முதற்கனல் நூல் சிறப்புப்பதிப்பு

அன்புள்ள ஜெயமோகன்

நலம் தானே? வெகு நாட்களுக்கு முன் உங்களிடம் நீங்கள் மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எழுதியுள்ள கதைகளை ஒரே புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தேன். இப்பொழுது பருத்தி புடவையாக காய்க்கும் பொழுது அது தேவையில்லை என்று தோன்றுகிறது. கடந்த ஐம்பது நாளும் ஆவலுடன் படித்து வந்தேன்.

வருடக்கணக்கான உங்களது வாசிப்பு, நல்ல குருமார்களிடம் சேர்ந்து கற்ற விஷயங்கள், உலகத்தை கூர்ந்து நோக்கும் தன்மை எல்லாமாக சேர்ந்து இதில் இறங்கி இருக்கிறது.

உங்கள் இணைய பக்கத்தில் ஐம்பது அத்தியாயங்களையும் ஒரே தொகுப்பாக கொடுத்து இருந்த போதிலும், புத்தகத்தில் மட்டுமே சேர்ந்து வாசிக்க ஆசை. இன்றும் இலங்கை வானொலியும் அதில் கே எஸ் ராஜா அப்துல் ஹமீது, மயில் வாகனன் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம் குரல்களை கேட்க வேண்டும் என்று நினைப்பவன். புத்தகமாக வாசிக்கும் பொழுது ஒரு சுகம்.முதற் கனல் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உள் வாங்கி அசை போடுவதற்கு புத்தகம் தான் வசதி.

இந்த புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஒரு கனவு உண்டு, நல்ல நேர்த்தியான தாளில் (விவிலிய நூல் போல) வெல்லம் பைண்டிங் செய்து வர வேண்டும். இது அடுத்த தலைமுறைக்கு நான் விட்டு செல்ல வேண்டிய முக்கியமான சொத்து அல்லவா. சண்முக வேலின் அனைத்து ஓவியங்களும் அதில் நல்ல ஆர்ட் பேப்பரில் அச்சிடப் பட்டு அத்தியாயங்களுக்கு நடுவில் இடம் பெற வேண்டும். நூலின் விலை அதிகமாகலாம். இது போன்ற சிறப்பு பிரதி வாங்குவதற்கு என் போல ஒரு ஆயிரம் பேர் இருப்பார்கள் என நம்புகிறேன்.

வாழ்த்துக்களுடன்,

சுந்தரம் செல்லப்பா

அன்புள்ள சுந்தரம்

முதற்கனலை கெட்டி அட்டை இல்லாமல் 10 படங்களுடன் குறைந்த விலை பதிப்பாகக் கொண்டுவரவே பதிப்பாளர் ‘நற்றிணை’ யுகன் முடிவெடுத்திருக்கிறார். 550 பக்கங்கள். ரூ 450 விலை என நினைக்கிறேன். அதிகம் பேரைச் சென்றடையவேண்டும் என்பதே நோக்கம்.

ஒரு படம் சேர்க்கப்பட்டால் நூலின் விலையில் ரூ 4 அதிகரிக்கும். ஆகவே நீங்கள் சொல்வது போல கொண்டுவரவேண்டுமென்றால் மேலும் 200 ரூ அதிக விலை வைக்கவேண்டியிருக்கும். அதாவது 600. அதை வாங்குபவர்கள் இருக்கமாட்டார்கள் என்பதே பொது அனுபவம். உங்களைப்போன்ற சிலரின் உள்ளவேகங்களை பிறர் பகிர்ந்துகொள்வதில்லை

300 பேர் முன்னதாகவே பணம்கட்டி வாங்குவார்கள் என்றால் அவ்வாறு ஒரு collectors copy வெளியிடலாம், என் கையொப்பத்துடன் என நண்பர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் என் நண்பர்களிலேயே அதை பெரும்பாலும் அனைவரும் மௌனமாக புறக்கணித்துவிட்டனர் ))) நம் பொதுமனநிலை பெரும்பாலும் விலை சார்ந்தது என்பதே காரணம்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு- நாவல் 1 – முதற்கனல் – முழுத்தொகுப்பு
அடுத்த கட்டுரைவலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்