மது:சில கலைச்சொற்கள்

மலையடிவாரப் பிராந்தியங்களில் மது வடித்தல் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி. பழங்குடிகள் பொதுவாக பல வகையான மதுவகைகளைத் தாங்களே வடித்துக் குடிப்பார்கள். மலைக்கிராமங்களில் அந்தப்பழக்கம் கசிந்திறங்குகிறது. பழங்குடிகளுக்கு மது ஒரு புனிதப்பொருள், காரணம் அவர்களுக்கு அனேகமாக அனைத்துமே புனிதப்பொருட்கள்தான். மதுவை அவர்கள் தங்கள் கடவுள்களுக்குப் படைக்கிறார்கள், காரணம் அவர்கள் அனேகமாக அனைத்தையுமே கடவுளுக்குப் படைப்பார்கள். ஒவ்வொரு சாமிக்கு ஒவ்வொரு மது. அல்லது ஒவ்வொரு மதுவுக்கு ஒவ்வொரு சாமி.

பழங்குடிகள் வடிக்கும் மதுக்களில் பலவகை உண்டு. பலவகையான பழங்களை ஒன்றாகப் போட்டு நொதிக்க வைத்து எடுக்கும் மதுவே அதிகமாக உண்ணப்படுகிறது. எளிதில் மாவாக ஆகக்கூடிய ஒருவகை மலைநெல்லை முதிர்வதற்கு முன்னரே எடுத்து நீருடன் அரைத்து பாலாக்கி அதைப் பற்பலநாள் புளிக்கச் செய்து வாற்றி எடுக்கும் மது முதல் பலவகையான பட்டைகளையும் வேர்களையும் நீரில் ஊறச்செய்து எடுக்கும் மதுவகைகள் [ஊமத்தை வேரை தேனில் ஊறவைத்து மது செய்யும் ஒரு பக்குவம்கூட உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்] வரை ஏராளமான மதுத்தயாரிப்பு வகைகள் உண்டு. பானையில் அடைத்து மண்ணில் புதைத்துப்போட்டு பலவருடம் கழித்து தோண்டி எடுக்கும் மதுக்கள் உண்டு. அந்தப் பக்குவங்களை அவர்கள் மதரகசியங்களாக வைத்திருப்பார்கள்.

ஆனாலும் அவற்றில் பல பக்குவங்கள் ஊருக்குள் பரவிவிடும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை போதைகள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குடிப்பவர்களுக்கு உரிய வகைபேதங்கள்.  பனங்கருப்பட்டியைப் பொடித்துப் போட்டு ஊறலாக்கி வாற்றி எடுக்கும் வழக்கமான சாராயமே எங்களூரின் சிறப்பு. அவ்வட்டாரங்களில் பெயர் சொன்னாலே தெரியும் தரம் எளிதில் விளங்கும் ஊர் எங்களுடையது. மற்ற வகை போதைகளும் சாதாரணமாகவே நடமாடும்.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பெயர்கள் உண்டு. இப்பெயர்கள் காரணப்பெயர்களாக அமைவதே வழக்கம். காரணம் விளைவுகள் வழியாக மதுவுக்குச் சென்று சேர்வது குடிகாரர்களுக்கு வசதி என்பதுடன் ஒரு மதுவின் பெயரே அதன் விளம்பர வாசகமும் ஆக இருப்பதும் நன்றே. சில பெயர்கள் மதுஅருந்திகளின் மாற்றுத்தரப்பினரான மனைவிகள், வழிநடையர்களால் சூட்டப்பட்டதாக இருக்கும். ஒரே மதுவுக்கு பல தரப்புகளில் பல பெயர்கள் புழங்குவதும் உண்டு. மொழியியலாளர்களின் மேலதிக ஆய்வுக்காக அச்சொற்கள் இங்கே தொகுத்து அளிக்கப்படுகின்றன.

1. நாறவெள்ளம்:

இது மதுவுக்குப் பொதுவான பெயர். மனைவிமாரால் சகஜமாக பாவிக்கப்படுவது. ”எனக்க பொன்னேசுவே…இண்ணைக்கும் வலிச்சு கேற்றிப்போட்டானே நாற வெள்ளத்த…நான் செண்ணு சாவுதேன்..எனக்கு வய்யாமே” என்ற கதறல்களை மாலைநேரங்களில் சாலைகளில் கேட்கலாம்.

2. ஊறவெள்ளம்

இதுவும் மதுவுக்கான பொதுப்பெயரே. முதலில் சொன்ன சொல்லாட்சிக்கான எதிர்வினையாக மதுவர்களால் உருவாக்கிப் புழங்கப்படுவது. ஊறச்செய்து வாற்றி எடுக்கப்படுவதனால் இது அமைந்தது. ”ஆருல இவ? போடீ, இது ஊற வெள்ளமாக்கும்…  நான் ஊற வெள்ளம் குடிச்சா நீ ஆருட்டீ கேக்க? வாக் ”

3. பீநாறி

இது மாமிசத்தை அழுக வைத்து எடுக்கப்படும் ஒரு குறிப்பிட்டவகை மதுவின் பெயர். பழங்குடிகள் மானிறைச்சியை வைத்து இதை எடுக்கிறார்கள். உள்ளூரில் ஆட்டிறைச்சியை. ஏழெட்டுநாள் அழுகினால் சாராயமாகிறது. கழுத்தை எரிக்கும். சமயங்களில் குருடாகவும் ஆக்கும். அது குடித்து குருடான சிலர் ஏசுவையும் சிலர் அய்யப்பசாமியையும் பார்ப்பதாகச் சொல்லபப்ட்டது.  வாசனை அச்சு அசல் அதுபோலவே இருப்பதனால் இந்தபெயர்

4 பீகலக்கி

முந்தையதையும் இதையும் குழப்பிக் கொள்ளலாகாது. அதிகநீர் சேர்க்கப்பட்டுப் பக்குவமிழந்த பனங்கள்ளே இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அசாதாரணமான பின் விளைவுகளை உருவாக்குவதனால் இப்பெயர் கொண்டது. நீரால் இழக்கப்படும் போதையை  சீமையுரம் எனப்படும் அமோனியம் சல்·பைட் மூலம் ஈடுகட்ட முயல்வதனாலும் இவ்விளைவு உருவாகிறது என்பர் அறிஞர்.

5 மணவாட்டி

சிறப்பான இந்த மதுவைக் குடித்தால் அதன் பின் தலையை தூக்கவே முடியாது. மணமகள் போலத் தலைகவிழ்ந்து இருப்பார் குடியர். மோவாயைப் பிடித்துத் தூக்கி ”என்னவே குடிச்சேரு?” என்று கேட்டுக் கையை விட்டால் உடனே மோவாய் மீண்டும் மார்பில் முட்டும். ”அதுபின்ன கேக்கணுமா? மணவாட்டிதான்.இனி பஸ்டுநைட்டு களிஞ்சு பாத்தாப்போரும்” இதன் தயாரிப்பில் ஊமத்தைக்கு முக்கிய இடம் உண்டு.

6. கொட்டுவடி

ஆசாரிமார் வைத்திருக்கும் ஆகப்பெரிய மரச்சுத்தியல் இது. சிறிய கொட்டுளியால் ஆப்பு அல்லது ஆணியை அடித்து நிறுத்திவிட்டு கொட்டுவடியை எடுத்து ஒரே அடி. ஆப்பு இறுகி அமைந்துவிடும். அதேபோல குடித்ததுமே அப்படியே அடித்து இறுக்கும் குடிவகை. தயாரிப்பில் ஊமத்தைக் காய் மற்றும் வேர் ஊடுபுகும் என்று கேள்வி.

7. வெட்டிரும்பு

வெட்டிரும்பு என்பது சிறப்பான ஒருவகை உருக்கு. இதில் அக்காலத்தில் கடுமையான பொருட்களை வெட்டும் இரும்பு ஆயுதங்களைச் செய்வார்கல். இரும்பை வார்த்தபின் நெடுநாள் வெப்பத்தில் வைத்து மிகமிக மெல்ல குளிர வைத்து இதை தயாரிக்கிறார்கள். குடித்தபின் உடனே உக்கிரம் கொண்டு காதுமடல்களையும் மூக்கையும் தகதகக்கச் செய்து மெல்லமெல்லக் குளிரும் குடிவகை. நாட்டுச் சாராயமே அனேகமாக வெட்டிரும்பு எனப்படுகிறது.

8. போஸ்ட்மேன்

இது பொதுமக்களால் சூட்டப்படும் பெயர். குடித்தவர் தன் தெருவில் தன் வீட்டைத் தேடிக் கதவு கதவாகத் தட்டிச் செல்வார்.பொதுவாக [அத்துமீறிய] ஆயுர்வேத விதிகளின் படி காய்ச்சப்படும் ‘அரிஷ்ட’ங்களுக்கு உள்ள விளைவு.

9.சுவருமுட்டி

இதுவும் பொதுமக்களால் சூட்டப்பட்ட பெயரே. குடித்தவர் சென்று கொண்டே இருப்பார். எங்கே அவர் சுவரில் முட்டிக் கொள்கிறாரோ அங்கேயே மேலும் நாலைந்து தப்படி எடுத்து வைக்க முயன்றபின் அப்படியே படுத்து ஆழமான இரவுறக்கம். வேலிசாடி என்றும் இதைச் சொல்வதுண்டு.அரிஷ்டமே. பஞ்சமூலாதி என்று வைத்தியர் தரப்பில் சொல்லப்படும்.. ஐந்து வகை வேர்களில் ஊமத்தை அதிமதுரம் இருக்கும்.

10.எரிப்பன்

சற்றே பதம்கெட்ட நாட்டுச் சாராயம். குடித்ததுமே தொண்டையும் இரைப்பையும் தீயாக எரியும். காதுகள் சூடாகும். கண்களில் ஆனந்த பாஷ்பம் வழியும். மீதேல் ஆல்கஹால் என்றும் பாடம்

11.ஆளுமாறி

இது மனைவியரால் சூட்டப்பட்ட பெயராக இருக்கலாம். குடித்தவருக்குத் தன் மனைவிமக்கள் மாற்றான் மனைவி மக்கள் என்ற பேதம் இல்லாமலாகிறது.”ஏட்டி செல்லம்ம, வாடி இஞ்ச… இம்பிடு சுக்குவெள்ளம் கேட்டா குடுக்க மாட்டியா? கெட்டினவன்னா உனக்கு புல்லு, இல்லட்டி? அடி பொளந்துபோடுவேன் பாத்துக்கோ…”. ”நீக்கம்புல போறவன் கண்ட ஆளுமாறி வெள்ளமும் குடிச்சுட்டுக் கேறி வந்திட்டானே…ஏட்டீ செல்லம்மா உனக்க கெட்டினவனை இப்பம் விளிச்¢ட்டு எறங்கு  இல்லேண்ணா சவத்தெளவானை இப்பம் வெட்டி போட்டிருவேன்… கண்ணாணை வெட்டிப்போடுவேன்… ஏசுவே, இப்பம் நமக்க எளவெடுத்தான் வந்து இதை கண்டாண்ணு சொன்னா பின்ன வேற புலிவாலு வேணுமா…போவும் வே..”பொதுவாக கஞ்சாச் சருகு போட்டு ஊறவைத்த கள், சாராயம் இவ்விளைவுகளை உருவாக்கும்.

12.சவுட்டுமருந்து

சுருக்கமாக சவிட்டு. இதைக் குடித்தவர் நின்ற இடத்திலேயே கால் மாற்றி வைத்து அவசரமாக நடந்துகொண்டே இருப்பார். வழிப்போக்கர்கள் அவரைத் தாண்டிப் புயல்வேகத்தில் சென்று மறைய அவரது வழி முடிவிலாது கிடக்கும். ” எளவு,அத்து விளுகுதுண்ணுல்லா ஓடுதானுக? ஒரு மனிசனைக் கண்டா நிண்ணு நாலு நல்ல வர்த்தமானம் செல்ல ஆளுண்டா?”என்ற புலம்பல்.

13.சினேகலெச்சுமி

இது ஒரு சிறப்புப்பெயர். உயர்தரமான மதுவாகிய பறங்கிமாம்பழம் போட்டு வாற்றிய சாராயம். ·பெனி என்று கோவாவில் சொல்லப்படும். இதைக் குடித்தவர் ஆன்மீக உன்னதம் அடைந்து சககுடியர்கள், சக மனிதர்கள், குடும்பத்தினர், பொதுவாக உலகம் மேலேயே பேரன்பு கொள்கிறார். ”…லே மக்கா தாணு…உன்னாணை சொல்லுகேன்…நீ எனக்க செல்லமாக்கும். கண்ணாணை…நீ சொன்னா உனக்காச்சுட்டி நான் சாவேன்ல..  உனக்கு நான் எனக்க சொத்த தருவேன்…இப்பம் என்ன வேணும்? இந்தா டைட்டன் வாச்சு வச்சுக்கோ…வச்சுக்கோலே….இந்தா பேனாக்கத்தி வச்சுக்கோ மக்கா… இந்தா எனக்க செருப்பு. பேட்டாவாக்கும்.. நாப்பது ரூபா வெலெ…எடுத்துக்கோலே மக்கா…” இது கிறிஸ்துமஸ்,ஈஸ்டருக்கு உகந்தது. ”பேதீல போவான் சினேகலெச்சுமிய குடுச்சிட்டு சோலிசெய்து கொண்டுவந்த பைசவயெல்லாம் கண்டவனுக்கு குடுத்திட்டு வந்து நிக்கானே…நான் என்ன செய்வேன் எனக்க முத்தாலம்மோ…எனக்கு வய்யாமே”

14.வழிமறிச்சான்.

இதுவும் சாதாரணமாக பட்டைச்சாராயத்துக்கான பெயர். குடித்தவர் சாலைப் போக்குவரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருகிறார்.

15.சட்டிநக்கி

பொதுவாக  பழங்களைப் போட்டு புளிக்க வைக்கும் மென்மையான பானங்கள் அளிக்கும் விளைவுகளில் ஒன்று. சுவை சுவைஞருக்குப் பிடித்துப் போகிறது. மெல்ல மெல்ல போதையும் ஏறுகிறது. குடித்த டம்ளரை நன்றாக அண்ணாக்கில் விட்டபின் விரலை விட்டு வழித்துக் குடிப்பது, பிறரது டம்ளர்களை வழிப்பது, டம்ளர்களில் தண்ணீர் விட்டுக் கலக்கிக் குடிப்பது, டெஸ்கில் வழிந்திருப்பதை ஆள்காட்டிவிரலால் வழித்துக் குடிப்பது என இது நீள்கிறது.

16. சிரியன் அல்லது ‘சிரியன்கிறிஸ்தியன்’

இது இளம்பாக்கை [களிப்பாக்கு] போட்டு புளித்து எடுக்கும் கள்ளினால் உருவாவது. இதில் கொட்டுவடி விளைவும் உருவாகும். ஆனால் அதிகமாக உருவாகும் விளைவு இதுவே. சிரிப்பு. உலகமே சிரிப்பாய் சிரிக்க ஆரம்பிக்கிறது. சிரியன் என்ற பெயர் இதிலிருந்து வந்தது. அதை உள்ளூர் ஆட்கள் ரப்பர் முதலாளிகள் மேல் உள்ள கடுப்பினால் சிரியன்கிறிஸ்தியன் ஆக்கினார்கள். கள் பரிமாறும் ‘கடுவா’ அம்மிணியைப் பார்த்துதான் முதல் சிரிப்பே. ”ஏல, என்னவாக்கும் ஒரு சிறுப்பு? பீயக் கண்ட பண்ணி கணக்காட்டு ? பக்கறையச் செத்தி எடுத்து நாய்க்குப் போடுவேன் மயிராண்டி…போலே லே” என்ற அவளது வசையில் இருந்து உலகம் இன்பமயமாகிறது.
18. போக்குவரத்து.

ஜாதிக்காய்க்கு இந்த விளைவு உண்டு என்பார்கள். ஜாதிக்காய் அல்லது அதன் வேர் போட்டு காய்ச்சும் சில குடிவகைகளில் இவ்வாறு நிகழ்கிறது. நுகர்வோர் பத்தடி முன்னால் நடந்தால் கச்சிதமாக பத்தடி பின்னாலும் வந்துவிடுவார். வீடுசேர்வதில்லை.
19. நிண்ணுகுழி

ஜாதிக்காயின் விளைவுகளில் ஒன்றுதான் இதுவும். ஏறியதுமே குடியாளுநர் எந்த இடத்தில் நிற்கிறாரோ அந்த இடத்தில் அவரது குதிகால் குழுவிழும் அளவுக்கு பதியும் அங்கேயே நாற்புறமும் திரும்பி வசைபாடுதல் உலகநலன் விசாரித்தல் எல்லாம் உண்டு. காலை தூக்க மட்டும் முடியாது. ”திருகும் குடுமி விடியளவும் தேயும்” வகை.
20 பட்டிமூக்கு

பட்டி என்றால் நாய். இதைக் குடித்தால் உடனே பலவகையான நாற்றங்கள் தென்பட ஆரம்பிக்கும். அதன் பின் எப்போதும் மூக்கு சுளித்தே இருக்கும். குடிக்கும் கோப்பை , நக்கும் ஊறுகாய், தானே கையோடு கொண்டுவந்த டார்ச் லைட் எல்லாவற்றையும் முகர்ந்து பார்த்தல். புது மனிதர்களைப் பார்த்ததுமே முகம் சுளித்து மணம்பிடிக்க யத்தனித்தல் என இது நிகழும். கஞ்சா இலை போட்டு வாற்றும் சாராயங்களில் உள்ள ஐம்பெரும் விளைவுகளில் ஒன்று இது
21. பரிசுத்தி

பரிசுத்த ஆவி என்பதில் இருந்து வந்த சொல்லாட்சி. குடித்தவரில் ஒருசில மீதேன்ஆவிபறக்கும் ஏப்பங்களுக்குப் பின் ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்கிறது. அவர் ஏசுவைப்பற்றியும் சாத்தானின் ‘களி’ களைப் பற்றியும் பேச ஆரம்பிக்கிறார்.”…கர்த்தாவாகிய ஏசுகிகிறிஸ்துவானவர் ஹாலேலூயா! வானபரியந்தம் ஏறின குரிசுமேலே ஹாலேலூயா! அதாகப்பட்டது பரிசுத்த பிதாவானவர் மனம்கனிந்து ஹாலேலூயா! மண்ணுக்கு அனுப்பிய….மக்கா ஊறுகாய எடு ஹாலேலூயா! கர்த்தாவான ஏசுகிறிஸ்துவானவர் ஹாலேலூயா! ஸ்தோத்திரம் பிதாவே! கர்த்தாவான ஏசுகிறிஸ்துவானவர் சாத்தானிடம் ஹாலேலூயா! சார் வாருங்க, இரியுங்க… எனக்கு பொறத்தாலே போ சாத்தானே  ஹாலேலூயா! சாத்தானாகப்பட்டவன் ஹாலேலூயா!” என்றிவ்வாறு

22 அடப்புருவி

இது குடியின் இயல்பா குடிகாரரின் இயல்பா என்று சொல்வது கடினம். பொதுவாக அந்திக்கள்ளுக்கு இவ்வியல்பு உண்டு என்பர் சான்றோர். அடைப்பை[மூடியை] உருவி விட்டதுபோல் கொளகொளவென்று சொற்கள் வெளியே கொட்டிக்கொண்டே இருத்தல் இதன் அறம். ”…கொலேரத்திலே வாழைக்கொல விக்கபோவும்பம் அந்தா நிக்கான்… ஆரு நிக்கான்? கண்ணு மின்னால வந்து நிக்கான்…நிக்காண்ணு சென்னா அதொரு நிப்பாக்குமே மச்சினா… நான் பாத்தப்பம் அவன் கேறி நிக்கான்… அய்யோ இதிவனுல்லா நிக்கான்னு நான் நெனைச்சேன்…கண்ணாணை மச்சினா நிண்ணுட்டிருக்கான்..அப்பம் நான் செல்லிட்டுவந்த கதை என்னா? ஆ, அதாக்கும். கொலேரத்திலே வழைக்கொல விக்கபோவும்பம் அங்கிண நிக்கான். அய்யோ இவன் எங்கலே இஞ்ச வந்தான் எண்ணு நான் நெனைச்சேன்…உம்மாணை மச்சினா..ஏது கதை…அவன் தே இப்பிடி…இப்பிடி வந்து கண்ணுமுன்ன நிக்கான்வே…அப்பம் நான் செல்லிட்டுவந்த கதை என்னா? ஆ, அதாக்கும் கொலேரத்திலே வழைக்கொல விக்கபோவும்பம்… ” என்று விடியவிடிய.

24. மாம்பட்டை

இதுவும் சாதாரண சாராயமே. உபரி விளைவுக்காக மாமரப் பட்டைகளை செதுக்கிப் போட்டுக் காய்ச்சுவார்கள் என்பது காய்ச்சுவதைப்பற்றி அறியாத எளிய அருந்துனர் கருத்து. அதனால் இப்பெயர் வந்தது. மாம்பட்டை அல்ல போடப்படுவது மஞ்சணாத்தி, காட்டுக் காஞ்சிரம் போன்று அதற்கு வேறு பட்டைகள் உண்டு

26: மூத்தா

இது இறையியல் பெயர். மது சாத்தானின் மனைவி என்பது அங்கிபோட்ட பாதிரியார்களின் கருத்து. லூசிஃபர் ஏசுவின் அண்ணா. அவரது மனைவி ஏசுவுக்கு அண்ணி. அந்தவகையில் நாட்டுக்கள் என்பது ஏசுவுக்கு அண்ணி முறை

27:பள்ளிக்கள்ளு

ஒயின் இவ்வாறு பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஏசுவின் ரத்தம் இது என்றும் பேச்சு உண்டு.பள்ளி என்றால் குமரிமாவட்டத்தில் சர்ச்.

28:பிரசாதம்

இது இந்து தர்மம் சார்ந்த பெயர். கதலிப்பழம் போட்டு வாற்றி எடுத்த உயர்தர சாராயம். ஆலயங்களில் கதலிப்பழம் மட்டுமே நைவேத்யமாக ஆக்கப்படுவது குமரிமாவட்ட வழக்கம். ஆகவே மாடன், வாதை, சொடலைப்போத்தி  போன்ற தெய்வங்களுக்கு இந்தவகை சாராயமே படைக்கப்படுகிறது.

29. செளிநாறி

இது சோற்றைப் புளிக்க வைத்து எடுக்கப்படும் ஒரு குறிப்பிட்டவகை மதுவின் பெயர்.இதை சென்னையில் சுண்டச்சோறு கொண்டிச்சோறு என்பர்.  பழையசோறு பானைகளில்  மூடப்பட்டு பத்து பதினைந்துநாள் புதைக்கப்பட்டு எடுக்கப்படும். கலங்கிய மழைச்சேறு போல் இருப்பதனால் காரணப்பெயர் இது. கல்குழிக்களுக்குள் நீண்டநாளாக தேங்கிக் கிடக்கும் நீரின் உக்கிரமான நாற்றம் இருக்கும்.

30 தாக்கோல்

தாழ்க்கோல் என்ற தூய தமிழ்ச்சொல்லின் மரூஉ. குலநாயர் ஸ்த்ரீகளில் பலர் இரவுகளில் கையில் குப்பியுடன் வந்து சன்னல் வழியே தூக்கிக் காட்டும் கணவர்களுக்கு மட்டுமே வாசல் திறப்பர். ஆகவே இது ஆகுபெயர். பெரும்பாலும் பிரசவத்தை ஒட்டி இது பழக்கமாகிறது. எப்போதுமே இது பிராந்திதான்.
நகைச்சுவை

முந்தைய கட்டுரைவந்தாயிற்று…
அடுத்த கட்டுரைபுத்தகம் ஒரு வலைப்பூ