‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை

[ 1 ]

அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான ரதசாலைக்கு இருபக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் இருந்த கரியகற்களாலான சிற்றாலயத்தில் வழிபடப்படாத தெய்வமொன்று கோயில்கொண்டிருந்தது. கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இருவிழிகள் மட்டுமேயான அந்த தெய்வத்தின் பெயர் கலி என்று நிமித்திகர்களும் கணிகர்களும் மட்டுமே அறிந்திருந்தனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடிமாதம் கருநிலவு நாளில் மட்டும் அவர்கள் வந்து அதற்கு சாந்திபூசை செய்து மீள்வார்கள். அப்போதுமட்டும் அதைச்சூழ்ந்திருக்கும் புதர்களையும் கொடிகளையும் வெட்டி வெளியாக்கி பலிபீடம் அமைத்து பலிகொடுத்து வணங்குவார்கள். அவர்கள் மீண்ட மறுநாளே கொடிகளை நீட்டி காடு அதை தன்னுள் எடுத்துக்கொள்ளும்.

கலியின் ஆலயத்துக்குச் செல்ல பாதைகள் இல்லை. அதனருகே ஓடிவரும் சிறிய ஓடைவழியாக எட்டு கணிகர்களும் எட்டு நிமித்திகர்களும் கரிய உடையணிந்து தலையில் ஏற்றப்பட்ட பூசைப்பொருள் மூட்டைகளுடன் சென்றனர். கோடையில் நீர் வற்றியிருந்த ஓடை மேலே கவிந்த பச்சைத்தழைகளால் சூழப்பட்டு குகைப்பாதை போலிருந்தது. நீர்த்தடம் உலர்ந்த பாறைகளில் நரி உண்டுபோட்ட எலும்புகள் சிதறியிருக்க முட்புதர்களில் பறவையிறகுகள் சிக்கி காற்றில் அதிர்ந்துகொண்டிருந்தன. காய்ந்து சருகுவெளியாக மாறியிருந்த காட்டுக்குள் காற்று ஓடும் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களின் காலடியோசை கேட்டு விலகியோடும் உயிர்களின் சலசலப்புடன் காடு எச்சரிக்கைகொண்டு அவர்களை கூர்ந்து நோக்கியது.

கலியின் சிற்றாலயத்தை அடைந்த பதினாறுபேரில் நால்வர் மண்வெட்டிகளும் நால்வர் வெட்டுவாள்களும் வைத்திருந்தனர். அவர்கள் கோயிலை அடைந்த காலடியோசை கேட்டு கோயிலுக்குள் இருந்து ஒரு நரி மெல்ல காலடி எடுத்து வைத்து வெளியேவந்து தன் கூர்மூக்கை மெல்ல நீட்டி பெரிய காதுகளை விடைத்துக்காட்டி உர்ர் என ஒலியெழுப்பியது. அதன் சிப்பிக்கண்கள் அவர்களில் மண்வெட்டி வைத்திருந்தவரை கூர்ந்து நோக்கின. அதற்குப்பின்னால் மேலும் நான்கு நரிகளின் முகங்கள் எழுந்தன. மண்வெட்டி வைத்திருந்த நிமித்திகர் அதைக்கொண்டு தரையை ஓங்கி அறைந்தார். நரி திடுக்கிட்டு பின் பக்கமாக பதுங்கி அமர்ந்துகொண்டு வெண்கோரைப்பற்களைக் காட்டி மேலுதட்டை சுருக்கி கனமாக உறுமியது.

அனைவரும் சேர்ந்து கைகளைத்தூக்கி குரலெழுப்பியபோது நரி பின்னால் திரும்பி தன் மயிர்க்குலைவாலைச் சுழற்றியபடி பாய்ந்தோடியது. அதைத்தொடர்ந்து பிற நரிகளும் ஓடின. அவர்கள் முன்னால்சென்று நரிகளின் மட்கிய மயிர் நாற்றமடித்த கோயிலுக்குள் எட்டிப்பார்த்தனர். எலும்புகளும் இறகுகளும் அலகுகளும் சிதறிக்கிடந்த கோயிலுக்குள் கலியின் சிலை விழித்த கல்பார்வையுடன் அமர்ந்திருந்தது. அவர்களில் தலைமைவகித்த நிமித்திகரான கபிலர் தன் மாணவன் சுகுணனிடம் “வேலையை ஆரம்பியுங்கள்… இரவுக்குள் நாம் மீண்டுசெல்லவேண்டும்” என்று ஆணையிட்டார். சுகுணனும் பிறரும் புதர்களை வெட்டத்தொடங்கினர். இருவர் ஆலயத்தின் உட்புறத்தை தூய்மைசெய்தனர்.

கொண்டு வந்திருந்த நறுமணநீரால் கலிதேவனின் சிலையை தூய்மைசெய்து சந்தனமும் குங்குமமும் பூசி, மலர்மாலைசூட்டி அணிசெய்தனர். உள்ளே அகில்புகையிட்டபின் நறுந்தூபக்கலம் ஏற்றி வைத்தனர். வெளியே இருவர் முக்கல் அடுப்பு கூட்டி அதில் வெண்கலயானத்தை ஏற்றி வஜ்ரதானியம், கோதுமை, அரிசி மூன்றையும் கலந்து நீரிலிட்டுக் கொதிக்கவைத்து வெல்லம் சேர்த்து இன்னடிசில் பொங்கினர். கபிலர் அந்த உணவுப்படையலை கலிமுன் விரித்த வாழையிலையில் வைத்தார். எண்ணிருவரும் கலியின் மந்திரங்களை ஓதியபடி தூபதீப ஆரத்திகள் எடுத்து வணங்கினர்.

அவர்கள் அந்தப் படையலுணவை பகிர்ந்துண்பதை புதர்களுக்கப்பாலிருந்து நரிகள் நோக்கிக்கொண்டிருந்தன. அவற்றின் உடல் அசைவிலாது புதர்ச்சருகுகளுக்குள் கலந்ததுபோலிருக்க செவிகள் மட்டும் மெல்லத்திரும்பிக்கொண்டிருந்தன. கூர்நாசியை முன்னால்நீட்டி நின்ற தலைமைநரியான அகாபிலன் மெல்ல வாலை அசைத்ததும் பிறநரிகள் அருகே ஓரடி எடுத்துவைத்தன. அவர்கள் உண்டு முடித்து கைகளைக் கழுவிக்கொண்டபின் இறுதியாக கலியை வணங்கிவிட்டு திரும்பிச்சென்றனர்.

அகாபிலன் முனகியபடி பாய்ந்து வந்து அவர்கள் வீசிய இலைகளை முகர்ந்து நோக்கி செவிகளைக்கூர்ந்தபடி நீள்நாக்கை நீட்டி நக்கிப்பார்த்தான். பின்பு அப்பகுதியை சந்தேகத்துடன் நோக்கியபடி மெதுவாகக் காலடி எடுத்துவைத்து சுற்றிப்பார்த்தான். திறந்துகிடந்த கோயிலுக்குள் எட்டிப்பாபார்த்துக்கொண்டு சில கணங்கள் அசையாமல் நின்றான். தூபப்புகை மூக்கை உறுத்தவே தன் முன்னங்காலால் முகவாயை நீவிக்கொண்டு திரும்பி தன் தம்பியரை நோக்கினான். மீண்டும் உள்ளே பார்த்து துணியைக்கிழிக்கும் ஒலியுடன் இருமுறை தும்மினான்.

அவனது தம்பியான கிகிகன் அண்ணனின் பின்னால் வந்து நின்று தலையை நன்றாகத் தாழ்த்தி காதைக்குவித்து உற்றுப்பார்த்து முனகினான். அதன்பின்னால் அவனது பிறதம்பியர் வந்து நின்றுகொண்டு மெல்ல முனகினார்கள். அகாபிலன் திரும்பிப்பார்த்தபின் மெதுவாக காலெடுத்துவைத்து உள்ளே சென்று கலியின் சிலையை அணுகி அதன்மேல் பூசப்பட்டிருந்த சந்தனகுங்கும லேபனங்களை மூக்கு நீட்டி முகர்ந்தான். நிம்மதியற்றது போல அந்தச் சிற்றறைக்குள் வாலைச்சுழற்றியபடி சுற்றிவந்தான். அதன் கிழக்கு மூலையில் சற்று சிறுநீர் கழித்தான். பின்பு தம்பியரை உள்ளே அழைத்தான்.

நான்குநரிகளும் உள்ளே சென்று அதன் நான்கு மூலைகளிலும் வரிசையாக சிறுநீர் விட்டன. அகாபிலன் அங்கே தன்னுடைய வாசனைதான் எஞ்சியிருக்கிறது என்று உறுதிசெய்துகொண்டதும் மகிழ்ந்து எம்பி எம்பிக்குதித்து ஒலியெழுப்பினான். கலியின் சிலைமேலும் சிறுநீரைப் பீய்ச்சியதும் மெதுவாக அமைதிகொண்டு வெளியே தலைவைத்து உள்ளே உடலை நீட்டிக்கொண்டு படுத்து காதுகளைக் குவித்து ஒலிகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். தம்பியர் ஒருவரோடொருவர் இடத்துக்காக மோதி கிர்ர் என சீற மூத்த தம்பியான கிகிகன் திரும்பி வெண்பற்களைக் காட்டி உரக்கச் சீறி அவர்களை அடக்கினான். அவர்கள் நிறைவின்மையுடன் முனகியபடி தரையில் படுத்துக்கொண்டனர்.

படுத்ததுமே அவர்களின் பகைமை விலக ஒருவரை ஒருவர் கால்களால் சீண்டி விளையாடத்தொடங்கினர். கடைசித்தம்பியான சிருகாலிகன் மல்லாந்து முதுகைத் தரையில் அமைத்து நான்கு கால்களையும் விரித்து ஆட்ட அவனுக்கு மூத்தவனாகிய லோமசன் அவன் அடிவயிற்றை நக்கினான். திடீரென்று சிருகாலிகன் ஆஹ் ஆஹ் ஆஹ் என ஒலியெழுப்பத்தொடங்க இயற்கைவிதிக்கு கட்டுப்பட்டவை போல மற்ற நரிகளும் அதே ஒலியை எழுப்பின. அகாபிலன் திரும்பி அரைக்கண்களைத் திறந்து பார்த்தபின் மீண்டும் கண்களை மூடிக்கொன்டான்.

பகலெல்லாம் ஐந்து நரிகளும் அங்கேயே கண்சொக்கிக் கிடந்தன. நடுநடுவே சிருகாலிகன் எழுந்து நின்று வாலைக்குழைத்து ஆஹ் ஆஹ் ஆஹ் என குரலெழுப்பியபின் மீண்டும் படுத்துக்கொண்டு அண்ணனின் கால்நடுவே கூர்முகத்தைச் செருகிக்கொண்டான். காட்டுக்குள் வெயில் அணைந்துகொண்டே இருந்தது. ஒளிக்குழாய்கள் சரிந்துகொண்டே சென்று சிவந்து பழுத்து பின் மறைந்தன. தெற்கே எங்கிருந்தோ குளிர்ந்த காற்று வந்து தழுவிச்சென்றபோது இலைகள் அசைய மரங்கள் சற்றே ஆறுதல்கொண்டன.

பறவைக்குரல்கள் எழத்தொடங்கின. தலைக்குமேல் ஒரு பெருநகரம் கலைவதுபோல குரல்கள் எழுந்துகொண்டிருக்க அகாபிலன் எழுந்து வாயைத் திறந்து நீள்செந்நாக்கை வளைத்து கொட்டுவாயிட்டான். முன் பின் கால்களை நீட்டி முதுகை நிலம் நோக்கி வளைத்து சோம்பல் முறித்தபின் வெளியே எட்டிப்பார்ந்தன். காட்டுக்குள் இருட்டு தேங்கிக்கொண்டே இருந்தது. ஒரு கீரி சருகுகளை சலசலக்கவைத்தபடி கடந்துசென்றது. சற்று நேரம் கழித்து ஒரு உடும்பு ஓடிவந்து நின்று கால்களில் உடலை தூக்கி முன்னும் பின்னும் ஆட்டி தீ எரியும் ஒலியை எழுப்பி நாக்கை நீட்டியது. சற்றே ஆவலுடன் மூக்கை நீட்டிய அகாபிலன் அது திரும்பியதும் பின்வாங்கினான். ஆர்வத்துடன் பின்னால் வந்த தம்பியர் உடலை ஆட்டி ஆஹ் ஆஹ் ஆஹ் என்றனர்.

பறவைக்குரல்கள் அமைந்தன. கடைசியாக ஓரிரு பறவைகள் மட்டும் வானில் தவித்துக்கூச்சலிட்டு பறந்து கூடு கண்ட பின் காட்டில் அமைதி நிலவியது. அவ்வப்போது சிணுங்கும் பறவைக்குஞ்சுகளை அன்னையர் ஆறுதல்படுத்தும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அன்று கருநிலவு முழுமைகொள்ளும் நாள். கோடைகாலமாதலால் மேகமற்ற திறந்த வானில் விண்மீன்கள் எழுந்து வரத்தொடங்கின. பழுத்துக்கனத்து ஒளிவிட்டபடி பிதுங்கிவந்த அவை கீழே விழுந்துவிடுமென தோற்றமளித்து அதிர்ந்தன.

சற்றுநேரத்திலேயே வானம் விண்மீன்களால் ஆனதாக மாறியது. அகாபிலன் வெளியே இறங்கி முற்றத்தில் அமர்ந்துகொண்டு கூர்மூக்கை நீட்டி வானை நோக்கினான். அவனது பலாவிதைபோன்ற கண்களில் விண்மீன்களின் ஒளி நிறைந்தது. அவன் வாயைத்திறந்து ஊஊஊஹூஊய்ய் என ஊளையிட்டான். மண்ணில் ஒவ்வொரு உயிர்மேலும் வானம் நிறைக்கும் பெருந்தனிமை நிறைந்த அந்த ஊளையை காட்டில் அப்போது துயிலுணர்ந்த அனைத்து உயிர்களும் கேட்டன. அண்ணனுக்குப்பின்னால் வந்து அமர்ந்த கிகிகனும் தம்பியரும் அந்த ஊளையை ஏற்று எதிரொலித்தனர்.

முற்றிலும் அப்பாற்பட்ட விசை ஒன்றால் இயக்கப்பட்டவனாக அகாபிலனும் தம்பியரும் ஊளையிட்டுக்கொண்டிருந்தனர். ஊளையின் ஒரு கணத்தில் திரும்பிய அகாபிலன் கலியின் திறந்த கண்களைச் சந்தித்தான். திகைத்து எழுந்து நின்றபோது அவன் உடலின் முடிகள் சிலிர்த்தெழுந்து நின்றன. அவனை நோக்கியபின் திரும்பிய தம்பியரும் கலியின் கண்களைச் சந்தித்து அதிர்ந்து சிலிர்த்து நின்றனர். ஓசையே இல்லாமல் இருண்டகாடு அவர்களைச் சூழ்ந்திருந்தது. ஒளிவிடும் விண்மீன்களினாலான முடிவிலி கீழே நோக்கி நின்றது.

தீக்கனலால் அடிபட்டவன்போல உரக்க ஊளையிட்டலறியபடி அகாபிலன் திரும்பிப்பாய்ந்து காட்டுக்குள் ஓடினான். அவனைத்தொடர்ந்து தம்பியரும் ஓடத்தொடங்கினர். அவர்கள் புதர்களை ஊடுருவி பாறைச்சரிவுகளில் தாவியிறங்கி சிறியகாட்டருவி போலச் சென்றவழியில் புதர்க்குவைகளிலும் குகைமடம்புகளிலும் கிடந்த நரிகளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டன. காட்டைவிட்டு பெருவழியை அவை அடைந்தபோது நூற்றியொரு நரிகளாலான ஒரு படையாக இருந்தன. ஊளைகள் நின்றுபோக வாய்சீறிய மூச்சொலி மட்டுமே ஒலிக்க, கால்கள் மண்ணைத் தொடுகின்றனவா என்னும் ஐயமெழும்படியாக அவை ஓடிச்சென்றன,

அஸ்தினபுரியின் மேற்குக் கோட்டை மூடப்பட்டிருந்தது. ஆனால் மேற்குப் பெருங்குளத்திற்கு நீர் செல்லும் கால்வாய் வறண்டு வெடித்த சேற்றுப்பரப்பும் சேறுகலந்த மணல்மேடுகளுமாக திறந்து கிடந்தது. கோட்டைமேல் நின்றிருந்த காவலர்களில் பதின்மர் தலைவனாகிய ஸஷோர்ணன் ஓசை கேட்டு குனிந்து நோக்கியபோது மடையின் வழியாக நீர் பீரிட்டு உள்ளே வருவதுபோல உணர்ந்தான். அது நீரா என அவன் வியந்து நோக்கிக்கொண்டிருக்கையிலேயே உள்ளே பொங்கிவந்த அந்த ஓட்டம் வானில் செல்லும் பெரும்நாரைக்கூட்டம் போல ஒற்றை அசைவாக விரைந்து ஏரிக்குள் நீர்வற்றி உருவான சேற்றுவிளிம்பில் பாய்ந்து சென்றது.

வாயில் பந்தத்தைக் கடித்தபடி கற்படிகள் வழியாகத் தொற்றி இறங்கிய ஸஷோர்ணன் மடைவாயிலில் குனிந்து பந்த ஒளியை வீசி உற்று நோக்கினான். சேற்றுப்பரப்பு உழுதிட்டதுபோல கிளறப்பட்டு நீண்டு கிடந்தது. மாடுகளின் மந்தை ஒன்று ஓடிச்சென்றதுபோல. மாடுகளா? ஆனால் அவன் குளம்படிகளைக் கேட்கவில்லை. பந்தத்தை வீசி குனிந்து அமர்ந்து நோக்கியபோது அந்த மண்கொந்தளிப்பின் விளிம்பில் தனித்த கால்தடங்களைப் பார்த்தான். நாய்களா? இத்தனை நாய்கள் எங்கிருந்து வந்தன? காட்டுநாய்களா? மேலும் குனிந்து கால்தடங்களின் விரல்களின் கூர்மையை கவனித்தான். அவை நரிகள் என அவன் எண்ணியபோது அவனுடைய உடல் குளிர்ந்து புல்லரித்தது.

ஓவியம்: ஷண்முகவேல்  [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அப்பால் யானைக்கொட்டிலில் முதியபெண்யானையாகிய காலகீர்த்தி உரக்கச் சின்னம் விளித்து பிற பெண் யானைகளை எச்சரித்தது. குட்டிகளை வைத்திருந்த பெண்யானைகளெல்லாம் பதிலுக்கு ஒலியெழுப்பின. யானைக்கொட்டில் முழுக்க பிளிறல் ஒலிகள் நிறைந்ததும் பாகர்கள் துயிலெழுந்து உரத்த குரலில் அதட்டி என்ன என்று வினவினர். பிற பாகன்களுக்கு குரல் கொடுத்தபடி பந்தங்களைத் தூக்கிச் சுழற்றியபடி யானைக்கொட்டில்களையும் யானைமுற்றங்களையும் சுற்றிவந்து ஆராயத்தொடங்கினர். யானைகள் தொடர்ந்து முழங்கிக்கொண்டே இருந்தன. பாகர்கள் எல்லா பக்கமும் தீப்பந்த ஒளியை வீசி நோக்கியபின் அவற்றை அமைதிப்படுத்தும்பொருட்டு உரக்கக் கூவினர். மெல்ல அவை அமைதியடைந்தன. காலகீர்த்தி கடைசியாக ஏதோ கேட்க பிற தாய்யானைகள் பதில் சொல்லின.

ஸஷோர்ணன் கையில் பந்தத்துடன் ஏரிக்கு மறுபக்கம் ஏறினான். சாலையின் உறுதியான தரையில் பந்தத்தை வீசிச் சுழற்றி பலமுறை கூர்ந்து பார்த்தபோது நரிகளின் காலடித்தடங்கள் தெரிந்தன. ஆனால் அவன் பார்த்துக்கொண்டே செல்லும்தோறும் அவை சிதறிப்பரவி நகரம் முழுக்கச் சென்றதையே கண்டான். நூறுக்குமேல் நரிகள் இருக்கும். அவை நகருக்குள் ஓசையில்லாமல் பரவி மறைந்துவிட்டன. இதை எவரிடம் சொல்லி நம்ப வைக்கமுடியும்? திகைத்துக்குழம்பியவனாக அவன் அங்கேயே நின்றான். பந்தம் எண்ணையின்றி கருகத் தொடங்கியது.

அதை வீசி குனிந்து நோக்கியபோது அவன் ஒன்றைக் கண்டான். ஒரு நரியின் பாதத்தடம்தான் முன்னால் சென்றுகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அதுமட்டுமே சென்றது. பிறகாலடிகள் மறைந்துவிட்டிருந்தன. அவன் அந்தக்காலடித்தடத்தை தொடர்ந்து நகர்த்தெருக்கள் வழியாகச் சென்றான். பந்தம் கருகியபோது அதை காவல்மாடம் ஒன்றில் வைத்துவிட்டான். நகரம் பகல்முழுக்க வெயிலில் வெந்த தூசியின் மணத்துடன் இளவெக்கையுடன் இலைகளும் சுடர்களும் அசையும் மெல்லிய ஒலிகளுடன் விரிந்து கிடந்தது. பெரும்பாலான காவல்மாடங்களில் காவலர்கள் சதுரங்கம் விளையாடியபடி பேசிக்கொண்டிருந்தனர்.

குழறிச் சிரித்தபடி இரு குடிகாரர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு கடந்துசென்றார்கள். “ஆகா, இவர் இருட்டுக்கு காவல்காக்கிறாரே” என்று ஒருவன் சொல்ல “அவர் தன் பெண்ணைத் தேடிச்செல்கிறார்” என்றான் இன்னொருவன். மற்றவன் கழுதைப்புலிபோல ஒலியெழுப்பிச் சிரித்தான். ஸஷோர்ணன் அந்தப்பாதத் தடத்தை காவல்மாடமொன்றின் வழிவிளக்கின் அடியில் தெளிவாகவே கண்டான். நரியேதான். ஆம். ஆனால் நரி ஏன் நகருக்குள் புகவேண்டும்? காவல்நாய்கள் என்ன ஆயின? அவை ஏன் குரலெழுப்பவில்லை?

அது எந்த இடமென ஸஷோர்ணன் உணர்ந்தான். அரசவிருந்தினருக்கான அரண்மனைகள் இருக்கும் இடம். சுற்றிலும் ஆழ்ந்த இருளுக்குள் கிளைகளை விரித்து நின்றிருந்த மரங்களுக்கு நடுவே மரப்பட்டைக்கூரைகள் கொண்ட எட்டு இரண்டடுக்கு மாளிகைகள் சாளரங்களில் செவ்வொளியுடன் நின்றிருந்தன. மாளிகைகளைச்சுற்றி உயரமில்லாத மதில்சுவர் இருந்தது. அதன் காவல்வாயில் திறந்துகிடக்க காவலன் அமர்ந்துகொண்டே துயிலில் இருந்தான். அங்குதானா அந்த நரி வந்திருக்கிறது? ஸஷோர்ணன் காவலனை எழுப்பலாமா என சிந்தித்தான். ஆனால் அவனிடம் என்ன சொல்வது? நரி வந்திருக்கிறது என்றா? மேற்குக்கோட்டைக் காவலன் எதற்காக அத்தனை தொலைவுக்கு வரவேண்டும்? தன் நூற்றுவர் தலைவனிடம் சொன்னால் போதாதா?

திரும்புவதே சிறந்தது என ஸஷோர்ணன் எண்ணினான். அவ்வெண்ணம் வந்ததுமே அவன் திரும்பப்போவதில்லை என்றும் உணர்ந்தான். இருபதாண்டுகாலமாக அவன் காவல் காத்துவருகிறான். ஒரேபணி, ஒரே வாழ்க்கை. அவன் இன்னொருவனிடம் சொல்லுமளவுக்கு ஏதும் நிகழ்ந்ததேயில்லை. சிலகாலமாக நீடிக்கும் போர்வரப்போகிறது என்ற பரபரப்புதான் அவன் வாழ்க்கையில் அறிந்த ஒரே ஆர்வமூட்டும் செய்தி. ஆனால் அதுவும் அடங்கிக்கொண்டிருக்கிறது. இதை அறியாமல் அவன் போகமுடியாது.

ஸஷோர்ணன் காவல்வாயிலைத் தாண்டி உள்ளே சென்றான். இருளுக்குப் பழகிய கண்களால் தரையை நோக்கியபடி சென்றான். காவல்தூண் ஒன்றிலிருந்த பந்த ஒளியில் மீண்டும் அந்த நரிப்பாதத் தடத்தைக் கண்டான். அது நடுவே உள்ள மாளிகையை நோக்கிச் செல்வதை உறுதிசெய்துகொண்டான். அந்த மாளிகையின் வாயிலும் திறந்துதான் கிடந்தது. காவலர் இருவர் அமர்ந்தபடி வாய்திறந்து துயில்கொண்டிருந்தனர். அது இயல்பான துயில்தானா என்று எண்ணியபோது அவன் பிடரி சிலிர்த்தது. எப்படி அத்தனைபேரும் அப்படி துயிலில் ஆழ முடியும்? ஏதோ இருள்பெருவிசை கடந்துசென்றிருக்கிறது. அதுசெல்லும் வழியெல்லாம் துயிலை குளிரெனப் பரப்பியிருக்கிறது.

அவன் உள்ளே சென்றான். திறந்த சாளரங்களில் திரைச்சீலைகள் நெளிய பந்தச்சுடர்கள் அசைந்தாட கூடம் விரிந்து ஒழிந்து கிடந்தது. அதன் மரத்தாலான தரையில் பந்தங்களின் ஒளி அலையடித்தது. அப்போது மேலே எவரோ மெல்லப்பேசும் ஒலியைக் கேட்டான். முதற்கணம் உடனே அங்கிருந்து விலகிச்செல்லவேண்டுமென்றே நினைத்தான். ஆனால் அவனால் கால்களை முன்னோக்கி வைக்கத்தான் முடிந்தது. மெதுவாக படிகளில் காலெடுத்துவைத்து ஓசையின்றி மேலேறிச்சென்றபோது தொலைவில் வடக்குவாயில் யானைக்கொட்டிலில் பெருங்களிறான உபாலன் குரலெழுப்புவதைக் கேட்டான். மீண்டும் மீண்டும் அது பிளிறியது. ஒலி கூடிக்கூடி வந்தது. அஞ்சியதுபோல வெறிகொண்டதுபோல கட்டறுக்கமுனைவதுபோல.

மேலே நீண்டுகிடந்த இடைநாழியிலும் இரு காவலர் துயின்றுகொண்டிருந்தனர். அப்பால் மஞ்சத்தறையின் கதவு திறந்திருக்க உள்ளே எரிந்த அகல்விளக்கின் செவ்வொளி சதுரவடிவமான செந்நிறப்பட்டுபோல இடைநாழியின் மரத்தரையில் விழுந்துகிடந்தது. அங்கேதான் செல்லவேண்டுமென அவன் எப்படியோ அறிந்திருந்தான். அவன் அந்த வாயிலை நெருங்கியபோது உள்ளே மெல்லிய உரையாடலைக் கேட்டான். சிரிப்பின் ஒலியும் ஒற்றைச்சொற்களில் பேசிக்கொள்வதும் மூச்சொலிகளும் கலந்து கசக்கப்பட்டவை என ஒலித்தன.

அவன் உள்ளே எட்டிப்பார்த்தபோது அங்கே மஞ்சத்துக்கு அருகே போடப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் சகுனி அமர்ந்திருப்பதை அகல் விளக்கு ஒளியில் கண்டான். அவன் சால்வை மின்னிக்கொண்டிருந்தது. குழல் தோளில் சரிந்திருக்க ஒரு கையால் தாடியை வருடியபடி தன் முன் இருந்த குறுங்கால்பீடத்தில் விரிக்கப்பட்டிருந்த சதுரங்கக் களத்தில் காய்களை வைத்து மறுகையால் பகடையை உருட்டினான். பகடை உருளும் ஒலி அறையை நிறைப்பதுபோலிருந்தது. விழுந்த எண்ணை நோக்கியபின் காயை நகர்த்தியவாறு மெல்லியகுரலில் ஏதோ சொன்னபடி சகுனி பகடையை நீட்டினான்.

மறுபக்கம் இருக்கையில் எவருமில்லை, இருள்தான் என்றே முதலில் தோன்றியது. பின்பு கண்தெளிந்தபோதுதான் அங்கே ஒருவன் கால்நீட்டி அமர்ந்திருப்பதை ஸஷோர்ணன் கண்டான். அவன் கைநீட்டி பகடையை வாங்கி உருட்டியபோதும் அவன் முகம் தெரியவில்லை. எதிரே இருக்கும் இருளே கைநீட்டி வாங்கி பகடையை உருட்டுவதுபோலிருந்தது.

முந்தைய கட்டுரைஅன்னை சூடிய மாலை
அடுத்த கட்டுரைவெள்ளையானை – ஒரு விமர்சனம்