சந்தைமொழி

 சிறுவயதில் நான் அருமனை, குலசேகரம் சந்தைகளுக்கு அடிக்கடிச் செல்வதுண்டு.  மார்த்தாண்டம் காளைச்சந்தைக்கும் பலமுறை சென்றிருக்கிறேன். கல்யாணக் காய்கறிகள் வாங்கவேண்டுமென்றால் கருங்கல் சந்தை. விசேஷமான கல்யாணத்துக்கு கேரட் பீட்றூட் போன்ற  இங்கிலீஷ் மரக்கறிகள் வாங்கவேண்டுமென்றால் வடசேரி கனகமூலம் சந்தை.

 

மூலம்திருநாள் மகாராஜா காலகட்டத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சந்தைகள் குமரிமாவட்டத்தின் பொருளியல் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவியவை. இங்குள்ள ஏராளமான ஊர்கள் சந்தைகளின் பெயராலேயே அமைந்தவை. திங்கள்சந்தை, வெள்ளிச்சந்தை, புதன்சந்தை போல. பல சந்தைகள் பெரிய மரங்களின் அடியில் கூடியமையால் அதுவே பெயராகியது நாலாலுமூடு,கடையாலுமூடு,மஞ்சாலுமூடு,படந்தாலுமூடு…

 

சந்தை ஒரு விசித்திரமான உலகம். அங்கே அதிலேயே நீந்தி விளையாடும் மனிதர்கள் உண்டு. பல சிறு வியாபாரிகள்குடும்பத்துடன் சந்தைகளிலேயே தங்குபவர்கள். வாரம் ஒருநாள் ஒரு சந்தைகூடும். ஒருநாள் சந்தை முடிந்ததும் இரவு அங்கேயே கூடரமடித்தோ பண்டகசாலை வராந்தாக்களிலோ குழதைகுட்டிகளுடன் சமைத்து உண்டு தங்குவார்கள். காலையில் கிளம்பி மதியம் அடுத்த சந்தைக்குச் சென்று விடுவார்கள். வாழ்நாளெல்லாம் சந்தை இரைச்சலில் நெரிசலில் வாழ்வது எப்படி இருக்கும்?

 

பெரிய வியாபாரிகள் உண்டு. தேங்காய், வாழைக்காய், கருப்புகட்டி வாங்கி சேர்த்து வண்டிபோட்டு நாகர்கோயிலுக்குக் கொண்டுசென்று விற்பவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏழு வைப்பாட்டிமார் இருப்பார்கள். சந்தைக்கு ஒருத்தி. அதிகாரபூர்வ பட்டத்தரசி சுய ஜாதியில் ஊரில் இருப்பாள். இவள் அந்தந்த சந்தையில் அதிகாரம் செலுத்துவாள்

 

சந்தைக்கு வரும் மக்கள் வேறு ஓர் உலகத்தைச் சேர்ந்தவர்கள். பகல் முழுக்க உழைத்து பெற்ற பத்து தேங்காய்களை தொலித்து நாரில் கட்டி தூக்கிக்கொண்டுவருபவர்கள். விளையில் பிடுங்கிய மரச்சீனியை சுமந்து வருபவர்கள். கருப்பட்டிகள் கொண்டுவரும் பனையேறிகளின் மனைவிகள், கால்கள்கட்டப்பட்ட கோழிகளுடன் வருபவர்கள்…எல்லாரும் திரும்பும்போது மீன், கிழங்கு, காய்கறிகள் வாங்கிச்செல்வதைப் பார்க்கலாம்.

 

பொதுவாகவே பொதுமக்களை ஒரு கண்ணாடிச் சுவருக்கு மறுபக்கம்தான் நிறுத்தியிருந்தார்கள் வணிகர்கள். அவர்களின் சைகைகள் கண்ணசைவுகள் சொற்கள் நமக்குப் புரிவதில்லை. சாடை விலை போன்ற பல உத்திகள் உண்டு. எடுத்த எடுப்பிலேயே உச்சகட்ட விலையைச் சொல்வார்கள். இன்னும் கொஞ்சம் பார்ப்போம் என்று எண்ணி விற்கவந்தவர் தரமாட்டேன் என்பார். ஆனால் அதன்பின் அவரைப்போன்ற பொதுமக்கள் வந்து உண்மையான விலை சொல்லும்போது அதிர்ச்சியடைந்து துரத்தி விட்டுவிடுவார்.

 

நேரம்செல்லச்செல்ல  ஆர்வமுடையவர்கள் விலகிச்சென்றுவிட பொருள் விற்காமல் தேங்கிவிடும். விற்கவந்தவர் தவிப்பார். அவரே விலையை படிபப்டியாக குறைப்பார். ஆனாலும் விற்காது. வாங்கவந்தவர்கள் வேறு பொருட்களை வாங்கிவிட்டிருப்பார்கள். அப்போது முதலில் உச்சவிலை சொன்னவர்களே வந்து அடிமட்ட விலை சொல்வார்கள். மாட்டேன் என்று சொல்லவே முடியாது!

 

அதேபோல விலையை அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் ஒரு கணித மொழி உண்டு. அந்த கணக்கு பிறருக்குப் புரியாது. கிட்டத்தட்ட இருநூறு வருடம் அந்த மொழி வியாபாரிகளிடம் மட்டுமே புழங்கும் ஒன்றாக இருந்தது. என் அண்டை வீட்டினராக இருந்த புகழ்பெற்ற மலையாள நாட்டாரியல் பேரரறிஞரான காலம்சென்ற திரிவிக்ரமன் தம்பி  அவரது ‘வேலுத்தம்பிதளவாய்’ என்ற நூலில் பின்னடைவாக அந்த கணக்கைக் கொடுத்திருக்கிறார்.

 

ஒன்று    – சாப்பு

இரண்டு  – தோவு

மூன்று    – திலு

நான்கு   – பாத்து

ஐந்து    – தட்டல்

ஆறு     – தடவல்

ஏழு     – நொளைக்கல்

எட்டு    – வலு

ஒன்பது  – தாய

பத்து    – புலு

கால்    – கொளச்சி

அரை   – தங்கல்

 

இவற்றை கூட்டி எண்ணிக்கைகளைச் சொல்வார்கள். திலுக்கொளிச்ச்சி என்றால் மூன்றேகால். தட்டல்தங்கல் என்றால் ஐந்தரை. பத்துடன் பிற எண்களைக்கூட்டி மேலே எண்ணமுடியும்.  தடவல்புலு என்றால் அறுபது. நொளலுபுலு என்றால் எழுபது. தேவுபுலுசாவு என்றால் இருபத்தொன்று. வட்டம் என்றால் பூஜ்யம். சாவட்டம் என்றால் நூறு. தோவட்டம் என்றால் இருநூறு. திலுவட்டம் என்றால் முந்நூறு .இவ்வாறு எண்ணிக்கை பெருகிச்செல்லும்

 

இந்த எண்ணிக்கையின் சிறப்பு என்னவென்றால் இதை நாம் பக்கத்தில் நின்றால்கூட புரிந்துகொள்ள முடியாது. நம்மை வைத்துக்கொண்டே நம் பொருளுக்கு கமிஷன் தரகு எல்லாம் பேசி முடித்துவிடுவார்கள்!

 

சீனாவில் நூ என்று ஒரு மொழி இருந்திருக்கிறது. பெண்கள் மட்டுமே பேசிய மொழி. ஆண்களுக்கு அது தெரியாது. அம்மாவும் மனைவியும் தங்கையும் பேசிய மொழி  ஆண்களுக்கு அன்னியமாக இருந்திருக்கிறது. அதை நினைவூட்டும் ஒரு மாயம் இந்த மொழியிலும் இருந்திருக்கிறது. சந்தையில் தரகு பேசுபவரின் தம்பிக்கு இந்த மொழி தெரிந்திருக்காது. அவர் மனைவிடம் சொல்லியிருக்க மாட்டார். சொல்லியிருந்தால் இத்தனை காலம் இது ரகசியமாக நீடித்திருக்காது.

லத்தீன் அமெரிகக என்றால் ஒரு நல்ல மாய யதார்த்த நாவலையே எழுதியிருப்பார்கள்!

மறுபிரசுரம் முதற்பிரசுரம் நவம்பர் 2009

முந்தைய கட்டுரைமாமத யானை தரும் பயமும், தெளிவும்(விஷ்ணுபுரம் கடிதம் ஒன்பது)
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள்-கடிதம்