பாலையின் மலர்மரம்

கவிதையே வாழ்வெனக்கொண்டவர் தேவதேவன். கவிதை நிகழாத ஒருநாளேனும் அவர் வாழ்வில் கடந்துசெல்லுமா என்பதே ஐயம்தான். ஆகவேதான் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். சில மரங்கள் அவ்வாறுதான். அவற்றுக்கு இலைகளைவிட மலர்கள் அதிகம். பூத்தலென்பது அவற்றின் வெளிப்பாடல்ல, அவற்றின் இருப்பே அதுதான். தேவதேவன் வேங்கை போல, கொன்றை போல மலருக்காகவே முளைக்கும் மரம்.

வறண்ட நிலத்தில், மகரந்தங்களை ஏற்கும் பிறமலர்கள் குறைந்த சூழலில், தகவமையும் மரங்களே அவ்வாறு பூத்து நிறைகின்றன என்று தாவரவியல் சொல்லக்கூடும். தமிழ்ச்சூழலில் கவிதைக்கான காதுகள் இல்லாமலிருப்பதே தேவதேவனை அதிகமாக எழுதச்செய்கிறதோ என்றும் தோன்றுகிறது. புறக்கணிக்கப்படும்தோறும் அவரது எழுத்து மேலும் பொலிகிறது. பாலைநடுவே இளஞ்சூரியன் உதித்தது போல மலர்சூடி நிற்கச்செய்கிறது.

தமிழ் நவீனக்கவிஞர்களில் தேவதேவனின் கவிதைகளின் முழுத்தொகுப்புதான் [தேவதேவன் கவிதைகள்: தமிழினி] பெரியது. ஒருவேளை அவரது சமகாலக் கவிஞர்கள் அனைவரும் எழுதிய அனைத்துக்கவிதைகளையும் விட. அத்தொகுப்பில் இருக்கும் நல்ல கவிதைகள் மட்டுமே பிற கவிஞர்கள் எழுதிய நல்ல கவிதைகளின் ஒட்டுமொத்தத்தைத் தாண்டக்கூடும். ஒரு வாழ்நாள்சாதனை என்று சொல்லத்தக்க அந்தத் தொகுதிக்குப்பின்னரும் நான்கு தொகுதிகளை எழுதிவிட்டார் அவர்.

நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளிய்ட்டிருக்கும் பள்ளத்திலுள்ள வீடு தேவதேவனின் முக்கியமான கவிதைத் தொகுதிகளில் ஒன்று. கடைசியாக வந்த தொகுதி அப்படி இருப்பதென்பது கவிஞனின் முடிவடையாத தவத்திற்கே சான்றாகும்.

‘குறைநிலவுகளனைத்தும்
பொய்த்தோற்றங்களாக
மெய்யென எரிகிறது முழுநிலா’

என ஒற்றைப்படிமத்தில் தன் முழுமையை நிகழ்த்தும் கவிதைகளை இயல்பாகவே கண்டுகொள்கிறது தேவதேவனின் கவிமனம். எளிமையையே வல்லமையாகக் கொண்டவையும் அலைகளில் நிலவென தன்னை அழித்தழித்து புனைந்துகொள்பவையுமான இத்தகைய பல கவிதைகளைக் கொண்டிருக்கிறது அவரது தொகுதி.

இறைமொழி
==========

ஓடும் ரயிலில்
தன் மடிதுயிலும் குழந்தைகளுடன்
ஒரு காதல் இணை -.
பிறிதொரு மாநிலம் –
நான் அறியாத மொழியில்
உரையாடிக்கொண்டிருந்த
ஒலிச்சர இசை.
காதலும் கவிதையும்

தானறிந்ததைப் பகரும்
தன் மொழியினைப்போய்
தேவபாஷை என்பானோ ஒருவன்?

என அவருக்கே உரிய அன்பெனும் தரிசனத்தை ஏந்திய காட்சிச்சித்தரிப்புகள் கொண்ட கவிதைகளும்

மலர்கள்
=======

அலைந்து திரியும் உயிர்களை
கவராது போகுமோ
இருந்த இடத்தில் இருந்தபடியே
எல்லாம் அடையத்தகுந்த
மலர்கள்

என்று தான் என்றோ அறிந்த மெய்மையை மீண்டும் மீண்டும் அவர் கண்டடையும் கவிதைகளும் கொண்ட சிறிய தொகுதி இது. காட்டில் கண்டெடுத்த அழகிய விதை போல திருப்பித்திருப்பி வாசிக்கவைத்து கையில் வைத்திருப்பதையே ஓர் உவகையாக ஆக்குகிறது.

தேவதேவன் நான் இருபத்தைந்தாண்டுகளாக மீளமீள வாசித்துவரும் கவிஞர். ஆயினும் ஒவ்வொரு முறையும் இதுவரை அவரில் நிகழாத ஒன்றைச் சொல்லும் ஒரு புதியகவிதையுடன் வருகின்றன புதிய தொகுதிகள். இத்தொகுதியில் உள்ள

சிற்றுயிர்
=========

‘கூடிக்கூடி வாழ்வதும்
கூடிவாழ்வதும்
ஒன்றல்ல
உயிர்களனைத்தும் அறிந்திருப்பதும்
பல்லாயிரம் ஆண்டுகளாய்
மனிதர் மட்டும் அறியாதிருப்பதுமான
உண்மை இது’

ஒரு சிற்றெறும்பு
தன் எடைக்கு மேலான
மேற்படி மகாவாக்கியத்தை
உருட்டி எடுத்து
தன் தலைமேல் தாங்கிச்
சுமந்து செல்வதைக் கண்டேன்

இல்லை இல்லை
இது வெறும் உணவு மாத்திரமே
எனப்பதறியதில்
மேலும் ஓர் அதிர்ச்சி

இக்கவிதையில் முதல் பத்தியின் எழுச்சியில் இருந்து மிக மெல்ல இறங்கி தரையில் நிற்கும் தேவதேவன் எனக்கு முற்றிலும் புதியவர். தரையில் நிற்கையிலேயே அந்த தரிசனத்தின் உச்சத்தையும் அவர் தீண்டமுடிகிறது என்பதனால் இக்கவிதையும் மகத்தானது.

[பள்ளத்திலுள்ள வீடு, தேவதேவன் கவிதைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை]


தேவதேவனின் இணையதளம்


தேவதேவனைப்பற்றிய கட்டுரைகள்


கவிதையும் கருணையும் தேவதேவன் படைப்புலகம் – க மோகனரங்கன்


தேவதேவன் மோகனரங்கனின் உரை


தேவதேவன் பற்றி சு யுவராஜன்.

தேவதேவன் பேட்டி

என் கட்டுரைகள்

தேவதேவனின் கவித்தரிசனம்

கவிதையின் அரசியல் தேவதேவன்

தேவதேவனின் பரிணாமம்

தேவதேவனின் படிமங்கள்

தேவதேவனும் நானும்


தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி

தேவதேவனின் பித்து

கவிஞர்கள் முன் விமர்சிப்பதுபற்றி

முந்தைய கட்டுரைசங்கரம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 77