்காரனுக்கும், பிழைப்புவாதிக்கும் ஆன வித்தியாசம் இங்குதான் ஏற்படுகிறது . புரட்சிக்காரனும் கூட உழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டப்படும் உபரியில்தான் உயிர்வாழ்கிறான் ஆனால் அந்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அவன் போராடுகிறான். அவன் எப்போதுமே அநீதிகளின் ஊற்றுமூலம் எதுவோ அதை எதிர்க்கிறான். பிழைப்புவாதியோ இந்த சமூகம் ஒருவனை அடித்து இன்னொருவன் வாழ்வதை முன்னிறுத்தி சுரண்டலை நியாயப்படுத்துவதுடன், அநீதிகளுக்கெல்லாம் எது பிறப்பிடமோ அதையே தீர்வு என்றும் உண்மையானது என்றும் சரியானது என்றும் பேசி ஊரை ஏமாற்றுகிறான்.

இந்தியாவில் விவசாயிகளை சுரண்டாதவன் யார்? வளப்பமாக எழுதும் ஜெயமோகன் விவசாயிக்கு நியாய விலை கொடுக்க விரும்பினால் அவர் சாப்பிடும் தோசையின் விலை ஆகாசத்தில் இருக்கும்(ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!). ஏனேனில் விவசாய இடு பொருட்களின் விலை கடந்த சில வருடங்களில் 300 மடங்கு விலையேறீவிட்டதால் விவசாய உற்பத்தி செலவும் பல மடங்கு அதிகமாகிவிட்டது. இதற்க்கு காரணம் சில்லறை வியாபாரிகள் இல்லை, மாறாக இவர் விதந்தோம்பும் ரிலையன்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு தரகு கம்பேனிகள்தான் விவசாய உற்பத்தி செலவு அதிகமாக காரணம். இந்தியா எனும் அடிமை நாட்டில், சுரண்டல் சமூகத்தின் கடைகோடியில் இருந்து சுரண்டப்படுபவன் தான் விவசாயியும் , தொழிலாளியும், அவனுக்கு அடுத்த படியில் வைத்து சுரண்டப்படுபவன் சில்லறை வியாபாரி இவர்கள் அனைவருக்கும் மேலே இருந்து சுரண்டுபவன் இந்த ரிலையன்ஸ் உள்ளிட்ட வகையாறாக்கள்தான்.

அண்ணன் தம்பிக்குள் இருக்கும் சண்டையை காரணம் காட்டி குடும்பத்தையே கூட்டிக் கொடுப்பதை நியாயப்படுத்துகிறார் இந்த மாமா மேதை ஜெயமோகன். சரிதான்.. பிழைப்புவாதி ஆயிற்றே … ஆளும் வர்க்கத்தின் அத்தனை அயோக்கியத்தனத்திற்க்கும் தார்மீகரீதியான வலு சேர்க்கும் தர்க்கங்களை பேசுவதற்க்குத்தானே இவர்களது மண்டை வீங்கிய அறிவு நாணயமற்ற செருக்கு பயன்படுகிறது.

அறிவுச்செல்வன்

***************
தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு

சமீப காலமாகமாகத் தான் உங்களைப் பற்றி தெரியும். எப்படியென்றால் “திலகம் – தொப்பி” குறித்த உங்களின் விமர்சனம் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியதும் கனிமொழி அவர்கள் உங்களை மனநோயாளி என்று குறிப்பிட்டு ஒரு கூட்டத்தில் பேசியதில் இருந்தும் உங்களை அறிந்து கொள்ள உங்கள் இணையத்தளத்திற்கு வந்தேன்.

ஆளாளுக்கு நாகரிகமாக மனநோயாளி என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கிறோம். உங்களுக்கு தோழர் ஏகலைவன் மனநோயாளியாக தெரிகிறார். கனிமொழிக்கு நீங்கள் மனநோயாளியாக தெரிகிறீர்கள். கனிமொழி வேறு சிலருக்கு மனநோயாளியாக தெரிவார். இப்படித்தான் நிறைய இலக்கிய மனநோயாளிகளும், அரசியல் மனநோயாளிகளும், ஆன்மீக மனநோயாளிகளும், சாதாரண பொது மக்களிலும் மனநோயாளிகள் இருக்கிறார்கள். ஆனால் பகுத்தறிந்தவன் மனநோயாளியாக இருக்க முடியாது என்பதையாவது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படியானால் பகுத்தறிவாதியோடவாவது விவாதிக்க முடியுமா?

ஆமாம் எனில் தோழர் ஏகலைவன் ஒரு “பகுத்தறிவு”வாதி தான். அந்த பகுத்தறிவுவாதியோடு நான் விவாதித்து இருக்கின்றேன். நான் அறிந்த வரையில் ஏகலைவன் சமூக கோபங்கள் கொப்பளிக்க எழுதும் ஓர் இளைஞன். உங்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லையென்றால் நேரமில்லை என்று சொல்லி ஒதுங்கிப் போய் இருக்கலாமே! அது என்ன “மனநோய்க் கூறான வெறி” தோழர் ஏகலைவன் எதைக் குறித்து விவாதிக்க விரும்புகிறார் என்று அறியாமலேயே எப்படி உங்களால் பேச முடிகிறது?

“போடா! லுசு, பைத்தியம் என்பதற்கு பதில் நாகரிகமான “மனநோய்” என்னும் இலக்கியத்தனத்துடன் சொல்லிவிட்டால் நீங்கள் மேதாவி ஆகிவீடுவீர்களோ?
வலை பதிவர்கள் பைத்தியம், அவன் பைத்தியம், இவன் பைத்தியம் என்றால் என்னவென்பது? இங்கே யார் பைத்தியங்கள் என தீர்மானிக்கும் உரிமையை எடுத்துக் கொள்பவர்கள் தான் பைத்தியங்கள் என்று நான் சொல்லப்போனால் அந்த வார்த்தைக்கு நானே உதாரணமாகிவிடுவேன். அதனால் யார் இங்கே மனநோயாளிகள் என்று அலசுவதை விட்டு கருத்தோடு விவாதிப்போமே!

நீங்கள் தந்தை பெரியார் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள்…. சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்த கட்டுரையை சில நாட்களுக்கு முன்பு தான் படிக்க நேர்ந்தது. குறிப்பாக தந்தை பெரியார் குறித்த உங்களுடைய சிந்தனைகளும் கருத்துக்களையும் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமின்மையால் தள்ளி செல்கிறது. ஒருவேளை நானும் அப்படி வந்திருந்தால் உங்கள் வலைதளம் பயத்தை கொடுக்கிறது உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என்று ஒதுங்கி இருப்பீர்களோ?

தோழமையுடன்

தமிழச்சி
அன்புள்ள தமிழச்சி,

தங்கள் கடிதம்.
எவரும் எவருடனும் விவாதிக்கலாம். ஆனால் ஏன் விவாதிக்க வேண்டும்? தன் தரப்புபோலவே என் எதிரி தரப்பும் முக்கியமானது என்ற நம்பிக்கை, அந்த தரப்பின் குரல் என் கருத்துக்களை நான் மறுபரிச்சீலனைசெய்ய அல்லது குறைந்தபட்சம் வளர்த்துக்கொள்ள உதவும் என்ற நம்பிக்கை. அதன் அடிபப்டையிலேயே எந்த விவாதமும் நிகழ முடியும். எதிரிகளை பொறுக்கிகள் மொள்ளமாரிகள் என்று வசைபாடியபடி ஒரு விவாதத்தை நடத்துவதன் அபத்தம் எனக்கு நன்றாகவே தெரியும். இணையத்தில் போலிப்பெயர்களில் மாறி மாறி வசைபாடுவதும் வசைபாடப்பட ஏங்குவதும் ஒரு மனநோய்க்கூறுதான். இந்த இணையதளங்கள் வழியாக தெரியும் இந்த ஆசாமிகள் சமூகப்பொறுப்பு அல்லது சமூகக் கோபம் கொண்டவர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பிறரை குற்றம் சாட்டி அழுகப்புளிக்க வசைபாடுவதன் மூலமாக தங்களை ஒரு குறிப்பிட்டவகையாகக் காட்டிக்கொள்ள விரும்பும் போலிகள் மட்டுமே. கடந்த இருபது வருடங்களாக நான் தமிழ்ப்பண்பாடுலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தவகையினர் சென்ற காலங்களில் என்ன செய்தார்கள் அவர்களின் உண்மை என்ன, பலர் எப்படி எப்படி மாறினார்கள் என்பதெல்லாம் தொடர்ச்சியாக என் பார்வைக்கும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இரு உதாரணங்கள். இதேபோல அச்சு ஊடகங்கள் வழியாக வசைபொழிந்து கொண்டிருந்த இருவர். ஒருவர், பா.செயபிரகாசம் என்னும் சூரியதீபன். அதிதீவிர இடதுசாரிப்புரட்சியாளராக இருக்கும்போதே தமிழக அரசின் மக்கள்தொடர்புத்துறை உயரதிகாரியாக பணியாற்றி ‘வசதியாக’ ஓய்வுபெற்றார். அவரை நம்பி களத்திலிறங்கி தெருவில் நின்ற பல நண்பர்களை எனக்குத்தெரியும். அவர்களுக்காக நாங்கள் நிதி திரட்டியிருக்கிறோம். இன்னொருவர் கருணா மனோகரன். திடீரென்று இயக்கத்தை உதறிய இந்த புரட்சியாளர் சிலவருடங்களில் திருப்பூரின் பெரும் தொழிலதிபர் ஆனார். இந்திய அரசியலில் போலிகள் உண்டு. முழுப்போலிகள் இம்மாதிரி வசைப்புரட்சியாளர்கள்தான். ஒருவகையில் பரிதாபத்துக்கு உரியவர்களும்கூட.

ஜெயமோகன்

******************

அன்புள்ள வாசகர்களுக்கு,

எனக்கு வரும் கடிதங்களில் இந்த வசைப்புரட்சியாளர்களின் கடிதங்கள் ஒரு பிரதான வகை. இவர்களின் ஒரு மாதிரியை வாசகர்களுக்கு காட்டவேண்டுமென்பதற்கே இதை பிரசுரிக்கிறேன். இந்த வசைப்புரட்சியாளர்கள் மேல் கொள்ளும் விசித்திரமான சிலிர்ப்புக்கு ஆதாரமாக தமிழச்சியின் கடிதத்தையும்.மற்றபடி இந்த வகையினரிடம் பேசுவதில் உள்ள நேரவிரயத்தை நான் அறிவேன்.

இந்த ஆசாமிகள் தங்கள் கருத்தியல் எதிரிகளிடமும் தங்களுக்குள்ளேயும் ‘ விவாதிக்க ‘ பயன்படுத்தும் வசைகள் [இதற்கு புதிய கலாச்சாரம் கேடயம் முதல் ஒரு பெரிய மரபு உண்டு] குறித்து யாராவது சமூகவியல் ஆராய்ச்சி செய்தால் இவர்களை மேலும் நுட்பமாக புரிந்துகொள்ள முடியும். பெரும்பாலும் அடக்கப்பட்ட பாலுணர்வின் திரிபுநிலைகள் அவை. தஞ்சைப்பகுதி நிலவுடைமைச் சமூகத்தின் உருவாக்கங்கள். பத்துவருடங்கள் முன்புவரை நொண்டி, அலி, பொட்டை என்ற வசைகளை இவர்கள் ஒவ்வொரு எழுத்திலும் காண முடியும். இதோ விளக்குபிடித்தல், மாமா வேலை. [ஏன் தோழர் , பாலியல்தொழிலாளியும் ஒரு பாதிக்கபப்ட்டவர்தானே? விளக்குபிடிப்பவனும் ஒரு அப்பாவி தொழிலாளிதானே? அவனுக்கு உங்கள் புரட்சி உதவாதா? அந்த ‘பொலிடிகல் கரெக்ட் நெஸுக்கு எப்போது வருவீர்கள்?]

சென்ற முப்பது வருடங்களில் இவர்கள் எழுதித்தள்ளிய வசைக்குவியல்கள் தமிழ் பண்பாட்டுத்தளத்தில் உருவான பெரும் குப்பைமேடு. பலவகையான உளவியல் உள்ளோட்டங்கள் கொண்டவை அவை. ஒரு பெரும் சமூகவியல் பகுப்பாய்வுக்குரிய கச்சாப்பொருட்கள்.

*

இதுவே கடைசியான எதிர்வினை.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபுரட்சி வருகுது!
அடுத்த கட்டுரைபருவமழைப்பயணம்-மழையில்லாமல்