காந்திய தேசியம் – 6

இந்திய தேசியத்தை காந்தியின் உருவாக்கமாக முன்வைப்பவர்கள் அதை பல்வேறு வகையாக முத்திரை குத்த காந்தியை தங்களுக்கு ஏற்றார் போல் அவதூறு செய்கிறார்கள். இன்று இந்தியாவில் பிறந்த ஒர் இளைஞன் சாதாரணமாக காந்தியைப்பற்றியும் இந்தியாவைப்பற்றியும் இந்த அவதூறுகளையே அதிகமும் கேட்டிருப்பான். அவற்றை அவன் நம்புவதற்கான காரணம் அவன் இளைஞன் என்பதே. பள்ளிக்கூட வரலாற்றுக்கு மாற்றாக எது சொல்லிக்கொடுக்கப்பட்டாலும் அவன் நம்புவான் என்பதே. அப்போதுதானே அவன் புரட்சிக்காரன் ஆக முடியும்?

மிகக்குறைவானவர்களே வரலாற்றுப் பின்னணியில் அந்த அவதூறுகளை வைத்து அவற்றின் பெறுமதியை ஆராய்கிறார்கள். அதற்கு ஓர் அடிப்படை வாசிப்பும் வாழ்க்கை சார்ந்த பார்வையும் தேவை. அந்த முதிர்ச்சி நிலை வருவதற்குள் பெரும்பாலானவர்கள் வாசிப்பையும் அரசியல் விவாதங்களையும் நிறுத்திவிடுகிறார்கள். லௌகீக வாழ்க்கையில் அமைந்தும் விடுகிறார்கள். ஆனால் அந்த இளமைப்பருவ மனப்பிம்பங்களை வாழ்நாள் முழுக்கத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

 

பார்ப்பன-பனியா தேசியமா?

இந்திய சுதந்திரப்போராட்ட அரசியலில் ஒவ்வொரு தரப்பும் மறுதரப்பை அன்னிய ஆட்சியின் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டியிருக்கிறது. ஹிந்துமகாசபை டாக்டர் மூஞ்சேயின் தலைமையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஒத்துழைத்து காங்கிரஸை அழிக்கும் முயற்சிகளுக்கு உதவும் சக்தியாக நெடுங்காலம் செயல்பட்டிருக்கிறது. அதைச்சுட்டிக்காட்டும் காங்கிரஸார் சாவார்க்கர் அனுபவித்த நெடுங்காலக் கொடும் சிறைவாசத்தை மறைத்துவிடுவார்கள். சமீப காலமாக சாவார்க்கரே பிரிட்டிஷாருக்கு மன்னிப்புகடிதம் எழுதிக்கொடுத்த துரோகிதான் என இடதுசாரி அரசியல்வாதிகள் சொன்னார்கள்.

அதேபோல கம்யூனிஸ்டுகள் இரண்டாம் உலகப்போரில் பாசிச சக்திகள் ஒடுக்கப்படவேண்டும் என்ற சர்வதேச நோக்கில் இந்திய தேசிய காங்கிரஸின் கடைசிக்கட்டப் போராட்டங்களை எதிர்த்து பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்தார்கள். ஆகவே அவர்கள் தேசத்துரோகிகள் என்று கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலகாலமாகச் சொல்லிவந்தார்கள். கம்யூனிஸ்டுத்தலைவர்களில் பலர் நெடுங்காலம் இந்திய சுதந்திரப்போராட்டத்தின் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் என்ற உண்மை அங்கே பேசப்படவில்லை.

காங்கிரஸும் காந்தியும் மேலே சொன்ன இரு தரப்பாலும் இதே போல முத்திரை குத்தப்பட்டன. இந்துமகாசபை மற்றும் அதன் வழித்தோன்றல்கள் காந்தியை இந்தியாவில் உருவாகவிருந்த ஷத்ரிய புரட்சியை தவிர்ப்பதற்காக தென்னாப்ரிக்காவில் இருந்து வெள்ளையரால் கொண்டுவரப்பட்ட ஐந்தாம்படையாகச் சித்தரித்தன. இன்று அக்கருத்தில் இருந்து அவர்களில் ஒரு தரப்பினர் பின்வாங்கியிருக்கிறார்கள்.

அதேபோல கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் உருவாகவிருந்த சோஷலிச மக்கள்புரட்சியை மழுங்கடிக்க பிரிட்டிஷாருடன் இணைந்துகொண்டு ஐந்தாம்படை வேலை செய்தவர் என்று காந்தியைச் சித்தரித்தார்கள். இடதுசாரிகளின் முக்கியமான சிந்தனையாளர்கள் எவரும் இந்தவகையில் சித்தரிக்கவில்லை என்றாலும் கணிசமான பக்கங்கள் இந்நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் காந்தியைப் பற்றிய மிகக்கசப்பான விமரிசனத்தை முன்வைத்தது முஸ்லீம்லீக்தான். காந்தி உருவாக்குவது ‘பார்ப்பன- பனியா’ தேசியம் என்ற வரியை முதன்முதலில் உருவாக்கியவர் பாகிஸ்தான் போராட்டத்தை முன்னெடுத்த ஜின்னா. இந்த வரியை அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். இன்றும் பாகிஸ்தானிய ஊடகங்கள் அவ்வரியையே ஒட்டுமொத்த இந்தியாவைப்பற்றிச் சொல்லும்போதும் குறிப்பிடுகின்றன. அந்த வரியை அக்காலத்திலேயே தெற்கே இருந்த திராவிட இயக்கங்கள் கடன் வாங்கின. இன்றும் தமிழகத்தில் ஒருதரப்பினர் அவ்வரியை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏன் ‘பார்ப்பன-பனியா’ என்ற சொல் இணைப்பு உருவாக்கப்பட்டது? ஜின்னாவின் காலகட்டத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி, இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் எல்லா தரப்பினரும் பங்கொள்ளும் ஒரு பொதுமேடையாகவே இருந்தது. பல்லாயிரம் பேதங்கள் கொண்ட இந்தியாவை பிரதிநிதிகரிக்கும் ஓர் அமைப்பு எப்படி இருக்குமோ அப்படித்தான் அது எப்போதும் இருந்தது. அதனுள்யைந்தியாவின் சமூகத் தரப்புகள் அனைத்துக்கும் பிரதிநிதிகள் இருந்தனர். அவர்களுக்குள் ஓயாத போராட்டமும் பூசலும் இருந்தது. மகத்தான இணைக்கும் சக்தியாக காந்தி இருந்தபோதும் சரி, உருக்குபோன்ற சர்வாதிகாரத்துடன் இந்திரா காந்தி இருந்தபோதும் சரி ,கோஷ்டிச்சண்டை இல்லாமல் காங்கிரஸ் இல்லை. ஆகவே அது ஒரு இயல்பான வெளிப்பாடு என்றே சொல்லவேண்டியிருக்கிறது

இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் பிராமணர்கள். அவர்களே ஆங்கிலக் கல்விக்குள் சென்றவர்கள். நவீன உலகசிந்தனையுடனும் ஐரோப்பிய தேசியவாதத்துடனும் அறிமுகம் பெற்றவர்கள். ஆகவே இந்துமதச் சீர்திருத்தம், இந்திய கலையிலக்கிய மறுமலர்ச்சி, இந்திய தேசியப்போராட்டம் மூன்றிலும் அவர்களே முன்னோடிகள். உதாரணமாக, மலையாளம் தவிர இந்தியாவின் எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் அந்த மொழியின் இலக்கிய மறுமலர்ச்சி என்பது பிராமணர்களால்தான் தொடங்கப்பட்டிருக்கும். பின்னர் இடைநிலை உயர்சாதிகள் அதில் பங்கெடுத்திருப்பார்கள் எழுபதுகளுக்குப்பின்னர் பிற்படுத்தப்பட்டவர்கள். எண்பது தொண்ணூறுகளுக்குப் பின்னர் தலித்துக்கள். இதுவே இந்திய சமூக வளர்ச்சியின் வரைபடம். காங்கிரஸ், கம்யூனிஸ்டுக் கட்சி போன்றவற்றின் வளர்ச்சியின் வரைபடமும் இதுவே. 

காங்கிரஸின் இரண்டாம் கட்டத்தில் பிராமணரல்லாத சாதியினர் அதிகளவில் உள்ளே வந்தனர். அச்சாதிகளில் பனியாக்கள் மிகமிக குறைவு, அனேகமாக இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் மற்ற பிராமணரல்லாத சாதிகளை பொதுவாக வைசிய அந்தஸ்துள்ள சாதிகள் என்று சொல்லலாம். வணிகம் செய்பவர்களல்ல என்றாலும் படிநிலையால் இவர்களை வைசியர்கள் என்றும் ஆகவே பனியா என்றும் சொன்னோமென்றால் காங்கிரஸின் எல்லா செயல்பாடுகளையும் பார்ப்பனர்கள் X பனியாக்கள் என்றே பிரிக்கவேண்டியிருக்கும்.

காங்கிரசுக்குள் பிராமணர்களுக்கும் இரண்டாம் நிலைச்சாதியினருக்கும் இடையேயான முரணியக்கம் எப்போதுமே வலுவாக இருந்துகொண்டிருந்தது. இரு தனிப்பிரிவுகளாக வெளிப்படையாக பிரிந்து இவர்கள் மோதிக்கொள்ளவில்லை என்றாலும் எங்கும் இந்த மோதல் உறைந்திருந்தது. இதனுடன் வேறு பல பிரிவினைகளும் போட்டிகளும் கலந்துகொண்டன.

இச்சூழலில்தான் காங்கிரசுக்குள் இஸ்லாமியரின் இடத்தைப்பற்றி பார்க்க வேண்டும். 1908 முதலே முஸ்லீம்களை காங்கிரஸில் இருந்தும் ஒட்டுமொத்தமாக பிற இந்திய சமூகத்தில் இருந்தும் பிரிப்பதில் பிரிட்டிஷ் ஆட்சி வெற்றி பெற்றிருந்தது. அவர்களுக்கு தனித்தேர்தல் முறை அளிக்கப்பட்டு அவர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் தலைமையை அவர்களே தேர்வுசெய்தார்கள். அதாவது இந்தியாவின் அரசியல் போராட்டத்தில் அவர்கள் எவ்வகையிலும் பங்களிக்க வைக்கப்படவில்லை.

அன்றைய தேர்தலில் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை. சொத்துரிமை கொண்டவர்களுக்கே வாக்கு. ஆகவே அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே இருந்த முஸ்லீம்களில் பத்து சதவீதம் பேருக்குக் கூட ஓட்டுரிமை இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே வராத சம்ஸ்தானங்களில் அந்த ஓட்டுரிமையும் இல்லை. ஆகவே அன்றைய அரசியலதிகாரம் என்பது இஸ்லாமிய உயர்குடியினர் பிரிட்டிஷ் ஆட்சியின் தயவுடன் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருந்தது. அன்றைய இஸ்லாமியத் தலைவர்களைப் பார்த்தால் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துச் செயல்பட்ட முஸ்லீம் மன்னர்கள் அல்லது பிரபுக்கள் என்பதைக் காணலாம்.

காந்தியின் காங்கிரஸ் இஸ்லாமிய எளிய மக்களை அரசியல்படுத்தி அவர்களை தன்னுள் கொண்டு வருவதை இந்த இஸ்லாமிய உயர்குடித்தலைமை அச்சத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. கிலா·பத் இயக்கம்தான் இந்தியாவில் உருவான முதல் இஸ்லாமிய வெகுமக்கள் அரசியலியக்கம். அதில் இருந்த எளிய மக்களின் பங்களிப்பு காந்தியைக் கவர்ந்திருக்கலாம். அதன்மூலம் அம்மக்களை அரசியல்படுத்தவும் இந்து முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்கவும் முடியும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆகவே அவர் அதனுடன் காங்கிரஸ் ஒத்துச்செயல்படச்செய்தார்.

காந்தியின் நோக்கம் நிறைவேறியிருந்தால் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் காங்கிரஸுக்குள் வந்திருப்பார்கள். அங்கே ஏற்கனவே இருந்த அதிகார முரணியக்கத்தில் அவர்களும் ஒரு புதிய தரப்பாக ஆகியிருப்பார்கள். ஒட்டுமொத்த அதிகாரம் அந்த முரணியக்கத்தின் சமரசப்புள்ளியாக உருவாகி வந்திருக்கும். காங்கிரஸின் அதிகாரமையத்தில் ஒரு பகுதியாக அவர்கள் இருந்திருப்பார்கள். அதுவே ஜனநாயகத்தின் இயல்பான வழிமுறை.

அது நடக்கவில்லை. கிலா·பத் இயக்கம் இஸ்லாமிய மதத்தலைவர்களை அரசியலுக்குள் இழுத்துவந்தது. இஸ்லாமிய அரசியல் என்பது முல்லா அரசியலாக ஆகியது. எளிய முஸ்லீம்கள் புதிய அரசியல் அடையாளங்களை அடைவதற்குப் பதிலாக ஏற்கனவே இருந்த மத அடையாளத்தை எடுத்துக்கொண்டு பொதுவெளிக்கு வந்தார்கள்.

ஐயத்துடன் இந்த அடித்தள எழுச்சியை கவனித்துக்கொண்டிருந்த முஸ்லீம் மேல்தட்டு அரசியல்வாதிகள் சட்டென்று ஒரு அதிகார சூத்திரத்தைக் கண்டுகொண்டார்கள். அத்தனை எளிய மக்களையும் தங்கள் கீழ் ஆவேசமாக அணிவகுக்கச் செய்யும் மந்திரம். அதுவே இஸ்லாமிய தேசியம். கோட் சூட் அணிந்துகொண்டு, வறுத்த பன்றியுடன் ஸ்காட்ச் சாப்பிட்டு, மசூதிக்கு போவதை ஆங்கிலத்தில் பகடி பேசி வாழ்ந்தவர்கள் அந்த இஸ்லாமியத் தலைவர்கள். ஆனால் சட்டென்று அவர்கள் மதக்காவலர்களாக உருமாறினார்கள்.

கிலா·பத் இயக்கம் காங்கிரசுக்குள் ஏராளமான இஸ்லாமியர்களைக் கொண்டுவந்தது. கடைசிவரை காங்கிரஸின் இஸ்லாமிய பிரிவாக இருந்தவர்கள் பெரும்பாலும் அப்போது வந்தவர்களே. அவர்களை காங்கிரஸில் இருந்து அன்னியப்படுத்தவும் எளிய முஸ்லீம்களை காங்கிரஸை எதிரியாக எண்ணச்செய்யவும் ஒரு கோஷமாக உருவாக்கப்பட்டதே பார்ப்பன-பனியா தேசியம் என்ற கோஷம். திரும்பத்திரும்ப இந்த கோஷத்தைச் சொல்வதன் மூலம் தங்கள் தரப்பில் அதை ஒரு வலுவான நம்பிக்கையாக ஆக்கினார்கள்.

அந்த கோஷம் மூலம் காங்கிரசுக்குள் இருந்த ஒன்றுக்கொன்று முரண்பட்ட சக்திகளை எல்லாம் சேர்த்து ஒரே தரப்பாக மாற்றிவிட்டார்கள். இவ்வாறு ஒரு வலுவான ஒற்றை எதிரியைக் கட்டமைக்காமல் இஸ்லாமியரால் அரசியல் ரீதியாக ஒன்றுதிரள முடியாது. ஏனென்றால் காங்கிரஸுக்குள் இருந்ததை விட மிகப்பெரிய சமூகப்பிரிவினைகள், அரசியல் பிரிவினைகள், பொருளாதார ஏற்றதாழ்வுகள் முஸ்லீம்களிடம் இருந்தன. காங்கிரஸ் என்ற பார்ப்பன- பனியா இந்து சக்தி தங்களை விழுங்கிவிடும் என்ற அச்சத்தை மத அடையாளத்தை சுமந்த எளிய முஸ்லீம்களிடம் சொல்லி அவர்களை தங்கள்கீழ் திரட்ட முஸ்லீம் உயர்குடியினரால் முடிந்தது. அதுவே பாகிஸ்தான் பிரிவினைக்கு வழியமைத்தது.

காங்கிரசின் உள்முரண்பாடுகளை நாம் எளிமையாக வகுத்துக்கொள்ளவே முடியாது. ஏற்கனவே சொன்னது போல அது இந்திய உள்முரண்பாடுகளின் சரியான பிரதிநிதியாக இருந்தது. பிராமணர்- பிராமணர் அல்லாத வைசிய,சூத்திர சாதிகள் என்ற ஒரு முரணியக்கம் இருந்தது. வடக்கு- தெற்கு என்ற ஒரு முரணியக்கம் இருந்தது. இந்திபேசுவோர் -அல்லாதோர் என்ற ஒரு முரணியக்கமும் இருந்தது. காங்கிரசுக்குள் இருந்த எந்த ஒரு அரசியல் செயல்பாட்டையும் இந்த அனைத்துவகையான முரணியக்கங்களும் சிக்கலான வகையில் ஒன்றுடன் ஒன்று ஊடுருவுவதன் மூலம் நிகழ்வதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

ஒரு பனியாவாக காந்தி காங்கிரசுக்குள் இருந்த பிராமணர்களின் எதிர்ப்பைச் சந்தித்துக்கொண்டே இருந்தார். அவரது உண்ணாவிரதங்கள் பல அவர்களுக்கு எதிரானவை. அதேசமயம் பிராமணரான நேருவை அவர் முன்னிறுத்தினார், அது அந்த பிராமண எதிர்ப்பை சமாளிக்கும் ஓர் உத்தி என்று சொல்பவர்கள் உண்டு. நேருவுக்கு எதிராக எழுந்த வைசியர்-சூத்திரர் தலைவரான சுபாஷ் சந்திர போஸுக்கு எதிராக காந்தியுடன் நின்றவர் முக்கியமான வைசிய -சூத்திரதலைவரான வல்லபாய் படேல். அதாவது காங்கிரசையும் சரி அதன் உள்முரண்பாடுகளையும் சரி எளிமைப்படுத்தவே முடியாது.

ஜின்னா அந்த எளிமைப்படுத்தலைச் செய்து பாகிஸ்தானை அடைந்தார். ஆனால் அந்த எளிமைப்படுத்தப்பட்ட பொது எதிரி என்ற உத்தி அதற்குமேல் ஒரு தேச உருவாக்கத்துக்குக் கைகொடுக்கவில்லை. அங்கே அவரால் ஒரு தேசிய சமூகத்தை உருவாக்க முடியவில்லை. ஜின்னாவின் முஸ்லீம் லீக் ஒரு பொதுத்தேர்தலைக்கூட சந்திக்காத செயற்கையான அரசியல் இயக்கமாகவே இருந்தது, இருக்கிறது. ஆப்கானிய எல்லை மாகாண பூசல்கள், கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை, சிந்து கலவரங்கள், இப்போது ஸ்வாத் பள்ளத்தாக்குப் போர் என உள்நாட்டுப்போர் நடக்காத காலமே பாகிஸ்தானில் இருந்ததில்லை. இஸ்லாமியர்களில் இருந்த கோடானுகோடி அடித்தளமக்கள் இன்றும்கூட எவ்வகையிலான ஜனநாயகமயமாக்கலும் இல்லாமல் மேல்தட்டினரால் ஆளப்படுகிறார்கள்.

இன்றும்கூட பாகிஸ்தானில் செல்லுபடியாகக்கூடிய ஒரே அரசியல் இணைப்புசக்தியாக இருப்பது இந்திய எதிர்ப்பு என்ற எதிர்மறை மனநிலை மட்டுமே. அதாவது அதே பார்ப்பன -பனியா கோஷம் தான். ஆனால் அது இன்றைய நவீன உலகின் சிக்கல்களை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை. ஒவ்வொரு தரப்பும் தங்கள் அதிகாரத்தைக் கோருகின்றன அங்கே. வெறுப்பில் பிறந்த தேசம் அந்த வெறுப்புக்கான விலையை ஒவ்வொருநாளும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

பாகிஸ்தானியவாதிகளிடம் இருந்துதான் திராவிட இயக்கம் பார்ப்பன-பனியா கோரிக்கையைக் கடன் கொண்டது. திராவிட இயக்கத்தின் வேர்களை ஆராய்ந்தால் நாம் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சென்று சேர்வோம். பிரிட்டிஷ் ஆட்சியின் பதவிகளில் பங்குகோரி பிராமணர் அல்லாத உயர்சாதியினரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அது. இந்தியர்களுக்கு ஒருவகை போலியான பிராந்திய தன்னாட்சியை பிரிட்டிஷ் அரசு வழங்கியபோது அதை அடைவதற்காக அரசியல் கட்சியாக அது உருவாகியது. கிட்டத்தட்ட முஸ்லீம் தலைவர்களைப்போல அதுவும் பிரிட்டிஷாரை ஆதரித்த உயர்மட்ட பிரமுகர்களால் ஆனது.

கிட்டத்தட்ட முஸ்லீம் லீகின் பாணியிலேயே திராவிட இயக்கமும் நகர்வதைக் காணலாம். காங்கிரஸ் கோடிக்கணக்கான அடித்தள மக்களை அரசியல்படுத்தி தன்னுள் இழுத்துக்கொள்வதை அவர்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸில் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்களை பிரித்து தங்களுக்குக் கீழே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் காங்கிரஸை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சக்தி என்று எளிமைப்படுத்த பார்ப்பன-பனியா என்ற கோஷத்தை அவர்களும் முழங்க ஆரம்பித்தார்கள்.

இன்றுவரை விவாதிக்கப்படாத பல கோணங்கள் இதில் உள்ளன. வடநாட்டில் பனியாக்கள் என்ன செய்தார்களோ, எந்த சமூக இடத்தில் இருந்தார்களோ, அந்த இடத்தில் இருந்தவர்களான முதலியார்கள், செட்டியார்கள், நாயர்கள், வேளாளர்கள் போன்றவர்களே திராவிட இயக்கத்தின் முன்னோடிச்சாதிகள். இவர்கள் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புகளில் அவ்வாறு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள இயக்கம் நடத்தியவர்கள். தமிழக வேளாளார்களும் கேரளா நாயர்களும் பிரிட்டிஷ் கணக்கெடுப்புகளில் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக் கொள்வதைக் காணலாம். வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்கள் அந்த வைசிய அடையாள கோரலைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அதாவது ‘வட இந்திய பனியா கெட்டவன், ஆகவே பிற்படுத்தப்பட்டவர்களே வந்து தென்னிந்திய பனியாக்களாகிய எங்களின் கீழ் அணிவகுத்து நில்லுங்கள்’ என்ற கோஷம்தான் திராவிட இயக்கத்தின் தொடக்கம்.

முஸ்லீம்களுக்கு மதம் என்ற ஒற்றுமைப்படுத்தும் சக்தி இருந்தது. அதேபோல இனத்தை முன்னிறுத்த முடியுமா என்ற சோதனைதான் திராவிட இனவாதத்தின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது. ஏற்கனவே கால்டுவெல்லில் இருந்து எடுக்கப்பட்டு மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்களால் ஒரு சிறிய வட்டத்துக்குள் பேசப்பட்ட கருத்து அது. ஒரு தேசிய உருவகமாக முன்வைப்பதற்கான ஆய்வடிப்படையோ தர்க்கபூர்வத்தன்மையோ அதற்கு இருக்கவில்லை. ஆனால் மதவாதம்போலவே இனவாதமும் எளிமையாக பேதங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் அது தேசியக்கருத்தாக்கமாக உருவாக்கபட்டது. உருவான சில வருடங்களுக்குள்ளாகவே அது நடைமுறையில் கைவிடப்பட்டது. இனவாதம் அப்படியே மொழிவாதமாக ஆக்கப்பட்டது.

திராவிட இயக்கத்தின் பிறவிக்கான காரணமாகச் சொல்லப்படுவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான ஈ.வே.ரா அவர்களின் கோரிக்கை காங்கிரசால் மறுக்கப்பட்டமையே. காங்கிரஸின் தேசிய நிலைபாடுகள் அக்காலத்தில் தெளிவாகவே இருந்திருக்கின்றன. உயர்மட்டத்துக்கு மட்டுமே வாக்குரிமை அளித்து தன் ஆதிக்கத்துக்குக் கீழே வெள்ளையர் நடத்திய தேர்தல்கள், மாகாண ஆட்சி எதையுமே காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதில்லை. மிண்டோ மார்லி சீர்திருத்தம், மண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம், சைமன் கமிஷன் அனைத்தையும் காங்கிரஸ் நிராகரித்திருக்கிறது. பின்னர் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் மிகமிகக் குறைவான காலம் மட்டுமே காங்கிரஸ் அவ்வாட்சியில் இருந்திருக்கிறது. காங்கிரஸ் கோரியது முழுமையான தன்னாட்சி, அனைவருக்குமான வாக்குரிமையின் அடிப்படையிலான ஜனநாயகம். அந்தப்போராட்டத்தை பிளவுபடுத்தும் கோரிக்கையாகவே அது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை பார்த்தது.

உண்மையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரசின் போராட்ட வல்லமையை பிளக்கும் முயற்சியாக பிரிட்டிஷார்தான் கொண்டுவந்தார்கள். அவர்களின் அடிவருடிகளால்தான் அது பேசப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வந்திருந்தால்கூடநில உரிமையில்லாதவர்களும் வரிகட்டாதவர்களுமான அன்றைய பிற்படுத்தப்பட்டோரில் பத்து சதவீதம்பேர்கூட வாக்களிக்க முடிந்திருக்காது என்பதும், அதன் பயன்களைப்பெற்று தமிழக வைசியர்களின் உயர்குடிகளில் சிலர் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குக் கீழே மாகாண சபைகளில் சென்று அமர்ந்திருப்பார்கள் என்பதும்தான் உண்மை. அப்படியானால் ஈ.வே.ரா கோரிய அந்த வகுப்புவாரிக்கோரிக்கை யாருடைய நலனுக்காக?

பிற்படுத்தப்பட்டோருக்கு உண்மையான ஆட்சியதிகாரம் என்பது இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபின்பு அரசியல் நிர்ணயசபை கூடி உருவாக்கிய அரசியல் சட்டத்தில் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டபோதுதான் சாத்தியமாகியது. அதைச் செய்தது காங்கிரஸ். இன்று இந்தியா முழுக்க வலுவாக உருவாகியிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் அதிகாரம் என்பது எந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழியாகவும் உருவானதல்ல, வயதுவந்தோர் வாக்குரிமை மூலம் மட்டுமே உருவானது. தமிழகத்து பனியாக்களின் கையில் இருந்து அதிகாரம் தமிழகத்து பிற்படுத்தப்பட்டோர் கைகளுக்குச் சென்றதும் காங்கிரஸ் அளித்த வயதுவந்தோர் வாக்குரிமை வழியாகவே.

இந்தியாவின் மக்கள்தொகையின் பெரும்பகுதி பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும், வயதுவந்தோர் வாக்குரிமை அவர்களுக்கே அதிகாரத்தை அளிக்கும் என்றும் தெரிந்துதான் ‘பார்ப்பன-பனியா’ காங்கிரஸ் அச்சட்டத்தைக் கொண்டுவந்தது. 1953ல் லக்னோவில் பேசிய நேரு அதை திட்டவட்டமாகவே சொல்கிறார், இந்தியச் சுதந்திரப்போரை வழிநடத்தியது உயர்சாதியினராக இருந்தாலும் வரும்காலத்தில் அதிகாரம் பிற்படுத்தப்பட்டோர் கைக்குச் செல்லும் என்றும் அதுவே எண்ணிக்கையடிப்படையிலான ஜனநாயகம் என்றும் அவர் சொன்னார்.

தமிழகத்தில் ஈவேரா அவர்கள் செய்தது போல பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காக பிரிட்டிஷ்காரர்களை ஆதரிக்கும் இயக்கம் எதுவும் பிற இந்திய மாநிலங்களில் நிகழவில்லை. அங்கே காங்கிரஸ் உருவாக்கிய அனைவருக்கும் வாக்குரிமையளிக்கும் ஜனநாயகம் மூலமே பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரம் கைவந்தது. ஆகவே தமிழகத்துப் பிற்படுத்தப்பட்டோருக்கு ஈவேரா அரசியலதிகாரம் பெற்றுத்தந்தார் என்பதெல்லாம் வெறும் வரலாற்றுப்பிரமைகள் மட்டுமே.

ஒருபேச்சுக்காக இந்தியா முழுக்க ஈவேராக்கள் கிளம்பி பிரிட்டிஷ்காரர்களை ஆதரித்திருந்தால் இந்தியாவுக்கு தன்னரசும் வந்திருக்காது வயதுவந்தோர் வாக்குரிமையும் வந்திருக்காது பிற்படுத்தப்பட்டோர் அதிகாரமும் சாத்தியமாகியிருக்காது. ஈவேராவால் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரம் கிடைக்கவில்லை, அவரைமீறி கிடைத்தது என்றே சொல்லவேண்டும். காங்கிரஸ் பார்ப்பன பனியா அரசியலை நடத்தியது என்ற வாதத்தை முன்வைப்பவர்கள் அந்த ‘பார்ப்பன-பனியா தேசியம்’ மூலம் தமிழகத்தில் அதிகாரத்துக்கு வந்தவர்தான் காமராஜ் என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர் ஜஸ்டிஸ் கட்சியாக இருந்து தமிழக அதிகாரத்தை கையாண்ட ‘தமிழக பனியா’க்களை வெளியே தள்ளித்தான் அந்த அதிகாரத்தை அடைந்தார்.

பார்ப்பன-பனியா தேசியத்தையே காந்தி உருவாக்கினார் என்பது  சொல்லப்பட்ட ஒரு திரிபுவாதப் பிரச்சாரம். அது தமிழகத்து பனியாக்கள் தங்கள் அரசியலதிகாரத்துக்காக பிற்படுத்தப்பட்டோரை காங்கிரஸில் இருந்து பிரிப்பதற்காக முஸ்லீம்லீகிடம் இருந்து எடுத்தாண்ட ஓர் எளிமைவாதம் அல்லது அவதூறு மட்டுமே.

Statue of Mahatma Gandhi at Gandhi National Memorial, Aga Khan Palace, Pune, India. Picture taken - 29th March. 2009.

தரகு முதலாளித்துவ தேசியமா?

ஐம்பதுகளில் பி.டி. ரணதிவே உருவாக்கிய சொல்லாட்சி இது. இந்திய தேசியம் உண்மையானதல்ல என்றும், இது இந்தியாவில் இருந்த முதலாளிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார். காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷார் இருந்தபோது அவர்களுடன் ஒத்துழைத்து முதலாளிகளுக்கு தரகுவேலைசெய்து பொருளியல் அதிகாரத்தை அடைந்தவர்கள் என்றும், சுதந்திரம் முதலாளிகளுக்கே வாங்கிக்கொடுக்கப்பட்டது என்றும் அவர் வாதிட்டார்.

அதன்பின் இச்சொல்லாட்சியை இடதுசாரிகள் அனைவருமே மாறி மாறிப் பயன்படுத்துகிறார்கள். இந்திய தேசியத்தை தங்கள் கோட்பாட்டு நோக்கில் வரையறை செய்துகொண்டு அதை தங்களுக்கு உகந்த முறையில் மாற்றியமைக்கும்படியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கு இந்திய இடதுசாரிகளுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் அவர்கள் முன்வைக்கும் சித்திரம் அவர்களின் பிரச்சாரத்தரப்பு அன்றி வரலாறு அல்ல.

இவர்களால் சொல்லப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால் காந்தி இந்தியாவின் பெருமுதலாளிகளுடன் நெருக்கமாக இருந்தார், அவர்களிடம் நிதி பெற்றுக்கொண்டார், அவர்கள் வீட்டில் தங்கினார், ஆகவே அவர் இந்தியப் பெருமுதலாளிகளின் ஆள், அவர் பெற்றுத்தந்த தேசியம் என்பது அவர்களின் நலனுக்கானதே என்பதுதான். இவர்களில் ஒருசாரார் அதை மேலும் உச்சபடுத்தி காந்தியை அரசியலுக்குக் கொண்டுவந்ததே அவர்கள்தான் என்கிறார்கள்.

இங்கே சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் காந்தி தன்னை புரட்சிக்காரர் என்று சொல்லிக்கொண்டவரல்ல என்பதே. அவருக்கு மார்க்சியம் ஏற்புடையதாகவும் இருக்கவில்லை. அவர் எதையுமே ரகசியமாகச் செய்யவும் இல்லை. ஆகவே அவரது திட்டங்கள் மட்டும் ரகசியமானவை என்று சொல்வதைப்போல அபத்தம் எதுவும் இல்லை. அவரது பொருளியல் திட்டங்கள் அவராலேயே விரிவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டியே அவர் அனைத்தையும் முற்றிலும் வெளிப்படையாகச் செய்தார். அவர் என்ன எண்ணினார் என்ன செய்தார் என்பதை அவரது எழுத்துக்களையும் செயலையும் ஒட்டி முடிவுசெய்வதே முறை.

காந்தியின் சமூகப்பொருளியல் சித்தாந்தம் அவருக்குப்பின் ஜெ.சி.குமரப்பா போன்றோராலும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. காந்தி தனியுடைமைக்கு முற்றாக எதிரானவர் அல்ல. தனியுடைமை பேராசையாக ஆகக்கூடாது என்று சொன்னவர் மட்டுமே. அவர் என்றுமே முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்தெழவேண்டும் என்றும் முதலாளிவர்க்கத்தையே தொழிலாளர் அழிக்க வேண்டும் என்றும் சொன்னவரல்ல. மாறாக அந்த பிரிவினையை, அதில் உறைந்துள்ள வன்முறையை ஓர் அழிவுச்சக்தியாக மட்டுமே கண்டவர்.

காந்திக்கு ‘தேசிய முதலாளிகள்’ மீது நம்பிக்கை இருந்தது. இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு அவர்களால் பெரும்பங்களிப்பாற்ற முடியும் என்று அவர் நம்பினார். மக்களை ஒருங்கிணைக்கவும் அமைப்புகளை உருவாக்கி நிர்வாகம்செய்யவும் திறனுள்ள தேசிய முதலாளிகள் ஏராளமாக உருவாகி வரவேண்டும் என்று அவர் சொன்னார். அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்து இயங்காமல் மனிதர்களைச் சார்ந்து இயங்கவேண்டும் என்றும், அவர்களின் உபரிச் செல்வத்தை மேலும் முதலீடுகளாகவும் அறச்செயல்பாடுகளாகவும் மட்டுமே அவர்கள் ஆக்கவேண்டும் என்றும் சொன்னார்.

காந்தி முதலாளிகளுக்குச் சொன்ன வழிகாட்டல் தர்மகர்த்தா முறை எனப்படுகிறது. தங்கள் சொத்துக்களுக்கு முதலாளிகள் அறங்காவலர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும், அந்தச் சொத்துக்களை அவர்கள் சுயலாபத்துக்காகச் வழிகளில் செலவிடலாகாது என்றும் சொன்னார். இது அப்படியே புராதன சமண சமயம் அதன் வணிகர்களுக்குச் சொன்ன அறிவுரைதான்.

முதலாளிகள் என்றாலே சமூகத்தின் தீய சக்திகள் என்ற எண்ணம் கொண்டவர்கள் தங்கள் பாணியில் போகட்டும். பிறர் காந்தி சொன்னவற்றின் நடைமுறைத்தன்மையையும் இன்றும் நீடிக்கும் அதன் பொருத்தப்பாடையும் குறித்து சிந்திக்கலாம். அவை அனைத்தும் சரி என்றும் , காந்தி காட்டிய பொன்வழி என்றும் சொல்லவரவில்லை. அது அவர் அன்றைய சூழலில் முன்வைத்த ஒரு கருத்துநிலை. அதற்கு அவர் உண்மையாக வெளிப்படையாக இருந்தார். அதுவே சிந்தனைக்கும் பரிசீலனைக்கும் உரியது.

முதலில் பேசவேண்டியது, இன்று இடதுசாரிகளின் ஒரே முன்னுதாரண தேசமான சீனா தேசியமுதலாளிகள் என்ற கோட்பாட்டை தன்னுடைய அதிகாரபூர்வ கொள்கையாகவே அறிவித்துச் செயல்பட்டு வருகிறது என்பதே.மாவோவின் இடதுசாரிப்புரட்சிக்குப்பின்னர் முதலாளிகளை கொன்றே ஒழித்து, அதன்பின்னர் சிறுவணிகர்களை முழுக்கக் கொன்றொழித்து, அதன் பின் நில உடமையாளர்களைக் கொன்றொழித்து, அவ்வாறாக இன்றைய சீன அரசின் கணக்குப்படியே கிட்டத்தட்ட ஒருகோடி மானுட உயிர்களை  பலிகொடுத்து சீனா அதன் பொதுவுடைமை அமைப்பை உருவாக்கிக் கொண்டது.

அது உழைப்பாளர்களும், ட்பாட்டாளர்களும் ,ஆட்சியாளர்களும் மட்டுமே அடங்கிய சமூகம். அதாவது எந்தச் சமூகத்தை உருவாக்குவதற்காக கம்யூனிஸ்டுகள் ருஷ்ய ஆதரவுடன் 1948லும், சீன ஆதரவுடன் நக்சலைட்டுகள் 1962லும் முயன்றார்களோ அதே சமூகம். எந்த சமூகத்தை உருவாக்கும் எண்ணத்துடன் காந்தியை தரகுமுதலாளிகளின் கையாள் என்றார்களோ அதே சமூகம். அந்தச் சமூகம் வெறும் முப்பது வருடங்களில் அரசியல் பொருளியல் தளங்களில் பரிதாபகரமான தோல்வியைத் தழுவியது.மேற்கொண்டு ஒரு அடிகூட முன்வைக்க முடியாத நிலை உருவானது.

அதன் விளைவாக டெங் ஸியாவோ பிங் காந்தி சொன்ன அதே தேசியமுதலாளிகள் என்ற கருத்தை முன்வைத்தார். தனியார் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அன்னிய முதலீடுகள் பெற்றுத்தரப்பட்டன. சீனாவில் கம்யூனிசப்படுகொலை அரசு இருந்தபோதே தேசிய முதலாளிகள் இருந்தார்கள், அவர்கள் பிராந்தியக் கம்யூனிச தலைமையின் ஆதரவுடன் மிக ரகசியமாகச் செயல்பட்டார்கள் என்பது அப்போது வெளிப்பட்டது. ஏனென்றால் அவர்கள் இல்லாமல் அந்த பொருளியலமைப்பே செயல்பட முடியாது. அவர்கள் எல்லாம் இன்று மீண்டும் பெருமுதலாளிகள் ஆகிவிட்டார்கள். சீனா அவர்களைச்சார்ந்தே இன்று இயங்கி வருகிறது. பல சீன முதலாளிகள் டாட்டாக்களை விட அம்பானிகளை விட செல்வந்தர்கள்.

இதையொட்டி இன்றைய கேரள, வங்க கம்யூனிஸ்டுகள் தங்கள் ஆட்சிக்குள்ளும் தங்களுக்குச் சாதகமான தேசிய முதலாளிகளை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். முதலீடுகளுக்காக அழைப்பு விடுக்கிறார்கள். கட்சிக்கு பெரும் நிதியை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். முதலாளிகளைக் கொன்று சாப்பிடுவது என்ற கருத்தெல்லாம் டைனோஸர் போல கல்படிவங்களாக மாறி காலங்கள் தாண்டிவிட்டன. ஆனால் இன்றும் சீன ஆதரவு கம்யூனிசம் பேசும் கும்பல்கள் காந்தியை தரகு முதலாளித்துவ ஆதரவாளர் என்கிறார்கள். சீனாவைச் சுட்டிக்காட்டினால் சீன முதலாளிகள் சீனக் கம்யூனிச அரசுக்கு விசுவாசமானவர்கள் என்கிறார்கள். இது என்ன தர்க்கம் என்றே புரியவில்லை.

காந்தி பேசிய தர்மகர்த்தா முறை பழமைமவாத கம்யூனிச கோட்பாட்டுப்பித்து மனநிலையில் அபத்தமானதாகவே தோன்றும். ஆனால் செல்வம் என்பது ஓர் அளவுக்குமேல் அறக்கொடையாக மாறியே ஆகவேண்டும். முதலில் அது போகங்களாக இருக்கும். பின்னர் அதிகாரமாக ஆகும். அதன் பின்னர் அதற்கு பயனே இல்லை. ஆனால் அது சுழன்றாகவேண்டும். ஆகவேதான் ராக்பெல்லராக இருந்தாலும் சரி, வாரன் பப்பெட்டாக இருந்தாலும் சரி, டாட்டாவாக இருந்தாலும் சரி, அவர்கள் அறச்செயல்களுக்கு வருகிறார்கள். காந்தி அந்த மனநிலையை அவர்களின் நலனுக்காகவும் சேர்த்துத்தான் முன்வைக்கிறார்.

முதலாளிகள் தவிர்க்க முடியாதவர்கள் என்றால், அவர்களுக்கு தர்மகர்த்தா கோட்பாடு தவிர வேறு என்ன வழிமுறையை ஓர் நலம்நாடும் அரசு சொல்லமுடியும்? வேறு சாத்தியங்கள் என்ன? காந்தி சொன்னது அதைத்தான் என்பது ஒரு மாபெரும் நடைமுறை விவேகம் மட்டுமே. காந்தி அவர் நம்பிய தேசிய முதலாளிகளுடன் ஓயாத விவாதத்தில் இருந்தார். அவர்களை தன் அறச்சார்பால் தன்பக்கம் இழுக்க முயன்றார். உருவாகிவரும் இந்திய தேசியத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்களாக அவர்களை ஆக்க முனைந்தார்.

இந்திய சுதந்திரப்போரில் காங்கிரஸ் பேரியக்கத்துக்குத் தேவையான நிதியை காந்தி இந்திய தேசிய முதலாளிகளிடம் இருந்தே பெற்றுக்கொண்டார். தேவைக்காக மட்டும். வெளிப்படையாக. அவற்றுக்கு பைசா பாக்கியில்லாமல் கணக்கு வைத்திருந்தார். அது ஒன்றும் லஞ்சம் அல்ல. அவர்கள் அனைவரையும் லாபவெறி மட்டுமே கொண்ட மிருகங்கள் என உருவகித்துக்கொள்ளும் வெறுப்புவாத மார்க்ஸியமே அப்படிச் சொல்ல முடியும். காந்திக்கு நிதியளித்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு காந்தி மீது மதிப்பிருந்தது. பலர் சொந்த வாழ்வில் காந்திய விழுமியங்களை கடைப்பிடித்தவர்கள்.

இன்று சிலர் சொல்வதற்கு மாறாக அவர்களில் பனியாக்கள் ஒருசிலரே. பெரும்பாலானவர்கள் சிந்திகள், மார்வாரிகள், பார்ஸிகள். இந்தியாவின் நிலப்பிரபுக்கள், மன்னர்கள் போன்றவர்களுடன் ஒப்பிடும்போது அந்த தேசியமுதலாளிகள் முற்போக்கானவர்கள். இந்தியப்பொருளாதாரத்தின் எழுச்சிக்கான அடித்தளத்தை அமைத்தவர்கள் இந்த தேசியமுதலாளிகளே. 

அவர்கள் தங்கள் நலனுக்காக காந்திக்கு நிதியளித்தார்கள் என்பதை அக்காலச்சூழலை வைத்துப் பார்க்கும் எவருக்குமே அபத்தம் என்று புரிந்துகொள்ள முடியும். அவர்களின் வணிக நலன்களுக்கு பிரிட்டிஷ் அரசு என்ற முதலாளித்துவ அமைப்பு அல்லது சம்ஸ்தான மன்னர்கள் என்ற நிலப்பிரபுத்துவ அமைப்புதான் வசதியானது. நேரு பேசிக்கொண்டிருந்த சோஷலிசம் அவர்களுக்கு மிக மிக அபாயகரமானது. பஞ்சங்கள் நடந்து வறுமை ஓங்கியிருந்த இந்தியாவில் நேரு உறுதியளித்த வயதுவந்தோர் வாக்குரிமை சார்ந்த ஜனநாயகம் என்பது முதலாளிகளுக்கு முற்றிலும் நம்பமுடியாத ஒன்று. அதைவிட காந்தி பிடிவாதமாக சொல்லிக்கொண்டிருந்த கிராம சுயராஜ்யம் என்பது அவர்களுக்கு தற்கொலைக்கு நிகரானது.

ஆனால் அதையும் மீறி அவர்களின் தேசப்பற்றினாலேயே அவர்கள் காங்கிரசுக்கு நிதியளித்தனர். ஜாம்ஷெட்ஜி நவ்ரோஜி டாட்டா, பிர்லா, ஜம்னாலால் பஜாஜ் போன்றவர்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அவர்களின் வணிக ஆர்வத்தையும் தாண்டி அவர்களிடம் அழுத்தமான ஒரு தேசப்பற்று விளங்கியதைக் காண முடிகிறது. அவர்கள் தங்கள் நோக்கில் தேசத்தின் முன்னேற்றத்தை இலக்காக்கினார்கள் என்றும் தெரிகிறது.

மிகக் கறாரான தொனியிலும் பெரும்பாலும் எதிர்மறை மனநிலையிலும் எழுதப்பட்ட கிசிகிசு நூலான எம்.ஓ.மத்தாயின் நேருயுக நினைவுகள் [Reminiscences of the Nehru Age M.O.Mathay] நூலில் ஜி.டி.பிர்லாவைப் பற்றி வரும் இடம் இங்கே குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது பிர்லா நேருவை பார்க்க வருகிறார். நேருவுடன் அப்போது அவருக்கு நல்ல அறிமுகம் இல்லை. ஆகவே அவர் மத்தாயை வந்து சந்திக்கிறார்.

என்ன சிக்கல் என்றால் ஜி.டி.தேஷ்முக் தலைமையிலான நிதியமைச்சகம் பிர்லா கடந்த முப்பதுவருடங்களில் பிர்லாவின் வணிக அமைப்புகள் அளித்த நன்கொடைகளுக்கு வரி போட்டிருந்தது. அவற்றில் பெரும்பகுதி சுதந்திரப்போராட்ட காலகட்டத்துக் காங்கிரஸுக்கு அளிக்கப்பட்ட நிதி. அதை எடுத்து சொன்னாலும் அதிகாரிகள் புரிந்துகொள்ள மறுத்தார்கள். அதிகாரிகள் அனைவருமே பிரிட்டிஷ் காலத்து ஐ.ஸி.எஸ் காரர்கள். தேஷ்முக்கேகூட முன்னாள் ஐஸிஎஸ்தான். அவருக்கும் சுதந்திரப்போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை.

மத்தாய் விஷயத்தை நேருவுக்குக் கொண்டுசெல்வது நல்லதல்ல என்கிறார். ஏனென்றால் நேருவுக்கும் காங்கிரஸின் நிதியாதாரங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை. பிர்லா காங்கிரஸுக்கு நிதியளித்தது நேருவுக்கு புதிய செய்தியாகவே இருக்கும். ஆகவே அபுல்கலாம் ஆஸாத்தை தொடர்புகொள்ளும்படிச் சொல்கிறார். ஆஸாதை தொடர்புகொண்டு நிகழ்ந்ததை எடுத்துச் சொல்கிறார் பிர்லா. ஆசாத் அதை நேருவுக்குச் சொல்கிறார். நேரு ஆசாத் சொன்னதனால் அதை நம்புகிறார்.

ஆனால் நேரு சொல்லியும் அதைத் தேஷ்முக் ஏற்றுக்கொள்ளவில்லை. டாட்டா காங்கிரஸுக்கு அளித்த நிதியுதவிக்கும் வரிகட்டியாகவேண்டும் என்கிறார். அக்காலத்தைய ஜனநாயக மரபின்படி ஓர் அமைச்சகத்தில் இன்னொரு அமைச்சகம் தலையிட முடியாது, பிரதமர்கூட! ஆகவே நேரு அவரே தேஷ்முக்கை சென்று கண்டு விஷயங்களை விளக்குகிறார். பிர்லா அந்த பெரும் நன்கொடைகளை அளித்த காலகட்டத்தில் காங்கிரஸுக்கு நன்கொடை அளிப்பது தற்கொலைக்கு நிகரானதாக கருதப்பட்டது, அந்த நன்கொடைகளுக்கு பிரதிபலனாக எதையுமே பிர்லா அப்போதும் இப்போதும் எதிர்பார்க்கவும் இல்லை என்கிறார். மெல்ல தேஷ்முக் சம்மதிக்கிறார்.

அப்போது பிர்லா மத்தாயிடம் பேசும்போது காந்தியின் தர்ம கர்த்தா கோட்பாடு எப்படி தன்னை கவர்ந்தது என்றும் ஆகவே தன் சொத்துக்களில் பெரும்பகுதியை கல்விசார்ந்த அறநிலைகளாக மாற்றிக்கொண்டிருப்பதையும் பற்றிச் சொல்கிறார். காந்திமேல் பெரிய மரியாதை ஏதும் இல்லாத மத்தாய் அதை ஆச்சரியத்துடன் பதிவுசெய்கிறார்.

நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரமே பிர்லா டாட்டாவின் காலடிகளில் கொண்டுசென்று சமர்ப்பிக்கப்பட்டது என்று நமக்கு இடதுசாரிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. அதைச் சொன்னவர்கள் இன்று அதே டாட்டாக்களையும் பிர்லாக்களாயும் தங்கள் ஆட்சிசெய்யும் மாநிலங்களுக்கு வந்து முதலீடு செய்து உதவும்படி கோரிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையுடன் இணைத்தே நாம் அதை சிந்திக்க வேண்டும்.

எந்த ஒர் அரசியலியக்கமும் அதைச்சார்ந்த முதலாளிகளின் பங்குடனேயே வேரூன்றியிருக்கிறது. தேசிய முதலாளிகளின் பண்பாட்டு, அரசியல் பங்களிப்பை தவிர்த்து ஒரு வரலாற்றை எவருமே எழுதிவிட முடியாது. அண்ணாமலைச் செட்டியார், அழகப்பா செட்டியார், பச்சையப்ப முதலியார் போன்றவர்களின் பங்களிப்பை எழுதாமல் இருபதாம் நூற்றாண்டின் தமிழர் வரலாற்றை எவர் எழுத முடியும்? அவர்களின் நிதி பெறாத பண்பாட்டு, அரசியல் இயக்கம் என ஏதேனும் தமிழ்நாட்டில் உண்டா என்ன?  அவர்களை இயக்கியது காந்தி சொன்ன அதே தர்மகர்த்தா கோட்பாடுதான்.

ஏன் கேரளத்திலேயே முக்கியமான ஈழவத் தொழில்முனைவோரின் நிதியுதவியுடன்தான் கம்யூனிஸ்டுக் கட்சி வேரூன்றியது.  அவர்கள் தங்கள் நலனுக்காக அவற்றை ஆதரித்தார்கள் என்றோ அல்லது அவ்வியக்கங்கள் அவர்களின் நலனுக்காக அவர்களால் உருவாக்கப்பட்ட டம்மி இயக்கங்கள் என்று சொல்லிவிட முடியுமா என்ன?

நேரு உருவாக்கிய சோஷலிச- அரசுமைய பொருளியல் அமைப்பு இந்தியாவின் தேசிய முதலாளிகளுக்கு முற்றிலும் எதிர்மறையானது என்பதை பொருளாதார அறிமுகம் உடைய எவருமே உணரலாம். அவரது லைசன்ஸ் ராஜை மீறியே அவர்கள் வளர்ந்தார்கள், பல அழியவும் நேரிட்டது, சிறந்த உதாரணம் நுஸ்லி வாடியா. நேரு பாணி கலப்புப்பொருளாதாரம் கைவிடப்பட்டு தாராளவாதப் பொருளாதாரம் நரசிம்மராவ் காலகட்டத்தில் புகுத்தப்பட்டதுமே இந்தியாவில் இருந்த தேசிய முதலாளிகள் பெரும்பாலும் அனைவருமே அசுரவளர்ச்சி கண்டார்கள் என்பதும் வரலாறே.

காந்தி நடத்திய சுதந்திரப்போராட்டம் மூலம் இந்தியாவுக்கு கிடைத்தது நேருவின் ஆட்சி. நேருவின் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்தது ஜனநாயகப்பண்புள்ள தாராளவாத அரசியல். மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை. கட்டுப்படுத்தப்பட்ட தொழில்துறை மற்றும் அரசு திட்டமிடல் கொண்ட பொருளாதாரம். அதில் இந்திய பெரும் லாபங்களை அடைந்திருக்கிறது. இன்றும் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக இருக்கும் பொதுத்துறை அரசுசார் மையப்பொருளாதாரத்தால் உருவானதே. இந்திய வேளாண்மையை மேம்படுத்தி உணவுப்பஞ்சத்தைத் தீர்த்த அணைக்கட்டுகள் அவ்வாறு உருவானவையே. இந்தியாவின் பொதுச்சேவைத்துறைகள் அவ்வாறு வேரூன்றியவையே. மையத்திட்டமும் அரசு முதலீடும் இல்லையேல் பஞ்சத்தால் காலியான பொருளாதாரம் கொண்ட சுதந்திர இந்தியா அதன் தொழில்துறைக்கான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்கியிருக்க முடியாது.

அதேசமயம் அவற்றுக்கான இழப்புகளும் உள்ளன. திட்டமிடல் அடித்தளம் வரைக்கும் செல்லவில்லை என்பது முதல்சிக்கல். முதலீட்டைவிட வழிநடத்தலை விட நிர்வாகம் அதிக அதிகாரம் கொண்டதாக ஆகியது. அதன் மூலம் ஊழல் பெருகியது. தொழில்மயமாக்கல் மூலம் சூழலழிகள் பெருகின. இவ்வாறு பலவற்றைச் சுட்டலாம். ஆனால் நேரு அளித்தது ஒரு அவர் கனவுகண்ட தேசிய கட்டுமானம், அதை மக்கள் தங்கள் விருப்பப்படி மாற்றுவதற்கான ஜனநாயக அடித்தளம். அந்த அடித்தளத்தின் மீது வசதியாக நின்றபடித்தான் அதை இழிவுசெய்கிறார்கள் இடதுசாரிகள்

.

 

பண்பாட்டு மறுப்புத் தேசியமா?

சுதந்திரப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே இந்துமகாசபையும் அதன்பின்னர் ராஷ்டிரீய சுயம்சேவக் சங்கமும் காந்தி முன்வைத்த தேசிய உருவகம் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டு அது இந்தியப் பண்பாட்டை முழுமையாக விலக்கி மேலைநாட்டு தாராளவாத தேசியத்தை நகல் செய்து உருவாக்கப்பட்ட ஒரு தேசியம் என்பதுதான். இந்தியப்பண்பாட்டுத்தேசியம் என்பது இந்துப்பண்பாடு என்றும் அப்பண்பாட்டை முஸ்லீம்களை மகிழ்விப்பதற்காக காந்தியும் நேருவும் தங்கள் தேசகற்பிதத்தில் இருந்து அகற்றினார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. தேசப்பிரிவினையின் உணர்ச்சிக்கொந்தளிப்பான நாட்களில் இந்தக் குற்றச்சாட்டு பல லட்சம்பேரை காந்திக்கு எதிரான மனநிலைக்குத் திருப்பியது. அவர் கொலையுறவும் காரணமாக அமைந்தது.

அதன்பின்னர் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுக்காலம் இந்தக்குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டு வந்தது. காந்தி உருவாக்கியது இந்தியப்பண்பாட்டை மறுக்கும் போலித்தேசியம் என்று நம்பும் இந்துத்துவ இயக்கத்தினர் ‘விறுவிறுப்பான’ ‘உண்மையான’ ‘செயலூக்கம் கொண்ட’ தேசியத்துக்கான ஒரு போராட்டமே தாங்கள் நடத்துவது என்கிறார்கள். இந்த நோக்கை கீழ்த்தளத்தில் வெறும் பூசல்தன்மையுடன் முன்வைக்கும் நூலே ராதா ராஜன் எழுதியது.

இந்திய தேசியத்தின் வேர்கள் இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் உள்ளன என்பது உண்மை. ஆனால் அது இவர்கள் கூறும் இந்து தேசியம் என்பது ஏற்கனவே சொல்வதுபோல ஐந்து புனிதப்பிரமைகளின் விளைவாக உருவானதே. இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியம் என்பது சமண, பௌத்த மதங்களின் பெரும்பங்களிப்பு கொண்டதே. அனைத்தையும் தழுவிக்கொள்ளும் இணைப்புத்தன்மையே அதன் சாராம்சமான குணம். காந்தியின் பண்பாட்டு மூலம் என்பது சமணமும் பௌத்தமும் உருவாக்கிய அந்த இணைக்கும் தன்மை, சமரசத்தன்மைதான்.

மேலும் ஒரு தேசிய உருவகத்தின் காரணம் இறந்தகாலத்தில் இருக்கலாம். ஆனால் அதன் கனவு எதிர்காலத்திலேயே இருக்க முடியும். இன்றைய இந்தியாவை திருப்பி இறந்தகாலத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது. அதற்காக வரலாறு இந்நிலத்தில் உருவாக்கிய இன்றைய சூழலை ரத்தம் கசிய வெட்டித்திருத்துவதும் சாத்தியமல்ல. காந்தி தன்னுடைய தேசியமாக முன்வைத்தது  அவரது இலட்சியக்கனவான ஓர் எதிர்காலத்திட்டத்தை. அதை அடைவதற்கு இந்திய நிலப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் பேதங்களை தாண்டி ஒருங்கிணையும் ஒரு அரசியல்வெளியை உருவாக்க அவர் முயன்றார். அதுவே இந்திய தேசியப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு.

இந்திய சமூகத்தை பேதப்படுத்தும் எந்த ஒரு கருத்தியலுக்கும் சமரசமில்லாத எதிர்த்தரப்பாகவே காந்தி இருந்தார். அவரது பண்பாட்டு வேர் என்பது பிரிவினைக்கான அடையாளங்களில் இல்லை சமரசத்துக்கான மனநிலைகளில் இருந்தது. அவரது இந்தியா இறந்தகாலத்துக்கு திரும்பிப்போகும் முயற்சி அல்ல. பாரம்பரியத்தில் இருந்து வேர்கொண்டு எதிர்காலத்துக்காக தன்னை வளர்த்துக்கொள்ளும் ஓர் இலட்சியவாதம் அது.

காந்தியின் தேசம் நோக்கி…

இன்றைய இந்தியாவை காந்திய தேசியம் என்று சொல்பவர்கள் காந்தியை உணராதவர்களே. இன்றைய இந்தியாவில் அர்ப்பணிப்புள்ள எல்லா காந்தியர்களும் ஏதேனும் ஒருவகையில் இந்திய அரசையும் இந்திய சமூக அமைப்பையும் எதிர்த்துப் போராடுபவர்களாகவே இருக்கிறார்கள் என்ற உண்மை நம் கண்முன் இருக்கிறது. சமாதானமே அடையாத போராளிகளாக, கடைசிக்கணம் வரை ஓயாத கிளர்ச்சியாளர்களாக மட்டுமே அவர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். பாபா ஆம்தே, அண்ணா ஹசாரே, சுந்தர்லால் பஹ¤குணா, ஜகன்னாதன்-கிருஷ்ணம்மாள், சிவராம் காரந்த், மேதா பட்கர், வந்தனா சிவா என அந்தப்பட்டியலை நீட்டலாம். காந்திய தேசியம் என்பது இன்றிருக்கும் ஓர் அமைப்பு அல்ல அது ஒரு இலட்சியக்கனவு என்பதற்கான ஆதாரம் அதுவே.

காந்தி இந்தியாவுக்கு அளித்தது ஒரு தேசியக் கனவை. கூடவே அக்கனவைச் சாத்தியமாக்குவதற்கான ஒரு வாய்ப்பை. நம் கையில் கிடைத்தது அந்த வாய்ப்பும் கனவும்தான். நாம் நமது பேராசையால், நுகர்வுவெறியால், சாதிமத இன மொழி சார்ந்த பிளவுப்போக்கால், அரசியல் அதிகார வெறியால், அன்றாடச் சமரசங்களால் அதை இழந்துவிட்டு காந்தியை குறைகூறுகிறோம். தனது தோல்விக்கெல்லாம் தந்தைதான் காரணம் என்று சொல்லும் உதவாக்கரைப்பிள்ளைகளை நாம் தெருத்தெருவாகக் கண்டுகொண்டிருக்கிறோம் அல்லவா?

 

[முழுமை]

முந்தைய கட்டுரைநமது வரலாற்றாய்வு,கண்ணகி
அடுத்த கட்டுரைநெடுங்குருதி-1