அகழிகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

இரு அகழிகள் வாசித்தேன்

ஒரு பத்து வருடங்கள் முன்பு, ”National Geographic” தொலைக்காட்சி நிறுவனம், மனிதர்கள் ஆப்பிரிகாவில் இருந்து உலகெங்கும் சென்றார்கள் என்று ஒரு பார்வையை முன்வைத்து, ஒரு பெரும் தொடர் நிகழ்வைக் காட்டியது. “Jumping genes” என்னும் ஒரு மரபணு ஆராய்ச்சியின் மூலமாக, அந்தப் பார்வைக்கான தரவுகளை முன் வைத்தது. உலகெங்கும், மிக நெருக்கமான உறவுகள் அமைத்து வாழும் மனிதக் குழுக்கள் இடையே, அந்த மரபணு ஆதாரங்கள் கிடைக்கும் எனத் தேடி, அந்த ஆராய்ச்சிகளை நடத்தியது.

தமிழகத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் கலந்து கொண்டு, தேனி அருகே உள்ள, ஒரு சிறிய குடியினரிடம் ஆராய்ச்சி நடத்தி, அதில் ஆதாரங்கள் மிகப் பலமாகக் கிடைத்ததாகச் சொன்னார்கள்.

அந்தப் பார்வையின் படி, ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறிய மனிதர்கள், சுற்றுச் சூழல் தகவைமப்பினால், பல்வேறு மாற்றங்களை அடைந்தார்கள். அதற்காக, மரபணு ஆதாரங்கள் தாண்டி, முகம், தோல், முடி முதலான உறுப்புகளில் நடந்த மாற்றங்கள் என ஒரு காட்சித் தோரணமும் காட்டினார்கள்

ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கே ஆஸ்திரேலியா வரையும், மேற்கே தென் அமெரிக்கா வரையும், வடக்கே ரஷ்ய / மங்கோலியப் பாலைவனம் வரையும் சென்றார்கள், சோதனைகள் செய்தார்கள். அலைந்தார்கள்.

அந்தப் பார்வையை அவர்கள் நிறுவிய விதமும், அதன் பின் இருந்த அபாரமான உழைப்பும், அந்தப் பார்வையின் பிரம்மாண்டமும், என்னை ஒரு வாயடைத்துப் போன பார்வையாளனாக வைத்து விட்டது. எனக்கும் அறிவியலுக்கும், கட்டுரையில் சொன்னது போல், ஒரு பெரும் அகழி இருந்ததனால், அதை ஒரு தொலைத் தொடர் பார்க்கும் பார்வையாளனாகவே இருத்திக் கொண்டேன்.

ஆனால், இந்து சமவெளி, ஆரியப் பார்வையைத் தாண்டி, இது இன்னுமொரு கோணம் என்றும் நினைத்துக் கொண்டேன்.

உங்களின் இந்தப் பார்வைக்குப் பின்னால் இருக்கும் உழைப்புக்கும் (உழல்தலுக்கும் என்று தோன்றுகிறது) சிந்தனைக்கும் ஒரு லால் சலாம்.

இன்னும் யானையைத் தடவித்தான் அதன் உருவத்தை உணர முயன்று கொண்டிருக்கிறோம் என்றும் தோன்றுகிறது..

பாலா

***

அன்புள்ள பாலா

மரபணு சார்ந்த அந்த ஆய்வு உடனடியாக மரபணுத்துறை வல்லுநர்களாலேயே கேள்விக்குரியதாக்கவும் பட்டது. வரலாற்றாய்வு அறிவியலாய்வு போல அவ்வாறு புறாயமான ஏற்பு- மறுப்புகள் வழியாகவே முன்னகரும். நமது தேவைகள், நமது அக்கறைகள் சாந்ந்து ஏதேனும் ஒரு வரலாற்றுத்தரப்பை பற்றிக்கொள்ளாமல் அணுகுவதே நமக்குத்தேவையானது

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம்.வலசைப்பறவை 7: இரு அகழிகள் வாசித்தேன். அத்துடன் இணைந்து என்மனதில் ஓடும் எண்ணங்களை பகிர்ந்துகொள்கிறேன்.

வெள்ளையர்கள் இந்திய வரலாற்றைப் பற்றி உருவாக்கிய மிகப்பெரிய பொய் ஆரியப்படையெடுப்பு என்று வலியுறுத்துபவர்களிடையே சமஸ்கிருதத்தின் பழமை என்பதும் ஏன் அவ்வாறாக வெள்ளையர்களால் தமது இனமேலாண்மைக்காக உருவாக்கபட்ட கட்டுக்கதையாக இருக்கக்கூடாதென்ற கேள்வியையே எழுவதில்லை என்பது ஒரு முரண்நகைதான்.பொது ஆண்டுக்கு முன்னரான(BCE) முன்னூறு ஆண்டுகளாக நீடித்த கிரேக்கப்படையெடுப்புகளும் வடமேற்கிந்தியாவில் அவர்களின் ஆட்சியுமே சமஸ்கிருதம் என்ற மொழி உருவானதற்கான மூலமாக இருக்கலாம்.

சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழிகளின் மூலமொழி அல்ல.அது கிரேக்கச் செல்வாக்கால் இந்திய உபகண்டமொழிகளில் இருந்து உருவாகிவந்த மொழியாக இருக்கவேண்டும்.சம்ஸ்கிருதத்தினதும் சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களின் பழமை குறித்த மிகைக் கற்பனைகள் நீங்குமாயின் பண்டைய இந்திய வரலாறு குறித்த உண்மையான புரிதல்கள் கிடைக்கக்கூடும்.ஆரியப் படையெடுப்பைவிட மிகப்பெரிய வரலாற்றுத் திரிபாக சமஸ்கிருதத்தை இந்தோ-ஆரிய மொழிகளின் மூல மொழியாகக் கருதுவது ஏன் இருக்கக்கூடாது என்ற திசையிலும் ஆய்வுலகம் பயணிக்கவேண்டும்.

சிவேந்திரன்

***

அன்புள்ள சிவேந்திரன்

நான் சொல்வது நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராக. நீங்கள் சொல்வதையே கவனியுங்கள். சம்ஸ்கிருத இலக்கியங்கள் அத்தனை ஒன்றும் காலத்தில் பழைமையானவையல்ல என இப்போதே முடிவெடுத்துவிட்டீர்கள், ஆதாரங்களை இனிமேல்தான் தேடவேண்டும். இத்தகைய ஆய்வுகளால் வெறும் அரசியலே விளைகிறது என்பதே நான் சொன்னதன் சாரம். பிரச்சினையை முன்முடிவுகள் இல்லாமல் முழுக்கமுழுக்க வரலாற்று நோக்கிலேயே பார்க்கமுயலவேண்டும் என்றும் நம் அரசியல்தேவைகளை அங்கே சுமத்தவேண்டாமே என்றும்தான் சொல்கிறேன்
ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 58
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59